வெண்முரசு பிள்ளைத்தமிழ்

நாவலுக்கு எதிர்வினையாக ஆவணப்படம் 

உலக மொழிகளில் இதுவரை எழுதப்பட்ட பெரும் படைப்புகளுள் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசையை கொண்டாடும் விதமாக ’வெண்முரசு கொண்டாட்டம்’ (A tribute to Venmurasu) என்ற பெயரில் உருவாகியுள்ள ஆவணப்படத்தின் இசைத்தொகுதி 09-10-2021 அன்று இயக்குனர் மணிரத்னம் அவர்களால் வெளியிடப்பட்டது

எத்தனையோ நாவல்களின் கதைகள் திரைப்படங்களாக ஆகியிருக்கின்றன. ஆனால் ஒரு நாவலை மையப்படுத்தி நாவலை கொண்டாட என ஆவணப்படம் ஒன்று வெளிவருவது அரிதானது. 

ஒரே ஒரு நாவல் (The Stone of Summer)  மட்டுமே எழுதிவிட்டு தொலைந்துபோன டொவ் மாஸ்மன் என்ற எழுத்தாளரை தேடிச்சென்று கண்டடையும் வாசகனாக மார்க் மாஸ்கோவிட்ஸ் இயக்கி வெளியிட்ட ஆவணப்படம் தவிர சமகாலத்தின் ஒரு நாவலை மட்டுமே மையப்படுத்திய ஆவணப்படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி வேறு இல்லை என்றே சொல்லவேண்டும். 

50,000 தனிச்சொற்கள்(unique words), எறத்தாழ 25,000 பக்கங்களுடன் 26 வரிசை நூல்கள் என உலகில் இதுவரை எழுதப்பட்ட படைப்புகளுள் மிகப்பெரும் நாவலாக உருவெடுத்துள்ள வெண்முரசு நாவல் வரிசை உலக மொழிகளுள் ஒரு பெரும் சாதனை. அப்படி ஒரு அரிய நிகழ்வு தமிழில் அதுவும் நாம் வாழும் சமகாலத்தில் நிகழ்ந்ததை  கொண்டாடும் விதமாக வெளிவந்துள்ள இந்த ஆவணப்படத்திற்கு சங்கப்பாடல்களுக்கு இசைவடிவம் அளித்த ராஜன் சோமசுந்தரம் இசையமைத்துள்ளார். நடிகர் கமலஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். 

குழவி மருங்கினும் கிழவதாகும் பிள்ளைக்கவி

கதைமாந்தரின் முழு வாழ்க்கையையும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு துறைகளிலும் விரித்துப்பேசும் பேரிலக்கியங்கள் போல அன்றி, பாடப்படுபவரின் வாழ்வின் ஒரு மிகச்சிறு கூறை மட்டும் கருக்கொண்டு அளவில் சுருங்கிய செய்யுள்களின் வடிவானவை சிற்றிலக்கியங்கள்.  சிற்றிலக்கியத்தை ’பிரபந்தம்’ என வடமொழிச்சொல்லால் குறிக்கும் வழக்கமும் தமிழில் உண்டு. ’பிரபந்தம்’ என்ற சொல்லை’ ’யாப்பு’ என்ற சொல்லோடு இணைவைத்து, ‘இயற்றப்படுவது, இசையுடன் கூடியது’ என்று பொருள் கொள்ளலாம். 

’குழவி மருங்கினும் கிழவதாகும்’ அதாவது, நாயகன் குழந்தைப் பருவம் கடந்த இளைஞனாக அல்லது முதியனாக இருந்தாலும் குழந்தையாக வைத்தே பாடப்பெறுவான் என தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிந்து வடிவம் கொண்ட சிற்றிலக்கிய வடிவம் பிள்ளைக்கவி. புலவர்கள் தாம் விரும்பும் கதை மாந்தர்களை கற்பனையில் குழந்தையாக உருவகித்து பாடும் இப்பிரபந்த வகை ’பிள்ளைத் தமிழ்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கண்ணாகி காண்பதுமாகும் கருநீலத்தழல் மணி

 வெண்முரசு ஆவணப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ள பாடல் கண்ணனை குழந்தையாக உருவகிக்கும் ”கண்ணானாய்” எனும் பாடல். கண்ணணை வெண்முரசுக்கான ஒரு குறியீடு என்று கருதினால், இந்த ஒரு பாடலையே, ’வெண்முரசு பிள்ளைத்தமிழ்’, என்றும் கூறலாம். 

வாசகன் மீதுகொண்ட பெருங் கருணையால், தமிழ் மொழியே பிரம்மாண்ட வடிவெடுத்து, முதிர்ந்து கனிந்து நூல் வடிவம் கொண்டிருப்பதைப்போல திரண்டு, ஒன்றை ஒன்று விஞ்சி நிற்பவை வெண்முரசு வரிசை நூல்கள். அவற்றுள், தமிழின் உரைநடை அடைந்த கவித்துவத்தின் உச்சம் என்று கூறத்தக்கது நான்காவது நூலான ’நீலம்’. அதே போல வெண்முரசு வரிசையில் இறுதிப்பகுதியான ’முதலாவிண்’ நூலின் நிறைவு செய்யும் கண்ணன் பிள்ளைத்தமிழ். இவற்றில் வரும் வரிகளை தேர்ந்தெடுத்து இணக்கமான கோவையாக ஆக்கி, அவற்றின் அர்த்தம் ஆழ்ந்து வெளிப்படும்படி, ”கண்ணானாய் காண்பதுமானாய்” பாடலுக்கு இசை வடிவம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசனின் கணீர்க் குரலில் துவங்கி ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலுக்கு தாவி வேகம் பெற்று, சைந்தவியின் குரலில் தவழ்ந்து செல்லும் பாடல் மேலெழுந்து உயர்ந்து சென்று ராஜனின் குரலில் நிறைவடைகிறது. தெளிவான உச்சரிப்புடன் அழகான இசை மடிப்புகளை உணர்ச்சிகரமான அலைகளாக தேர்ந்த குரலில் வரைந்து காட்டுகிறது இப்பாடல். 

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்; என வரிகளின் அர்த்தம் நாடகீயமாக வெளிபடும்படி அமைந்துள்ளது இசை.

நாளின் எல்லா நேரத்திலும் பாடத்தகுந்த பிரார்த்தனைக்கு உரிய தெய்வீகமான ராகமான கெளரி மனோஹரி ராகத்தின் நவீன மோஸ்தரில் ஆன்மீக அனுபவம் தரும் பாடலாக இது அமைந்துள்ளது. வெண்முரசு நூல்களில் வரும் கண்ணன் ’இளையாதவன்’ என்ற புதிய பெயரால் புதிய பரிமாணத்தில் அறியப்படுவதற்கு ஏற்றார்போல, பாடல் முழுதும் கெளரி மனோஹரி ராகத்தின் புதிய பரிமாணத்தில் நவீன பாணியில் அமைந்துள்ளது. தியாகபிரும்மத்தின் ’குருலேக எடுவன்டி”, மைசூர் வாசுதேவாச்சார்யாவின் ”வரலக்‌ஷ்மி நமோஸ்துதே”, ஸ்வாதித்திருநாளின் ”சாரச சம ம்ருது” போன்ற கீர்த்தனைகளில் பயின்று வரும் கெளரி மனோஹரியின் ராக லட்சணங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்த வேறுபாடு தெளிவாகிறது. 

பாகவத கதைகள், மகாபாரதம், கீதை, மற்றும் இன்ன பிற பாடல்கள், பெளராணிகங்கள் வழியாக நாம் அறியும் கண்ணன் ஒருபுறம் இருந்தாலும், வெண்முரசு நூல்களில் வரும் கண்ணன் ’இளையாதவன்’ என்ற புதிய பெயரால் புதிய பரிமாணத்தில், அறியப்படுவதைப்போலவே, அந்த இளைய யாதவனை பாடுவதற்கு, நமக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு புராதானமான ராகம், இந்தப்பாடலில் புதிய பரிமாணத்தில் உருவெடுத்துள்ளது. சம்பிரதாயமான பக்திப்பாடலைப்போல வயலின் மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் அற்று நவீன மோஸ்தரில் அமைந்துள்ள இசை, இப்பாடலை ஆன்மீக அனுபவம் தருவதாக ஆக்குகிறது. 

பாடலின் இடை இசையாக வரும் சிதார் ஆலாபனைகளை வாசித்திருப்பது இந்தியாவில் இசைக்கருவிகளுக்கு புகழ்பெற்ற ரிக்கிராம் பரம்பரையில் வந்த இளம் சிதார் மேதையும், பாரத ரத்னா ரவிசங்கரின் இறுதி மாணவர் என்ற பெருமைக்கும் உரிய ரிஷப் ரிக்கிராம் சர்மா. சிதாரின் இசையை அதன் முழுமை குன்றாமல் தரமாக பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் கொரானோ தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் துணிந்து பயணம் செய்து நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றில் பதிவுசெய்திருக்கிறார்கள். பாடலில் கண்ணனை வசீகரமான புல்லாங்குழல் இசைவழி வரைந்து காட்டுவது ஊழிக்கூத்து பாடலுக்கு வாசித்த ஜி. பரத்வாஜ், இறைஞ்சுதலாக உருகி வழியும் சாரங்கி இசையை வழங்கியிருப்பது சபீர் கான் மற்றும் மாயங் ராத்துர். 

கண்ணனே நம்மை சுற்றி பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறான். தீயின் சுடராக, இசையில் நாதமாக, பாலையின் கடுவெளியாக, ஆர்ப்பரிக்கும் கடலாக, மேகத்தில் மறைந்து விளையாடும் சூரியனாக அமைகிறான். அவனுடைய மென்கால் மலர் தரையில் படியும் தோறும் மலர்கள் இதழ் விரிக்கின்றன, நதிகள் பெருக்கெடுக்கின்றன, கதிர்கள் சூல்கொள்ள மணிகள் முற்றி நிறைகின்றன. உயர்ந்து தாவி எழும் நீரலைகளில் அவன் கருணையின் பெருக்கு நிறைகிறது. அவனே புவியின் நிலப்பரப்புகள் யாவிலும் நிறைகிறான். எல்லையற்று பரந்து விசும்பின் வெளியாகி இரவும் பகலுமாக மாறி நின்று புவியை காக்கிறான். 

இசையில் மட்டுமே ஆர்வம் கொண்ட இறைபக்தி அற்ற எனக்கு, நீல நிறத்தின் பல்வேறு சாயல்களின் அணிவகுப்பாக உருவாகி வந்துள்ள பாடலின் காட்சிகளை இசையுடன் கேட்பது தியானம் கூடிவரும் ஒரு தூய ஆன்மீக அனுபவமாக இருப்பது இப்பாடலின் வரிகள், இசை, காட்சித்தொகுப்புகள் அனைத்தும் கச்சிதமாக பொருந்தி இணைந்ததன் வெற்றி என்று சொல்லவேண்டும்.  

வெண்முரசு காவிய இசைக்கோவை 

வெண்முரசு நாவல் வரிசையின் சாரத்தை உள்வாங்கி, அதன் பிரதிபலிப்பாக ஒருமை கொண்ட முழுமையான படைப்பாக அமைந்துள்ளது இரண்டாவதாக வரும் ’வெண்முரசு காவிய இசைக்கோவை (Venmurasu Epic theme music)’. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவியங்கள் காட்சியில் சேர்த்திருப்பது வெண்முரசு நாவலின் முக்கிய புள்ளிகளை இணைத்து நினைவுபடுத்தி இசையை தொடர்புறுத்தி புரிந்துகொள்ள உதவுகிறது. 

பழமையான மகாபாரத கதையின் நவீன மறு ஆக்கமாக வெண்முரசு அமைந்திருப்பது போல மரபான ராகத்தின் நவீன மறுவடிவின் வெளிப்பாடாக இப்பாடல் அமைந்துள்ளது. மழைத்துளியின் வழி பாயும் ஒளிக்கீற்று சிதறிப்பிரிந்து விரியும் நிறப்பிரிகையின் மறு எல்லையில் பல்வேறு நிறங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி எதிரொலித்து விலகியும் முயங்கியும் இணைந்து ஒன்றாகும்போது திசையெங்கும் நிலைபெற்று முழுமைகொள்ளும் கதிரொளியின் பிரம்மாண்டத்தைப்போல, பல்வேறு உணர்ச்சிகளை எழுப்பும் ஸ்வரக்கோர்வைகள், வெளிப்பாடுகள், திடீர் திருப்பங்களின் ஆழங்களுக்கு இடமளித்து முழுமை கொண்டு நிறையும் பன்முகத்தன்மை கொண்ட சம்பூர்ண ராகமாகிய பைரவியில் (கர்நாடக இசையில் சிந்துபைரவி) இப்பாடல் அமைந்துள்ளது.  பெர்ஸிய நிலம் முதல் காந்தார நாடாகிய ஆப்கானிஸ்தான், பாரதம் ஆகிய நிலப்பரப்புகளுக்கு உரிய தொன்மையான ராகம் என்பதும் இப்பாடலுக்கு மிகவும் பொருந்துகிறது. 

பாரத வர்ஷத்தின் நிலப்பரப்பை குறிக்கும் குறிப்புகள், பயணங்கள், மாந்தர்களின் மன ஓட்டங்கள், சம்பவங்கள், பயணங்கள், திருப்பங்கள், பகைமைகள், வாழ்வியல் போராட்டங்கள், ஆகியவை மெட்டுகளாகவும், புள்ளிகளாகவும், பின்ணனி இசையாகவும் பெரும் போர்ச்சங்கின் ஒலிகள், முரசுகள், படைகள் அணிவகுத்துச்செல்லும் இசைகளாகவும் பல்வேறு அடுக்குகளாக, பல்வேறு திசைகளில் பாயும் கோர்வைகள் சூழ வெண்முரசின் பல்வேறு கட்டங்களை சித்தரிக்கும் இப்பாடலை ஐந்து பகுதிகளாக பிரித்துக்கொண்டு கேட்டுப்பார்க்கலாம். 

  1. வெண்முரசு நாவலின் பெரும் பயணத்தை செயலூக்கத்துடன் வழிநடத்தும் பெருங்கனவின் தோற்றம். சர்ப்பங்களிலிருந்து தோன்றும் யுகம் முதலாக, தத்தம் நிலப்பரப்புகளை விட்டு வெளியேற்றி வெண்முரசு நாயக நாயகிகளை விசை கொண்டு செலுத்தி அலைக்கழிக்கும் பல்வேறு பயணங்கள் 
  2. காந்தாரமும் அஸ்தினாபுரியும் போல பாரதவர்ஷத்தின் குலங்கள், மரபுகள், ராஜியங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் சந்திப்புகள், நிகழ்ந்து பெருகும் முரண்பாடுகள், அவற்றின் வழி உருவாகும் காழ்ப்புகள், விரோதங்கள் தலைமுறைகளைத்தாண்டி நீளும் பெரும் பகைமைக்கான காரணங்கள் நிலைபெறுதல், நாயகர்கள் நாயகிகளின் துயர்கள் 
  3. வெண்முரசு நாவல் வரிசையில் கண்ணனின் தோற்றம்.
  4. ராஜியங்களுக்கிடையே உருவாகும் பூசல்கள், பாலை நிலத்தின் ஆதிக்கம், பகடையாட்டம், வன் சொல் பரிமாற்றம், இறைஞ்சுதலும் செவி கொள்ளாமையும், மோதல்கள் குழப்பங்கள், அஸ்தினாபுரிக்கு எதிராக அணிதிரளுதல், பெரும் போருக்கான காரணங்கள் உருவாகி நிலைபெறுதல், குருஷேத்திரப்போரின் தொடக்கம் 
  5. குருஷேத்திரப்போர் உக்கிரமடைந்து பிரம்மாண்டமாதல், பேரழிவுகள், மரணங்களும் விண்புகுதலும் 

மனித இனம் இரும்பின் பயன்பாட்டை கண்டறிந்து உலோகங்களின் பயன்பாடு பழகிய பிறகு நிகழ்வது குருஷேத்திரப்போர். வெண்முரசின் கதை நிகழ்வது இரும்பின் பயன்பாட்டிற்கு பிந்தைய, பொன் புழக்கத்தில் இருக்கும் காலம் என்பதற்கான பல குறிப்புகள் வெண்முரசு நாவல் வரிசையில் வந்த வண்ணம் உள்ளன. எடுத்துக்காட்டாக, “அன்னையேயே ஐநூறு வருடம் முன் மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்து வந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்கள் எல்லாம் அழிந்தன். இன்று அவ்வாறு பொன் எழுது வந்திருக்கிறது” என பீஷ்மர் அன்னை சத்யவதியுடன் மேற்கொள்ளும் உரையாடலை சொல்லலாம் (மழைப்பாடல், வேழாம்பல், பக்கம் 44). குருஷேத்திரப்போர்கால கட்டத்தில் புழக்கத்தில் இருக்க முடிகிற வாத்திய ஒலிகளை பிரதானமாகக் கொண்டு காவிய இசைக்கோவை உருப்பெற்றுள்ளது. இறுதி இரு பகுதிகளில் (4& 5) இசையின் பின்ணனியில் வாள்களின் ஓசைகள் தோன்ற ஆரம்பித்து அதிகரித்துச்செல்வது, இந்திய தொல்நிலத்தை குறிக்கும் சிதார், பழமையான பாலை நிலத்தை குறிக்கும் பெர்சிய தந்திக்கருவியான ஆப்கன் ருபாப் வழி உருவாகும் இசைப்புள்ளிகள் போன்ற பல நுண்மைகள் தொடர்ந்து கேட்டு அறியத்தக்கவை.

பாடலுக்கு குரல் வடிவம் கொடுத்துள்ள ராஜன், விஷ்ணுபிரியா, இந்திய நிலத்தின் சிதார் இசையை வழங்கியுள்ள ரிஷப், வீணை இசையை கல்யாண் சுந்தர், பாலை நிலத்தின் பழமையை ஆப்கன் ருபாப் யாழில் வழங்கியுள்ள மீர் ஹமிதி, இனிய மெட்டுக்களையும் திடீர் திருப்பங்களையும் வயலின், வயோலா, செல்லோ, பாஸ் ஆகிய தந்தி இசைக்கருவிகளில் ஆவேசத்துடன் வாசித்துள்ள வடகரோலினா பகுதியை சார்ந்த சிம்பனி குழுவின் தந்தி இசைக்கலைஞர்கள், பித்தளை நாயனங்கள், உலோக குழல்கள் வழி போர் ஆரம்பத்தின் அறிகுறி களை அறிவித்து, படைகளின் அணிவகுப்புகளை வழி நடத்தி வலிமையான உலோக ஆயுதங்கள் மோதிக்கொள்ளும் போர்க்காட்சிகளை நேரில் காட்டிச்செல்லும் ஜெர்மன் பிராஸ் பாண்ட் இசைக்குழுவினர், அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். 

பாரத வர்ஷத்தின் 52 நாடுகள், அவற்றின் மாறுபட்ட நிலப்பரப்புகள், அவற்றின் குலங்கள், வாழ்வுகள், மரபுகள், மனிதர்கள், அம்மனிதர்களின் விருப்புகள், வெறுப்புகள், உணர்சிகள், மன ஓட்டங்கள், தத்துவ நிலைப்பாடுகள், குழப்பங்கள், உள நாடகங்கள் வழியாக திசைகள் தோறும் மெதுவாகத் தோன்றி உருவாகி எழுந்து உறுதியாகி கவிழும் ஒரு பிரம்மாண்டமான மாய வலையைப்போல நிகழ்ந்து செல்லும் வெண்முரசு நாவலைப்போலவே, ஒன்றுக்கும் மேற்பட்ட மெட்டுக்கள், குரல்கள், பின்னணிகள், கதிகள், தாளங்கள், சமிக்ஞைகள், இசைக்குறிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி, இயைந்து, விலகி, எதிர்த்து, விவாதித்து, முரண்பட்டு, எதிரொலித்து, போரிட்டு, முயங்கி, இப்பாடலில் முழுமையை அடைகின்றன.

வெண்முரசு நாவலின் பலநூறு பாத்திர இழைகள் வழியாக உருவாகும் பிரம்மாண்டத்தை பிரம்மாண்டமான ஒரு ஓப்பரா நாடகம் அல்லது ஹாலிவுட் திரைப்பட இசையுடன் ஒப்பிடும்படியாக வடித்துக்காட்டுவதில் இப்பாடல் வெற்றி பெற்றுள்ளது.  ஒட்டுமொத்தமாக,  வெண்முரசு நாவலின் பிரம்மாண்டத்தின் ஆழத்தையும், சில பல நுட்பங்களையும், இசையில் சிறப்பாக செதுக்கியிருக்கும் இப்பாடல்கள் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.