மைலோ – இவர்கள் இல்லையேல்

அத்தியாயம் – 5

1984 இல் நாங்கள் தில்லி திரும்பிவிட்டோம். நான் நோய்வாய்ப்பட்டு,  அப்போது தான் மீண்டு எழுந்திருந்ததால், வீட்டு வேலைகளை கவனிக்க பிரதாப் என்ற ஒருவரை என் கணவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்நாட்களில், மைலோ என்கிற பெண்மணி, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வருவாள். மாநிறம். மிகவும் சுறுசுறுப்பானவள். புகையிலை போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபினாயில் மணத்தோடு  கலந்த புகையிலையின் மனம்,  அவள் போகுமிடமெல்லாம் அவளைத் தொடர்ந்து போகும்.  விட்டுத் தொலையேன் இந்த பழக்கத்தை என்றால்,  புகையிலை போடாமல் என்னால் வேலை செய்ய முடிவதில்லை என்பாள்.

மைலோவுக்கு இரண்டு பெண்களும் ஒரு பையனும். பெண்களை, ஒரே வீட்டில் இரண்டு சகோதரர்களுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தாள். சிறிய மகளின் கணவன், அவளிடம் அன்பாக இருந்த போதிலும்,  பெரியவளின் கணவனுக்கு ஏற்கனவே வேறு ஏதோ தொடர்பு இருந்தது.  மைலோவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது,  அவள் அதிகம் கவலைப்படவில்லை. “ஆண்கள்  என்றால் இப்படித்தான் அங்குமிங்கும் வாய் வைப்பார்கள். ஆனால் எதுவும் நிரந்தரமாக இருக்காது. வந்தான் போனான் பிழைப்பு தான். நான் என் மகளை கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறேன். பெரியவள்,  தினமும் மாலையில் தன் மாமனார் மாமியாருக்கு குடிக்க சாராயம் தட்டில் வைத்து,  கூடவே பக்கோடா அப்பளம் என்று  தின்பண்டங்களையும் செய்து தருவாள். இந்த காலத்தில யார் இவ்வளவு பணிவிடை செய்வார்கள்? கணவனுக்காக இரவு வெகுநேரம் வரை சாப்பிடாமல் காத்திருப்பாள். அவனோ வருவதில்லை. அவன் முதல் நாளே,‘வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில் இந்த கல்யாணம் நடந்து விட்டது நான் உன்னிடம் திரும்பி வரமாட்டேன். நீ விருப்பப்பட்டால் இங்கு இருக்கலாம் அல்லது உன் வீட்டிற்கு திரும்பி போகலாம்,’  என்று சொல்லிவிட்டானாம். என் கணவர்,  இப்போது கூட,  குடிபோதையில், நீ உன் அம்மா வீட்டிற்கு திரும்பி போ என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் என் மகள் என்னிடம் கூட சொல்லவில்லை. எப்படியெப்படி எல்லாம் கடன் வாங்கி நான் அவர்கள் திருமணத்தை நடத்தினேன் என்பதை அவள் மறக்கவில்லை. பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்தால்  நான் துயரப்படுவேனே என்றுதான் அவள் யோசிக்கிறாள். அவள் சாது. வாய் திறக்க மாட்டாள். அவளது மாமனார் மாமியார் அவளை மிகவும் புகழ்வார்கள். மகன் செல்லாக்காசாக இருக்கிறானே என்கிற உறுத்தல் தான். இவளைப்   புகழாமல் வேறு என்ன செய்வார்கள்? எப்போதாவது மாப்பிள்ளை வீட்டுக்கு வருவதுண்டு. அவருக்காகத் தனியாக அறை கட்டி தந்திருக்கிறார்கள். பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று இப்போதுதான் தகவல் வந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் ஒருவேளை மாப்பிள்ளை மனம் திருந்துவானோ என்னவோ ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்!” இதைச் சொல்லும்போது மைலோவின் முகத்தில் சந்தோஷ மின்னல் மின்னி மறைகிறது! கண்கள் பனிக்கின்றன!

சில ஆண்டுகளுக்குள் மைலோவின் மூத்த மகளுக்கு அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். அவளுடைய கணவன்,  வேறு ஏதோ ஓரு இடத்திற்கு மாற்றல் வாங்கி கொண்டு போய்விட்டான்.

ஒரு நாள்,  அவளுடைய மாமியார், ‘  உன் மூன்று பெண்களையும் என்னால் பராமரிக்க முடியாது. நீ உன் பெண்களோடு பிறந்த வீட்டிற்குச் சென்று விடு,’  என்று அனுப்பிவிட்டார். மைலோ,  தன் மகளுக்கும் இரண்டு மூன்று வீடுகளில் வேலை வாங்கித் தந்தாள்‌ குழந்தைகள் அக்கம்பக்கத்தார்  தயவில் வளர்ந்து வந்தார்கள். ‘இவர்கள் திருமணத்திற்காக பட்ட கடனையே இன்னும் அடைத்தபாடில்லை. இந்த அழகில்,  இந்தப் பெண் குழந்தைகளையும் நான் எப்படித்தான் என்னுடைய சொற்ப வருமானத்தில் பராமரிக்க போகிறேனோ,’ என்று மைலோ வருத்தப்படுவாள். ‘ நேற்று இவளுடைய மாமியார் மாமனார் வந்திருந்தார்கள். பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்ற பாசத்தால் அல்ல. மருமகள் வேலை செய்கிறாளே, அவளுடைய சம்பளத்தில் பங்குகேட்டு பிடுங்கிக் கொண்டு போகத்தான் வந்திருந்தார்கள். மகன் அவளது தங்கமாலையை அடகு வைத்து பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டதாகச் சொல்லி ஒரு பாட்டம் அழுதாள். நீயே சொல்லுங்க சம்பந்தி,  மருமகள் சம்பாதிப்பதில் எனக்குத் தானே உரிமை உள்ளது. அவன் பட்ட கடனை இவள்தானே அடைக்க வேண்டும் என்று கூறுகிறாள். நான் என்ன செய்ய ? பிறகு நான் தைரியமாக சொல்லிவிட்டேன் சம்பந்தியம்மா,  இது உங்கள் வீட்டு விவகாரம் இதில் நான் தலையிட மாட்டேன். மூன்று பெண்களைப் பெற்ற பிறகு,  உங்கள் மகன் கண் காணாமல் ஓடிவிட்டான். இவள்  சம்பாதிக்கிற  காசில்,  குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாது. நானே வந்து உங்கள் மகனின் சம்பளத்தில் ஒரு பகுதியை குழந்தைகளின் பராமரிப்புக்காக கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். உங்கள் மருமகளையும் பேத்திகளையும் அழைத்துச் சென்று விடுங்கள்,” என்று கறாராகக் கூறி விட்டேன் என்றாள். இதைக் கேட்ட பிறகு,  சம்பந்தியம்மா சற்று தளர்ந்து கொடுத்தாள். நான் அவளுக்கும் அவளது கணவருக்கும்,  பக்கத்து வீட்டுக்காரியிடம் நூறு  ரூபாய் கடன் வாங்கி,  சாராயமும் கோழியும் வாங்கி,  விருந்து சமைத்துப் போட்டு அனுப்பினேன்  போன வாரம் பேத்தி நோய்வாய்ப்பட்ட போது ஐம்பது ரூபாய் செலவானது. அவளுக்கு பாலும் முட்டையும் வாங்கித்தர வழியில்லை. வீட்டை விட்டு ஓடிப்போன மகனிடம் கேட்கத் துப்பில்லாமல் மருமகளின் கைப்பிடியளவு சம்பாத்தியத்தில் பங்கு கேட்க வந்த இந்த பேராசைக்காரியைக் கூட,  சம்பந்தி என்கிற காரணத்தால்,  முடிந்த அளவு மரியாதை செய்து அனுப்பி வைத்தேன்,” என்றாள் கண்களைத் துடைத்தவாறு. பெண்ணைப் பெற்றவர்களானால் என்னவெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவள் போல, இத்தனை கூத்துக்கும் நடுவில் சம்பந்தி அம்மாளின் கணவர், வாங்கி வைத்த சாராயம் அனைத்தையும் குடித்து விட்டு, போதையில்,  கோழியின் காலை கையில் எடுத்துக்கொண்டு,  இது வலது காலா அல்லது இடது காலா எனக் கேட்டுக் கொண்டிருந்தார் என்று கூறி புரை ஏறும் வரை சிரித்தாள்.  எனக்கு மைலோ பேசுவதை கேட்டு ரத்தம் கொதித்தது. இருப்பினும்,  நான் எதுவும் சொல்லவில. தன் துயரங்களை சிரிப்பில் பறக்கவிடும் கலையை அவள் நன்கு அறிவாள். 

‘குழந்தைகளுக்கு துணிமணிகளை யாரோ கொடுத்து விடுகிறார்கள் அவர்களுக்கு நல்ல உணவு கொடுத்து வளர்ப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த கஷ்டத்திலும்,  என் கணவர், தன் சாராயத்தை குறைத்துக் கொண்டு,  தினமும் காலையில் பேத்திகளுக்கு வெண்ணெய் தடவிய பன் வாங்கித் தருகிறார் .மகள் என்னை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. வீடு பளிச்சென்று சுத்தமாக இருக்கிறது. ஆனால் அவள் முகம் தான் எப்போதும் இருண்டு வாடிக் கிடக்கிறது. கணவனைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத வாயில்லா பூச்சி வேற என்ன செய்வாள், என்றாள்.

ஒரு நாள் மைலோ மிகவும்  சந்தோஷமாக, பீ ஜி,  என் மருமகன்,  தன் மனைவியும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். குழந்தைகள்  அப்பா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால்,  வீட்டிலேயே இல்லாத அப்பா  என்ன மாதிரியான அப்பா? எதுவோ என்னவோ,  நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து,  என் பாவம் கழிந்தது. இனி நேர்ந்து கொண்டபடி,  கங்கையில் குளிக்கப் புறப்பட வேண்டியதுதான் பாக்கி’ என்றாள்.

மகள் வேலை செய்து வந்த மூன்று வீட்டு வேலைகளையும் நான் விடப் போவதில்லை. கூடுதல் பணத்தில் கடனை அடைத்துவிட முடியும் இல்லையா என்றாள்.  ‘நீ இத்தனை வீடுகளில் வேலை செய்து களைத்து வீடு திரும்புவாய் இல்லையா? என்று நான் கேட்டேன். ‘ஆமாம் பீஜி, மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்தால்,  நான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். அவனோ,  தன் மனைவியை வேலை செய்ய அனுப்ப மாட்டேன் என்று இப்போதே சொல்கிறான். வாழ்நாள் முழுவதும் வீட்டில் தங்க நேரமில்லாமல்,  இப்படியே ஓடிக்கொண்டேதான் இருப்பேன் போலிருக்கிறது என்றாள். ‘எனக்கு வேலைக்கு  நேரமாகிவிட்டது மைலோ. நீ வேலையை முடித்துவிட்டு கிளம்பு. நான் புறப்பட வேண்டும்’ என்றேன். சற்று நேர யோசனைக்கு பிறகு,  “யோசித்துப் பார்த்தால்,  நாம் இருவரும் ஒரே ரகம்தான் பீஜி. உங்கள் கால்கள் மட்டுமே வீட்டில் தரிக்கின்றனவா என்ன? நீங்களும் தான் வெளியே ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள்” என்றாள். அவள் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. இரு பெண்களும் அவரவர் தளத்திலிருந்து, மனம் கோர்த்து, கண்களில் நீர் வரும்வரை சிரித்துக் கொண்டிருந்தோம்.  அவள் சொன்னது நிஜம் தானே!

Series Navigation<< இவர்கள் இல்லையேல் – 3-4சமேலி, சுந்தரி, சீனா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.