இவர்கள் இல்லையேல் – 3-4

டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

Bodhgaya, India – Jul 9, 2015. People waiting at the bus station in Bodhgaya, India. Bodh Gaya is considered one of the most important Buddhist pilgrimage sites.

அத்தியாயம் – 3 நிக்கூ

பல கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்தபின், கற்றுத் திரும்பிப் பார்க்கையில், நினைவுக்கு வருகிற மூன்றாவது நபர் என் கணவர் சர்தார் சுரேந்தர் சிங் வீட்டில் வேலை செய்தவன். அவனுக்குப் பெயர் கூட ஒருவேளை என் புகுந்த வீட்டினர்களாலேயே சூட்டப்பட்டிருக்கலாம். எல்லோரும் அவனை “நிக்கூ” என்று அழைத்தார்கள். இத்தகைய பாத்திரங்களை, கடவுள்  கூட, மிகுந்த யோசனைக்குப் பிறகே, தயாரித்துக் கீழே அனுப்பி இருக்கக்கூடும்.  அவனைப் பார்த்தால் நீங்கள் அவனை ‘சித்தம் கலங்கியவன்’ என்று நினைத்துக் கொள்வீர்கள். உண்மையில் நிக்கூ தான் எங்கள் அனைவரின் சித்தத்தையும் கலக்கிக் கொண்டிருந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவான். வீட்டிலுள்ளவர்கள் அவன் பின்னாடியே ‘நிக்கூ, நிக்கூ,’ என்றழைழைத்தவாறே சூழ்ந்து கொள்வார்கள் .வேலை செய்யாமல், அவன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டான்.  நான்கு பாத்திரங்களையேனும் கழுவி வைத்துவிட்டுத்தான், என் மாமியார் தருகிற  ரொட்டித் துண்டுகளை காய்கறியுடன் சாப்பிடுவான். வேலை செய்யாமல் சாப்பிடுவதையும், கூலி பெற்றுக் கொள்வதையும் பாவம் என்று சொல்லுவான். பல முறை, சாப்பிட்ட பிறகு, முற்றத்தில் நின்று கொண்டு என் மாமியாரிடம் சொல்வான் –

“பீஜி, நீங்கள் தேஜ்பால் பாபு வுக்கு திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். ஹிட்டே பாபுவுக்கும் (என் கணவர்) திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றிய நினைவே வரவில்லை. எனக்கும்தான் திருமண வயதாகி விட்டது. உங்கள் மருமகள்கள் எப்படிப்பட்டவர்கள்  தெரியுமா? தேஜ்பால் பாபுவின் மனைவி கண்ணிலேயே படுவதில்லை. ஹிட்டே பாபுவின் மனைவியோ (அதாவது நான்) செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விடுகிறாள். வீட்டில் தங்குவதேயில்லை. திருமணமான பிறகு வீட்டில் இருந்து கொண்டு வீட்டைக் கவனிக்க வேண்டியது தானே பெண்களின் கடமை? வேலைக்குச் செல்ல அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? என்ன இருந்தாலும் ஹிட்டே பாபுவுக்கு புத்தி கொஞ்சம் மட்டும்தான்.  நீங்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்திருந்தால், என் மனைவியும் இங்கு வேலை செய்ய முடியும்.  உங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கும். ஆனால் என்ன செய்ய, என் திருமணம் குறித்து உங்களுக்கு சற்று கூட கவலையே இல்லை. எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தீர்களானால், நான் என் மனைவியையும் இவர்களுக்கு சேவை செய்ய இங்கு அனுப்பி இருப்பேன்.”

பரமசிவனைப்  போலவே,  என் கணவரும் மிகுந்த கோபக்காரர். வீட்டில் அனைவரும் அவரை ‘ஹிட்லர்’என்று அழைத்தனர். கால ஓட்டத்தில் அவரது பெயர் மருவி ‘ஹிட்டா’ வாக மாறிப்போனது. .  நான் ‘ஹிட்டேயின் மனைவியாகிப் போனேன். இந்த கிறுக்கன் நிக்கூ கூட அவரை ‘ஹிட்டே பாபு’ என்றுதான் அழைத்தான். பெயர்தான் அவனுக்கு நிக்கூ (சிறியவன்). ஆனால் வீட்டில் பல நேரங்களில், ஒரே சமயத்தில் சிறு குழந்தை போலவும் வயது முதிர்ந்த கிழவனைப்  போலவும் நடந்து கொள்வான். என்னை அடிக்கடி அதட்டுவான். நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். பெரும்பாலும் எங்களுடன் வசித்து, வேலை செய்த வேலைக்காரர்களைகளைப் பற்றி மிகவும் குறைவாகவே எங்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், நிக்கூ  இவர்கள் எல்லாரையும் விட வித்தியாசமானவன். அவனைப் பற்றி எல்லோரும் எல்லாமும் அறிந்திருந்தார்கள். அவனுடைய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

இரண்டாம் உலகப்போரின்போது, போர் முயற்சிகளில் சில குழந்தைகளும்  பங்கேற்றார்கள்.  சின்ன சின்ன வேலைகளைச் செய்ய இவர்கள் தேவைப்பட்டார்கள். பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லுதல், துணியாலான விசிறியை இழுத்தல், கடிதங்களையும் செய்திகளையும் இங்குமங்கும் கொண்டு செல்லுதல் போன்ற வேலைகளை இந்த சிறுவர்கள் மூலமாகவே ராணுவத்தினர் செய்து கொண்டார்கள்.  எங்கள் நிக்கூவும் அங்கு துணி விசிறியை இழுக்கும் வேலையைச் செய்து வந்தான். விசிறி இழுத்தகதையை  நினைவுபடுத்திக் கொண்டு, அவன் சொல்வான்  –  “நான் விசிறி இழுத்த சமயங்களில் மிகவும் அழகான வெள்ளைக்கார பெண்கள் நடனம் ஆடுவதை யெல்லாம் பார்த்திருக்கிறேன். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். எந்த வெள்ளைக்கார பெண்ணுடனும் பேச தைரியம் இருந்ததில்லை. ஆனால்,  அவர்கள் எல்லோரும் என்னை நன்றாக அறிந்திருந்தார்கள்.”  நிக்கூவின் வீடு சின்ன சிம்லாவில் இருந்தது. அவன் நெசவாளர்களின் கிராமத்தில் வசித்து வந்தான். அவனைப் பொருத்தவரையில், “வண்ணான்” என்பதே மிகப்பெரிய வசைச் சொல். நெசவாளர்கள் செய்கிற துணிகளை வண்ணான்களே துவைத்தார்கள். எல்லோருடைய அழுக்குத் துணிகளையும் வண்ணான்கள்தானே துவைக்கிறார்கள்.  அதனால் ” வண்ணான்”  என்பதைவிடப் பெரிய வசைச் சொல் வேறு என்ன இருந்து விட முடியும் என்பதே அவன் வாதம். நிக்கூவிற்கு திருமணமாகியிருந்தது.  அவன் இரண்டாம் உலகப்போரில் சேர்ந்து, ஒன்பது வருடங்கள் வரை, தன்னுடைய முழு சம்பளத்தையும் கிராமத்திலிருக்கும் மனைவியின் பெயருக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான். போர் முடிந்ததும், இனி நிம்மதியாக இருக்கலாம் என அவன் நினைத்தான்.  வீடு திரும்பி இனிமையான வாழ்க்கையை வாழத் தொடங்கலாம் என நினைத்தான். கிராமத்தில், அவன் உயிருடன் வீடு திரும்புவான் என்று ஒருவருக்கும்  நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அவனுடைய சகோதரன், நிக்கூவின் மனைவியை சொந்தம் கொண்டாடியதோடல்லாமல் மாதாமாதம் நிக்கூ அனுப்பிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். கிராமத்திற்கு திரும்பிய பிறகுதான் நிக்கூவுக்கு  உண்மை நிலவரம் தெரிந்தது. அவன் உடனே தில்லிக்கு ஓடி வந்துவிட்டான்.  தில்லியில்  லேடி இர்வின் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவரை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான். அந்த ஆசிரியர் அவனை கவனித்துக் கொண்டார். அங்கு வேலை செய்த பிறகு, என்ன கிடைத்ததோ, கொஞ்சமோ கூடவோ, அதையே சாப்பிட்டுக் கொள்வான். ப்ரெட், தேநீர், பன் என்று எது கிடைத்ததோ அதை சாப்பிட்டுக் கொள்வான். அந்த ஆசிரியருக்கு ஒரு வேலைக்காரனை வைத்து சோறு போடுகிற அளவுக்கு வசதியோ அல்லது வேலைக்காரனின் தேவையோ இருக்கவில்லை. அந்நாட்களில், என் நாத்தனாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அந்த ஆசிரியரிடம்  பேசிவிட்டு, என் நாத்தனார் நிக்கூவை வீட்டிற்கு அழைத்துவந்தார். தன் சைக்கிளில் பின்னால் அமர வைத்துத்தான் கூட்டி வந்தார் எனினும், நிக்கூவுக்கு சைக்கிளின் கூடவே ஓடி வந்தது போல மூச்சிரைத்தது. அப்போதுதான் அவனுக்கு அந்த வீட்டில் போதுமான சாப்பாடு கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. போதாத குறைக்கு, நிக்கூவுக்கு சிகரெட் பீடி  பிடிக்கும் பழக்கமும் இருந்தது. நிக்கூ சிகரெட்டையும் பீடி என்றே சொல்வான். நிக்கூவிற்கு  கோபம் அதிகம் வரும். கோபத்தில் வசைச் சொற்களைக் கூறி ஏசுவதிலும் குறைச்சலில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி, நிக்கூ உபயோகப்படுத்தும் அதிகபட்ச வசைச் சொல், “வண்ணான்” என்பதேயாகும்.  கோபம் வருகையில், “என் பங்கு சோற்றைச்  சாப்பிட்டு சாப்பிட்டு அத்தனைபேரும கொழுத்துத் திரிகிறீர்கள். என்னுடைய ரொட்டியைத் தின்றுவிட்டு என்னிடமே முறைக்கிறீர்கள்,” என்று கத்துவான்.

என்னுடைய நடு நாத்தனாருக்கு திருமணம் ஆனதும் அவள் தன் புத்தகத்தில் வசிக்கத் தொடங்கினள்.  எப்போதாவது எல்லோரையும் பார்த்துவிட்டுப் போகவோ  அல்லது ஓரிரு நாட்கள் தங்கிவிட்டுப் போகவோ பிறந்த வீட்டிற்கு வருவாள்.  நிக்கூவிற்கு  அவள் வீட்டில் இல்லாத வெறுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதை வார்த்தைகளில் சரியாக சொல்லத் தெரியாமல் தன் கோபத்தை இப்படி வெளிப்படுத்துவான்:

“அவர்கள் ரெண்டு புது துணியும் நகைகளும் கொடுத்ததில், நீ என்னவோ அகமகிழ்ந்து போய்விட்டாய்.  அவர்கள் வீட்டிலேயே தங்கத்  தொடங்கிவிட்டாயே. போதாததற்கு, தங்க வளையல்களை மாட்டிக்கொண்டு கொண்டு நாள் முழுவதும் தலைகால் புரியாமல் சுற்றித் திரிகிறாய். நீ அவர்கள் வீட்டில் இருந்தது போதும்.  உடனே இங்கே திரும்பி வந்துவிடு.”

என் மாமியார் அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பார். அவனை அதட்டி,”வீட்டுப் பெண்களை அப்படிச் சொல்லக்கூடாது. திருமணமாகிப் போன பிறகு இனி அதுதான் அவளுடைய வீடு.  அவளை அவளுடைய வீட்டில் இரு  என்றுதான் சொல்ல வேண்டும்.  அவள் அங்கு சந்தோஷமாக இருந்தால் தான், இங்கு நாமும் சந்தோஷமாக இருக்க முடியும்,” என்பார் . ஏதோ கொஞ்சம் புரிந்தது போல  நிக்கூ தலையசைப்பான்.

அவனுடைய இந்த மாதிரியான அசட்டுத் தனங்களுக்காகவே, பலமுறை அவனை வேலையில் இருந்து நீக்கியதாக என் கணவர் சொல்வார். அம்மாதிரியான சமயங்களில், அவன் வீட்டு வாசலில் இரண்டு மூன்று நாட்கள் கூட, பட்டினியாக உட்கார்ந்திருப்பான். என் மாமியார் பரிதாபப்பட்டு அவனை உள்ளே அழைத்து சாப்பாடு கொடுத்தால், “நான் வேலை செய்யாமல் சாப்பிட மாட்டேன்,” என முரண்டு பிடிப்பானாம். என் மாமியார் பரிவுடன்,”போகட்டும், இரண்டு பாத்திரங்களை தேய்த்துக் கழுவி வைத்துவிட்டுச் சாப்பிட வா,,” என்பாராம். பாத்திரங்களைக்  கழுவிய கையோடு, ஏதோ பத்து நாட்கள் பட்டினி கிடந்தவன் போலச் சாப்பிடுவானாம். எலும்புகளை நடுங்கவைக்கும் தில்லிக் குளிரில், அவன் மொட்டை மாடியில் கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்குகையில், எல்லோரும் “இந்த குளிரில் மொட்டைமாடியில் ஏன் தூங்குகிறாய் ? குளிரில் கை கால் விரைத்து சாகத்தான் போகப் போகிறாய்” என்பார்கள். அதற்கு அவன், ” நீங்கள் எல்லோரும் பைத்தியங்கள். மொட்டை மாடியில் தானே நாள் முழுவதும் வெயில் வருகிறது, பின் அது எப்படி குளிர்ந்து போகமுடியும்?” என்பான்.  அவன் பல வருடங்கள் எங்கள் வீட்டில் வேலை செய்தான். எல்லோரையும் மனதில் தோன்றியபடி ஏசிக்கொண்டிருந்தான். ஒருமுறை அவன் என் மாமனாரையே திட்டுவதைக் கேட்டவுடன், என் மூத்த மைத்துனர் அவனை நிரந்தரமாக வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

பிறகு அவன் ஏதோ ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தான். இருந்தாலும், தினமும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பான். அவனுக்கு சாப்பாடு கொடுப்பதோடு அல்லாமல் எல்லோரும் அவனுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார்கள். அவன் கடையிலேயே படுத்துக் கொண்டாலும், பணத் தேவை ஏற்படும் போதெல்லாம் எங்களிடம்தான் வருவான் எல்லோரும் அவனை குடும்ப உறுப்பினர் போலவே கருதினார்கள். என் இரு மூத்த நாத்தனார்கள் திருமணமாகி தில்லியில் வசித்து வந்தார்கள். நிக்கூ அவர்கள்  வீட்டுக்கும் போய் வருவான்.  நுழைந்ததுமே கறாராக  பஸ் கட்டணத்தை வாங்கி வைத்துக் கொள்வான். அதன் பின்னரே, வேலை ஏதேனும் இருந்தால் செய்ய ஆரம்பிப்பான். வேலையை முடித்த பிறகு நீ பஸ் கட்டணத்தை  வாங்கிக் கொள்ளக் கூடாதா என்று கேட்டால், அவன் அவர்கள் வேலை மும்முரத்தில் மறந்துவிட்டு, பஸ் கட்டணம் தராது என்னை தவிக்க விட்டு விட்டால் நான் என்ன செய்வது என்பான்.  “நான்கு மணிக்கு இந்திரா காந்தி இந்தியா கேட் வழியாக போகப் போகிறாராம். அந்த சமயத்தில் எனக்கு  கட்டாயமாக அங்கு இருக்க வேண்டுமென்றுஆசை. அவருக்கு என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் என்ன செய்வது?” என்று அவன் வெள்ளந்தியாகக்  கேட்கும்போது  எங்களுக்கு சிரிக்கத்தோன்றாது.

நிக்கூவின் உலகம் விசித்திரமானது.  அவனுக்கு டை அணிந்து கொள்வதில் விருப்பம் அதிகம். வெயில் காலத்தில் கூட கழுத்தில் மூன்று நான்கு டைகளை தொங்கவிட்டு கொண்டிருப்பான். வேலைக்கு நடுவே அவை தொந்தரவாக இருந்தால், அவற்றையும் ஏசுவான். சில சமயம், “இவை என் மனைவிகள்,” என்பான்.

அந்நாட்களில் நான் ஆகாசவாணியில்  டோக்ரியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். காலையிலும் மாலையிலும் நான் வீட்டில் இல்லாமல் போக நேரிட்டால், நிக்கூ , “ஹிட்டே பாபாவின் மனைவி என்ன இப்படி இருக்கிறாள்? காலையிலும் மாலையிலும் வீடு தங்குவதில்லை.  வீட்டில் இருக்கும்போதும், வீட்டுக்குள்ளேயே செருப்பை மாட்டிகொண்டு இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறாள். மனைவிகள்  வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலையை கவனிக்க வேண்டும். வெளியே வேலைக்கு போகக்கூடாது. திருமணத்திற்கு முன்பு வேண்டுமானால் வேலை செய்து கொள்ளட்டும்,  திருமணத்துக்குப் பிறகு  வீட்டில் இருந்தால் போதுமே. மனைவிகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. நான் என் மனைவியை கண்டிப்பாக வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்,” என்பான்.

வீட்டுக்கு வரும்போதெல்லாம், இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்வான்.  வெயில் காலத்தில் பரணிலிருந்து பானைகளைக் கீழே  இறக்கி விட்டு, வெயிலில் காயவைத்த கம்பளிகளை மடித்து அங்கு வைப்பான். என் மாமியார் பெரிய பெரிய ட்ரங்க் பெட்டிகளை பரணில் வைத்திருந்தார்.  அதில் பழைய பொருட்கள் பலதும் இருக்கும். தேவைப்படும்போது, அவை கீழே இறங்கி வரும்.  நிக்கூ பம்பரமாய் சுழன்று வேலை செய்வான்.வீடு பெருக்கி மெழுக அல்லது பாத்திரம் தேய்க்க எவரையேனும் வேலைக்கு அமர்த்தினால் அவனுக்கு மிகவும் கோபம் வந்துவிடும்.” நான் செய்ய மாட்டானா இதையெல்லாம்? இவர்களுக்கு ஏன் சம்பளம் தரவேண்டும் ? கையில் பணம் அதிகமாக கொழுத்திருக்கிறதா முட்டாள் வண்ணான்களே?” என்பான்.

இனறும், என் புகுந்த வீட்டினர் நிக்கூவை குடும்பத்தில் ஒருவனாக நினைத்தே  நினைவு கூர்கின்றனர்.

***

அத்தியாயம் – 4

மரியமும் கேத்ரீனும் நடுவில் சுரேஷும்

திருமணமான இரண்டு மூன்று வருடங்களில்,  நாங்கள் தில்லியிலிருந்து மும்பைக்கு  வந்து விட்டோம்.  என் கணவருக்கு அலுவலகத் தரப்பில்  வீடு கிடைக்க நாளாகும் என்பதால்,  என் சிறிய நாத்தனாரின் உறவினருக்கு சொந்தமான ஒரு அடுக்கக் குடியிருப்பில் நாங்கள் வசிக்கஆரம்பித்தோம். வீட்டுக்கருகேயிருந்த  சயான்  மார்க்கெட்டில்,  தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு, நான் என் மும்பை வாழ்க்கையை ஆரம்பித்தேன். 

சயானில் தற்காலிகமாக இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த பிறகு,  நாங்கள் பெடர் ரோடுக்கு ஜாகை மாறினோம். தெருவை ஒட்டிய ‘தர்பங்கா ஹவுஸ்’ என்கிற,  தர்பங்கா அரச குடும்பத்திற்குச் சொந்தமான  பங்களாவில் எங்களுக்கு தரைத் தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருகாலத்தில் தர்பங்கா மகாராஜாவுக்கு சொந்தமாக இருந்த அந்த பங்களா,  அப்போது வருமானவரித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. கட்டிடத்தின் அடித்தளத்தில்  கோவாவைச் சேர்ந்த மரியம் என்கிற ஒரு பெண் வசித்து வந்தாள்.  அக்கட்டிடத்தில் வசித்து வந்தவர்களின்  வீடுகளில், அவள் வேலை செய்து வந்தாள். நானும் அவளை  வீட்டு வேலைகளைச் செய்ய அமர்த்திக் கொண்டேன். மரியம் மிகவும் கை சுத்தமானவள். பொருட்கள் வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும். பெரிய வசதி என்னவென்றால்,  நான் குரல் கொடுத்த மாத்திரத்திலேயே அவள் வேலை செய்ய வந்து விடுவாள். என் மாமியாரும் அப்போது எங்களுடன்  தங்கியிருந்தார். மரியம் அவருக்கு தேவையான பணிவிடைகளையும் செய்து வந்தாள். என் மாமியாருக்கும் மிகவும் மகிழ்ச்சி.  மரியம்  அவரை மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் கவனித்துக்கொண்டாள். அவரோடு அக்கம்பக்கத்து கதைகளையும் பகிர்ந்து கொள்வாள். தன் வீட்டைக் காட்டிலும், அவள் எங்கள் வீட்டின் மீது தான் அதிக கவனம் செலுத்தினாள். எங்களுக்கு அவள் மீது பூரண நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

வேலை இல்லாத நேரங்களில்,  மரியம் தெருவை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து போகிற பேருந்துகளை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருப்பாள். ஒருநாள்,  ஆவல் மேலிட,  அவளிடம் ‘நீ அப்படி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? எனக்கேட்டேன் .அவள்,  “மேம் ஸாப், அங்கே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டி ருக்கிறானே ஒரு பையன்,  அவன் என் கணவரின் தங்கை மகன். அவனுக்கு  லவ் வியாதி வந்துவிட்டது,” என்றாள். நானும்  விடாமல்,  ‘வித்யாசமான வியாதியாக இருக்கும் போலிருக்கிறதே, அது என்ன லவ்  வியாதி!”  என்றேன்  லவ் என்றால்,  அன்பு, காதல் என்று எனக்குப்   புரிய வைத்தாள். அதற்கு பிறகு, நாங்கள் இருவரும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பையன்,  தன் நாத்தனாரின் ஒரே மகன் என்றும்,  வேலை வெட்டி இல்லாமல் திரிகிறான் என்றும், , பத்தாம் வகுப்பிலேயே லவ் வியாதி ஏற்பட்டு விட்டதால் படிப்பு ஏறவில்லை என்றும், ஆபீஸில் வேலை பார்த்து மாதம் முன்னூறு ரூபாய் சம்பாதிக்கிற ஒரு பெண்ணுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறான் என்றும், கூடிய விரைவில்,  அந்தப் பெண்,  அவனது வலையில் சிக்கி விடக்கூடும் என்றும் கூறினாள்.

வேலை செய்கிற வீடுகளில்,  யாரிடமாவது சிபாரிசு செய்யச் சொல்லி,  அவனுக்கு  எங்காவதுஒரு வேலை வாங்கித் தரக் கூடாதா என்று நான் கேட்டதற்கு , அவள்,  ‘இவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்காமல் தூக்கம் வராது.வேலைக்குப் போனால்,  பேருந்துநிலையத்தில் எப்படி காத்துக் கொண்டிருப்பது? சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால்,  காதல் வயப்பட்ட வர்களுக்கு யார் சொல்வதும் மண்டையில் ஏறாது,” என்றாள். உண்மைதான். காதலின் எதிரே, யார் தான்  ஜெயித்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

பிறகு நாங்கள் பெடர் ரோடிலிருந்து ஆல்டமௌன்ட் ரோட்டுக்கு மாறினோம். இங்கு வேலை செய்ய வந்த எவருமே சரியாக அமையாததால்,  கூடுதலாக சம்பளம் கொடுத்து, மரியத்தையே மறுபடியும் அழைத்து க் கொண்டேன். மரியம் திரும்ப வந்ததில், நாங்களும் பெருங்கவலை தீர்ந்தாற்   போல் உணர்ந்தோம். சமையலை நான் கைப்படச் செய்ததால், மற்ற  வேலைகளை மரியம் கவனித்துக் கொண்டாள். 

என் மாமியார் காலமானபோது, வீட்டின் ஒரு உறுப்பினர் போலவே, மரியம் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டாள்.

இவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், வீடு, சில நேரங்களில் பேய் புகுந்த வீடு போலவும், ராத்தங்கும் சத்திரம். போலவும், வாடகை விடுதியைப் போலவும் தான் இருந்திருக்கும். என் மாமியார் வீட்டின் அச்சாணியாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்,  நாங்கள் அந்த வீட்டில் சொற்ப காலமே இருந்தோம்.  நாங்கள் மறுபடியும் வீடு மாறினோம். பழைய வீட்டில் எங்கு பார்த்தாலும் என் மாமியார் இருப்பது போலவே இருந்தது. எங்களுக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு தான், நாங்கள்  குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தோம். குழந்தை என ஒன்று வந்த பிறகு, எந்த பெற்றோரால் வீட்டை விட்டு வெளியே  அதிக நேரம் செலவழிக்க முடியும்? மக்கட் செல்வத்தை விட பெரிய செல்வம் உண்டா உலகில்?

என் மகள் மீத்தா பிறந்தாள். மகப்பேறு விடுமுறையில் இருந்த காரணத்தால், அவள் உறங்கும் போது, நானே வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டேன்.

சில மாதங்கள் கழித்து,  நாங்கள் குடியிருந்த கட்டிடத்தில் வேலை செய்துவந்த துப்புரவு தொழிலாளி சுரேஷ்,  எங்கள் வீட்டில்  வேலை செய்ய ஒப்புக் கொண்டான். அவனுக்கு திருமணமாகியிருந்தது. மனைவியை,  கிராமத்தில் தன் பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விட்டு வைத்திருந்தான்.

தேன்கூட்டைப் போல அடர்த்தியான சுருள் சுருளான முடி அவனுக்கு. பார்க்க,   அசப்பில், திரைப்படக்  கதாநாயகன் போல இருப்பான். வேலையை மிகவும் சுத்தமாகச் செய்வான். அவன் துடைத்த தரையில் முகம் பார்க்கலாம். வேலையெல்லாம் முடிந்த பிறகு, நேர்த்தியாக உடை அணிந்து கொண்டு, சிகை அலங்காரம் செய்து கொண்டு தினமும் எங்கோ வெளியே செல்வான். ஒரே ஒரு குறை தான். அதிகம் பேசுவான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வான். ஒரு நிமிடம் ஒரு இடத்தில் நிற்க மாட்டான். ஒருநாள்,  நான் திரும்பி வருகையில்,  அவன்  எங்கோ வெளியே போய்க் கொண்டிருந்தான். நான் எதுவும் கேட்பதற்கு முன்னரே, அவன், நாளை சொல்கிறேன் என்று தலையசைத்துவிட்டு வேகமாக போய் விட்டான்.

அடுத்த நாள்,  தான் தினமும் ஒரு தையற்காரரைச் சந்திக்கப் போவதாகவும்,  அவர் தான் சேமித்து வைத்த பணத்தில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும் இவனுக்குக் கதாநாயகன் பாத்திரம் தருவதாக வாக்களித்திருப்பதாகவும் கூறினான். படத்தின் பெயர்  – “கார்குழலின் நிழலில்” . இந்தப் படத்தில் அவன் ஒருவன் மட்டும் தான் கதாநாயகன் எனவும் கதாநாயகிகள் பலர் எனவும் கூறினான். எல்லாக்  கதாநாயகிகளும் அந்த தையல் மாஸ்டரின் வாடிக்கையாளர்களே. பலசமயம்,  தரையை ஈரத்  துடைப்பானால்  துடைத்துக்கொண்டே,  திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பான். மனைவியை ஏன் கூடவே வைத்துக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு,  திருமணமானவன் என்று தெரிந்துவிட்டால், திரையுலகில் அவனது சந்தை மதிப்பு குறைந்துவிடும் என்று சிரித்துக்கொண்டே சொல்வான்.

மனைவியின் கடிதங்களுக்குப் பதில் எழுதுகையில், “நான் உனக்கு துரோகம் செய்வதாக நீ நினைக்கிறாய். ஆனால் அது என் கையறு நிலை என்பதை நீ புரிந்து கொள்வதே இல்லை,”  என நேற்று நான் என் மனைவிக்கு கடிதம் எழுதி விட்டேன் என்று ஈரத் துடைப்பானின் மீது கை வைத்தவாறே,  உரக்கச் சிரித்தபடியே   என் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக  என்னைக் கூர்ந்து நோக்கினான்.  தன் மனைவியை முட்டாள் என்று நினைத்துக்கொள்ள இவனுக்கும் உரிமை இருக்கிறது என நான் மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். திரைப்படங்கள் வெறுமனே கனவுகளைமட்டும் விதைப்பதில்லை:  அவற்றில் வழுக்கி விழும்படியும்  செய்து விடுகின்றன என்ற எண்ணமே எனக்கு தோன்றியது. எப்படியாவது படம் முடிந்து திரையரங்குகளில் வெளியாகி விடும் என்ற நம்பிக்கையில் தினமும் கனவு கண்டு கொண்டு இருந்தான்.

ஒரு நாள்,  உன் மனைவி எப்படி இருப்பாள் என அவனிடம் கேட்டேன். மறுகணமே,  எந்த கதாநாயகியும் அவளைப் போல அழகில்லை என பெருமையுடன் கூறினான். கூடவே,  தன் பர்ஸிலிருந்து,  ஹனுமான் படத்துக்கு பின்னால் ஒட்டி வைத்திருந்த மனைவியின் புகைப்படத்தை எனக்கு காட்டினான்.  அவள் உண்மையிலேயே அழகி தான். உன் சொந்த வழக்கில் நீ எதற்காக ஹனுமானை நடுவில் இழுக்கிறாய் என்று கேட்டதற்கு,  “சரிதான்,  யாருக்கு பூஜை செய்கிறோமோ அவரை இழுக்காமல் வேறு யாரை இழுக்க முடியும்?” என்று சிரித்துக்கொண்டே பதிலளிளித்தான்.

ஒரு நாள்,  எங்கள் அடுக்கக வீடுகளில் வேலை செய்யும் பெண்மணி ஒருத்தி,  உங்களுக்கு குழந்தையை பார்த்துக்கொள்ள யாரேனும் தேவைப்பட்டால், . நான் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை நாளை அழைத்து வருகிறேன் என்றாள்‌  சொன்னபடியே,  மறுநாள், உடம்பில் கிள்ளி எடுக்கச் சதை இல்லாத ஒரு பெண்ணைக்  கூட்டி வந்தாள். அவள் பெயர் கேத்ரீன். எனக்கும் மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்குத்  திரும்ப வேண்டியிருந்ததால்,  நான் அவளை என் மகளைப் பார்த்துக் கொள்ள அமர்த்திக் கொண்டேன். கேத்ரீன் இதற்கு முன்பு வேலை செய்த வீடுகளில் முதலாளியம்மாக்கள்,  சீட்டுக்கட்டு பார்ட்டிகளுக்கோ அல்லது வேறு கேளிக்கை விருந்துகளுக்குப போகும் போது,  குழந்தையைக் கேத்ரீனிடம் ஒப்படைத்துவிட்டு போவது வழக்கமாம். குழந்தைகள் அவளது முழு கண்காணிப்பில் தான் இருப்பார்களாம். ஆனால்,  எனக்கோ என் மகளின் வேலைகள் எல்லாவற்றையும்  என் கைப்பட செய்தால்தான் திருப்தி. கேத்தரின் மீத்தாவின்  துணிகளை மிகவும் கவனமாக துவைத்துக் கொடுப்பாள். மாலை வேளைகளில் மீத்தாவுக்கு அலங்காரம் செய்து புதுத்துணி அணிவித்து,  லதா தீதி  (லதா மங்கேஷ்கர் )வீட்டுக்கு அழைத்துப் போவாள்.

என் கணவருக்கு பிரசித்தி பெற்ற உணவு விடுதிகளில் சென்று சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். என் மகள் ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போதே,  நாங்கள் அவளை வெளியே அழைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டோம்.  ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையை வெளியே அழைத்துச் செல்வது தவறு என்பது கேத்ரீனின்  தீர்மானமான அபிப்ராயம். நாங்கள் வீடு திரும்பும் வரை கேத்ரீன்  கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காத்திருப்பாள்.

மீத்தாவுக்கு ஒரு வயதான பிறகு,  நான் அவளை என்னோடு வானொலி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.  சில சமயம்,  வானொலி நிலையத்தில், மீத்தாவை மடியில் கிடத்திக் கொண்டே,  நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்திருக்கிறேன். இவ்வளவு சிறிய,  அழகான குழந்தையை வெளியே எடுத்துச் சென்றால் குழந்தைக்கு கண்ணே பட்டுவிடும் என்று கேத்தரின் சொல்வாள். நான் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் மௌனமாக இருந்தால்,  வேறு வழியின்றி, ஒன்றும் பேசாமல் மீத்தாவை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறிக் கொள்வாள். பலமுறை,  நான் வேலை முடிந்து வீடு திரும்புகையில், மீத்தா என்மீது  தாவிப் பாய்ந்து, தன் சின்னஞ்சிறு கைகளால் என் கழுத்தை கட்டிக் கொள்வாள். அப்போதெல்லாம்,  கேத்ரீனின்  முகம் கறுத்து விடும். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு என் மீதுதான் கோபம் அதிகம். ஒரு நாள்,  அவள் மீத்தாவிடம், உனக்கு அம்மாவை பிடிக்குமா இல்லை வாழைப்பழம் பிடிக்குமா என்று கேட்டாள். குழந்தைகள் பெரும்பாலும் கடைசி வார்த்தையைத்தான் பிடித்துக் கொள்வார்கள். எதிர்பார்த்தபடியே, மீத்தா,  “வாழைப்பழம்” என்றாள். அதைக்கேட்டு,  கேத்ரீன், ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தவாறே, மகிழ்ச்சியுடன் சிரித்தாள். 

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் எங்கள் வீட்டில் வேலை செய்த பின்,  சவுதி அரேபியாவில் வேலை கிடைத்து, கேத்ரீன் மிகவும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றாள். அவள் போன பிறகு என் மகள்,  “அம்மா கேத்ரின் திரும்பி வரமாட்டாள் தானே” என்று கேட்டாள்.  நான் “வரமாட்டாள்”என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டேன்.

(தொடரும்)

Series Navigation<< இவர்கள் இல்லையேல் – ராம்லால்மைலோ – இவர்கள் இல்லையேல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.