விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்

This entry is part 25 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

”மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (ம.மா.உ.)” என்று ஒழுங்காகத் தமிழில் எழுத ஆசைதான். ஆனால், வெகுஜன பத்திரிகைகளில் ஜி.எம்.ஓ. என்று சொல்லிவருவதால், தலைப்பை அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி, இக்கட்டுரையில் ”ம.மா.உ.” என்றே சொல்ல உத்தேசம். இது உலகெங்கும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். குறிப்பாக, விவசாயத்தில் ‘கார்பரேட் சதி’ என்றும், பரம்பரை விவசாயத்தின் எதிரி என்றும் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பிரச்னை.

முதலில் ம.மா.உ. என்றால் என்னவென்ற புரிதல் அவசியம். மனிதர்கள் பல நூற்றாண்டுகளாகக் கலப்பினப் பெருக்கம் செய்துவந்துள்ளனர். குறிப்பாக, இது கொட்டை இல்லாத திராட்சைப் பழம், புதிய வகை மாம்பழம், அரக்கு நிறக் கோழி முட்டை என்று பலவகையுண்டு. இத்தனை அரிசி மற்றும் தானிய வகைகளும் நமக்கு இன்று கிடைப்பதற்குக் காரணம், கலப்பினப் பெருக்கம் வழியாகத்தான்.

ம.மா.உ. பற்றிய கட்டுரையில், ஏன் கலப்பினப் பெருக்கத்தைப் பற்றி எழுத வேண்டும்? காரணம், இவ்விரண்டு விஷயத்திற்கும் மிகச் சின்ன வித்தியாசம்தான் உள்ளது. கலப்பினப் பெருக்கத்தில், ஒரே வகையான உயிரினம் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, கொட்டை இல்லாத திராட்சைப் பழத்தை உருவாக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.

 1. மகரந்தப்பைகளில் (pollen) ஆண் மற்றும் பெண் வைகைகள் உண்டு. சில சமயம் திராட்சையின் ஆண் மகர்ந்தப்பை முதலில் தோன்றும். வேறு சில சமயம் பெண் மகரந்தப்பை முதலில் தோன்றும். இப்படித் தோன்றினால், கலக்கினப் பெருக்கம் செய்ய அந்த வருடம் முடியாது
 2. பெண் மகரந்தப்பை தோன்றியவுடன், ஆண் மகரந்தப்பையிலிருந்து ஒரு மூடி போன்ற உறையை நீக்கிவிட்டுப் பெண் மகரந்தப்பையுடன் கலந்தால், (ஆண் மகரந்தப்பை ஒரு வகை திராட்சையிலிருந்து, பெண் மகரந்தப்பை மற்றொரு வகையிலிருந்து) கலப்பினப் பெருக்கம் சாத்தியம்

அட, வயலும் வாழ்வும் நிகழ்ச்சிபோல ஆகிவிட்டதோ என்று தோன்றலாம். ஆனால், இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஆப்பிள் மகரந்தப்பையையும் திராட்சை மகரந்தைப் பைகளையும் சேர்த்துக் கலப்பினப் பெருக்கம் செய்வதில்லை. அப்படிச் செய்தால், அது, ம.மா.உ. ஆகிவிடும். அவ்வளவுதான். இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

ஏன் ம.மா.உ. நமக்கு தேவையாகிவிட்டது?

 1. முதலில், உலக மக்கட்தொகை, குறிப்பாக, இந்தியா மற்றும் சைனாவில் ஏராளமாகிவிட்டது. ஒரு 12 முதல் 15 ஆண்டுகளுக்குள், உலகின் மக்கட்தொகை, 100 கோடி (1 பில்லியன்) அதிகமாகி வந்துள்ளது. இதைச் சமாளிக்க என்ன வழி? உலகில், புதிதாகச் சேர்ந்துள்ள 100 கோடி மக்களுக்கு எப்படி உணவு அளிப்பது? உலகில் உள்ள காடுகளை எல்லாம் அழித்து, விவசாயம் செய்யலாம். இது மடத்தனம் என்று நாம் அறிவோம். காடுகளை அழிக்காத பட்சத்தில், இருக்கும் பயிர்நிலத்தில், அதிக உற்பத்தி செய்ய வழி தேடவேண்டும். இதற்கு ம.மா.உ. ஒரு முக்கிய வழி
 2. அத்துடன் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இருக்கும் பயிர்களையும் நாம் பாதுகாத்தால்தான், நம்மால் அதிக உணவு பற்றி நினைக்கவே முடியும். நம்மிடம் உள்ள பயிர்களுக்கு, குறிப்பாகப் பூச்சிகள் மற்றும் மாறும் தட்பவெப்ப நிலையை ஓரளவிற்குச் சமாளிக்கும் திறனை அளிக்க வேண்டும்

பலர் ம.மா.உ.வை எதிர்தாலும், மேற்சொன்ன இரு பிரச்னைகளுக்கும் அவர்கள் எந்த மாற்றையும் அளிக்கவில்லை.

பயிர்களுக்குப் பூச்சிகளை எதிர்க்கும் சக்தியை வளர்ப்பது ம.மா.உ.–வின் ஒரு முக்கியக் குறிக்கோள். இதைத் தவிர, இன்னொரு முக்கிய நோக்கம், இருக்கும் பயிர்களின் ஊட்டச் சக்தியைக் கூட்டுதல். உதாரணத்திற்கு, நெல் மற்றும் அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே இருப்பதாக நாம் படித்திருப்போம். ஆனால், நெல்லின் உமியில் வைடமின் A சத்து உள்ளது. ஆனால், எந்திரத்தால் நெல்லின் உமியை நீக்கும்போது, அந்தச் சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இதைப் பயோ தொழில்நுட்பம் எளிதில் சரிகட்ட வழிசெய்துள்ளது. சர்வதேச அரிசி மையத்தின் ஆராய்ச்சியில் இரண்டு உயிரணுக்களை மாற்றியதில், வெள்ளை அரிசி மஞ்சள் அரிசியாக மாறியதோடு, எந்திரத்தால் உமியை நீக்கும்போது, வைட்டமின் ஏ நீங்காமல் நமக்குக் கிடைக்கிறது. இந்த இரண்டு உயிரணுக்களில் ஒன்று, பேரரளி பொவிலிருந்தும், மற்றொன்று மண்ணில் உள்ள நுண்ணியிரிலிருந்தும் எடுக்கப்பட்டவை. வைட்டமின் ஏ குறைபாட்டினால், 250 மில்லியன் குழந்தைகள் வருடம்தோறும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு கோப்பை மஞ்சள் அரிசி, ஒரு குழந்தையின் அன்றாட வைட்டமின் ஏ தேவையில் 60%-ஐப் பூர்த்தி செய்கிறது.

இன்று, உலகெங்கும் பல கோடி மனிதர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏ-ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் ஊசி அன்றாடம் தேவைப்படுகிறது. எப்படி இந்தச் செயற்கை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது? ம.மா.உ. முறைதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 1. நுண்ணியிர் (bacteria) அல்லது ஈஸ்ட் எளிதில் கிடைக்கும் பொருள். இதிலிருந்து ப்ளாஸ்மிட் என்னும் டி.என்.ஏ.வை ஓர் உயிரணு கத்தரிக்கோல்போலப் பயன்படுத்துவது இன்சுலின் தயாரிப்பின் மிக முக்கிய அங்கம்
 2. இந்த ப்ளாஸ்மிட்டின் இடைவெளியில் மனித இன்சுலின் அணுக்கள் சேர்க்கப்படுகின்றன
 3. இந்த மாற்றப்பட்ட ப்ளாஸ்மிட், மாற்றப்படாத ஈஸ்ட்டுடன் / நுண்ணுயிருடன் சேர்க்கப்படுகிறது
 4. இவ்வாறு சேர்க்கப்படுகையில், மேலும் இன்சுலினை ஈஸ்ட் அல்லது நுண்ணியிர் மரபணுக்கள் தயாரிக்கத் தொடங்கிவிடுகின்றன
 5. பெரும் அளவில் இவ்வகை ஈஸ்ட் கலன்களில் (large fermentation vessels) நொதிக்கப்படுகின்றன
 6. நொதிப்பு நிறைவடைந்தவுடன், இதில் கிடைக்கும் ஏராளமான இன்சுலின் வடிகட்டப்பட்டுப் புட்டிகளில் நிரப்பப்படுகின்றன. இன்று, உலகின் எல்லாப் பகுதிகளிலும் நோயாளிகள், இவ்வாறு தயாரிக்கப்படும் இன்சுலினைப் பயன்படுகிறார்கள்

https://www.yourgenome.org/facts/what-is-genetic-engineering

சரி, இவ்வகைப் பயன்கள் இருந்தாலும், இதில் அபாயங்களே இல்லையா? இந்தக் கேள்விக்குப் பலவகைப் பதில்கள் இருக்கத்தான் செய்கின்றன. எந்த ஒரு விஞ்ஞானம் / தொழில்நுட்பத்திலும் நல்முகமும் தீயமுகமும் இருக்கவே செய்கின்றன. ஆனால், ம.மா.உ. சார்ந்த விஷயத்தில், சிலரது வாதம், மனிதன் இயற்கையின் வேலையைக் கையில் எடுத்துக்கொண்டால் விளையும் விபரீதம் (unintended consequences) கட்டுப்படுத்த முடியாதது என்பது. இதைத் தவறு என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், இந்த வாதம் விஞ்ஞான அடிப்படையில் செய்யப்படுவதில்லை என்பதே குறை.

இன்று, இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்க அரசாங்கங்களிடம், தேவையான சான்றுகள் இல்லை. இதனிடையில், வணிகங்கள் இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டன:

 1. எல்லாப் பெரும் அங்காடிகளிலும் காய்கறிகள், இறைச்சி மற்றும் பல உணவுப் பொருள்கள், இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவை கரிம (organic) வகை, மற்றொன்று பெயரில்லாத வகை. கரிம வகைப் பொருட்கள், சாதாரணப் பொருட்களைவிட விலை அதிகம். ம.மா.உ. பிரசாரத்தால், மக்கள் கரிம உணவுப் பொருட்கள் உடலுக்கு நல்லது என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இதைச் சில பெரிய அங்காடிகள் (Amazon’s Whole Foods) லாபமாக்கியுள்ளார்கள்
 2. இறைச்சி மற்றும் கோழி போன்றவற்றின் கரிமத்தனம் சற்று வினோதமானது. மிக முக்கிய பயோ தொழில்நுட்பப் பயன் ஆடுகள், கோழிகளின் உணவு ஆகும். இவற்றுக்குப் பலவித ம.மா.உ. உணவுகள் கொடுக்கப்படுகின்றன. கரிம இறைச்சியில், கோழி மற்றும் ஆடுகளுக்கு ம.மா.உ. இல்லாத உணவு கொடுக்கப்படுகின்றது
 3. மேலே சொன்ன விஷயங்கள் பால், முட்டை மற்றும் பழங்களுக்கும் பொருந்தும்

அரசாங்கங்கள் இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், ம.மா.உ. ஆர்வலர்கள், இன்று அங்காடிகளில் விற்கும் உணவுப் பண்டங்களுக்குச் சரியான பெயரிடல் (labeling) தேவை என்று சொல்லி வருகிறார்கள். இது மிகவும் சர்க்கைக்குள்ளான விஷயம்:

 1. ம.மா.உ. எதிர்பாளர்களின் வாதம், எந்த உணவுப் பொருளை வாங்குகிறோம் என்று நுகர்வோருக்குத் தெரியப்படுத்துதல் தயாரிப்பாளர்களின் கடமை என்பது. இதனால், நுகர்வோர் ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வரமுடியும் என்பது
 2. வட அமெரிக்காவில் உள்ள 90% உணவுப் பொருட்கள் ஏதாவது ஒரு விதத்தில் ம.மா.உ. வகையைச் சேர்ந்தது. 90% உணவுப் பொருட்களில் ஏன் பெயரிடல் வேண்டும்? 10% கரிம உணவுப் பொருட்களுக்கு மட்டும் அப்படிப் பெயரிட்டால் போதாதா?
 3. தயாரிப்பாளர்கள் சார்ந்த இன்னொரு வாதம், ‘இந்த உணவுப் பொருள் ம.மா.உ. கொண்டது’ என்று அறிவிப்பதால் என்ன பயன்? ம.மா.உ.–வில் பல நூறு நுட்பங்கள் உள்ளன. இதனால், நுகர்வோருக்கு என்ன பயன்? இதுவரை தானியங்கள், ‘விஞ்ஞான விவசாய முறைகளில் இவை உருவாக்கப்பட்டன’ என்று யாராவது தானியங்களுக்குப் பெயரிட்டிருக்கிறார்களா?
 4. தயாரிப்பாளர்களின் இன்னொரு அச்சம், ‘இப்பொருள் ம.மா.உ. கொண்டது’ என்று அறிவித்தால், ம.மா.உ. என்னவோ மிகவும் தீமையானது என்று மக்கள் அச்சம்கொள்ள வாய்ப்புள்ளது. இதுவரை ம.மா.உ.–வால், மனித உடல்நலத்திற்குத் தீங்கு வரும் என்று விஞ்ஞானம் திட்டவட்டமாகச் சொல்லவிலை

பெரும்பாலும் ம.மா.உ. என்றவுடன், அமெரிக்க நிறுவனமான மோஸாண்டோ (Mosanto) செய்யும் வியாபாரத் தில்லாலங்கடிகளே ம.மா.உ. எதிர்பாளர்களின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம். இந்தியாவில், இந்த நிறுவனம் பூச்சிகளை எதிர்க்கும் சக்திகொண்ட தானிய விதைகளைக்கொண்டு விவசாயிகளைத் தன்னுடைய அடிமையாக்குகிறது என்பது குற்றச்சாட்டு.

 1. பூச்சிகளை எதிர்க்கும் ம.மா.உ. விதைகள், விவசாயியின் பூச்சி மருந்து செலவைக் குறைக்கிறது. ஆனால், புதிய விதைகளை மோஸாண்டோ நிறுவனத்திடமிருந்தே வாங்கும் நிற்பந்தம் ஏற்படுகிறது
 2. ஒரு முறை ம.மா.உ. விதைகளைக்கொண்டு பயிரிட்டால், பழைய சம்பிரதாய விதைகளைப் பயன்படுத்த முடிவதில்லை
 3. இப்படி விவசாயிகளைக் கவர்ந்து மோஸாண்டோ விதைகளின் விலையைக் கூட்டினால், விவசாயிகளின் நிலை மோசமாகிவிடும்

ம.மா.உ. விதைகளைக் கூட்டுறவு மற்றும் லாப நோக்கில்லாத அமைப்புகளும் உருவாக்குகின்றன. ஆனால், மோஸாண்டோபோல மற்ற அமைப்புகளிடம் வியாபார பலம் இல்லை என்பது உண்மைதான். ம.மா.உ. எதிர்ப்பு, ஓரளவிற்கு ஒரு நிறுவனத்தின் அடாவடி வியாபார முறைகளை எதிர்க்கும் இயக்கமாகிவிட்டது. வளரும் நாடுகளால் இது போன்ற வியாபார சக்திகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறியாகிவிட்டது.

பொதுவெளியில், ம.மா.உ.–வை நாம் மருந்துகள் என்ற பட்சத்தில் ஒப்புக்கொள்கிறோம் – இன்சுலினைக் கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானியான ஃப்ரெடெரிக் பேண்டிங்கை (Frederick Banting) நாம் கொண்டாடுகிறோம். ஆனால், உணவு என்றவுடன் ஏனோ அச்சம் பெருகிவிடுகிறது. இதற்குக் காரணம், செய்திகளில் வந்த சில உயிர் தொழில்நுட்பச் சோதனைகளின் தோல்விகளே காரணம் என்று தோன்றுகிறது. இரு பிராணிகளின் உயிரணுக்களைக் கலந்து இனப்பெருக்கம் செய்த சில சோதனைகள், புதிய உயிரின் வாழ்நாள் இயற்கையான வாழ்நாளைவிடக் குறைவாக இருந்ததே ம.மா.உ.-மீதுள்ள அச்சத்திற்குக் காரணம்.

மருந்து விஷயத்தில் நம்மிடையே கறாரான ஒப்புதல் முறைகள் உள்ளன. எந்த ஒரு மருந்தும் விலங்குகளுக்கு முதலில் கொடுக்கப்பட்டு, அதன் பின்விளைவுகள் சோதிக்கப்படுகின்றன. இதன் பிறகு, சிறிய அளவில் மனிதச் சோதனையும் மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் சந்தைக்கு மருந்து வருகிறது.

இப்படிப்பட்ட ஒப்புதல் முறைகள் விவசாயப் பொருட்களுக்கு இல்லையே என்பது ம.மா.உ. எதிர்பாளர்களின் வாதம். இது ஓரளவிற்கு உண்மை என்றாலும், சில ஒப்புதல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. எந்த ஒரு ம.மா.உ. பொருளும் அதன் இயற்கை வடிவத்துடன் சரிபார்க்கப்படுகிறது – அதாவது, உண்டால் மனித உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறதா என்றும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறதா என்றும் ஆராயப்பட்ட பிறகே விதைகள் மற்றும் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன.

மருந்துகள் போலல்லாமல், இன்று ம.மா.உ. உணவுப்பொருட்களில் சில மிகச் சிறிய புரத மாற்றங்களே செய்து பார்க்கப்பட்டுள்ளன. அதுவும் மிகவும் ஆராயப்பட்ட புரத மாற்றங்களே செய்யப்படுகின்றன. ஆனாலும், சில ஒப்புதல் ம.மா.உ. முறைகள் 13 ஆண்டுகள்வரை நீளுகின்றன.

இளம் விஞ்ஞானமான உயிரியல் தொழில்நுட்பம், இன்னும் 70 ஆண்டுகளைத் தாண்டவில்லை. மருந்துகள், பல நூறு ஆண்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் இத்துறையின் சர்ச்சைகளைக் கொஞசம் குறைக்கும்.

 1. துரிதமான ஒப்புதல் முறைகள் ம.மா.உ. பொருட்களுக்கு உருவாக்கப்பட வேண்டும்
 2. ம.மா.உ. மனித உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்குமா இல்லையா என்ற பிரசாரத்தை விஞ்ஞானம் திட்டவட்டமாக ஒரு தீர்வுக்கு கொண்டுவர வேண்டும்

உணவு மனிதனின் அடிப்படைத் தேவை. இதில் பல்லாயிரம் ஆண்டுகள், கலப்பினப் பெருக்கம் எந்த ஒரு சர்ச்சையுமின்றி நடந்து வந்துள்ளது. ஆனால், இன்று ம.மா.உ. இன்னும் முடிவாகாத ஒரு விஞ்ஞானக் கால்பந்தாக ஆகிவிட்டது வேதனைக்குரிய விஷயம். இன்னும் ஒரு 15 ஆண்டுகளில் இந்த சர்ச்சைகள் ஓயும் என நம்புவோம்.

Series Navigation<< டால்கம் பவுடர் – பகுதி 2செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.