விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

‘யுரேகா’

‘யுரேகா’ – கிரேக்க மொழி தெரியுமோ இல்லையோ நமக்கெல்லாம், இந்தச் சொல் தெரியும். ஆர்க்கிமெடீஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து ஓடி வந்து உலகிற்கு மிதப்புத் தன்மையை, இப்படி அறிவித்தார். இன்னொரு விஞ்ஞானம் சார்ந்த விஷயம், நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்து, புத்தருக்கு ஞானோதயம் பிறந்ததைப் போல, அவரும் உலகிற்கு ஈர்ப்பு சக்தியைப் பற்றிய விளக்கியதாகக் கூறப்படும் கதை. எத்தனையோ முயன்றும் உலகம் இந்தக் கதையை இன்னும் நம்புகிறது. இன்றும் யாருக்காவது ஏதாவது ஞானோதயம் வந்தால், ஆப்பிள் மரத்தடி நியூட்டன் அங்கிருப்பார். இந்த இரு பிரபல கதைகளையும் கூர்ந்து கவனித்தால், ஒன்று தெளிவாகும். விஞ்ஞானம் என்பது ஒரு தனிநபர் சார்ந்த ஞானோதய விஷயம் என்ற பழைய கோட்பாடு. இன்னொன்று, மனிதர்களுக்கு விஞ்ஞானத்தை விட, அதைச் சார்ந்த கட்டுக்கதைகளில் ஏராளமான ஈர்ப்பு.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோவின் வாழ்க்கை அதிகம் அறியப்படாத ஒன்று. ‘விஞ்ஞானி’ என்ற சொல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னே வாழ்ந்த விஞ்ஞானி இவர். பல வித புதிய விஞ்ஞான கருத்துக்களை வெளியிட்டு பலவித சிக்கல்களுக்கு ஆளானவர். இதில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு, தொலைநோக்கி. கலீலியோவின் குறிக்கோள் வானத்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆராய்வது. ஆனால், இதற்கு யாரும் அவருக்குப் பணம் தர மாட்டார்கள். துறைமுகம் அருகே ஒரு உயர் கட்டிடத்தில், தன்னுடைய தொலைநோக்கியை நிறுவினார். வெனிஸ் நகரின் வியாபாரிகளிடம், தன்னிடம் ஒரு விந்தைக் கருவி இருப்பதாக அறிவித்தார். இந்தக் கருவியினால், துறைமுகத்திற்குப் பல மைல்கள் முன் வந்திருக்கும் கப்பல்களில், என்ன சரக்கு வந்து இறங்கவிருக்கிறது என்று ஒரு 6 முதல் 7 மணி நேரம் முன்பே அறிந்து கொண்டு விடலாம். இந்த விஷயம், வியாபாரிகளைப் பெரிதும் கவர்ந்தது. கப்பலில் முந்திரி வருகிறது என்றால், முந்திரியின் விலையை ஏற்றி, 6 மணி நேரத்தில் லாபம் பார்த்தார்கள். பகலில் கப்பல் சரக்கை அறியப் பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கி, இரவில், கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கத்தை கணிக்க பயன்படுத்தப்பட்டது. கலீலியோவிற்கு, வியாபாரிகளால் பல வசதிகள், இதனால் கிடைத்தது. மனித வரலாற்றில், விஞ்ஞானமும், வியாபார லாபமும் கலந்த முதல் தருணம் இது.

’விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சி’ என்ற எனது கட்டுரைகளில், எப்படியெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்தது என்று விவரமாகச் சொல்லி இருந்தேன். தயவு செய்து படித்து விடுங்களேன். ஒரு விஷயம் மட்டும் இங்கு மீண்டும் சொல்வது உதவியாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டில், இரு உலகப் போர்களால், அரசாங்கங்கள் போரில் வெற்றி பெற விஞ்ஞானத்தை நம்பத் தொடங்கின. போர்க் காலப் பணிகளுக்கு உதவிய விஞ்ஞானம், உதவி என்ற நிலையிலிருந்து, போரில் வெற்றி பெற மிகப் பெரிய துணை என்ற நிலைக்கு மாறியது. இதனால், மேற்குலக அரசாங்கங்கள், போருக்கு முன்னரும், பிறகும் விஞ்ஞானத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தன. இந்த நூற்றாண்டின் மத்தியில் சுதந்திரமடைந்த தேசங்கள், குறிப்பாக, ஜப்பான், இஸ்ரேல், இந்தியா போன்ற நாடுகளும் இதைப் பின்பற்றத் தொடங்கின.

போரைத் தாண்டி, பல்கலைக்கழகங்களும் அரசாங்க உதவியுடன், விஞ்ஞான ஆராய்ச்சித் துறையை மேம்படுத்தத் தொடங்கின. இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சி, மனித வரலாற்றில் அதுவரை இருந்த முன்னேற்றத்தை விட அதிகம். 1970 –கள் முதல், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாக, கணினி தொழில்நுட்பமும் வெகு வேகமாக வளரத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் இருபது ஆண்டுகள், இந்த வேகத்தைச் சற்றும் குறைக்காமல், மேலும் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.

ஒரு கையளவு விஞ்ஞானிகள் என்ற நிலை மாறி, இன்று, உலகில் பல்லாயிரக் கணக்கான விஞ்ஞானிகள் பல விஞ்ஞானத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பலகலைக்கழகங்கள், அரசாங்க சோதனைச் சாலைகள், தனியார் நிறுவனங்கள் என்று, எங்கும் விஞ்ஞானிகள் சமூக முன்னேற்றத்திற்காகப் பங்களித்து வருகிறார்கள். அத்துடன், தனிப்பட்ட பங்களிப்பு இன்று ஒரு கூட்டுப் பங்களிப்பாக மாறிவிட்டது. கூட்டுப் பங்களிப்பின் மிக முக்கிய விஷயம், வெளியாகும் விஞ்ஞானக் கோட்பாடுகள், சோதனை முடிவுகள், அத்துறையின் வல்லுனர்களால், தகுந்த ஆதாரங்களுடன் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். விஞ்ஞானத்தை, ஆங்கிலத்தில் negotiated truth என்று சொல்வதுண்டு. இயற்கையின் இயக்கங்கள் முழுவதும் புரிந்தவர் யாருமில்லை. இன்றைய கோட்பாடு, நாளைக்கு மாறலாம். ஆனால், தகுந்த ஆதாரங்களுடன் விஞ்ஞான விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும்.

ஆக, வேகமாக விஞ்ஞானம் வளர, அரசாங்க, பல்கலைக்கழக, தனியார் முதலீடுகள் மட்டும் காரணமல்ல. நிறைய கூட்டு முயற்சிகளும் இதற்குக் காரணம். இன்று நோபல் பரிசு முதல் பல்வேறு விஞ்ஞான சாதனைகளுக்குத் தனி ஒருவர் கவுரவிப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஏன், அமெரிக்க பெளதிகத்தில் சாதனை படைத்த ரிச்சர்டு ஃபைன்மேன், பெளதிக நோபல் பரிசை அவர் மட்டும் வாங்கவில்லை. இன்னொரு முக்கிய அம்சமும் விஞ்ஞானத்தில் கடந்த 120 ஆண்டுகளாக நடக்கத் தொடங்கியுள்ளது.  தனியார் நிறுவனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சியை தங்களுடைய தயாரிப்பை மேம்படுத்த ஒரு வழியாக பார்க்கத் தொடங்கினர். மெதுவாக, இது மாறி, வியாபார லாபத்திற்கு, விஞ்ஞானம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்க ஆரம்பித்தன.  இந்த மாற்றம், விஞ்ஞானம், இயற்கையைப் புரிந்து கொள்ளும் நிலையிலிருந்து, வியாபார லாபத்திற்குக் கீழே இயங்கும் ஒரு அங்கமாக தனியார் நிறுவனங்களில் மாறத் தொடங்கியது.

மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள்., அரசாங்க சட்டங்களை தங்களுடைய லாபத்திற்காக மாற்றக் குறுக்கு வழிகளில் ஈடுபடுவது மனித வரலாற்றில் என்றும் நிகழ்ந்த ஒரு விஷயம். ஆனால், விஞ்ஞானம் வளர வளர, மறைமுகமாக, தனியார் நிறுவனங்கள், விஞ்ஞானம் சார்ந்த சட்டங்களை தங்களுடைய லாபம் குறையாமல் இருக்கத் திரிக்கவும் முற்பட்டது கடந்த 120 வருட வரலாறு. இதனால், பல விஞ்ஞான ஆராய்ச்சிகளில், தனியார் லாபமா, அல்லது பொது நலமா என்ற மிகப் பெரிய அறப்போர் நம்முடைய சமுதாயத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.

வியாபார லாபத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாத அரசாங்கக் கட்டுப்பாட்டாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புறம். மற்றொரு அணியில் தனியார் லாபத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள். இந்தக் கட்டுரைத் தொடர், இந்த அறப்போரைப் பற்றியது. இந்த அறப்போரில் பெரும்பாலும், தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்களுக்கு வரி கட்டி, பலருக்கும் வேலை வாய்ப்பு தரும் அமைப்புகள். அவ்வளவு எளிதாக இவர்களை அரசாங்கம் இதனால், புறக்கணிக்க முடியாது. மற்றொரு புறம், தன்னைப் பணியில் அமர்த்திய பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால், இவ்வகை முடிவுகள், விசாரணை கமிஷன், நீதிமன்றம் என்று இழுத்தடிக்கும் விஷயம். பெரும்பாலும், லாபத்திற்காக இயங்கும் நிறுவனங்கள், எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்படும் வரை அவர்களுடைய தயாரிப்புகள், தொடர்ந்து செயல்படும்படி பார்த்துக் கொள்கின்றன. அரசாங்கம், மற்றும் லாப நோக்கற்ற விஞ்ஞானிகளின் பொறுப்பு, இவர்கள் செய்வது பொதுநலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிப்பது. கவிஞர் கண்ணதாசனின் இந்த வரிகள், இந்தக் கட்டுரைத் தொடரில், பல இடங்களிலும் இந்த அறப்போரை வாசகர்களுக்கு நினைவுபடுத்தப் பயன்படுத்தியுள்ளேன். ஒரே வரியில் கதையைச் சொல்ல வல்ல கவிஞர் நமக்கும் இங்கு உதவியுள்ளார்.

வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை

-கவிஞர் கண்ணதாசன். (ஒருத்தி ஒருவனை என்ற பாடலின் சரண வரிகள்)

இந்தக் கட்டுரைத் தொடருக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டவுடன் எனக்குத் தெரிய வந்த பெரிய உண்மை, இது தான்: இருபதாம் நூற்றாண்டில், அனைத்து விஞ்ஞானமும் தன்நலமின்றி இயற்கையைப் புரிந்து கொள்ள முயன்றது; அரசாங்கங்களுக்குப் போர்க் காலத்தில் மிகவும் உதவி செய்து உலகில் அமைதி நிலவ வழி வகுத்தது என்பதெல்லாம் பொய்! லாபத்திற்காக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் முறைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டன. இதன் தாக்கமும், லாப நோக்கிற்காக ஏராளமான திரித்தலும் இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் பெருவாரியாகத் தெரிய வந்தது. அவ்வளவுதான்.

இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்தது. இந்த விஷயத்தில் எந்த ஒரு நாடும் உத்தமம் இல்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விஷயத்தில் விஞ்ஞானத்தைப் பின்பற்றாமல் அடம் பிடிக்கின்றன. இந்தக் கட்டுரைத் தொடரில், அவை எந்தெந்த நாடுகள் என்று உங்களுக்குத் தெரிய வரும். விஞ்ஞான முடிவுகள், நடைமுறைப் படுத்துவது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். நடைமுறைப் படுத்தலில் உள்ள சிக்கல்களால், உலகில், சில திட்டவட்டமான விஞ்ஞான விஷயங்களைத் தவிர, மற்றதில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில முடிவுகள் இன்னும் நடைமுறைப் படுத்தாமலும் இருக்கின்றன.

இந்தத் தொடரில், பொது மக்கள் நலன் சார்ந்த பல துறைகளைத் தொட்டாலும், இவை எல்லா துறைகளையும் தொடாது என்றே நினைக்கிறேன். இந்த ஆராய்ச்சிக்கு ஒரு வாழ்நாள் போதாது. தமிழ் வாசகர்களுக்கு இது ஒரு அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன். சில துறைகளில், விஞ்ஞானம், வியாபாரத்தின் பின்னே இன்னும் முன்னேறாமல் தவிப்பதும் உண்டு. உதாரணம் – மின் சிகரெட்டுகள். சில விஷயங்களில், விஞ்ஞான ஆராய்ச்சி துல்லியமாக முடிவுகளை வெளியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளது – உதாரணம், ஓஸோன்  அடுக்கில் ஓட்டை.

இந்தத் தொடரில், சில மேற்குலக நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. ஆனால், மற்ற வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. லாபத்திற்காக இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் எங்காவது பொதுநலனை விட வியாபார லாபத்தை முன் வைக்கின்றன. இந்தத் தொடரால், விழிப்புணர்வு வந்தால், இந்தக் கட்டுரைத் தொடரில் விளக்கப்படும் விஷயங்களைக் கொண்டு வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களையும் மேற்குலக நிறுவனங்களைப் போலச் செயல்பட அரசாங்கங்களைக் கேள்வி எழுப்பி, மக்களுக்கு நலம் செய்ய வைக்கலாம்.

விஞ்ஞானிகள் இப்படி முடிவெடுத்தார்கள் என்று மேல்வாரியாகச் சொல்வது இவ்வகை கட்டுரைகளுக்கு உதவாது. அத்துடன், உணர்ச்சிவசப்பட்டு ‘கார்பரேட் சதி’ என்று முழங்கவும் போவதில்லை. முழுவதும் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதற்காக, விவரமாகச் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை, மேற்கோள்களுடன் இந்தக் கட்டுரைகளில் இடம் பெறும். மேலும், வியாபாரங்கள் செய்யும் தில்லாலங்கடிகளும் விவரமாக விளக்கப்படும். சில சவால்களைச் சந்திப்பதற்கு, விஞ்ஞானிகள் என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது என்பதும் மிகவும் சுவாரசியமான விஷயம்.இது போன்ற விஷயங்களில், விஞ்ஞான ஆராய்ச்சி, பல்லாண்டுகள் பிடிக்கும். உதாரணத்திற்கு, சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று இன்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இதை, எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்க ஏறக்குறைய 80 ஆண்டுகள் பிடித்தன. ஒவ்வொரு ஆராய்ச்சியும் பன்முக ஆராய்ச்சி. ஒரே கோணத்தில் இவ்வகை பிரச்னைகளுக்குத் தீர்வு என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்தக் கட்டுரைத் தொடரை மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளேன்.

  1. சக்தி சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – இந்தப் பகுதிகளில், எல்லா வகை எரிபொருள்களிலும் நிறுவனங்கள் நடத்தும் தில்லாலங்கடிகள், மற்றும் அறப் போராட்டங்கள் விவரமாக அலசப்படும்
  2. உடல் நலன் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – இந்தப் பகுதிகளில், மனித உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளில் நடக்கும் அறப் போர்கள் விவரமாக அலசப்படும்
  3. புவி சூடேற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – இந்தப் பகுதிகளில், புவி சூடேற்றம் சார்ந்த விஞ்ஞான முடிவுகள் மற்றும் திரித்தல்கள் அலசப்படும்

புவி சூடேற்றம் என்பது மனித சமூகத்தின் மிகப் பெரிய சவால். பூனைக்கு மணி கட்டும் வேலையை எந்த நாடும் இன்று பொறுப்பேற்றுச் செய்யவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினையை இறுதிப் பகுதியில் விவாதிக்கக் காரணம் உள்ளது. முதல் இரண்டு பாகங்களில் உள்ள பிரச்சினைகள் பெரும்பாலும், ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவை – சில விஷயங்களைத் தவிர. ஆனால், விஞ்ஞான திரித்தல், முன்பை விட மிகவும் சாதுரியமாக பல அமைப்புகளாலும் கையாளப்படுகிறது. இதனால், இந்த இழுபறி விஷயத்தைப் புரிந்து கொள்ள முதல் இரண்டு பாகங்களின் பின்னணி தேவை. ஒரு 100 வருடங்களாகப் பழக்கப்பட்ட பலவித நுட்பங்களும் இந்த விஷயத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுவதால், முப்பது ஆண்டுகளாகத் தெரிந்தப் பிரச்சினைக்கு, முடிவில்லாமல், நாமெல்லாம் தவிக்கிறோம். உலகின் பல்வேறு ஏழை நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இவை இன்னும் சில வருடங்களுக்குப் பின் இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. எப்படியெல்லாம் அரசாங்கங்களை முடிவெடுக்க முடியாமல் சில அமைப்புகள் செய்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

Series Navigationசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம் >>

One Reply to “விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்”

  1. வரவேற்கத் தகுந்த கட்டுரைத் தொடர். நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று தலைப்புகளும் இன்றியமையாதவை.வளர்ச்சியின் அங்கமாக வீழ்ச்சியும், கண்டுபிடிப்புகளின் பின்னணியாக விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படுகின்றன என்ற பொதுப் புரிதல் பலரிடம் உள்ளது.தொழிலகங்களின் தேவைக்கேற்ப நடை பெறும் ஆராய்ச்சிகள் அவர்களின் இலாபத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.