“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”

மொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்

நகுல்வசன்

சற்றும் யோசிக்காது எங்களுடன் பேச நேரம் அளித்ததற்காக முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்னஞ்சலில் தெரிவித்திருந்தது போல் தமிழ் இணைய இதழ் சொல்வனம் சார்பாக இந்நேர்காணலை நடத்துகிறேன். கடந்த பல ஆண்டுகளாக அவ்விதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது; அதன் 240-வது இதழை வங்கச் சிறப்பிதழாக வெளிவர இருக்கிறது. அவ்விதழின் சிறப்பை மேலும் சிறப்பிக்கும்படியாக உங்களைப் போன்ற பிரசித்தி பெற்ற வங்க மொழிப்பாளரொருவரைப் பேட்டி காண விரும்பினோம்.

அருணாவா சின்ஹா

உங்கள் கனிவிற்கு நன்றி.

நகுல்

உங்களுக்குச் சில கேள்விகளை ஏற்கெனவே அனுப்பியிருந்தேன். ஆட்சேபணை இல்லை என்றால் அதிலிருந்தே தொடங்குவோமா?

அருணாவா

அதிலிருந்தே தொடங்கலாம், உங்கள் விருப்பம்.

நகுல்

நன்றி. உங்களைப் பற்றிச் சற்று கூறுங்களேன்,  குறிப்பாக நீங்கள் மொழிபெயர்ப்பாளராக உருவான பயணத்தைப் பற்றி.

அருணாவா

குறிப்பிட்ட எல்லைக்கோட்டைத் தாண்டியபின்னரே மொழிபெயர்ப்பாளராக என்னை உணர்ந்து கொண்டேன் என்றெல்லாம் கிடையாது,  ஏதோ ஒரு விதத்தில் எப்போதுமே மொழிபெயர்ப்பாளராக இருந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். என்ன நடந்ததென்றால்… கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் அல்லது அதற்கும் சற்று முன்னதாகவும் இருக்கலாம்… காப்ரியல் கார்சியா மார்கெஸ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை அப்போதுதான் பெற்றிருந்தார்; அவரது புத்தகங்கள் நான் பிறந்து வளர்ந்த கொல்கத்தாவில், பிகடோரின் புதிய பதிப்பில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கத் தொடங்கின. அவர் புத்தகங்களை வாசிக்கையில், குறிப்பாக அவரது நூற்றாண்டு புத்தகத்தைப் படிக்கையில், மொழிபெயர்ப்பாளர்களை முதல்முறையாக இனங்கண்டுகொண்டேன். அதுவரையில் வாசித்திருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளே என்ற உண்மையையும்; ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய,  நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன். புதிதாக ஒன்றைச் செய்யும் போது,  இயல்பாக… ஒரு புதுவிதமான இசையை முதிலில் கேட்கத் தொடங்குகையில், அதை இயல்பாகவே முணுமுணுப்பதைப் போல, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் முழுவதிலுமே, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு பத்திகளை அவ்வப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பைப் பற்றி சில கட்டுரைகளைக்கூட எழுதினேன். இப்படியே படிப்படியாக அதன் மீது எனக்கிருந்த ஆர்வம் பெருகியது. . 

கல்லூரியை முடித்து வெளியேறியபின்,  கேல்கட்டா ஸ்கைலைன் என்ற “நகரிதழை” கொல்கத்தாவில் ஆரம்பித்தோம். முதலில் வந்த இதழ்களில் நானே மொழியாக்கங்களைச் செய்திருந்தேன். ஆக, இப்படித்தான் என் மொழிபெயர்ப்புப் பயணம் தொடங்கியது.

நகுல்

ஷௌரங்கீ (Chowringhee) தான் உங்கள் முதல் புத்தகம் இல்லயா? 

அருணாவா

ஆமாம். முதல் புத்தகம் ஷௌரங்கீ தான். என்ன நடந்ததென்றால்… அதற்குப்பின் ஒரு சுவாரசியமான கதையொன்றும் இருக்கிறது; நான் மொழிபெயர்த்த முதல் கதையும் அதே ஆசிரியருடையதுதான், ஷொங்கர் (Sankar). இதழ் வெளிவரத் தொடங்கிய சில வருடங்களுக்குப் பின், உண்மையில் அப்போது அவ்விதழை விட்டுவிலகி வேறொரு வேலையிலிருந்தேன்,  சில வருடங்களுக்குப் பின் ஷொங்கர் என்னைத் தொடர்புகொண்டார். “ ஷௌரங்கீயை எனக்கு மொழிபெயர்த்துத் தர முடியுமா, ஃபிரெஞ்சு பதிப்பகமொன்று அதைப் பதிப்பிக்க விரும்புகிறது” என்றார். இந்தியப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் பரவலாகப் பதிக்கப்படாத காலமது. பெங்குவின், ராண்டம்…பெங்குவின் அப்போதுதான் தொடங்கியிருந்தது என்று நினைக்கிறேன்… ஓரியண்ட் லாங்மன், ரூபா போன்ற பழைய பதிப்பங்கள் செயலாற்றிக் கொண்டிருந்தாலும் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. விஷயத்திற்கு வருகிறேன்,  எனக்காக மொழிபெயர்ப்பாயா என்று அவர் கேட்டார், கண்டிப்பாக, அதை நான் மிகவுமே விரும்புவேன் என்று பதிலளித்தேன். அதன்பின் மாலை நேரங்களில் அலுவலகத்தில் தங்கி மொழிபெயர்ப்பை அலுவலகக் கணினியில் தட்டச்சு செய்யத் தொடங்கினேன். மூன்று மாதங்களில் அதைச் செய்து முடித்தேன். இது நடந்தது 1992-இல், மூன்று மாதத்தில் இதை முடித்து விட்டு, தில்லிக்குப் புதுப் பணியில் சேர்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன். முடித்த கையோடு,  அந்தக் காலத்தில் எல்லாம், புள்ளி அச்சுப்பொறிகள்தான், அதில் அக்கார்டியன் இசைக் கருவி வடிவத்தில் அச்சடிக்கப்பட்ட துளையிட்ட அச்சுப்படிகளை அவரிடம் கொடுத்துவிட்டு தில்லிக்கு வந்துவிட்டேன். அதன்பின் அதை அடியோடு மறந்துவிட்டேன். 

அவ்வப்போது, விட்டுவிட்டு, இந்த கால்வயது நெருக்கடி, நடுவயது நெருக்கடி என்பார்களே, அவற்றால் அவதிப்படுவேன். அப்போது, மொழிபெயர்ப்பைத் துறந்துவிட்டோமே என்று ஆதங்கம் வரும்போதெல்லாம் ஏதோவொரு புத்தகத்திலிருந்து இரண்டு பத்திகளை மொழிபெயர்ப்பேன், அவ்வளவுதான். இப்படியே பதினான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்ட நிலையில் 2006-இல் பெங்குயின் பதிப்பகத்தின் பதிப்பாசிரியரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வணிகரீதியாக ஆங்கிலத்தில் பதிப்பிப்பது இப்போது பெரிய அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. எனவே, பதிப்பாசிரியர் என்னை அழைத்து “இதோ பார், ஷௌரங்கீ மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்க விரும்புகிறோம். ஆசிரியர் ஏற்கெனவே ஒரு மொழிபெயர்ப்பு இருப்பதாகத் தெரிவித்து அதை எங்களுக்கு அனுப்பியும் வைத்தார். அதில் உன் பெயர் இருக்கிறது.” என்று கூறினார். கொல்கத்தா ஒரு குக்கிராமம் என்பதால், ஒரு வழியில், குறைந்தபட்சத்தில் ஒரு சில சமூகப் பிரிவுகளிலாவது,  அனைவருமே ஒருவரையொருவர் அறிந்திருந்தோம் என்ற அர்த்தத்தில்,  என்னை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார். எனவே, என்னை அவர் அழைத்தபோது, அட ஆமாம் அது நானேதான், ஆச்சரியமாக இருக்கிறதே,  இது எப்படிச் சாத்தியமானது?  என்று வியந்தேன். அதெல்லாம் கிடக்கட்டும்,  பதிப்பிக்க விரும்புகிறோம், மாற்றங்கள் ஏதேனும் செய்ய விரும்புகிறாயா என்று அவர் இடைமறித்தார். கையெழுத்துப்படியை எனக்கு அனுப்பிவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அனுப்பிவைத்தார். அந்தப் பிரதியின் கோப்பை நான் அந்தக் காலத்தில்…. உங்கள் தோற்றத்தை வைத்து உங்களுக்கும் இவை பரிச்சயமாகியிருக்கும் என்ற அனுமானத்தில்தான் இதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன்…

நகுல்

மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ளமுடிகிறது,  தாராளமாகத் தொடரலாம்.

அருணாவா

அப்படி என்றால் சரி… அப்பிரதியை ஐந்தரை அங்குல நெகிழ்வெட்டொன்றில் சேமித்திருந்தது நினைவிற்கு வந்தது. அந்த ஐந்தரை அங்குல நெகிழ்வெட்டும், கொல்கத்தாவை விட்டு இடம்பெயர்ந்தது, வீடு மாறியது,  இரண்டு முறை நகரம் விட்டு நகரம் சென்றது, பெங்களூருக்குச் சென்று தில்லி திரும்பியது போன்ற குளறுபடிகளையும் மீறி தொலையாமல் இருந்தது. அதிலிருந்து கோப்பை எப்படியும் மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அதை தில்லியின் நேரு பிளேசிற்கு எடுத்துச் சென்றேன். பழைய தரவுகளைப் பழைய  ஊடகங்களிலிருந்து மீட்டெடுக்கும் ஒன்றிரண்டு இடங்கள் அங்கிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேலைக்காகவில்லை. அவர்களால் அதை மீட்டெடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் வார்த்தைகளாலான பிரதி, கூடுதலாகவும் இருக்கலாம், அதை மீண்டும் மாங்கு மாங்கென்று தட்டச்சு செய்ய விருப்பமில்லை என்பதால் அதை ஒரு தட்டச்சரிடம் கொடுத்தேன். அவரும் அதை (கட்டணத்திற்காகத் தான்) தட்டச்சு செய்து கொடுத்தார். வர்ட் ஆவணம் ஒன்று கையில் கிடைத்தது, அதை வைத்து என் வருங்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கான சாத்தியமும்… பேருக்கும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில திருத்தங்களைச் செய்துவிட்டு அதை அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். இப்படியாகத்தான் அப்பயணம் தொடங்கியது. ஆனால் அப்போது அது ஒரு பயணம் என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. ஒரேயொரு புத்தகம், அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை என்றே எண்ணியிருந்தேன். அது எப்படி ஒரு பயணமாக நீடித்தது என்பதையும் இப்போதே சொல்லிவிடவா… அல்லது அது அடுத்துவரும் கேள்விகளுக்கு உரியதா?

நகுல்

இல்லை, இல்லை, மேலே தொடருங்கள். அப்பயணம் என் ஆவலைத் தூண்டிவிட்டது. ஆனால்,  நீங்கள் அதைத் தொடர்வதற்கு முன், தமிழில் அவர் பெயர் அதிகம் அறியப்படாததால், ஷங்கரைப் பற்றி முதலில் கேட்டு விடுகிறேன். தமிழ் இலக்கிய வட்டங்களில் அதிகம் பேசப்படாதவர் அவர். இங்கு எல்லாருமே தாராசங்கர், பிபுதிபூஷன்… போன்றவர்களைத்தான் அதிகம் பேசுவார்கள்… எனவே, ஷங்கர் கல்கத்தாவில் பிரசித்தி பெற்றவரா இல்லையா என்பதை முதலில் கூறிவிடுங்கள்.

அருணாவா

அவர் பிரசித்தி பெற்றவர்தான், மிக அதிகமாகவே பிரசித்தி பெற்ற வங்க எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் தாரசங்கர், பிபுதிபூஷன் காலத்தவரல்ல. கண்டிப்பாக சரத்சந்திரர் காலத்தவர் அல்ல என்பது திண்ணம். இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார். ஆனால் புனைவெழுதுவதை அவர் துறந்துவிட்டார். 

நகுல்

ஆட்சேபணை இல்லை என்றால் நானும் ஒரு கதையைக் கூறிவிடுகிறேன்… இளைஞனாக இருந்தபோது அவரது பாத்திரம் ஒன்றுடன்,  ரேயின் இயக்கத்தில் வெளிவந்த சீமாபொத்தொவின் திரைப்பட வடிவத்தின் ஷர்மிலா தகூர் பாத்திரத்துடன் நான் பெருங்காதல் கொண்டிருந்தேன். கவிதை எழுதி அதை அலுவலகக் கூடுகைகளில் ஒப்பிக்கும் அளவிற்கும். ஆமாம், டுடுலின் வசியம் நெடுங்காலம் வரையிலும் நீடித்தது. 

அருணாவா

டுடுல், ஆம் நினைவிருக்கிறது… ஷொங்கரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்… அவர் புனைவுகள் அனைத்துமே மற்றவர்கள் அவரிடத்தே கூறிய கதைகள், அவர் நிஜவாழ்வில் எதிர்கொண்ட கதைகளிலிருந்தே உருவானவை. பணி ஓய்விற்குப் பின், புனைவாக அவர் உருமாற்றக்கூடிய அம்மாதிரியான அனுபவங்கள் அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது; அப்போதிலிருந்தே அவர் அபுனைவைத் தான் எழுதிக் கொண்டிருக்கிறார். சரிதைகள் இத்யாதி…ஆனால் அவர் ஒரு அருமையான கதைசொல்லி. எழுத்தாளர் என்று அழைப்பதை விட அவரைக் கதைசொல்லி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

நகுல்

ஆம், இதை ஷௌரங்கீயில் கூட நம்மால் பார்க்க முடிகிறது. ஷௌரங்கீயை நினைக்கையில் எனக்கு உடனுக்குடன் நினைவிற்கு வருவது… இந்த செக் எழுத்தாளர் பஹுமில் ஹ்ரபாலை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அருணாவா

ஆம், நன்றாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். 

நகுல்

ஐ செர்வ்ட் த கிங் ஆஃப் இங்லண்ட் நாவலிலும், கதையின் நாயகன் பணக்காரர்களுக்கான  ஹோட்டல் ஒன்றில் வெய்டராகப் பணிபுரிந்து கொண்டிருப்பான் இல்லையா?

அருணாவா

ஆமாம். ஆனால் பிற எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர் மஹ்ஃபூஸ்சையே அதிகம் ஒத்திருக்கிறார் என்பதை அமிதாவ் கோஷ் என்னிடம் ஒரு முறை சுட்டிக்காட்டினார்.

நகுல்

எகிப்டிய ஆசிரியர் மஹ்ஃபூஸா?

அருணாவா

ஆமாம். எகிப்டிய எழுத்தாளர்தான்… அதே போன்ற வெளிப்படையான இலக்கியத்தனங்கள் இல்லாத பெருங்கதையாடல் முறைமை, ஆனால் அதே சமயத்தில் மானுட வாழ்வின் ஆழங்கள் வரையிலும் செல்லக்கூடியது… ஒரு விதமான அசாத்திய நுட்பம் என்றும் கூறலாம். சரி என் பயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன், என்ன நடந்ததென்றால் அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா 2007-இல் நடைபெற்றது. அதே பதிப்பாசிரியரிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது, உரையாடல் இப்படிச் சென்றது: வெளியீட்டு விழாவிற்கு வருகிறாயல்லவா, விழாவா, என்ன விழா, இன்னிக்கு கொல்கட்டால ஒரு லான்ச் விழா இருக்கு; இதோ பாருங்க, நான் இப்போது கோவால குதூகலமாக இருக்கிறேன் என்ற ஒரே காரணத்தினால்தான், நீங்கள் என்னிடம் சொல்லாமலேயே விழா ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்பதைக் கேட்டும் கோபப்படாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். இதையே தில்லியின் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் போது இப்படி அழைத்துக் கேட்டிருந்தீர்களானால் நான் மிகவும் எரிச்சல் அடைந்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னிடம் கூறவில்லை என்பதே உண்மை. அந்தக் காலத்தில் வெளியீட்டு விழா என்பதெல்லாம் பெரிய விஷயம், டிவியில் எல்லாம் போட்டுக் காட்டுவார்கள். எனவே பதிப்பாசிரியர் ஷொங்கரின் மற்றொரு நாவலான ஜன் ஆரன்யாவும் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்ததை ஒரு விதமான ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில்தான், டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதையும் ரே படமாக்கி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.   

மொழிபெயர்க்க அடுத்த புத்தகம் கிடைத்து விட்டதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன். அதை மொழிபெயர்க்கவும் செய்தேன். அதன்பின் க்ராஸ்வர்ட் பரிசு விழாவில், அதை ஷௌரங்கீயே அவ்வருடம் வென்றிருந்தது, விழாவில் ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் சிக்கி சர்காரை சந்தித்தேன். அப்போதுதான் அப்பதிப்பகத்தின் இந்தியக் கிளை ஒன்றை அவர் ஆரம்பித்திருந்தார். ஜூலை 2007 என்று நினைக்கிறேன், இல்லை 2008… “வாலெண்டைன்ஸ் தினத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு புத்தகத்தை உன்னால் மொழிபெயர்த்துத் தர முடியுமா?” என்று கேட்டார். “வாலண்டைன்ஸ் தினத்திற்கு ஒத்து வருமா என்றெல்லாம் தெரியாது, ஆனால் தற்போது ஒரு கசந்தினிக்கும் வகையில் அமைந்திருக்கும் காதல் கதை ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன், நான்கு கதைகள் கொண்ட புத்தகத்தில், இரவுப் பயணமொன்றின் சட்டகத்தில் தாமதமாக வரும் ரயிலிற்காகக் காத்திருக்கும் நான்கு நடுவயது ஆண்கள்  தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். கதைகள் அவர்கள் இளமைக்காலத்தைச் சேர்ந்தவை, அவர்களது காதல் கதைகள் ஆனால் அவை அனைத்துமே மிக அழகான கதைகள். புத்தாதேவ் போஸ் எழுதியது. நாவல்தான் என்றாலும் டிகாமெரானின் பழைய பாணியில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. பதம்பார்ப்பதற்காக சில பகுதிகளை அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். நானும் ஒரு கதையை மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன். “நீ மிகச் சரியாகவே கூறினாய்,  உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. ஆனால் வேலண்டைன் தினத்திற்குப் பொருத்தமாக இருக்காது.” 

ஒருவாரம் கழித்து மீண்டும் அழைத்து பெரினிஸ் பாபஸ் ஹெர் ஹேர்– கதையைப் படித்ததாகக் கூறினார். அது ஒரு எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் கதை. “பெரினிஸ் பாபஸ் ஹெர் ஹேர் படித்தேன், உன் புத்தகத்தை இப்போது செய்ய விரும்புகிறேன்” என்றார். இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பதை இதுநாள் வரையிலும் என்னால் கண்டுபிடிக்க முடிந்ததே இல்லை. ஒருகால் அவர்கள் எழுத்தாக இருக்கலாம் அல்லது அவர்கள் இருவருமே ஒரு விதத்தில் ஒத்தவர்கள் என்பதாலும் இருக்கலாம், புத்தாதேவ் போஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் இருவருமே நடையில் அக்கறை கட்டினார்கள் என்ற அர்த்தத்தில்… ஆக இச்சமயத்தில் என் பெயரிலும் மூன்று புத்தகங்கள் வந்து விட்டன அல்லது  வருவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. உங்களுக்கே தெரியும் மூன்று என்பதே ஒரு போக்கின் தொடக்கம் என்று!.

இப்போது அசால்டாகச் சொன்னாலும் அப்போது, வாழ்க்கையே ஏதோ ஒரு விதத்தில் எனக்குச் சமிக்ஞை அனுப்ப முயற்சிக்கிறது என்பதுபோல்தான் நான் இதை உணர்ந்து கொண்டேன். ஏனெனில் அப்போது, சிகப்பு ஃபெராரி ஒன்றைக் கொள்முதல் செய்தோ அல்லது அதை ஒத்த கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபட்டோ நெருக்கடியை மறக்க முயலும் வயதில்தான் நான் இருந்தேன். ஆனால் வாழ்க்கையில் புது அர்த்தத்தைக் கண்டெடுப்பதற்கான வழியாக இது அமைந்தது., குறிப்பிட்ட வயதில் அனைத்தையுமே கேள்விக்கு உட்படுத்தி,  வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கணக்கெடுக்கத் தொடங்குகிறோம் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

நகுல்:

இப்பயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது மிகச் சுவாரஸ்யமாகவே இருக்கிறது என்றாலும் நேரம் காரணமாக அடுத்த கேள்விக்குப் போகிறேன். உங்கள் புத்தகம் ஒன்றிற்கு த கிரேட்டஸ்ட் பெங்காலி ஸ்டோரீஸ் எவர் டோல்ட் அதாவது இதுவரையில் கூறப்பட்டிருக்கும் வங்கக் கதைகளில் தலைசிறந்தவை என்ற அர்த்தத்தில், பெயரிட்டிருக்கிறீர்கள். அதன் அறிமுகத்தில் இது ஒரு தனிப்பட்ட விருப்பத்தேர்வு என்பதையும் தெளிவுபடுத்துகிறீர்கள். ஆகவே,  இவற்றை வங்கத்தின் மூலக்கதைகள்,  ஆங்கிலத்தில் கேனன் என்று சொல்வார்களே அந்த அர்த்தத்தில் இவற்றை எடுத்துக் கொள்ளாமல் அருணவாவின் மூலக்கதைகளாகவே இதை நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். ஆனால் பெங்காலிகளே பெரும்பான்மையில் ஏற்றுக் கொள்ளும் ஒரு வங்க மூலப்பட்டியல் ஏதேனும் இருக்கிறதா?

அருணாவா

அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சில கதைகள் மட்டும் எப்போதும் பறைசாற்றப்படும். ஆனால் இன்றைய தலைமுறை அதற்கு முன் வந்த தலைமுறைகளைப் போல் ஒரு சிறந்த வாசிக்கும் தலைமுறை அல்ல என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அவ்வப்போது, ஏதோ புனித பீடத்தில் எக்காலத்திற்கும் என்பதுபோல் ஒருசிலர் சில குறிப்பிட்ட பெயர்களை உதிர்க்கக்கூடும். அப்பெயர்களைச் சரியாக உச்சரிக்காவிட்டாலோ, அப்பெயர்களுக்கு உரிய வாழ்வுகளில் ஏதோ ஒரு தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாலோ அவர்கள் சடுதியில் விசனம் கொள்வார்கள். கிட்டத்தட்ட இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நடந்து கொண்டிருக்கிறதே அதைப்போல (சிரிப்பு…). தவறிழைத்தாலும் நாமே அவற்றைக் கட்டிக்காக்க முயன்று கொண்டிருப்போம். அவர்களைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் அவர்கள், ஆனால் அவர்களே ஆத்திரம் கொள்வார்கள்.   

பெங்காலிகள் புண்ணியத்தில்தான் தாகூர் கூண்டில் அடைபட்டுக் கிடந்தார். அவரை சற்று முன்னதாகவே விடுதலை செய்திருந்தால் அவர் எழுத்துக்கள் இன்னும் அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று ராம் குஹா ஒரு முறை எழுதினார். இது உண்மையே,  ஏனெனில் அவர் துவங்கிய விஷ்வபாரதி பல்கலை, அதன் அதிகாரிகள், வேறெவருமே அவரை பதிப்பிக்கவோ மொழிபெயர்க்கவோ கூடாது என்பதில் பலர் நொந்துகொள்ளும் அளவிற்கு மூர்க்கமாக இருந்தது. இறுதியில் காப்புரிமை தடைகள் விலக்கப்பட்டது அதிர்ஷ்டமே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களின் தலையீட்டினால்தான்  காப்புரிமைக் காலம் ஐம்பதிலிருந்து அறுபது வருடங்களுக்கு அதிகரித்தது. முதலில் ஐம்பது வருடங்களாகத்தான் இருந்தது. தாகூரின் படைப்புகளுக்கு சாஸ்வதக் காப்புரிமை வேண்டும் என்று இவர்கள் முன்வைத்த கோரிக்கையால் தான் “இப்போதைக்கு பத்து ஆண்டுகள் நீடிக்கிறோம், அதற்குப் பின்  நிலவரத்தைப் பொருத்து முடிவெடுப்போம்” என்று ஒரு சமரசத் தீர்வை அரசு எடுத்தது. இந்த குழப்படியால்தான் காப்புரிமை சட்டமும் மாற்றப்பட்டு, அனைத்துப் படைப்புகளுக்குமே தடை ஐம்பதிலிருந்து அறுபதிற்கு உயர்த்தப் பட்டது. அதற்குப் பிறகு அது குறைக்கப்படவே இல்லை. சில நாடுகளில் இருப்பதைப் போல் எழுபது,  நூறு என்று உயரவில்லையே என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். 

நகுல்

காருண்யம்தான்! சரி உங்கள் புத்தகத்திற்குத் திரும்பி வருவோமா… அதன் முன்னுரை எனக்கு மிகவும் பிடித்தமானது.

அருணாவா

நன்றி.

நகுல்

உங்கள் அம்மா அவர் படித்த கதையொன்றை உங்களுக்குச் சொல்லியதைப் பற்றி முன்னுரையில் பேசுகிறீர்கள், காளைமாடு மற்றும் அதன் அவலமான சொந்தக்காரனைப் பற்றிய கதை. அக்கதையின் பெயர் மஹேஷ் என்று ஞாபகம். 70-களில் அக்கதையை ஒருவர் படித்திருந்தால் அதன் சோகரசத்தால் ஆட்கொள்ளப் பட்டிருப்பார், அதன் தாளவொண்ணா துயரத்தால் முற்றிலும் மனமொடிந்திருப்பார். மாட்டின் கதி அல்லது அதற்கு தீனியிடக்கூட திராணியில்லாத ஏழ்மையில் நொடிந்திருக்கும் அதன் சொந்தக்காரனின் கதி. இரண்டில் ஏதோவொன்று உங்கள் மனதை உலுக்கியிருக்கும்.  ஆனால் அக்கதையை இப்போது, வாலிபனொருவன், அவன் அண்மையில்தான் நடுவிலிருந்து சற்றே வலமாக அமைந்திருக்கும் தன் அரசியல் சார்புகளை இனங்கண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்டவன் இக்கதையைப் படித்தால் அவன் கவனம் எதன் மீது குவியும்: , அவன் தேய்வழக்காக உணரும் மேல் ஜாதி பாத்திரங்களின் ஒற்றைப் பரிமாணத்தின் மீதா அல்லது அதன் அப்பட்டமான சோகரசத்தின் மீதா?

அருணாவா

அருமையான கேள்வி. இதற்கு விடையளிப்பது கஷ்டம்… அம்மாதிரியான வாலிபனொருவனாக என்னைக் கற்பனை செய்து கொண்டு கதையை அவன் பார்வையில் புதிதாகப் படிப்பது எனக்குக் கடினமாகவே இருக்கும். முயன்றால் ஒருகால் முடியுமாக இருக்கும்… அப்பாத்திரம் ஒரு முஸ்லிமாக இருப்பதும் அவன் கவனத்தை உறுத்தலாம்… ஆமாம், அனேகமாக நீங்கள் சுட்டுவதே சரி என்று படுகிறது.  

நகுல்

சரி, அம்முன்னுரையில் வரும் மற்றொரு சம்பவத்தைப் பற்றி அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருக்கிறது. அதில், திரைப்பட இயக்குநர் ஒருவரை சந்திக்க வேண்டியிருந்ததால் உங்கள் பட்டமளிப்பு விழாவைத் தவறவிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். இயக்குநர் சத்யஜித் ரே என்று அனுமானிக்கிறேன். அதைப்பற்றி சற்று கூற முடியுமா?

அருணாவா

ஆமாம் அவர் ரே தான். அவர் கதையொன்றை, தேவதைக் கதையொன்றை,  மற்றொரு இதழிற்காக மொழிபெயர்த்திருந்தேன். அதை அவரிடம் அனுப்பி வைத்தேன். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் தன்னை வந்து பார்க்கச் சொல்லி அவர் தகவல் அனுப்பினார். நம்ம அதிர்ஷ்டம்தான் தெரியுமே, பட்டமளிப்பு தேதியையே அவர் தேர்வு செய்திருந்தார். ஆனால் இதில் சிந்திப்பதற்கு ஏதுமில்லை…

நகுல்.

முற்றிலும் உடன்படுகிறேன். பட்டமளிப்பு விழாக்கள் கொடுமையானவை. குறிப்பாக இந்தியாவில், கவுன் அணியக் கட்டாயப்படுத்தி,  வியர்வை சொட்டச் சொட்ட நனைய வைத்துவிடுவார்கள்.

அருணாவா

ஆமாமாம்! அதைத் தவறவிட்டதெல்லாம் பெரிய விஷயமல்ல. 

நகுல்

எதை மொழிபெயர்ப்பது என்பதை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?  தலைசிறந்த படைப்புகளை மொழிபெயர்க்காது மேலை வாசகர்களுக்கு வசீகரமாய் இருப்பதே மொழிபெயர்க்கப் படுகின்றன என்ற ஒரு கருத்து தமிழ் இலக்கிய உலகில்  விவாதிக்கப் படுகிறது. வங்கத்திலும் இதே நிலைமைதானா?

அருணாவா

மொழிபெயர்ப்பாளர்களைக் காட்டிலும் பதிப்பகங்களே இந்த வாயில்காப்பான் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே புத்தகத்தின் விற்பனையை, எது விற்கும் எது விற்காது போன்ற பொருளாதாரத் தரவுகளிலேயே குறியாக இருக்கிறார்கள். மேலை வாசகர்கள் என்பதைவிட இந்தியாவில் ஆங்கிலத்தில் படிக்கக்கூடியவர்களையே அவர்கள் சென்றடைய முயல்கிறார்கள். ஏனெனில் கிட்டத்தட்ட எதுவுமே மேற்கை சென்றடைவதில்லை. ஆனால், இப்படிச் சொல்கிறேன் என்றாலும், நான் மொழிபெயர்க்கத் தொடங்கிய போது வங்க இலக்கியத்தின் மகோன்னதமான பெயர்களைத்தான் முதலில் மொழிபெயர்த்தேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் புத்தகங்கள் அதிகம் எழுதப்படாததால் அவற்றைப் பதிப்பதற்கான விழைவு, அதைப் பசி என்று சொல்வதே சரி, அதிகமாகவே இருந்தது. பொதுவில் இவ்வாசிரியர்களுக்கு நற்பெயர் இருந்ததால், அவர்களைப் பதிப்பிப்பதில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. மேலும் அவர்கள் பெயர்களை நன்கறிந்திருந்த தலைமுறை இன்னமும் வாசித்துக் கொண்டிருந்த காலமது. இவை அனைத்திற்கும் மேலாக,  பெரும்பாலான பதிப்பகங்களில் பெங்காலிகளே பதிப்பாசிரியர்களாக இருந்தார்கள். அப்படைப்புகளும் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை.

ஆனால் பின்நோக்குகையில், (இதை நான் சில ஆண்டுகள் முன்புதான் செய்யத் தொடங்கினேன்)  அச்சு அசல் பதிப்பு நிறுவனங்கள் செய்ததைத்தான் நானும் தனிப்பட்ட முறையில் செய்து வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன்.. மேற்கின் வெள்ளை ஆங்கில ஆசிரியர்களுக்கு நிகரானவர்களையே நான் மொழிபெயர்த்திருந்தேன். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே மேல் ஜாதியினர். இதனால் அவர்களுக்கு பெரும் செல்வமோ செல்வாக்கோ இருந்தது என்று அர்த்தம் கிடையாது; பதிப்புத் துறையிலோ, ஏதோ ஒரு கலாச்சாரத் துறையிலோ அவர்கள் வெற்றிபெற்றவர்களாக இருந்தார்கள்; அவ்வெற்றிக்கு அவர்கள் பிறப்பும் ஒரு பங்கை வகித்தது.

உதாரணத்திற்கு, பிபுதிபூஷண், மானிக் பந்தியோபாத்யாய் ஏன் தாரசங்கரையே எடுத்துக் கொள்வோம். அவர்கள் செல்வம் கொழிக்கும் குடும்பங்களிலிருந்து வரவில்லை, அதிகாரத்தில் இருந்தவர்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும் தெரியவில்லை. ஆனாலும், அவர்கள் அனைவருமே ஆண்கள் என்ற தரவிற்கும் புத்தகங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டதற்கும் பெருமளவில் தொடர்பிருக்கிறது என்ற உண்மையை மறுக்கவே முடியாது. அவர்களுக்கு நிகரான திறன்படைத்த பெண் ஆசிரியர்களும் இருக்கவே செய்தார்கள். ஆனால் அவர்கள் புத்தகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. ஆஷாபூர்ணா தேவியையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்போதுகூட,  அவர் தகுதிக்கேற்ற இடத்தை அவருக்கு உலகம் இன்னமும் அளிக்கவில்லை. எக்காலத்திலும் எந்த எழுத்தாளர் எழுதிய கதையோடும் சரிசமமாக நிற்பதற்கு அவை தகுதியானவை என்று நான் அடித்துச் சொல்வேன். ஆனால் அவர் காலத்து ஆண் எழுத்தாளர்கள் அளவிற்கு அவருக்கு அங்கீகாரம் கிடைக்காததற்கும் அவர் ஒரு பெண் என்பதற்கும் பெருத்த சம்பந்தமிருக்கிறது.

நகுல்

நீங்கள் ஆஷாபூர்ணா இன்னமும் பரவலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படவில்லை என்று கூறியது அதிர்ச்சியாக இருந்தது,  இச்சிறப்பிதழில் இரண்டு கதைகளைத் தமிழில் நரேன் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டுமே அருமையான கதைகள்.

அருணாவா.

ஆமாம். நானும் அதைத்தான் கூறுகிறேன். 

நகுல்

அத்துடன் கிருஷ்ணா பாஸு, மல்லிகா சென்குப்தா, சுசித்ரா பட்டாசாரியா போன்ற பெண் எழுத்தாளர்களுடன் எழுத்தாளர் அம்பை எடுத்திருக்கும் சில பேட்டிகளையும் மொழிபெயர்த்திருக்கிறோம். அனைத்துப் பேட்டிகளுமே வங்க இலக்கிய அமைப்பின் தந்தைவழி மரபு மனப்பான்மையைச் சாடுகின்றன.  

அருணாவா

ஆம் அதுவும், மேல் ஜாதித்தனமுமே அதன் அடையாளங்கள்

 நகுல்

சுநீல் கங்கோபாத்யாயா போன்றவர்கள்கூட நீங்கள் ஏன் இதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்பாராம், அதாவது பெண்ணியக் கருப்பொருட்கள் போன்றவற்றை ஏன் மையப்படுத்தி எழுதுகிறீர்கள் என்ற அர்த்தத்தில்…

 அருணாவா

பெண்களைப் பற்றி எழுதுகையில் சுநீல் கங்கோபாத்யாய் ஏதோ புரவலர் போல், ஒரு விதமான மிகவுமே ஆதரவளிக்கும் தொனியில்தான் எழுதுவார்.  குடும்பத்துப் பெரியவர் என்ற ஸ்தானத்திலிருந்து அறிவுரைகள் அளிக்க முயன்றார் என்றாலும் அந்தப் பெரியவர் பாவனை அவ்வப்போது விலகி முற்றிலும் வேறெதோ ஒன்றையும் அனிச்சையாக வெளிக்காட்டியது. அலட்சியமாகவும் மெத்தனமாகவும்தான் அவர் நடந்து கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்களை, அதாவது பெண்களை அவர் சமமாகக் கருதவில்லை, அதாவது, ஆண்களுக்குச் சமமாக. மேலும் அவருக்கும் அவரைச் சார்ந்திருந்த கூட்டத்திற்கும் ஒரு கற்பனாவாத ரொமாண்டிசிஸ பாவனை உண்டு, “சகோக்கள்” கூட்டணி, “பிரோக்களின்” பந்தம் போன்ற பாவனைகள்.

அவர், சக்தி சட்டோபாத்யாய், சந்திபன் சட்டோபாத்யாய் மற்றும் சிலருக்கு இந்த இலக்கியவாதி முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் பசித்திருக்கும் தலைமுறை ஹங்ரியலிஸ்ட்டுகள் (hungrealists) போன்ற முத்திரைகளும். சற்று மிகைப்படுத்தப்பட்டது என்றாலும் அவர்கள் உண்மையில் வங்கத்திற்கும் கொல்கத்தாவிற்கும் வருகை தந்த ஆலென் கின்ஸ்பர்கிற்கு எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தார்கள். 

மேலும், ஏதோ அவர்கள் வாழ்முறையே அவர்கள் இலக்கிய வாக்குமூலம் என்பது போலத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உங்களுக்கே தெரிந்திருக்கும்,  மூன்றாம்தரக் குடியகங்களில் குடித்துவிட்டு காட்டிற்குள் விரைவது… இப்படி… ஆரன்யர் தின் ராத்ரி,  கானகத்தில் கழித்த பகல்களும் இரவுகளும், என்ற ரேயின் படத்திற்கு மூலமான சுநீல் கங்கோபாத்யாயின்  நாவலே அவர்களின் நிஜவாழ்வுச் சாகசங்களைப் பற்றியதுதான். 

நகுல்

அப்படியா? ஒரு விதமான கட்டற்ற வாழ்முறை, ஆங்கிலத்தில் பொஹீமியன் என்பார்களே  அது போலவா ?

அருணாவா

ஆமாம், பொஹீமியன் போலத்தான், ஆனால் பெங்காலிகளுக்கே உரிதான ஒரு விதமான நடுத்தர வர்க்க பொஹீமியத்தனம் என்று வேண்டுமானால் அதை வரையறுக்கலாம். நிலோஹித் என்ற மற்றொரு பாத்திரத்தையும் அவர் படைத்திருக்கிறார். தன்மையில் நிலோஹித்தின் பெயரில் இந்நாவல்களை அவர் எழுதினார். வேலை-செய்யும் பொதுஜனத்தின் ஒரு பகுதியாக  இருக்கப் போவதில்லை என்று அவன் தீர்மானிக்கிறான். அதன்படி வேலை தேடும் எண்ணத்தையே அவன் நிராகரிக்கிறான். மற்றவர்களைப் போலல்லாது கற்பனாவாதக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பலவிதமான இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளப் போகிறான்… இப்படி… ஆனால் இதன் அப்பட்டமான மேல் வர்க்கத்து ஆதர்சத்தை நீங்கள் எளிதில் இனங்கண்டிருப்பீர்கள். வேலை செய்ய மாட்டேன்,  பிடித்த இடத்திற்குப் பயணிப்பேன் என்று உயர் நடுத்தர வகுப்பினரொருவர் கூறுவது புரட்சிகரமாகவும் நூதனமாகவும் இருக்கலாம், ஆனால் அவனுக்குத் தெரியும் தாங்கிக் கொள்பவர்கள் படையொன்று அவனுக்குப் பின்னே இருக்கிறதென்று, கையில் எப்போதுமே காசில்லை என்றாலும் அவன் ஒரு போதும் வீதிக்கு வரமாட்டான் என்று. அவனுக்கும் இருக்க வீடிருக்கிறது, அதன் ஆண்கள் அவனை சுற்றளவே உதாசீனம் செய்கிறார்கள், பெண் உறவினர்களோ மிக, மிக அனுசரணையாகவே இருக்கிறார்கள். அதுவே ஒரு சொகுசான வரப்பிரசாதம் தானே? 

நகுல்

ஆமாம், கண்டிப்பாக. சரி மொழிபெயர்ப்பைப் பற்றி சற்று பேசுவோமா?  என் அரைகுறை முயற்சிகளில், வட்டார பேச்சுமொழியை மொழிபெயர்ப்பது மிகவுமே சிக்கலானது என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் வங்க வட்டார மொழிகளை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

அருணாவா

அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுமே மண்டையை உடைத்துக் கொள்ளும் பிரச்சினைதான். அவற்றிற்கு நிகரான ஆங்கில வட்டார மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிறந்த வழி கிடையாது என்பதே என் கருத்து. ஏன் என்றால் எங்கோ புழக்கத்திலிருக்கும் அப்படிப்பட்ட ஒரு ஆங்கில வட்டார மொழியை தேடிக் கண்டுபிடித்தாலும் அதை ஓரளவிற்காவது புத்தகம் முழுவதிலும் இயைபாகத் தொனிக்கச் செய்வதற்கான திறமை நமக்கு இருக்குமா என்பதே சந்தேகத்திற்குரியது. உதாரணத்திற்கு அமெரிக்கத் தெருக்களில் புழங்கும் ஸ்ட்ரீட் இங்லிஷை எடுத்துக் கொள்வோம், ஓரிரு வரிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆகவே இவ்வாறு செய்வது செயற்கையானதொரு சூழலை உருவாக்கி வாசகர்களைக் குழப்பிவிடும். வட வங்காளிகள் திடீரென்று காக்னி வட்டார மொழியையோ ஸ்காட்டிஷையோ பேசத்தொடங்கினால்… வாசகர்களுக்கு உண்மைக்குப் புறம்பான, அல்லது அதிலிருந்து வெகுதூரம் வந்துவிட்ட தோற்றத்தையே நாம் அளிக்கிறோம். இதைப்பற்றி நிறையவே சிந்திக்கையில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். மொழி, வட்டார மொழி என்றெல்லாம் பேசுகையில் படிநிலை ஒன்றை நாம் உருவாக்குகிறோம். ஏதோ ஒரேயொரு முறையான வங்க மொழி இருப்பது போலும் அதை நாம் முறையான ஆங்கிலத்தில் மாற்றீடு செய்வது போலவும்… வட்டார மொழிகள் எல்லாம்… இதை எப்படிச் சொல்வது… அவற்றின் தரம் ஏதோ ஒரு விதத்தில் ஒருபடி கீழே அமைந்திருப்பதால் அவற்றைச் சற்றே திரிபுற்றிருக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாக வேண்டும் என்பது போலவும்… பல படிநிலைகளை உருவாக்குகிறோம். இதை எல்லாம் நிறையவே யோசித்துவிட்டு இது ஆகாத காரியம் என்ற முடிவிற்கு வந்தேன். இது வேலை செய்யாது,  எனவே இதை நான் முயற்சிக்கக்கூடப் போவதில்லை. அதற்குப் பதிலாக சில தொனி வேறுபாடுகளைக் காட்ட முயல்கிறேன், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி பேசுவதில்லை என்பதை உணர்த்துவதற்காக. இரண்டு கதைச்சூழல்களில் வட்டாரமொழியைப் பற்றிப் பேசுவது பயனளிக்கக்கூடியதாக இருக்கும்: முதலாவதாக, சில பாத்திரங்கள் வட்டார மொழியில் பேசுவதும் மற்றவர்கள் வேறு விதமாகப் பேசும் ஒரு சூழல், வங்கச் சூழலில் இம்மாதிரியான மேற்தளம் கீழ்தளம் ஆங்கிலத்தில் அப்ஸ்டேர்ஸ் டவுன்ஸ்டேர்ஸ் என்பார்களே, அதைப் போன்றதொரு சூழலில் ஒரு குடும்பத்தின் நபர்களும் அவர்கள்  வேலைக்காரர்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள். இரு குழுவினரும் வேறுபடும் தொனியில் பேசுவார்கள். இரண்டாவது சூழலில் அனைத்து உரையாடல்களுமே வட்டார மொழியில் இடம் பெற்றிருக்கும், அனைவருமே ஒரே மாதிரியான மொழியில் பேசுவார்கள். இதற்கும் அனைவரும் வழமையான பெங்காலியில் பேசும் ஒரு சூழலிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு எந்தச் சிக்கலும் இல்லை, ஆசிரியரின் மொழித் திரிபுகள் அவர்கள் வங்க மொழியைச் சற்று வேறு விதமாக உச்சரிக்கிறார்கள் என்பதை மட்டுமே கவனப்படுத்துகிறது. 

உன்னிப்பாக கவனித்தால், பாங்க்ளாவைப் பொறுத்தவரையில், அவர்கள் சொற்றொகுதிகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். உச்சரிப்பு மட்டுமே வேறுபடுகிறது. இறுதியில் எழுத்தாளர்கள் இதைத்தான் செய்கிறார்கள்; வட்டார மொழியைக் கையாளும் எழுத்தாளர்கள் இவ்வளவு தூரம்தான் செல்லமுடியுமோ என்னவோ.

உபயோகிக்கப்படும் வார்த்தைகளைப் பற்றிய புரிதல் இல்லாது அவற்றை செவிக்க மட்டுமே செய்வார்கள் போலிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் தொனியில் சில வேறுபாடுகளைக் காட்டிவிட்டு அதை அதன் போக்கில் விட்டுவிடுவதே உகந்தது, ஏனெனில் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாகவே புரிந்துகொள்கிறார்கள். நாம் ஏன் இடையில் புகுந்து வாசகர்களுக்குத் தடுப்புக் கட்டைகளிட வேண்டும்,  அதன் பின்னணி, அதற்கான காரணங்கள் பற்றிய முன்னறிவு அவர்களிடம் இல்லாதிருக்கும் பட்சத்தில்.

நகுல்

சற்று முன் வரை இதுவே என் கருத்தாகவும் இருந்தது,  ஆனால் அண்மையில் தாராஷங்கர் எழுதிய ஹன்சுலி பாங்கர் உபகதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. நீங்கள் அதைப் படித்திருக்கிறீர்களா இல்லையா என்று தெரியாது.

அருணாவா

ஓ! அமாம், அந்தப் புத்தகம்தான்…

நகுல்

அதில்தான் அவர், அதன் மொழிபெயர்ப்பாளர் பென் கோனிஸ்பீ பேயர் க்ரியோல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார், ஆனால் வழமையான க்ரியோல் ஆங்கிலத்தை அவர் அப்படியே பயன்படுத்துவதில்லை. பலவிதமான க்ரியோல் வட்டார வழக்குகளைக் கலந்து ஒரு புதிய செயற்கை வட்டார வழக்கைக் கொண்டு தாராஷங்கரின் வங்க வட்டார வழக்குகளின் வேறுபாடுகளைக் கைப்பற்ற முயல்கிறார். ஏதோவொரு விதத்தில் அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது,  ஹன்சுலி ஆதிவாசிக் கஹார் மக்களைப் பற்றியது, பெங்காலியில் அவர்கள் பேச்சு எப்படி ஒலிக்கும் என்று எனக்குத் தெரியாது,  உண்மையில் அதை வாசிக்கையில் அதை வித்தியாசமாக உணர்கிறீர்களா, கஹார்களின் பேச்சுமொழியை அவர்களைச் சூழ்ந்திருக்கும் மக்களின் பேச்சு மொழியிலிருந்து?

அருணாவா

வெளிப்படையாகவே இதைப் பேசிவிடுவோம்… ஆங்கிலத்தில் வாசிக்கையில் ஒரு பெரிய சிக்கல் எழுகிறது; அதைச் சற்றே பீடத்தில் ஏற்றப்பட்ட ஒரு மொழியாகவே நாம் வாசிக்கிறோம். இன்னமும் அதை நம் நிலத்தின் மொழியாக, மண்ணின் மொழியாக,  நம் மொழியை வாசிப்பது போல், என்னால் வாசிக்க முடியவில்லை. அதனால், இந்த வட்டார மொழி சமாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஒருகால் இப்புத்தகம் வங்க மொழிப் புத்தகமாக இருப்பதானால்கூட இருக்கலாம்…வேற்று மொழிப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாக இருந்திருந்தால் ஒருவேளை ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை, நீங்கள் வாசித்ததை உள்வாங்கிக் கொண்டு அவ்விரண்டு பேச்சு மொழிகளையும் ஒப்புமை செய்கிறீர்கள், அது உங்களுக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது; ஆக உங்களைப் போன்ற வாசகர்களிடத்தே மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூறவேண்டும். அவர் முயன்றது வேலை செய்துவிட்டது, செய்ய வந்ததை அவர் செய்து முடித்துவிட்டார். என்னால் இதைச் செய்துபார்க்கக்கூட முடியாது. இங்கு, இந்தியாவில் உட்கார்ந்திருப்பதால்,  நாம் படித்தறிந்த ஆங்கிலத்தைத் தவிர அதன் வேறெந்த வடிவங்களிலும் எனக்குத் தேர்ச்சி கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் தற்கால நவீன அமெரிக்கன் ஸ்ட்ரீட் வழக்கு,  ராப் ஹிப்ஹாப் இசையின் மொழி என்று வேண்டுமானால் பரிசோதனை செய்து பார்க்கலாம். ஆனால் அதுவுமே காலவரிசைப்படிப் பார்த்தால் சரிப்பட்டு வராது,  அபத்தமாகவே இருக்கும். எப்படியும், காக்னி பேச்சு மொழி எல்லாம் காலாவதி ஆகிவிட்டது, அதை எவருமே தற்போது பயன்படுத்துவதில்லை.

நகுல்

இந்த மொழிபெயர்ப்பாளார் க்ரியோல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார், அதனால்…

அருணாவா

ஆமாமாம், க்ரியோல் இங்லிஷ்… இருந்தாலும் ரொம்பவுமே மெனக்கெட்டுப் படிக்க வேண்டியிருந்தது. மீண்டும் மீண்டும் வாசிப்பதை நிறுத்திவிட்டு எழுத்துக் கோர்வைகளை அர்த்தப்படுத்திக் கொள்வது மிகக் கடினமாகவே இருந்தது.

நகுல்

நீங்கள் சொல்வது எனக்கு மிக சுவாரஸ்யமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது,  பெங்காலியுடன் தொடர்புபடுத்தி வாசிப்பது அதை உங்களுக்கு முற்றிலும் பிறிதொன்றாக மாற்றிவிடுகிறது. ஆனால் எனக்கு அம்மாதிரியான ஒப்புமை சட்டகம் இல்லாததால், என்னால் அதை மற்ற நாவல்களைப் போலவே படிக்க முடிகிறது.

அருணாவா

ஆகவே, சந்தேகமில்லாமல் நீங்கள்தான் அம்மொழிபெயர்ப்பிற்கு ஏற்ற சரியான வாசகர். நான் என் அனுபவத்தை மட்டுமே வைத்து அதை மதிப்பிடக் கூடாது.

நகுல்

இல்லை, உண்மையில் நீங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்திலிருந்து இதை அணுகியது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது எனக்கு முற்றிலும் வேறொன்றாக ஏன் நூதனமாகவே இருந்தது.   

நகுல்

மொழிபெயர்ப்பைப் பற்றி என் அடுத்த கேள்வி… ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் தலைசிறந்த இந்தியப் படைப்புகள் அனைத்தையும் நம் மொழிகள் அனைத்திற்கும் எடுத்துச் செல்வதே நம் தலையாய கடமையாக இருக்க வேண்டாமா?

அருணாவா

நிச்சயமாக, நாம் தப்பாமல் செய்ய வேண்டும், இந்தியாவில் இருந்த பன்மொழிப் புலமை இப்படி காற்றோடு போய்விட்டது என்பது ஒரு சோகக் கதை. இப்போது இரண்டு மொழி தெரிந்தவர்களே மிகக் குறைவு. இரண்டு மொழிகள் கூட…. சரி, ஒருகால் ஹிந்தி, அதை இன்னும் போதுமான எண்ணிக்கையில் மக்கள் படிக்கிறார்கள், அதனால் அவர்கள் ஹிந்தியிலும், தங்கள் தாய் மொழியிலும் வேலை செய்யக் கூடும். அதைத் தாண்டி, இல்லை. அதனால் இருவர் சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலைகளில் இறங்குவதை நிறைய ஆர்வத்தோடு நான் எதிர்நோக்குகிறேன். ஒருவேளை, நாம் இருவரும் சேர்ந்து வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதைச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்று வைப்போம், நாம் ஒரு இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு வழியே இதைச் செய்ய விரும்பவில்லை என்றால், அப்போது நாம் இருவரும் எதார்த்தமாகச் சேர்ந்து வேலை செய்ய வேண்டிவரும். நாம் இங்கிலிஷ் வழியே தொடர்பு கொள்வது இன்னமும் நடக்கலாம், அது எனக்குத் தெரிகிறது, ஆனால் ஆங்கிலப் பிரதியை ஒரு பாலமாகப் பயன்படுத்தாமல், வேறு சில வழிகளில், நம்மால் பயனுள்ளதாகக் குறைந்தது என்ன செய்ய முடியும் என்பது புரியும். அதுவும் ஒருவேளை சாத்தியம் இல்லாமல் போனால், பாலமான ஒரு பிரதியோடாவது வேலை செய்ய நான் தயார். ஏதுமில்லாமல் போவதைவிட அது மேல்.  

நகுல் 

அது சரி.  இது உங்களுக்குத் தெரிந்திருக்கும், சில சமயங்களில், தமிழ் வாசகர்கள் பிற இந்திய மொழிகளிலிருந்து அவர்களுக்கு எது கிட்டுகிறதோ அது குறித்துக் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். நாம் வங்காள மொழியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம், ஒரு தமிழ் வாசகருக்கு நீல்காண்ட் பாஹிர் கோஞ்சே தான் அனைத்து வங்காள மொழி நாவல்களிலும், எக்காலத்துக்குமாக, ஆகச் சிறந்த நாவல் என்று தோன்றும். நானும் அம்மதிப்பீட்டுடன் ஒத்துப்போவேன். ஆனால், அது சரியான கருத்தா, வங்காளத்தில் அப்படித்தான் பார்க்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியாது.

அருணாவா 

ஆமாம், அது நிச்சயமாக மிகவும் பாராட்டப்படுகிற நூல்களில் ஒன்று. 

நகுல் 

ஆனால் அவர்களுக்குக் கிட்டுகிற வேறு சிலவற்றால் நிலை தடுமாறிப் போகிறார்கள். உதாரணமாக…

அருணாவா 

அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா?

நகுல் 

ஆமாம். மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அது பிரமிக்க வைப்பதாகவும் இருக்கிறது. 70-களில் இந்த அபாரமான மனிதரால், எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவரால், செய்யப்பட்டது. 

அருணாவா 

ஓ ஆமாம், அப்போது இரு மொழிப் புலமை இன்னும் இருந்தது. 

நகுல் 

அந்தப் புத்தகத்தை நேஷனல் புக் ட்ரஸ்ட்தான் மொழிபெயர்க்கச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். 

இப்போது, அந்த நீல்காண்ட் மாதிரி நாவல்களைப் படித்தவர்கள், வேறு சில எழுத்தாளர்களைப் படிக்க நேர்கையில், உதாரணத்திற்கு பொனஃபூலையே எடுத்துக் கொள்வோமே, அவர்கள் பொனஃபூலைப் படித்தால் அனிச்சையாகவே எதிர்மாறாக மறுவினை செய்கிறார்கள். நீங்கள் கூட அவருடைய ஒரு கதையை மொழி பெயர்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், ‘காஞ்சுகல் ட்ரீம்ஸ்’. 

அருணாவா 

ஆமாம். 

நகுல்

இந்தச் சிறப்பிதழுக்காக ஒருவர் அதை மொழிபெயர்க்க முனைந்தார், அவர் சொன்னார், இதை நாம் ஏன் மொழி பெயர்க்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை என்றார். ஏனென்றால் அது தமிழ் வாரப் பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு கதை போல அவருக்குத் தெரிந்தது. ஒரு வங்காளிக்கு பொனஃபூல் எப்படித் தெரிகிறார் என்று கொஞ்சம் பேசுவீர்களா? அவர் வித்தியாசமான எழுத்தாளரா? வங்காளிகள் அவரை ஏன் சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறார்கள்?

அருணாவா 

சரி, பொனஃபூல் அந்த மாதிரி மைக்ரோ கதைகளை எழுதினாரென்பது நிஜம். அவரது எந்தக் கதையுமே… ஏன் அவரது மிக நீளமான கதை கூட நான்கைந்து பக்கங்களைத் தாண்டிப் போவதில்லை. 

அந்தக் கதைகள் உடனே எடுபடக் காரணம் என்ன என்று பார்த்தால், அவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அவர் ஒரு அளவுக்குத்தான் கதையில் சொல்கிறார், நீங்கள்தான் உங்களுடைய புத்தியில் மீதத்தை நிரப்பிக்கொள்ள வேண்டும். அது ஒரு பாணியைச் சேர்ந்த விஷயம். ஓர் உத்தி போல. அவர் வங்காளத்தைப் பற்றிப் பேசுகிறார், வங்காள மக்களுடைய தனிப்பட்ட எதையோ பேசுகிறார் என்று கூடச் சொல்ல முடியாது, 

அது என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வருகிறது, அது என்னவென்றால், ஒரு கருத்து நிலவுகிறது, ஒரு பிராந்தியத்துக்குப் பிரதிநிதியாக இருக்கும் இலக்கியத்தைத்தான் மொழிபெயர்க்க வேண்டுமென்று பலர் நினைக்கிறார்கள். அப்படியானால், தமிழில் எழுதப்பட்ட ஒரு கதையை நான் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது, அது ஏதோ மர்மமான வகையில் தமிழ் இலக்கியமாகத் தெரிய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை நான் சுத்தமாக ஏற்கவில்லை, ஏனென்றால், நாம் இலக்கியத்தை அப்படிப் படிப்பதில்லை, சரிதானே? அதாவது, தமிழில் எழுதுபவர் எப்போதும் தமிழ்த்தனத்தை மட்டுமே முன்னிடத்தில் வைக்க வேண்டும் என்பது அவசியமா? நிச்சயமாக இல்லை, சரிதானே, நமக்கு எந்த உலகத்தை பற்றித் தெரியுமோ அதைப் பற்றித்தானே நாம் எழுதப் போகிறோம். அது தற்செயலாகத்தானே தமிழ் பேசுகிற உலகமாக இருக்கிறது? 

ஆனால் நாம் எதைப் பற்றி எழுதுகிறோமோ, அது வெளிப்படையாகத் தெரிகிற மாதிரி அந்த அடையாளத்தை ஒட்டியதாக இல்லாமல் அமையலாம். அந்தத் தனிப்பட்ட தன்மையைச் சேராமல் இருக்கலாம். நீங்கள் குற்றச் செயலைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்போது? அறிவியல் கதையையோ அல்லது அது மாதிரி ஒரு வகைப்பட்ட புனைவையோ எழுதுகிறீர்கள் என்றால், அப்போது என்ன ஆகும்? அதாவது, மலையாளத்தில் குற்றப் புனைவு ஒன்றை எழுதுகிறீர்கள் என்றால், அதில் எப்போதும் தென்னை மரமெல்லாம் இருந்தாகணுமா என்ன? உங்களுடைய இளைஞர்கள் எப்பவும் தென்னங்கள்ளைக் குடித்துவிட்டு, தங்களோட முண்டு/ வேட்டி போல ஏதோ ஒன்றை உயர்த்திக் கட்டிக்கொண்டு நிற்கணுமா என்ன? ஆகவே அதை நான் ஏற்கிறதில்லை. 

நீங்கள் சொல்வதும் சரிதான், வங்காள இலக்கியம் என்று சொன்ன உடனேயே அந்த இடத்தில் இந்த மாதிரி ஒரு சட்டகம் வந்துவிடுகிறது, அதற்குள்ளேயே நாம நினைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்தச் சட்டகம் ஒரு விதத்தில் அந்த இலக்கியத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிகிறதைத்தான் நம்பி இருக்கிறது. ஆகையால, தாராசங்கர்களும், பிபூதிபூஷண்களும் எப்பவும் அடித்தளத்தை நிறுவி விடுகிறார்கள். ஆனால் நீங்க பிபூதிபூஷணையும், ஷொங்கரையும் அடுத்தடுத்துப் படிச்சீங்கன்னா, அவர்களிடையே பொதுவாக இருப்பதாக எதையுமே பார்க்க முடியாது. சுத்தமாக எதுவும் பொதுவாக இல்லை. சங்கரின் கதைகளெல்லாம் 1970களில் கொல்கத்தாவில் இருக்கும் பெரும் நிறுவனங்களின் உலகத்தைப் பற்றியவை. அவற்றுக்கும் 1930கள்லே இருக்கற வங்காளக் கிராமப்புறங்களுக்கும் நடுவே பொதுவாக என்ன இருக்க முடியும்? அதே மொழியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தவிர அனேகமாக வேறு எதுவுமே இருக்காது. 

நகுல் 

ஆமாம், நீங்க மொழிபெயர்த்த நவாப் சாஹேப்-ஐ படித்தேன், அதுவும் பொனஃபூல் எழுதியதென்று நினைக்கிறேன்.  ஒரு ப்ரூஸ்டியத்தனமான வம்புப்பேச்சு அதில் பூராவும் இருக்கிறது, அது எனக்கு ரொம்ப சுவாரசியமாப் பட்டது. 

அது இருக்கட்டும், நீங்க ஏதாவது தமிழ் புனைவை மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறீர்களா?

அருணாவா 

நிறையப் படித்திருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பில்தான், வேறெப்படி. ஆனால் முன்னே இங்கே ஒரு பிரமாதமான சிறுகதைத் தொகுப்பு வந்தது, மூன்று புத்தகத் தொகுப்பு. அதில் இந்தியாவின் பல மாநிலத்துக் கதைகளை வங்காளத்தில் மொழிபெயர்த்திருந்தார்கள். அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தவர் ஜாதவ்பூர் பல்கலையில இருந்த ஒரு பேராசிரியர், மனபேந்த்ரு பந்த்யோபாத்யாயா, ஒப்பியல் இலக்கியத் துறையில் பேராசிரியராக இருந்தவர். அது ரொம்பவே அற்புதமான புத்தகம், ஏன் என்று கேட்டீர்களானால், இங்கிலிஷ் அல்லாத மொழியில் கதைகளைப் படிக்கிறது, இங்கிலீஷில் படிப்பதிலிருந்து மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 

உங்களுக்குத் தெரியும், நாம் என்னதான் அந்த மொழியை நம்முடையதும்தான் என்று சொல்லிக் கொண்டாலும், இங்கிலீஷ் வேற ஒரு பிரதேசத்திலிருந்து வந்த மொழிதான். அதனால் அதில் எப்போதும் சிறிது இடைவெளி இருக்கத்தான் செய்கிறது, இல்லையா? ஆகவே ஆமாம், தமிழிலிருந்து வந்த மொழிபெயர்ப்புகளை நிறையவே படித்திருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் ஒரு வாசகனா இருக்கணும்னா பெருமாள் முருகனைப் படிக்காம இருக்க முடியாது இல்லையா? அதனால முருகன், அப்புறம் அம்பை, பாமா, சல்மா மற்றும்…இன்னும் யாரு…ஓ.. அசோகமித்திரன். 

நகுல் 

ஆமாம், கல்யாண்ராமன், எங்களோட முதல் நிலை மொழிபெயர்ப்பாளர். அவர் சமீபத்துல ட்வீட் செய்தார், உங்களோடு ஒத்துழைப்புடன் ஜெயமோகனோட ஒரு தொகுப்பைக் கொண்டுவர வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். அது அறம்-னு நினைக்கறேன். 

அருணாவா 

அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம், நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், இந்த எழுத்தாளர்களெல்லாம், பெருமாள் முருகன் சர்ச்சைக்குரியவர் என்பதால் அவரை விட்டுவிடுவோம் … இவர்களெல்லாம் பிபூதிபூஷன், தாராசங்கர், மேலும் மணிக் மாதிரியானவங்க, இது சரியா? இவர்களெல்லாம் பிரபலமானவர்கள், உசத்தியா நினைக்கப்படடுகிறவர்கள் என்ற அர்த்தத்தில்…. அவங்களோட எழுத்தை நான் குறைவா மதிப்பிடல்லை, ஆனா இவர்களெல்லாம் தமிழ் எழுத்துலகில் முன்னணியில் இருப்பவர்கள், அது சரியா?

நகுல் 

ஆனா, தமிழ் இலக்கிய உலகு கொஞ்சம் விசித்திரமானது. நிறைய உள்குழுக்களும், குழுக்களிடையே சண்டையுமா இருக்கற உலகு. வேடிக்கை என்னவென்றால், சில ஆயிரம் தமிழர்கள்தான் இலக்கியத்தைப் படிக்கிறவங்க, ஆனாலும் இவங்களெல்லாம், இலக்கியம் எழுதறத்துக்கு இருக்கற இருநூறு அல்லது முந்நூறு பேர்களுக்குள்ளே, யார் பெரிய ஆளுமைன்னு சண்டை போடறாங்கங்கறதுதான் விசித்திரம். 

அருணாவா 

இந்தக் கால எழுத்தாளர்கள் நடுவே இவர்கள்தானே புதுசா எதையும் எழுதறவங்க? 

நகுல் 

இவர்களில் சிலரை அப்படி வரையறுக்கலாம்… ஆனால் பிரச்சினை என்னவென்று பார்த்தால்… ஜெயமோகனை உதாரணமா எடுத்துக் கொள்வோம், அவர் இக்காலத்தில் எழுதுகிறவர்களில் முக்கியமானவர், ஆனால் அவர் ஆங்கிலத்தில் இன்னும் அதிகமா மொழிபெயர்க்கப்படவில்லை. அவரைப் போல பலர் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றித் தமிழ் உலகம் பெருமையாக நினைக்கிறது, ஆனால் அவர்களைப் பற்றி வெளி உலகுக்கு ஏதும் தெரிவிக்கப் படவில்லை. இது நிறைய இறுக்கத்தைக் கொண்டு வருகிறது, சில எழுத்தாளர்களோட சமூகப் பின்னணியால்தான் அவர்களுக்கு உலகளவில் பிராபல்யம் கிடைக்கிறது, அவர்களுடைய எழுத்து “பெரிய இலக்கியம்” இல்லைன்னு எல்லாம் சில கருத்துகளை இது கிளப்புகிறது, அதனால்தான் இம்மனக்குமைச்சல்களும், முதுகு குத்தல்களும்… 

அருணாவா 

அப்படியா…. 

நகுல் 

ஆமாம் இதைப்பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. நாம் கவிதையைப் பற்றிச் சற்று பேசுவோம். நீங்கள் கவிதைகளையும் மொழிபெயர்க்கிறீர்களா, ஒவ்வொரு வகை இலக்கியத்திற்கும் தக்க மாதிரி மொழிபெயர்ப்பு உத்திகள் இருக்கின்றனவா?

அருணாவா 

ஆமாம், செய்கிறேன். பொறுக்கி எடுத்த சிலதைத்தான் செய்கிறேன், ஏனென்றால், என்னால் எல்லா விதமான கவிதைகளையும் மொழிபெயர்க்க முடியாது, அல்லது சில ஆசிரியர்களின் எந்தக் கவிதையையுமே மொழிபெயர்க்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், நான் அதைச் செய்கிறேன். சில வருடங்களுக்கு முன்னே, மொழிபெயர்ப்புக் கவிதைகளோட தொகுப்பொன்றை முடித்தேன், எல்லாரையும் விட்டுவிட்டு, வேல்ஸில இருக்கும் பிரசுரகரொருவர் அதைப் பிரசுரித்தார், அது வேறு ஒரு ஏற்பாட்டோட பகுதியா இருந்தது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே, என்னென்னவோ விதமான பிரிட்டிஷ் பண்பாட்டுக் கூட்டு முயற்சிகள் எப்போதுமே நடந்துகொண்டு இருக்குமென்று, அவற்றின் இறுதியில் சில புத்தகங்களைப் பிரசுரிக்க முயற்சி செய்வார்கள். அந்தப் புத்தகம்கூட இந்தியாவில் இந்த வருஷம் வெளியாகணும். ஆக, அந்தத் தொகுப்பொன்று இருக்கு. அப்புறம்… வேறு மூன்று புத்தகங்களையும் முடித்திருக்கிறேன், மூன்று தனித் தனி கவிஞர்களோட கவிதைகள் அவை… எனக்குக் கவிதைகளை மொழிபெயர்க்கிறதுங்கறது முழுக்கவே வேறு வகையான வேலை. அது மொழிபெயர்ப்புதானான்னு எனக்கு அத்தனை நிச்சயமாத் தெரியவில்லை. தொழில்முறை என்று பார்த்தால் அது மொழிபெயர்ப்புதான், ஆனால் என்னைக் கேட்டால் அது நல்ல பாடகர் ஒருவரை மாதிரி நாம் பாட முயற்சிப்பது போல்தான்; ஆனால் நகலிக்கத்தான முயல்கிறோம் என்றாலும் நம் குரல் எப்படியும் வெளியில் தெரிந்துவிடும், அதைப் போலத்தான் இதுவும். நம்முடைய இயல்பை நம்மால விட்டுவிட முடியாது, நானும் விடுவதில்லை. 

நகுல் 

நான் சொல்ல வருவது இது, எனக்குக் கவிதையை மொழிபெயர்ப்பதில் தமிழும் இங்கிலிஷும் வாக்கிய அமைப்புகளில் எதிரெதிரா இருக்கற மொழிகளாகவே தெரிகின்றன. ஆகவே, ஆங்கிலத்தில் எது முதலில் வருகிறதோ… 

அருணாவா 

ஆமாம், வங்காள மொழியிலும் அப்படித்தான்.

நகுல் 

ஓகே, அப்ப நான் சொல்கிறது உங்களுக்கு உடனே தெரியும்… ஒரு கவிதை மிகவுமே காட்சி ரூபமானதாக இருந்தால் அப்போது ஆங்கிலத்தில் காட்சிரீதியாக எது இறுதியில் வருகிறதோ அதைத் தமிழில் முதலிலேயே கொண்டு வரும்படி ஆகும், அதை நான் மிகத் தொல்லையாகவே உணர்கிறேன். அதனால், கடைசியில் வாக்கிய அமைப்பை ஏதோ விதங்களில் மாற்றி அமைத்து, மூலத்திலே காட்சி எப்படி வெளிப்படுகிறதோ அதே விதத்தில் தமிழிலும் வரவழைக்க முயற்சி செய்ய வேண்டியதாகிறது. இது எப்போதும் வெற்றி அடைகிறதாகச் சொல்ல முடியாது. 

அருணாவா 

ஆமாம் வரிகளோட ஒழுங்கமைப்பை மாற்ற வேண்டி வரும்…

நகுல் 

உங்களால் எப்படி இவ்வளவு விரைவாக எழுத முடிகிறது? நான் சற்று முன்னால்தான் உங்களுடைய வலைத்தளத்துக்குப் போயிருந்தேன். நீங்கள் கிட்டத் தட்ட 60 புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் இல்லையா? 

அருணாவா 

அது என்னவென்றால்…., சரி, இரண்டு விஷயங்கள் இதில் உண்டு. ஒன்று, மொழிபெயர்ப்பு என்பது ஓர் ஓட்டமான நடவடிக்கை. அதில் நீங்கள் கட்டி எழுப்பி, நிறுத்தி, மெருகேற்றி, மறுபடி கட்டி… இதெல்லாம் கிடையாது, சரியா? நீங்கள் ஒரு ஓட்டத்தில் போகிறீர்கள், ஒரு முழு முதல் படிவத்தைத் தயார் செய்கிறீர்கள், அப்புறம் திரும்பப் போய் அதைத் திருத்துகிறீர்கள், இப்படிப் போகும். ஒரு விதத்தில் இது உங்கள் நேரப் பயன்படுத்தலை எளிதாக்குகிறது.  குறைந்தது எனக்கு அப்படி இருக்கிறது. மற்றவர்களெல்லாம் வேறு விதமாக மொழிபெயர்க்கிறார்களோ என்னவோ, ஆனால் நான் உலகம் பூராவும் பல மொழிபெயர்ப்பாளர்களுடன் இந்த வேலையைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கிறேன், அனேகம் பேரும் இப்படித்தான் வேலை செய்கிற மாதிரி தெரிகிறது. 

ஆக, அது ஒரு விஷயம். இன்னொன்று, இந்த வேலை ஓரளவு போதை மருந்து மாதிரிதான். உங்களுக்குத் தெரியுமே, அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு நாளும் மொழி பெயர்க்கவில்லை என்றால் எனக்குப் பதட்டமாகிப் போகும். 

நகுல் 

நீங்கள் ஒரே சமயம் ஒரு புத்தகத்துக்கு மேல மொழிபெயர்ப்பீர்களா?

அருணாவா 

சில சமயம், சில சமயங்களில் அப்படியும் செய்ய நேர்கிறது.

நகுல் 

சரி, கோவிட் உங்கள் வேலையை எப்படிப் பாதித்திருக்கிறது? 

அருணாவா 

தினசரி வேலை வழக்கங்கள் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன, ஆனால் அது (வைரஸ்) கிளப்பிவிடும் கவலைகளால்தான் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறேனென்றால், உண்மையைச் சொன்னால், ஊரடங்கு என்னுடைய வாழ்வு முறையை கவனிக்கத்தக்க வகையில் பாதிக்கவில்லை. எப்படியுமே என்னுடைய நாளில் பெரும்பாலான நேரத்தை நான் வீட்டிலேயே இருந்து வேலை செய்வதில்தான் கழிக்கிறேன். எல்லார் மாதிரியும் யுனிவர்சிடிக்கு பாடம் நடத்த வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற கணக்கில் போய்க்கொண்டு இருந்தேன், அதுவும் இப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டது. நான் செய்யும் மற்றொரு பணி, ஸ்க்ரோல் நிறுவனத்தில் புத்தகங்களுக்குப் பதிப்பாசிரியராக இருப்பது, அந்த வேலையையும் நான் எப்படியுமே வீட்டிலேயேதான் செய்கிறேன். அதனால் இதெல்லாம் எதுவும் மாறி விடவில்லை, ஆனால் மொத்த நிலைமை கிளப்புகிற கவலைகள் என்னை அழுத்தியதால், என் வேகம் குறைந்தது. அது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

நகுல் 

கிட்டத்தட்ட எனக்கும் அப்படித்தான்… எனக்கும் அதிகம் ஒன்றும் மாறி விடவில்லை. பாட்மிண்டன் விளையாட முடியாதது ஒன்றுதான் சலிப்பைக் கொடுத்தது. இருக்கட்டும், இன்னும் ஒன்றிரண்டு கேள்விகள் உங்களிடம் கேட்க இருக்கின்றன. உங்கள் அபிப்பிராயத்தில், தற்போது வங்காளத்தில் எழுதுகிறவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள்? 

அருணாவா 

ஹா ஹா. நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறதில்லை. 

நகுல் 

இது ஒரு தமிழ் பத்திரிகையில் வரப்போகிறது. (உங்களூரில்) யாரும் அதைப் படிக்கப் போகிறதில்லை… அதனால்…

அருணாவா 

ஆமாம், நல்ல பாயிண்ட். வங்காள எழுத்துலகு பற்றி எனக்கு இருக்கிற ஒரு குறை என்னவென்று கேட்டால், அனேகம் பேர் உலக இலக்கியத்தைப் படிப்பதில்லை என்று எனக்குப் படுகிறதுதான், நான் இங்கு வங்காளி எழுத்தாளர்களைப் பற்றியே பேசுகிறேன். அவர்களுக்கு இன்னமும் புரியவில்லை, இனிமேல் உலகமென்பது நாம் இருக்கிற தூலமான இடத்தோடு குறுகிப் போவது இல்லை என்பதை. நாம் பரவி உலகம் முழுவதிலும் இருக்கிறோம், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பொருட்கள் நம் வாழ்வினுள் வருகின்றன, இந்த இணைப்புகளோட தடயம்கூட நமக்குத் தெரிவதில்லை. இதைப் பற்றி ஏதோ அரை வேக்காட்டுத்தனமான அங்கீகரிப்புதான் இருக்கிறது. இதைப் பற்றி இன்னொரு குறையும் இருக்கிறது, இங்கே எழுத்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு மாறவே இல்லை. சில எழுத்தாளர்களிடம் பிரமாதமான, தனிப்பட்ட நடைகள் இருப்பது வெளிப்படை, ஆனால் பெரும்பாலான பேர்கள் இன்னமும் தட்டையாக, நேரடியான, பத்திரிகைச் செய்தியின் நடையில்தான் எழுதுகிறார்கள்; இந்த நடையை முன்னிறுத்தியவர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், சுனில் கங்கோபாத்யாயா, அவருக்கு பெரிய நடையெல்லாம் கிடையாது. அவருடைய உரைநடை பற்றி இதைச் சொல்கிறேன். எல்லாத் திறனையும் தன் கவிதைகளுக்கு வைத்துக் கொண்டார் போலிருக்கு. அவருடைய உரைநடை அந்த விதத்தில் மிகவுமே உப்புச் சப்பில்லாமல் தட்டையாக இருக்கும். 

சரி அதைச் சொல்லி விட்டேன், ஆனால்  இப்போது இங்கே அனிதா அக்னிஹோத்ரி இருக்கிறார். அவர் தற்போதிருக்கும் சிறப்பான எழுத்தாளர்களில் ஒருவர். தன் அனுபவங்களில் இருந்துதான் அவர் எழுதுகிறார், மனிதக் குழுக்களைக் கவனித்துப் பார்த்துப் பெறும் ஆய்வனுபவத்தோடு, வரலாற்று உணர்வோடு, தனிக் கதைகளைச் சுலபமாக இணைத்துவிடுகிறார். அது பிரமிக்க வைக்கிறது. பெரிய நிலப்பரப்பைக் கொஞ்சம் போல வார்த்தைகளால் படைத்துவிடுகிறார். அவர் என்னைப் பொறுத்தவரை அங்கே உயரத்தில் இருக்கிறார். 

இன்னொருத்தர், மனோரஞ்சன் ப்யாபாரி, தலித் எழுத்தாளர். அவர் தானாகவே எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட எழுத்தாளர், ஆனால் அவருடைய எழுத்தில் அபாரமான சக்தி இருக்கிறது. அவருடைய எழுத்து தமிழ் வாசகர்களுக்கு ரசிக்கும்னு தைரியமாச் சொல்வேன், ஏன் என்று கேட்டால், அவர் நம்முடைய மறு பாதியைப் பற்றி எழுதுகிறார், அதனால் அவருடைய கதைகள் அனேகமாக ஜெயில், இல்லாவிட்டால் நடைபாதைகள், சேரிகள், இவற்றில்தான் குடிகொண்டிருக்கும். அவருடைய ஒரு நாவலில்கூட நாம் உயர்ந்த மாடிக் கட்டடங்களுக்குள்ளேயோ, ஒரு பங்களாவுக்குள்ளேயோ, அல்லது அதுமாதிரி இடங்களுக்குள்ளோ போக மாட்டோம். அங்கே போனாலும் கதைகள் கதவுக்கு வெளியே நின்றுவிடும். ஆகவே அவர் இருக்கிறார்… வேறு யாரென்று பார்ப்போம். … அங்கே பங்களாதேஷிலிருந்து நிறைய நல்ல எழுத்து வருகிறது, ஆமாம். 

நகுல் 

நீங்க கடைசியாச் சொன்னது சுவாரசியமா இருக்கிறது. இதையே இந்த சிறப்பிதழுக்காக, இன்னொரு மொழிபெயர்ப்பாளரோடு பேசியபோது… அவரை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியல்லே. அவர் பேரு ராமசுவாமி. 

அருணாவா 

தெரியும். 

நகுல் 

அவர் சுபிமால் மிஷ்ரா, உதயான் கோஷ் மாதிரி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறார். அவர் சொல்கிறார், வங்காள மொழியில் சிறப்பான எழுத்து இப்போது வங்கதேசத்திலிருந்துதான் வருகிறதென்று. 

அருணாவா 

ஆமாம். சிறிது காலமாகவே இப்படித்தான் இருந்திருக்கிறது. கடந்த 15-20 வருஷங்களாக… அங்கே சில பிரமாதமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஷொஹிதுல் ஜாஹீர், அக்தருஸ்ஸாமான் எலியஸ்-இவர் இரண்டு பக்கங்கள்லேயும் இருக்கற எழுத்தாளர்களில், கடந்த 50 வருடங்களில், மிகச் சிறப்பான எழுத்தாளர்னு சொல்லலாம். சரி, 30 அல்லது 40 வருடம்னு வைத்துக் கொள்வோம். இத்தனைக்கும் அவர் ரெண்டு நாவல்களையும், சில சிறுகதைகளையும் மட்டுமே எழுதி இருக்கார். அதைப் போலவே அங்கே பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எழுத்து நிச்சயமாக வேறொரு தளத்தில் இருக்கு, அதில் சந்தேகமே இல்லை. 

நகுல் 

ராமசுவாமிகூட ஷொஹிதுல் ஜாஹிர், நுமாயிர் அதிஃப் சௌதுரி அப்புறம் அன்ஸாருதின் பெயர்களைச் சொன்னார் என்று நினைக்கிறேன். 

அருணாவா 

ஓ, ஆமாம்… நுமாயிர். ஆனால் அவர் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார், அதையும் அவர் இங்கிலிஷில் எழுதினார். 

நகுல் 

கரெக்ட்., அவரும் அதைக் குறிப்பிட்டார். பாபு பங்களாதேஷ் நாவல். 

அருணாவா 

ஆம், பாபு பங்களாதேஷ். அதன்பின் வருந்தத்தக்க விதத்தில் அவர் இறந்துவிட்டர். அப்புத்தகத்தில் அந்தப் பகுதியைப் படிக்கிற போது அவருடைய சாவை அது முன்கூட்டித் தெரிவிக்கிற மாதிரி இருக்கும், அது மயிர்க்கூச்செறிய வைக்கும்…

நகுல் 

வாவ்! நான் இன்னும் படிக்கவில்லை.  படிக்க ஆவலாக இருக்கிறது.. 

அருணாவா 

அது ஓரளவிற்குச் சுய மையத்தோட, கட்டுப்பாடு இல்லாமல் எழுதப்பட்டது, நல்ல பதிப்பாசிரியர் மேற்பார்வை இல்லாமல் வந்திருக்கிறது, அதாவது அவர் எழுதினது அத்தனையும் அப்படியே வந்திருக்கிறது. அது இன்னும் செறிவா வந்திருக்க வேண்டும். ஆனால், எப்படியும் அதைப் படித்து விடுங்கள். 

நகுல் 

ஒரு விதமான இறுதிப்பாடல்,  ஆங்கிலத்தில் ஸ்வான் சாங் என்பார்களே, அப்படியா? 

அருணாவா 

ஆமாம். ஒரே சமயத்தில் நுழைவுப் பாடலாகவும் இறுதிப் பாடலாகவும் அமைந்த ஒரு புத்தகம். 

நகுல்  

கடைசியாக, இப்போது எதை மொழிபெயர்க்கிறீர்கள்?

அருணாவா

மனோரஞ்சன் ப்யாபாரியின் இன்னொரு நாவலை மொழிபெயர்க்கிறேன்.  உண்மையில், இரண்டு நாவல்களை மொழிபெயர்க்கிறேன். நீங்கள் இப்போது குறிப்பிட்டதால் சொல்கிறேன், இப்போதுதான் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இருங்க, உண்மையில் மூன்று, ஏனென்றால் மற்றொரு நாவலை, ஆங்கிலத்திலிருந்து வங்காள மொழிக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு இப்போதைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மணி நேரம் செலவழிக்கிறேன், ஆனால் இன்னும் சில நாட்களில் அதற்கான நேரம் அதிகரிக்க ஆரம்பித்து மொத்த நாளையும் அது எடுத்துக் கொள்ளும். அது அமிதாவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ (என்ற நாவல்). காலையில் முதலாக அதில்தான் ஒரு மணி நேரம் போலச் செலவழிக்கிறேன், ஏனென்றால் என் மொழிபெயர்ப்பு நாட்களின் பெரும்பகுதி இன்னமும் ஆங்கில நாவல்களுக்கே போகின்றன; மஷ்ரூர் அரெஃபின் என்கிற ஒரு வங்கதேச எழுத்தாளரின் ’த ஃபாண்டம்ஸ் ஆஃப் ஆகஸ்ட்’ என்ற நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன், அதுவும் ஓர் அசாதாரணமான நூல், மிக நீளமானதும் கூட. ஆகஸ்ட் 1975 இல் நடந்த முஜிபுர் ரஹ்மானின் படுகொலையில்தான் அது மையம் கொள்கிறது. ஆனால் நினைவுகளாலும், அவற்றுடன் இருக்கும் தொடர்புகள் மூலமாகவும் அந்த மையம் அடையப்படுகிறது. ப்ரூஸ்டின் படைப்பைப் போல இருக்கும் அது, இந்நாளைய எழுத்தாளரின் ஒருவரின் நினைவுகளினூடே, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மிதந்தபடியே செல்கிறது. ஓர் ஆகஸ்ட் மாதத்தில், தன் வாழ்வின் பல அனுபவங்கள் வழியாக அவர் பயணிக்கிறார், அவை அனைத்துமே வட்டமாக சுற்றியபடி இறுதியில் அந்தப் படுகொலைக்கே திரும்பி வருகின்றன. 

அது ஒன்று, இரண்டாவதுதான் சற்றுமுன் பேசிய மனோரஞ்சன் ப்யாபாரியுடையது, அதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். வங்காள மொழியில் அதன் பெயர் சேரா சேரா ஜீபோன். அதற்கு நேரடி அர்த்தம், ‘கழிவுகளான வாழ்வு, வாழ்வின் கழிவுகள்’.  நேர்கோட்டுக் கதையாடல் இல்லாத உரைநடை. அதாவது அதில் ஒரு குறிப்பிட்ட கதை என்று ஏதுமில்லை, ஆனால் விளிம்பு நிலை வாழ்வுகள் சிலவற்றின் ஓர் ஒட்டு அது. அவர்கள் குப்பைத் துணி பொறுக்கிறவர்கள், ஜெயிலிலிருந்து அப்போதுதான் வெளிவந்தவர்கள், கழிவுப் பொருட்களைச் சேகரிக்கும் கூடத்தை நடத்துகிறவர்கள், அவர்களில், ஆண்கள் பெண்கள் இருவருமே உண்டு…அதில் கவனிக்கப்பட வேண்டியது… இது அவர்கள் வாழ்க்கைகளைப் பற்றியது, ஆனால் அவர்கள் வாழ்க்கைகளின் எதைப்பற்றி எல்லாம் அது பேசுகிறது என்றால் …வழக்கமாக மேல் குடி மக்களைப் பற்றி எழுதும்போது பேசப்படுமே அம்மாதிரியான அம்சங்களைப் பற்றி…  காதலையும், மனக் கிளர்ச்சியையும், வாழ்க்கைக்கான ஆதாரம் தேடுவதையும் பற்றியது. ஆனால் அவர்கள் போராட்டங்களை எதார்த்தமாக அணுகுகிறது, அவர்கள் வாழ்க்கைகளை முழுதுமாகப் பார்க்க முனைகிறது. 

சில வாழ்க்கைகளின் முனைப்பு முழுக்கவே உயிர் பிழைத்திருப்பதிலேயே கழிகிறது என்று நாம் நினைக்கிறோம் என்பதால்… விளிம்பு நிலையிலேயே நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களிடம் தேவையான பணம் இல்லை, அதனால் உங்கள் வாழ்வுகளுக்கும் அதே போலத்தான் நலிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.  இந்தப் புத்தகம் அதெல்லாம் தண்டமான நினைப்பு என்று காட்டுகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் வளமாகவே இருக்கிறது, ஒருகால் உங்களுடைய அல்லது என் வாழ்க்கையை விடவும் கூடுதல் வளத்தோடுகூட இருக்கலாம், ஏனெனில் நாம் எப்போதும் ஒரே மாதிரியான வழக்கங்களோடு வாழ்கிறோம். மத்திய தரத்து வாழ்க்கையின் விதிகளுக்கு அதிகமாக் கட்டுப்படுகிறோம். 

ஆக, இங்கே உணர்ச்சிகள், உடல்கள், அப்புறம் பல நோக்கங்களுக்கும் கூடுதலான சுதந்திரமுள்ள ஓட்டமும் இருக்கிறது, அதனால் இது வசீகரமாகத் தெரிகிறது, முழுதாக மனம் கவர்வதாக இருக்கிறது. நிஜத்தில் கதைசொல்லுதல் என்பதை விட உலகை கட்டமைத்துக் காட்டுவதலே அதன் பாணி எனலாம். தென் கல்கத்தாவிற்கும் தெற்கே, ரொம்பத் தெற்கே உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு அண்டைப் புறமாக இருக்கிற சேரிகளோட காலனி ஒன்றில் இந்த உலகத்தை அவர் உருவாக்கிவிட்டார், இனி, மேலும் பாத்திரங்களையும், கதைகளையும் இந்தக் களத்தில் அவர் கொண்டு வைக்கக் கூடும். 

நகுல் 

அடேயப்பா. மூன்று நாவல்களா? அற்புதமாக இருக்கிறதே. அத்தனை நேரத்தை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்களென்று எனக்குத் தெரியல்லை. என்னால் ஒரு மொழிபெயர்ப்பில்கூட அதிக நேரம் வேலை செய்ய முடிவதில்லை. ஆனால், நமக்கு இதற்கு மேல் நேரம் இல்லை, அதனால் நாம இந்த உரையாடலை முடிப்பதற்கு முன் இதை மட்டும் சொல்லி விடுகிறேன். அந்தக் கொய்யா மரத்து மேல் நீங்க சௌகரியமா உட்கார்ந்து கொண்டு, காபுலிவாலாவைப் படிக்கையில் உங்களைக் காற்றுத் துப்பாக்கியால் சுட்டாரே உங்கள் மாமா, அவருக்கு நன்றி சொல்லணும்னு நான் நினைக்கிறேன்… ஏனென்றால், அவர் அங்கே அப்படிச் சுடவில்லை என்றால், உங்களுடைய புத்தகத்தைப் படிக்கிற சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்திருக்காது, நானும் ஒரு தமிழ் பத்திரிகைக்காக உங்களைப் பேட்டி கண்டு கொண்டு இருக்க மாட்டேன். 

அருணாவா 

அவரும் ஒரு நாவல் எழுதி இருந்தார், அதை அவர் இறந்த பின் அவரோட ஒரு பெட்டியில் கண்டுபிடித்தேன். அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஷிண்டுக்னு நாங்க சொல்வோம் அதை வைத்திருப்பார்கள். அது பூட்டுப் போட்டு பூட்டின ஒரு பெட்டி, அதில் மதிப்புமிக்க பொருட்களை பூட்டி வைத்திருப்போம். அதில் இந்த நாவல் தொடராக வந்த ஒரு பத்திரிகையின் பிரதிகளைப் பார்த்தேன். நான் இன்னும் அதைப் படிக்கல்லை. அந்தப் பிரதிகளெல்லாம் இன்னும் அங்கேயேதான் இருக்கிறதென்று நம்பிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அங்கே திரும்பப் போய் அதைப் படிக்க வேண்டும். 

நகுல் 

அப்ப இதெல்லாம் உங்களோட மரபணுவிலேயே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  இத்தனை நேரம் செலவழித்து, எங்களுடன் பேசினீர்கள், அதற்கு எங்கள் நன்றி அருணாவா. இது நிஜமாகவே மகிழ்ச்சி தந்த நிகழ்வு. 

அருணாவா 

இல்லையில்லை நான்தான் நன்றி சொல்லணும், இது மிக அருமையான ஓர் உரையாடலாக இருந்தது. 

(சொல்வனம் சார்பில் 2 ஃபிப்ரவரி 2021 அன்று நடந்த இந்த நேர்காணலை நிகழ்த்தியவர் நகுல் வசன்.)

One Reply to ““மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்””

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.