உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

‘தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே!” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள்,

‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’

என்றே எனக்குப் பாடம். எவ்விதம் பொருள் கொண்டிருந்தேன் எனில், ‘முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும் முசுண்டைக் கொடியும் பந்தல் போலப் பம்பி, பலர் படுத்து உறங்குவதற்கு நிழல் தருவதாக இருந்தது’ என்று.
பிற்பாடு நான் அறிந்து கொண்டது, sleep என்ற பொருளில் தமிழ் கையாண்ட சொற்கள், உறக்கம், துயில், துஞ்சுதல் என்பன. சங்க இலக்கிய காலத்தில், தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தானே ஆளப்பட்டிருக்கின்றன. இதில் எப்படி வீரை வெளியனார் ‘பலர் தூங்கு நிழல்’ என்றார் என்ற கேள்வியும் வந்தது.
சந்தேகம் என்று வந்து விட்டால் தெளிவு தேடித்தானே ஆக வேண்டும்! மறுபடியும் என்னிடம் இருந்த புற நானூற்றுப் பதிப்புகளில் தேடினேன். எனது புரிதல் கீழ்வருமாறு:

  1. பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளை- சங்க இலக்கியம் -மூலம் மட்டும். (பாட்டும் தொகையும் நூல்கள் பதினெட்டின் பாடல்கள் மட்டும்) இரண்டு தொகுதிகள். பாடம் ‘பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்! சைவ சித்தாந்த மகா சமாஜம். பதிப்பு
  2. சங்க இலக்கியம் – எட்டுத் தொகை- மணி வாசகர் நூலகம்- பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியன் உரை. 2010 பதிப்பு. பாடல் வரி, “பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்!
  3. புற நானூறு. S.ராஜம் பதிப்பு. 1958. மூலம் மட்டும். பாடம்: ‘பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’
  4. புற நானூறு- ஓர் எளிய அறிமுகம்- சுஜாதா. உயிர்மை பதிப்பக வெளியீடு. 2003. பாடம், ‘பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்!’ எளிய அறிமுகம் என்பதை சுஜாதா ஏழ்மையான அறிமுகம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தப் பதிப்பு உதாரணம்.
  5. புற நானூறு- மூலமும் உரையும்- டாக்டர். உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு. 1894. பாடம்: ‘பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’
  6. புற நானூறு- தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை விளக்க உரையுடன் பாடம், ‘பந்தர் வேண்டாப் பலா த் தூங்கு நீழல்!’.
  7. புற நானூறு- கோவிலூர் மடாலயம் பதிப்பு. 2003. புலவர். இரா. இளங்குமரன் உரை. பாடம்: ‘பந்தர் வேண்டாப் பலா த் தூங்கு நீழல்!’

தூக்கம், தூங்குதல் எனும் சொற்கள் உறக்கம் எனும் பொருளில் கையாளப்படாத காலத்தில், தொங்குதல் எனும் பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலையில், இறுதி இரண்டு பதிப்புகளின் பாடமே எனக்குப் பொருத்தமானதாகத் தோன்றியது.
திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக,

‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு’

என்று உறக்கம் என்ற சொல்லை ஆள்கிறார். இது நிலையாமை அதிகாரத்தில் குறள். பொருள் சொல்ல அவசியமற்றதும் கூட.
ஈண்டு பெயர் குறிப்பிட நான் பிரியப்படாத, சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,

‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’

என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். தமிழில் திருக்குறளுக்கு முன்னூற்றுச் சொச்சம் உரைகள் உண்டு. என்னிடம் இருக்கும் முப்பது உரைகளையும் நான் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வருகிறேன்.
நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது. ‘தூங்காதே தம்பி, தூங்காதே!’ என்றும், ‘தூங்காத கண்ணொன்று உண்டு’ என்றும் சினிமாப்பாடல் வரிகள் உண்டு. ஆனால், கர்ணன் படப் பாடல்வரி, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ என்று நீள்கிறது. உறக்கம், துயில், துஞ்சுதல் எனும் சொற்களின் வரிசை பிழைத்து எங்ஙனம் தூக்கம் வந்து சேர்ந்தது என்று எம்மால் சொல்ல இயலவில்லை. மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லப் பாய் பட்டேல், ஆச்சாரிய கிருபலானி, சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார், கர்மவீரர் காமராஜர், வ.உ. சிதம்பரம்- பிள்ளை, கக்கன், டாக்டர். அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, பூபேஷ் குப்தா, எஸ்.ஏ. டாங்கே, ப. ஜீவானந்தம், ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடு, ஏ.கே. கோபாலன், பி. ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண், அசோக் மேத்தா, சோம் நாத் சாட்டர்ஜி ஆகியோரை அரசியல் கனவான்கள் என்று சொன்ன வாயால்தானே, தெருப்புழுதி, டீசல் புகை, சாய்க்கடைத் தண்ணீர், வறண்ட மலம் போன்றவரையும் அரசியல் தலைவர்கள் என்கிறோம்?
உறக்கம் என்ற சொல்லுக்கு நித்திரை, துயிலுதல், துஞ்சுதல், ஒடுங்குதல், தங்குதல் என்னும் பொருள்கள் உண்டு. அவற்றுள் sleep என்பதுவே பிரதானப் பொருள். பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் உறக்கம் எனும் சொல்லைத் துயில் எனும் பொருளில் கையாண்டுள்ளன. திருப்பாவையில், ஆண்டாள், ‘கனைத்திளங் கற்றெருமைக் கன்றுக்கிரங்கி!’ என்று தொடங்கும் பாடலில் ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?’ என்கிறாள்.
சீவக சிந்தாமணி, பதின்மூன்றாவது இலம்பகமாகிய முத்தி இலம்பகத்தில், உறக்கு எனும் சொல்லை, உறக்கம் எனும் சொல்லுக்கு மாற்றாக, துயில் எனும் பொருளில் ஆள்கிறது. சொல்வனத்துள் எமது வழிகாட்டி கம்பன், பால காண்டத்தில், நாட்டுப் படலம் பாடும்போது, ஒரே பாடலில் எட்டு இடங்களில் உறங்கும் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறான். பாடலின் நயம் கருதி, முழுப்பாடலும் கீழே:

நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை’

என்பது பாடல். சங்கம்- சங்கு, மேதி – எருமை, தார் – மாலை, செய்யாள் – திருமகள், தூர்- சேறு (கிணறு தூர் வார வேண்டும்!), துறை- படித்துறை, இப்பி- முத்துச் சிப்பி, போர்- நெற்போர், வைக்கோல் போர், பொழில் – சோலை, தோகை- தோகை மயில்.
இனிப் பொருள் சொல்ல என்ன உண்டு?
யுத்த காண்டத்தில், கும்ப கர்ணன் வதைப் படலத்தில் எழுசீர் சந்த விருத்தம் பாடுகிறான் கம்பன். அவற்றுள் ஒன்று உறங்குகின்ற கும்பகர்ணனை, இராவணன் ஆணைப்படி எழுப்பும் பாடல்:

‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற தின்று காண், எழுந்திராய், எழுந்திராய்!
கறங்கு போன்ற விற்பிடித்த கால தேவர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!’

என்பது பாடல். கறங்கு என்ற சொல்லுக்கு கறங்குகின்ற, சக்கரம் போன்ற, காற்றாடி போன்ற என்று பொருள் தெரிந்தால் போதுமானது. முழுப்பாடலும் விளங்கும். இந்தப் பாடலிலும் நான்கு முறை உறங்கு என்கிறான்.
சில பாடல்கள் கடந்தால், ‘உறக்கம் அவ்வழி நீங்கி!’ என்கிறான் கும்பனைக் கம்பன். வேறொரு சந்தர்ப்பத்தில், ‘உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்’ என்பான். இராவணன் வதைப்படலத்தில், இராவணன் மயக்கம் தெளிந்ததை, ‘உறக்கம் நீங்கி உணர்ச்சி உற்றான்’ என்பான்.
ஆனால் தூங்காமை, தூங்குக, தூங்கும் எனும் சொற்கள் பயன்படுத்தப் பெற்ற மூன்று திருக்குறள் உண்டு. இறைமாட்சி அதிகாரத்துக் குறள் ஒன்று.

‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’

என்றும், காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு இம்மூன்றும் மாநிலத்தை ஆள்பவரிடம் நீங்காது காக்கப்பட வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இன்றோ பொருள் அபகரிப்பதில் காலம் தாழ்த்தாமை, ஏமாற்று, வஞ்சனை, பொய் எனும் கல்வி, கொலை-கொள்ளை- வழிப்பறி செய்வதற்கான துணிவு இம்மூன்றுமே மாநிலங்களை ஆள்வதற்கான தகுதிகள் எனக் கொள்ளப்படுகின்றன.
அடுத்த குறள் வினை செய்வகை அதிகாரத்துக் குறள்.

‘தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை’

என்பது. காலந் தாழ்த்திச் செய்யத் தக்க வேலைகளை மெதுவாகச் செய்க. உடனே செய்ய வேண்டியவற்றைக் காலந் தாழ்த்தாமல் செய்க என்று பொருள் கொள்ளலாம்.
மூன்றாவது குறள் படர் மெலிந்து இரங்கல் அதிகாரத்தில் உள்ளது. குறள் பேசுகிறது:

‘காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து.’

என்று. தலைவி சொல்கிறாள். என் உயிரையே காவடியின் தண்டாகக் கொண்டு காமம் ஒரு புறம் தொங்குகிறது. நாணம் மறுபுறம் தொங்குகிறது. சுமையாக இழுக்குறது அம்ம! தாங்காது என் உடம்பு என்று.
அகநானூற்றில் மதுரை மருதன் இள நாகனார் பாடல்.

‘பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க’

என்று கடக்கிறது. பலாக்காயின் வெளிப் பகுதி போன்ற தோற்றமுடைய பசிய காய்களை உடைய பாகல் கூதாளம் எனும் செடியின் முதிர்ந்த இலைகளின் ஊடே கொடி கொடிகளாக நிரல்படத் தொங்கும் என்பது பொருள்.
பாட்டிலும் தொகையிலும், இது ஒரு மாதிரிக்கான மேற்கோள். நானறிந்த வரை, சங்க இலக்கியப் பரப்பில் தூங்குதல், தூக்கம் முதலான சொற்கள் உறக்கம் என்ற பொருளில் ஆளப்படவில்லை.
இப்போது நாம் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன விடயத்துக்கு வருவோம். பலர் படுத்து உறங்கும் நிழல் என்ற பொருளில் ‘பலர் தூங்கு நீழல்’ என்று கொள்வதற்குப் பதிலாக, பலாக்காய்கள் காய்த்துத் தொங்கும் நிழல் என்ற பொருளில் ‘பலாத் தூங்கு நீழல்’ என்று எடுத்துக் கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தூக்கம், தூங்குதல், என்றால் அது உறக்கத்தைக் குறிப்பது அன்று என்றாகிறது. நான் சொல்வதில் பிழை இருந்தால் என்னைத் திருத்துங்கள்.
உறக்கத்தைக் குறிக்க நித்திரை என்றொரு சொல் உண்டு நம்மிடம். பேராசிரியர் அருளி அவர்களின் அயற்சொல் அகராதியில் நித்திரை என்பது சம்ஸ்கிருதச் சொல், பொருள் உறக்கம். எனக்குத் தெரிந்து பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் நித்திரை எனும் சொல்லைப் பயன்படுத்த இல்லை.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி, ‘உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை’ என்று பேசுகிறது. உறங்குவதைப் போன்று யோகத்தில் இருக்கும் பெருமான் என்று பொருள். உறகல் எனும் சொல் ஒன்றினை, உறங்கல், உறங்க வேண்டாம் என்ற பொருளில் திவ்யப் பிரபந்தம் ஆள்கிறது.
துஞ்சுதல் எனும் சொல்லோ, உறங்குதல் என்ற பொருளிலும், மங்கல வழக்காக, இறத்தல் என்ற பொருளிலும் கையாளப்பட்டிருக்கிறது. நம்மாழ்வாரின் திருவிருத்தம்,

‘துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான்’

என்று பேசும்போது, துஞ்சா முனிவர் எனில் கண் துஞ்சாத முனிவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நாலடியார், துஞ்சினார் என்று இறந்தவரைக் குறிக்கிறது.

‘நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப் பட்டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்து இல்’

என்பது பாடல் வரிகள். இறந்து போனார் என்று எடுத்து மண்மேல் வீசப்பட்டார் உண்டே அன்றி, எஞ்சியவர் இவ்வுலகத்தில் எவரும் இல்லை என்பது பொருள். இதைத்தான் திருவள்ளுவர்,

‘நெடுநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு’

என்பார். அண்மையில் நடிகை ஸ்ரீதேவி செத்துப் போனபோது, ‘ஸ்ரீதேவி இல்லை என்ற இவ்வுலகு” என்று தீவிர இலக்கிய மாத இதழ் ஒன்று அட்டைப் படம் போட்டது.
பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களுள் பாடியவரும், பாடப் பெற்றோரும் என சில கதாபாத்திரங்கள் உண்டு. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பனார் புலவர்.  ஈண்டு, துஞ்சிய எனில் மாண்ட என்று பொருள் வரும்.
வள்ளுவமும் உறக்கத்துக்குத் துஞ்சுதல் என்ற மாற்றுச் சொல் பயன் படுத்துகிறது. நல்குரவு அதிகாரத்துக் குறள் கூறுவது:

‘நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது’

என்று. எரித்துப் பொசுக்கும் நெருப்பின் உள்ளே கூட நிம்மதியாக உறங்கி விடலாம். ஆனால் வறுமையில் பசியுடன் உறங்குவது சாத்தியமில்லை.
தமிழில் தகுதி வழக்கு, இயல்பு வழக்கு என இரண்டு. செத்தாரைத் துஞ்சினார் என்றலும் சுடுகாட்டை நற்காடு என்றலும் கெட்டதனைப் பெருகிற்று என்பதுவும் தகுதி வழக்குகள்.
மேலும் துஞ்சுதல் எனும் சொல்லுக்கு, உறங்குதல், தொழில் இன்றி இருத்தல், சோம்பி இருத்தல், சோர்தல், இறத்தல், வலி அழிதல், குறைதல், தங்குதல், நிலை பெறுதல், தொங்குதல் எனப் பொருள்கள் உண்டு.
அக நானூற்றில் கபிலர் பாடல், ‘நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச’ என்று பாடுகிறார். நாஞ்சில் நாடன் இறந்து போனதால் நாடு பஞ்சம் ஏற்பட்டுப் பரிதவித்தது என்று அல்ல பொருள். நாஞ்சில் எனில் இங்கு கலப்பை என்று பொருள். மழை பெய்யாது நாடு வறுமைப் பட்டுப் போக உழுபடைக் கருவிகள் யாவும் உறங்கிக் கிடந்தன என்பது பொருள்.
நற்றிணையில், கோண்மா நெடுங்கோட்டனார் எனும் புலவர், ‘புனிறு நாறு செவிலியொரு புதல்வன் துஞ்ச’ என்கிறார். புனிறு என்றால் அண்மையில் ஈன்ற என்று பொருள். அண்மையில் ஈன்ற பசுவைக் குறிக்க மாணிக்க வாசகர், புனிற்றா என்றார். புனிற்+ஆ= புனிற்றா. பிறந்து சில நாட்களே ஆன குழந்தையிடம் ஒரு வாசனை உண்டு. அதனைப் புனிறு நாறு என்கிறார் புலவர். ‘அண்மையில் பிறந்த எனது புதல்வன், புதிய பிறப்பின் மணத்துடன் செவிலித் தாயோடு உறங்குகிறான்’ என்பது பாடல் வரியின் பொருள்.
புற நானூற்றில் கோவூர் கிழார் எனும் புகழ்பெற்ற புலவர், சோழன் நலங்கிள்ளியைப் பாடும் போது, ‘கங்குலான பலர் துஞ்சவும், தான் துஞ்சான்’ என்கிறார். வைகறையில் பலர் உறங்கவும் அவன் மட்டும் உறங்காதிருந்தான் என்பது பொருள்.
குறுந்தொகையில் பதுமனார் பாடல்:

‘நள்ளென்று அன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!’

என்பது. யாமம் நள்ளென்று ஒலிக்கிறது. தமது பேச்சுக்களை நிறுத்திக் கொண்டு இனிது ஓய்வு கொள்கிறார்கள் மக்கள். சமனப்பட்ட மன நிலையில் கோப தாபங்கள், விருப்பு வெறுப்புகள், அயர்ச்சி, துன்பம் நீங்கி, இடம் அகன்ற உலகமும் உறங்கும். நான் ஒருத்தி மட்டும் உறங்காமல் தனித்து விழித்திருக்கிறேன் என்பது பாடலின் பொருள்.
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் இங்ஙனம் அநேக இடங்களில் துஞ்ச, துஞ்சல், துஞ்சலம், துஞ்சலை, துஞ்சா, துஞ்சாது, துஞ்சாதேன், துஞ்சும், துஞ்சாய், துஞ்சார், துஞ்சாள், துஞ்சான், துஞ்சி, துஞ்சின், துஞ்சினள், துஞ்சினும், துஞ்சுக, துஞ்சுதி, துஞ்சுநர், துஞ்சுவது, துஞ்சுவோன், துஞ்சேன் என சொற்களை அடுக்குகின்றன.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய பாடல், புற நானூற்றில் பலருக்கும் பலமுறை நாமே சொன்ன பாடல். பொருள் விவரிக்க வேண்டியதும் இல்லை. பாடல் எண் 189:

’தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சுன்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’

பாடலின் சிறப்புக் கருதி, பொருள் சொல்லல் தகும் என்று தோன்றுகிறது.
தெளிந்த நீரைக் கொண்ட கடல் பொதுவானது யாவர்க்கும் என்று எண்ணாமல், தனக்கே உரியது என்று ஆட்சி செய்வார் ஒருவர். நடுச்சாமத்திலும் உறங்காமல் காத்திருந்து, விலங்குகளை வேட்டையாடுவான் கல்லாத ஒருவன். இருவருக்குமே உண்பது நாழி அரிசிச் சோறு. உடுப்பது ஒரு வேட்டியும் ஒரு துண்டும் மாத்திரமே! பிற எல்லாமுமே சமமானவை தான். எனவே செல்வத்தின் பயன் என்பது ஈகை. நாமே எல்லாமும் துய்ப்போம் என்று நினைத்தால் பலவும் தப்பிப் போகும். யாமத்தும் பகலும் துஞ்சான், கடு மா பார்க்கும் கல்லா ஒருவன் என்பது, துஞ்சுதல் எனும் சொல்லுக்காக மேற்கோள்.
துயில் எனும் சொல்லும் உறக்கம் குறித்ததே ஆகும். துயிலுக்குத் தரப்படும் பிற பொருள்கள் – தங்குதல், இறத்தல், அஸ்தமித்தல், கனா, சாவு, புணர்ச்சி, ஆடை எனப்படுபவை. துகில் எனும் சொல்லே, துயில் ஆகி ஆடை எனப் பொருள் தருகிறது.
படர் மெலிந்து இரங்கல் அதிகாரத்துத் திருக்குறள் சொல்வது:

‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து, இரா
என்னல்லது இல்லை துணை’

என்று. இப்பேருலகின் உயிர்களை எல்லாம் உறங்க வைத்து, தான் மட்டும் தனித்து விழித்திருக்கின்றது, நீண்ட இந்த இரவு. அதற்கு நானன்றி வேறு துணை இல்லை. இது பொருள். முன்பு நாம் கண்ட குறுந்தொகைப் பாடல், பதுமனார் பாடியது,’ நள்ளன்றன்றே யாமம்’ பாடலை நினைவு படுத்துவது.
துயில், துயிலலள், துயிலா, துயிலீயாது, துயிற்ற, துயிற்றி, துயிற்றுக, துயிற்றும், துயின்ற, துயின்று முதலாய சொற்களை ஆண்டுள்ளது பாட்டும் தொகையும்.
‘மடியின்மை’ அதிகாரத்துக் குறள் பேசும் நெறி:

‘நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடு நீசார் காமக் கலன்’

காலந்தாழ்த்துதல், மறதி, சோம்பல், பாழ் உறக்கம் எனும் நான்கும் கெட்டழிந்து போகிறவர் விரும்பும் அணிகலன்கள் என்பது பொருள். இந்தக் குறளில் வரும் காமம் எனும் சொல்லுக்கு விருப்பம் என்பதே பொருள். காமக் கலன் எனும் சொற்பிரயோகம் பார்த்து நாம் இன்பத்துப் பாலினுள் வழி தவறிப் போய்விடல் ஆகா!
சரி! எவரின் ஆசையையும் கெடுத்தல் வேண்டா! இன்பத்துப் பாலில் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்துக் குறள் துயில் பேசுகிறது.

‘தான் வீழ்வார் மென்தோள் துயில் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு’

என்று. காதல் நாயகியின் மெல்லிய, வாசனை உடைய, தோளில் படிந்து துயில் கொள்வதை விடவும் இனிமையானதா,மேன்மையானதா, விரும்பத்தகுந்ததா, தாமரைக் கண்ணனாகிய திருமாலின் வைகுந்தம்? அஃதாவது சிற்றின்பத்தை விடச் சிறப்பா பேரின்பம்? இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது, திருக்குறள் தாமரைக் கண்ணான் உலகு பற்றியும் பேசுகிறது என்பது.
மதுரைக் காஞ்சி, வரைவின் மகளிர் செயல்பாட்டைப் பேசும்போது

‘நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல’

என்றொரு அருமையான உவமை பாடுகிறது. இந்தப் பாடலில் துயில் எனும் சொல்லுக்கு கலவி, கூடல், முயக்கம், புணர்ச்சி, உவத்தல் என்று பொருள் எழுதுகிறார்கள். இறுதியில் குறிப்பிட்ட ”உவத்தல்’ எனும் சொல் திரிந்து, மருவி, மக்கள் நாவில் இன்று கெட்ட வார்த்தையாகப் பாவிக்கப்பட்டுப் புழங்குகிறது என்பார் பேராசிரியர் அருளி. குறளின் பொருள் – தம்மைக் கூடி முயங்குபவரின் நெஞ்சம் வருந்தும்படியாக, கலவி துறந்து, பழுத்த மரம் தேடிச் செல்லும் பறவை போலச் செல்வார்கள் பொருட் பெண்டிர் – என்பது.
புறநானூற்றில், மலையமான் திருமுடிக்காரியைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையார், ‘கங்குல் துயில் மடிந்தன்ன தூங்கு இருள்’ என்கிறார். இராப்பொழுது ஓரிடத்தில் உறங்குவதைப் போன்று இருள் தொங்கும் (காடு) என்பது பொருள். இங்கு துயில் எனில் உறக்கம், தூங்கு எனில் தொங்குதல்.
சிறுபாணாற்றுப்படை பாடும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்,

‘ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்’

என்று பாடுகிறார். ‘ஓங்கு நிலை ஒட்டகம்’ என்று தலைப்பிடப்பட்ட எனது கட்டுரை ஒன்றில் விரிவாக ஒட்டகம் பற்றிப் பேசியுள்ளேன். இந்த பாடல் வரிகளின் பொருள் – திரண்டு மறியும் கடலலைகள் கொணர்ந்து சேர்த்த அகில் மர விறகின் குவியல் ஆனது, ஓங்கி நிற்கும் ஒட்டகம் உறங்கிக் கிடந்ததை ஒத்திருந்தது – என்பது.
நற்றிணையில், மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரிச் சாத்தனார் பாடல் வரிகள்,

‘ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே!’

என்கிறது. ஊரில் எல்லா ஓசையும் அடங்கியது. யாமம் நள்ளென ஒலித்தது ஆரவாரம் மிகுந்த பாக்கம் உறக்கம் கொண்டது என்று பொருள்.
ஐங்குறுநூறு நூலில் ஓரம்போகியார் பாடல். ‘ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது’ என்ற சினிமாப் பாடல் இவர் எழுதியது அல்ல. நான்கு வரிப் பாடல் –

‘பரியுடை நல்மான் பொங்கு உளை அன்ன,
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்,
தண்துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியாரே’

என்பது. விரைந்து செல்லும் தலைவனின் குதிரையின் பிடரி மயிர், சமரம் போல வீசுகிறது. கரைகளில் அடைந்து கிடக்கும் வேழக்கொடி, வெண்பூக்களுடன் பொலிகின்றன. தண்மையான ஊரைச் சார்ந்த தலைவனின் பெண்டிர், ஊர் துஞ்சும் யாமத்திலும் துயில் அறிய மாட்டார்கள். இது பாடலின் பொருள். துஞ்சுதல், துயிலுதல் என இரு சொற்களும் உறக்கம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளன.
நித்திரை என்றாலும் உறக்கமே என்று சொன்னோம். ‘பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்’ என்பது நாஞ்சில் நாட்டுப் பழமொழி. உறக்கத்தை சிறப்பு மாநில அந்தஸ்து கொடுத்து நித்திரா தேவி என்றார்கள். மூதேவியையும் தான் நித்திராதேவி என்றனர். மாணிக்க வாசகர், ‘போற்றித் திரு அகவல்’ பாடும் போது, நித்திரை பற்றிப் பாடுகிறார்.
சமகாலத்தில், அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, உறக்கம், துயில், துஞ்சுதல், நித்திரை ஆகிய சொற்களைத் தூக்கம் எனும் சொல் இடம் பெயர்த்து விட்டது போலும். பிராந்திய மொழிகளின் செல்வாக்கை இந்தி ஆக்கிரமித்துக்கொண்டு, அவற்றை இரண்டாம் மூன்றாம் இடத்துக்கு நெருக்கித் தள்ளுவதைப் போன்று. தூக்கம் பற்றி அறிந்தவர் எழுதலாம். எம் கூற்றில் தவறு இருந்தால் திருத்தலாம். ‘பெண் என்றால் தூக்கம் படியாது’ என்று இராமலிங்க வள்ளல் உறக்கம் என்ற பொருளில் ஆண்டிப்பருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.
இன்று உறக்கம் எனும் பொருளில் கையாளப்படும் தூக்கம் எனும் சொல்லுக்கு, அயர்வு, சோம்பல், வாட்டம், முகச்சோர்வு, விலை போகாமல் தங்கி நிற்றல், தணிவு, தாமதம், ஆவரணத் தொங்கல், காதணி, தூக்கணாங் குருவி, மலையாளத்தில் நடக்கும் காளிகோவில் உற்சவம், எடை, விலையேற்றம் எனும் அர்த்தங்களையும் அகராதிகள் தருகின்றன.
எதுவாயினும் பிறப்பு, வளர்ப்பு, பயிற்சி காரணமாக, என் மனம் உறக்கம் பற்றி நிற்கிறது. புற நானூறு ‘மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்’ என்றே பேசியது. வலிமையான யானை, துதிக்கையை நிலத்தில் போட்டுக் கிடந்தது என்னும் பொருளில்.
மேலும் புறத்திணை நன்னாகனார், ‘வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை’ என்பார். வஞ்சி மரத்தின் கிளையில் உறங்கும் நாரை என்பது பொருள்.
ஐங்குறு நூறு நூலில் நெய்தல் திணை பாடிய அம்மூவனார்,

‘எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு,
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே’

என்று பாடுவதன் பொருள் – மணல் மேட்டில், புலி நகக் கொன்றைப் பூங்கொத்துக்கள் கொண்ட சோலையில், குருகு தனித்து உறங்கும், கடற்கரை நாட்டுத் தலைவனுக்காக இதுவரை அழகு குன்றாது இருந்த என் மேனி, இப்போது பசலை பாய்ந்துள்ளது – என்பது.
குறுந்தொகையில், ‘அது கொல், தோழி! காம நோயே!’ எனத் தொடங்கும் பாடலில், நரி வெரூடத் தலையார் என்ற புலவர், ‘வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை’ என்கிறார். இனிய நிழலைத் தருகின்ற புன்னை மரத்தில் வதியும் நாகை உறங்கும் என்பது பொருள்.
‘உறங்கா வில்லி’ என்று கம்பன் இலக்குவனைக் குறிப்பான். கையில் எப்போதும் வில்லேந்தி அண்ணல் இராமனுக்கும் கற்பின் கனலிக்கும் காவல் நின்றவன் என்னும் பொருளில்.
நாயுறங்கும் நரி உறங்கும் பேயுறங்கும் காரு என்பார்கள் அடர்ந்த வனங்களை.
உறக்கம், துயில், துஞ்சுதல் என்று இத்தனை விரிவாக எழுதக் காரணம், தூக்கத்தின் மேலுள்ள முன்பகை இல்லை. எதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே வாழ்ந்து வரும் சொல்லைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக!
நாஞ்சில் நாடன்/ ஏப்ரல் ’2018
***
 

2 Replies to “உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!”

  1. அருமையான விளக்கம்.
    எந்த மொழியிலும் சொற்கள் பயன்பாட்டில் இல்லாமற்போனால் வழக்கொழிந்துவிடும்.
    தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.