தேள்

1

ஒரு ஊரில் வாழும் அனைவரும், அவரவர்களின் அறைகளில் வீடுகளில் அலுவலகங்களில், ஒரு நாள், எங்குப் பார்த்தாலும் தேள்களாக இருப்பதைக் காணத்தொடங்குகிறார்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்?
பழுப்பும் சிவப்பும் கருப்புமாக நிறம் நிறமாக எங்கும் தேள்கள். குட்டிகளைச் சுமந்தபடி சில. ஒன்று மற்றொன்றை உண்டபடி சில. கொடுக்கைத் தூக்கியபடி ஆறு கால்களில் குருக் குருக்கென்று வினோத அசைவுகளுடன் மெல்ல அடியெடுத்து நடந்தபடி சில. தாட்டானாகத் தனித்திருந்து விஷம்வளர்க்கும் கருந்தேள்கள் சில. சர்க்கரை டப்பாவைத் திறந்தால் தேள். கதவிடுக்கில் தேள். அலமாரிகளில் புத்தகங்களின் முதுகுத்தண்டுகளில் பலவிதத்தேள்கள் ஏறி இறங்குகின்றன. தரையில் அவை நடமாடுகின்றன. கழிப்பறைகளில் இருக்கைக்கடியில் குழுமுகின்றன. கோப்புகளைத் திறந்தால் கருந்தேள் ஒன்று சாவகாசமாக, உடல் அதிர, கொடுக்கு லாவகமாக அசைய, வெளிவந்து உடல் மீது ஊருகின்றது. படுக்கைகளில் தேள்கள் ஏறுகின்றன என்று கட்டிலின் நான்கு கால்களையும் நீர் நிரப்பிய ஜாடிகளில் முக்கி வைத்தனர் மக்கள். அதையும் மீறி தேள்கள் ஏறி வந்து இரவெல்லாம் அவர்களின் உடல்கள் மீது சல்லாபம் செய்தன. பகல் விடிந்ததும், அதன் மயிலிறகுக்கால்களும், குளிர்ந்த கொடுக்குமுனை வாலும் உடலைத் தொட்டுச் சிலிர்த்திட வைக்க, அவை இரங்கிச்சென்றன.
தேளோடு கூடி பயமும் அவ்வூரில் குடிகொண்டது. இரவெல்லாம், பகலெல்லாம், தேள்பயத்தால் விரைத்து நடுங்கியிருக்கும் மக்கள் அனைவரும், தங்கள் கனத்த கருங்கற்ச்சிலுவைகளை கையில் இறுக்கிக்கொண்டு, மனோதிடம், தைரியம், மனோதிடம், தைரியம் என்று ஜெபமாகப் பிதற்றியபடி இருந்தார்கள்.
மருத்துவமனைகளில் முதலில் பத்து, இருபது என்று வரத்தொடங்கினார்கள். பிறகு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்தபடி இருந்தார்கள். வலியில் முனகிக்கொண்டு, பயத்தில் கதறிக்கொண்டு, சிலுவையைப் பிடித்தபடி உளறிக்கொண்டு. உங்கள் உடலில் எங்குமே விஷக்கடி இல்லையே,” என்று மருத்துவரும் செவிலியரும் எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுத்தார்கள். சிலர் குரலெழுப்பிக் கதறி அழுவதைக்கண்டதும் விஷமுறி மருந்தும் கொடுத்துப்பார்த்தார்கள். அழுகை சில நிமிடங்களுக்கு நிற்கும். மூச்சு இறைத்தபடி, “நன்றி! நன்றி! சிலுவை வாழ்க! சிலுவைக்கொடையின் அடியில் அமைந்த நம் அரசு வாழ்க! சிலுவையடி உங்களைக் காக்கும்! உங்களைக் காக்கும்!என்று கரகரவென்று முனகுவார்கள். ஆனால் அந்த நிம்மதி சில நொடிகளுக்குத்தான். உட்கார்ந்த இடத்திலிருந்து குதித்தெழுந்து, “அய்யோ இங்கும் தேள்கள் இருக்கின்றனவே! வீட்டிலும் தேள்கள்! இங்கும் தேள்கள்! எங்கும் தேள்! இவை என்னை நிம்மதியாகவே இருக்கவே விடாதா?” என்று ஓலமிடத் தொடங்கி அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.
ஒரு நாள் அந்தக்கூட்டத்தில் மருத்துவர்களும் சேரத் தொடங்கினார்கள். ஒரு மருத்துவர் தன் கழுத்தில் இருந்த இதயத்துடிப்புப் பரிசோதனைக் கருவி, பெரும் கருந்தேள் ஒன்றின் கொழுத்த கொடுக்காக மாறிவிட்டிருந்ததையும், சட்டென்று எட்டி நோக்குகையில் அதன் கூரிய நுனி மேலே வளைந்து முகத்துக்கு நேராக இடமும் வலமுமாக ஆடிக்கொண்டிருப்பதையும் கண்டாள். காதுகளில் தேளின் இடுக்கிக் கைகளைப்போல் கொடுக்-கொடுக் என்ற மெல்லிய ஓசை. வென்று அலறிக்கொண்டு அவள் ஓடியது துரதிருஷ்டவசமாக வாய்பிளந்து திறந்திருந்த ஜன்னலை நோக்கி. எட்டாவது மாடியிலிருந்து விழுந்ததால் அவள் பிழைக்கவில்லை.
மருத்துவமனையில் தேள் ஊரத்தொடங்கியதும் மருத்துவர்களுக்கே தேள் பயம் வரத்தொடங்கியது. அவர்களும் வீட்டிலேயே இருந்தபடி, கறுப்பாக எதையாவது கண்டால் பயத்தில் உடல் அதிர்ந்து நடுங்கி, மனோதிடம், தைரியம் என்று ஜெபித்தபடி தேள் வரக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் ஓரிரு நாட்களில் காணாமல் போனார்கள்.
ஊரை ஓலங்கள் நிறைத்தன.
ஊர் நடுவில் ஓடிய நதியில் மண்டிக் கிடந்தன மனித உடல்கள்.
 

2

 

பெரும் சிலுவை வடிவில் அமைக்கப்பட்ட அவ்வூரின் அரசக்கட்டிடத்தில், சிலுவையின் இரு கட்டைகளும் இணைந்த புள்ளியில் இருந்த அரசரின் குடியிருப்புக்கு அடுத்தபடியாக இருந்தது அவ்வரசின் போர் தளபதியும் பாதுகாப்பு ஆலோசகருமான லிலிடாவின் அலுவலகம்.
ஒரு வாரமாக, அவளும் மற்ற ஆலோசகர்களும் இவ்வினோத தேள் பிரமை மக்கள் மத்தியில் பரவி வந்ததை என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களைத்தாண்டி அரசதிகாரிகளும் இதற்குப் பலியாகத் தொடங்கிவிட்டிருந்தார்கள் சமீபத்தில் இரண்டு நீதிபதிகள். அந்த ஊரின் தலையாய மருத்துவர்களுக்கோ, அறிவியல் அறிஞர்களுக்கோ இந்த நோய் புலப்படவில்லை. அவர்களில் சிலரும் கடந்த ஒரு வாரத்தில் நோய்வாய்ப்பட்டு பிதற்றி அலையத்தொடங்கியிருந்தனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றோ, லிலிடா அவளுடைய அலுவலகத்தில் இல்லை. யாருக்கும் தெரியாமல், வாடகை வண்டி ஒன்றைத் தானே ஓட்டியபடி, ஊருக்கு புறநகரில் வாழ்ந்த அவளுடைய இணைச்சகோதரன் லூசிஃபைக் காணச் சென்றிருந்தாள்.
துவைத்துப் பலநாள் ஆன கருப்புச்சட்டையும், பழுப்பு நிறத்தில் கொசகொச குதிரைவால் தலை முடியும், எலும்புக்கூடு போன்ற உடலுமாக லூசிஃப் தன் வெண்பளிங்கு ஆய்வுக்கூடத்தில் ஒரு மூலையில் எதையோ புகைத்துக்கொண்டிருந்தான். லிலிடாவை கண்டதில் அவனுக்கு வியப்பு இல்லை என்பது போல் அவள் வருகையை ஏறிட்டுப்பார்த்தான்.
செய்திகளைப் பார்த்தாயா?” என்று வினவியபடியே நுழைந்தாள் லிலிடா.
பார்த்தேன்.
உன்னுடையது எல்லாம்…”
என்னுடையது எல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கின்றன.
நிச்சயமாக?”
லூசிஃப் முகமுயர்த்தி அவளை நோக்கிப் புன்னகைத்தான். வயதான புலியின் மஞ்சள் பற்கள் அவனுக்கு.
இங்குத் தேள் பயம் இல்லையா யாருக்கும்?”
நாங்கள் உன்னைப்போல் நகரவாசிகள் இல்லையே? இங்கே எல்லாமே மெதுவாகத்தான் வரும்.
லிலிடா ஓர் இருக்கையில் அமர்ந்து தலையைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டாள். அங்கு ரணகளமாக உள்ளது.
நீ முன்னிருந்து நடத்திய போர்களை விடவா?”
லிலிடா நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினாள். போர் என்ன பெரிய போர். அது எளியது. இந்த விவகாரம் எவ்வளவு பீதியை உண்டாக்கிவிட்டது தெரியுமா? அரசரின் அறைக்கு எவ்வளவு பாதுகாப்புகள் போட வேண்டியிருக்கிறது தெரியுமா? அரசர் அவர் அறையை விட்டு ஒரு வாரமாக வெளிவரவில்லை. தேள்களுக்காகத் துழாவி தேடிப்பார்த்துவிட்டோம். ஒரு குண்டூசி கூட உள்ளே நுழைய முடியாது இப்போது…”
இருந்தாலும் நீ இங்கு இருக்கிறாய்.
ஆம். இன்று காலை, என் அறையில் ஒரு கருந்தேளைக் கண்டேன்.
லூசிஃப் புருவங்களை உயர்த்தினான்.
எனக்குத் தெரியும், அது பிரமை தான் என்று. இருந்தாலும் உடம்பெல்லாம் அவ்வளவு பீதி. தேள் உருவத்தைக்கண்டு பீதியா, இல்லை இந்த வியாதி எனக்கும் வந்துவிட்டது என்ற பீதியா, இல்லை இந்த வியாதியின் அம்சமே இந்த விசேஷ பீதியா என்று தெரியவில்லை. அதைப் பார்க்கவே சகிக்கவில்லை. அருவருப்பாக, அசிங்கமாக, உடம்பில் வரக்கூடாத இடத்தில் வந்த கட்டி போல…”
உனக்குச் சிறு வயது முதல் தேள் என்றால் பயம் தானே?”
லிலிடா முறைத்தாள். எனக்குச் சிறு வயது முதல் எதைக்கண்டும் பயம் இல்லை, லூசிஃப். அது உனக்கும் தெரியும். பயம் இருந்தாலும் மனோதிடமும் தைரியமும் கொண்டு என் பயத்தை நானே களைந்தே ஆக வேண்டும். இந்த அரசின் போர் தளபதி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் நான். பாதுகாப்பு ஆலோசகர்களுக்குப் பயம் இருந்தால் அவர்கள் பாதுகாப்பு ஆலோசகர்களாக இருக்க முடியாது.
ஆம், உனக்கும் இந்த வியாதி வந்து விட்டதை உன்னுடைய அரசு தெரிந்துகொண்டால் நீதிபதிகள் இருவருக்கு நடந்தது போல் உன்னையும் ஏதாவது சிறையில் அடைத்துப்  பூட்டி சாவியை நதிக்குள் வீசி எறிந்துவிடுவார்கள்.
பேசாமல் இரு!லிலிடாவின் கண்களில் அனல்பொறிகள். வாய்க்கு வந்தபடி பேசாதே. நம்மை வளர்த்தெடுத்து சோறு போட்டது இந்த அரசு தான், மறந்துவிட்டாயா? உனக்கு அரசு ஒத்துவரவில்லை என்பது தெரிந்த செய்தி தானே. என் தம்பி என்பதால் என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உனக்கு இங்கு ஒரு ஆய்வுக்கூடம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன். இல்லையென்றால்…”
இல்லையென்றால் என்னையும் அரச துரோகி என்று என்றோ கதை முடித்திருப்பீர்கள், அதானே?” கசப்புடன் சிரித்தான் லூசிஃப்.
இங்கு மட்டும் என்ன ஆராய்ச்சி செய்ய முடிகிறது? உடலில் ஒரு கீறலும் விழாமல் உச்சபட்ச வலியைத் தூண்டுவது எப்படி. விஷங்களைச் செலுத்தி மனிதர்களைப் புழுக்களைப் போலத் துடிக்கச்செய்வது எப்படி. மன அழுத்தம் உண்டாக்கி மனங்களைப் பிறழ்வு கொள்ளச்செய்வது எப்படி. இதைக் கண்டுபிடிக்கத்தானே நான்? என் கண்டுபிடிப்புகளை உங்கள் போர்க் கைதிகள் மீதும், அரசியல் எதிரிகள் மீதும் பயன்படுத்தி வெற்றிகளைக் குவிக்கலாம் அல்லவா? எனக்குப் பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றாலும், நானும் உன் அரசும் வெவ்வேறல்ல. உன் அரசின் அத்தனை போர் வெற்றிகளிலும் எனக்கும் பங்குண்டு.மீண்டும் அந்தக் கசப்பான சிரிப்பு.
அப்படியல்ல லூசிஃப்,” லிலிடாவின் குரலில் ஒரு குழைவுத்தன்மை குடிகொண்டது. தன் கருங்கற் சிலுவையை எடுத்து மேசை மீது வைத்தாள். இரண்டாம் பெரும் பஞ்சத்தில் அப்பா, அம்மா, உறவினர்கள் யாருமே பிழைக்க மனோதிடமும் தைரியமும் இல்லாமல் இறந்தார்கள். நாம் சிறுவர்கள் தான், ஆனால் நாம் மட்டும் திடமனத்தோடு உயிர்வாழ்ந்தோம். நினைவிருக்கிறதா, ஒரு நாள் எங்கிருந்தோ சிறகடித்துப் படப்படத்த ஒரு சிட்டுக்குருவியை என் கையில் பிடித்து வந்தேன். உனக்குப் பசி மயக்கம், ஆனாலும் அதைக்கொல்ல உனக்கு மனம் வரவில்லை. வேண்டாம், வேண்டாம் என்று தலையசைத்தாய். ஒரே பாய்ச்சலில் அதன் கழுத்தில் என் பற்களை இறக்கி உடலில் இருந்த கொழுப்பை கடித்து உனக்குப் புகுட்டினேனே?”
லூசிஃப் சிவந்த கண்களால் லிலிடாவைப்பார்க்க முடியாமல் இடமும் வலமும் தலையசைத்தான். அது சிட்டுக்குருவியா? அது சிட்டுக்குருவியா?”
எதுவாக இருந்தால் என்ன? அப்படித்தானே அன்று பிழைத்தோம்? அதன் பின் அரசு நம்முடைய மனோதிடத்தையும் தைரியத்தையும் கண்டு நம்மைத் தத்தெடுத்துக்கொண்டது. படிக்கவைத்தது. வாழவைத்தது.
லூசிஃப் தலையைத் திருப்பிக்கொண்டான். பின் அவளை நோக்கி, “பெரும்பஞ்சங்களை ஈனமான, தெம்பில்லாத மக்களைக் களைய உன்னுடைய அரசு தான் உருவாக்குகிறது என்பதை நீ அறிவாயல்லவா?”
லிலிடா சிரித்தாள். ஆமாம், அதனாலென்ன? அதானே நம்முடைய அரசின் நியதி? நாம் வெற்றி பெற்றவர்கள், லூசிஃப். மனோதிடமும் தைரியமும் கொண்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தன் பிரஜைகளாக ஆக்கிக்கொண்டுள்ளதல்லவா நம் அரசு? அதனால் தானே இது உலகத்திலேயே வலுவான நாடாக நிற்கிறது? நம் அரசு அமைக்கப்பட்ட மூல தருமமே இந்தச்சிலுவை தருமம் தானே?”
தன் சிலுவையைத் தூக்கி கையில் திருப்பிப்பார்த்தாள். சிலுவை என்பது என்ன? பெரிய கட்டை சிறிய கட்டையைக் குறுக்குகி நிற்கிறது. மனோதிடமும் தைரியமும் கொண்ட பெரியவை எல்லாம், உலகத்தில் உள்ள சிறியவைகளைக் குறுக்கி ஆளும். ஆளவேண்டும். பெரிய மீன் சின்ன மீனை உண்பது போல். இது தான் உலக நியதி. இங்கு ஈனமான ஜீவனெல்லாம் சாக வேண்டும். அவ்வளவுதான். போரால், பஞ்சத்தால் துவண்ட சிற்றரசுகளைத் தன் சிலுவைக்கடியில் ஒருங்கிணைக்க முயற்சித்தார் முதலாம் சிலுவையடி பேரரசர். மனோதிடமும் தைரியமும் கொண்ட உயிர்கள் அவர்களின் கஷ்டங்களை மீறி அரசின் கட்டமைப்பில் உதவ வந்தனர். மற்றவர்கள் – அதுதான் வழி! – மாண்டனர். அல்லது அழிக்கப்பட்டனர். இந்தச் சிலுவை வழி மட்டுமே உலகின் நிதரிசனம். சிலுவை வாழ்க! சிலுவைக்கொடையின் அடியில் அமைந்த நம் அரசு வாழ்க!”, ஓங்கி உரைத்தாள்.
அப்போது சிலுவை மந்தன்?”
கண்களைச் சுருக்கினாள். உனக்கு அவனைப்பற்றி எப்படித்தெரியும்?”
நான் கொஞ்சம் வரலாறு படிக்க முயற்சி செய்திருக்கிறேன்.
என்ன உளறுகிறாய். அது வரலாறல்ல. கட்டுக்கதை. எந்தக் காலத்திலோ வாழ்ந்த மனிதன் ஒருவன் அதுவரை வந்த, வரப்போகிற மக்களுக்காகத் தானே வலிந்து சிலுவையில் ஏறினானா? நல்ல கதை. ஆவணக்கிடங்குகளில் இருக்கும் ஆதாரத்தை எடுத்துப்பார். நீ சொல்லும் மனிதனைப் போல யாரும் இருந்ததே இல்லை என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அக்கதைகளை உருவாக்கியவர்களும் தாங்கள் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்ட இடத்தில் தானே இன்று நமது அரசின் நீதிமன்றக்கட்டிடம் நிற்கிறது? அந்த வரலாற்றை நீ படிக்கவில்லையா?
அப்படியே அப்படி ஒருவன் இருந்திருந்தாலும், அவனே ஈனன். அவனால் என்ன விதமான மன்னிப்பை அருளியிருக்க முடியும்? அப்படிபட்ட ஈனனை ஏன் கொண்டாட வேண்டும்? நீ சொன்ன கட்டுக்கதைகள் மிகவும் ஆபத்தானவை. அவை சிலுவையின் அர்த்தத்தை வேண்டுமென்றே திரிக்கப்பார்க்கின்றன. மனிதர்களை ஈனர்களாக மாற்றப்பார்க்கின்றன. அது இயற்கைக்கு மாறானது.
இப்போது பார். தேள்களைக் கண்ட அனைவரும் பயத்தில் நடுங்கியபடி, மனம் பிறழ்ன்றபடி ஆகிவிட்டார்கள். தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் நான் அதீத மனோதிடமும் தைரியமும் கொண்டவள். என் பயத்தை வெல்லவேண்டும் என்ற குறியோடு உன்னைத்தேடி வந்துள்ளேன். ஆகவே இந்தத் தேர்வில் நான் வெற்றி பெறுவேன்,” லிலிடா முடித்தாள்.
உன்னுடைய பயத்தை உன்னுடைய அரசு ஏற்றுக்கொள்ளாது என்ற பயம் உனக்கு,” என்றான் லூசிஃப், அவள் பக்கம் பார்க்காமல். சரி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?”
உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.
லூசிஃப் திடுக்கிட்டான். ஏன்?”
பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.
அவளுடைய கண்கள் மின்னின. லூசிஃப் கண்வாங்காமல் அவளைப் பார்த்தான்.
கட்டாயம் செய்தாகத்தான் வேண்டுமா?”
ஆம். உறுதியாக.
லூசிஃப் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் ஏதோ மாறியது.
சரி, வா.
நீளமான பளிங்கறை ஒன்றிற்குள் லூசிஃப் லிலிடாவை அழைத்துச்சென்றான்.
 

3

விஷப்பாம்புக்கூண்டுகளைத்தாண்டி, விதவிதமான விஷநத்தைகளின் கூடுகளைத்தாண்டி, நாலடி நீளமும் நானூறு கால்களுமான பூரானின் கூட்டைத்தாண்டி, கருமுடி மண்டிய கருப்பு விதவை சிலந்திகளின் கூடுகளைத்தாண்டி, எல்லாவற்றிற்கும் அரசர்களாகக் கண்ணாடிப்பெட்டிக்குள் வீற்றிருந்தன கருந்தேள்கள்.
கையில் சிலுவையைப் படித்தபடி, லூசிஃபுக்கு அருகில், அதனெதிரில் நின்றாள் லிலிடா. மூச்சுக்கடியில் மனோதிடம்! தைரியம்!என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும் பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. அவள் உடல் வேர்த்தது. கை நடுங்கியது. கால்கள், உடல், கொடுக்கு என்று தேளின் அசைவுகள் அத்தனையும் பார்க்கப்பார்க்க அவளுடைய உடல் மீது அது அவ்வசைவுகளை நிகழ்த்துவதாக அவள் உணர்ந்தாள். மேனி சிலிர்த்தது. கண் வைத்துப் பார்க்க முடியவில்லை.
அதே நேரம், அந்தத் தேளின் உருவத்திலிருந்து கண்களை எடுக்கவும் முடியவில்லை. இனி எப்போதுமே எடுக்கவும் முடியாது என்ற எண்ணம் திடீரென்று உருவானது. அதன் ஒவ்வொரு அசைவுக்கும் எதோ வினோத கவர்ச்சி இருந்தது. இடமும் வலமும் சுழன்ற அதன் கொடுக்கு கருப்பு முத்துக்களைக் கோர்த்து செய்தாற்போல் இருந்தது. அல்லது கருப்பு கட்டிகளை. கட்டியை விரல்களுக்கு நடுவில் அழுத்தவேண்டும் என்று தோன்றுவது போல், அதை அமுக்கினால் வலித்தாலும் சீழ் வடிவத்தைப் பார்க்கும் சுகத்தைப் போல் – இந்த வினோத ஜீவனை – இல்லை, இது உயிர் இல்லை – உயிர் இல்லை என்றால் பிறகென்ன? – இந்த அருவருப்பை – அமுக்கிப்பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதே? அப்போது அதன் உடலிலிருந்து ஒரு கருப்புத் திரவம் – அதன் நாற்றத்தை இப்போதே நுகர முடிகிறதே? – பீறிக்கொண்டு வருமா? அது கூட வேண்டாம். அதன் கொடுக்கின் கருப்பு முனையை மட்டும் ஒரே ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும். ஒரே ஒரு தொடுகை, அவ்வளவுதான். ஒரே ஒரு முறை. ஒரே ஒரு முறை
லிலிடா. இதை என்றாவது உன்னிடம் சொல்லி விட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,” கனவைக் கிழித்து வருவது போல் எங்கிருந்தோ தூரத்திலிருந்து லூசிஃபின் குரல். உலகத்திலேயே பெரிய போதை எதுவென்று உனக்குத் தெரியுமா?”
கனவிலிருந்து எழுந்தது அவள் குரல் உம்?”
உலகத்திலேயே பெரிய போதை பயம் தான். பயந்து, பயத்தை வென்று, மீண்டும் பயந்து, பயத்தை வென்று, பயம் நம்மைச்
சுழற்றியடிக்கும்இங்கே பார்!சட்டென்று தன் சட்டைக்கைகளை மடித்துவிட்டுக்கொண்டான். லிலிடா அவன் பக்கம் திரும்பினாள். மூச்சை உள்ளிழுத்தாள். கருந்தேள் கண்ணாடி பெட்டியின் ஓரத்தில் வாலசைத்தது.
அத்தனையும் விஷக்கடிகளா?”
லூசிஃப் தலையசைத்தான். “அத்தனையும்.”
“இவற்றைப் பராமரிக்கும் போது ஏற்பட்டவையா?”
இல்லை. இந்த ஊர்மக்கள் அனைவருக்கும் இப்போது வந்துள்ள தேள் பயம் எனக்கு வெகுநாட்கள் முன்னாலேயே வந்துவிட்டது. நானும் அதை வெல்லத்தான் இதைச்செய்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு தேளை கவனமாகப் பிடித்து என் உடல் மீது படர விடும் போது உண்டாகும் பேரச்சமும் உச்ச பரவசமும் இருக்கிறதே…எப்படிச் சொல்வேன் அதை? முதலில் அதைத் தொட்டாலே அருவருப்பாக இருக்கும். ஆனால் உடல் மீது நடக்கும் உணர்வு மயிலிறகு வருடுவது போல் இருக்கும், அவ்வளவு மென்மையானது. அதே நேரத்தில், அது விஷப்பூச்சி என்ற அறிதல் கூடவே இருக்கும். அது உடல் மேல் ஊர்ந்து எங்கு போகும்? எப்போது கொட்டும்? என்று காத்துக்கொண்டிருப்பதில் இருக்கும் பயம் தரும் உச்சத்தை எப்படி விவரிப்பேன்?
இந்தக் கருந்தேள் இருக்கிறதே? ஒரு வாரம் முன்னால் அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அது கழுத்துவரை ஏறிவிட்டது. ஆனால் கொட்டவில்லை. காத்திருந்த ஒவ்வொரு நொடியும் தெளிவாக நினைவில் நிற்கிறது. கொட்டியபோது தன் வாலை வீசிய வீச்சைப் பார்க்கவேண்டுமே. வலியில் எனக்கு ஒரு நொடி கண்பார்வையே மங்கிவிட்டது. அப்படியே இறங்கிப் போனது. போகும் போது கையெல்லாம் கொட்டு. அவ்வளவு விஷம் அதற்கு. எப்படியோ அதை அடக்கி பெட்டியில் போட்டுவிட்டு முறிமருந்தை உடனே செலுத்திக்கொண்டேன். இல்லையென்றால் அந்த அளவு விஷத்துக்கு நான் இறந்திருக்கலாம்.
லிலிடாவின் முகம் வெளிர்ந்திருந்தது. “உன் உடலில் விஷம் ஏறவில்லையா?”
லூசிஃப் கலகலவென்று சிரித்தான். “என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது? லிலிடா, என் உடல் முழுவதும் விஷம். இப்போது நான் உன்னைக் கடித்தால்…” -பற்களைக் கடித்து இளித்தான் – ” உனக்கொன்று தெரியுமா? அடுத்தமுறை இந்தக் கருந்தேளை என் மேல் விட்டுக்கொள்ளும்போது விஷமுறி மருந்து போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். உடலில் அவ்வளவு விஷம் மண்டியுள்ளது, இன்னும் கொஞ்சம் என்ன செய்யும்?”
உனக்குப் பைத்தியமா?”
உலகத்தில் எவ்வளவோ பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. இதுவும் ஒரு ஓரமாக இருந்துவிட்டுப் போகட்டுமே?”
லிலிடா அந்தக் கருந்தேளை பார்த்தாள். பின் லூசிஃபின் கைகளைப் பார்த்தாள். அவன் விரல்கள் கூடத் தேள் வடிவு கொண்டிருக்கின்றனவே? அவன் கண்களுக்குப் பித்துப்பிடித்துவிட்டனவா? அவற்றில் அந்த ஒளி எங்கிருந்து வந்து குடிகொண்டது?
நீயும் உன் பயத்தை வெல்லத்தானே வந்தாய்? வா. உன் கையை நீட்டு. தேளைப் பிடி.
லிலிடாவுக்கு ஏதோ புதுவித பயம் தலைக்கேறியது.
இல்லை. இன்று வேண்டாம்…”
அடக்கண்றாவியே. இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டு யாராவது பின்னகர்வார்களா? வா, வா. ஒரு முறை தொட்டுப்பார்த்துவிடலாம். எங்கே போச்சு, உன்னுடைய மனோதிடமும் தைரியமும்?”
சுற்றி இருந்த கண்ணாடிபெட்டிகளில் பாம்புகள் சீறின. நத்தைகளும் பல்லிகளும் தலையைத் திரும்பிப்பார்த்தன. தூரத்தில், மூலையில், கண்ணாடிப்பெட்டியில் அந்தக் கருப்பு உருவத்தின் நிழல். இரண்டு கைகளும் கொழுத்த உடலும் கொட்டவரும் வாலும் அதன் முனையில் கொடுக்கும். மீண்டும் அதன் வாலில் அந்த வசீகர ஊசல்!
லூசிஃப் முன்னால் நடந்து சென்று பெட்டியைத் திறந்துகொண்டிருந்தான். அவன் திறப்பதை பார்த்த கருந்தேள் பெட்டியின் மூலைக்கு ஓடி மறு சுவரில் ஏறியது. லூசிஃப் இரும்பு கையுறைகள் போட்டுக்கொண்டு கையை உள்ளே விட்டு அதைப் பிடித்தான். தேள் அவன் கையுறைக்குள் திமிர்ந்து கொடுக்கைச் சுழற்றியது .
லிலிடா சிலுவையைப் பிடித்தபடி நின்றாள். அவளால் முன்னாலும் வர முடியவில்லை, பின்னாலும் நகர்ந்து செல்ல முடியவில்லை.
வா! வந்து பிடி! அப்படியே கையை நீட்டு பார்ப்போம்!”
வேண்டாம்! வேண்டாம்! சிலுவை வாழ்க… வேண்டாம்! மனோதிடம்! தைரியம்! தைரியம்!அவள் அலறினாள்.
லூசிஃப் இரண்டு எட்டில் அவளை அடைந்து, அவள் கையைப் பிடித்து, எதையோ அதன்மீது போட்டான். பெரிதாக, கருப்பாக, வெறும் விஷமுனையாக, ஏதோ ஒன்று அவள் மீது ஏறியதை அவள் மந்தகதியில் உணர்ந்தாள். காலையில், தன் பிரமையில் கண்டது இதைத்தான், இதைத்தான், இதைத்தான்
லூசிஃப் சிரிக்கத்தொடங்கினான். நத்தைகளும் பாம்புகளும் அவனைத் திரும்பிப்பார்க்கும் படியான பேரரவச் சிரிப்பு அது.
வேண்டாம்! வேண்டாம்!ஒரு நொடிக்கு அதன் ஸ்பரிசத்தை உணர்ந்தாள். நெஞ்சத்தின் மையத்தில் விறைப்படையச்செய்யும் குளிர். அவள் அறியாமலேயே கையை உதறினாள். கருப்பாக ஏதோ கீழே விழுந்தது.
லூசிஃப் இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான். அவள் திரும்பிப்பார்க்காமல் அந்த அறையை விட்டு, அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினாள். வண்டியில் ஏறிக்கொண்டு அதிவேகமாக ஓட்டிக்கொண்டு தன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். தெருக்கள் காலியாக இருந்தன. மூச்சு முட்டக் கட்டிடத்துக்குள் ஓடினாள். அங்கு யாருமே இல்லை. ஏதேதோ தாள்கள் அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு தளமாகத் தேடினாள். ஒரு ஆள் அரவம் இல்லை. தன்னுடைய அறையை அடைந்தாள்.
கதவைத்திறந்து தன் இருக்கையில் அமர்ந்தும் தான், தான் கையில் அதுவரை வைத்துக்கொண்டிருந்த சிலுவையை உணர்ந்தாள். ஆனால் என்ன இது? இது சிலுவையல்லவே? சிலுவையின் இரண்டு கைகளும் தேளின் கைகள். சிலுவையின் நீள்முனை தேளின் கொடுக்கு. அவள் விரைந்து போய்ப் பார்க்கப்பார்க்க அந்த கருந்தேள் அவளுடைய கை மீது மெல்ல ஏறி கழுத்தை அடைந்தது. கடைசியாக ஒரு முறை அதன் விஷம் மண்டிய கொடுக்கு காற்றில் சுழன்றது.
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.