பொய்யுலகை அளிக்கும் தீயசக்தி

 

அறிவியலாலும் தொழில்நுட்பத்தாலும் சாத்தியமாகக் கூடிய விஷயங்களைக் கொண்டு ஓர் புனைவுலகை கட்டமைத்துக்காட்டுவது அறிவியல் புனைவு. அறிவியல் புனைவு தன்னுள் பல உப பிரிவுகளைக் கொண்டுள்ள ஒரு புனைவு வெளி. நம்முள் இருக்கும் கருத்துக்களையும் கனவுகளையும் கூட அறிவியலின் அறிவை கொண்டு நம் முன் சாத்தியப்படுத்திக் காட்டுகிறது. அறிவியல் புனைவுகள் காட்டும் சாத்தியங்களின் மூலமாக நாம் பிரமிப்பை அடைவது அதன் ஒரு வகைத் தாக்கம். அதனுடைய இன்னொரு விளைவானது அப்புனைவுகள் நாம் சிந்தனையின்றி ஏற்றுக்கொண்டுவிட்ட பல நம்பிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது. நமது வாழ்க்கை பார்வையை, மனித இயல்பை, சமூக அமைப்பை, நாம் அறிந்தவை ஆகியவைகளின் மீது சில ஆதார கேள்விகளை எழுப்பிச் சிந்திக்கச் செய்கிறது.

அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவுத் தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். சிந்தனைச் சோதனை (Thought experiment) என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன.

இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன. பல சிந்தனைச் சோதனைகள் காலம் காலமாக விடையளிக்க முடியாத ஒரு புதிராக மனித இனத்தைப் பின் தொடர்ந்து வருகின்றன. அறிவியல் கோட்பாடுகளைப் போல, கணித தேற்றங்களைப் போல, தத்துவ விளக்கங்களைப் போல, இச்சிந்தனைச் சோதனைகளும் மானுட அறிவு தேடலின் மைல்கல்கள் ஆகும்.

பல அறிவியல் புனைகதைகளின் அடிநாதமாக விளங்கும் ஒரு வகைச் சிந்தனைச் சோதனை Brain in the vat(BIV) எனப்படுவது. நாம் காணும் உணரும் உலகனைத்தும் பொய்யான முறையால் நமக்கு உணர்த்தப்படுபவை என்கிற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சிந்தனைச் சோதனையானது ஏற்கனவே பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் இருந்து வரும் ஒரு ஐயம். அதன் இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடே BIV எனப்படுகிறது. மூளையை ஒரு இரசாயன பானைக்குள் மிதக்கவிட்டு அதன் உணர்முனைகளை ஒரு கணினியுடன் இணைத்து மின்னணுக்களின் மூலம் மூளையின் நியூரான்களைத் தூண்டி மூளைக்குப் புலனறிவை செயற்கையாக உண்டு செய்தல். இச்சிந்தனைச் சாத்தியத்தின் அடிப்படையில் அமைந்த கற்பனைக் கதைகளை நாம் பல விதங்களில் படித்தும், பார்த்தும் வருகிறோம். மாட்ரிக்ஸ் படத்தில் இச்செயல் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களால் மனித குலத்திற்குச் செய்யப்படுகிறது. மூளை மட்டுமில்லாமல் மனிதர்களையே தொட்டிகளுக்குள் வைத்து கணினிகளின் மூலம் பொய்யுலகை உருவாக்கி அவர்களை அதில் வாழவைக்கிறது.

நம் புலனறிவின் மீது ஐயத்தை எழுப்பும் இச்சிந்தனையின் நீட்சி மானுட அறிதலையே கேள்விக்குள்ளாக்குவது – குறைந்தபட்சம் புலனறிவை அடிப்படையாகக் கொண்ட அறிதல் முறைகளையாவது. அறிவியல் என்பது புலனறிவை பிரதானமாகக் கொண்டது. அதன் கண்டடைதல்கள் எவ்வகையில் நிகழ்ந்தாலும் அவை கண்டடைந்த கருதுகோளை(Hypothesis) ஊர்ஜிதப்படுத்த அது புலனறிவையே இறுதி தீர்வாகக் கொண்டுள்ளது. உலகம் பொய்யான விதத்தில் நமக்கு உணர்த்தப்படுகிறது எனும் போது அறிவியலின் அடிக்கட்டுமானத்திலேயே அடிவிழுகிறது. நாம் இதுவரை அறிந்திருக்கிறோம் என்று நாம் நினைப்பதெல்லாம் இந்தப் பொய்யான உலகைப் பற்றியது. ஆக உண்மையில் நாம் எதையும் அறிந்திருக்கவில்லை, ஏன் அறிய சாத்தியமுமில்லை என்றாகிறது.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா, மனிதர்களை நம்புவதா வேண்டாமா, எதற்காக வாழ்கிறோம் என்ற பல வித ஆதாரமான கேள்விகள் மனிதர்கள் முன் இருக்கும் போது அவர்கள் கண்டு கேட்டு, பட்டறிந்து மகிழும் இவ்வுலகும் அவர்களுக்குப் பொய்யென ஆகுமெனில் அவர்கள் சென்று விழுவது நம்பிக்கையின்மையின் பாதாளத்துக்குள்(இந்த உணர்வு கலாச்சாரச் செதுக்கல்களை- conditioning சார்ந்தது என்று சொல்லமுடிந்தாலும் அன்றாடம் உழைக்கும், உலகின் இன்னல்களைச் சந்திக்கும் மனிதருக்கு வாழ்க்கையின் மீதும் உலகின் மீதும் இருக்கும் நம்பிக்கையே அவருக்குச் செயலூக்கமாக அமைவது நிதர்சனம்).

எல்லாக் கலாச்சார வெளியிலும் இதைப் போன்ற ஒரு கருத்து இருந்துவந்திருக்கிறது. நம் புலன்களால் உணர்வது உண்மையல்ல, நாம் அனுபவிக்கும் இவ்வுலகம் உண்மையானதன்று, நாம் உணர்பவை பிழையானவை, மாயை என்ற கருத்து. மேற்கில் பிளாட்டோவில் அக்கருத்துத் தொடங்குகிறது. அவரின் குகைக்குள் மனிதர்கள் என்ற உவமை இவ்வுலகை குகை என்றே கருதுகிறது. குகைக்கு வெளியே அழகான ஒழுங்கு குலையா உலகம் ஒன்றிருக்கிறது. ஆனால் மனிதர்கள் குகையையே உலகம் என்று நினைத்து வாழப் பழகிவிட்டார்கள் என்பது பிளாட்டோவின் கருத்து. காண்டை (Kant) பொருத்த வரை மெய்வெளியானது நம் புலன் அனுபவத்திற்கு அப்பாலுள்ளது. நாம் உணர முடியாதது.

ஆனால் பிளாட்டோவின் காண்டின் கருத்திலிருந்து BIV என்ற கருத்து வித்தியாசப்படுவது, முதலிருவரின் கருத்திலும் உண்மையை அறிய முடியாத தன்மை நம்மிடமே இருக்கிறது. ஆனால் BIV என்ற கருத்தின் பேரில் நாம் மெய்யுலகை உணரும் சாத்தியம் என்பதும், பொய்யுலகையே உணர்கிறோம் என்ற அறிதலும், இரண்டுமே நம்மை ஏமாற்றும் பொருட்டு வேறொருவர் செய்யும் வேலை. இன்றும் கூட இந்த BIVக்கு முற்றான மறுப்பொன்றை எவரும் வைத்துவிடவில்லை. ஆக நாம் காணும் உலகனைத்தும் பொய்யாக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை ஏற்றுக்கொண்டு தான் நாம் இந்த உலகை அணுகவேண்டியிருக்கிறது. உலகம் மாயை என்று சொல்வது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமென்றாலும், உலகம் வேண்டுமென்றே நமக்குப் பொய்யாகப் பிறிதொரு சக்தியால் காட்டப்படுகிறது என்பது சாத்தியமென்று நம்பக் கடினமான ஒரு விநோத சிந்தனை. இவ்விநோத சிந்தனை எழ என்ன காரணம்?

நவீன தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் டேக்கார்ட்(René Descartes) இந்தச் சிந்தனையை முதலில் முறையாக முன் வைக்கிறார். ஆனால் இச்சிந்தனை ஐயவாதத்தில்(skepticism) முன்னரே இருந்து வந்தது தான். ஐயவாதத்தை முன் வைப்பவர்கள் அனைவரும் ஐயவாதிகள் என்று சொல்லிவிட முடியாது. ஏதோ ஒன்றின் மீது ஒரு தத்துவ விளக்கத்தை உருவாக்கும் ஒருவருக்கு அவரது விளக்கத்தின் மீது எழுப்பப்படக்கூடிய சாத்தியமுள்ள கேள்விகளையும் எதிர்வினைகளையும் அவர்களே எழுப்பிக்கொண்டு அதற்குப் பதில் சொல்லும் விதமாகத் தங்கள் தத்துவத்தை மேலும் விளக்குவார்கள். அதே போல் இக்கருத்து மத்திய காலகட்ட இறையியல் அறிஞர்களிடம் வளர்த்தெடுக்கப்பட்டது. டேக்கார்ட் அதை மேலும் செழுமை செய்து முன் வைத்தார்.

டேக்கார்ட் வாழ்ந்த காலகட்டத்தில் வலுவாக இருந்து வந்த அறிவுத் தரப்புகளில் இரண்டை முக்கியமாகச் சொல்லலாம். ஒன்று கிறித்துவ ஸ்கொலாஸ்டிக்(scholastic) இறையியல் பள்ளி. இது அரிஸ்டாட்டிலின் தத்துவத்தைப் பிரதானமாகக் கொண்டது. அறிதல் முறையில் புலனறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. டேக்கார்ட் இத்தரப்பின் அறிதல் முறையிடம் முரண்படுபவர். அதற்கான தத்துவக் கட்டுமானங்களை வளர்த்தெடுத்தார்.

ஆனால் அவர் முதலில் எதிர்கொண்டாக வேண்டியது ஐயவாதிகளை. அறிதலை எப்படி நிகழ்த்த வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பக்கம் விடை தேட வேண்டியதிருந்தாலும், அறிதலே சாத்தியமா என்ற கேள்வியை எழுப்புபவர்களுக்கு முதலில் பதில் சொல்லியாக வேண்டும். அந்தக் கேள்வியை எழுப்பியது இந்த ஐயவாதிகள். அரிஸ்டாட்டிலின் அறிதல் முறைக்குச் சவால்விடும் வகையில் இயந்திர நோக்கில் உலகை பகுத்தாராயும் முறை எழுந்துவந்து கொண்டிருந்த காலத்தில் இந்த ஐயவாதிகளின் கருத்து அறிவுத் தேடலில் நம்பிக்கை இழக்க செய்வதாக இருந்தது.

இதுமட்டுமல்லாது அன்றிருந்த அறிவுத் தரப்புகள் ஒன்றை ஒன்று நிராகரிப்பதாகவும், ஒவ்வொரு தரப்பின் கூற்றும் எளிதில் பிழை காணக்கூடியதாகவும் இருந்தது. அறிவியல் என்றால் என்ன என்ற வரையறை சரியாக வளர்ந்திடாத காலம். அதனால் ஒவ்வொரு தரப்பும் அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொன்றை தூக்கிப்பிடித்தது. அதனால் இதுவரை அறிந்தவை எல்லாம் உண்மை தானா என்ற ஐயம் டேக்கார்டிடம் இருந்து வந்தது.

தான் அடைந்த அறிவனைத்தையும் சுத்திகரித்து, சந்தேகத்திற்கு இடமின்றி எஞ்சி நிற்பனவற்றைப் பிரித்தெடுக்க நினைத்தார் டேக்கார்ட். அதே போல ஐயவாதிகளின் ஐயங்களை முழுவதுமாக முறியடித்து அறிவியல் எனும் அறிதல் முறை மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் டேக்கார்டிற்கு மிகவும் முக்கியமான செயலாகத் தெரிந்தது. ஐயவாதிகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எழுப்பும் ஐயங்களைவிட ஆதாரமான ஐயங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழியே சென்று அந்த ஐயங்களின் வாய்ப்பின்மையைக் காட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறையே ஐய முறை – Method of doubt.

இந்த ஐய முறைக்கு அடிப்படையாக அவர் இரண்டு வாதங்களை முன் வைத்தார். ஒன்று கனவின் அடிப்படையிலான வாதம். நாம் கனவு காணும் போது அங்குப் பார்ப்பவை எல்லாம் அந்நேரத்திற்கு உண்மையாகத் தெரிகிறது. கனவில் நாம் காணும் பொருட்களுக்கு இவ்வுலகில் நாம் காணும் பொருட்களுக்கு இருக்கும் பண்புகள் அனைத்தும் இருக்கின்றன. அப்படியானால் இப்போது நாம் காண்பதும் கனவாய் இருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? ஆனால் இந்த வாதத்திலும் கூட ஒருவர் ஏற்கனவே கனவு கண்டு எழுந்து ‘ஆ! அது கனவு’ என்று உணர்ந்த அனுபவத்தைப் பெற்ற பின்பே கனவு, நனவு என்ற இரண்டு பேதங்கள் அவருக்குத் தெரிகிறது. ஆக இந்த வாதமும் இவ்வுலக அனுபவத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. டேக்கார்ட் இதனினும் ஆழமான, இவ்வுலக அனுபவம் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வாதத்தை எழுப்பிக்கொள்ள விரும்பினார்.

ஏன் நான் காணும் உலகனைத்தும் ஒரு மகாவல்லமை பொருந்திய ஒரு தீயசக்தியால்(Evil demon) என் முன் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடாது? எனது புலன்கள் அனைத்துக்கும் அதுவே இந்த உலகனுபவத்தை ஊட்டி நான் உண்மையான உலகை பார்க்கிறேன் என்ற பொய்யான நம்பிக்கையை என்னுள் ஏன் ஏற்படுத்தியிருக்கக்கூடாது? அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்குமானால் நான் இந்தப் புலன்களின் மூலம் அடையும் அறிவெல்லாம் பொய்யானதல்லவா?  டேக்கார்டின் இந்தக் கேள்வி மிகவும் வலுவானது. பொருண்மையான வெளி உலகம் ஒன்றின் அவசியமின்றி நாம் அனுபவிப்பது அனைத்தையும் விளக்கிவிடக்கூடியது. ஏமாற்றும் அந்தத் தீய சக்தியையும் அது கொடுக்கும் புலன் அனுபவத்தை அனுபவிக்கும் மனத்தையும் தவிர வேறெதுவும் இருப்பதற்கு அவசியமில்லை. இவ்விரண்டு இருப்புகளும் அருவமாகவே இருந்துவிடவும் கூடும்.

சர்வத்தையும் மறுக்கும் ஒரு ஐயத்தை அவர் எழுப்பிக்கொண்ட போதிலும் அவர் ஐயவாதி அல்ல. ஐயவாதிகளுக்குப் பதில் அளிக்கவே அவர்களின் பாதையிலேயே சென்று இந்த வலுவான ஐயத்தை எழுப்பிக்கொள்கிறார். இக்கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தான் எந்த அறிதலுக்கும் வலுவான ஒரு அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார்.

இதற்கு விடையாக டேக்கார்ட் முன் வைத்தது பலரும் அறிந்த பிரபலமான தத்துவ வாக்கியம். I think therefore I am. நான் எண்ணுவதே என் இருப்புக்குச் சாட்சியாக அமைகிறது. என் புலனறிவை அத்தீயசக்தி ஏமாற்றினாலும், எனக்குத் தவறான எண்ணங்களை உண்டு செய்தாலும், அந்தத் தவறான எண்ணங்களை எண்ணுவதற்குக் கூட எனது இருப்பு அவசியமாகிறது. அதனால் நான் எண்ணுகிறேன் என்ற உணர்வையும் அதனால் நான் இருக்கிறேன் என்ற முடிவையும் யாரும் மறுக்கமுடியாது. இதுவே ஐயத்திற்கு இடமற்ற உண்மை என்று அவர் முன் வைத்தார்.

ஆனால் இவ்வுண்மையை அவர் கண்டடைந்த உடனே இதில் உள்ள போதாமையையும் அவர் உணர்கிறார். இதன் மூலம் அவர் வெளியுலகை சார்ந்த வேறெந்த உண்மையையும் சென்றடைய முடியாது என அவர் உணர்கிறார். இந்த உண்மையின் மூலம் அவருக்குக் கிடைத்திருப்பது அவர் அகவுலகம் மட்டுமே. இந்த எல்லையிலிருந்து மேலெழுந்து வெளியுலகை எட்டுவதற்கு அவர் வேறொரு வாதத்தை, ஒரு பெருந்தாவலுடன், முன்வைக்கிறார்.

என் அகத்துக்குள் நான் பல்வேறு கருத்துக்களைக் காண்கிறேன். இக்கருத்துக்களில் தெளிவாக எனக்குத் தெரிவது கடவுள் எனும் உச்சமான முற்றொழுங்கு கொண்ட ஒரு இருப்பு(supremely perfect being) எனும் கருத்து. சிறிய ஒன்றினால் மாபெரும் ஒன்றை படைத்துவிட முடியாது. நான் சிறியவன், குறைகள் உடையவன். என்னால் இந்த உச்சமான முற்றொழுங்கு கொண்ட இருப்பைப் படைத்திருக்க முடியாது. ஆகவே இது கடவுளே என்னைப் படைத்து எனக்குள் விதைத்த கருத்து. அதனால் கடவுள் எனும் பேரிருப்பு இருக்கிறது.

கடவுள் முற்றொழுங்கு கொண்ட இருப்பென்றால் அவர் நல்லுணர்வு கொண்ட ஓர் இருப்பாக இருக்கவேண்டியது அவசியம். நல்லுணர்வு(benevolence) என்பது ஒழுங்குகளில் ஒன்று. நான் முறையாகப் பெரும் உழைப்புடன் உண்மைக்கான தேடலை இவ்வுலகினில் நிகழ்த்தும் போது நல்லுணர்வு கொண்ட அக்கடவுள் என்னை ஏமாற்றமாட்டார். எனது முறையான கண்டறிதலில் அவர் என்னை உண்மையை அடையச் செய்வார். அதனால் அறிவியல் மூலம் புலன்களின் வழியே அறிவதை ஆராய்வது நம்மை உண்மையை நோக்கி கொண்டு செல்லும். இவ்வாறு அவர் ஐயவாதிகளுக்குப் பதிலளித்தார்.

இவ்விடையின் வழியாக அவர் நவீன அறிவியலின் பாதையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கையின்மை எனும் இருளையும் ஒழித்தார். அவர் தொடங்கியதை இச்சிந்தனைச் சோதனை வழியே முடித்துக்கொண்டாலும் பொய்யான உலகை காட்டும் தீயசக்தி எனும் சிந்தனை இன்றும் சாத்தியமாகத்தான் உள்ளது. இன்றும் தத்துவவாதிகள் அதை மறுக்க முயல்கிறார்கள். அத்தீயசக்தியின் கையில் இன்று ஒரு அதிநவீன கணினியும் நரம்பியல் விஞ்ஞானமும் சேர்ந்து கொண்டு Brain in the vat என்ற பெயரில் உருவெடுத்து நிற்கிறது. இன்றைய புனைவுகளில் அவை மேலும் முன்னேறி மூளைக்குள் மின்னணு சில்லுகள் என்று பரிணாமம் பெற்றிருக்கிறது. மேல் வடிவம் மாறினாலும் இக்கருத்தின் ஆழத்தில் இருப்பது டேக்கார்ட் எழுப்பிய கேள்விதான். இனியும் இதையொட்டி பல புனைவுகள் படைக்கப்படும்.

***