காண்பவை எல்லாம் கருத்துகளே

This entry is part 1 of 1 in the series உலக தத்துவம்
  • காண்பவை எல்லாம் கருத்துகளே

காண்பவை எல்லாம் கருத்துகளே – 1

நாம் காண்பவை அனைத்தையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்ற அடிப்படையில் தத்துவத்தில் இரு முக்கியமான தரப்புகள் உண்டு. நம் கண்முன்னே பலவிதமான பொருட்களைப் பார்க்கிறோம். இப்பொருட்கள் உண்மையிலேயே அங்கு இருக்கிறதா, அவை நாம் பார்க்கும் குணங்களுடனேயே இருக்கிறதா என்ற கேள்விகளுக்கான பதில்களே இவ்விரு வாதங்களும். அவை Idealism என்றும் Materialism என்றும் அழைக்கப்படுகின்றன.

Idealism என்ற சொல்லுக்கு பலவகை அர்த்தங்கள் உண்டு. லட்சியவாதம் என்ற அர்த்தம் அதில் ஒன்று. உலகத்தையும் தன் வாழ்வையும் குறித்து ஒருவர் மேலான லட்சியங்களைக் கொண்டிருப்பது லட்சியவாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் Idealism என்ற சொல் தத்துவார்த்த தளத்தில் வேறொரு அர்த்தம் கொண்டிருக்கிறது. அதைக் குறிப்பாக புறவெளி குறித்த பார்வை எனலாம். இவ்வகை அர்த்தத்தைக் கொண்ட Idealism என்பதற்கு பொதுவாக ’கருத்து முதல்வாதம்’ என்ற கலைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 

கருத்து முதல்வாதம் என்று சொல்லப்படுவது தத்துவத்தில் ஒரு பெரும் தரப்பைக் குறிக்கிறது. இதை ஒரு தனிப்பட்ட தத்துவக்கருத்து என்று சொல்வதை விட இது ஒரு வகைமை என்று சொல்வதே சரியாக இருக்கும். சாராம்சமாக இத்தரப்பு ’கருத்தை’ பிரதானப்படுத்துகிறது. கருத்து என்று சொல்லும்போது நம் எண்ணங்கள், சிந்தனை, நினைவுகள் ஆகிய எல்லாம் அடங்கும். புலனால் அறியப்படாத, ஆனால் நம் அகம் அறியும் அனைத்தையுமே கருத்து என்ற வரையறைக்குள் வைக்கலாம். 

கருத்து முதல்வாதம்  சிலவகை உட்பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் பொதுவாக அது நாம் காணும் இந்தப் புறவெளி நம் மனம் நமக்கு ஆக்கிக் கொடுப்பது என்று சொல்கிறது. இதில் மனம் எந்த அளவு ஆக்கலில் செயல்படுகிறது என்பது குறித்து அப்பள்ளிக்குள் பல தரப்புகள் உண்டு. 

அகத்தில் நாம் உணர்வதைத் தவிர புறத்தில் பொருள்கள் என்று ஏதும் கிடையாது என்பது கருத்து முதல்வாதத்தில் ஒரு வகை வாதம். அதன் இன்னொருவகைப் பார்வை நமக்கு வெளியே பொருட்கள் உண்டு; அதையே நம் புலன்கள் உணர்கின்றன. ஆனால் அவற்றை நம் அகம் அறியும் போது அவற்றில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. கடைசியாக நாம் கண்டதாக நாம் நினைக்கும் காட்சி நம் புலனுக்கும் அகத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களால் திரிக்கப்பட்ட காட்சியாகும். அதனால் நம் அகம் நாம் காணும் காட்சிகளில் பங்கு வகிக்கிறது. 

பொருள் முதல்வாதம் என்பது, ஒருவர் எளிதில் கணித்துவிடக்கூடிய வகையில், மேலே சொன்ன வாதத்திற்கு எதிரானது. நம் அகத்தை மீறியும் புறத்தே பொருட்கள் உண்டு, காட்சிகள் திரிக்கப்பட்டாலும் பொருட்களுக்கென்று பெரும் பங்கு இருக்கிறது என்கிறது.

பிளேட்டோவின் தத்துவமானது கருத்து முதல்வாத சாயல் கொண்டது. அவரது தத்துவத்தின் படி மெய்யிருப்பானது கருத்துக்களே. நாம் புலன் வழி காண்பவை அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால் அவைகளை உண்மையென எடுத்துக்கொள்ள முடியாது. முற்றொழுங்கு(perfection) கொண்ட கருத்துக்களே நிலையானவை மற்றும் மெய்யானவை. உதாரணத்திற்கு வட்டம் எனும் கருத்து எண்ணங்களில் முற்றொழுங்கு கொண்டதாக இருக்கிறது. ஆனால் புறத்தில் நாம் காணும் ஒவ்வொரு வட்டமும் முற்றொழுங்கில் குறைபாடுடைய வட்டங்களே. நாம் புலன் வழியே அறியாத இம்முற்றொழுங்கு கொண்ட கருத்துக்களை நாம் எங்கிருந்து அறிகிறோம்? கருத்துலகில் இருப்பதையே நாம் அறிகிறோம். அதை அறிவதற்கு நம் மனதின் மூலம் வழியிருக்கிறது. பிளேட்டோவின் தத்துவம் கருத்து சார்ந்ததாக இருந்தாலும் அவை மையப்படுத்தும் கருத்துக்கள் மனதுக்கு அப்பால் இருப்பது. அகவெளி, புறவெளி போல அக்கருத்துக்கள் தங்களுக்கேயான ஒரு கருத்துவெளியில் இருக்கிறது. 

அதனால் பிளேட்டோவின் இந்த வாதத்தை முழுமையான கருத்து முதல்வாதம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் இங்கு புறத்தை இவ்வாறு காட்சிபடுத்தும் செயலில் அகத்தின் பங்கு பெரிதாக ஒன்றுமில்லை. கருத்து முதல்வாதம் புறத்தை தோற்றப்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கிறது. ஒன்று காண்பவை எல்லாம் அகம் உண்டு செய்வதே என்கிறது, இல்லையெனில் அகம் காண்பவற்றின் உண்மை நிலையைத் திரித்து இவ்வாறு காட்சிபடுத்துகிறது என்கிறது. பிளேட்டோவின் தத்துவம் புறத்தின் குறைபாட்டை அதன் மெய்யற்ற நிலைக்குக் காரணமாக அகத்தைச் சொல்வதில்லை. அது இவ்வுலகம் அமைப்புற்ற விதத்திலேயே அந்தக் குறைக்கான காரணம் உள்ளதாகக் காண்கிறது. பிளேட்டோவின் குகை உருவகத்தை எடுத்துக்கொண்டால் குகைக்குள் இருக்கும் மனிதர்கள் பார்க்கும் நிழல்கள் அவர்கள் அகத்தால் உருவாக்கிக் கொடுக்கப்படுவதல்ல. அது அந்த குகையின் அமைப்பு அங்கு எரியும் நெருப்பு மற்றும் அங்கு தோன்றும் பொருட்களால் காட்டப்படுவது. மனித அகத்தால் உருவாக்கப்படும் நிழல்கள் அல்ல,

டேக்கார்டே(René Descartes) எண்ணங்களை மையப்படுத்திய தத்துவத்தை உருவாக்கியவர் என்றாலும் அவர் புறவெளியை மறுத்தவர் அல்ல. அவர் பதில் சொல்ல நினைத்தது புறவெளியைக் குறித்து ஐயப்படும் ஐயவாதிகளுக்கு. இந்த உலகைக் குறித்த எந்த ஞானத்தையும் பெற்றுவிட முடியாது என்பது ஐயவாதிகளின் தரப்பு. அவர்கள் நிராகரிப்பது அறிவை அடைய உதவும் அனைத்து மூலங்களையும். அகமும் புலன்களும் இரண்டும் உண்மையை நமக்குக் காட்டுவதில்லை என்பதே அவர்களின் தரப்பு. அன்று உருவாகி வந்து கொண்டிருந்த நவீன அறிவியலுக்கு இது மிகவும் சிக்கலாக அமைந்தது. இதற்கு எதிராக புறவெளியின் இருப்பை நிரூபிக்க நினைத்தார் டேக்கார்டே.  

அதற்கு டேக்கார்டேவுக்கு வலுவான அடிப்படை உண்மை ஒன்று தேவைப்பட்டது. அந்த உண்மையை அவர் அகம் அறியும் எண்ணங்களில் இருந்து எடுத்தார். நான் எண்ணுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்ற அவரது பிரபலமான வரியை நம்மில் பலர் அறிந்திருக்கலாம் – I think therefore I am. டேக்கார்டேவின் வாதமும் கருத்து முதல்வாதம் அல்ல. அவர் அறியும் மூலங்களில் சிந்தனைக்கு, பகுத்தறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். புலனறிவை விட பகுத்தறிவை மையமாகக் கருதினார். ஆனால் புறவெளியை அவர் வெறும் கருத்துக்களால் ஆனது என்று கூறவில்லை. உண்மையில் அவர் ஓர் இருமைவாதி – Dualist. பொருள்வெளி, அகவெளி என்று அறிபவற்றை இரண்டாகப் பிரித்தார்.

பெர்க்லி(George Berkeley) கருத்து முதல்வாதத்தை ஆதரித்தார். லாக்(John Locke) போன்றோர் முன் வைத்த புலனறிவு வாதத்துக்கு எதிராக அவர் கருத்து முதல்வாதத்தை முன் வைத்தார். உயிரற்ற பொருட்களுக்குக் காரண காரிய குணம் இருப்பதில்லை. அவை ஆன்மாவை உடைய உயிர்களுக்கே உள்ளது என்றார்.  பெர்க்லியுடைய கருத்து முதல்வாதம் அகவய கருத்து முதல்வாதம் எனப்படுகிறது. பார்ப்பவை அனைத்தும் பார்ப்பவரின் கருத்தையே என்பதாக அது கூறுகிறது. இதன் முற்றிய நிலை Solipsism எனப்படுகிறது.

பெர்க்லி லாக்கிற்கு எதிர்வினையாற்றினார். லாக்கைப் பொறுத்தவரை உலகில் எல்லாமே பொருட்களின் மூலமாக நிகழ்பவையே. மனித புலனிற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்டு பொருட்கள் உண்மையாக இருக்கின்றன. அறிபவை நிகழ்பவை எல்லாம் பொருட்களின் இயக்கத்தின் வழியாக நிகழ்கின்றன. சில வகை தோற்ற மயக்கங்கள் இருக்கலாம். உதாரணம் – நிறம். நிறத்திற்கென்று தனிப்பட்ட இருப்புநிலை கிடையாது. அது பார்ப்பவரின் நிலை, பார்க்கப்படும் பொருளின் அமைப்பு நிலை மற்றும் பல சூழல்களின் காரணமாக நிறங்கள் வெளிப்படுகின்றன. ஆனால் அந்த நிறம் வெளிப்படும் பொருள் அதற்கு உண்டான பருமையுடன் இருக்கிறது.

பெர்க்லிக்கு இந்த வாதத்தில் ஏற்பு இல்லை. புலனை மட்டும் வைத்து புறத்தை அறியும் நமக்கு, எவ்வாறு புறப்பொருள்கள் இருக்கின்றன என்று நிச்சயமாகக் கூற இயலும்? ஏற்கனவே, டேக்கார்டே சமாளிக்க நினைத்த, ஐயவாதிகள் புலனறிவுக்கு எதிராக ஏராளமான வாதங்களை வைத்துள்ளனர். மீண்டும் புலனறிவை மையப்படுத்தி புறத்தின் இருப்பை நிறுவினால் அதை ஐயவாதிகள் மீண்டும் உடைப்பது சுலபம்.

மேலும் பெர்க்லி இவ்வகை பொருளை மையப்படுத்திய பார்வை மக்களை பொருள்வய வாழ்க்கைக்கும் நாத்திகத்திற்கும் இட்டுச் செல்லும் என்று கருதினார். லாக்  புறவெளியை முழுவதுமாக ஓர் இயந்திரத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார். இறைசக்திக்கு இடமில்லா வெறும் வெற்று இயந்திரப் பார்வை பெர்க்லிக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் லாக்கின் தத்துவத்திற்கு எதிராக தீவிரமாக எதிர்வினையாற்றினார்.

லாக்கே தனது தத்துவத்தில் ஒத்துக்கொண்டது போல நாம் அறிவதெல்லாம் நம் புலன்வழி நமக்கு கிடைக்கும் உணர்வுகளையே. இவ்வுணர்வுகள் வெளியில் இருப்பவற்றைச் சரிவர நமக்குத் தோற்றுவிப்பதில்லை என்ற கருத்தையும் லாக் ஏற்கிறார். இருப்பினும் வெளியிலிருக்கும் பொருட்கள் பருமைத்தன்மை உடையவை என்கிறார்.  ஐயவாதிகளுக்கு இவ்வகை முரண்கள் வசதியாக அமைவதாலும், கடவுளற்ற ஓர் உலகப் பார்வையை லாக் முன்வைப்பதாலும் இந்த முரணைக் களைய நினைத்தார் பெர்க்லி. அதற்காக அவர் கண்டடைந்த வழி பருப்பொருட்கள், புறவெளி ஆகிய அனைத்தையும் மறுப்பது.

பெர்க்லியின் தத்துவமே முதலாவதும் முழுமையானதுமான கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது என்று கருதப்படுகிறது. இவர் புறத்தில் காண்பது எல்லாமே நம்மில் எழும் கருத்துக்களையே என்கிறார். இப்படிச் சொல்வதினால் ஐயவாதிகளால் நாம் காணும் காட்சியை ஐயத்திற்குள்ளாக்க முடியாது என்கிறார். காணும் காட்சி நம்மைத் தாண்டிய பொருளாக இருக்கும்போதே அதன் மீது ஐயம் எழுப்பமுடியும். காணும் காட்சி நம்முடைய கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றின் உண்மை நிலையைப் பற்றியும் அவற்றின் இருப்பைப் பற்றியும் ஐயப்படவே முடியாது என்கிறார். இருப்பதால் தான் காண்கிறோம். இருப்பு உடையது காண்பதற்குரியது – Esse est percipi என்பது பெர்க்லியின் பிரபல கூற்று.

இம்மானுவேல் காண்டின்(Immanuel Kant) தத்துவத்தை மீறுநிலை கருத்து-முதல்-வாதம்(Transcendtal idealism) என அழைக்கலாம். காண்டின் கருத்து முதல்வாதம் அறிவியங்கியல் நோக்கிலானது. அவர் எவ்வாறு புறவெளியைக் குறித்து இப்படிப்பட்ட பட்டறிவை அடைகிறோம் என்று ஆராய்ந்தார். பகுத்தறிவுத் தரப்புக்கும்(Rationalism) பட்டறிவுத் தரப்புக்கும்(Empiricism) இருந்த வாதங்களுக்கு ஒன்றின்றி மற்றொன்று வீண் என்று முடிவு எழுதினார்.

அறிவொளி காலகட்டத்தில் வளர்ந்து வந்த அறிவியல் பகுத்தறிவு வளர்ச்சியினால் இறை நம்பிக்கை மறுப்பும் அதனோடு சேர்ந்து ஒழுக்க நெறிகளும் சீர்குலையக்கூடும் என நம்பி அறிவொளி காலத்திற்கு ஏற்றாற்போல் ஒழுக்க விதிகளை வகுத்துத் தந்தார்.

அறிதல் எனும் செயல்பாட்டை அவர் கூர்ந்து ஆராய்ந்தார். அவர் தத்துவத்தின்படி நாம் காணும் காட்சிகள், பட்டறிதல்கள் அனைத்தும் நம்மை மீறி, நம்மைச் சாராது இருப்பவற்றின் பிரதிபலிப்புகள். இப்பிரதிபலிப்புகளை அவர் தோற்றப்பிரதி – Phenomenon என்கிறார். நம் புலன் வழி அடையும் உணர்வுகளுக்கும் நம் அகம் அறியும் காட்சிகளுக்கும் இடையில் இருக்கும் சில அக உருக்களால் (apriori forms) இத்தோற்றப்பிரதிகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் காணும் காட்சியில் தோன்றும் காலம் மற்றும் வெளி போன்றவை எல்லாம் நம் அகம் புலன்வுணர்வின் மீது ஏற்றும் உருக்கள். நமக்கு புலன் உணர்வை ஏற்படுத்தும் இருப்பு அந்த குணங்களைக் கொண்டிருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியாது. அதே போல் காரண காரியத் தொடர்பும் நம் அகவுருக்களால் புலன் உணர்வுகளின் மீது திணிக்கப்படுவது என்கிறார்.

இந்த அகவுருக்களை நாம் புறத்தில் இருந்து அடையவில்லை. இவை அகத்தின் பகுதியாக அதன் அமைப்பாக எப்போதுமே இருப்பது. இந்த அகவுருக்கள் நம் கண்களைப் போன்ற அனைத்து அறிவுப் புலன்களின் மேலும் அணிவிக்கப்பட்ட நிரந்தர கண்ணாடி போல. இந்தக் கண்ணாடியின் வழியன்றி வேறு வகையில் நாம் காண இயலாது. அதனால் நம் அறிதல் என்பது இந்த அகவுருக்களின் மூலம் நாம் அடையும் பட்டறிவிற்கு உட்பட்டது. பகுத்தறிவுவாதிகள் எண்ணுதலுக்கு பிரதானம் கொடுத்து அது வழியே நாம் நம்மை மீறிய அதாவது மீறுநீலை(transcendental) இருப்புகளை அறிய முடியும் என்பதற்கு எதிராக, அவ்வாறு இயலாது; இந்த அகவுருக்களை மீறி வேறு எதையும் சிந்தித்து அறிந்துவிடமுடியாது என்கிறார். அதேபோல் பட்டறிவுவாதிகளின் தரப்பை எதிர்த்து, காணும் காட்சிகளெல்லாம் அவ்வண்ணமே அங்கு இருப்பதில்லை; அவை நம் அகவுருக்களால் திரிபு அடைந்தவை என்கிறார்.

காண்ட் பெர்க்லியைப் போல் சர்வமும் கருத்தென்று சொல்லிவிடவில்லை. நம்மைச் சாராது இருக்கக் கூடியவற்றை ஏற்கிறார். அதே சமயம் நம் அகவுருக்கள் தான் நம் அறிதலை வடிவமைக்கின்றன என்கிறார். இங்கு அகவுருக்கள் என்ற கருத்து நம் அனுபவத்தை கட்டமைப்பதில் பிரதான வேலை செய்கிறது. இது அறிவியங்கியல் ரீதியிலான கருத்து முதல்வாதப் பார்வையாகும்.

காண்ட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தத்துவவாதி. அவருக்குப் பின்வந்த அனைத்து தத்துவவாதிகளின் மீதும் அவரது தாக்கம் இருந்தது. காண்டின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மானிய கருத்து முதல்வாதப் பள்ளி ஒரு பெரும் தரப்பாக வளர்ந்தது. ஹேகல் அதன் முக்கிய தத்துவவாதி ஆவார். அடுத்த கட்டுரையில் அதைப் பற்றி அறிவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.