பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து உலகத் தலைவர்களுக்கு வரிசையாகக் கைலுக்க நேர்ந்ததில் தோள் சுளுக்குடன் இருப்பதாக் கேள்வி. இத்தனைக்கும் அவர் எல்லோருடனும் கைகுலுக்கவில்லை. செட்டியார் முடுக்கா சரக்கு முடுக்கா எனப்பார்த்தே வரவேற்றார். அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பியநாடுகளின் சில தலைவர்களுக்குத்தான் அவருடைய கை குலுக்கல் கிடைத்தது. அடுத்தக் கட்டத் தலைவர்களை வரவேற்றவர் பிரான்சு நாட்டின் பிரதமர் மனுவெல் வால்ஸ். அதற்கடுத்த நிலை உலகத்தலைவர்களை வரவேற்றவர்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் லொரான் பபியஸ்ஸ்ய்ம், சுற்றுப்புற சூழல் அமைச்சர் செகொலின் ரொயாலும். ஆகத் தலைவர்களின் தராதரத்தைப் பொறுத்து வரவேற்பிருந்தது. தவிர 150 உலகத் தலைவர்கள் ஒரே நேரத்தில் கதவை தட்டினால் ஒலாந்துதான் என்ன செய்வார்?
நவம்பர் 13ந்தேதி பிரான்சு நாட்டின் தலை நகர் பாரீஸ் பயங்கரவாதத்தின் தாக்குதலுக்கு ஆளான பிறகு, அதிக எண்ணிக்கையில் உலகத் தலைவர்கள் பங்கேற்கிற மாநாட்டை பிரச்சினைகளின்றி நடத்திக்காட்டவேண்டுமென்பது பிரெஞ்சு அரசுக்குள்ள மிகப் பெரும் சவால். பாரீஸின் பிரதான சாலைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர், மத்திய காவல்துறையினர் பாரீஸ் நகரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். வரலாறு காணாத எச்சரிக்கையுடன் நாட்டின் உள்துறை அமைச்சகமும், பாதுகாப்புத் துறை அமைச்சும் இணைந்து பணியாற்றுகிறார்கள். வட அமெரிக்காவில் ஆரம்பித்து ஆப்ரிக்க கண்டம்வரை பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிற மாநாடு, 295 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கும் நிகழ்வு. அதுவும் தவிர உலகத் தலைவர்களோடு அமைச்சர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், பாதுகாப்பு துறையினர், பத்திரிகையாளர்கள், விருந்தினரை வரவேற்கும் பொறுப்பிலுள்ளவர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்களென 40000த்திற்கும் மேற்பட்டவர்கள் கூடும் அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு, ஏற்பாடுகளில் எவ்வித குளறுபடிகளும் நேர்ந்துவிடக்கூடாதென்பதில் பிரெஞ்சு அரசு மிகக் கவனமாக இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மட்டுமல்ல விருந்தோம்பலிலும் அரசு கவனமாக இருக்கவேண்டும். ஒபாமா பக்கத்தில் புட்டினையோ, ஈரானிய அதிபர் நாற்காலிக்கருகில் இஸ்ரேல் அதிபரையோ விழா ஏற்பாட்டாளர்களால் கற்பனைசெய்து பார்க்க முடியாது. இதுபோன்ற பலதரப்பட்ட பண்பாடுளின் சங்கமத்தில் அவரவர் விருப்பு வெறுப்புகளை கவனத்திற்கொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும்.வீட்டிற்கு யாரேனும் ஒரு விருந்தினர் வந்தாலே பல நேரங்களில் ஒன்று கடக்க ஒன்றை செய்துவிட்டு அசடு வழிகிறோம். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், நாடெங்கும் சந்தேகப் பட்டியலில் உள்ள மனிதர்களையெல்லாம் முன் எச்சரிக்கையாக அரசு கைது செய்தது. வேறு சிலரை வீட்டுக்காவலிலும் வைத்துள்ளது. கைது செய்யப்ப்பட்டவர்களில் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படவர்களில் மதத் தீவிரவாதிகளோடு பசுமை இயக்க போராளிகளும் அடங்குவர். இதற்கிடையில் அரசு நெருக்கடி நிலை பிரகடணத்தின் பேரால் அத்து மீறுகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆக இத்தனை அமளிகளுக்கிடையில் புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் முகமாக COP 21 மாநாடு பாரீஸில் தொடங்குகிறது: ஒரு நாள் இருநாள் மாநாடு அல்ல நவம்பர் 30ல் ஆரம்பித்து டிசம்பர் 11 வரை. COP (Conference of the Parties )21. மாநாட்டின் தற்போதைய நோக்கம் புவின் வெப்பமயமாதல் உயர்வினை 2° க்கு மிகாமலிருக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு கையொப்பமிடவேண்டும். வெப்ப உயர்வை தடுக்காமற்போனால் என்ன ஆகும்? இயற்கை சீற்றங்கொள்ளும் ஏரியை ஆக்ரமித்தவர்களை மட்டுமல்ல ஆக்ரமிக்காத மனிதர்களையும் வெள்ளம் பழிவாங்கத் துடிக்கும். நியூயார்க் நகரம் நீரில் மிதக்கலாம் என்கிறார்கள், மும்பைக் காணாமற்போகலாம் என்கிறார்கள். ஆக ஆபத்துகள் குடிசைகளுக்கு மட்டுமல்ல, மாடிமேலே மாடிகட்டி கோடி கோடி சேர்த்துவைக்கும் சீமான்களுக்கும் இருக்கிறது என்பதால் தான், இது நாள்வரை அழைத்திராத அதிபர்களை எல்லாம் “வீட்டுவரைக்கும் வந்து போங்க கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது” எனக்கூறி வளர்ந்த நாடுகளும் வளராத நாடுகளும் பேச உட்காருகின்றன. இயற்கையின் சீற்றத்தையெல்லாம் ‘இத்திக்காய் காயாதே அத்திக்காய் காய்’ எனப்பாட்டுபாடி திசைதிருப்பமுடியாதென்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உணர்ந்தும் இருக்கின்றன.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நோக்கில், உலகம் விழித்துக்கொண்டு முதல் மாநாட்டை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1979ம் ஆண்டு ஜெனீவாவில்(சுவிஸ்) நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக வானிலை அமைப்பு, உலகச்சுற்று சூழல் அமைப்பு, உலக அறிவியல் கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உலக வெப்பத் தன்மை குறித்து ஓர் ஆய்வினை மேற்கொள்வதென அப்போது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனாக 1990ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தட்பவெப்பநிலை பற்றிய முதலாவது அறிக்கை, புவியின் வெப்ப உயர்வுக்கு மனிதர்களாகிய நாமே முழுக்க முழுக்க பொறுப்பு என்பதை உலகிற்கு உணர்த்திற்று.
1992ம் ஆண்டு ரியோடிஜெனெரோவில் (பிரேசில்) கூட்டப்பட்ட மாநாடு இவ்வகையில் முதலாவது முக்கிய மாநாடு. புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருந்த இருக்கிற நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் மாறிவரும் உலகத் தட்பவெப்ப நிலைகுறித்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமும் இட்டார்கள். அம்மாநாடு தட்ப வெப்ப நிலையைக் கட்டிக் காப்பதில் உலக நாடுகளிடையே இசைவான செயல்பாடுகள் இல்லாததையும், இப்பிரச்சினையில் மனிதகுலத்திடமுள்ள அலட்சியத்தையும் சுட்டிக்காட்டிப் பகிரங்கமாகக் கண்டித்தது.
பின்னர் 1997ல் கியோட்டோவி(ஜப்பான்) கூட்டப்பட்ட மாநாடு முதன் முதலாக வளிமண்டலத்தில் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளப்ப்டுவதின் அவசியம் பற்றி விவாதித்தது. 2007 ல் பாலி(இந்தோனேசியா) மாநாடு, பெரு(சிலி) நகரில் கூட்டப்பட்ட மாநாடு எனக்கடந்து தற்போது பாரீஸில் கூட்டப்படுள்ள மாநாட்டில், பேச்சளவில் மட்டுமல்ல செயல் அளவிலும் வெப்ப மயமாதலைத் தடுக்கும் முகமாக ஒப்பந்தத்தில் உலகத் தலைவர்கள் கையொப்பமிட இருக்கிறார்கள். குறிப்பாக சீனா, இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், ரஷ்யா, பிரேசில் நாடுகளின் கையொப்பத்தை எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஒருவருடமாக இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் ஷரத்தும் நேரங்காலமின்றி விவாதிக்கப்பட்டன. இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஜெனீவாவில் பிப்ரவரி 8 முதல் 12 வரை நடந்த அமர்வில், அடுத்தடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வரையறுத்தனர். கடந்த அக்டோபர்மாதம் 19-23தேதிகளில் போன் நகரில் உலகநாடுகளின் 1300 பிரதிநிதிகள் கூடி COP21 மாநாட்டில் எந்தெந்த பொருள்பற்றி பேசுவது முடிவெடுப்பது என்று தீர்மானித்தனர். இதற்கிடையில் வளர்ந்துவரும் நாடுகள் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு எடுக்கு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், அவற்றின் பொருளாதார இழப்பை ஓரளவிற்கு ஈடுகட்டவும் வளர்ந்த நாடுகள் உதவுவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளன.
ஆங்கிலத்தில் Greenhouse gaz என்றும் தமிழில் பைங்குடி வளிமம்’ என்றும் அழைக்கப்படும் நச்சு வாயுக் கூட்டத்தினை பலவீனப்படுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது பாரீஸ் மாநாட்டின் நோக்கம். கரியமிலவாயுவை அதிகம் வெளியேற்றுவதன் மூலம் வளிமண்டலத்தைப் மாசுபடுத்துகிற நாடாக தற்போதைக்கு சீனா முதலிடத்தில் உள்ளது, கிட்டத்தட்ட புவியில் வெளியேற்றப்படும் நச்சுக் காற்றில் மூன்றில் ஒரு பங்கு சீன நாட்டிலிருந்து வருவது. அந்த வரிசையில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் முதலான நாடுகள் இருகின்றன. ஆனால் சீனா இந்தியா போன்ற நாடுகள் எந்த அளவிற்கு இப்பிரச்சினைக்கு உதவ முன்வருவார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதுநாள்வரை வளிமண்டலத்தை நாசப்படுத்தி தொழிற்புரட்சியின் பலனை ஏற்கனவே அடைந்துவிட்டார்கள் என்றும், மாறாக தாங்கள் தற்போதுதான் தொழில் முன்னேற்றத்தில் பலனை அனுபவிக்கத்தொடங்கியிருப்பதால் இருதரப்பு பிரச்சினையும் ஒன்றல்ல என்பது சீனா இந்தியா போன்ற நாடுகளின் வாதம். எனவே அவர்களின் வளர்ச்சிக்கு போதிய உத்தரவாதம் வளர்ந்த நாடுகளிடம் கிடைப்பதைப் பொருத்ததே பாரீஸ் COP 21ன் மாநாட்டின் வெற்றி. பிரான்சு அரசு மிகவும் மோசமானதொரு சோதனையிலிருந்து மீண்டு மனிதகுலத்தின் நன்மைக்காக, சுற்றுப்புற சூழலைக் காக்கும்பொருட்டு இதுபோன்றதொரு மாநாட்டை அதிகப்பொருட்செலவில் தனது மண்ணில் நடத்துவதென்பது உண்மையில் வரவேற்கக்கூடியதுதான், ஆனால் அதற்கு முன்பாக கீழ்க்கண்ட சுவாரஸ்யமான உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்
Le Rainbow -Warrior
Le Rainbow -Warrior என்ற கப்பல், Greenpeace என்ற உலகளாவிய பசுமை இயக்கத்திற்குச் சொந்தமானது அது நியுஸிலாந்தில் ஆக்லேண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அக்கப்பலை படகொன்றின் உதவியால் நெருங்கிய ஒரு கமாண்டோ குழு வெடிவைத்து தகர்க்கிறது. இது நடந்தது 1985ம் ஆண்டு ஜூலை மாதம் 10ந்தேதி. இக் கமாண்டோ குழு கிரீன்பீஸ் என்கிற அரசு சாரா தீவிர பசுமைஇயக்கப் போராளிகளுக்குச் சொந்தமான கப்பலை ஏன் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கவேண்டும்.
பசிபிக் சமுத்திரத்தில் பிரெஞ்சு பொலினீசியாவைச் சேர்ந்த முரோராவில் பிரான்சு அரசு அணுகுண்டு சோதனைசெய்ய திட்டமிட்டிருந்த நேரம் அது. அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்து ஊடகங்களின் கவனத்தைப் பெற கிரீன்பீஸ் பசுமை இயக்கப் போராளிகள் தங்களுடைய Le Rainbow Warrior கப்பலில் வந்திருந்தனர். அதனை விரும்பாத பிரெஞ்சு அரசு கப்பலை வெடிவைத்து தகர்த்தது. சம்பவத்திற்குப் பின்பு நியூசிலாந்து அரசாங்கத்தின் விசாரணையின் முடிவில் படகில் வந்தவர்களில் இருவரை கைது செய்து விசாரித்தபோது அவர்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின் உளவுப்படை பிரிவைசேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அப்போது பிரான்சுநாட்டை ஆண்டவர்கள் இப்போது பிரான்சு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற இதே சோஷலிஸ்டுகள்தான். அதிபராக இருந்தவர் இடதுசாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த பிரான்சுவா மித்தரான். இச்சம்பவத்தின் காரணமாக உலகத்தின் கேள்விக்குப் பதில்சொல்லவேண்டிய நிலையில் பழி அனைத்தையும் அப்போதைய பிரெஞ்சு ராணுவ மந்திரி ஏற்றுகொண்டார். அப்போதைய பிரதமர் யாரென்று நினக்கிறீர்கள் COP21 மாநாட்டை முன்னின்று நடத்துகிற தற்போதையை பிரான்சு நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இருக்கிற லொரான் பபியஸ் (Laurent Fabius). 1985ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 22ந்தி பிரெஞ்சு உளவுப்படைதான் (DGSE) பசுமை இயக்கபோராளிகளின் படகினைக் குண்டுவைத்து தகர்த்தது என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். சரி குண்டுவைத்த கமாண்டோ யார்? அங்கும் விசித்திரமான தகவல் நமக்குக் காத்திருக்கிறது. அவர் வேறுயாருமல்ல தற்போதைய பிரான்சு நாட்டின் சுற்றுபுற சூழல் அமைச்சர் செகொலின் ரொயால் ( Ségolène Royal) என்ற பெண்மணி. அவர் தற்போதைய பாரீஸ் COP21 மாநாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். நியுசிலாந்து அரசால் கைதுசெய்யப்பட்ட பிரெஞ்சு உளவுப்படை அதிகாரிகளுக்கு என்ன நடந்தது? நியுசிலாந்து நீதிமன்றம் பத்தாண்டு சிறைதண்டனை விதித்து அவர்களை சிறையில் தள்ளியது.
பிரான்சு நிஜமும் நிழலும் முதல் பாகம் நிறைவு பெறுகிறது.