ஜெயகாந்தன் சிந்தனைகள்

8_Jeyakanthan

  • “எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டுதான் மனிதன் பத்து தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்துவிடவில்லை.”
  • “என்னதான் இந்நாட்டுப் பிரதமர் குழந்தைகளை ‘பாரதத்தின் புஷ்பங்கள்’ என்று வர்ணித்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடினாலும், அந்தப் புஷ்பங்கள், வளர்ந்த சமூகத்தின் காலடியில் மிதிபட்டு நசுங்கிச் சாகும் பிரத்யட்ச வாழ்க்கையை காணும்போது வயிறு பற்றி எரிகிறது ! ‘ஓ’ வென்று கதறியழத் தோன்றுகிறது.”
  • “குடுமி வைத்திருப்பவன் பிற்போக்காளன்; கோயிலுக்குப் போகிறவன் பிற்போக்காளன்; நமது புராணங்கள் யாவும் பிற்போக்கானவை; நமது சாஸ்திரங்கள் யாவும் பிற்போக்கானவை என்பது ஒரு முற்போக்கான கொள்கையாய்க் கொண்டாடப்படுகிறது! பெயரை மாற்றிக் கொண்டால் முற்போக்கு; நாத்திகம் பேசினால் முற்போக்கு; பிரியாணி சாப்பிட்டால் முற்போக்கு; தொட்டதற்கெல்லாம் மேனாட்டைப் பற்றிப் பேசுவது முற்போக்கு; நம்மை நாமே இழித்துக் கொள்வதும் நமது விக்கிரகங்களை உடைத்தெறிவதும் முற்போக்கு என்பது மற்றொரு கொள்கை. உண்மையில் இந்த இரண்டு தன்மைகளை வைத்துமட்டும் முற்போக்கு – பிற்போக்கை இனம் பிரிப்பது அறிவாளிகளின் செயலாகாது. எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும், உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்பணித்துக்கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங்கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.”
  • “ஒழுக்கமென்பது ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமே என்று நினைப்பது ரொம்பக் கொச்சையான தீர்ப்பு.”
  • “நான் எந்தக் கொள்கைக்கும், எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலி கட்டிக் கொண்டதில்லை”
  • “காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல்வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும், மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குண நலன்களே காரணமாயிருக்கின்றன.”
  • “எந்த அரசியலில் இருந்து இலக்கியமும், கவிதையும் வெளிவராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல. எந்த அரசியலிலிருந்து பொய்க்கவிதையும் புழுத்த இலக்கியமும் புறப்படுமோ அதுவே நான் தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு. அவ்விதம் நேரும் காலையில் ஆசார்ய துரோணரை எதிர்த்து நான் திருஷ்டத்யும்னனை அனுப்புவேன். பிதாமகர் பீஷ்மரை எதிர்த்து சிகண்டியை அனுப்புவேன். இறுதி விதி அறிந்து இடையில் மனிதாபிமானத்தோடு தூதும் போவேன். வீமனுக்குத் தொடை தட்டியும் காண்பிப்பேன். எனது அன்பர்களின் நலனைக் காக்கும் பொருட்டு எதிரியின் அஸ்திரங்களை எல்லாம் வஞ்சககமாகவும் அபகரிப்பேன்.”
  • “எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)

(அவரது முன்னுரைகளிலிருந்து)