கல்யாணராமனுடன் ஒரு காஃபி

மரவட்டை போல ஊர்ந்து செல்லும் வாகனவரிசைகள் இடையே, இடியாப்பச் சாலைப்பின்னல்களில், மடக்கி மடக்கி ஓட்டும் டாக்ஸிக்காரர்களிடையே வழிதவறிய ஆட்டுக்குட்டியைப் போல மிரளாமல் இருந்தால், வுடி ஆலன் போல நானும் ‘அழகிய நாரிமணிகளும், ஆற்றல் மிகுந்த இளைஞர்களும்’ கொண்ட நியுயார்க்கை ரசித்திருக்கலாம். வால்டர் கெர் தியேட்டர்னு சொன்னாரா, ரெட்கிரேவ்வா, பிராட்வேக்குப் புறவாசல் வழியா போனா பார்க்கிங் கிடைக்குமா, பதினெட்டாம் தெருவில் கிழக்கா மேற்கா என்று சுற்றிச் சுற்றி வந்ததில் பதட்டம்தான் கூடியது.
தன்னுடைய நியுயார்க் சுற்றுப்பயணத்தில் செகாவ்வின் ’த சீகல் ( The Seagull)’ நாடகத்தைப் பார்க்க ஒரு பிற்பகல் நேரம் ப்ராட்வே பக்கம் வந்திருந்த கல்யாணராமன், அதில் ஒரு பகுதியைத் தனியே ஒதுக்கி, ‘வாங்க சந்திக்கலாம்’ என்று அழைப்பு விடுத்திருந்தார். இதை விட்டால் பிராட்வே பக்கமெல்லாம் நாம் போவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் வாய்க்காது என்று தீர்மானித்துக் கொண்டு கிளம்பி ப்ளீக்கர் தெருவின் முனையில் இருந்த லின் ரெட்கிரேவ் தியேட்டர் முன்னர் வந்து சேர்ந்துவிட்டேன். சுற்றிலும் அளவளாவிக் கொண்டிருந்த நாடகப்பிரியர்களைச் சற்று உதறலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது…
”நான் கல்யாணராமன்,” என்று புன்முறுவலோடு வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். சட்டென சிநேகபாவத்துடன் கைகுலுக்கி அருகில் இருந்த காப்பிக்கடைக்கு கூட்டிச் சென்றார். அங்கே அவர் மனைவி கீதா அவர்களும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்,”இங்கே இருந்துகொண்டு எப்படி நம்மூர் விவகாரம்லாம் இவ்ளோ அப்டேடட்டா இருக்கீங்க.”
“இது கூட இல்லேன்னா இணையமும், சோஷியல் மீடியாவும் இருந்து என்னதான் பிரயோஜனம்?”
சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி, அசோகமித்திரனின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்று வியந்து, சி.சு.செல்லப்பா-வின் வாடிவாசல், சல்மாவின் கவிதைகள் என்று பலதும் ஆங்கிலத்தில் செய்திருக்கிறார் என்று பிரமிக்க வைத்தவர். அவருடைய நியூயார்க் பயணத்தைப் பற்றித் தொலைபேசியில் உரையாடியபோதுதான் தெரிந்தது பிரக்ஞை, கணையாழி என்று ஆதிகாலத்துச் சிறுபத்திரிகை உலகில் செயலாற்றிக் கொண்டிருந்தவர் என்று.
ஒரு கோப்பை காஃபியிடையே நிறைய உரையாடினோம். ஐஐடி, ஐஐஎம், இஸ்ரோ என்ற கார்ப்பொரேட் கேரியரிடையே, சிறுபத்திரிகை வட்டம், மொழிபெயர்ப்பு நூல்கள் (அசோகமித்திரனின் ஒற்றன், மானஸரோவர், குறுநாவல்கள், வாஸந்தியின் யுகசந்தி, சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்) என்று ஒரு படைப்பூக்கமிக்க பயணத்தையும் இணைந்தே செய்து வந்திருக்கிறார். பிறகு கல்லூரிப் பேராசிரியர், மீடியா ஆலோசகர் என்று பல்வேறு பரிமாணங்கள். தமிழ் நாட்டில் அண்மையில் துவங்கப்பட்டதொரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆய்வுத் துறையின் தலைவராகப் பங்காற்றியதைப் பற்றி சொல்லும்போது எவ்வித பாவனையுமில்லாமல், ”அந்த காண்டிராக்ட் முடிஞ்சு போச்சு. செஞ்சவரைக்கும் திருப்தி,” என்றார்.
“சமகால இலக்கியம்னா பெருமாள் முருகன், பூமணி போன்றோர் மிகவும் முக்கியமானவர்கள்.”
கடந்த பல பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் சில முன்னணித் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிக் கொஞ்சம் சிலாக்கியமாகவும் அநேகமாகக் ‘கறார்’ பார்வையோடும் உரையாடிக் கொண்டிருந்தவர் ‘இதையெல்லாம் இப்போ எழுதவேண்டாம். என் விமர்சனங்களை இன்னும் சீராக்கிக்கொண்டு, நேரம் அமையும்போது நானே விரிவா எழுதலாம்னு எண்ணம்,’ என்று வம்பு வளர்க்க முடியாமல் கையைக் கட்டிப் போட்டுவிட்டார்.
காந்தியின் இறுதிநாட்கள் பற்றிய தேவிபாரதியின் ‘மற்றொரு இரவு’ கதையை மொழிபெயர்த்ததைப் பற்றி உற்சாகமாகச் சொல்கிறார்.
”இதில ஒரு வேடிக்கை என்னன்னா… நான் கணையாழியில் எழுதின முதல் கதை விட்டல் ராவ்-வோட இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகள் தொகுப்பில் வந்திருக்கு.நான் எழுதின ஒரே சிறுகதை அதுவாகத்தான் இருக்கும். மற்றதெல்லாம் மொழிபெயர்ப்புதான்,” மீண்டும் அதே ‘matter of fact’ புன்முறுவல்.

Thamizh_Author_Writer_Enn_KalyanaRaman

பல்வேறு திக்கிலும் பயணித்த உரையாடலைத் தொகுத்துப் பேட்டி வடிவில் கீழே:

நீங்கள் தமிழ் சிறுபத்திரிகை உலகத்தில் பங்கெடுத்த காலத்தில் பிரக்ஞை, கணையாழி என்று சிறுபத்திரிகை இயக்கம் தீவிரமான செயல்பாட்டில் இருந்தது எனச் சொல்லலாமா? உங்களுக்கான வெளியை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இப்பொழுதும் அப்படியான ஒரு வீச்சு இருக்கிறதாக நினைக்கிறீர்களா? 

அன்று தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழல், திமுக-வின் ஆட்சி / அரசியல் பற்றிய ஏமாற்றம், நாட்டில் அதிகரித்துவந்த கலவரங்களும் அரசின் அடக்குமுறையும் என்போன்றவர்களைப் பொதுவுடமை இயக்கச் சிந்தனைகளின் திசையில் இட்டுச் சென்றன. நக்சல்பாரி இயக்கம், சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் வளர்ச்சிப்பாதை,  அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய வியட்நாம் போர் – இவை மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஜெயகாந்தன் போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கிய ஆர்வம் அன்று பெரும்பாலும் பிராம்மணர்களால் நடத்தப்பட்ட வெகுஜனப் பத்திரிகை எழுத்தையும் தாண்டி சிற்றிதழ் இலக்கியத்துக்கு இட்டுச் சென்றது. ’தீபம்’, ’கணையாழி’ இவ்விரண்டு இதழ்களும் என்னையொத்த தொடக்கநிலை வாசகர்களுக்கான ஒரு முக்கியமான மாற்றுவெளியை உருவாக்கிக் கொடுத்தன. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி ஆசிரியராக இருந்து நடத்திய ’தீபம்’ இதழ், ஒருவகை மரபான இலட்சியவாதத்தின் வெளிப்பாடாக இருந்தது. ’கணையாழி’ வெளிப்படையான மேற்கத்திய பாதிப்புகளுக்கு இடமளிக்கும் தளமாகவிருந்தது. கணையாழியில் எழுதியவர்களிடம் நகரத் தன்னுணர்வு தூக்கலாக இருந்தது என்று நினைகிறேன். கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சுஜாதா – ஏன் மரப்பசு எழுதிய தி ஜானகிராமனும் கூட – மேற்கத்திய இலக்கியங்களுடன் நல்ல பரிச்சயம் உருவாக்கிய ஒரு urban frontier-இலிருந்துதான் எழுதினார்கள்.

இந்தச் சிற்றிதழ்கள் புதிய எழுத்தாளர்களை வரவேற்று அவர்களுக்கு இடமளித்தன. குறிப்பாக, கணையாழி இதழ் இங்கே நாமும் எழுதலாம் என்ற (குருட்டு) நம்பிக்கையை ஏற்படுத்தியது. கணையாழியில் என் முதல் கட்டுரை (அல்லது கட்டுரை போன்ற ஏதோ) வெளியானபோது எனக்கு 18 வயதுதான் என்று நினைவு. கணையாழியின் ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் எனக்கு “சிவசங்கரா” என்ற புனைபெயரைச் சூட்டினார். அந்த இருபக்க ‘அறிமுகம்’ மிகவும் வியப்புக்குரிய வகையில் ஆதவன், மற்றும் வெ.சாமிநாதன் போன்றவர்களால் பேசப்பட்டது. இந்த உத்வேகத்தில் இன்னும் ஒன்றிரண்டு கதைகளை எழுதினேன். அவையும் கவனத்தைப் பெற்றன என்று நினைக்கிறேன். ஐஐடி விடுதியிலிருந்த என்னைச் சந்திக்கச் சில எழுத்தாளர்கள் வந்தார்கள். கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த அசோகமித்திரனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அதே காலகட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கதை ’The Illustrated Weekly of India’வில் அன்று பொறுப்பில் இருந்த உருது எழுத்தாளர் குவார்ரதுல் ஐன் ஹைதர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. அந்த நாட்களில் இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியத்தரமான் புனைகதைகளைப் பதிப்பிக்கூடிய ஒரே இதழ் இதுதான். இங்கே கதை வருவது இலக்கியத்தில் நோபல் பரிசு பெறுவதற்குச் சமானம் என்று அசோகமித்திரன் கிண்டலாகச் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. ஆனால், இந்தத் தொடக்க கால ’வெற்றிகள்’ என்னை எழுத்து வாழ்க்கையில் நிலைகொள்ளச் செய்யவில்லை. மாறாக, என் புனைகதைகள் மிகக் குறுகிய தன்வயப் பார்வையையும் அனுபவங்களையும் சித்தரிப்பதாகவே எனக்குத் தோன்றியது. தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய அறிவும் மிகக் குறைவு என்பதைத் தெளிவாகவே உணர்ந்தேன், எனவே தன்வயமான புனைகதைகள் எழுதுவதைத் தொடரவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

1970-வாக்கில் ’கசடதபற’ தொடங்கியது. அந்த ’வல்லின’ ஏட்டில் படிக்கக் கிடைத்த கதைகளூம் கட்டுரைகளும் கவிதைகளும் பரவசமான் வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடியதாக இருந்தன. ந. முத்துசாமி, ஞானக்கூத்தன், சா கந்தசாமி, க்ரியா இராமகிருஷ்ணன் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழ் படைப்பெழுத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றனர். சில ஆண்டுகள் மட்டுமே வந்த ‘கசடதபற’ மறக்கமுடியாத அனுபவமாகவே இன்னும் இருக்கிறது.

‘கசடதபற’-வைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சில இளைஞர்களால் 1974இல் ’பிரக்ஞை’ என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. ’பிரக்ஞை’ ஆசிரியர் குழுவில் இன்று சொல்வனம் இணைய இதழில் முக்கியப் பொறுப்பேற்றிருக்கும் ரவிசங்கர், ம.க.இ.க-வின் வீராச்சாமி, அமரர் ரவீந்திரன், இன்றைய ‘தளம்’ ஆசிரியர் பாரவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சென்னையில் ஆத்மாநாம், பெங்களூரிலிருந்து நான், பம்பாய்/தில்லியிலிருந்து அம்பை ஆகியோர் எங்களால் முடிந்த அளவு பங்கேற்றோம். ’பிரக்ஞை’ குழுவுடன் பூமணியும் நெருக்கமாக இருந்தார் என்று நினைக்கிறேன்; ஆனால் அந்த காலகட்டத்தில் அவரைச் சந்திக்கவில்லை. ’பிரக்ஞை’ தொடங்கியபோது அந்தக் குழுவினரின் சராசரி வயது 25-க்கும் குறைவாக இருந்தது என்று நினைக்கிறேன். பிரக்ஞையில் நான் பெரும்பாலும் கட்டுரைகளும் புத்தக விமரிசனங்களையும் மட்டுமே எழுதினேன்.

பங்களூரில் வசித்தபோது அங்கே ‘படிகள்’ குழுவினருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்காக பெர்டோல்ட் ப்ரெஹ்டின் ’The Exception and The Rule’ நாடகத்தை ’கானல் நீர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். இது பங்களூரின் புகழ்பெற்ற ’சமுதாயா’ குழுவினரால் அரங்கேற்றப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் இலக்கியத்தின் அகவயத் தோற்றுவாய் பற்றிய பேச்சு அதிகமாகவே இருந்தது. சத்ய தரிசனம், ஆத்ம தரிசனம், உள்ளொளி என்றெல்லாம் தனிமனித ஆளுமையை மையப்படுத்தி இலக்கியக் கோட்பாடுகள் நிறுவப்பட்டன. மற்றதெல்லாம் – குறிப்பாக, ஸோஷலிஸ யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் – குப்பை என்று நிராகரிக்கப்பட்டன. அப்படியே, வணிக எழுத்துக்கள் என்று தமிழ்நாட்டுப் பண்பாட்டுச் சூழலின் பெரும்பகுதியும் குப்பை என்று ஒதுக்கிவைக்கப்பட்டது. இதை மறுத்து மார்க்சியப் பார்வையில் ’இலக்கியமும் சூழலும்’ என்று ஒரு நீண்ட கட்டுரையை ‘பிரக்ஞை’யில் எழுதினேன். எல்லாக் கலைகளைப் போலவும் இலக்கியத்தின் பிறப்பிடமும் நோக்கமுமே மனிதச் சமூகம்தான். சமூகத்தின் எல்லாப் பண்பாட்டு வெளிப்பாடுகளுமே முக்கியமானவை; இலக்கியம், நாம் வாழும் உலகத்தை முழுமையாகக் கண்டறிய வகைசெய்யும் ஒரு கருவூலம். இதை மேட்டிமைத்தனத்தாலும் உள்ளொளி போன்ற மாயாவாதத்தாலும் குறுக்கிவிடக்கூடாது என்று எழுதியிருந்தேன். நம் பார்வை சமூகத்தில் நாம் பெற்றிருக்கும் இடத்தைப் பொறுத்தது என்ற அடிப்படையைக் கூடக் கவனத்தில் கொள்ளாமல்தான் அன்றைய இலக்கிய உரையாடல்கள் நடைபெற்றன. இந்த உண்மைக்குச் சான்றாக ஞானக்கூத்தனின் ’கீழவெண்மணி’ கவிதையை (’அனைத்துக்கும் அஸ்தி கண்டார் / நாகரிகம் ஒன்று நீங்க’) சுட்டியிருந்தேன். இந்தக் கட்டுரையைக் கிண்டல் செய்து அது சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஆக்ஞைப்படி எழுதப்பட்டது என்பது போல வெ.சாமிநாதன் எதிர்வினை செய்திருந்தார் என்று ஞாபகம்.

1979இல் நான் எதிர்பார்த்திராத வகையில் பிரக்ஞையின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது.  அதற்குப்பின் தமிழில் எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன். அதற்கான தொடர்புகளோ உந்துதலோ என்வசம் இல்லை. அடுத்த பத்தாண்டுகளில் வாசிப்பைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்திய அரசியலில் வலதுசாரிப் போக்கு வலுப்பெற்றுவருவதைக் கவனித்துக்கொண்டிருந்தோம். நடுத்தர வகுப்பினரில் பலருக்கு இது வரவேற்கத்தக்க மாற்றமாக இருந்தது என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

எழுபது ஆண்டுகள் நிலைபெற்றிருந்த அக்டோபர் புரட்சி 1989இல் வீழ்ச்சி அடைந்தது. அதுவரை ஒரு மாற்று யதார்த்தத்திறகான குறியீடாக, நம்பிக்கையாக விளங்கிய மாபெரும் அரசியல் அமைப்பு ஓரிரு ஆண்டுகளில் அடையாளமே இல்லாமல் அழிந்துவிட்டது. இந்தியாவிலும் இந்துத்துவத்தின் எழுச்சி, நாட்டை இரத்தக்களரியாக மாற்றியது. (1985 தொடங்கி பதினோரு ஆண்டுகள் குஜராத் மாநிலத்தில் வசித்தேன் என்பதால் இந்த எழுச்சியையும் அது கட்டவிழ்த்துவிட்ட வன்முறையையும் மிக அண்மையிலிருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.) சோர்வும் குழப்பமும் நிறைந்த காலகட்டம் அது. உலகத்தின் ஏழை நாடுகளை உலகமயமாக்கத்தின் திசையில் செலுத்திய காலகட்டமும் அதுதான்.

“God is dead, communism has collapsed, and I am not feeling so hot myself,” என்று நகைச்சுவையாக இந்த மனநிலை பேசப்பட்டது. இப்படியொரு தருணத்தில்தான் மொழிபெயர்ப்பு என்ற தீவின் கரையில் நான் ஒதுக்கப்பட்டேன்.

நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையில் நுழைந்த சந்தர்ப்பம் பற்றி…

1990 என்று நினைக்கிறேன். பணி நிமித்தமாக தில்லி சென்றிருந்தபோது எனக்கு அறிமுகமான கீதா ஹரிஹரன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் கதா நிறுவனத்திற்காக நான்கு தென்னிந்திய மொழிகளிலிருந்தும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தொகுப்பாக வெளியிடும் பணியை மேற்கொண்டிருந்தார். தமிழிலும் சிறுகதைகளைத் தெரிவு செய்வதற்காகத் தான் கருதியிருந்த கதைகளைப் பற்றி என் கருத்தைக் கேட்டுக்கொண்டார். உரையாடலில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இந்தக் கதைகளில் ஒன்றை நீங்களே ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்கூடாது?என்று திடுதிப்பென்று கூறினார். சற்றே விநோதமாக உணர்ந்தாலும் சரியென்று சொல்லிவிட்டேன். நான் மொழிபெயர்த்த முதல் கதை திலீப்குமாரின் முதல் தொகுப்பான ’மூங்கில் குருத்து’-வில் இடம் பெற்ற ’கண்ணாடி’ என்ற சிறுகதை.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஓரளவு தேர்ச்சி இருந்தாலும் ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்வது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். ஒன்றுமே தெரியாமல் இருந்த நிலை ஓரளவுக்கு வசதியாக இருந்தது. முட்டிமோதி, சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வாசிப்புக்குத் தகுதியான ஒரு ஆங்கில வரைவை உருவாக்கிவிட்டேன்.பதிப்பாசிரியர் அதைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொடுத்தார்.

’A Southern Harvest’ தொகுப்பு 1993இல் வெளிவந்தபோது அது பெரும் வரவேற்பைப் பெற்றது. நானும் ஓரளவுக்குத் தரமாக மொழிபெயர்க்கும் திறமையுள்ளவன் என்று சிலர் கருதத் தலைப்பட்டனர். அதன் விளைவாக அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொகுப்புக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த நாட்களில் என் நண்பரும் கவிஞருமான ஜீத் தாயில் அவர்கள் ஆசிரியராக இருந்த ஜெண்டில்மேன் பத்திரிகைக்காக அசோகமித்திரனின் இரண்டு கதைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.

இந்தக் கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகின. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்கக் கூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்புக்கான வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு. எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது. நான் அதைத் தொடர்ந்து செய்து வருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.

இப்பணி தொடங்கி ஐந்து ஆண்டுகள் சென்றபின் 1998இல் The Colours of Evil தொகுப்பு வெளிவந்தது. அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதைகள் பலவற்றை உள்ளடக்கிய இத்தொகுப்பு இன்றும் சிலாகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐந்து புத்தகங்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன:

  • 2002: “Sand and other stories” by Ashokamitran (Orient Blackswan, 2002) (”மணல்”, ”மாலதி” மற்றும் ‘இருவர்’ குறுநாவல்களை உள்ளடக்கியது)
  • 2005: “Mole!”by Ashokamitran (‘ஒற்றன்’ நாவலின் மொழிபெயர்ப்பு)
  • 2008: “At the Cusp of Ages” by Vaasanthi (‘யுகசந்தி’ நாவலின் மொழிபெயர்ப்பு)
  • 2010: “Manasarovar” by Ashokamitran (’மானசரோவர்’ நாவலின் மொழிபெயர்ப்பு)
  • 2013: “Vaadivaasal / Arena” by C S Chellappa (‘வாடிவாசல்’ நாவலின் மொழிபெயர்ப்பு)

En_KalyanRaman_Solvanam

                                                                                                                                                     கல்யாணராமன்

அவ்வப்போது அசோகமித்திரன், சல்மா உட்படப் பல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறேன். தற்சமயம் இரண்டு முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

நீங்கள் சமகாலக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அதைப் பற்றி…

கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதும் தற்செயலாகத்தான். 2002-வாக்கில் ஒரு பெண் கவிஞர் தன் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு ஒரு நண்பர் மூலம் கேட்டுக்கொண்டார். எனக்குக் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் எந்த முன் அனுபவமும் கிடையாது. மிகுந்த தயக்கத்துடன் ’முயன்று பார்க்கிறேன்’ என்றேன். அந்தப் பத்து கவிதைகளை மொழிபெயர்க்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பிடித்தன. கவிதைகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். மொழி, தொனி மட்டுமல்லாமல், சொற்சிக்கனம், ஓசை, லயம் எல்லாம் கூடிவரவேண்டும். அனைத்துக்கும் மேலாக கவிதை வரிகளுக்கிடையே பொதிந்திருக்கும் சொல்லப்படாத நுட்ப அசைவுகளும் மொழிபெயர்ப்பில் வரவேண்டும். ஒரு கவிதையில் முழுவதும் அமிழ்ந்து கவிக்குரலைத் துல்லியமாக உணர்ந்தாலன்றி அக்கவிதையை வெற்றிகரமாக மொழிபெயர்க்க இயலாது. சமகால ஆங்கிலக் கவிதைகளின் சொற்தேர்வு மற்றும் லயத்துடன் நல்ல பரிச்சயம் தேவை. கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு நிறைய அவகாசமும் கடும் உழைப்பும் தேவை.

அந்த தொடக்கத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணிப் பெண் கவிஞர்களான சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி மற்றும் சுகிர்தராணியின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். இவை பல தொகுப்புகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவை தவிர என்.டி.ராஜ்குமாரின் கணிசமான கவிதைகளை அண்மையில் (2011 & 2012) வெளிவந்த தலித் இலக்கியத் தொகுப்புகளுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என்.டி.இராஜ்குமாரின் கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏன் பரவலாக அங்கீகாரம் பெறவில்லை என்பது எனக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. 2009இல் சாகித்ய அகாடமியின் ’இண்டியன் லிடரேச்சர்’ இதழுக்காக குட்டி ரேவதி தொகுத்து அறிமுகப்படுத்திய தமிழ்நாடு / இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். இவற்றில் இலங்கைக் கவிதைகள் பெரும்பாலும் ஈழப் போர் பற்றிய கவிதைகள். இவை ஆங்கிலத்தில் போர்க்கவிதைகள் என்று அறியப்படும் புகழ்பெற்ற படைப்புகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவை இல்லை என்றுதான் நினைக்கிறேன். இந்தத் தொகுப்பு எனக்கு மிகவும் நிறைவளிப்பதாக இருந்தது.

’தி லிட்டில் மேகசின்’ பதிப்பித்த ’India in Verse’ (2011) தொகுப்புக்காக ஆத்மாநாம், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட பத்து கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தேன்.

மற்றபடி நான் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான கவிஞர்கள்: எம். யுவன், தேன்மொழி மற்றும் பெருந்தேவி. ஏறக்குறைய இருநூறு கவிதைகள் என் மொழிபெயர்ப்பில் அச்சில் வந்திருக்கின்றன. ஆனால் தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தொகுப்பாகப் பதிப்பிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

தமிழில் நிறையப் பேர் கவிதை எழுதுகிறார்கள். சிறப்பாக எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். இவர்களைத் தமிழ்நாட்டுக்கு வெளியே விரிவான வாசகர் தளத்துக்கு எடுத்துச் செல்ல முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது ஓரிருவர் செய்யக்கூடிய காரியமல்ல. தமிழ்நாட்டிலிருக்கும் இலக்கிய, ஊடக அமைப்புகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மொழிபெயர்ப்பின் வரலாறு மற்றும் கோட்பாடுகளை மொழிபெயர்ப்பாளர் தெரிந்து வைத்திருப்பது அவசியம்தானா?

அவசியம் என்றுதான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது சொற்கள் தொடர்பான விடயம் மட்டுமல்ல; பெரும்பாலும் சொற்களுக்கப்பாற்பட்டதும் கூட. எனவே, மொழிபெயர்ப்பின் பரிமாணங்களையும் சாத்தியங்களையும் வரையறைகளையும் ஆழமாகப் புரிந்து கொள்வது மொழிபெயர்ப்பாளரின் உள்ளுணர்வைச் செம்மைப்படுத்தி அவரைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.

உலக வரலாற்றில் மொழிபெயர்ப்பு மாபெரும் பங்கை ஆற்றியிருக்கிறது. பண்டைய நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடல்கள், மதங்களின் தேவவாக்கும் புராணங்களும் பல்வேறு மொழிச் சமூகங்களிடையே பரவியதும் கண்டங்களுக்கிடையே வணிகம் தழைத்துப் பெருகியதும் மொழிபெயர்ப்பில்லாமல் நடந்திருக்க முடியாது. அதுவும் இந்திய துணைக்கண்டத்தில் புராணங்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு நம் காலத்தை வந்தடைந்திருப்பது நம் நேரடி அனுபவம். பதினைந்தாம் நூற்றாண்டில் கபீர் போஜ்புரியில் எழுதிய பாடல்கள் உருது, பஞ்சாபி, இராஜஸ்தானி, மால்வா, குஜராத்தி, கச்சி போன்ற மொழிகளில் எளிய மக்களால் மொழிபெயர்க்கப்பட்டு நானூறு வருடங்களுக்கும் மேலாக வாய்மொழி மரபாக நிலைத்திருக்கும் அதிசயத்தையும் நாம் பார்க்கிறோம். ஏன், இன்று இலக்கியம் பயின்ற எவரும், உலகத்தின் மகத்தான எழுத்தாளர்கள் உட்பட, தங்கள் இலக்கியத் திறனை, பார்வையை, மொழிபெயர்ப்புகளின் உதவியின்றி வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. மொழிபெயர்ப்பு என்பது காலம்காலமாக உலகுக்கு அத்தியாவசியமாக விளங்கிவரும் பங்களிப்பு என்பதைப் புரிந்துகொள்வது தற்கால உலகத்தின் மொழிபெயர்ப்பு பற்றிய அறியாமையை மீறி அந்தத் துறையில் ஆர்வம் கொள்ளவைக்கும்.

இரண்டாவதாக, மொழிபெயர்ப்பு பற்றிய அறிஞர்களின் சிந்தனைகளையும் உள்வாங்குவது நம் பணியைச் செறிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன். ’மொழிபெயர்ப்பாளரின் பணி’ என்ற தன் கட்டுரையில் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமின் “ஒரு பிரதியின் அயல்தன்மையைத் தாற்காலிகமாக ஏற்கும் வழிவகைதான் மொழிபெயர்ப்பு” (Translation is a provisional means of coming to terms with the foreignness of a text) என்கிறார்.

நாம் உருவாக்கும் பிரதி என்றுமே தாற்காலிகமானது எனும் புரிதல் நம் கற்பனையைக் கட்டவிழ்த்து சொல் தேர்வுகளை மேலும் நுட்பமாக்க வல்லது.

இதே போல மொழிபெயர்ப்பு, பெறுமொழிக்கு மட்டுமல்ல பெறும் காலத்துக்கும் பொருந்திவருவதாக இருத்தல் வேண்டும். நம் பிரக்ஞை தவிர்க்கமுடியாமல் நம் காலத்து மொழிக்குள் உறைந்திருப்பது. எனவே மொழிபெயர்ப்பு எப்போதும் சமகால மொழியில் மட்டுமே செய்யப்படுவது. நவீனக் காதல் கவிதையை திணைப்பாடல் போன்ற வடிவத்தில் மொழிபெயர்ப்பது, அட்டைக் கிரீடத்தை அணிந்துகொண்டு அண்ணா சாலையில் நடை பயில்வதற்கு ஒப்பானது.

மொழிபெயர்ப்பு தொடர்பான கட்டுரைகளைப் படிப்பது இந்த அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ள உதவும். பெஞ்சமினின் கட்டுரையைத் தவிர ஸூசன் ஸாண்டாக்கின் ’The World as India’ கட்டுரையும், ஈடித் க்ராஸ்மானின் (Edith Grossman) ’Why Translation Matters’ நூலும் முக்கியமானவை.

மொழிபெயர்ப்பின் செய்முறை பல தொழில்முறை நுட்பங்களால் நிறைந்தது. இவற்றை எந்தப் பாடப் புத்தகத்திலும் கண்டறிய முடியாது. செய்துதான் கற்கவேண்டும். Practice makes perfect என்பார்கள். மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, தொடர்ந்து பணியாற்றினால் செயல்திறன் முழுமையடையாவிட்டாலும் தரத்தில் கணிசமான முன்னேற்றம் காணமுடியும்.

KalyanaRaman_English_Translated_Works_Noted_Tamil_Works

வட்டார வழக்கு என்பது இலக்கியத்தின் முக்கியக் கூறாக முன் நிறுத்தப்படும் இக்காலகட்டத்தில் மொழிமாற்றத்திற்கான வெளி எப்படி இருக்கிறது?

வட்டார வழக்கு என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. வட்டார இலக்கியங்கள் கூட உரையாடல்களைத் தவிர பெரும்பாலும் முறைசார் மொழிநடையில்தான் எழுதப்படுகின்றன. எனவே, வட்டார வழக்கில் எழுதப்பட்ட தமிழ்ப் படைப்பை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும்போது பேச்சுமொழியையும் முறைசார் மொழிநடையில்தான் செய்யவேண்டும். வட்டார வழக்கில் எழுதப்பட்ட படைப்புகள் மொழிமாற்ற வெளியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றுதான் நினைகிறேன். என் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்திருக்கும் “வாடிவாசல்” நாவலில் வரும் உரையாடல்களும் இந்த அணுகுமுறையைக் கொண்டுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பெருமாள் முருகனின் கொங்குநாட்டு வழக்கில் எழுதப்பட்ட இரு நாவல்கள் (’கூளமாதாரி’, ‘நிழல் முற்றம்’) வ. கீதாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

உங்கள் மொழிபெயர்ப்புக்கு வாசகர்களிடையே வரவேற்பு எப்படி? உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் எந்த அளவில் இருக்கிறது?  

பொதுவாக இந்திய மொழி இலக்கியங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிப்பவர்கள் அவரவர் மொழி இலக்கியங்களில் தீவிர ஈடுபாடுடையவர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எந்த இந்திய மொழியும் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே பயின்றவர்கள் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பக்கம் ஒதுங்குவதில்லை; அதற்கான அவசியமும் அவர்களுக்கில்லை.

எனவே, வாசகர் தளம் என்பது இத்தகைய சூழலில் ஒரு மாயத் தோற்றமாகவே இருந்துவருகிறது. வேற்று மொழியைச் சார்ந்த நண்பர்கள்தான் என் முதன்மையான வாசகர்கள்; அதற்கப்புறம் ஆங்கில பதிப்புத் துறையைச் சார்ந்தவர்கள். இவர்களைத் தவிர ஊடகங்களில் பேசப்படுவது மிகவும் அரிது. ஏனென்றால், இந்த ஆங்கில ஊடகங்களின் விமர்சனப் பக்கங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இந்தியர்களின் அதிகாரத்தில் இருக்கின்றன. இவர்களுக்கு பெரும்பாலும் இந்திய மொழிச் சூழலைப் பற்றிய அறிவும் அக்கறையும் இருப்பதில்லை. ‘வாராவாரம் எவ்வளவோ புத்தகங்கள் என் மேஜைக்கு வந்து சேரும்போது, எல்லா புத்தகங்களுக்கும் மதிப்புரை செய்ய இயலாது,’ என்று அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலை புறந்தள்ளிவிட்ட மேதாவிகள் இந்தியப் பத்திரிகையுலகில் உண்டு.

தனிச் சந்திப்புகளில், நான் மிகவும் மதிக்கும் வாசகர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரமும் பாராட்டும்தான் எனக்குத் தேவையான ஊக்கத்தைத் தருகிறது. இதைத் தவிர என் மொழிபெயர்ப்புப் பணிக்கு ஒரு முக்கியமான அரசியல் நோக்கமும் உண்டு.

அதை விளக்க முடியுமா?

1990களில் IWE எனப்படும் ‘ஆங்கிலத்தில் இந்திய எழுத்து’ அசுர வளர்ச்சியை அடைந்தது. இதற்கு உதவியாகச் சூழலில் பல காரணிகள் இருந்தன.இந்த வளர்ச்சியின் விளைவாக IWE இந்திய இலக்கிய வெளியில் தன்னை மையப்படுத்திக் கொண்டது. ஊடகங்கள் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில படைப்புகளுக்கு அளித்த இடத்தையும், மதிப்பையும் இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குச் சிறிதும் அளிக்கவில்லை. பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணமும் அதிகாரமும் IWEயை முன்னிறுத்தின. இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகள் குறுகிய பார்வையையும் நோக்கங்களையும் கொண்டவை என்றெல்லாம் சொல்லப்பட்டது. இன்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இலக்கிய விமர்சகர்கள் இந்திய மொழி இலக்கியங்களைப் பற்றி அக்கறை காட்டுவது அரிதாகத்தான் தென்படுகிறது. இது நம் நாட்டில் ஆங்கிலம் படித்தவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் ஆதிக்க அரசியலின் இன்னொரு வெளிப்பாடுதான் என்று நான் கருதுகிறேன்.

இந்த நிலையில் நம் தேசத்தின் இலக்கியம் பற்றி – தவிர்க்கமுடியாமல் ஆங்கிலத்தில் நடைபெறும் – சொல்லாடலில் இந்திய மொழி இலக்கியங்கள் தங்களுக்குரிய இடத்தை மீண்டும் பெறுவது முக்கியம் என்று நினைக்கிறேன், இந்தச் சூழலில் சிறந்த இந்திய மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது அவசியமாகிறது. முன்னணிப் பதிப்பகங்களின் ஆதரவுடன் மொழிமாற்றப் படைப்புகள் ஓரளவு பெருகிவருகின்றன. ஆனால் பொதுவெளியில் அவற்றுக்குரிய விளம்பரத்தையோ, மதிப்பையோ அவை பெறுவதில்லை. இந்த நிலையில் மாற்றம் காண்பதற்கான முதல் வேலை இந்திய மொழிகளிலிருந்து தரமான மொழிமாற்றப் படைப்புகளைப் பொதுவெளியில் நிறைப்பது என்பது என் எண்ணம்.இதை ஒரு இயக்கமாகவே செய்யவேண்டும். மற்ற இந்திய மொழி பேசுபவர்களும் இந்த மொழிமாற்றப் படைப்புகளின் மூலமாக தங்கள் இலக்கிய அனுபவத்தைச் செழுமைப்படுத்திக்கொள்ள இயலும். தாய்மொழியில் தேர்ச்சி பெறாமல் ஆங்கிலத்தை நாடியிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு உண்மையான இலக்கிய அனுபவத்தையும் இப்படைப்புகள் தரக்கூடும்.

ஜனநாயக இந்தியாவில் இந்திய மொழிகளும் அவற்றைச் சார்ந்த சமூகங்களும் தமக்குரிய இடத்தைப் பெறவேண்டும். மொழிமாற்றப் பணி இந்த நோக்கத்தை அடைவதற்கான எளிய பங்களிப்பு மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் படைப்புகளைப் பற்றி ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்துவருகிறது.ஜோ டி க்ரூஸின் ’ஆழிசூழ் உலகு’, அசோகமித்திரனின் ’தண்ணீர், பா.விசாலத்தின் ’மெல்லக் கனவாய், பழங்கதையாய்…’ மற்றும் பூமணியின் ’அஞ்ஞாடி’ பற்றிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பெருமாள் முருகனின் நாவல்கள் பற்றிய கட்டுரை டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கிறது.

நீங்கள் பணியாற்றிய தொலைக்காட்சி நிறுவனத்தில் எடுத்த சில முன்னெடுப்புகள் பிற ஊடகங்களிலிருந்து எப்படி வேறுபடுகின்றன? தமிழ் பார்வையாளர்களின் அதி முக்கியத் தேவையான மெகா சீரியல்கள் போன்றவற்றைத் தவிர்த்து என்னதான் புதியதாகச் செய்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மெகா சீரியல்கள் இடம்பெறாத சானலாகத்தான் அந்தத் தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.  அந்த திட்டத்தை நிறைவேற்றமுடியாமல் போனது சூழலின் தாக்கம்.

ஆனால் புதியதாகப் பல நிகழ்ச்சிகளை வடிவமைத்திருந்தோம். தற்கால வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொன்றுக்கும் அதன் சமூக/வரலாற்றுப் பின்னணி பற்றிய அறிவு; தரவுகளின் அடிப்படையில் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துதல்; சமூகப் பிரச்சினைகளை அவற்றின் பல்வகையான ஸ்டேக்ஹோல்டர்களின் பார்வைகளைக் கொண்டு விவாதித்தல்; சிந்தனையளவில் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள சிக்கலான தொடர்புகளைப் புரிந்து கொள்ளுதல்; காதல், கல்வி, விளையாட்டு, திருமணம் போன்ற வாழ்க்கையின் அந்தரங்கமான கூறுகளின் வரலாற்றையும் அவை சார்ந்த பிரச்சினைகளையும் கலைகள் மூலமாக வெளிப்படுத்துதல் போன்றவை எங்களுக்கு முக்கியமாக இருந்தது. இந்த அக்கறைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பது சவால்தான், ஆனால் சாத்தியமற்றது அல்ல.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொலைக்காட்சி சாத்தியமாகும் என்று நம்புவோம். மாற்றலுக்கான முயற்சிகள் தொடர்ந்து பல தளங்களில் மேற்கொள்ளப்படவேண்டும்.

கணிக்க முடியாத அளவில் விரிவடைந்து கொண்டிருக்கும் சோஷியல் மீடியாவின் தாக்கத்தினால், ஊடகங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் என்ன? தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்களும், முன்னெடுப்புகளும் பெருகும் வாய்ப்புண்டா?

தம் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துவதற்கும் நிகழ்ச்சிகளை முன்வைத்து ஆர்வலர் குழுக்களை உருவாக்கவும் நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களின் வசதிக்கேற்ப offline வழிகளில் கொண்டு சேர்க்கவும் சோஷியல் மீடியா மரபான ஊடகங்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது; பயன்பட்டும் வருகிறது.

ஒருவழிப் பாதையாகச் செயல்பட்டு வரும் தொலைக்காட்சிகளின் அதிகாரத்தை சோஷியல் மீடியா விமர்சனம் ஓரளவு மட்டுப்படுத்தக்கூடும் என்பது உண்மைதான். ஆனால் காணொளி ஊடகங்களுக்கே உரித்தான தாக்கத்தை 24 மணி நேரமும் செலுத்தக்கூடிய தொலைக்காட்சிகளின் வலிமை அவ்வளவு சீக்கிரம் குறைந்துவிடாது என்பதுதான் என் கணிப்பு. தொலைக்காட்சி ஊடகங்கள் சமூகத்தில் சில அதிகார மையங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றன. அம்மையங்கள் பொதுவெளியை சோஷியல் மீடியாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு விலகிப்போகும் சாத்தியம் இல்லவே இல்லை. சோஷியல் மீடியாவில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையை விடப் பன்மடங்கு அதிகமான பார்வையாளர்களைக் கட்டிப்போடும் தொழில்நுட்பத் திறனை கைவசம் வைத்திருக்கும் தொலைக்காட்சி உடைமையாளர்கள் எதற்கு அஞ்சவேண்டும்?

இஞ்சினியர், இஸ்ரோ, இலக்கியம் என்ற ஒரு விநோதக் கலவையாக உங்கள் வாழ்க்கை இருந்திருக்கிறதே. இஸ்ரோவுக்கு போன இலக்கியவாதி என்று வேடிக்கையாக சொல்லத் தோன்றுகிறது. உங்களுடைய தமிழார்வத்திற்கான சூழலும் பின்னணியும் எப்படி அமைந்தது?

(சிரித்துக் கொள்கிறார்) Midnight Childrenனு சொல்வது போல, இந்தியா சுதந்திரமடைந்த சில ஆண்டுகளுக்குப்பின் திருச்சியில் காவேரிக்கரையோரமா ஒரு கிராமத்தில்தான்பா பொறந்தேன். வளர்ந்ததெல்லாம் சென்னைன்னாலும் அந்தக் காவிரி மணம் விட்டுப் போகல.

எட்டாவது வகுப்பு வரை தமிழ்வழிக் கல்விதான். அப்பல்லாம் பள்ளியில் தமிழ்ப்பாடம் மிகுந்த ஈடுபாட்டோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அன்றைய பண்பாட்டுச் சூழலில் பாரதியார், கண்ணதாசன் மற்றும் ஜெயகாந்தன் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி வழிகாட்டும் மனிதர்களாக இருந்தனர். சமூகம் தொடர்பான சிந்தனை, சோஷியல் அவேர்னஸ் பரவலாக இருந்தது.நேரு, காமராஜ் போன்றவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டு நாட்டைக் கட்டமைக்கும் திட்டங்கள் செயல்வடிவம் பெற்றிருந்தன. இடதுசாரி மனப்பாங்கு இயல்பாகவே சமூகத்தில் நிலைபெற்றிருந்ததாகத்தான் இப்போது தோன்றுகிறது.

அது திமுக வேகமாக வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலகட்டமும்கூட. அந்தத் தாக்கம் சமூகத்தில் எல்லோரிடமும் வியாபித்திருந்தது. “கூலி உயர்வு கேட்டார் அத்தான்”, “வெட்ட வெட்ட மரம் வளருவதைப் போல, குருதி கொட்டக் கொட்ட கழகம் வளரும்” போன்ற கோஷங்கள்லாம் இப்பவும் நினைவில் இருக்கு. ஆனால் திமுகவின் தமிழ் எங்களை ஈர்க்கவில்லை. பள்ளியில் நாங்கள் பயின்ற தமிழ் வேறு தரத்தினது.

திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஒரு முக்கியக் காரணம். அந்தப் போராட்டத்துக்கு எதிராக அந்நாள் மத்திய, மாநில அரசுகள் கையாண்ட அடக்குமுறை தமிழ்ச் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிறகு ஐஐடியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோதுதான் தீவிரமாக ஏதாவது எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அப்புறம் ஐஐஎம் கல்கத்தா.அப்போதான் இந்திய வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றை ஆய்ந்தறியும் திறனை வளர்த்துக் கொண்டேன்.  என் பேராசிரியர்களில் பலர் மார்க்சியச் சிந்தனைகளில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களாய் இருந்தனர். அவர்களுடைய வழிகாட்டுதலின் விளைவாக உலக அரசியல், பொருளாதார அமைப்பு பற்றிய பார்வை விரிவடைந்தது. என் இலக்கிய ஆர்வமும் வாசிப்பும் தொடர்ந்தன.

படிப்பு முடிந்ததும், தனியார் துறையில் பணியாற்றுவதற்குப் பதிலாக ISRO-வில் சேரணும்னு விரும்பித் தேர்ந்தெடுத்தேன். ISRO, இந்தியச் சூழலிலேயே ஒரு வித்தியாசமான அரசு நிறுவனம். தொடர்ந்து தன் செயல்திட்டங்களை உரிய காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றும் முனைப்பும் மன உறுதியும் அர்ப்பணிப்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அமைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

அந்தச் சூழலும் இலக்கிய முன்னெடுப்புகளுக்கு மிகவும் தூண்டுகோலாக இருந்ததுன்னுதான் சொல்லணும். அப்புறம் டெலிகம்யூனிக்கேஷன்ஸ், டீச்சிங், மீடியா என்று பல வழிகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், இலக்கியம் எப்போதும் கூடவே வரும் தோழனாக இருக்கிறது. இனியும் இருக்கும்.

solvanam_photo2
ஸ்ரீதர் நாராயணன்

அடுத்து என்ன?

இப்போதைக்கு சப் பிடிச்சு க்வீன்ஸ் போக வேண்டியதுதான்.சென்னை வரும்போது கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க.

புன்னகைத்தபடி, மனைவி சகிதம் கிளம்பிப் போகிறார்.

தமிழ் இலக்கியத்தைப் பெருமளவு வாசகர்பால் கொண்டு சேர்க்கும் சீரிய பணியை, சந்தடியில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வெகு சிலரில் ஒருவரான கல்யாணராமன் தொடர்ந்து இதே மனநிறைவும், மகிழ்ச்சியுமாகப் பங்காற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

வீதியெங்கும் விளக்குகள் எரியத்தொடங்கிய பின்மாலைப் பொழுது. வீடு திரும்பும் வழி இப்பொழுது தெளிவாகத் துலங்க நிதானமாக என் நடையை தொடங்குகிறேன்

4 Replies to “கல்யாணராமனுடன் ஒரு காஃபி”

  1. சுவையான நேர்காணல் ; சுவாரசியமான எழுத்து. திரு கல்யாணராமன் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன். எனவே இப்பேட்டியை படிக்கையில் அவர் முன்னால் உட்கார்ந்து அவர் பேசுவதை கேட்பது போலிருந்தது.

  2. ஆறு மாதங்கள் முன்பு நியூஜெர்சியில் என் மகள் வீட்டில் திரு கல்யாணராமனின் மானசரோவர் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தவுடனேயே என் மகளிடம் சொன்னேன், இது மொழிபெயர்ப்பே அல்ல, ஒரிஜினலாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டதுபோல் உள்ளது என்று. அதை மீண்டும் இரண்டு முறை படித்தேன்.அவ்வளவு அழகான மொழிபெயர்ப்பு. அவரை சந்திக்கவேண்டும். மின்னஞ்சல் முகவரி தருவீர்களா?

Leave a Reply to இராய செல்லப்பாCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.