எண்ணெய்யும் தண்ணீரும்: வீணாகிறதா எரிவாயு?

கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு. 24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள்.