அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.
