ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு

குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?

விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?
தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் என்பவரும் & டானா மாக்கென்ஸி என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.