ஒரு சமூகம் எதைக் கைவிடுகிறது? எதற்காகக் கைவிடுகிறது? எந்த விதிகளைத் தளர்த்திக் கொள்கிறது? இக்கேள்விகள் சமூக மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. உதாரணமாக, பிராமணர்களுக்குக் கடல் தாண்டிச் செல்வது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. மூன்று கால சந்த்யாவந்தனமும் கட்டாயமானதாகக் கருதப்பட்டது. ஆனால் நவீனக் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்ட பிராமண சமூகம் இவ்விரு விதிகளையும் கணிசமாகத் தளர்த்திக் கொண்டதைக் காண்கிறோம். அங்கு பழமைக்கும் நவீனத்துக்குமான ஒரு மோதல் உருவாகிறது. தலைமுறைகளுக்கிடையே விவாதம் எழுகிறது. இதேபோன்ற உரையாடல்கள் ஜைன சமூகத்திலும் நிகழ்ந்துள்ளன. இம்மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேவை உள்ளது.
