கானுயிர் புகைப்படக் கலைஞர்(Wildlife Photographer) திரு.ஜெயராமன் இத்துறையில் பிரபலமானவர். 1970-களில் துவங்கி இன்று வரை சுமார் 50 வருடங்களாக தொடர்ந்து பயணிக்கும் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர். உலகளவில் பல விருதுகளை பெற்றவர். பல புது வகை உயிர்களுக்கு இவரது பெயரின் அடிப்படையில் என்று பெயர்(Myrmarachne jayaramani & Roorchestes jayarami) சூட்டப்பட்டுள்ளது. இத்துறையில் தனது ஈடுபாடு குறித்து பேசும் போது ரசனை என்பதை தாண்டி, அது தன்னுடைய இருத்தல் சார்ந்தது என்று சொல்கிறார். தனது அனுபவத்தை பற்றி பேசும் ஜெயராமன் இப்படி சொல்கிறார் : “அதிக நாட்கள் கானகங்களிலே இருப்பதாலும், ஒரு நாளின் அதிக நேரத்தை இயற்கைச் சூழல்களுக்கு மத்தியிலேயே செலவழிப்பதாலும் ஒரு மனிதனுக்கு அதிக முன்னெச்சரிக்கை உணர்வு, சூழலோடு ஒத்துப் போகிற தன்மை, உடன் எதிர்வினை புரியும் குணம் அனைத்தும் வந்து விடுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளின்படி, ஒரு தேர்ந்த இயற்கையியலாளன் மற்றும் கானுயிர் புகைப்படக் கலைஞன் மேன்மையான நடத்தைகளையும், உயர்ந்த மனிதத் தன்மைகளையும் கொண்டு நீண்ட நாட்கள் சீரான உடல்நலத்துடன் வாழ்கிறான்”. கானுயிர்கள், பறவைகள் குறித்து ஆழமான புரிதல்களை கொண்டிருக்கிறார். சூழலியல், அதன் சமநிலை குலைவு மற்றும் இதனால் மனித குலம் அடையப் போகும் வீழ்ச்சி குறித்தும் தனது கருத்துக்களை விரிவாக இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார்.