சில தெருக்கள், சில உலகங்கள்

This entry is part 1 of 1 in the series காசி
  • சில தெருக்கள், சில உலகங்கள்

சைக்கிள் ரிக்க்ஷாவின் இருக்கையைச் சரிகை கோர்த்த சிவப்பு வண்ணப் பட்டு சீலை மறைத்திருந்தது. வாயில் குதப்பிய மாவாச் சாறை அடிக்கடி தரையில் உமிழ்ந்தவாறு இருந்த ரிக்க்ஷா இழுப்பவன் திணறிக்கொண்டிருந்தான். வயிறு முதுகைத் தொட, விலா எலும்புகள் புடைத்து நிற்க, ரிக்க்ஷாவை நகர்த்தப் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான். ஆனால், சோடா பாட்டிலின் கழுத்தில் சிக்கிய கோலிக்குண்டைப் போல் ரிக்க்ஷா அந்தக் குறுகிய சந்தில் மாட்டிக்கொண்டு முனகியது.

சந்தின் ஒரு பக்கம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் கைப்பிடி துருத்திக்கொண்டு ரிக்க்ஷாவை உராய்ந்து கோடுகளைக் கிறுக்கியது. மறுபக்கம் பெருத்த காளை ஒன்று, கொஞ்சம் வழிவிடுகிறாயா என்று ரிக்க்ஷா இழுப்பவனைச் சோம்பலாகப் பார்த்தது. எதிரே அணிவகுக்கத் தொடங்கிய இருசக்கர வாகனங்கள் பொறுமையிழந்து, ஒலிப்பான்கள் வழியே அவற்றின் கோபத்தை வெளிப்படுத்தின. ‘பாராத்திற்கு’ வாசிக்க வந்த பேண்ட் கோஷ்டி, தன் இசையாலேயே வண்டியை இந்த நெருக்கடியிலிருந்து விடுவித்துவிடலாம் என்று நினைத்ததோ என்னவோ, மிக உற்சாகமாக ‘சய்ய சய்ய சய்யா சய்யா’ பாடலை அதிரவிட்டுக்கொண்டிருந்தது.

ரிக்க்ஷா இழுப்பவனின் முகம் வியர்த்து, பதட்டம் குடியேறியது. மனிதர்களை ஒன்றும் செய்வதற்கில்லை என்று எண்ணினானோ என்னவோ, ‘ஹய்’ என்று காளையின் முதுகில் அறைந்தான். காளை அசரவில்லை. நிதானமாக வாலைச் சற்று உயர்த்தி சிறுநீர் கழித்து, இயற்கையின் உபாதைகளை அணை போட்டெல்லாம் தடுக்க முடியாது என்று கருதியது போல், மேலதிகமாகச் சாணமும் இட்டது. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பொறுமையின்மையும் அதிகரித்து, பெரும் சத்தமாக எழுந்து சய்ய சய்யாவை மூழ்கடித்தது. கரடுமுரடான தடித்த வார்த்தைகள் தீபாவளி ராக்கெட்டுகள் போல் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தன. ரிக்க்ஷாவை விட, அதை இழுத்து வந்தவன்தான் அந்தச் சந்தில் நன்கு சிக்கிக்கொண்டான் என்றே தோன்றியது.

சூழ்நிலை, இருபக்கமும் இழுபட்ட கயிறு போல், அறுபடும் நிலைக்கு வந்த அதே நேரத்தில், சந்து முனையில் ஷாமியானா போர்த்திய வீட்டிலிருந்து வண்ணத் தலைப்பாகைகளும், கோட்டும், பேண்டும் அணிந்த இளைஞர்கள் சிலர் வெளியே வந்து நிலைமையைச் சீர்செய்தனர். மாட்டை விரட்டி, பாதி வழி மறித்திருந்த இருசக்கர வாகனத்தைச் சுவரின் பக்கம் சாய்த்து, ரிக்க்ஷாவைக் கொஞ்சம் பக்கவாட்டில் தூக்கி விடுவித்து நெரிசலைக் குறைத்தனர்.

ரிக்க்ஷா என்னைக் கடந்து சென்றபோது, அதன் பின்னிருக்கையை கூடாரம் போல் போர்த்தியிருந்த சிவப்புப் படுதா காற்றில் அசைந்தது. உள்ளே அமர்ந்திருந்த மணமகனும் மணப்பெண்ணும் புறவுலகத்தை முற்றிலும் மறந்து, ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

~oOo~

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன பௌத்தத் துறவி ஹியூன் சாங் (Hiuen Tsang) முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிறித்துவப் பாதிரியார் ஜேம்ஸ் கென்னடி வரை காசியின் குறுகிய தெருக்களைப் பற்றி எழுதியிருக்கின்றனர். ஈர்க்குச்சிகூட நுழைய முடியாதபடி ஒட்டியிருக்கும் வீடுகள்; எங்கே செல்கின்றன என்றே தெரியாத அளவிற்கு வளைந்தும், நெளிந்தும் செல்லும் சந்துகள்; சிறு பல்லக்குகள்கூட அவ்வப்போது முன்னேற முடியாமல் தத்தளிக்கும் அளவிற்கு இவற்றில் குவியும் பாதசாரிகள்; பல நூற்றாண்டுகளாகச் சூரிய வெளிச்சமே நுழையாத தெருக்கள் என்று, வெளிநாட்டிலிருந்து வந்த பல கடந்தகாலப் பயணிகள் காசியின் தெருக்களைப் பற்றி ஆச்சர்யம், அச்சம், அங்கலாய்ப்பு என்று பல ரசங்களையும் குழைத்து எழுதியிருக்கின்றார்கள். பின்னாளில் இந்தக் காட்சிகள் சித்திரங்களாகவும் தீட்டப்பட்டன.

இந்திய வரலாற்றை ஆவணப்படுத்துவதில் பெரும் பங்காற்றிய ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep) ஏறக்குறைய பத்து ஆண்டுகள் காசியில் உள்ள நாணயங்கள் அடிக்கும் சாலையில் (mint) பணி செய்தார். 1820 ஆம் ஆண்டு முதல் 1830 வரை காசியில் வாசம் செய்த அவர், அந்த நகரின் பல முகங்களை வரைந்திருக்கிறார். இசைக் கலைஞர்கள், நாட்டிய மங்கைகள், கோவில் சிதிலங்கள், கங்கையின் துறைகள் என்று இந்தச் சித்திரங்கள் அடங்கிய Benares Illustrated என்ற புத்தகம், பத்தொன்பதாம் நூற்றாண்டு காசியின் சூழலை நம் கண்முன் நிறுத்துகிறது. இதில் ‘தத்தேரி பஜார்’ என்று பெயரிட்ட சித்திரம் ஒன்று உள்ளது. வெண்கலம் மற்றும் பிற உலோகப் பாத்திரங்கள் வடிக்கப்படும் தெருவின் காட்சி அது. காசியின் குறுகிய தெருக்களின் சாரத்தை இச்சித்திரம் நமக்கு வழங்குகிறது.

காற்றுகூடப் புக முடியாதபடி ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்ட வீடுகள் இருபுறமும் உயர்ந்து நிற்க, அவற்றிற்கு இடையே சிறு சந்து ஒன்று பாம்புபோல் வளைந்து கிடக்கிறது. ஏற்கனவே குறுகியிருக்கும் அந்தப் பாதையில் திண்ணை போன்ற மேடைகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றின் மேல் வியாபாரிகள் கடை விரித்திருக்கின்றனர். மீதம் இருக்கும் மிக ஒடுக்கமான இடத்தில் குதிரைமேல் அமர்ந்த ஒருவர் கடக்க முயல்கிறார். எதிர்புறத்திலிருந்து திரண்டு வரும் பாதசாரிகளைக் கண்டதாலா அல்லது குகைபோல் நீண்டிருக்கும் சந்து கண்டதாலா என்று தெரியவில்லை, குதிரை மிரண்டு முன்னங்கால்களைத் தூக்கி முரண்டு பிடிக்கிறது. மிருகமும் அதன் மேலமர்ந்த பயணியும் எங்கும் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்ற பதைபதைப்போடு அதன் பின்னே ஓடும் வேலையாளின் முகத்தில் கவலை அப்பியிருக்கிறது. மிகவும் நுணுக்கமாக வரையப்பட்ட இந்தச் சித்திரத்தை வர்ணிக்கையில், ‘குறுகியது’ என்ற வார்த்தையே அகலமான ஒரு சொல்லாகத் தோன்றும் அளவுக்கு பெனாரஸ் நகரின் தெருக்கள் வளைந்தும் நெளிந்தும் உள்ளன என்று பிரின்செப் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த Life இதழில் நிருபராக இருந்த ஜேம்ஸ் பர்க் (James Burke), 1950-களில் காசியின் தெருக்களை மிக நேர்த்தியாகப் படம் எடுத்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் காணப்படும் இந்தப் புகைப்படங்கள், பிரின்செப் சித்திரம் தீட்டிய பின்னர் நூற்றுச் சொச்ச ஆண்டுகளில் காசியின் தெருக்கள் பெரும் மாற்றம் ஏதும் அடையவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பாதையில் அமர்ந்து பழம் விற்கும் வியாபாரிகள், தலையைச் சேலையால் மூடிய பெண்கள், சதுரக் கற்கள் மேவிய பாதை என்று காலம் வெண்ணெய்போல் இந்தப் புகைப்படங்களில் உறைந்திருக்கிறது.

~oOo~

காசியின் தெருக்களுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு என்றாலும், அவற்றில் பலவற்றிற்குத் தனித்தன்மையும் உண்டு. இதை நான் உணர்ந்துகொண்டது அந்தத் தெருக்களைச் சுற்றி அலைந்த பின்னர்தான்.

சில தெருக்கள் மௌனமாக இருந்தன. பஞ்சகங்கா காட் அருகே உள்ள ஒரு தெரு, கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கும் சாது போல், எந்தச் சலனமும் இன்றி இருந்தது. தெருவின் மேல் ஜடாமுடிபோல் பல தினுசு கேபிள் கற்றைகள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. தலையின் மேலே, நெருக்கும் கட்டிடங்கள் உயர்ந்த கரைகள் போல் இருக்க, அதன் ஊடே வானம் ஒரு நதிபோல் குறுகித் தெரிந்தது. தலைமேல் ஓர் நீல ஆகாய கங்கை. அந்தத் தெருவில் உள்ள வீடுகளின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே பூர்ண நிசப்தம் குடியிருந்தது. வீட்டு வெளிச்சுவர்களில் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்கள்கூட சாந்தமாக மிளிர்ந்தன. வீட்டு சுவர்களையொட்டி போடப்பட்டிருந்த நிழல் மூடிய சிமெண்ட் பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.

தூரத்திலிருந்து வரும் கோவில் மணிகளின் வெண்கல நாதம் காற்றில் பயணித்து, மிருதுவாகச் செவியை வருடியது.

மங்களா கௌரி ஆலயத்திற்கு அருகில் இருந்த ஒரு நீண்ட சந்து, தியானத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்டிருந்தது. வீடுகளின் திறந்த கதவுகள் வழியே தினசரி வாழ்க்கையின் சப்தங்கள் கசிந்து வந்தன; குக்கரின் சீட்டி, பழைய இந்திப் பாடல், அன்றாடத்தைப் பற்றி பிறரிடம் பேசும் பெண்களின் மிதமான குரல்கள், குழாயிலிருந்து நீர் தாரையாகத் தவலையில் நிரம்பும் ஓசை, சிமெண்ட் தரையில் துடைப்பம் உராயும் சத்தம். வீதியில் அவ்வப்போது ஒன்றிரண்டு பைக்குகள் என்னைக் கடந்து சென்றன. ஒரு வீட்டின் சுவரையொட்டிய சிறு மேடையில், இரு சிறு சிமெண்ட் பலகைகள் பக்கச்சுவர்கள்போல் நிறுத்தப்பட்டு, அவற்றின் மேலே மற்றொரு பலகை கூரையாக அமர்ந்திருந்த ஒரு பொந்தினுள்ளே, கல்லில் புடைத்தெடுத்த சிற்பமாக ஆஞ்சநேயர் ஆரஞ்சு வர்ணத்தில் பரிமளித்தார்.

‘ஏ பஹுத் புராணா மூர்த்தி ஹை, வரப்பிரசாதி’ என்றார் அருகில் இருந்த முதியவர். கச்சம் வைத்து கட்டிய வேட்டியும், காற்றில் அலையாடும் நரை முடியும், மெலிந்த உருவமும், அவர் அந்தப் பகுதியில் வசிப்பவர் என்று சொன்னது.

‘பச்பன் சே யஹான் ரோஜ் ஆ ரஹா ஹூன்’ என்றார், நான் கேட்காமலேயே. இரண்டடிக்கு இரண்டடி அளவு கொண்ட சிறு கற்பலகையில் செதுக்கப்பட்டிருந்த அந்தச் சிறு பஜ்ரங்கபள்ளியிடம் அவர் வைத்திருந்த அன்பு அந்தக் குரலில் தொனித்தது.

‘ஜெய ஹனுமான் தியான குண சாகர்’ என்று ஹனுமான் சாலிசாவை அந்த முதியவர் முணுமுணுப்பதைக் கேட்டுக்கொண்டே அவ்விடத்திலிருந்து நகர்ந்தேன்.

தெரு பிரியும் இடத்தில் அரவமில்லாத சிறு வெற்றிலைப் பாக்குக் கடை ஒன்று கண்களில் பட்டது. சுண்ணாம்புச் சாறு நிறைந்த வெண்கலச் சொம்பு, வரிசையாக அணிவகுத்து நிற்கும் தகர டப்பாக்கள், வெற்றிலையில் வைத்து மடிக்க பிளாஸ்டிக் குடுவைகளுக்குள் பல வண்ணங்களில் முழித்துப் பார்க்கும் சோம்பு, அரிசி மிட்டாய்கள், ஜீரண மாத்திரைகள் என்று காசியின் சராசரி பான் கடையின் அனைத்து லட்சணங்களும் மூன்றுக்கு நாலு அடி விஸ்தீரணமுள்ள இடத்தில் அடைபட்டிருந்தன.

சாலிடேர் ஆட்டத்தில் சீட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்ததுபோல், கடைக்காரரின் முன்னே சுண்ணாம்பும் காசிக்கட்டியும் சேர்த்துக் குழைத்துப் பூசப்பட்ட வெற்றிலைகள் ஒரு பலகையின் மேல் அணிவகுத்திருந்தன. நெற்றியில் சிந்தூரம் துலங்க, கடமையே கண்ணாக வெற்றிலைக்குக் காவி அடித்துக்கொண்டிருந்தார் கடைக்காரர். இப்பொழுது யாருமில்லை என்றாலும், சிறிது நேரத்தில் அத்தனையும் விற்றுவிடும் என்ற நம்பிக்கை அவர் வண்ணம் தீட்டும் வேகத்தில் புலப்பட்டது. வீதியில் மாடு ஒன்று மெதுவாக நடந்து என்னைக் கடந்து, அதன் வேலையை கவனிக்கச் சென்றது.

காசியின் வேறு சில தெருக்கள் விழிப்பின் உச்சத்தில் இருந்தன. ஏறக்குறைய உன்மத்த நிலை. கால பைரவர் அல்லது காசி விஸ்வநாதர் கோவில்களின் அருகில் இருக்கும் இந்தச் சிறு வீதிகளில் காணப்படும் கொந்தளிப்பு, நம் சகல புலன்களையும் ஒரே நேரத்தில் இழுத்து அந்த ஓய்வில்லாத இயக்கத்தில் கரைத்துவிடுகிறது.

இந்தத் தெருக்களில் மக்களும், வாகனங்களும், மிருகங்களும் நுரை சுழித்தோடும் நீரோடைபோல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. கரையின் ஓரத்தில் நீரின் வேகம் மட்டுப்படுவது போல், இந்தத் தெருக்களின் ஓரம் தலை எது, வால் எது என்று புரிபடாத நீண்ட வரிசையில் மனிதர்கள் காசி விஸ்வநாதரின் தரிசனத்திற்காக மெதுவாக முன்நகர்கின்றனர். பலரது கைகளில் புஷ்பம், மாலை, சிவன் அபிஷேகத்திற்காகக் காகிதத் தம்ளரில் பால். இந்த வரிசையைக் கடந்து செல்லும்போது, இந்தியப் பெருநாட்டின் பல மொழிகள் காற்றில் சுழல்கின்றன. ஒரே வண்ணத்தில் தொப்பி அணிந்து வந்த தென்னகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, இங்கு கிடைக்கும் சாம்பாரில் காரம் இல்லை என்று அங்கலாய்த்தது. எவ்வளவு வேளைதான் உருளைக்கிழங்கை உண்பது என்று முணுமுணுத்து வயிற்றை தடவிக் கொண்டது.

பாதையில் செல்லும் அனைவரும் நகர்ந்து வழிவிட, கையில் திரிசூலம், கழுத்து நிறைய ருத்திராட்ச மாலைகள், உடலெங்கும் விபூதி பூசிய சாதுக்களின் கூட்டம் ஒன்று வேகமாக நதியை நோக்கிப் பயணிக்கிறது. ‘ஹர் ஹர் மஹாதேவ்’ என்று அவர்கள் எழுப்பும் கோஷம், நீரில் தோன்றும் வட்ட அலைகள் போல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை அடைந்து, ‘பம் பம் போலோநாத்’ என்று மருவித் திரும்புகிறது.

கரைகளில் அமர்ந்து மீன் பிடிப்பவர்கள் போல் இருபக்கமும் கடைக்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் விரித்திருக்கும் கடைகளில் பனாரசிப் பட்டு சேலைகள், பிரசாதப் பொருட்கள், ருத்திராட்ச மாலை, வெண்கலப் பூஜைச் சாமான்கள், மரப் பொம்மைகள் போன்றவை பகல் நேரத்திலேயே எரியும் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னுகின்றன. இந்தத் தெருக்களில் வழிந்தோடும் ஜனப் பிரவாகத்தில் வீசப்படும் இந்தத் தூண்டில்களுக்கு மீன்கள் விழத்தான் செய்கின்றன என்பதை, கடைகளில் மொய்க்கும் கூட்டம் சொன்னது.

தெரு எங்கும் வழிந்தோடும் இந்த நீரோட்டம் ஆங்காங்கே தேங்கவும் செய்கிறது. குறிப்பாகச் சாட் கடைகளைச் சுற்றி. பாதையோரத்திலேயே அடுப்பு மூட்டி, அதன் மேல் பெரிய தோசைக் கல் ஒன்றை வைத்து, அதன் நடுவே எண்ணெய்க் குளம் ஒன்றை உருவாக்கி, சுற்றித் தடுப்புச் சுவர் போல் நின்றிருந்த உருளைக்கிழங்கு டிக்கிகளை ஒன்றொன்றாக அதில் அமிழ்த்தி, எண்ணெய் நன்கு கொப்பளித்தவுடன் பாதி பொரிந்த பதார்த்தத்தை நீண்ட இரும்புச் சட்டுவத்தால் லாவகமாகத் திருப்பிப்போட்டுக்கொண்டிருக்கிறார் சாட் கடைக்காரர். அவரைச் சுற்றி, மலரப்போகும் தாமரை மொட்டுகளின் வடிவில், காசியில் பெயர்பெற்ற மலாயோ மண் குடுவைகளில் நிறைந்திருக்கிறது. குளிர்காலங்களில் மட்டும் கிடைக்கும் இந்தப் பாலால் செய்த காசி ஸ்பெஷல் இனிப்பு, மென் நுரைபோல் தொண்டையில் இறங்கும். கையில் பாக்கு மட்டைக் கிண்ணத்தை ஏந்தியவாறு கச்சோடி, டமாட்டார் சாட் என்று ஒரு கூட்டம் தெருவில் பாறைகள் போல் நின்று, ஜன ஓட்டத்தை மாற்றுப்பாதைகளில் சுழித்துவிடுகிறது.

காசியில் பிரின்செப் வாழ்ந்தபொழுது, அவர் இதுபோன்ற தெருக்களைத்தான் அதிகம் கண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் காலத்திலேயே குறுகல் என்று கருதப்பட்ட தெருக்கள் இன்று இன்னும் குறுகிவிட்டன. மக்களின் எண்ணிக்கை வளர்ந்துவிட்டது. காசியின் இந்தத் தெருக்கள் மழைக்காலத்து கங்கை போல் நுங்கும் நுரையுமாகப் பொங்கிக்கொண்டே இருக்கின்றன.

~oOo~

குமுட்டியில் கொதித்த கெட்டிலை எடுத்து, மேஜையில் இருந்த கண்ணாடிக் குடுவையில் ஊற்றினார் கடைக்காரர். புகையின் மணம் பாலாடைபோல் லேசாகக் கவிந்திருக்க, கெட்டிப் பாலோடு சற்றே தூக்கலான சர்க்கரையிட்ட டீ சூடாகத் தொண்டைக்குள் இறங்கியது. பல்லாண்டுகளாக நடந்து வரும் டீக் கடை என்று தோன்றியது. நீல நிறச் சுவர்களில் பழுப்பேறிய படங்கள். ஒட்டடை ஆங்காங்கே தோரணம் கட்டியிருந்தது. உள்ளே போடப்பட்டிருந்த மர பெஞ்சுகளில், பல வருடங்களாகப் பதிந்த கண்ணாடிக் குவளைகளின் அடிப்பாகங்கள் வட்டங்களால் ஆன நவீன ஓவியம் போல் காட்சியளித்தன. ன் எதிரே காந்தித் தொப்பி வைத்து, கச்சம் கட்டிய இருவர் யோகி, ஷா, அகிலேஷ் என்று அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். மறுபக்கம் நான்கு இளைஞர்கள் அலைபேசியின் திரையில் தங்களைப் பறிகொடுத்து, சுற்றம் மறந்திருந்தார்கள். வெளியே தெருவில் வரிசையாக மூன்று நான்கு மாடுகள் ஏதோ இலக்கை நோக்கிச் செல்வதைப்போல அணிவகுத்துச் சென்றன.

‘இவையெல்லாம் தெருவிலேயே வாழும் மாடுகளா?’ என்று கடைக்காரரிடம் கேட்டேன்.

‘நஹி நஹி. காசியின் தெருக்களில் அலையும் பல மாடுகள் வளர்ப்பு மாடுகள். பகல் நேரம் முழுதும் அங்க இங்க சுத்திட்டு, சூரியன் அஸ்தமிக்குற நேரத்துக்கு வீட்டுக்குப் போயிரும்’ என்று சொல்லிவிட்டு, காலியான கண்ணாடிக் குடுவையை எடுத்துச் சென்றார். பல நேரங்களில் கூகிள் மேப்பின் சகாயம் இருந்தாலுமே திசை தெரியாமல் சுற்றவிடும் இந்தத் தெருக்களின் ஊடே போய்ச் சேர வேண்டிய இடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் இந்த மாடுகள் நான்கு கால் மேதைகள்தான் என்று தோன்றியது.

காசு கொடுத்துவிட்டு தெருவில் இறங்கினேன். நான் போகும் திசையில், தெருவை அடைத்தவாறு காளை ஒன்று நின்றிருந்தது. சத்தியஜித் ரே இயக்கிய அபராஜிதோ படத்தில் ஒரு காட்சி உண்டு. சிறுவயது அப்பு காசியின் தெருக்களில் ஓடி விளையாடிக்கொண்டிருப்பான். இதேபோல் ஒரு குறுகலான சந்தில் மாடு ஒன்று குறுக்குவெட்டாக நின்றிருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் அப்பு எந்தத் தயக்கமும் இல்லாமல் மாட்டின் கால்களுக்கு இடையே குனிந்து ஓடுவான். அப்படி என்னால் கண்டிப்பாகச் செய்ய முடியாது என்று அறிந்திருந்தாலும், ஒரு வினாடி நான் குனிந்து தவழ்ந்து போகும் காட்சி மனதில் ஓடியது. தொடர்ந்து அதன் விபரீத விளைவுகளும் என் மனதில் காட்சிகளாக விரிந்ததால், அப்படியே நின்றுவிட்டேன்.

கடையில் இருந்து இறங்கிய கடைக்காரர், ‘ஹே பைரவ், ஜகா தே’ என்று செல்லமாக அதைத் தட்ட, மாடு சற்றே நகர்ந்தது. மாட்டின் மீது படாதவாறு சுவரில் உராய்ந்துகொண்டே இக்கட்டிலிருந்து வெளிவந்தேன். பெரும் விருட்சத்தின் கிளைகள் போல் கங்கைக் கரையில் விரிந்திருக்கும் இந்தத் தெருக்களில் ஒன்றில் நுழைந்து மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.