எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்தவர் – லீ குவான் யூ

‘நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் நோய் வாய்பட்டு, மரணப் படுக்கையில் இருந்தாலும், என் மரணத்திற்கு பின் என்னை கல்லறையிலேயே இறக்கிக் கொண்டிருந்தாலும், என் நாட்டுக்கு ஏதேனும் ஒரு வகையில் அச்சுறுத்தல் எதுவும் நேரிட்டால், கல்லறையில் இருந்தும் நான் எழுந்து வருவேன்’.

தாய்நாட்டின் மீதான அசைக்க முடியாத தேசபக்தியையும் அர்ப்பணிப்பையும் அவரது இந்த வரிகள் மிக அழகாகப் பிரதிபலிக்கின்றன. தன் வாழ்நாளுக்குப் பிறகும் சிங்கப்பூர் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்கு சிந்தனையை 1988 ஆகஸ்ட் 14 அன்று கல்லாங் திரையரங்கில் சிங்கப்பூரின் தேசிய தினப் பேரணி உரையில் அவர்  பிரதிபலித்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கும் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து செல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்து நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர்; கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிங்கப்பூரை ஒரு பின்தங்கிய நிலையிலிருந்து  இருந்து உலகளாவிய பொருளாதார மையமாக மாற்றியப் பெருமைக்குரியவர்; நவீன சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படுபவர்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர்; 1990ஆம் ஆண்டு வரையில் சுமார் 31 ஆண்டுகள் சிங்கப்பூரை நிர்வாகத் திறனுடன் ஆட்சி செய்தவர்; ஆசியாவில் தனிச்சிறப்பும் செல்வாக்குமுடைய  அரசியல்வாதி; தொலைநோக்குப் பார்வை கொண்டத் தலைவர்; சிறிய துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூரை பிரமிப்பூட்டும் வகையில் ஆசியாவின் வர்த்தக நகரமாக மாற்றிக் காட்டிய ஒப்பிலா தலைவர்; அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்தார் என்று மனித உரிமை ஆர்வலர்களால் அடிக்கடி விமர்சிக்கப்பட்டாலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் வலியுறுத்தியதுடன், ஒழுக்கத்தையும் காலம்தவறா பண்பையும் மக்களிடையே புகுத்தியவர்; தமிழர்கள், சீனர்கள் மற்றும் மலாய் மக்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, பெரும்பான்மை சீனர்களுக்கு இணையான சம உரிமைகளை உறுதி செய்ததன் மூலம் அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்றவர்;  பல இன, மொழி, சமய மக்களைக் கொண்ட நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழவும் தகுதி அடிப்படையில் முன்னேறவும் வகை செய்தவர்; உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றியவர்; சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் நிறுவனர்களுள் ஒருவர்; தமிழை ஆட்சி மொழியாக அறிவித்தவர்; உலகில் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுத்தப் பெருமைக்குரியவர்; சமய, இன, மொழி வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து மக்களுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட  மாபெரும் மனித நேயப் பண்பாளர். அவரது கொடையே இன்றைய சிங்கப்பூர்; அவர்தான் லீ குவான் யூ. 

வரலாற்றுப் பின்புலம் 

தென்கிழக்காசியாவில் உள்ள மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். காற்று ஒன்றைத் தவிர இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லாத நாடு. போதிய அளவு நிலம் கூட இல்லாத ஒரு துறைமுக நகரம்.  உற்பத்தி என்று சொல்வதற்கு அங்கே எதுவும் கிடையாது. தண்ணீரைக்கூட மலேசியப் பகுதியிலிருந்துதான் பெற வேண்டும் என்கிற அளவுக்கு ஏதுமற்ற பகுதி அது. 

சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாக கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிங்கம்+ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுவதும் உண்டு. 

1819ஆம் ஆண்டளவில் சிங்கப்பூர் ஒரு சிறு மீனவ கிராமமாக விளங்கியது. அதே ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபில்ஸ் என்ற ஆங்கிலேயர் அப்போதைய சிங்கப்பூரின் ஆட்சியாயாளராக இருந்த  ஜோகூர் சுல்தானுடன் ஓர் ஒப்பந்தம் செய்து, ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காக  சிங்கப்பூரை வணிகத்தளமாகப் பெற்றார். ராஃபில்ஸ் மேற்கொண்ட  முயற்சியால் சிங்கப்பூர் ஓர் அழகான பிரபலமான சுங்கமற்ற துறைமுகமாகவும் தென்கிழக்காசியாவின் சிறப்பான வாணிபத்தலமாகவும் மாறியது. கடல் கடந்து வந்த ஆங்கிலேயர்களின் புகலிடமாகவும், இங்கிலாந்தின் கிழக்காசிய பகுதியின் கடற்படை தளமாகவும் இத்தீவு உருவானது. 1959ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர். 1869ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டு, ஆசிய- ஐரோப்பிய நாடுகளிடையேயான கடல் போக்குவரத்து மிக இலகுவாகி, வர்த்தகம் அதிகரித்த பிறகு சிங்கப்பூர் துறைமுகம் மேலும் வளர்ச்சி கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் மற்ற நீரிணைக் குடியேற்றங்களிலிருந்து சிங்கப்பூர் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டு உரிமையுள்ள நேர்தாயக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக மாறியது. 1959 ஜூன் 3ஆம் நாள்  முழு உள்நாட்டுத் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டது.(‘தமிழர் வாழும் நாடுகள்-சிங்கப்பூரில் தமிழர்’, தமிழ்க்களஞ்சியம். காம்)

விடுதலை

சிங்கப்பூரில் முதல் தேர்தல் 1959ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று லீ குவான் யூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பு உருவாகியது. ஆனால், பல்வேறான  சந்தேகங்களும் அதிருப்தியும் மேலோங்கியது.  இந்தோனேசியாவின்  ஒத்துழையாமை,  கம்யூனிஸ்டுகள்  மீது  கடும்  நடவடிக்கை  யாவும் ஒரு நிரந்தரமற்ற அரசியல் நிலையை உருவாக்கி இருந்தது. இந்த இணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. மலேசியாவின் அதிகார மையம்  கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு இடம் மாறிவிடுமோ என்ற அச்சம் மலேசியாவின் அதிகாரவர்க்கத்திற்கு ஏற்பட்டது. சிங்கப்பூர் மாநில அரசுக்கும், மலேசிய நடுவண் அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. பெரும் இனக் கலவரம் ஒன்று உருப்பெற்றதை ஒட்டி மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து விலக்குவது என முடிவெடித்தது. பிரதமர் தும்கு அப்துல் ரஹ்மான், ‘சிங்கப்பூர் பிரிந்து செல்ல’ ஆலோசனை கூறினார். ஆனால், சேர்ந்து இருக்க விரும்புவதாகவே சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார். எனினும், 1965 ஆகஸ்ட் 9 அன்று சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து, ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கான வாக்கெடுப்பு மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. வாக்கெடுப்பில் சிங்கப்பூர் பகுதியைச் சேர்ந்த   நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில்,126-0 என்கிற கணக்கில் சிங்கப்பூர் பிரிந்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே வாக்களிக்கப்பட்டது. மலேசியாவில் இணைந்த இரண்டே வருடங்களில் சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயல் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, உலகின் ஒரே ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நகர நாடாக (City-state) உருவெடுத்தது. நடந்தவைகளை  கூர்ந்து  ஆராயுங்கால் சிங்கப்பூர்   வெளியேறியது  என்பதைக்  காட்டிலும்  வெளியேற்றப்பட்டது என்பதே உண்மை. உலக வரலாற்றிலேயே தன் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக சொந்த நாட்டினால் பிரித்துவிடப்பட்டு, தனி நாடாக உருவெடுத்த ஒரே நாடு சிங்கப்பூர் ஆகும்.

சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய தீவு இயற்கை வளங்கள் இன்றித் தனித்து வாழ்வது மிகவும் கடினம் என்பதால், மலேசியாவுடன் இணைந்திருப்பதே சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு நல்லது என லீ குவான் யூ தீவிரமாக விரும்பினார். இரு நாடுகளும் தங்களுக்குள் இருந்த அரசியல், இன ரீதியான கருத்து வேறுபாடுகளால் பிரிய நேரிட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பிரிவு லீ குவானைப் பெரும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. அதை நினைவுகூர்ந்து நேரலையில் பேசும்போது அவர் கண்ணீர் விட்டார். விடுதலை பெற்ற சிங்கப்பூரின்  யூசோப் பின் இஷாக் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார். இயற்கை வளங்களோ, போதிய நிலப்பரப்போ, குடிநீராதாரமோ இல்லாத ஒரு சிறிய தீவு நாடு எப்படித் தனியாக நின்று  முன்னேறப் போகிறது என்ற கவலையும், மக்களின் எதிர்காலம் குறித்த பயமும் அவரை தூங்கவிடாமல் உலுக்கியது.நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பின்னாளில்  அளித்த பேட்டி ஒன்றில்  ‘’அது என் மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்த தருணம். என் வாழ்க்கை முழுவதும் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இருதரப்பிலும் உள்ள மக்கள் புவியியல் அமைப்பால், பொருளாதாரத்தால், ரத்த உறவால் ஒன்றுபட்டவர்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரிவு ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டமானது. மலேசிய அதிபர் தும்கு அப்துல் ரஹ்மான் சிங்கப்பூரை பிரிக்காமல் இருந்திருந்தால் சிங்கப்பூரில் செய்யப்பட்ட பல சாதனைகள் மலேசியாவிலும் நடந்திருக்கக் கூடும்’ என்று குறிப்பிட்டார். சிங்கப்பூரின் விடுதலையை பிறிதொரு சமயம் நினைவுகூர்ந்த லீ, “1965ஆம் ஆண்டு சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். மக்கள் பலர் அதனை மகிழ்ச்சியோடு கொண்டாடினாலும், எனக்கு அது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு தருணமாகவே இருந்தது. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சனை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே… ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைத் தகமைகள் எம்மிடம் அப்போது இருக்கவில்லை. ஆனால், நாங்கள் சுதந்திர நாடாக மாறியிருந்தமைதான் எங்களிடம் இருந்த ஒரே நம்பிக்கையாகும்” என்று குறிப்பிட்டார். 

விடுதலையடைந்ததும் உலக நாடுகளின் அரசியல் அங்கீகாரம் தேவை என்பதை லீ குவான் யூ நன்குணர்ந்ததார். ஒரு வேளை இந்தோனேசியாவின் தாக்குதலுக்கு உள்ளானாலோ, மலேசியாவில் ஒரு பிரிவினர் சிங்கப்பூர் பிரிவதை எதிர்த்து போராட நேரிட்டாலோ, சிங்கப்பூருக்கு மிகவும் பாதகமான நிபந்தனைகளுடன் மீண்டும் மலேசியா தன்னுடன் சேர்த்துக் கொள்ள முயற்சித்தாலோ என்ற ரீதியிலெல்லாம்  ஒருவித  பதற்றமும் கலக்கமும் தொற்றிக்கொண்டது. எனவே, லீ விரைவாக செயல்பட்டதன் விளைவாக, மலேசிய, இந்திய, சீன அரசுகள் உதவியுடன் 1965 செப்டம்பர்  21 அன்று சிங்கப்பூர் ஐ.நா. சபையின்117ஆவது  உறுப்பு நாடாக இணைந்தது. அதன் மூலம், சிங்கப்பூர் ஒரு தனி இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு என்பதை பன்னாட்டு சமூகம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது 1965 அக்டோர் 15ஆம் நாள்  காமன்வெல்த் அமைப்பில் 23ஆவது நாடாக சிங்கப்பூர் இணைக்கப்பட்டது. இந்த இரு முக்கிய சர்வதேச அங்கீகாரங்களும், அதன் ஆரம்பகால பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்தோனேசியாவின் அச்சுறுத்தலில் இருந்து சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்தார். சிங்கப்பூரின் ஆயுதப் படை அமைக்கப்பெற இஸ்ரேலின் ஆலோசனை, பயிற்சி மற்றும் பிற வசதிகளைப்   பெற்றார்.  எனினும், பிரிவினைக்குப் பின்னரும் மலேசியாவும் சிங்கப்பூரும் எவ்வித உரசலும் இன்றி  நட்பு நாடுகளாகவே தொடராலாயின. 1967ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை(ஆசியான்) உருவாக்குவதில் லீ ஒரு முக்கியப் பங்காற்றினார். இது பிராந்திய ஒத்துழைப்பையும் ஸ்திரத்தன்மையையும் வெற்றிகரமாக ஊக்குவித்த ஒரு பெரும் சாதனையாகும் . ஒரு சிறிய நாடான சிங்கப்பூர், தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளவும், உலக அரங்கில் தனது குரலை வலுவாகப் பதிவு செய்யவும் ஆசியான் அடித்தளமாக அமைந்தது. 

சிங்கப்பூர் மக்களாட்சியுடைய நாடாக இருந்தாலும், இந்தியாவைப் போன்ற ஒரு முழுமையான தாராளமய மக்களாட்சியாக (Liberal Democracy) மாற்றாமல், “கட்டுப்பாடுள்ள மக்களாட்சி” (Guided or Authoritarian Democracy) முறையையே லீ பின்பற்றச் செய்தார். தனிமனித உரிமைகளை விட சமூகத்தின்  “ஒழுக்கம், கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி” ஆகிய மூன்று மட்டுமே முக்கியமானது  என்று அவர் கருதினார். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் ஒழுங்கீனமும், போராட்டங்களும் வெடித்தால் நாடு முன்னேறாது என்பதால், மக்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தனது  கனவுநாட்டை உருவாக்கிட  கட்டுப்பாடான சுதந்திரத்தோடு மட்டுமே முடியும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை கொண்டிருந்தார்.  இயற்கை வளங்கள் இல்லாத ஒரு சிறிய தீவு நாடு உயிர்வாழ வேண்டுமானால், கடுமையான உழைப்பும் தடையற்ற நிர்வாகமும் அவசியம் என்று அவர் நம்பினார்.

குடும்பம்

லீ குவான் யூவின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில்  இருந்து சிங்கப்பூரில் குடி அமர்ந்தவர்கள் ஆவர். லீ சின் கூன் மற்றும் சுவா ஜிம் நியோ ஆகியோருக்கு 1923ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையிலுள்ள வீட்டில்  ஒரு பிரிட்டானிய குடிமகனாக  லீ குவான் யூ பிறந்தார். இவரது குடும்பம் வசதியான மற்றும் கண்டிப்பான பின்னணியைக் கொண்டது. லீ, டெலோக் குராவோ பள்ளியிலும், பின்னர், ராஃபில்ஸ் கல்வி  நிலையத்திலும் பயின்றார். இந்நிலையத்திற்காக மட்டை பந்து, வரிப்பந்தாட்டம், சதுரங்கம் விளையாடியும் கல்வி சார்ந்த போட்டிகளில் பங்கேற்கவும் செய்தார். பின்னர், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ் வில்லியம் கல்லூரியில் சட்டம் பயின்று  1950ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1959ஆம் ஆண்டு வரையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

1950 செப்டம்பர் 30ஆம் நாள் தனது 26ஆவது வயதில் 16 வயதுடைய க்வா காக் சூ என்பாரை மணந்தார். இருவருமே ஆங்கிலத்தை தங்கள் தாய் மொழியாகக் கொண்டவர்கள். 1955ஆம் ஆண்டு  தனது 32ஆம் வயதில் லீ குவான் யூ சீன மொழியைக் கற்கத் தொடங்கினார்.  ஜப்பானிய மொழியையும் நன்கு கற்று சிங்கபூரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 2010 அக்டோபர் 2ஆம் நாள் அவர் மனைவி இறக்க நேரிட்டது. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் லீ சியான் லூங் 2004 முதல் 2024 வரை 20 ஆண்டுகள் சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகவும் 2004 முதல் 2024 இறுதி வரை மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வழிநடத்தினார். 

பிரதமர்

சீன- மலாய் இன பிரச்சனைகளுக்கிடையே தொடர்ந்து கொண்டிருந்த மலாய் ஆட்சி- ஆங்கிலேய ஆளுமைகளுக்கிடையே, 1954 நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் விக்டோரியா கான்சர்ட் ஹால் லண்டனில் படித்த-தாய்நாட்டின்பால் பற்று  கொண்ட ஐந்து நண்பர்கள் லீ குவான் யூ. கோ கென் சுவீ, எஸ்.ராஜரத்தினம், கே.எம்.பைன், மற்றும் டோ சின் சை ஆகியோர் இணைந்து மக்கள் செயல் கட்சி (People’s Action Party) என்ற கட்சியைத்  தோற்றுவித்தனர். 1955ஆம் ஆண்டு நடைபெற்ற அதன் முதல் சட்டமன்ற தேர்தலில் மக்கள்  செயல்  கட்சி  புதிய  கட்சியாக இருந்தது.  ஆள்பலம்  இல்லை.  கட்சி  இயந்திரம்  முழுமையாக துவங்கப்படாத  காலம்.  லீ குவான்  இயூ  தஞ்சோங்  பகார்  தொகுதியில்  போட்டியிட்டார்.  அப்போது  அவருக்கு  ஆங்கிலம்  மட்டுமே தெரியும்.  சிங்கப்பூரின் பெரும்பான்மை மக்களாக இருந்த சீனர்களுடன் (குறிப்பாக அடித்தட்டு மக்களுடன்) தொடர்பு கொள்ளத் தேவையான சீன மொழியோ (மாண்டரின்) அல்லது பிற வட்டார மொழிகளோ (ஹொக்கியன் போன்றவை) அவருக்கு அப்போது பேசத் தெரியாது.எனினும், கட்சி  போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றது. மக்கள்  செயல் கட்சி நன்கு செயலாற்றி  மக்களின் நன்மதிப்பைப்  பெறத்  தொடங்கியது.  பிறகு, ஆங்கிலேயர்களிடமிருந்து சுய ஆட்சி பெற்றபின் 1959ஆம் ஆண்டு  நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்ட 51 தொகுதிகளில் 43ல் வெற்றி பெறவே, அவ்வாண்டு ஜூன் 3ஆம் நாள் தனது 35வது வயதில் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 1990 வரை, உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற பெருமையுடன்  ஆட்சி செய்தார். 1968, 1972, 1976, 1980ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. 1992 வரை அக்கட்சியின் பொதுச் செயலராகவும்  இருந்தார்.  

1990ஆம் ஆண்டு  சிங்கப்பூர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, லீ குவான் யூ 1990 முதல் 2004 வரை ‘மூத்த அமைச்சர்’ (Senior Minister) என்ற பதவியை வகித்தார். 2004ஆம் ஆண்டு சிங்கப்பூரின் புதிய பிரதமராக லீ சியன் லூங் (லீ குவான் யூவின் மகன்) பொறுப்பேற்றதிலிருந்து  2011 வரை அவருக்காகவே உருவாக்கப்பட்ட ‘மதியுரை அமைச்சர்’ (Minister Mentor) என்ற பதவியை வகித்தார். முதுமை காரணமாக 2011 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு, புதிய தலைமுறைத் தலைவர்களுக்கு வழிவிடும் வகையிலும், தனது முதுமை மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அவர் மே 2011ஆம் ஆண்டு  மதியுரை அமைச்சர் பதவியிலிருந்து தானாகவே விலகினார். அவர் 1959 முதல் 2011 வரை சுமார் 52 ஆண்டுகள் சிங்கப்பூர் அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மை 

சிங்கப்பூரை ஒரு பசுமையான மற்றும் தூய்மையான நாடாக மாற்றுவதற்காக 1968ஆம் ஆண்டு  “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள்” (Keep Singapore Clean) என்ற மிகப்பெரிய இயக்கத்தை லீ தொடங்கினார். அரசாங்கம் மட்டுமல்லாமல், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்த இயக்கத்தில் அவர் ஒருங்கிணைத்தார்.கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. பொது இடங்களில் குப்பை போடுவது, துப்புவது மற்றும் புகைப்பிடிப்பதற்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி கொடுக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் மற்றும் பொதுச் சேவைத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. திறந்தவெளி கழிப்பிடங்கள் மற்றும் முறையற்ற குப்பைக் கிடங்குகள் ஒழிக்கப்பட்டு, நவீன தூய்மை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1976ஆம் ஆண்டின் ‘உங்கள் கைகளைப் பயன்படுத்துங்கள்’ என்ற இயக்கத்தில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வார இறுதியில் பள்ளிகளைச் சுத்தம் செய்தனர். மேலும், ஏராளமான மரம் நடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.உணவு விடுதியில் ஒரு கரப்பான் பூச்சியை பாக்க நேரிட்டதற்காக, மூன்று மாதங்களுக்கு அந்த உணவு விடுதி இழுத்து மூடப்பட்டது. சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர். உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினார். நீச்சல், மெதுவோட்டம், கோல்ப்ஃ என ஏழு வகையான பயிற்சிகளில் ஈடுபடும் வழக்கம் உடையவராக இருந்தார். நாடு மட்டுமன்றி மக்களும் உடல் நலத்தோடு  இருக்க குறைவாக சாப்பிட்டு நிறைவாக  உடற்பயிற்சி செய்யுமாறு இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

தோட்ட  நகரம் 

மரம் நடுவதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை ஒரு பூந்தோட்ட நகரமாக மாற்றுவதில் அவர்  தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். பூந்தோட்ட நகர் செயல் குழுவின் கீழ் பல அமைப்புகள் இணைந்து செயல்பட வகை செய்தார். பொது இடங்களிலும் சாலையோரங்களிலும் மரங்கள் நடுவதைக் குழு அறிமுகம் செய்ததுடன், நிலத்திற்கான போட்டிமிக்க தேவைகளுக்கிடையே, நகர்ப்புற நிலப் பகுதியிலும் செடிகொடிகள் நடுவதை அறிமுகம் செய்தது. 1963 ஜூன் 16ஆம் நாள்   சிங்கப்பூரை ஒரு பசுமையான, தூய்மையான நாடாக மாற்றும் நோக்கில், லீ குவான் யூ ஒரு மரக்கன்றை நட்டு, பசுமைச் சிங்கப்பூர் இயக்கம் மூலம் சிங்கப்பூரை ஒரு “பூந்தோட்ட நகரமாக” (Garden City) மாற்றும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். 1967 மே 11ஆம் நாள் அவர்,  “இது நாம் நடத்தும் இரட்டை இயக்கம் – ஒன்று தூய்மைப்படுத்துவது, இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, அதை மேலும் தூய்மைப்படுத்துவது; இரண்டாவது,மரங்களையும் பூச்செடிகளையும் வளர்த்து அந்த இடத்தை மேலும் அழகுபடுத்துதல்… நீரூற்றுக்கள், பசுமை, சாலை வட்டங்களிலும் மற்ற இடங்களிலும் மரங்கள், மூன்று ஆண்டுகளுக்குள் இதை நாம் ஒரு பூந்தோட்ட நகரமாக்கிவிட முடியும்…” என்று கூறினார். சிங்கப்பூரில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக அவற்றின் இடத்தை மீண்டும் நிரப்பும் இயக்கமாக மரம் நடும் நாள் தொடங்கியது. முதல் மரம் நடும் நாள் 1971 நவம்பர் 7ஆம் நாள்  இடம்பெற்றது. அதுமுதல்  ஓர்ஆண்டு நிகழ்வாக அது நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக “மரம் நடும்  நாள்” எனக் கொண்டாடப்பட்டு, ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மாதிரியானது சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் (SGP) 1992 மே முதல் ஒரு பத்து வருட திட்டமாக உருவாக்கப்பட்டது. ஒரு தரமான வாழ்க்கைச் சூழலைப் பராமரிப்பதற்கான உத்திகள், திட்டங்கள் மற்றும் இலக்குகளை பசுமைத் திட்டம் வகுத்தது. உலகின் தலைசிறந்த பசுமை நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. பெரும்பாலும் ‘தோட்டத்திற்குள் ஒரு நகரம்’ என்று குறிப்பிடப்படும் சிங்கப்பூர், இயற்கையை நகர்ப்புறத் திட்டமிடலில் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. செங்குத்துத் தோட்டங்கள், மொட்டை மாடிப் பசுமை மற்றும் அதிநவீன நீர் மேலாண்மை அமைப்புகள் போன்ற முன்னெடுப்புகளின் மூலம், இந்த நகரம் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஒரு உலகளாவிய அளவுகோலை அமைத்துள்ளது.

லீ கோட்பாடு

லீ குவான் யூவைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்கான தடைக்கல்; இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒரு நேரத்தில் சாத்தியம் என்பது  அவரது எண்ணம். மக்களாட்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதல்ல என்றும், சில நேரங்களில் அது வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என்றும் வலுவாக நம்பினார். அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இது “லீ கோட்பாடு”(Lee Thesis) என்று அழைக்கப்படுகிறது. வறுமையில் வாடும் ஒரு நபரோ அல்லது சமூகமோ வலுவான பொருளாதாரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், பிந்தையதை விட முந்தையதைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு ஒரு சிறந்த காரணம் உள்ளது என்றும், வறுமையைக் குறைப்பதற்கும் பொருள்சார் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு அரசாங்கம் ஒட்டுமொத்த சமூக நலப் பணிக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் லீயின் கோட்பாடு கருதுகிறது

 ஜனநாயகம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை லீ நம்பவில்லை. ஜனநாயகத்தின் அதீத செயல்பாடு, வளர்ச்சிக்கு விரோதமான கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்கற்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என அவர் நம்பினார். ஆகவே, மக்கள், ‘ஓ, மக்களிடம் கேளுங்கள்!’ என்று சொல்லும்போது, ​​அது ஒரு குழந்தைத்தனமான முட்டாள்தனம். நாங்கள் தலைவர்கள். எங்களுக்கு அதன் விளைவுகள் தெரியும். அந்தப் பனிக்கட்டித் தண்ணீர் மனிதனுக்குத் தன் வாக்கின் விளைவுகள் தெரியும் என்கிறீர்களா? மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியும் என்று சொல்கிறார்களா? ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாத அந்த நபர், மொழி, கலாச்சாரம் மற்றும் மதம் குறித்த ஒரு கேள்விக்கு உள்ளுணர்வின்படி பதிலளிக்கும்போது, ​​தன் தேர்வின் விளைவுகளை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? என்று லீ வினவினார். (Han, Fook Kwang Lee Kuan Yew: The Man and His Ideas. Marshall Cavendish, Singapore: 2015, p.134)

கம்யூனிசம், முதலாளித்துவம், சோசலிசம் போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவத்திற்குள்ளும் லீ சிங்கப்பூரை சுருக்கிக்கொள்ளவில்லை. “பூனை கருப்பாக இருந்தால் என்ன, வெள்ளையாக இருந்தால் என்ன? அது எலியைப் பிடித்தால் சரி” என்ற சீனப் பழமொழிக்கு ஏற்ப, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எது உதவுமோ அதை மட்டுமே அவர் செயல்படுத்தினார். அவர்  நடைமுறைவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவர் சித்தாந்தத்தில் ஈர்க்கப்படவில்லை; மாறாக, எது செயல்படுகிறதோ அதில் ஈர்க்கப்பட்டார். லீயைப் பொறுத்தவரை, “ஒரு அரசியல் அமைப்பின் மதிப்பின் இறுதி சோதனை” என்பது “அது அந்த சமூகத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நிலைமைகளை நிறுவ உதவுகிறதா” என்பதுதான். ஒரு நாடு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு மக்களாட்சியையும்  கட்டுப்பாடற்ற சுதந்திரத்தையும்விட கட்டுப்பாடும் ஒழுக்கமுமே மிக முக்கியம் என்று அவர் கருதினார். ஜனநாயகத்தின் அதீத சுதந்திரம், சமுதாயத்தில் ஒழுங்கீனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. “வயிற்றுக்குச் சோறிட்ட பின்பே, மனிதனிடம்  சுதந்திரம் பற்றிப் பேச வேண்டும்” என்ற நடைமுறைவாத சிந்தனையைக் அவர் கொண்டிருந்தார். இதனால்தான், பல மேற்கத்திய நாடுகள் அவரது பாணியை விமர்சித்த போதிலும், சிங்கப்பூரை ஒரு மூன்றாம் உலக நாடான நிலையிலிருந்து வெறும் முப்பது ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த பொருளாதார வல்லரசாக அவரால் மாற்ற முடிந்தது. வளர்ந்து வரும் ஒரு நாட்டுக்கு முதலில் தேவையானது மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு மற்றும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. ஒரு அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறதா, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா, பாதுகாப்பைத் தருகிறதா என்பது மட்டுமே அவரது அளவுகோலாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு வாக்குரிமையின் மதிப்பை விட உணவும், வேலைவாய்ப்பும் தான் முக்கியம் என்று லீ எண்ணினார். மக்களாட்சியில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல்வாதிகள் மக்களுக்குப் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களையும், இலவசங்களையும் வாக்குறுதியாக அளிக்க வேண்டி இருக்கும். இது நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத்தை (கடன் சுமை, பட்ஜெட் பற்றாக்குறை) சீரழிக்கும். நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்குத் தேவையான, ஆனால் தற்காலிகமாகக் கசப்பப்பான முடிவுகளை எடுக்க ஜனநாயகம் தடையாக இருக்கும் என அவர் கருதினார். பசியும் வறுமையும் இருக்கும் ஒரு சமூகத்தில், மக்களால் தங்களின் வாக்குகளைச் சரியாகவோ அல்லது தொலைநோக்குப் பார்வையுடனோ பயன்படுத்த முடியாது என்று அவர் நம்பினார். மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் (60% முதல் 70% வரை) நல்ல கல்வி கற்று, தங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான ஒரு நடுத்தர வர்க்கமாக உயரும் போதுதான், அவர்களால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதிர்ச்சியோடு வாக்களிக்க முடியும் என்று அவர் வாதிட்டார். 

லீ கருத்துச் சுதந்திரத்தை தடை செய்தார். தொழிற்சங்கங்கள் செயல்பட அனுமதி மறுத்தார்; ஊடகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்; வெறுப்பைத் தூண்டும் பிரச்சாரங்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை உருவாக்கினார்; தன்னை  விமர்சித்தவர்கள், எதிர்ப்பவர்கள் யாவரையும் கடுமையாக அடக்கியதோடு, சமூக செயல்பாடுகளிலும் அரசியல் ரீதியாகவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்; எதிர்க்கட்சிகள் பெயரளவில் செயல்பட சுதந்திரம் வழங்கினார்; சமயப் பரப்புதலைத் தடை செய்தார்; வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்களுக்குத் தேவையான வீட்டுப் பணியாட்களை எளிதாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வசதியான சட்டத் திட்டங்களை நிறைவேற்றினார்’ இவ்வாறெல்லாம்  அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.  அவரது கடுமையான சட்டங்கள், ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களைக் கையாண்ட விதம் ஆகியவை “அதிகாரத்துவ ஆட்சி” (Authoritarian rule) என்று மேற்கத்திய நாடுகளால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு பின்தங்கிய நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உலகிற்கு முன்னுதாரணமான வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டிய அவரது அரும்பணியாகும். ‘சிங்கப்பூர் மாடல்’ (Singapore Model) இன்றும் பல வளரும் நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், வசதி படைத்தவர்களையும் ஈர்ப்பதற்காகக் குறைந்த வரி விதிப்பு, எளிமையான தொழில் சட்டங்கள் மற்றும் ஊழலற்ற நிர்வாக முறையை அவர் உருவாக்கினார். அரசு நடைமுறைகளை எளிமையாக்கி, தேவையற்ற சிவப்பு நாடா முறையை (Red-tapism) ஒழித்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தார்.

கடுமையான சட்டங்கள் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலை முற்றிலும் ஒழித்து, அதனை உலகின் மிக தூய்மையான நாடாக மாற்றினார். ஊழல் விசாரணைப் பிரிவுக்கு (Corrupt Practices Investigation Bureau) முழு சுதந்திரம் மற்றும் விரிவான  அதிகாரங்களை வழங்கினார். இந்த அமைப்பானது அவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியதால், அரசியல் தலையீடுகள் இன்றி செயல்பட முடிந்தது. ஊழல் செய்பவர்கள் அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் என யாராக இருந்தாலும் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாததால், லீ மனித வளத்தையே மிகப்பெரிய முதலீடாக மாற்றினார். உலகத்தரம் வாய்ந்த கல்வி முறையை உருவாக்கினார். வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கி, உலகின் முன்னணி நிறுவனங்களை சிங்கப்பூரில் முதலீடு செய்வதை  ஊக்குவித்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கில் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (Housing and Development Board) என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.

 இந்திய வரலாற்றின் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தை(1975- 77) நாட்டில் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட தேவையான மற்றும் சரியான செயல் எனப் பாராட்டியவர் லீ. ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கடுமையான சட்டங்களும், உறுதியான தலைமையும் அவசியம்’ என்று அவர் கருதியதால், இந்தியாவில் அவசரநிலை அவசியமானதே என இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார். இந்தியாவில் நிலவும் சாதி, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகள் காரணமாக அங்கு விரைவான முடிவுகளை எடுப்பது கடினம் என்றும், ஜனநாயகம் நாட்டின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியைக் சில சமயங்களில் தாமதப்படுத்துவதாகவும் அவர் எண்ணினார். அருகிலுள்ள மியான்மரின் இராணுவ சர்வாதிகார ஆட்சியையும் ஆதரித்தார். “எனது எல்லா நடவடிக்கைகளும் சரியானது என்று நான் சொல்லவில்லை. முறையான விசாரணை இல்லாமல் நான் கைதுகளைச் செய்தது உண்மைதான்” என அமெரிக்க இதழியலார்களிடம் லீ ஒரு முறை பேட்டி அளித்தார். ஒரு நாட்டில் ஜனநாயகம் சீராக இயங்க வேண்டுமானால், மக்கள் போதிய கல்வியறிவு, ஒழுக்கம், மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகுதியற்ற அல்லது விழிப்புணர்வற்ற மக்கள் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும்,  ‘மக்களாட்சியை சுவாசிப்பதற்குரிய மக்கள் அதற்குரிய தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும்; இல்லையெனில் அது நாட்டின் வளர்ச்சியை சிதைத்துவிடும்’ என்றும் லீ கூறினார். மக்களாட்சி என்பது வெறும் உரிமைகளை மட்டும் கொண்டதல்ல, அது மக்களின் பொறுப்புணர்வையும் தகுதியையும் சார்ந்தது என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தினார். லீ வளர்ச்சிக்கே முன்னுரிமை அளித்த காரணத்தால் மக்களாட்சிக்கு முழு ஆதரவு வழங்கவில்லை. “நீங்கள் ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுங்கள். நான் உங்கள் தேவைகளை நிறைவு செய்கிறேன்” என்று மக்களிடம்  சமரசம்  செய்து கொண்டார். மாற்று விருப்பிற்கு இடமில்லாமல் திணிக்கப்பட்ட கட்டாயமான பேரம் அது. மக்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொண்டதாகச் சொல்ல இயலாது. எனினும் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல அவரது முயற்சி உதவியது எனலாம்.

நிர்வாகம் 

அயராத உழைப்பு,  நேர்மையானத்  தொழிற்முறை,  ஊழலற்ற  அரசு நிர்வாகம்,  குற்றங்களைக்  கட்டுப்படுத்தும்  அணுகுமுறை,  சமுகப்  பாதுகாப்பு,  நாட்டில்  எல்லோரும்  திறமயைக் கொண்டு முன்னேற்றம்  காணமுடியும்  என்ற  அரசியல்  சூழ்நிலை  அவரது அரசால்  உருவாக்கப்பட்டது.  திக்கற்ற  நிலைக்கு  தள்ளப்பட்ட  சிங்கப்பூர்  குடியரசு,  கால ஓட்டத்தில்  உலகமே  போற்றும்  ஒரு  அற்புத  நாடாக  உருமாறியது.  இந்த  முன்னேற்றத்துக்குப்  பலியானது  பேச்சுரிமையும்  கருத்துரிமையும்  என்பதை  மறுக்க  இயலாது.(கி. சீலதாஸ், ‘வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யமாகும் என்ற லீ குவான் யூ சீங்கப்பூரின் விடிவெள்ளி’,செம்பருத்தி, மார்ச்  30, 2015) சிங்கப்பூரை முன்னேற்ற மென்மையான நடவடிக்கைகள் உதவாது என்று கருதியதால் பல கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் அவர் இயற்றினார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் சிறை தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை;  இவ்வாறான சட்டங்களால் மக்களை நல்வழிப்படுத்தினார். எனினும், பலரது விமர்சனத்திற்கும் விரோதத்துக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான மருந்தாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்று மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார். 

சிறிய குற்றங்களுக்கும் கடுமையான பிரம்படி, அதிக அபராதம் மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் அமலுக்குக்  கொண்டுவரப்பட்டதால் அங்கு குற்றங்கள் மிகவும் அரிதாகின. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறு தவறுகளுக்குக் கூட கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிறந்த காவல் கட்டமைப்பு, இரவிலும் பகல் போல் காட்சியளிக்கும் சாலைகள், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து போன்றவை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தன. உலகிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவிலும் தனியாகவும், பாதுகாப்பாகவும் நடமாடக்கூடிய ஒரு சில நாடுகளில் சிங்கப்பூர் முதன்மையானதாகத் திகழ்கிறது. சர்வதேச பாதுகாப்பு குறியீடுகளிலும் (Global Law and Order Index) சிங்கப்பூர் தொடர்ந்து உலகின் மிகப்பாதுகாப்பான நாடுகளுள் முதலிடத்தைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு மக்கள் உழைப்பு அதிக அளவு தேவைப்பட்டதால், லீ. அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் குளிர்சாதன வசதி அளித்தார். மழையும் வெயிலும் அதிகம் உள்ள சிங்கப்பூரில் அலுவலர்கள் ஆர்வத்துடன் அலுவலகங்களில் அதிக நேரம் இருந்து பணி செய்வதற்கு  லீ செய்த இந்த ஏற்பாடு மக்களை அதிகம் உழைக்கத் தூண்டியது. காலம் தவறாமையை லீ மிகவும் போற்றி கடைப்பிடித்தார். அவரது நிர்வாகத் திறமையால், கல்வித்தரம், அடிப்படைவசதிகள், வீட்டு வசதி, வேலைவாய்பு, வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிங்கப்பூர் துரித வளர்ச்சி கண்டது. இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை ஏற்று, அதனையே முதல் மொழியாக்கி,  அவரவர் தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ள அனுமதித்தார். அனைத்து மக்களும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வதான நிலையை  ஒரு 20 ஆண்டு காலத்திற்குள்ளாகவே  சாத்தியமாக்கினார். பல்வேறு இன, மொழி, சமயம் சார்ந்த மக்களை ஒன்றுபடுத்தி, ஒரு நல்லிணக்க  சமூகத்தை எப்படிப் பேணுவது என்பதற்கு சிங்கப்பூரை ஒரு முன்மாதிரி நாடாக  உருவாக்கினார். இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படுகின்ற  பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. தொல்லைகள் இல்லாமல் தொழில்கள் தொடங்க நாட்டின் வாயில்கள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைக்கப்பட்டு, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது.(‘எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ’, கதிரவன், மார்ச் 24, 2015) 

உலகத் தர பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நகரம், ஊழலற்ற நிர்வாகம், அடிப்படைத் தேவைகள் நிறைவு இவற்றில் லீ தனிக்கவனம் செலுத்தினார்.  சிங்கப்பூர் உலகின் மிகக் குறைந்த ஊழல் மற்றும் மிக நேர்மையான நிர்வாகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிக நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகத்தைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சர்வதேச அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்'(Transparency International) ஆண்டுதோறும் வெளியிடும் ஊழல் மலிவுக் குறியீட்டில் (Corruption Perceptions Index) சிங்கப்பூர் உலகளவில் ஊழல் குறைந்த நாடுகளில் முதல்  5 இடங்களுக்குள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிகக் குறைந்த ஊழல் நிறைந்த நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. அங்கு வாழும் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு அரசு பல்வேறு சமூகப் பாதுகாப்பு மற்றும் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. மக்கள் தொகையில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கல்வியறிவு உடையவர்களாக இருக்கின்றனர். சிறப்பான மருத்துவ வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுகிறது. 

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் மிகக் கடுமையான அபராதங்கள் மற்றும் சமூக சேவை தண்டனைகள் விதிக்கப்பட்டன. அங்கு நூற்றில் ஒருவர் (அதாவது 1% முதல் 2% வரை) மட்டுமே வேலையில்லாமல் இருக்கும் நிலை என்பது பொருளாதார ரீதியாக “முழு வேலைவாய்ப்பு” நிலைக்கு சமமாகும். அங்குள்ள கல்வி முறையும், தொழில் திறனுக்கான பயிற்சிகளும் வேலைவாய்ப்பை உறுதி செய்கின்றன.

நாடு விடுதலை அடைவதற்கு முன், அதாவது 1964ஆம் ஆண்டு சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே கடும்  கலவரங்கள்  ஏற்பட்டன. புதிதாக உருவான சிங்கப்பூர் நாட்டைப் பாதுகாக்கவும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கவும் லீ குவான் யூ  தேசிய சேவை திட்டத்தைக் கொண்டு வந்தார். மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த கூட்டு இராணுவப் பயிற்சியே சரியான வழி என்று கண்டறிந்து 18 வயது நிரம்பிய அனைத்து சிங்கப்பூர் இளைஞர்கள் இரண்டாண்டுகள் கட்டாய இராணுவ சேவை ஆற்றச் செய்தார். இந்தத் திட்டம் சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமின்றி, வெவ்வேறு பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வழிவகுத்ததால், நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது. லீயின் ஆட்சியின்கீழ் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சியை ஒப்பாய்வு செய்த ‘தி அட்லான்டிக்’ இதழ், ஒரு சிறிய தீவு நாடு உலக வல்லரசான அமெரிக்காவையே வளர்ச்சி விகிதத்தில் முறியடித்ததை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியது. (கிரகாம் ஆலிசன், ‘தி அட்லான்டிக்’, மார்ச் 30, 2015). கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு வீதம் 2 சதம் என்றால் சிங்கப்பூரின் வீதம் 6 சதம். உலகத் தொழிற் போட்டிக்கான குறியீட்டில் இரண்டாவதாகவும், உலக அளவில் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாகவும் லீயின் சிங்கப்பூர் இன்று மதிப்பிடப்படுகிறது. அனைத்து முன்னணி மதிப்பீட்டு நிறுவனங்களும் (Credit Rating Agencies) AAA அந்தஸ்து வழங்கியிருப்பது, சிங்கப்பூரின் நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு உலக நாடுகள் தரும் உச்சக்கட்ட சான்றிதழாகும். வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட ஊழலற்ற ஆளுகை, மிகக்குறைவான குற்றச்செயல்கள், சிறப்பான மக்கள் நலன் ஆகியவையும் இணைந்ததே சிங்கப்பூரின் உண்மையான பலம்.

உலகிலேயே மிகச் சிறந்த மற்றும் திறமையான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும். சிங்கப்பூரின் சுகாதாரத் துறை உலகிலேயே மிகக் குறைந்த செலவில், அதிக தரம் வாய்ந்த மருத்துவச் சேவையை வழங்குவதாகப் பாராட்டப்படுகிறது. குடிமக்களின் பங்களிப்புடன் கூடிய மருத்துவச் சேமிப்புத் திட்டங்கள் (Medisave) அங்கு மிக வலுவாக உள்ளன. சிங்கப்பூரின் ‘மெடிசேவ்’ (Medisave), ‘மெடிஷீல்டு’ (MediShield) போன்ற திட்டங்கள் மக்கள் எளிதாகவும் மலிவாகவும் தரமான மருத்துவத்தைப் பெற உதவியது. 1965-ல் சுதந்திரம் பெற்றபோது இருந்த பின்தங்கிய நிலையிலிருந்து, முறையான திட்டமிடல் மற்றும் சுகாதார முதலீடுகள் மூலம் குழந்தை இறப்பு வீதத்தை அமெரிக்காவை விடவும் மிகச் சிறந்த அளவிற்கு சிங்கப்பூர் குறைத்துக் காட்டியது.1965ஆம் ஆண்டு  ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் (infant-mortality rate) 2003ஆம் ஆண்டு  2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவு. உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை (World’s healthiest country) முதன்மைப்படுத்துகிறது. குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ள வகையிலும் லீயின் சிங்கப்பூர் முன் நிற்கிறது. 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் கொலை மற்றும் வன்முறைக் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளன. சிங்கப்பூரில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைக் காட்டிலும் 24 மடங்கு குறைவு. கறுப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு  ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம்) 2003 ஆம் ஆண்டு  வெறும் 2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவாக இருந்தது. உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை முதன்மைப்படுத்தியது.

ஊழல் ஒழிப்பு

1959 ஜூன் மாதம்  பதவியேற்ற பிறகு, சிங்கப்பூரை ஊழலற்றதாக வைத்திருக்கத் தானும் தனது சகாக்களும் ஏன் உறுதியாக இருந்தோம் என்பதை லீ தனது நினைவுக் குறிப்புகளில் விளக்கியுள்ளார்: “பல ஆசியத் தலைவர்களின் பேராசை, ஊழல் மற்றும் சீரழிவைக் கண்டு நாங்கள் மனம் நொந்து போனோம்… ஒரு தூய்மையான மற்றும் திறமையான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற ஆழ்ந்த குறிக்கோளுடன் நாங்கள் இருந்தோம். 1959 ஜூன் மாதம் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, ​​எங்கள் தனிப்பட்ட நடத்தையிலும் பொது வாழ்விலும் தூய்மையையும் நேர்மையையும் அடையாளப்படுத்தும் விதமாக, நாங்கள் அனைவரும் வெள்ளைச் சட்டைகளையும் வெள்ளைக் கால்சட்டைகளையும் அணிந்திருந்தோம்.” அக்காலத்தில் ஊழல் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. ஊழல் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததால், பல சிங்கப்பூரியர்களால் அது குறைந்த இடர், அதிகப் பலன் தரும் ஒரு செயலாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக, ஊழலைக் குறைப்பதும், ஊழல் என்பது அதிக இடர், குறைந்தப் பலன் தரும் செயல் என்ற பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதுமே அரசாங்கத்தின் சவாலான நோக்கமாக இருந்தது. ஊழலுக்கு எதிரான லீயின் கொள்கையானது, ஊழல் தடுப்புச் சட்டத்தை இயற்றுதல், ஊழல் தடுப்பு வாரியத்திற்குப் போதுமான நிதி மற்றும் பணியாளர்களை ஒதுக்குதல், ஊழலைத் தடுப்பதற்காக அமைச்சர்களுக்கும் மூத்த அரசு ஊழியர்களுக்கும் போட்டித்தன்மை வாய்ந்த சம்பளங்களை வழங்கி அவர்களை அரசாங்கத்தில் தக்கவைத்தல், மற்றும் பதவி, தகுதி அல்லது அரசியல் சார்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழல் குற்றவாளிகளையும் தண்டித்தல் ஆகியவற்றில் பிரதிபலித்தது. 

ஊழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதை நன்குணர்ந்த அவர், ஊழல் ஒழிப்புக்காக  அதிக அதிகாரங்களைக் கொண்ட கண்காணிப்பு அமைப்பையும் நிறுவினார். 1960ஆம் ஆண்டைய ஊழல் தடுப்பு ஆணை (Prevention of Corruption  Ordinance, 1960)யும் ஊழல் வழக்குகளை விசாரித்து  குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட ஊழல் வழக்குகள் விசாரணை மையம் (Corrupt Practices Investigation Bureau) என்ற அமைப்பும்  ஏற்படுத்தப்பட்டது.  இது ஏழு முறை திருத்தப்பட்டு இன்று ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act) என்று அழைக்கப்படுகிறது.  சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல்,  நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்.  முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கூற நேரிட்டால், அதற்கு பதிலாக அவருக்குச் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து  கணக்குகளையும் கூட அரசு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரலாம். அவரை விசாரணை செய்வதற்காக, எந்த இடத்தையும் சோதனையிட்டு,  தேவைப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் சாட்சி சொல்ல அழைக்கலாம். லஞ்சமாகப் பணம் வாங்கியது உறுதி செய்யப்படாத போதும், ஊழல் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்டதாக நிருபிக்கப்பட்டால் போதும், உறுதியாக சிறை தண்டனை அளிக்கப்படும்.(மித்திலன்,ஊழல் ஒழிப்பு :சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள், சொல்வனம், இதழ், 55, ஆகஸ்ட்  31, 2011 ). 

மொழி 

வெவ்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில், கடுமையான சட்ட ஒழுங்கின் மூலம் லீ அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டினார். பல்லின மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நாடான சிங்கப்பூரில் நேர்மையான மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தினார். சீன, மலாய், தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலத்தில், இவற்றுடன் ஆங்கிலத்தையும் உட்புகுத்தி நான்கு மொழிகளையும் தேசீய மொழிகளாக்கினார் லீ. சிங்கப்பூரில் ஆங்கிலம் தேசிய மொழியாகக் கொள்ளவில்லை. அது நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே அவரவர் எந்த மொழி கல்விக் கூடத்திற்குச் சென்றாலும் ஆங்கிலத்தை கட்டாயம் கற்க வேண்டியிருந்தது. அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆங்கிலத்தில் நடைபெற லீ ஆவனச் செய்தார். எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் சாதகமாக இருக்கக் கூடாது என்ற நடுநிலைத் தன்மைக்காகவும், உலகளாவிய வணிகத் தொடர்புகளுக்காகவும் ஆங்கிலம் பொதுவான முதன்மை மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் புகுத்தப்பட்டது. பல்மொழி இனப்பிரிவுகளை கொண்ட நாட்டில் அரசு மக்களின் மொழியை அங்கீகரிக்கவேண்டும் என்று கருதினார். சிங்கப்பூரில் பெரும்பான்மையாக வாழும் சீனர்கள், பூர்வகுடிகளான மலாய்க்காரர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் தமிழர்கள் ஆகிய மூவின மக்களுக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் அவர்களின் தாய்மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன. பண்டாரநாயக்க சிங்கள மொழியை தேசிய மொழியாக பிரகனப்படுத்தியது, இலங்கையின் இனப் பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைந்துவிட்டது என்று லீ குவான் யூ சுட்டிக்காட்டினார்

சமயம் 

பெரும்பாலான தருணங்களில் லீ தன்னை ஒரு யதார்த்தவாதியாகவே வெளிப்படுத்தினார். அவருடைய சிந்தனைகள், முடிவுகள், செயல்பாடுகள் யாவும் கற்பனையான உலகை நம்பாமல், தற்போதைய சூழ்நிலையின் உண்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. 2010 ஆம் ஆண்டு தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் தன்னை ஒரு யதார்த்தவாதி என்று கூறிடினும், தன் தந்தையார் இறந்த 1997 வரையிலும், சீன நாட்டு கிராமிய சமயப் பழக்க வழக்கங்களையே பின்பற்றிவந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது சுய சரிதையில் “நான் என்னை ஒரு நாத்திகன் என்று அழைக்க மாட்டேன்; நான் கடவுளை  மறுப்பவனோ அல்லது ஏற்றுக்கொள்பவனோ இல்லை” என்று எழுதினார். • ‘கடவுள் என்று ஒருவர் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அதே நேரத்தில், கடவுள் இருக்கிறார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை’ என்று கருதினார். சமயக் கோட்பாடுகளை விட நிஜ வாழ்க்கையின் நடைமுறைச் சாத்தியங்களுக்கும் மனித ஒழுக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 2009 ஆம் ஆண்டு தேசிய புவியியல் இதழுக்கு அளித்த பேட்டியில் தன்னை தாவோ பௌத்த சமயப் பிரிவைச் சார்ந்தவன் என்று வெளிப்படுத்தினார். தீவிரமான சமயப் பரப்புதல்கள் மற்றும் மதமாற்ற முயற்சிகள் வெவ்வேறு மதக் குழுக்களுக்கு இடையே மோதல்களையும், நாட்டின் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்பதை லீ உணர்ந்திருந்தார். எனவே, சமய, சாதிய, அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் மொத்தமாகத் தடை செய்ததுடன், சிங்கப்பூரில் சமயப்பரப்புதலுக்கும்  அனுமதி மறுத்தார். ‘வறுமையில் வாடும் ஒரு சமூகத்திற்குச் சமயம் மட்டுமே கௌரவத்தை மீட்டுத் தந்துவிடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். பொருளாதார  வளம் மட்டுமே  அதனை வழங்கும்’ என்று   லீ  குவான்  யூ  கருதினார்; அதனையே நடைமுறை படுத்தினார்.

தமிழர்கள்

உலக நாடுகளுக்கே முன்மாதிரி தலைவராக விளங்கிய லீ குவான் யூ தமிழர்களையும் தமிழ் மொழியையும்  ஆழமாக நேசித்தார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை எப்போதும் உயர்வாக மதித்தார். தமிழர்களின், குறிப்பாக சிங்கப்பூரில் அவர் காலத்தே வாழ்ந்தவர்களின் மத்தியில் சிறப்பிடம் பெற்றார். வெறுமனே கருத்துக்களால் மட்டுமின்றி செயலாலும் தமிழர்களுடன் இணைந்து நின்றார். சொல்லால் சிலம்பமாடாது, செயலால் சாதித்துக் காட்டினார். லீ குவான் யூவின் பணிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அங்குள்ள தமிழர்களாவர். மக்கள் செயல் கட்சியைத் தொடங்கிய காலத்தில் அவரது உற்ற நண்பராக இருந்தவர் மலேசியாவில் பிறந்த இரண்டாவது தலைமுறை யாழ்ப்பாணத்தவர் ச. இராசரத்தினம் என்பவர் ஆவார். சிங்கப்பூர் என்கிற நாடு உருவாக அயராது உழைத்தவர்கள் தமிழர்கள். அவர்களின் உழைப்பில் மிகுந்த நம்பிக்கை உடையவர் லீ. ‘அதற்கான நன்றிக்கடனாகவே நான்  தமிழை ஆட்சி மொழியாக்கி உள்ளேன்’ என்பதை  வெளிப்படையாகச் சொல்லி தமிழர்களின் இதயங்களை ஆட்கொண்டவர் லீ குவான் யூ. அதனால்தான் தமிழ் ஆட்சி மொழி என்பது உட்பட சீனர்களுக்கு இணையான பல உரிமைகளை தமிழர்களுக்கும் லீ வழங்கினார். ஏராளமான தமிழர்களை அவர்களின்  திறமைக்காககப் போற்றினார். சிங்கப்பூரில் தமிழ் கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியம் நிலைத்திருக்க அவர் பெரும் ஆதரவு அளித்தார். அங்குள்ள ‘லிட்டில் இந்தியா’ (Little India) பகுதி தமிழர்களின் அடையாளமாகப் பாதுகாக்கப்படுவதற்கு அவரது தொலைநோக்குப் பார்வையே காரணம்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் சொந்த(இந்திய)நாட்டிலேயே  தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்படாத நிலையில், சிங்கப்பூர் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்தவர். ஈழத்தில் நடைபெற்ற தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, அமைதிக்கும் சுமூகத் தீர்வுக்கும் வலியுறுத்தியவர் அவர் மறைவையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் நாட்டில்  உள்ள பலரை வாழ வைத்த நாடு சிங்கப்பூர். அதற்கு காரணமான லீ குவான் யூ, “எங்களை வாழ வைத்த தெய்வம்”, என்று அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்துகையில் தெரிவித்தனர்.(தி இந்து, ஏப்ரல், 9, 2015) 

ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்து தெளிவானப் பார்வையைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக அந்நாட்டு அரசைக் கடுமையாக விமர்சித்தார். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை “தீவிரவாத ஒழிப்பு” என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அமெரிக்க பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில், “பெரும்பான்மையான சிங்களவர்கள் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டுகிறார்கள். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களின் மனங்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை வெறும் “பயங்கரவாத ஒழிப்பு” என்று உலக நாடுகள் பல கடந்து செல்ல முயன்றபோது, லீ குவான் இயூ அதன் பின்னணியில் இருந்த வரலாற்றுப் பிழைகளையும், சிங்களத் தலைவர்களின் இனவெறிப் போக்கையும் உலகிற்குத் துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டினார். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள்.’ என்று லீ குவான் யூ கூறியுள்ளார். தமிழுக்கு ஆட்சி உரிமை- தமிழர்களுக்கு வாழ்வுரிமை- தமிழீழத்திற்கு ஆதரவான ஆளுமை –இதுவே லீயின் நிலைப்பாடு.

பதவி விலகல்

ஆளும் மக்கள் செயல் கட்சி 2011 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்றது. 2006 தேர்தலில் 67% வாக்குகளையும், 2001 தேர்தலில் 75% வாக்குகளையும் அது பெற்றிருந்தது. 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக பெரும் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து 2011 மே 15 அன்று சிங்கப்பூரின் நிறுவனரும் முன்னாள் பிரதமரும் லீ குவான் யூ மற்றும் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோர்  அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். 

மறைவு

சிங்கப்பூர் விடுதலை  பெற்றதன் 50ஆவது ஆண்டு பொன்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட வேண்டும்  என்று லீ விரும்பினார். அதன்படி, பொன்விழா 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட இருந்த  சூழலில், நுரையீரல் அழற்சி காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு  தனது 91ஆவது வயதில் 2015 மார்ச 23ஆம் நாள் அதிகாலை 3.18 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு  அந்நாடு ஒரு வாரம் துக்கம் அனுசரித்தது. 2015 மார்ச்29 அன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் உள்ளிட்ட 21 நாட்டு தலைவர்கள்  மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, அவரை  நினைவு கூர்ந்து, உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.(தி இந்து, 25 மார்ச் 2015) ஆயிரக்கணக்கான மக்கள் மழையை பொருட்படுத்தாமல் வழி நெடுங்கிலும் நின்று தங்களின் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் காலம் என்ற இணைய இதழ் கூறுவது போன்று, ‘முதல்முறை நடைபெறும் ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நிகழ்வு கூட சிங்கப்பூரில் அவருக்கான மரியாதையை சற்றும் குறைக்காமல் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டதும் கூட திரு லீயின் வழிகாட்டுதலாகவே இருக்கக்கூடும்’ என்றே கருதலாம்.(காலம், 29 மார்ச், 2015) அவர் மறைவிற்கு  சிங்கப்பூர் அரசு பொது விடுமுறை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் அப்போதைய பிரதமரும், லீ குவான் யூவின் மகனுமான லீ சியன் லூங் தனது இரங்கல் செய்தியில், “நமது தேசத் தந்தையர்களில் முதன்மையானவர் இப்போது இல்லை. அவர் நமக்கு உத்வேகம் அளித்தார், தைரியம் கொடுத்தார், நம்மை ஒன்றுபடுத்தினார், மேலும் நம்மை இங்கு கொண்டு வந்தார். அவர் நமது சுதந்திரத்திற்காகப் போராடினார், தேசம் இல்லாத இடத்தில் ஒரு தேசத்தை உருவாக்கினார், மேலும் சிங்கப்பூரர்களாக இருப்பதில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்தார்” என்று குறிப்பிட்டார். தன் பெயரால் எந்தவொரு சாலைக்கும் பெயரிடப்படுவதையோ, சிலைகள் வைக்கப்படுவதையோ அவர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக எதிர்த்தார். தனது  மரணத்திற்குப் பிறகு தன்னை ஒரு “ஆளுமை வழிபாடாக” மாற்றுவதை லீ விரும்பவில்லை. தனிநபர் புகழ்ச்சியை விட, சிங்கப்பூர் நாட்டின் எதிர்காலமும் அங்குள்ள மக்களும் தங்களின் சொந்த முயற்சியால் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே அவரது நோக்கமாகவும் கொள்கையாகவும் இருந்தது.

லீயின் பங்களிப்பு 

முப்பதாண்டு கால ஆட்சியில் மக்கள் தொகை, நில பரப்பு, இயற்கை வளங்கள் என எல்லாவற்றையும் குறைந்த அளவே பெற்றிருந்தும், சிங்கப்பூரை ஆசியக் கண்டத்தில் முதன்மையான வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக  வளர்ச்சியுறச் செய்த பெருமை லீயை சாரும். ஒரு நாட்டை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்பதற்கு உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த அவர்,  உலகத் தரத்தில் முதன்மையான நகர அரசாகவும் உலகின் மிகச் சுறுசுறுப்பான துறைமுகங்களில் ஒன்றாகவும் சிங்கப்பூரை மலரச் செய்தார். பின்தங்கிய ஒருமீன்பிடி கிராமமாக இருந்த இடத்தை,  கடுமையான உழைப்பால் உலகத்தரம் வாய்ந்த நிதி மற்றும் வர்த்தக மையமாக மாற்றிக்காட்டினார். அவரது தலைமையின் கீழ், சிங்கப்பூர் ஆசியாவிலேயே மிக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களில் ஒன்றைக் கொண்ட ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியது .அவரைப் பொறுத்தவரை தனது நாட்டு மக்கள் தத்தம் பணியில் காட்டும்  அர்ப்பணிப்பே சிங்கப்பூரின் இயற்கை வளங்களாகும். அவரின் சாதனைகள் சீன கம்யூனிஸ்ட் தலைமைமீது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, டெங் சியாப்பிங் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி தொழில் முனைவு மற்றும் அதிருப்தியாளர்களை ஒடுக்குவது போன்றவற்றில் லீ வழிகாட்டியாக இருந்தார்.  1978 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட சீனத் தலைவர் டெங் சியாப்பிங், அங்குள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாகவே, சீன அதிகாரிகள் சிங்கப்பூரின் மேலாண்மை, நகரத் திட்டமிடல் மற்றும் தொழில்முனைவுத் திறன்களைக் கற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். லீ உலக தலைவர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார். ஹென்றி கிஸ்ஸிங்கர், ‘வரலாற்றில் லீ ஓர் ஒப்புமை இல்லாத தலைவர்’  என்று பாராட்டினார். ரிச்சர்ட் நிக்சன், ‘லீ பிறிதொரு காலத்திலோ அல்லது இடத்திலோ வாழ்ந்திருப்பாரெனில் ஒரு சர்ச்சில் அல்லது  ஒரு டிஸ்ரேலி அல்லது ஒரு க்ளேட்ஸ்டோன் என உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பார்’ என்று கூறினார். பாரக் ஒபாமா கூறுகையில், “20 மற்றும்  21ஆம் நூற்றாண்டுகளின் ஆசியாவின் புகழ்மிக்கத்  தலைவர்களுள் ஒருவர்; ஆசியாவில் பொருளாதார அதிசயம் நடந்தேற தூண்டுகோலாக இருந்தவர் லீ” என்று குறிப்பிட்டார். லீயின் பதவிக்காலம் சிங்கப்பூருக்கு ஈடு இணையற்ற வளர்ச்சியை அளித்தபோதிலும், அது அரசியல் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்திய ஒரு சர்வாதிகார ஆட்சி முறையாலும் வரையறுக்கப்பட்டது .

அண்ணல் காந்தி உரிமைகளை காட்டிலும் கடமைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பார். “உரிமைகள் என்பவை கடமைகளிலிருந்து தானாகவே முளைத்து வெளிவருபவை” என்பது அடிகளின் ஆழமான நம்பிக்கையாக இருந்தது. கடமை தவறிய சமூகம், உரிமைகளை இழந்து இறுதியில் அழிவைச் சந்திப்பது வரலாற்று உண்மை. மக்கள் தங்களின் கடமைகளை சரிவர ஆற்றிட அரசாங்கத்தின் கண்டிப்பு தேவையாகிறது. ஒரு சமூகம் கடமையைவிட உரிமைகள் மீதே எப்போதும் அக்கறை  கொள்ளுமாயின் அது கால ஓட்டத்தில்  மடிந்து  போகும் என்பது உண்மை. “உரிமை என்பது நாம் கோருவது, கடமை என்பது நாம் கொடுப்பது.” கொடுப்பது குறைந்தால், சமூகம் கால ஓட்டத்தில் தானாகவே மடிந்து போகும் என்பது வரலாற்று உண்மை. உண்மையான சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தன் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து வாழ்வதே ஆகும். லீ  புகட்டிய கண்டிப்புடன் கூடிய கடமையுணர்வின் பரிசாகவே இன்றைய சிங்கப்பூர் தலை நிமிர்ந்து காட்சியளிக்கிறது. சிங்கப்பூரை மறுஉருவாக்கம்  செய்த திரு லீயின் முறையான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இன்று சிங்கப்பூரினை உலக நாடுகளின் பட்டியலில் முன் வரிசை நாடுகளுள் ஒன்றாகச் சேர்த்துள்ளது. 

ஆசியப் பண்புகள் மேற்கத்திய பண்புகளைவிட வேறுபட்டவை என்று மக்களாட்சியின் வரைவிலக்கணத்தை மாற்றியெழுதியவர் லீ; ஒரு மாபெரும் தாக்கத்தின் அடையாளச் சின்னம்; சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒப்பற்ற மாமனிதர்; 58 ஆண்டுகள் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூருக்கு முன்னர் விடுதலை அடைந்த பல இயற்கை வளங்கள் கொண்ட நாடுகள் இன்னமும் மூன்றாந்தர வரிசையிலேயே இருந்து கொண்டிருக்க, எந்த வளமும் இல்லாத ஒரு சிறிய தீவு உலக அளவில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்றால் அது லீ குவான் யூ என்னும் தனி மனிதனின் தொலைநோக்கு மற்றும் உறுதியானப்  பார்வையே. அவர் பிரதமராக பதவியேற்கையில் சிங்கப்பூர் உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியே. ஆனால் பிரதமராக இருந்து பதவி விலகுகையில் அது பெரும்புள்ளியாயிற்று. மறைக்க இயலாத சாதனைகள் படைத்திட அவர் கடினமான நடைமுறைகளை கையாண்டிருக்கலாம். ஆனால், அவர் முன்னெடுத்த நிர்வாக நடவடிக்கைகளால் பன்னாட்டு அளவில் சிங்கப்பூர் தனித்துயர்ந்து நிற்கின்றது. மக்களாட்சி முறையில் நின்ற போதிலும், மக்களுடைய கடப்பாடுகளை வலிந்து, கண்டிப்புடன் உணர்த்தி, மக்கள் தங்களின் கடமைகளை சரிவர ஆற்றுவதன் மூலமே ஒரு நாடு முன்னோக்கியப் பாதையில் சென்று வளர்ச்சியின் சிகரத்தை எட்ட முடியும்  என்பதனை உலகிற்கு உணர்த்தி நிற்கும் லீ குவான் யூ பிற நாட்டு அரசியல்வாதிகளுக்கு சிலபல நிலைகளில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். “எதுவுமே இல்லை என்பதிலிருந்து எல்லாவற்றையும் சாத்தியமாக்க முடியும்” என்பதற்கு இவரின் வாழ்வும், இவரால் உருவாக்கப்பட்ட சிங்கப்பூரும் மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. லீ குவான் யூ புகட்டிய கண்டிப்புடன் கூடிய கடமையுணர்வின் பரிசாகவே இன்றைய சிங்கப்பூர் உலக அரங்கில் தலை நிமிர்ந்து காட்சியளிக்கிறது.



Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.