சந்திரன் பேசிக்கொண்டே இருந்தான். படகு ஆடிக்கொண்டு இருந்தது. மனம் இன்னமும் கனமாகவே இருந்தது. சந்திரனின் ஆலோசனையைக் கேட்டு இங்கு வந்ததால் எல்லாம் சரியாகிவிடுமா என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டது. அப்படி எளிதில் சரியாகிவிடுகிற விஷயமா என்று தோன்றியது. மனதை உலுக்கியபடி ஆற்றைப் பார்த்தேன்.
காவிரி ஒரு மலர்ந்த புன்னகையுடன் மிதந்து கொண்டிருந்தாள். சில இடங்களில் அவள் ஒரு சிறுமி போல கும்மாளம் போட்டுக் கொண்டிருப்பாள். சில இடங்களில் கோபத்துடன் சீறிப்பாய்வாள். இங்கு முதிர்ந்த அரசியின் ஆழ்ந்த அமைதியுடன் நிதானமாக மிதந்து செல்கிறாள். அகண்ட காவிரி. அவளைப் பார்க்கப் பார்க்க மனதின் புயலடிப்பு சற்றே ஓய்ந்த மாதிரி இருந்தது.
படகிலிருந்து இறங்கினேன். மெல்லிய பச்சைப் போர்வை போர்த்தி தூங்கும் கரைகள். இங்கு ஆசிரமத்தை அமைத்தவன் ஒரு ஞானியாக மட்டுமல்லாது ஒரு ரசிகனாகவும் இருந்திருக்க வேண்டும்.
“எவ்வளவு அழகான இடம்” என்றேன்
“பியூட்டிஃபுல் பிளேஸ், இல்லையா” என்று நான் சொன்னதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னான் சந்திரன்.
“தமிழ் நாட்டில் படகில டிராவல் செய்யற இடமும் இருக்குனு நா நினைக்கவேயில்ல”
“உனக்குத் தமிழ் நாட்டப் பத்தி என்ன தெரியும்?” கிண்டலாகச் சொன்னான் அவன்.
பெரிய தோட்டம். அதிகமும் ரோஜாப் பூச்செடிகள். கொஞ்சம் மல்லிகைப் பூச்செடிகள். ஒரு முதிய அரசமரம். அருகிலேயே ஒரு சிறிய பிள்ளையார் கோவில். வாழைகளுக்குள் நீண்ட மண்பாதை. தூரத்தில் செட்டிநாடு பாணியில் ஓடு வாய்ந்து கட்டப்பட்ட கட்டிடம்.
“ நிறைய இடம் இருக்கு போலிருக்கே”
“ஆசிரமம் இருக்கிற இடமே கிட்ட தட்ட பத்து ஏக்கர் இருக்கும்.” என்றான் சந்திரன்.
“இங்க எப்படி ஆசிரமம் கட்டினாங்க?
‘ அது கட்டி நானூறு வருஷமாச்சு. இத ஆரம்பிச்ச முதல் ஸ்வாமிஜி எங்கயோ வடநாட்டிலிருந்து வந்ததாராம். மொழியும் தெரியாது. மௌனமா ஆற்றங்கரையிலேயே இருந்திருக்காரு. கிராமத்திலிருந்தவங்க அவரைப் போய் கும்பிட்டிருக்காங்க உணவு, தங்க இடம் எல்லாம் கொடுத்து ஆதரிச்சிருக்காங்க. அவர் வந்த பிறகு கிராமத்தில நிறைய நல்லது நடந்திருக்கு. இங்கயே இருக்கச் சொல்லி கேட்டுக்கிட்டாங்க. அவரும் தங்கிட்டாரு.”
“அப்படியே வளர்ந்திருச்சு போல”
“ஆமா. அவர் வந்த பிறகு எங்க ஜாதிக்காரங்களுக்கு நல்ல அதிருஷ்டம். காசு கொழிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் அவங்க அந்த சாமியாருக்கு சீடராயிட்டாங்க. ஆசிரமத்திற்கு நிறைய சவுகரியங்கள் செய்து கொடுத்தாங்க. நிலங்களும் நிறைய சேர ஆரம்பிச்சுருச்சு”
“அந்த ஸ்வாமிஜி என்ன ஆனார்?”
“ அவர் என்ன அப்படியே இருப்பாரா? எப்பவோ சமாதியாயிட்டாரு. அதுக்குப் பின்னாடி அஞ்சு சாமியாருக வந்துட்டாங்க. இரண்டாவது, மூணாவது சாமியாருங்கதான் ரொம்ப ஃபேமஸு. அவங்க காலத்துலதா சொத்து ரொம்ப பெருகுச்சு.
“ சொத்து நிறைய சேர்க்குற சாமியாருதா பெரிய சாமியாரு போல?”
“ நீ உன்னோட வழக்கமான குதர்க்கப் பேச்ச ஆரம்பிக்காத. ஃபங்க்ஷன் முடியறவரைக்கும் வாலச்சுருட்டிட்டு அமைதியா இரு”
“இந்த ஃபங்க்ஷன் எப்ப முடியும்?”
“இனியும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள முடிக்கறதப் பத்திக் கேட்கிற. எவ்வளவு பேரு பேசப்போறானுகளோ? அத்தனை பேரு பேசி, பொன்னாடை போர்த்தி. பரிசு கொடுத்து….. ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் வேற இருக்கு. நாலைஞ்சு மணி நேரம் ஆயிடும். அதுக்குப் பின்னால அன்னதானம் வேற இருக்கு”
“அத வேற சாப்பிடப் போறமா”
“அதுதானே ஹைலைட்டே. சாப்பாடு சூப்பராயிருக்கும். துரைசாமி அதெல்லாம் கிளப்பிடுவாரு”
‘நா எதுக்கு இங்க வந்தேனுனே தெரியல. நீ கம்பெல் பண்ணினதாலதான் வந்தேன். திரும்பிப் போயிடலாமுனே இருக்கு” சலிப்பான குரலில் சொன்னேன்.
“பேசாம இரேன் பாபு. உனக்கு ஒரு மாறுதலாக இருக்குமுனுதான் கூட்டிட்டு வந்தேன். எல்லாத்தையும் மறந்திட்டு ஜாலியா இரேன்.”
மௌனமாக இருந்தேன்.
“அதையே நினைச்சுட்டு இருக்காம இந்த ஆறைப் பாரு பாபு. இந்த ஆறும், இந்த கரையில் இருக்கிற கோயில்களும் எல்லாத்தையும் ஆத்திடும்” என்று சொல்லிக்கொண்டே என் கைகளைப் பற்றிக்கொண்டான் சந்திரன்.
சூழலை இலகு படுத்தும் விதமாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே சொன்னான் சந்திரன்.
எவ்வளவு இடம் வேஸ்டா கிடக்கு. இங்க சுத்திலும் சின்ன சின்னக் குடில்களா அமைச்சு, ஒப்பன் ஏர்ல டிசைனா பெஞ்சு போட்டு, டெகரேட் பண்ணி ரிசார்ட்டா பண்ணினா எப்படி இருக்கும்?” அவன் ஒரு ரியல் எஸ்டேட் முதலாளி. வெற்றிகரமான தொழில் முனைவாளனும்கூட.
“சுத்தியும் கோயிலும் மடங்களும்தான். இங்க ரிஸார்ட் வச்சா எவன் வருவான்? இங்க எல்லாம் புளிச்சோறு கட்டிட்டு கோயிலுக்கு வற்ர கூட்டம்தா வரும்”
“அப்படிச் சொல்லாத பாபு. இப்பல்லாம் காஸ்ட்லி ஆன்மீகச் சுற்றுலாவிற்கு பெரிய மார்க்கட் இருக்கு. நல்ல அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணி, நெட்டில போட்டு விளம்பரம் பண்ணிணா பணத்த அள்ளிரலாம்”
“அப்ப உங்க சங்கத்தில இந்த ஐடியாவ சொல்லேன். உங்க சங்க கன்ட்ரோலில்தானே இந்த ஆசிரமும் இருக்கு”
“துரைசாமியும் அருணாச்சலமும் கொன்னே போடுவாங்க”
“ஏன். அவங்களும் பிஸினஸ்மேன்தானே?”
“அவங்க பிஸினஸும் வேற. அரசியலும் வேற. சரி வா போகலாம். மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு. ஆசிரமத்தை சுத்திப் பார்க்கலாம்” விரைவாக நடந்தான்.
ஆசிரமத்திற்குள் நுழைந்தோம். செட்டி நாட்டுக் கலை நுணுக்கங்களுடன் அழகாக கட்டப்பட்ட பெரிய கட்டிடம். இருபக்கமும் பெரிய திண்ணைகளுக்கு நடுவில் உயரமான கனமான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தேக்குக் கதவு. உள்ளே விசாலமான கூடமும், அறைகளும். சிதிலமடைந்தவற்றை மட்டும் மாற்றி பழமை மாறாமல் பாதுகாத்திருந்தார்கள். கட்டிடக் கலை வல்லுநர்களின் திறமையை மனதுக்குள் வியந்து கொண்டேன். பளிச்சிடும் சுவர்களின் வெண்மை தேக்குக் கதவுகளுடனும் ஓட்டுக் கூரையுடனும் பாந்தமாகச் சேர்ந்தது. பின்புறம் ஆற்றில் இறங்கும் படிகள்.

“யாரு ஆர்க்கிடெக்ட்? சூப்பராப் பண்ணியிருக்காங்களே?” அந்த அழகை ரசித்தபடி கேட்டேன்.
“ ஒரு சின்னப்பொண்ணும் பையனும். அண்ணா யுனிவெர்சிடியில படிச்சுட்டு சொந்தமா சென்னையில கம்பனி வச்சிருக்காங்க. லவ் மேரேஜும் பண்ணிட்டாங்க போல”
“திறமையானவங்களத்தான் பிடிச்சிருக்காரு உங்க துரைசாமி”
“ சும்மாவா அவரு சென்னையில பிஸினெஸ் மாக்னெட்டா இருக்காரு. சரியான ஆளுகள ஐடெண்டிஃபை பண்றதில அவர மிஞ்ச ஆளு கிடையாது.”
சுவற்றில் இதுவரை இருந்த ஸ்வாமிஜிகளின் சித்திரங்கள் மாட்டப்பட்டிருந்தன. எடுப்பான வண்ணங்களில் ஸ்வாமிஜிகள் மந்தகாசம் புரிந்து நின்றனர். அவர்கள் முகங்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
உயரமான குடுமியும் நரைத்த நீண்ட தாடியும் கொண்ட முதல் ஸ்வாமிஜி வயதானவராக காணப்பட்டார். ஆழ்ந்த அமைதி படர்ந்த கண்கள். லேசான சோகமும் தெரிகிறதோ? அழகான முகம். அவரையே பார்த்து நின்றேன். எதைத் துறந்து இவ்வளவு தூரம் வந்தார்? எதை அடைந்தார்? எதற்காக இத்தனை பேர் அவர் பின்னால் வந்தார்கள்?
மற்ற ஸ்வாமிஜிகள் நல்ல வளத்துடன் இருந்த மாதிரித் தெரிந்தது.
“படத்தில் இருக்கிற மாதிரித்தான் நிஜத்திலும் இருந்தார்களா? குழந்தைத்தனமாகக் கேட்டேன்.
“யாருக்குத் தெரியும்? ஏதோ பழைய படங்களை வைத்து ஓவியர் வரைந்திருக்கிறார். அவ்வளவுதான்”
நல்ல கற்பனை சக்தியுள்ள ஓவியர்தான்.
“மாடிக்குப் போவோம் வா” அழைத்தான் சந்திரன்.
பெரிய மொட்டை மாடி. சுற்றிலும் வேலைப்பாடுகள் நிறைந்த குட்டையான கைப்பிடிச் சுவர்கள். கீழே சிவப்பு நாட்டோடுகள் பதித்திருந்தார்கள். இங்கிருந்து பார்க்கும்போது நதி இன்னும் அழகாகத் தெரிந்தது.
“ ரொம்ப ரம்யமாயிருக்கு”
“ வாழ்ந்திருக்காங்க இல்ல இந்த சாமியாருக” என்றான் சந்திரன்.
கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றேன். ஈரம் கலந்த காற்று முகத்தை வருடிச் சென்றது. பானு என்ன செய்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன். அவளையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம். இந்த நதிக்கரையில் நேரத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் பேசியிருக்கலாம். பேசமுடிகிற சூழ்நிலையில் பேசினால் குறையாத கனம் எதுவுமில்லையே.
எவ்வளவு நேரம் நின்றிருந்தோம் என்று தெரியவில்லை. காலம் அசைவற்றிருந்தது.
“ டைம் ஆயிடுச்சு. வா போவோம்” இறங்கினான் சந்திரன்.
“ஆசிரமத்திற்கு இப்ப யாரு ஸ்வாமிஜி?’ நடந்தபடியே கேட்டேன்
“ நாலாவது ஸ்வாமிஜி இறந்து இரண்டு வருஷம்தான் ஆச்சு. வேற ஒரு மடத்திலருந்து ஒரு சின்ன வயசு சாமியை கூட்டிட்டு வந்து மடாதிபதியா நியமனம் பண்ணி வச்சிருக்காங்க. அவரு புதுசுதானே. டைம் ஆகும். மடத்திற்கு சொத்து வேற நிறைய இருக்கு. டிரஸ்ட்தான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணுது. “
‘டிரஷ்ட்னா?’
‘”எங்க சமூகத்தை சேர்ந்தவங்கதா சாமியாருக்கு சீடர்களா இருந்து ஆசிரமத்தை வளர்த்தவங்க. அதிலிருந்து சிலரை டிரஸ்டிகளாத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் பண்ணிட்டு வர்றாங்க”
“என்ன பண்ணுவாங்க?
“என்ன பண்ணுவாங்களா? மடத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா? நிலமே ஆயிரம் ஏக்கர் இருக்கும். பெரிய சிட்டிகளிலே நூத்துக்கு மேலெ கடைக இருக்கு. இதெல்லாம் கரக்டா நிர்வாகம் பண்ணி பணத்தைப் பெருக்கினாத்தானே சமூகத்திற்கு நிறைய நல்ல காரியங்கள் செய்ய முடியும்?”
“ஓ. இவ்வளவு இருக்கா?”
“பின்ன? அதுவும் இப்ப பொறுப்புக்கு வந்திருக்கிற கமிட்டி சூப்பர். அருணாச்சலம், துரைசாமி அப்புறம் ரத்னகுமார் எப்படி ஆளுக தெரியுமில்ல. ஏழைகளுக்கு கல்யாணத்துக்கு உதவிப்பணம், மருத்துவ உதவி, கல்வி உதவின்னு நிறைய ஸ்கீம் கொண்டு வந்திருக்காங்க”
“ நல்ல விஷயம்தான்” என்று கூறியபடியே மௌனமானேன். அவன் சொன்ன பெயர்கள் எல்லாம் தமிழகத்தின் பெரும் புள்ளிகள். தொழிலதிபர்கள். கல்வித்தந்தைகள். நிர்வாகத்திறமைக்குப் பேர் போனவர்கள். திறமையாக இந்த டிரஸ்ட் நடப்பதில் ஆச்சரியமில்லை. நல்ல பணிகள் நிறையச் செய்கிறார்கள். பாராட்டத்தான் வேண்டும்.
மனம் ஏனோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது. ஏதோ புழுக்கம் போல உணர்ந்தேன். “போகலாமா?” என்று கேட்டேன்.
“ஆமாம். மீட்டிங்குக்கு நேரமாச்சு. வா. போகலாம்’ அவசரமாக முன்னால் நடந்தான் சந்திரன்.
மீட்டிங்கிற்கு போக மனமேயில்லை. சந்திரன் பேச்சைக் கேட்டு வந்தது தவறோ என்று மீண்டும் நினைத்தேன். வேறு வழியின்றி சந்திரனைத் தொடர்ந்தேன்.
ஆசிரமத்திற்கு அருகில் பெரிய காலி மைதானம். பல வண்ணத்துணிகளில் அழகான கூடாரம் அமைத்திருந்தனர். உள்ளே முழுவதும் மலர்களால் அலங்காரம். அங்கு அவ்வளவு பெரிய கூடாரத்தையும் கூட்டத்தையும் எதிர்பார்க்கவில்லை. போட்டிருந்த ஆயிரக்கணக்கான ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் நிறைந்து கிடந்தன. பெண்களும் கணிசமாக இருந்தனர். பட்டுப்புடவைகளின் சல சல சத்தம். மல்லிகைப்பூவின் வாசம். மேடையில் நடப்பதைப்பற்றி கவலையே படாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். மேடையே பிரமாண்டமாக இருந்தது. இளம் ஸ்வாமிஜி நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அருகில் இருபுறமும் அருணாச்சலமும் மற்ற பெரிய புள்ளிகளும்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய மனிதர்கள் எதற்காக தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இங்கே வந்திருக்கிறார்கள்? என்ன கிடைக்கிறது இதனால்?
சமூகத்தில் ஒரு பெரிய இடம்தான். ஒரு ஏற்பு கிடைக்கிறதல்லவா அது தவிர ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கும் என்றான் சந்திரன்.
“ஆத்ம திருப்தியும் கிடைக்குமா இதில?”
“பின்ன? எவ்வளவு புண்ணிய காரியங்கள் பண்றாங்க!’
இவர்கள் போக மேடையில் மேலும் இருபது பேர் அமர்ந்திருந்தனர். மேடையின் படிகளில் இருபதுபேர் நின்றிருந்தனர். ஒல்லியான ஒரு பேர்வழி வரவேற்புரை என்கிற பெயரில் ஒரு பட்டியலை படித்துக் கொண்டிருந்தார். மிகையான அடைமொழிகள். பட்டப்பெயர்கள்.
ஒருவழியாக வரவேற்புரை முடிந்தது. பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவிக்கும் சடங்குகள் நடந்தேறின. மேடையில் இருந்த இருபது பேரும் ஒருவருக்கொருவர் அணிவித்துக்கொண்டனர். நான் பொறுமையிழந்து சந்திரனைப் பார்த்தேன். இரு இரு என்று சைகை காட்டினான். துரைசாமி எழுந்து மைக் அருகே சென்றார். கூட்டத்தைக் கம்பீரமாகப் பார்த்தார். கண்ணாடியை மாட்டிக்கொண்டு கையில் இருந்த தாள்களைப் பார்த்தார். நிறைய இருக்கிற மாதிரித் தெரிந்தது. மாட்டிக் கொண்டேன் என்று எண்ணினேன். அவரும் முதலில் மேடையில் உள்ள அனைத்துப் பேரையும் புகழ்ந்தார். தலைவருக்கு கொஞ்சம் அதிகம் புகழ் மொழிகள் ஒதுக்கப்பட்டன. பின் வரவு செலவு அறிக்கையைப் படித்தார். நிதி நிலைமை திருப்திகரமாகவே இருக்கிறது என்று புரிந்தது. நடந்த பணிகளையும் எதிர்காலத் திட்டங்களையும் விவரித்தார்.
ஆசிரமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றார். ஒரு கல்யாண மண்டபமும் கட்ட ஆலோசனை இருக்கிறது என்றார். இந்தப் பணிகளுக்காக தலைவர் பதினைந்து லட்சமும், ரத்னகுமார் பத்து லட்சமும் நன்கொடை கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள் என்றார். பின் ஏதோ மறந்ததை சொல்வது போலத் தானும் சிறு தொகையாக ஐந்து லட்சம் அளிப்பதாக அறிவித்தார். கைதட்டல் ஒலி வானதிர ஒலித்தது. இவர்கள் மட்டுமே செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் சமூக மக்கள் அனைவரும் மனமார நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிறகு சென்னையின் முக்கியப்பகுதி ஒன்றில் ஐந்து ஏக்கர் நிலம் ஆசிரமத்திற்குப் பாத்தியப்பட்டது என்று தெரிய வந்ததிருக்கிறது என்றார். ஐம்பது வருடங்களுக்கு முன்பே ஆசிரமத்திற்கு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வாரிசுகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆசிரமத்திடம் ஆதாரங்கள் வலுவாக உள்ளன. வழக்குத் தொடர்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றார். ஐநூறு கோடி ரூபாய் மதிப்பு வரும் என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “யார் தானம் பண்ணினது” என்று கேட்டேன்.
“ யாரோ ஒரு கிழவி எழுதி வச்சுட்டு செத்துப் போச்சு. அவங்க வாரிசுக ஒத்துக்கல. பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு”
“எதுக்கு இப்படி சொத்து பூரா எழுதி வைக்கிறாங்க? என்ன மன நிலையில இப்படிக் கொடுக்கறாங்க? அவங்களுக்கு அதுக்குப் பின்னால மன நிறைவு கிடைச்சுதா? என்னிடமே கேட்பது போல முனகினேன்.
“யாருக்குத்தெரியும்? நான் கொடுக்க மாட்டேன். ஆனா நிறையப்பேரு கொடுக்கறாங்க. அதினாலதானே இவ்வளவு சொத்து சேருது. அரசியல், சினிமாவுக்குப் பிறகு சாமியாருக கிட்டத்தானே காசு நிறைய சேருது?” சந்திரன் ஆற்றாமையுடன் சொன்னான்.
துரைசாமி பேச்சை முடித்து விட்டார். அடுத்ததாக ஆசிரமத்திற்கு பணிகள் செய்த நிர்வாகிகளுக்கு டிரஸ்ட் மரியாதை செய்யும் என்று அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டமாக அறிவிக்கப்படும். முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேர் மட்டும் மேடைக்கு வந்து மரியாதையைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.
மாவட்ட வாரியாக பெயர்களை அறிவிக்க, கும்பலாக மேடைக்குச் சென்றனர். பொன்னாடை, மாலை அணிவிக்கப்பட்டது. நிறைய நபர்கள் சென்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஐந்து பேர் மட்டும் வரவும் என்று திரும்ப திரும்பச் செய்யப்பட்ட அறிவிப்பிற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.
திடீரென்று ஒரு பெருங்கூச்சல் எழுந்தது. மேடைக்கு அருகில் களேபரம் போலத் தோன்றியது. “என்ன திண்டுக்கல் மாவட்டம் என்றால் அவ்வளவு இளப்பமா? இந்த ஆசிரமத்திற்கு எவ்வளவு செய்திருக்கிறோம்? எவ்வளவு நேரமாக காத்திருக்கிறோம். பிச்சைகாரனைத் தள்ளுவது போலத் தள்ளறீங்களே’ என்று பலத்த குரலில் ஒருவர் கத்தினார்.
“ உங்கள் பெயரைக் கூப்பிட்ட பிறகு வந்தால் போதும். கீழே உட்காருங்கள் என்றுதானே சொன்னேன் ” என்றார் துரைசாமி.
“ இல்லை. நான் வந்ததிலிருந்தே பார்க்கிறேன். அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். மேடையில் இடம் கொடுக்கவில்லை. முன் வரிசையிலும் இடம் கொடுக்கவில்லை. இப்போது தள்ளி விடுகிறீர்கள். உங்களுக்கு அதிகாரத் திமிர் ” என்று கோபத்துடன் மீண்டும் கத்தினார் அவர். அவர் கறுத்த முகம் கோபத்தில் சிவந்திருந்தது. உருண்ட கண்கள் முறைத்து விழித்தன.
‘திமிர் என்றெல்லாம் பேசினால் மரியாதை கெட்டுவிடும்” துரைசாமியும் கத்தினார்.
“ அப்படியா? மன்னிப்பு கேட்காமல் நீங்கள் மீட்டிங்க் நடத்துவதை நானும் பார்க்கிறேன்”
துரைசாமி பதில் சொல்லாமல் மேடையின் மேல் ஏறிச் சென்றார். ஸ்வாமிஜி புன்னகை மாறாமல் எழுந்து ஆசிர்வாதம் செய்வதுபோல் இரண்டு கைகளையும் காட்டிவிட்டு மேடையை விட்டு பின்புறமாக இறங்கிச் சென்றார். மற்ற தலைவர்களும் இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்திவிட்டு இறங்கிச்சென்றனர். மேடையில் இருந்த கும்பல் முழுவதும் கரைந்து சென்றது.
கலாட்டா செய்தவரும் ஒரு சிறு கூட்டமும் மேடையின் முன் நின்று “மன்னிப்பு கேள். மன்னிப்பு கேட்காமல் போக மாட்டோம்” என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தது.
“ஐயோ, இவரா? எல்லாத்திலயும் பிரச்சினை பண்றவராச்சே” என்றான் சந்திரன்.
“உனக்குத் தெரிஞ்சவரா ” என்று கேட்டேன்.
“ நேரடிப் பழக்கம் இல்ல. அரசியலில இருக்காரு. எல்லா மீட்டிங்குலயும் பிரச்சினை பண்ணிட்டே இருப்பாரு”
“இந்த மாதிரி ஆளுககிட்ட ஏதாவது பொறுப்பக் கொடுத்தா பேசாம இருப்பாங்களே”
‘நீ வேற. கையில காசே கிடையாது. எதுக்கும் பணம் செலவு பண்ண முடியாது. பணம் கலெக்ட் பண்ணவும் தெரியாது. பெரியவங்க எப்படி மதிப்பாங்க? இக்னோர் பண்ணிட்டுப் போயிட்டே இருப்பாங்க”
வேறு சிலர் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தனர்.
“நீ இரு. நான் போய் பேசிப்பார்க்கிறேன் ” என்று சொல்லிவிட்டு சந்திரன் சென்றான்.
குரல்களின் ஓயாத சளசளப்பு நான்குபுறமும் கேட்டுக் கொண்டே இருந்தது. கூடாரத்தின் உஷ்ணம் அதிகரித்திருப்பதாக உணர்ந்தேன். லேசாக தலைவலித்தது.
நான் மெதுவாக நழுவி வெளியே வந்தேன். கூடாரத்திற்குப் பின்புறம் புதர்கள் அடர்ந்து காடு போலிருந்தது. நடுவில் ஒரு ஒற்றையடிப்பாதை போலிருந்தது. ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாத பாதை போல. இருபுறமும் முள்செடிகள். கவனமாக நடந்தேன். கூச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. பறவைகளின் குரல்கள் விட்டுவிட்டுக் கேட்டன. கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு மரத்தடியில் ஒரு கல் நீண்டு கிடந்தது. ஒரு சாமியார் உட்கார்ந்து கஞ்சா போல ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் சிரித்து ” வா, உட்காரு” என்று தள்ளி அமர்ந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டேன். எங்கள் இருவர் முன்னிலும் விரிந்த காவிரி அதே மலர்ந்த புன்னகையுடன் மிதந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் நதியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தோம்.
Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
