முப்பரிமாணம்

எதிர்ப்படும் அனைத்தையும் ஐயத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தும் விழிகள் வாய்த்து நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது. அந்த விடுதி அறையினுள் அடிவைத்த நொடியே அங்கும் இங்கும் என அலைபாய்ந்து, சிலவற்றை தொட்டெடுத்து சித்தத்தினுள் குறிப்புகளாக பதியச்செய்து கொண்டிருந்தன அவை. இனி இதற்கான தேவை ஏதுமில்லை என்கிற எண்ணம் ஒருவித வலியை ஏற்படுத்தினாலும் மறுகணமே அதனை மறைத்தபடி லேசான புன்னகை ஒன்றை உகுத்தேன்.

இருவர் வசதியாக படுக்கும் அளவிற்கு விஸ்தீரணம் கொண்ட கட்டிலும், அமர்ந்து பணியாற்றுவதற்கு தோதாக ஜன்னலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேசை மற்றும் நாற்காலியும், அதற்கு பக்கவாட்டில் இருந்த ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடியும் என அந்த அறை ஒரு கோணத்தில் மிகவும் ஒடுங்கியதாகவும், மறுகணம் அதற்கு முரணாக சற்று விசாலமாகவும் தென்பட்டது. சுவர்கள் புதிதாய் பூசப்பட்டதைப்போல் தோன்றினாலும் பெரிதாய் ஒளி விழாத ஒருசில மூலைகளில் காரை உதிர்ந்து அவலமுகம் எட்டிப்பார்த்தது.

கைவசம் எடுத்துவந்திருந்த ஒற்றைப் பையை மூலையில் இருந்த மர அலமாரியினுள் வைத்துவிட்டு திரும்பியவன் சிறிது நேரத்திற்கு அங்கே கிடந்த கட்டிலையும், அதன் மேல் போர்த்தப்பட்டிருந்த இளநீல விரிப்பையும் வெறித்தபடி நின்றேன். உள்ளே வந்ததிலிருந்தே இந்த அறைக்கும் எனது நினைவுகளில் ஆழமாய் பதிந்திருந்த அறைக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை கூர்ந்து அவதானித்து வருவதை அப்போதே உணர்ந்தேன். மறுகணம் இனம் விளங்காதோர் பரபரப்பு தோன்றி பாதங்களில் குளிரை தோற்றுவித்தது. மாறாமல் நிலைபெற்றிருக்கும் ஒன்றை நாடி அடைந்திராவிட்டால் என் வசம் இருக்கும் ஏதோ ஒன்றினை நிரந்தரமாய் இழக்க நேரிடும் என்பதைப்போல் நெஞ்சினுள் ஒரு விரைவு மூண்டது. உப்பரிகைக்கு இட்டுச்செல்லும், கொசுவலை பொருத்தப்பட்டிருந்த வலைக்கதவை திறந்துகொண்டு வெளியே சென்று வலப்பக்கம் இருந்த சுவரைப் பார்த்தேன். எட்டு வருடங்களுக்கு முன்பு நான் கண்டிருந்த புகைப்படச்சட்டகம் அப்படியே இருந்தது. உலோகம் சற்று துரு சூடி, இற்றுப்போகும் நிலையில் இருந்தாலும், அது ஏந்தி இருந்த படம் பொலிவிழக்காமல் இருந்தது ஒருவித வியப்பையும் ஆசுவாசத்தையும் வழங்கியது.

தனது இளம் பிராயத்தில் புகைப்பட கலைஞராக திகழ்ந்த விடுதியின் உரிமையாளர் இங்கே உள்ள அறைகளின் உப்பரிகைகளில் எல்லாம் அவர் எடுத்த புகைப்படங்களை அணிவித்து அழகுபார்க்கும் வழக்கம் கொண்டிருந்தார். குளிர்ந்து பனிப்பூத்து நின்ற விளிம்புக் கம்பிகளைப் பற்றியபடி சற்று எம்பி பக்கவாட்டு அறையை நோக்கினேன். சென்ற முறை கண்டிருந்த கழுதைப்புலியின் வண்ணமயமான புகைப்படமே அங்கும் இருந்தது. லேசாய் முறுவல் செய்தபடி சட்டைப்பையில் இருந்த சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டு ஆழமாய் புகையிழுத்தேன். கண்கள் மீண்டும் எனது அறையில் இருந்த படத்தின் மேல் லயித்தன. கருகருவென ஈரப்பளபளப்புடன் மின்னிய சிறிய குன்றைப்போன்ற ஒன்றின் மீது, லேசான கீறல் விழுந்திருந்த சற்றே பெருத்த ஓட்டைச் சுமந்தபடி ஊர்ந்து ஏறும் ஒரு நத்தை. இமைக்காமல் அப்படத்தையே நோக்கிக்கொண்டிருந்தபோது ஒருநொடி அது அசைவதைப்போன்ற பிரமை எழுந்தது. மறுகணம் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் நில்லாமல் ஊர்ந்து அது அந்தக் குன்றின் உச்சியை அடைவதைபோல் ஒரு கற்பனையாக அது விரிந்தது. சட்டென அதன் நீட்சியாக அக்காலகட்டத்தில் கழிந்த எனது வாழ்வும், சறுக்கல்களும் காட்சிகளாய் உயிர்பெற, அவற்றை அந்த நத்தை உச்சியில் நின்றபடி வேடிக்கைப் பார்ப்பதைப்போல் ஒரு எண்ணம் வந்து திகைப்பூட்டியது.

அடிவயிற்று தசையினுள் மெல்லிதாய் ஏதோ சுழித்துக்கொள்ள கையிலிருந்த சிகரெட்டை வீசியெறிந்துவிட்டு அறையினுள் நுழைந்தேன். இடப்பக்கம் இருந்த குளியலறையினுள் இருந்து மெல்லிதாய் ஒரு ஓசை எழுந்தது அப்போதுதான். கூரான ஏதோ ஒன்று பளிங்கைக் கீறுவதைப்போல. அல்லது எவரோ ரகசியமாய் எதையோ உண்பதைப்போல. சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனடியாக பரபரப்புக்கொண்ட மனம் தன்னிச்சையாய் ஒரு போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. புலன்கள் கூர்மையடைந்து, தசைகளினுள் ஒருவித உஷ்ணமும் இறுக்கமும் குடியேற குளியலறை நோக்கி ஒருவித இறுமாப்புடன் அடியெடுத்து வைத்தேன். இமைக்கா விழிகளுடன் அந்த அறை நோக்கிச் சென்றேன். திடீரென தாளவே முடியாத அச்சமும், நிதர்சனத்தின் மீது ஒருவகையான அசிரத்தையும் தோன்றிவிட அப்படியே பின்வாங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டேன்.

அதிகார துஷ்பிரயோகம் உட்பட வெளிப்படையாய் சொல்லமுடியாத மேலும் சில புகார்களின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது நான் அதனை எந்தவிதமான சஞ்சலங்களும் இன்றி ஒருவித வீராப்புடனே ஏற்றுக்கொண்டிருந்தேன். பலவற்றை பார்த்து சலித்துவிட்டவனுக்கு இது அத்தனை பெரிய இழப்பொன்றுமில்லை என்றே அப்போது தோன்றியது. ஆனால் எனது உணர்ச்சிகளின் சமநிலையை தக்கவைத்துக் கொள்வதில் நான் அணிந்திருந்த காக்கி சீருடைக்கு எத்தகைய பங்கு இருந்தது என்பதை நான் வெகு விரைவில் புரிந்துகொண்டேன். அந்த சீருடை ஈட்டித்தந்தவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்டு குறிப்பிட்டதொரு வடிவைப் பெற்றிருந்த உள்ளம் திடீர் திடீரென தறிகெட்டுத் துள்ளுவதும், எதிர்பாரா கணமொன்றில் சாளரங்கள் அனைத்தையும் அடைத்துக்கொண்டு இருளில் தன்னை அமிழ்த்திக்கொள்வதுமாய் இருந்ததை சமாளிக்க முடியாமல் ஒருகட்டத்தில் திண்டாடிப்போனேன். நிலைமறந்த உறக்கம் வேண்டி உட்கொண்ட சாராயமும், மாத்திரைகளும் இம்மி உதவாமல் பொய்த்துப்போயின. உறக்கமின்மை உண்டாக்கிய உளச்சோர்வு உறவுகளை நான் பேணும் விதத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது. உதிரத்தின் வழி உருவான பிணைப்பு மற்றும் நிர்பந்தத்தின் காரணமாக சிறிது காலம் பொறுமைகாத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் என்னைவிட்டு நீங்கத் துவங்கியபோதுதான் இந்த நாற்பதாண்டு கால வாழ்விலே முதல் முறையாக தற்கொலை எண்ணம் துளிர்த்தது. எட்டு ஆண்டுகள் கழித்து நான் இந்த விடுதி அறைக்கு வந்தது அந்த சுயவதை முனைப்பை வெல்லும் பொருட்டுதான்.

அற்பமானதோர் தெருச்சண்டை, ஓருயிரை காவுவாங்கிய வெட்டுக்காயம், அனைத்திற்கும் முகாந்திரமாய் இருந்தது போதை என மிகவும் எளிதான, நேரடியான ஒரு வழக்காகத்தான் அன்றைக்கு அது துவங்கியது. ஆனால் ஒருவர் பின் ஒருவராக பிடிபட, அவர்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்றும் தகவல்களைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தோண்டத் தோண்ட நாங்கள் காவல்காக்கும் நகரத்தின் அடித்தளத்தில் இயங்கும் மிகப்பெரியதொரு குற்றச் சங்கிலியின் சரடொன்றின் நுனி வசப்பட்டது. அதனை கவனமாகப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் இழுக்க இழுக்க விந்தையான கேளிக்கைகள், அரிதான போதை வஸ்துக்களில் துவங்கி தொடர் கொலைகள், வெளிநாட்டு தொடர்புகள், முதலீடுகள், பல கோடிகள் பணப்புழக்கம் என அது விரிந்துகிடப்பது தெரிந்தது. மூன்று குழுக்களாய் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் அலைந்து திரிந்ததன் விளைவாக அக்குற்றச் செயல்களின் பின்புலமாய், தலைமையாய் திகழ்ந்தவனின் அடையாளம் கிட்டியது. மட்டுமல்லாமல் அந்தியூர் அருகே இருக்கும் விடுதி ஒன்றின் இரண்டாம் தளத்தின் கடைக்கோடி அறையே அவனது தங்குமிடம் என்கிற தகவலும் வந்துசேர்ந்தது. மறுநாள் விடியல் பொழுதில் என் தலைமையில் ஒரு குழு அந்த விடுதியைச் சுற்றிவளைக்க நானும் தேனி உதவி ஆய்வாளர் தணிகாசலமும் அறையின் கதவைத் தகர்த்தபடி உள்ளே நுழைந்தோம். அன்று இதே அறையில் அவன் சுருண்டு படுத்திருந்த கட்டிலின் மேல் விரிக்கப்பட்டிருந்த போர்வை இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. கையில் ரிவால்வருடன் நின்ற எங்கள் இருவரையும் கண்டு உருண்டு விழுந்து நிமிர்ந்தவனின் முகத்தில் ஒருகணம் பீதி அடர்ந்தது. மறுகணம் ஒருவித ஏளனமாய் அது உருக்கொள்ள, படுக்கை அருகே இருந்த மேசையில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த நெடிய ஊன்றுகோலை உபயோகித்தபடி எழுந்துகொண்டான். அவன் கால்களற்றவன் என்பதைக் கண்ணுற்ற கணம் ஏனோ எனது உடல் கிடுகிடுக்கத் துவங்கியது. கட்டுக்கடங்காத ஒரு உணர்ச்சி என்னை முழுமுற்றாய் ஆட்கொள்ள அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு என்னுள் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் சற்றும் முன்யோசனை இன்றி அவனை அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்தினேன். இளஞ்சிவப்பு படுக்கை விரிப்பு செந்நிறம் கொண்டு அறையின் மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தது. என் கைத்துப்பாக்கி உமிழ்ந்த புகை புலரியின் பனியுடன் கலந்துகொள்ள, காற்றில் ஒருவித நெடி பரவியது.

உடன் இருந்த தணிகாசலம் அச்செயலை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. மாலையில் ஈரோடு ரயில் நிலையம் அருகே இருந்த மதுவிடுதியினுள் அவருடன் அமர்ந்திருந்தபோது இரண்டு முறை மன்னிப்பு கோரினேன். சுட்டிருக்க வேண்டாம் என்று சொன்னவர் தன்னால் அதனை புரிந்துகொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். அவரது வாக்குமூலமும், அவருக்கு இருந்த செல்வாக்கின் மூலமாகவும் என் மேல் எழுந்த விசாரணை மிக சுலபமாக சமாளிக்கக்கூடிய ஒன்றாக மாறிப்போனது. ஆனால் எண்ணத்தினால் எட்டிவிட முடியாத ஆழம் ஒன்றினுள் அந்தக் கொலையினால் நான் உருமாற்றம் அடைந்திருப்பதை நான் பின்னாட்களில் புரிந்துகொண்டேன். அச்சம்பவம் நடந்த கொஞ்ச காலத்திலேயே வீழ்ச்சி என்கிற சொல்லின் மீதே அலாதியான அச்சம் கொண்டவனாக மாறிப்போயிருந்தேன். கொலைச்செயலில் பெரும் திறப்பொன்றை கண்டுவிட்டிருந்த ஏதோ ஒன்று என்னை உள்ளிருந்து இயக்கி உச்சங்களை நோக்கி உந்துவதாக அமைந்தது. உயரப்பறத்தலுக்காக எத்தகைய கீழ்மையிலும் திளைப்பதற்கான துணிச்சல் எப்படியோ வசப்பட்டிருந்தது. விசும்பையே வீடென கொண்டிருக்கும் பருந்தொன்றின் பாதையில் இடராய் தோன்றி அதனால் தாக்குண்டு இறக்கைகள் கிழிபட்டு மண்ணோடு வீழ்ந்த நாள் வரை பறத்தலுக்கான எனது வேட்கை ஓய்ந்திருக்கவில்லை.

ஜுரவேகத்துடன் வாகனத்தை கிளப்பிக்கொண்டு ஒருகணம் கூட ஓய்ந்திருக்காமல் பத்து மணிநேரம் பயணித்து அந்தியூர் வந்தடைந்து இந்த விடுதியின் முன் நின்ற கணம் அடிநெஞ்சில் மெல்லியதோர் நடுக்கம் தோன்றியிருந்தது. முதல் பறத்தலுக்கு முன்பான பாய்ச்சலை எதிர்நோக்கி விளிம்பில் நிற்கும் குஞ்சுப்பறவையின் பரபரப்பு உடம்பெங்கும் படர்ந்திருந்தது. நான் குறிப்பிட்டு கேட்டிருந்த அறையில் தங்கியிருந்த விருந்தினர்கள் காலி செய்வது வரை வரவேற்பறையில் காத்திருந்தேன். ஐந்து மணி நேரம் கழித்து பணியாள் ஒருவனுடன் படியேறி அந்த அறையின் முன்பு சென்று நின்றபோது அதன் கதவுகள் என்னை அபரிமிதமான கிளர்ச்சிக்கு உள்ளாக்கின. ஆனால் விசித்திரமான ஓசைகள் கேட்ட அந்தக் குளியலறையை நோக்கி எட்டுவைக்க இயலாமல் உடல் தயங்கிப் பின்வாங்கியது என்னுள் இனம்புரியாத சலனத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. சீருடை மற்றும் கைத்துப்பாக்கி இல்லாமல் நான் வலுவற்ற புழு என்பதும், அவற்றின் துணை இன்றி இவ்விடத்திற்கு வந்தது அத்தனை பாதுகாப்பான செயல் இல்லையோ என்கிற அபத்தமான ஐயமும் தோன்றியது. பூட்டப்பட்டிருக்கும் அறையினுள் எவர் பதுங்கியிருக்கப் போகிறார்கள் என்று தர்க்கம் உரைத்தாலும் என்னால் அதனை மதித்து செயலாற்ற இயலவில்லை.

சடாரென எழுந்து லுங்கியை மேலும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறி கீழிறங்கிச் சென்று விடுதியின் பணியாளிடம் புகாரளித்தேன். உறக்கச் சடைவுடன் எழுந்துவந்தவன் இந்த விடுதியில் குறிப்பிட்ட அந்த அறையில் மட்டும் ஒரு காட்டுப்பூனை அவ்வப்போது ஊடுருவும் என்று முணுமுணுத்தபடியே நடந்துவந்தான். அறையின் ஜன்னலை ஒட்டினாற்போல் இருக்கும் தென்னைமரத்தை வெட்டியது, பின்வாசலில் வலைக்கம்பிகள் பொருத்துவது, விடுதியின் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிப்பது, வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்வது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வித பயனையும் அளிக்கவில்லை என்று சொன்னவன், அந்தப் பூனை பெரும்பாலும் அந்த அறையினுள் ஆட்கள் இருக்கும்போது வருவதில்லை என்பதால் இவ்விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டோம் என்றும் தெரிவித்தான். நான் அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். உடனடியாக சுதாரித்துக் கொண்டவன் அந்த அறையை பெரும்பாலும் எவருக்கும் வாடகைக்கு விடுவதில்லை எனவும், யாரேனும் அதனை குறிப்பிட்டு கேட்டால் மட்டுமே, அதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை அறையை நன்கு சோதித்துச் சுத்தம் செய்தபிறகே அனுமதிப்போம் என்று சொன்னான்.

படியேறிச்சென்று இடப்பக்கம் திரும்பி இருண்டிருந்த தாழ்வாரம் வழியாக அறையை நோக்கி நடந்தோம். பாதித் திறந்திருந்த கதவின் ஊடாக வெளிக்கசிந்த ஒளி தரையில் நீட்டமாய் விழுந்திருந்தது. சட்டென ஒருகணம் அதில் தோன்றி மறைந்த நிழலசைவை நான் மட்டும் காணவில்லை என்பதை அந்தப் பணியாள் திடுக்கிட்டு நின்றதில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. அவன் ஒருமுறை என் பக்கம் திரும்பினான். பிறகு வாயைப் பிளந்து பெருங்கூச்சல் எழுப்பியபடி ஒரே பாய்ச்சலில் அறையின் வாயிலை அடைந்தான். அவன் கண்கள் எதையோ கண்ணுற்று விரிவுகொண்டன. மேலும் உச்சக்குரல் எடுத்து, “ஏய்!!” என்று அலறினான். நான் தடதடவென ஓடி அவனை அணுகிச் சென்று அறையினுள் பார்த்தபோது கருகருவென கொழுத்திருந்த பூனை ஒன்று கட்டிலின் மேல், சரியாக மெத்தையின் மையப்புள்ளியில் நின்றுகொண்டிருந்தது. உடலின் ரோமங்கள் விறைத்து நிற்க கூர்மையான தனது பச்சைநிற விழிகளால் எங்களை இரண்டொரு நொடிகளுக்கு ஊடுருவுவதைப்போல் பார்த்தது. பணியாள் தனது கைகளால் அந்த மரக்கதவை ஓங்கி அறைந்து ஓசையெழுப்பியபடி அதை நோக்கி ஓடவும் அது ஒரே தாவில் உப்பரிகையை அடைந்து மறுதாவில் தரைத்தளம் நோக்கி பறந்து இறங்கி ஓடி இருளினுள் அமிழ்ந்தது. தப்பித்திருந்த பூனையை நோக்கி வசைச்சொற்களை ஏவியபடி உப்பரிகையில் இருந்து திரும்பி உள்ளே நுழைந்த பணியாள் சோர்வுற்றவனாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னிடம் மன்னிப்பு கோரினான். நான் வேண்டினால் எனக்கு வேறொரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான். நான் பதில் ஏதும் சொல்லாமல் அந்தக் கட்டிலேயே பார்த்துக்கொண்டிருந்தேன். பூனையின் கரிய ரோமங்கள் சில ஆங்காங்கே சிதறியிருந்தன. அது அமர்ந்திருந்த இடத்தில் லேசாய் ஈரம் கசிந்திருந்தது. உற்சாகத்தில் அல்லது பதற்றத்தில் அது லேசாய் சிறுநீர் கழித்திருக்கவேண்டும்.

திடீரென ஏதோ ஆண் மற்றும் பெண்ணினுடைய பெயரைச் சொன்ன பணியாள் நடப்பவை அனைத்திற்கும் அவர்களே காரணம் என்று சொன்னான். நான் அவன் பக்கம் திரும்பினேன். ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கே தங்கியிருந்த திருமணம் ஆகாத இளம் ஜோடிகள் ஒருவரை ஒருவர் கொன்று இங்கே இவ்வறையில் செத்துப்போனதையும், இரண்டு நாட்கள் கழித்து சூழப்பரவிய துர்நெடி கண்டு அறையினுள் வந்தபோது அவர்கள் இருவரும் குருதி வெள்ளத்தில் கிடந்ததையும், அறையின் முனை வரை ஒழுகிச் சென்றிருந்த உதிரத்தை இந்தக் கரும்பூனை நக்கிக் கொண்டிருந்ததையும் என்னிடம் பகிர்ந்துகொண்டான் அவன். ருசிகண்ட பூனை மீண்டும் குருதி கோரி இங்கே இந்த வளாகத்தைச் சுற்றி உலவத் துவங்கியதால் தான் தங்களது முதலாளியின் தொழில் நஷ்டம் காண ஆரம்பித்ததாக புலம்பித் தீர்த்தான்.

நான் அவனையே உற்று கவனித்து கொண்டிருந்தேன். வீசிய மெல்லிய காற்றில் அவனது கேசம் அசைவதை, பதற்றத்தினால் உருவான வியர்வை சிறு துளிகளாய் அவன் மூக்கின் நுனியில் பூத்திருப்பதை, உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவனது மொழியை என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே இருந்தவன், “சார்!”, “சார்!” என இரண்டுமுறை அழைத்தபோதுதான் நான் என்னையும் அறியாமல் கண்களை மூடிவிட்டிருப்பதை உணர்ந்தேன். “என்ன?” என்றபடி விதிர்த்து விழித்தபோது நீண்டதொரு கொட்டாவி என்னிடமிருந்து வெளிப்பட்டது.

உறக்கமா? உறக்கம் என்னை அண்டுகிறதா? நான் நிஜமாகவே இரு நொடிகள் உறங்கினேனா? மனம் பதைபதைக்கத் துவங்கியது. அறையை மாற்றித்தர வேண்டுமா என்று மீண்டும் ஒருமுறை வினவிய பணியாளை அப்படியே வெளியே அனுப்பிவிட்டு பூனை ரோமங்கள் சிதறிக்கிடந்த மெத்தையில் படுத்துக்கொண்ட இரண்டாம் நொடி உறங்கிவிட்டிருந்தேன்.

***

மூச்சடைக்கச்செய்யும் மிக மோசமான நெடி அது. சுவாசம் சுவாசம் என்று தொண்டைக்குழியினுள் தத்தளித்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உந்தித் தள்ள வெடுக்கென எழுந்துகொண்டேன். இமைகளை மூடிக்கொண்டு சற்று எம்பியபோது காற்றில் கொஞ்சம் மிதந்தேன். மறுகணம் உயரப்பறந்தேன். நிலத்தின் மீது அசாத்தியமான பற்றுக்கொண்ட கால்கள் திடீரென அவசியமற்று போயின.

நிலத்தை மறந்து உயர உயர அந்நிலத்தில் ஊர்வன, தவழ்வன, நெளிவன, நடப்பன மீது ஆத்திரமும் அருவருப்பும் உதாசீனமும் பெருக்கெடுத்தது. அவை அந்த நெடியிலிருந்து துளிர்த்தவை. அந்த நெடியின் எண்ணற்ற பரிமாணங்கள். நெடியின் நிழல்கள். அவற்றை நிலத்தோடு நசுக்கி மேலும் எம்பி உயர்வதில் பிழையேதுமில்லை என்று திடமானேன்.

பறக்க இயலாதவற்றை வேரறுக்கும் விழைவு பெற்றிருந்த பிறருடன் கூடிக் குழுவாகி கொண்டாடிக் கெக்களித்தேன்.

ஆகாசவெளியை அண்ணாந்து நோக்கி இறைஞ்சுவர்களின் மீது எச்சங்களை உதிர்ப்பவருடன் கைகோர்த்து நடனமிட்டேன்.

அரிதான வேளைகளில் இறகொன்றை உதிர்த்து அது மிதந்து சரிந்து இறங்கி நிலைபெறும் கரங்களை வேடிக்கைப் பார்த்தேன். நான் உமிழ்ந்த ஒற்றை இறகைப் பொன்னென பத்திரப்படுத்தும் பதர்களைக் கண்டு இளக்காரமாய் சிரித்தேன். தடித்த கால்கள் கொண்டவர்கள் அந்த ஒற்றை இறகு தரும் பறத்தல் கனவுகளில் அமிழ அமிழ நான் அவர்களின் இறைவனென மாறிப்போனேன்.

முகில்களை உரசும் சிகை பெற்றிருந்த நெடிய மரம் ஒன்றின் உச்சிக்கிளையில் ஒரு அந்திப் பொழுதில் அமர்ந்திருந்தபொழுது முன்பொரு நாள் என் முதுகின் மேல் கால் பதித்து எம்பி எழுந்து, நான் உறுத்துப் பார்த்து ஏங்கும் உயரங்களைத் தீண்டி ருசித்த பிறிதொரு ஜீவன் நரம்பறுந்த பட்டமென சுழன்று சுழன்று தரையிறங்குவதைக் கண்டு எனது வஞ்சத்தை எல்லாம் மறந்து என் நெஞ்சம் பதைபதைத்தது. உயரங்களைப் பார்த்து வாய் மட்டும் பிளந்திருந்த அந்த அருவருக்கத்தக்க உயிரினங்கள் அப்போது பற்களைக் காட்டி இளிப்பதைக் கண்டபோது பஞ்சுபோன்ற எனது உடல் தீப்பற்றி எரிந்தது. ஏக்கம் தோய்ந்த அவற்றின் விழிகளில் குரூரமும், கொடும் வஞ்சமும் நடனமிட்டன. உயரங்களை அலசிப்பார்த்த அப்பறவையின் சிறகுகள் தரைதொட்ட நொடி அதன் உடல் அந்த அற்ப பிறவிகளினால் சுக்குநூறாக கிழிக்கப்பட்டது. வான் என்ற ஒன்றை அறிந்திராத எறும்புகளும் புழுக்களும் அதன் விழிகளுக்குள் துளையிட்டு நுழைந்து களித்தன.

நான் எழ விழைந்தேன். ஏனோ சிறகை அசைக்க இயலவில்லை. தலை உயர்த்தி விசும்பைப் பார்த்தேன். தீம்பிழம்பாய் தகித்த அஸ்தமன சூரியனை வெறித்தேன். காற்றில் மிதந்து, நில்லாமல் நீந்தி அதனுள் என்னை புகுத்திக்கொண்டு எரிந்து பொசுங்கிவிட வேண்டும் என்று தோன்றியது. நான் அமர்ந்திருந்த உச்சிக்கிளை மேல் வந்தமர்ந்து என் உடல் உரசிய மற்றொரு ஜீவனைக் காண அப்போது அச்சமாக இருந்தது. அவனை உந்தி விலக்கினேன். செந்நிற விழிகளால் என்னை துழாவி நோக்கியவன் சட்டென எழுந்து காற்றில் மறைந்தான்.

தனிமையில் நெடுங்காலம் உழல உழல நிலத்தின் மீதான ஆத்திரம் பன்மடங்கு பெருகியது. என்னை இறைவனாய் போற்றுபவர்கள் நாளை நான் மண் தொட்ட கணமே என்னை அக்கக்காய் கிழித்துண்டு கூத்தாடக் காத்திருப்பவர்கள் என்று அஞ்ச அஞ்ச மூர்க்கம் கொண்டேன். மூர்க்கம் என்னை குருடாக்கியது. பகை வளர்த்தது. ஊர்வனவற்றின் மருவடிவாய் காற்றில் தென்படும் சின்னசிறுசுகளை கோரமாய் கொன்றழித்தேன். அவை களைகள் என நியாயம் சொன்னேன்.

எதிர்பாரா தருணமொன்றில், எதிர்பாரா இணையன் ஒருவனால் கொத்துப்பட்டு சிறகிழந்து நிலம் நோக்கி சரிந்திறங்கியபோது நான் வான் நோக்கி இறைஞ்சுபவனாக மாறினேன். கால்கள் வேண்டும், கொழுத்த தசைப்பற்று மிகுந்த தூண்களைப்போன்ற கால்கள் வேண்டி கடவுளை வேண்டினேன். கடும் நிசப்தத்தைப் போர்த்திக்கொண்டு இருண்டு கிடந்த வான்பரப்பை நோக்கியபடி தரைதொட்டபோது அங்கே எனக்காக காத்து நின்றது ஒரு கரும்பூனை. என்னை நோக்கி நீண்டு வந்த அதன் நாக்கில் குருதிப் பசை. குரோதத்துடன் அது லேசாய் சீறியபோது அதன் தொண்டையில் இருந்து ஒரு ஆணின் விழியும், பெண்ணின் சுண்டுவிரலும் நழுவி விழுந்தது.

***

இரண்டு நாட்களாக நொடிநேரம் கூட விழிக்காமல் நித்திரையில் இருந்திருக்கிறேன் என்பதை நான் பின்னரே கேள்வியுற்றேன். ஆனால் அதை எண்ணி விந்தையுறாத அளவிற்கு என் சித்தத்தை ஒருவித நடுக்கம் ஆட்கொண்டிருந்தது. எனது இமைகள் அப்போதும் முழுதாய் திறந்துகொள்ள இயலாமல் தவித்தாலும் உள்ளமும் பிற புலன்களும் அதீதமான கூர்மையுடன் விளங்கின. அணுகி வரும் ஓசைகள், மணங்கள், உருவங்கள் அனைத்தும் என்னைத் தாக்கும் முனைப்பையே சாரமாய் பெற்றிருப்பதாக பட்டது. வெடுக்கென எழுந்துகொண்டு ஓடிவிடச் சொல்லும் ஏதோ ஒரு குரல் என்னுள் நிரந்தரமாய் இடம்பெற்றிருந்தது.

“சார்!”, “சார்!” என்கிற கூச்சல்கள் எங்கோ தொலைதூரத்தில், புலப்படா ஆழத்தில் ஒலிப்பதைப்போலவே இருந்தது. அடுத்த நொடி நான் படுத்திருந்த அறையினுள் பெரும் இடி ஒன்று விழுந்ததைப்போல் சத்தமெழ திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அப்படியே உருண்டு கட்டிலின் கீழ் விழுந்து, எழ முடியாமல் தவித்தேன். கைகளை மன்றாடும் பாணியில் கூப்பிக்கொண்டு, “வேண்டாம்! வேண்டாம்!” என பதறினேன்.

உடைபட்ட கதவுகளைத் திறந்துகொண்டு நுழைந்த பணியாளும் அவனது கூட்டாளியும் தத்தம் கைகளில் இருந்த ஆயுதங்களை ஓங்கியபடி என்னை நோக்கி பாய்ந்தனர்.

நான், “அம்மா!” என அலறியபடி முகத்தை மூடிக்கொண்டு தரையோடு தரையாய் சரிந்து விழுந்தேன்.

அறையினுள் ஏதேதோ ஓசைகள் கேட்கத் துவங்கின.

கையூன்றி எழுந்துகொண்டு நிமிர்ந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தக் கரும்பூனையை கொடூரமாக தாக்கிக்கொண்டிருந்தனர். பூனையின் தலை ஏற்கனவே பிளவுபட்டிருந்தது. ஆனால் கடும் வெறியில் இருந்த அவர்கள் இருவரும் அதனை அடித்துத் துவைத்து துகளாக்கிக் கொண்டிருந்தனர். பூனையின் பச்சை விழிகள் என் மீதே நிலைத்திருக்க விழுந்த வசமான அடியில் அதன் கால்களில் ஒன்று முறிந்து உடம்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

என் கால்களில் ஏதோ எரிச்சல் பரவுவதை நான் அப்போதே உணர்ந்தேன்.

பணியாள் தான் கொண்டுவந்திருந்த கோணிப்பையினுள் அந்த பூனையின் நசுங்கிப் போன உடலை அள்ளியெடுத்து புகுத்திக்கொண்டிருந்தான்.

நான் மெதுவாக எனது கால்கள் இரண்டையும் நீட்டிப் பார்த்தேன். ரோமங்கள் அற்ற எனது கால்கள் முழுக்க நகக்கீறல்கள் இருந்தன. இடக்கால் கட்டைவிரல் நுனியில் பற்தடம் பதிந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. அறை நெடுக நீரூற்றி, பினாயில் தெளித்து அவர்கள் இருவரும் துடைத்தெடுப்பது வரை சுவரோரம் சாய்ந்தபடி அமர்ந்து எனது கால்களையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

“சார்!” என்று அழைத்தபடி பணியாள் என்னை நெருங்கியபோது எனது இதயம் படபடவென அடித்துக்கொள்ள, கைவிரல்கள் ஒவ்வொன்றும் துடிதுடிக்கத் துவங்கின. தலை நிமிர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஐயத்துடன் நோக்கினேன். பிரச்சனை ஏதுமில்லை என்று சொல்லிக்கொண்டே ஆறுதலாக என் தோளைத் தொட வந்தவனிடம் இருந்து என்னைப் பதற்றத்துடன் விலக்கிக்கொண்டேன்.

அவன் என்னை வியப்புடன் நோக்கினான். பின்னர் எனக்கு வேறு அறை ஏற்பாடாகி இருப்பதைச் சொன்னான்.

நான் விடுதியை காலி செய்ய விரும்புவதாக அவன் முகத்தைப் பார்க்காமல் தெரிவித்ததும் சரியென்று தலையசைத்துவிட்டு எனது உடமைகளை எடுத்துவைக்க உதவினான்.

மெல்ல எழுந்துகொண்டு உடை மாற்றிக்கொண்டு குளியலறை விட்டு வெளியே வந்தபோது மீண்டும் என்னை, “சார்!” என அழைத்தான் அவன்.

தீயினால் தீண்டப்பட்டதைப்போல் துடித்து அவன் பக்கம் பார்த்தேன்.

“சார்! ஏன் இப்படி பயப்படறீங்க… ஒண்ணுமில்ல… எல்லாம் முடுஞ்சது… ஒரு பிரச்சனை இல்லை… அசந்து தூங்கிட்டிங்க… ஏதோ யோசனையில பதறி உள்ள வந்தா மெத்தை மேல ஏறி நின்னுட்டு உங்கள மோப்பம் புடிச்சுட்டு நிக்குது அது!” என்று அவன் சொன்னது எதுவும் என்னுள் நுழையவேயில்லை.

இருவரும் அறையை விட்டு வெளியேறினோம். நான் எடுத்துவைக்கும் அடிகளின் நீளம் வழக்கத்தைவிட மிகவும் குறுகியிருப்பதை அப்போதே கவனித்தேன். அது எனது நடைக்கு ஒருவித விரைவை அளித்தாலும் உள்ளத்தின் பரபரப்பை அதிகரிப்பதாக இருந்தது. விரல்களை தளரச்செய்து சாதாரணமாக கைவீசி நடக்கவும் கடினமாக இருந்தது. எத்தனை முயன்றபோதிலும் உடம்போடு இறுக்கமாக பிணைந்திருந்த கரங்கள் அசைய மறுத்தன. பலமாய் அவ்வப்போது வீசும் காற்று, தாழ்வாரத்தில் நடக்கும்போது காலடிச் சத்தம் உண்டாக்கிய எதிரொலிகள், கதவுகளின் கீச்சிடல், பாத்திரங்களின் ஓசை என அனைத்தும் என்னுள் நுண்ணிய திடுக்கிடல் ஒன்றை ஏற்படுத்தியவாறே இருந்தது.

என் பையை சுமந்தபடி என்னுடன் நடந்துவந்த பணியாள் என்னை அக்கறையுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தபடி வந்தான்.

வரவேற்பறையில் பணம் செலுத்தும் பொருட்டு நின்றுகொண்டிருந்தபோது காற்றில் ஆடிய திரைசீலை என் கை உரசியபோது, “அம்மா!” என்று முனங்கியபடி ஒருநொடி அதிர்ந்தேவிட்டேன்.

நான் அனுபவித்திருந்த அசௌகரியங்களுக்காக பொறுப்பேற்றுக்கொண்ட விடுதியின் உரிமையாளர் வாடகையில் கணிசமான விகிதத்தைக் கழித்துக்கொண்டார்.

பணம் செலுத்திவிட்டு பதிவேட்டில் கையெழுத்திடும் பொருட்டு பணியாள் என்னிடம் பேனாவை நீட்டியபோது பதறி விலகி மூச்சடைத்துப்போனது.

“சார்! என்ன ஆச்சு சார்?” என்று கேட்ட அவனது விழிகளில் இப்போது அச்சம் கவிந்திருந்தது.

நான் அவனிடம் இருந்து எனது பையை வாங்கிக்கொண்டு வேகவேகமாய் ஓடி தரைத்தளத்தில் பனிபோர்த்தி நின்றுகொண்டிருந்த எனது வண்டியினுள் ஏறிக்கொண்டேன்.

நான் அணிந்திருந்த முழுக்கைச்சட்டை, பக்கவாட்டு இருக்கையில் கிடந்த எனது தோள்பை, காட்டன் கால்சட்டை என அனைத்திலும் சின்ன சின்னதாய் கருப்பு மற்றும் சாம்பல் நிற ரோமங்கள் ஒட்டியிருந்தன.

வண்டியினுள் ஒரு ஓரமாய் வைத்திருந்த அழுக்குத்துணியினால் அவற்றை துடைத்தெடுக்க முற்பட்டேன். ஆனால் எவ்வளவு முனைந்தாலும் அவை என்னைவிட்டு முற்றாக நீங்கிவிட மறுப்பதைப்போல் இருந்தது.

ஆவேசத்துடன் பற்களைக் கடித்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினேன்.

இவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டால் போதும். எல்லாம் சரி ஆகிவிடும். இந்த ஊரின் எல்லையைக் கடந்துவிட்டால் மிகப்பெரிய விடுதலை எனக்காக காத்திருக்கிறது. இன்னும் ஓர் இரவு உறங்கி எழுந்துவிட்டால் அனைத்தும் கொடுங்கனவென கரைந்தழிந்திருக்கும் என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டபடி ஆளில்லாத அந்தச் சாலையினூடாக வாகனத்தை மெதுவாக செலுத்தினேன்.

திடீரென இரு சக்கர வாகனம் ஒன்று நாராசமாக ஹாரன் அடித்தபடி என்னை வேகமாய் கடந்துசெல்ல, உச்சக்கட்ட பதற்றத்தில் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு, எவரோ முகத்தில் அறைய வருவதைப்போல வலது கையினால் கன்னத்தை மறைத்துக் கொண்டேன்.

வாகனத்தின் இரைச்சல் ஓரளவிற்கு ஓய்ந்ததும் மெதுவாக திரும்பி எதிர்புறம் ஏறுமுகமாக விரிந்திருந்த சாலையை நோக்கினேன். முந்திச்சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறத்துச் செவ்வொளி தொலைவில், சற்று உயரத்தில், சிறுபுள்ளியாய் தெரிந்தது. உள்ளங்கை வியர்த்து வழுக்கிச் சரிய முழங்கையின் மென் ரோமங்கள் அனைத்தும் விறைத்து நிற்பதைக் கண்டு ஒருகணம் விம்மினேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.