நான் அரண்மனையின் பக்கவாட்டு வாசல் வழியாக நுழைந்து யானைக் கொட்டில் மண்டபத்தில் ஒரு ஓரமாக காரை நிறுத்தினேன். உயரமான கட்டிடம், பதினெட்டு யானைகளுக்காக சில நூற்றாண்டுகள் முன்பு கட்டப்பட்டது. நுட்பமான சுதை வேலைப்பாடுகளுடன் வளைவுகள், தோரண வாயில்கள் ஒரு காலத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்திருக்க வேண்டும், இப்போது மங்கலாக நிறமிழந்து, காரை உதிர்ந்து, அங்கங்கே மெல்லிய செங்கற்கள் தெரிந்தன. முன்பு நவராத்திரி சமயத்தில் மகாராஜா பதினெட்டு யானைகளுடன் கோலாகலமாக ராஜவீதிகளில் பவனி வருவாராம், இப்போது வாடகைக்கு ஒரு யானையை லாரியில் கொண்டு வந்து கோயிலிலிருந்து அரண்மனை வாயில் வரை சின்ன ஊர்வலம் நடக்கிறது. கொட்டிலின் பின்னால் பெரிய மைதானம். அதில் யானை போலோ விளையாடுவார்களாம். அது பெரிய மகாராஜாவுக்கு விருப்பமான விளையாட்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கொட்டிலில் இப்போது கார்கள். யானைகள் இல்லாமல் ஆன பிறகு மகாராஜா கார்கள் வாங்கினார். அவருடைய அறையிலிருந்து பார்த்தால் நேராக யானைக் கொட்டிலும் அதில் இருக்கும் கார்களும்தான் தெரியும். அவர் பெரிய ஜன்னல் அருகே அமர்ந்து அந்தக் காட்சியைப் புன்னகையுடன் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பார். ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் II, பெண்ட்லி மார்க் VI, மெர்சிடிஸ் பென்ஸ் 190 SL, ஆஸ்டின் 7 ஆர் எம் சலூன், மவுன்ட்பேட்டன் உபயோகித்த வெள்ளி நிற சன்பீம் டால்போட் என்பது போல சின்ன பெயர்ப் பலகையுடன் எட்டு வின்டேஜ் கார்களும் போர்ஷே, ஜாகுவார், பென்ஸ் என்று இப்போது தினமும் உபயோகப்படுத்தும் மூன்று கார்களும் இருக்கின்றன. அவற்றை பராமரிக்கவே ஒரு மானேஜரும் நான்கு ஆட்களும் இருக்கிறார்கள். அவ்வப்போது இந்த கார்களை பார்ப்பதற்காகவே சில பெரிய தலைகள், வெளிநாட்டிலிருந்தும் வருவார்கள். இது அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர் வசிக்கும் பகுதி, வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. கண்ணில் படாமல் ஒரு ஓரமாக நிறுத்தினாலும், என்னுடைய ஹுண்டய் மட்டும் சேராமல் நின்றது.
அரண்மனையின் பிரதான வாயிலில் எட்டு மணிக்கே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம், டிக்கெட் கௌன்டரில் வரிசை நீளமாக இருந்தது. நவரத்தின விலாசம் என்ற அரண்மனையின் தோரண வாயிலிலும் உப்பரிகைகளிலும் ஒரு காலத்தில் ரத்தினங்கள் பதித்து சூரிய ஒளியில் ஜ்வலிக்குமாம். இப்போது எதுவும் இல்லை, இங்கிருந்து எடுத்துப்போன உப்பரிகை ஒன்று லண்டன் ம்யூசியத்தில் பார்க்கலாம். இப்போது சற்றும் பொருத்தம் இல்லாத எல் இ டி விளக்குகள்தான்.
வாயில் அருகே போஸ்ட் கார்டு ஃபோட்டோ விற்பவர்கள், பலூன் , ஊதல், ஐஸ்க்ரீம், சிப்ஸ்,அமெரிக்கன் கார்ன், வண்ண கை விசிறி என்று பயணிகளிடம் வியாபாரத்துக்கு நிறைய பேர் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். சந்தன மரம் என்று சொல்லி விற்கப்பட்ட கைவினைப் பொருட்களை வாசனை பார்த்து வாங்கி ஏமாந்து கொண்டிருந்தார்கள். நிறைய அரை டிராயர், கருப்பு கண்ணாடி தொப்பியும் கையில் தண்ணீர் பாட்டிலுமாக வெளிநாட்டவரும், கூடவே நாடு ஏன் இப்படி இவ்வளவு மோசமாகி விட்டது எவ்வளவு குப்பை என்று திட்டிய என் ஆர் ஐ இந்தியர்களும் இருந்தார்கள்.
பளபளப்பான வெள்ளிப் பூண்கள் போட்ட பெரிய தேக்குக் கதவை சீருடையில் பணியாள் வந்து திறந்தான். நான் அரண்மனையின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தேன். ஜன்னல்களில் வெட்டிவேர் தட்டிகளுடன் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. கசியும் குறைந்த வெளிச்சத்துக்கு கண்கள் பழக சில வினாடிகள் ஆனது.
நான் ஆடிட்டர் மட்டும் இல்லை, ப்ரின்ஸ் எல்லா விவகாரங்களையும் என்னுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுப்பதில்லை. இன்னும் இரண்டு செக்ரடரிகள் உதவிக்கு. ரவியைக் கேட்காமல் எந்த வேலையும் நடக்காது என்று அரண்மனையில் பேச்சு. முதலில் பழைய ஆடிட்டர்தான் என்னை பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெரிய மகாராஜா செயலாக இருந்த காலத்தில் அரச குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுடைய வரிக் கணக்கு பார்த்துக் கொள்ளுவதில் ஆரம்பித்து மற்ற முதலீடுகளையும் கவனித்துக் கொள்ள சொன்னார்கள். இப்போது பெரிய மகாராஜா பெரும்பாலும் ஓய்வில் இருப்பார், அவ்வப்போது வந்து கார்களை பார்த்து தடவிக் கொடுப்பார், அரண்மனை வளாகத்துக்குள்ளேயே ஓட்டுவார். மற்றபடி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது ப்ரின்ஸ்தான். ஐம்பதுக்கு மேல் வயதாகி இருந்தாலும் அவர் இன்னும் இளவரசர்தான்.
அவர்கள் சுதந்திரத்துக்குப் பிறகு எல்லாம் அரசாங்கத்துக்குக் கொடுத்து விட்டார்கள். இருந்தாலும் இன்னும் அரண்மனையில் ஒரு பகுதியும், நகரத்தின் நடுவில் முன்னூறு ஏக்கர் நிலமும் சில தொழிற்சாலைகளும் ஏற்றுமதி முதலீடுகளும் சொகுசு கார்களுமாகச் சொத்துகள் இருக்கின்றன. யானைக் கொட்டிலும் நிலமும் கூட அரசாங்கத்துக்குப் போயிருக்க வேண்டும். மகாராஜா முப்பது வருடம் கோர்ட்டில் கேஸ் நடத்தி வெற்றி பெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நகரத்தில் திறப்பு விழாக்களும் கோயில் உற்சவங்களில் முதல் மரியாதையுமாக மகாராஜா, ப்ரின்ஸ் என்ற பட்டங்களுடன் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே ப்ரின்ஸுக்கு ஏதோ சரி இல்லை. இரவு தூங்காத மாதிரி கண்கள் சிவந்து சோர்வாக இருக்கிறார். அடிக்கடி பெரிய மகாராஜாவுடன் ஏதாவது வாக்குவாதம் ஆகிறது. அவர்கள் குடும்பமாக எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே காலை உணவு மட்டும்தான். நான், செக்ரடரிகள் அப்போது காபியும் கையில் குறிப்புப் புத்தகத்துமாக அமர்ந்து கொள்வோம். அன்றைய நிகழ்ச்சிகள், அடுத்த நாட்களுக்குத் திட்டங்கள், பெரிய மகாராஜாவுக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் எல்லாம் பற்றிப் பேசுவோம். பிறகு ப்ரின்ஸ் பகல் நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், நிறுவனங்களுக்கும் போக வேண்டி இருக்கும், ப்ரின்ஸின் மகன் ஊட்டியில் போர்டிங் பள்ளியில் படிக்கிறான், இளைய ராணியும் பல்வேறு க்ளப், சேவை நிறுவனங்கள் என்று வெளியில் சென்று விடுவார்.
இன்று காலை, உணவு மேசையில் இறுக்கமான மௌனம். ப்ரின்ஸ் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். இளைய மகாராணி அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். இன்றும் பெண்கள் மகாராஜா முன்னிலையில் சாதாரணமான குரலில் பேச மாட்டார்கள். பெரிய மகாராஜா அதை எதுவும் கவனிக்காமல் மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்து கொண்டு பெரிய குரலில் “குட்மார்னிங் ஆல்” என்று எல்லோரையும் புன்னகையுடன் பார்த்து விட்டு உணவு கொண்டு வரச் சைகை செய்தார். வெள்ளைச் சீருடையில் இரண்டு பணியாளர்கள் வெள்ளி தம்ளர்களில் பழ ரசம் ஊற்றி விட்டு, பெரிய வெள்ளி தட்டுகளில் பரிமாறினார்கள். முதலில் வந்தது குங்குமப்பூ போட்ட பாதாம் ஹல்வா போன்று இருந்தது. ப்ரின்ஸ் ஹல்வா வேண்டாம் என்று கையை மறித்தார்.
மகாராஜா நாடகீயமான குரலில் “இளவரசே, நாம் தினமும் ஒவ்வொரு வேளையும் இனிப்பு சாப்பிட வேண்டும். அது நம் கடமை” என்று சொல்லிச் சிரித்து விட்டு ப்ரின்ஸுக்குப் பரிமாறச் சொல்லிக் கை காட்டினார்.
ப்ரின்ஸ் “அப்பாஜி எனக்கு வேண்டாம், இப்படித் தினமும் சாப்பிட்டுதான் உடம்பு கெட்டுப் போய் விட்டது.” என்றார் கடுமையாக.
“ சீமந்து, தினமும் கூடவே எக்சர்சைஸ் செய்யணும், செஞ்சிட்டிருக்கியா?” பெரிய மகாராஜா மட்டும்தான் ஸ்ரீமந்த ராஜ ஸ்ரீ ப்ரதாபசிம்ஹ ரகுவீர நாயக் என்ற முழுப் பெயர் கொண்ட ப்ரின்சை அப்படி அழைப்பார்.
“ அப்பாஜி, காலையில் இந்தப் பேச்சு தேவையா ?”
அரச குடும்பத்தினர் தெலுங்கு, தமிழ், குஜராத்தி, ஹிந்தி என்று பல மொழிகளைக் கலந்து பேசிக்கொள்ளுவார்கள். அவர்கள் விஜய நகர ஆட்சிக்குப் பிறகு பிரிந்த நாயக்க மன்னர் பரம்பரை, நடுவே பெரிய மகாராணியின் அம்மா குஜராத் கத்தியவார் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர், ஆண் வாரிசு இல்லாமல் அவரது தங்கை மகன் அரசரானார், அவர் மும்பையில் வளர்ந்தவர், எல்லோருக்கும் இங்கே தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருப்பதால் நல்ல தமிழும் தேவைப்படும்போது வேலை ஆட்களை நன்றாகத் திட்டவும் வரும்.
“பெர்சனல் ட்ரெயினர் வருகிறான் அல்லவா ? “ என்று முதல் செக்ரடரியைப் பார்த்தார்.
அவன் “வருகிறான்.” என்று இழுத்தான். ட்ரெயினர் தினமும் வந்து அரண்மனை ஜிம்மில் எல்லா உபகரணங்களையும் எண்ணெய் போட்டு துடைத்து விட்டு, தானே உபயோகித்து விட்டு செல்கிறான். ப்ரின்ஸ் எதுவும் சொல்லவில்லை.
அடுத்ததாக இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் வந்தது. ப்ரின்ஸ் முகம் சுளித்தார். தலைமை சமையல்கார் குறிப்பு உணர்ந்து உள்ளே சென்றார். ப்ரின்சுக்குக் காரசாரமாக வேண்டும்.
ஒரு தட்டு நிறைய சூடாக ஆலு கச்சோரி வந்தது. ப்ரின்ஸ் அதை இடது கையால் எடுத்துக் கடித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
“ நல்ல ஆரோக்கியமான உணவு.“ என்ற மகாராஜா ஓசையுடன் தன்னுடைய வெள்ளி ஸ்பூனைத் தட்டில் வைத்தார்.
“ நானும் இனிமேல் உங்கள் பேரன் மாதிரி ப்ரோட்டீன் ஷேக் சாப்பிடுகிறேன்.” என்றார் ப்ரின்ஸ்.
ஒரு கணம் மவுனம் நிலவியது. இளைய மகாராணி மறுபடியும் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார்.
ப்ரின்ஸ் இரண்டு கச்சோரிகளை அவசரமாக்க கடித்து விழுங்கி, தண்ணீர் குடித்து விட்டு, வாயைத் துடைக்காமல் “ இன்றைக்கு என்ன நிகழ்ச்சிகள் ? “ என்றார்.
செக்ரடரி “ காலையில் மகாராஜா ஹை ஸ்கூலில் ஆண்டு விழா, இரண்டு மணி நேரம் இருக்க வேண்டும், ப்ரின்ஸ் ஒரு பத்து நிமிடம் பேச வேண்டும்.” என்றான்.
ப்ரின்ஸ் “ ஐயோ, அதற்குள் மறுபடியும் ஆண்டு விழாவா ? கூட்டம் கூட்டமாக வந்து பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி நாடகம் போட்டு உயிரை எடுப்பாங்களே! அந்த ப்ரின்சிபால் வேற வருடா வருடம் சொன்னதயே சொல்லி அறுப்பார். எனக்கு உடம்பு சரி இல்லை வர முடியாதுன்னு சொல்லிடலாமா ?”
அதற்குள் மகாராஜா “சீமந்து என்ன கேள்வி இது ? மாநிலத்திலேயே முதல் ஆங்கில பள்ளி, என் அப்பா ஆரம்பிச்சது, இன்னும் நம்ம பரம்பரைப் பெயரில நல்லா நடந்திட்டிருக்குது. எனக்கு முடிஞ்சா நானே வருவேன். “ என்றார்.
ப்ரின்ஸ் “ அடுத்தது” என்றார்.
செக்ரடரி “மத்திய எம் பி வந்திருக்கிறார். அவருடன் லஞ்சு மீட்டிங்.” என்று கட்சியின் பெயரையும் சொன்னார்.
மகாராஜா “ அவர் நமக்கு பாட்டி வழியில் தூரத்து உறவு, நம்மையும் கட்சியில் சேரச் சொல்லி பி எம் கேட்டு அனுப்பி இருப்பார், எல்லாம் சுமுகமாகக் கேட்டுக் கொள், இரண்டு வருஷத்தில் அடுத்த கவர்ன்மென்ட் யார் என்று தெரியாது, யோசிப்போம். “
“ அப்பாஜி, எனக்கு பாலிடிக்ஸில கொஞ்சம்கூட இன்ட்ரஸ்ட் இல்லை.”
“ சீமந்து உனக்குப் புரியறதில்லை, இன்னிக்கும் லட்சக்கணக்கான ஓட்டு நம்ம அரச குடும்பத்துக்காகவே விழும்.”
“அப்பாஜீ, எனக்கு அது தேவை இல்லை.”
“ எது தேவை இல்லை ?”
ப்ரின்ஸ் பதில் சொல்லாமல் என்னிடம் “ நாம் ராஜஸ்தானில் ஒரு சோலார் ஃபார்ம், டேடா சென்டர் ஆரம்பிக்க ப்ரபோசல் அனுப்பி இருந்தோமே, இன்னும் மத்திய மந்திரி ஒத்துக்கொள்ளவில்லை அல்லவா ? அதைப் பற்றி இவரிடம் கேட்கலாமா ? “ என்றார்.
“கேட்கலாம், நான் விசாரித்தவரை மத்திய அரசாங்கம் அவர்களுக்கு வேண்டிய தொழில் குழுமத்துக்கு கொடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். அவர்களுடன் பார்ட்னர்ஷிப் கேட்கலாம்.”
“ எனக்கு பார்ட்னர்ஷிப் எதுவும் வேண்டாம், நான் தனியாகச் செய்ய வேண்டும்.”
அதற்குள் மகாராஜா “ அது என்ன டேடா சென்டர் ? தெரியாத துறைகளில இறங்கக்கூடாது. மஹாராஷ்ராவில சர்க்கரை ஆலை ஒண்ணு நஷ்டத்துல ஓடிட்டிருக்குது, அதை வாங்கி நடத்தலாம். நம்ம வெங்கடராஜுவை அங்க அனுப்பினால் இரண்டு வருஷத்துல லாபமாக்கிடுவான்.”
அரச குடும்பத்துக்கு ஏற்கெனவே ஆந்திராவில் சர்க்கரை ஆலைகள் இருந்தன.
“அப்பாஜி, எனக்கு இந்தப் பழைய பிஸினஸ் எதுவும் வேண்டாம்.”
“ பழைய பிஸினஸா, அதில் எத்தனால் எடுத்துப் புதிய பிஸினஸ் செய்யாலாம்.” மகாராஜா வயதானாலும், செய்திகள் அரசாங்க பாலிசி எல்லாம் கவனித்து வருகிறார் என்று தோன்றியது.
ப்ரின்ஸ் காதில் விழாத மாதிரி கை கழுவ நீர் கேட்டுச் சைகை செய்தார்.
“சுத்தமாக ஒண்ணும் தெரியாத பிஸினஸுல நம்ம பரம்பரையாக சம்பாதிச்சதைப் போட முடியாது.” மகாராஜா கோபத்துடன் தொடர்ந்தார்.
ப்ரின்ஸ் திரும்பி தலைமை சமையல்காரரிடம் “ மகாராஜாவுக்கு பராட்டா கொண்டு வா, தாராளமாக நெய் போடு.” என்று கை காண்பித்தார்.
“ அடுத்தது என்ன ?”
செக்ரடரி “ மாலை நாலு மணிக்கு நேஷனல் ஜியாக்ரஃபி படப்பிடிப்புக்கு வருகிறார்கள். நம்முடைய வின்டேஜ் கார் எல்லாம் ஓட்டிக் காண்பிக்க வேண்டும்.” என்றான்.
“ மகாராஜாவே ஓட்டிக் காண்பிப்பார் என்று சொல்லி விடு.” செக்ரடரி மகாராஜாவைப் பார்த்தான்.
“அப்பாஜி, அதெல்லாம் உங்களுக்குதான் ஆசை, என்னை விட்டு விடுங்கள்.”
மகாராஜா உற்சாகமாக “ என்னுடைய ட்ரெஸ் எல்லாம் எடுத்துத் தயார் செய்யுங்க, நானே ஓட்டறேன். அந்த பெண்ட்லியில ஸ்டார்ட் செய்யும் போது சத்தம் வந்ததே , சரி செஞ்சுட்டாங்களா ?” என்றார்.
“ கேட்கிறேன் மகாராஜா” என்றான் இரண்டாவது செக்ரடரி. மகாராஜாவின் பாரம்பரிய ஆடைகள் எல்லாம் தயாராக இருக்கிறதா என்று பார்க்க அவன் உடனே ஓடினான்.
ப்ரின்ஸ் ஒரு பெருமூட்டு விட்டு, “ வேற என்ன இன்னிக்கு ?” என்றார்.
“ கார்கள் படப்பிடிப்பு ஆனபிறகு இரவில் அவர்கள் நம்முடைய அரண்மனைச் சமையல் பற்றி இன்னொரு டாகுமென்டரி எடுக்கிறார்கள் – மகாராஜாக்களின் விருந்து அப்படின்னு பெயர். அதற்கு மெனு இளைய ராணி ஏற்கெனவே கொடுத்து விட்டார்கள். நீங்களும் ஒரு முறை பார்க்கறீங்களா ?”
அதற்குள் ப்ரின்ஸ் எழுந்து விட்டார்.
மகாராஜா “ நான் பார்க்கிறேன்.” என்று வாங்கிப் பார்த்தார்.
“எல்லாம் சரி, நவரத்தின ஹாரம் எங்கே ?” என்று உரத்த குரலில் கேட்டார். இளைய ராணி ப்ரின்சைப் பார்த்தார்.
நவரத்தின ஹாரம் என்பது இந்த அரண்மனையின் பெயரில் சிறப்பு ஸ்வீட். பல தலைமுறைகளுக்கு முன், அரண்மனை சமையல்காரர் கண்டு பிடித்தது. முற்றிய சர்க்கரைப் பாகில் தங்கச் சங்கிலி மாதிரி செய்த கம்பிகள், அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கல்கண்டு, மாதுளை முத்து எல்லாம் வைத்து வண்ண ரத்தினங்கள் பதித்த மாலை மாதிரி இருக்கும். வேறு எங்கும் செய்யப் படுவதில்லை, செய்முறை கடினம், அதிக நேரம் ஆகும்.
“ நான் தான் வேண்டாம் என்று சொன்னேன்.” என்றார் ப்ரின்ஸ்.
மகாராஜா தலைமை சமையல்காரரை வரச் சொல்லி கட்டாயம் செய்யுமாறு உத்தரவு கொடுத்தார்.
ப்ரின்ஸ் கைகளைத் துடைத்துக் கொண்டு, “நாளை காலையில் என்ன ப்ரோக்ராம் ?” என்றார்.
செக்ரடரி “ நாளை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அல்லவா, அம்மன் கோயிலில் நம்முடைய மண்டகப்படி, காலை அபிஷேகத்துக்கு ஏழு மணிக்கே இருக்க வேண்டும்.”
ப்ரின்ஸ் இளைய மகாராணியிடம் “ நீ பார்த்துக் கொள்ளுகிறாயா ? எனக்கு அவ்வளவு சீக்கிரம் எழுந்து வர முடியாது.” என்றார்.
அதற்குள் மகாராஜா “ அதெப்படி நாம் போகாமல் இருக்க முடியும் ? காலை அபிஷேகத்திலிருந்து உச்சிக்காலம் பூஜை ஆகி, தாத்தா செஞ்ச தங்க கவசம் சாத்தி தீபாராதனை வரை இருக்கணும். நமக்குதான் முதல் மரியாதை பிரசாதம்.” என்றார்.
ப்ரின்ஸ் எழுந்து என்னை உடன் வரச் சொல்லி உள்ளே தன்னுடைய அலுவலக அறைக்குச் சென்றார்.
“ ரவி, நாளைக்கு காலையில ஒரு வேலை இருக்கு” என்று ஆரம்பித்தார்.
“பிரின்ஸ், நாளைக்கு காலையில நான் வேற ஒரு இடத்துக்குப் போகணும், நீங்க அம்மன் கோயிலுக்குப் போயிடுவீங்கன்னு ப்ளான் செஞ்சிருந்தேன்.”
“ ரவி, என்னை ப்ரின்ஸ்ன்னு கூப்பிட வேண்டாம், இனிமேல ரகுவீர்ன்னு கூப்பிடு.”
“ சரி ப்ரின்ஸ்”
ப்ரின்ஸ் முறைத்துப் பார்த்து, உட்காரச் சொன்னார்..
“அப்படி என்ன வேலை, இன்னொரு நாள் செய்ய முடியாதா ?”
“ இல்லை ப்ரின்ஸ், எனக்கு பாங்க் போய் மானேஜரை பார்க்க வேண்டும். அர்ஜன்ட் வேலை”
மேலே சொல்லு என்பது போல ப்ரின்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ என் மகளுக்கு யு எஸ் ல காலேஜ் அட்மிஷன் கெடச்சிருக்கு, அதுக்கு எஜுகேஷன் லோன் வாங்கப் போறேன்.”
“ என்ன ரவி, எதுக்கு லோன் எல்லாம் ? நம்ம கிட்ட கேட்டிருக்க வேண்டியதுதானே, ட்ரஸ்டிலிருந்து ஸ்பான்சர் செய்யலாமே, உனக்குத் தெரியாதா ?”
அரச குடும்பம் ட்ரஸ்ட் மூலம் நிறைய பல மாணவர்களுக்குப் படிப்பு உதவி செய்து வருகிறார்கள்.
“இல்லை ப்ரின்ஸ், அதெல்லாம் வசதி இல்லாதவர்களுக்கு, தவிர லோன் கூட என் மகள் பேரில எடுக்கிறோம், அவள் படித்து முடித்து தானே கட்டி முடிக்கறதா சொல்லி இருக்கிறாள்.”
“நீயும் சரின்னு சொல்லிட்டயா ?”
“ஆமாம், அவளுக்கும் பொறுப்பா தானே செஞ்ச நிறைவு இருக்குமே.” ப்ரின்ஸ் மவுனமாக இருந்தார்.
“எந்த பேங்க் ?”
நான் சொன்னேன். அது ஒரு கோஆபரேடிவ் பேங்க்.
“ நம்ம பேங்க்லயே வாங்கி இருக்கலாமே ?”
“ வேண்டாம் ப்ரின்ஸ், அரச குடும்பத்துப் பேரைச் சொல்லி எதுவும் வேண்டாம்னுட்டு இந்த பேங்க் போறோம், இது சின்ன பேங்க், இன்டரஸ்ட் ரேட்டும் ஒரு கால் பர்சன்ட் கம்மி. என்னுடைய வீடுதான் கொலேட்டரல்.”
இந்தப் பேச்சு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
“ நல்ல ஐடியா” என்றார் ப்ரின்ஸ் ,“ நானும் நாளைக்கு உன்னுடன் வரட்டுமா ?”
“ எதுக்கு ?”
“ எனக்கும் லோன் வேணும்.”
எனக்கு இன்னும் குழப்பமாக இருந்தது.
“ ஒரு புது பிஸினஸ் ஐடியா வெச்சிருக்கேன். நம்ம பேங்க் வேண்டாம். நான் யாருன்னு அவங்களுக்குச் சொல்ல வேண்டாம்.”
“ எது டேடா சென்டரா ?”
“ அதுதான் ப்ரபோசல் அனுப்பிச்சுட்டோமே, இது வேற. ஒரு ஹெரிடெஜ் ரிசார்ட் மாதிரி ஆரம்பிக்கலாம் அப்படின்னு.”
“ அதுக்கு நமக்கு அனுபவமே இல்லையே, அதுக்கு நிறைய இன்வெஸ்ட்மென்ட் வேணும்.”
“ ஆரம்பிச்சு நடத்தினா அனுபவம் கிடைக்கும். இன்டஸ்ட்ரியிலிருந்து நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறவங்களை ரெக்ரூட் செய்யலாம்.”
” அதுக்கு நல்ல இடம் வேணுமே “ எனக்கு ஆர்வம் பற்றிக் கொண்டது. திரும்ப திரும்ப அரண்மனைச் செலவுகளையும், சர்க்கரைஆலைக் கணக்கும் பார்த்து எனக்கும் சலிப்பு.
“ இங்க அரண்மனை போலோ க்ரவுண்ட் இருக்குதே, அதுலயே ரிஸார்ட் கட்டலாம். ” என்றார் ப்ரின்ஸ்.
நான் உற்சாகமாக “ நல்ல ஐடியா, நம்ம யானைக் கொட்டிலை அப்படியே ஒரு கஃபேயாக மாத்தலாம், கீழே வின்டேஜ் கார்கள், மேலே மாடிகளில் திறந்த பால்கனி மாதிரி அரண்மனையைப் பார்த்த கஃபே, நவரத்ன விலாஸ் எலிஃபன்ட் கஃபேன்னு பெயர் வெக்கலாம்.”
ப்ரின்ஸ் கண்களில் ஒளி தோன்றியது, கை விரல்களைச் சுடக்கு போட்டு “ வேண்டாம், யானைக் கொட்டிலை முழுசா இடிச்சுடலாம்.” என்றார்.
நான் உறைந்து போனேன்.
“ப்ரின்ஸ் எனக்குப் புரியலை, எதுக்கு இடிக்கணும், மகாராஜா ஒத்துக்குவாரா ?” என்றேன்.
“ நானும் ஏதாவது புதுசா, தானாகச் செய்யணும் இல்லையா ?”
நான் “ஆமாம் ரகுவீர்.” என்றேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.

Seemingly day to day chatter among the different Characters in the palace is well brought out in easy style.