
ஹைக்கூ கவிதைகள் மற்றும் விளக்கங்கள்:
- “மழைக்கால இரவு
என் தங்கும் இடத்தின் நிலா
ஒரு தழும்பு போல் வழிந்தது”- விளக்கம்: இந்த கவிதை மழையால் நனைந்த இரவில், நிலவின் ஒளி தடைபடாதது போன்ற ஒரு அமைதியான அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது.
- “ஒரு தும்பி வந்து
என் காலில் அமர்ந்தது
ஒரு கோடை விருந்தினர்”- விளக்கம்: கோடையின் அழகையும், அதனுடன் இயற்கையின் ஒற்றுமையையும் எடுத்துக் கூறுகிறது இக்கவிதை.
- “வயல் பூக்கும்,
நிழல் வாடும்
சிறுகோபுரம் உள்ளே”- விளக்கம்: இங்கே, காலத்தின் கடத்தலையும், அதன் நடையையும் கவிதை பிரதிபலிக்கிறது.
- “கல்லின் மேல்,
குளிர்கால மழையின் சத்தம்
புல்லின் நுண்ணீர்மம்”- விளக்கம்: எளிதில் மாறாத கல்லும், எளிதில் மாறும் நீர்மமும் இணைந்திருக்கின்றன இக்கவிதையில்.
- “வெண்மையான காற்று,
வெண்மையான புல்லினுள்
முகத்துக்கு மேல்”- விளக்கம்: இயற்கையின் தூய்மையும் எளிமையும் இக்கவிதையில் பிரதிபலிக்கப்படுகிறது.
- “நீரின் ஒலி
சிறிய வாய்க்காலில் விழுகிறது,
செர்ரி மலர்கள்”- விளக்கம்: நேரம் செல்கிறது, அழகும், தனிமையும் இழைகின்றன.
- “ஒரு பனிமய இரவு
நதியின் ஒலி,
நீரில் ஒரு சுவடும் இல்லை”- விளக்கம்: இக்கவிதையில் இயற்கையின் மூச்சின் தாங்கும் நிலையும், அதன் மாறுபட்ட மெய்யலையும் வெளிப்படுகிறது.
- “வசந்த காலப் பனி
பனி உருகும் போது,
ஒரு மறைந்த மீன் குளம்”- விளக்கம்: மறைந்துள்ள வாய்ப்புகளையும், வாழ்க்கையின் புதுமையையும் குறிக்கிறது இது.
- “கோடை நிலா
மூடுபனி சிதறியது,
பாறைகள் மீது”- விளக்கம்: இயற்கையின் மாறுபாடுகளையும், அதன் அமைதியான முறையையும் பிரதிபலிக்கிறது இது.
- “வசந்த மாலை
சூரியன் ஏரிக்குள் மூழ்குகிறது,
மரத்துக்கு உள்ளே”- விளக்கம்: இயற்கையின் அமைதியான ஒற்றுமையையும், அதன் பரிமாணங்களையும் காட்டுகிறது இது.
- “யாரும் அறியாமல்
என் கிமொனோ சட்டைக் கையினுள் ஊர்ந்து வருகிறது
ஒரு மின்மினிப் பூச்சி”- விளக்கம்: மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான நுண்மையான, இரகசியமான தருணத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. மேலும் இது மறைக்கபடும் உணர்வுகளையும் கணநேர அழகையும் குறிக்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
—————————————————————————————————————————————————–
சம்பூ (Sampū) (1647–1732) – இயற்பெயர் சுகியாமா சம்பூ (Sugiyama Sampū)
எடோ காலகட்டத்தின் (Edo period) முக்கிய ஹைக்கூ கவிஞராக அறியப்பட்டவர். 17ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ ஆசான் மட்சுவோ பாஷோ அவர்களின் அர்ப்பணிப்பான சீடர் இவர். மேலும் இவர் பாஷோ அவர்களின் கவிஞர்கள் குழுவில் முக்கிய உறுப்பினராக விளங்கினார். இவர் செல்வந்தரான ஒரு வணிகர் என்பதால், கவிஞர்களுக்கு நிதியுதவி செய்து அவர்களைப் பாதுகாத்தார். பாஷோவின் வழிகாட்டுதலின் படி, சம்பூ இயற்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கவிஞர் என வளர்ந்தார். இவரின் கவிதைகள், எதார்த்தமான மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. இவர் பிறவியிலேயே செவிடராகவும் பலவீனமாகவும் இருந்தார் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது – அது வரலாற்று ரீதியாகச் சரி பார்க்க முடியாமல் இருக்கிறது எனினும்.
—————————————————————————————————————————————————–
அடிக்குறிப்பு 1:
மார்ச் 27, 1689 அன்று “ஒகு நோ ஹொசொமிச்சி” (Oku No Hosomichi – The Narrow Road to the deep North) என்ற நீண்டதும் அபாயகரமானதுமான வடக்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும் முன், பாஷோ தனது நண்பர் சம்பூவை நினைவுகூர்ந்து இந்த புகழ்பெற்ற ஹைக்கூவை எழுதியார்:
வசந்தம் விலகிச் செல்கிறது
பறவைகள் பாடுகின்றன
ஒரு மீனின் கண்களில் நீர் நிரம்பியுள்ளது
இங்கே “மீன்” என்பது நேரடியாக ஒரு மீனை மட்டும் குறிக்கவில்லை. அது அவரது நண்பரான மீன் வியாபாரியின் மகனான சம்பூவைக் குறிக்கிறது.
பறவையின் குரல் என்பது இயல்பாகப் பறவைகள் பாடுவதைச் சொல்கிறது. வசந்த காலப் பறவை மென்மையாக இசைப்பது போல அந்த ஒலி வருகிறது. அதுவே கவிதைக்கு அமைதியான ஒரு நெகிழ்வை தருகிறது.
அந்த “மீன்” எந்த வகை மீன்? ஒருவேளை அதன் பெயரில் “வசந்தம்” என்ற எழுத்து இடம்பெறும் ‘ஸ்பானிஷ் மேக்கரல்’ (Spanish Mackerel) ஆக இருக்கலாம். அல்லது அந்தப் பகுதியின் பிரசித்தி பெற்ற வெள்ளை மீனாகவும் இருக்கலாம்; அது பாஷோவுக்கு மிகவும் பிடித்த உணவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும், “மீனின் கண்” என்பது ஜப்பானியத்தில் பாதத்தின் அடிப்பகுதியில் உருவாகும் கால் ஆணியையும் குறிக்கும் ஒரு உவமை. நீண்ட பயணத்தில் நடந்து செல்ல வேண்டிய தூரத்தையும், அந்த வழியில் தாங்க வேண்டிய உடல் வலிகளையும் நினைத்து பாஷோ இதை எழுதியிருக்கலாம்.
இளவேனிற்காலத்தின் தொடக்கக் காற்றில் நிலவும் குளிரைக் கண்டு அஞ்சி, பாஷோ வடக்கு நோக்கிப் பயணம் செய்வதை சம்பு தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஷோவிற்கும் சம்புவிற்கும் இடையிலான அந்த இணக்கமான உறவே, பாஷோ இந்தக் கவிதையை இயற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது, ஒருவேளை மீன்களைக் குறிப்பிடுவதன் மூலம், அவர் தனது இளமைக்காலத்திலிருந்து ஒரு தெளிவான முறிவை ஏற்படுத்த எண்ணியிருக்கலாம்.
—————————————————————————————————————————————————–
அடிக்குறிப்பு 2:
பாஷோவுக்கு, சம்பூ மீது இருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. காலத்தின் போக்குகளால் பாதிக்கப்படாத அவரது தெளிவான மற்றும் நிலைத்த கவிதை நயத்தையும், அவரது நற்பண்புகளையும் பாஷோ மிகுந்த மதிப்புடன் பார்த்தார்.
சம்பூவின் மேலும் சில ஹைக்கூ கவிதைகள்:
தொடர்ந்து நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன்
நிலாவை
ஆனாலும் அதன் குரல் எனக்குக் கேட்கவில்லை
பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு இரவுகள் இருக்கின்றன
இருந்தாலும் இந்த நிலா இவ்வளவு அழகாக உள்ளது
பார்த்துக் கொண்டே இருந்தாலும் அலுப்பே வரவில்லை
எதிர்பாராத வருத்தம்
முதன்முறையாக ஒரு பல் உதிர்ந்தது
இலையுதிர் காலக் காற்றில்
மேலுள்ள முதல் ஹைக்கூ காட்டுவது போல, சம்பூ கடுமையான கேள்வித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்ததைப் போலத் தெரிகிறது. அவரது செவித்திறன் குறைபாட்டைக் கேலி செய்து, “இவ்வுலகின் வேகத்தோடு நீ ஒருபோதும் சேர்ந்து செல்ல முடியாது” என்று ‘கிகாகு’ என்பவர் கூறியபோது, பாஷோ அதனால் மிகவும் வருந்தியதாகச் சொல்லப்படுகிறது.
சம்பூ, ஜப்பானிய ஓவியத்தையும் ‘கானோ’ பள்ளியில் கற்றார். அவரது ஓவியங்களில் யதார்த்தநயம் தெளிவாகப் பிரதிபலிக்கும். பாஷோவின் பல உருவப்படங்களில், சம்பூ வரைந்த ஓவியமே ஹைக்கூ ஆசானின் உண்மையான உருவத்தை மிக நெருக்கமாக பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.
மரணத்திற்கு முன் பாஷோ, சம்பூவுக்காக எழுதிய விடைபெறும் குறிப்பு, இருவருக்குமிருந்த அன்பும் நெருக்கமும் எவ்வளவு ஆழமானது என்பதை காட்டுகிறது:
“சம்பூ, நீ பல ஆண்டுகளாக எனக்கு அளித்த அன்பும் உதவியும், என் உடல் இனி இல்லாத பின்னரும் என் நினைவிலிருந்து மறையாது. என் வாழ்க்கை எதிர்பாராத இடத்தில் முடிவடைவதால், உன்னை நேரில் சந்தித்து விடைபெற முடியாதது நம்மிருவருக்கும் வருத்தம்தான். நீ தொடர்ந்து ஹைக்கூ எழுதிக்கொண்டே இரு; அது உன் முதிய வயதில் உனக்கு மகிழ்ச்சியையும் துணையையும் தரட்டும்.”
சம்பூவின் தந்தை மறைந்தபோது, பாஷோ எழுதிய ஹைக்கூ:
இதோ என் அஞ்சலி
சேனைக்கிழங்கு மலர்கள்
தாமரையைப் போன்றே தெரிகின்றன
அந்தக் காலத்தில் தாமரை மலர்கள் கிடைக்கும் பருவம் அல்லாததால், கல்லறைக்கு வழக்கமாக செலுத்தப்படும் தாமரை அஞ்சலிக்குப் பதிலாக அருகில் இருந்த மலர்களை பாஷோ சமர்ப்பித்தார். எப்போதும் மனம் இலகுவாக இருந்த சம்பூ, இந்த எளிய ஆனால் மனமார்ந்த அஞ்சலியை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையும் அதில் இருந்திருக்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
