1
வெயிலோ மழையோ
பனிக்காலமோ வசந்த காலமோ
ஏதோவொன்று கடவுளாயிருந்தால்
நல்லதாக இருந்திருக்கும்
மனிதன்
தன் நிழலை
கடவுளாக்கியிருப்பதால்
அவனே எல்லா இடங்களிலும் தென்படுகிறான்
அவன் சத்தங்களே ஆட்சி செய்கின்றன
அவன் விருப்பங்களே முன்னால் நிற்கின்றன
கருணையினால்
பொதுப் பார்வையினால்
பாரபட்சமற்ற பண்புகளால்
இயற்கையின் அருகில் கூட
அவனால் செல்ல முடிவதில்லை.
அவனுடைய நிழல்களால் வர முடிவதில்லை.
2

ஆசைகளை கொன்று விடாதே
அதை மெழுகுவர்த்தியாக
எரித்துக்கொண்டிரு
வெளிச்சத்திற்காக அல்ல
உன் இருட்டின் இருப்பிடம் அறிவதற்காக.
3
எனக்குள்
என்னைத் தேடிப் போன போது
அங்கே ஒரு
பூனையிருந்ததைக் கண்டுப் பிடித்தேன்
பூனை எப்படி வந்ததென்று தெரியாது
அதற்குள் அது ஓடிவிட்டது
மீண்டும் என்னைத் தேடி போன போது
அந்தப் பூனை
ஒரு எலியுடன் விளையாடிக் கொண்டிருந்தது
பூனை எலியை எப்படி
கண்டுபிடித்ததென்று தெரியாது
எலியை பின் தொடர்ந்து போனேன்
அங்கொரு வயல்வெளி இருந்தது
அந்த வயலில் ஒரு மரம் இருந்தது
அந்த மரத்தில்
ஒரு பறவையின் கூடு இருந்தது
பறவை எங்கே போயிற்று
மரம் சொன்னது
அது சுதந்திரத்தை கூட்டிக்கொண்டு
வானத்திற்கு போயிருக்கிறது
திரும்பி விட்டேன்
உடலுக்கு வெளியே
மீண்டும்
எனக்குள் பயணம் செய்த போது
அங்கொரு நீதி மன்றம் இருந்தது
பூனையும் எலியும்
வாதி பிரதி வாதிகளாக
விவாதித்துக்கொண்டிருந்தன
ஒரு மலைப்பாம்பு
நீதிபதி
என் கவலையெல்லாம்
நீதிபதியிடமிருந்து
பூனையின் எலியின் நீதியை
எப்படி காப்பாற்றுவது என்பதுதான்.
4
இரவு தூங்கும் போதெல்லாம்
உன்னை நினைத்துக் கொள்கிறேன்
உன்னை சந்திப்பதற்கு முன்
கனவில் வந்தவர்கள் யாரும்
இப்பொழுது வருவதில்லை
சந்தேகமாக இருக்கிறது
உன் நினைவு
என் கனவு பாதையை பூட்டி
சாவியை எடுத்துக்கொண்டு
போய் விட்டாதாவென்று
5
“உன் வீடு எங்கிருக்கிறது”
“உன் கண்களில்”
“எங்கே போய் விட்டு வருகிறாய்”
“உன் இதயத்திற்கு”
“உன் தேசம் எது”
“உன் தேகம்”
“உன் தேசத்தின்
சட்டப் புத்தகம் எது”
“காதல்”
“தண்டனைச் சட்டம் உள்ளதா”
“ஆமாம் அது உன் உதட்டின் அலமாரியில் இருக்கிறது”
“உன் தேசத்தின்
தேசியப்பறவை எது”
“உன் இமைகள்”
“தேசிய நதி எது”
“உன் மவுனம்”
“இராணுவப்படை எது”
“உன் கரங்கள்”
“செல்வக்களஞ்சியம் எங்கிருக்கிறது”
“அது ரகசியம் சொல்வதற்கில்லை
ஆனால் பாதுகாப்பாக இருக்கிறது”
“உன்னால் பறக்க முடியுமா”
“முடியும்”
“எது உன் சிறகுகள் “
“உன் நினைவுகள்”
“சொந்தமாக என்ன இருக்கிறது”
“என் கனவுகள்”
“உன்னை இயக்கும் ஆற்றலின் எரிபொருள் எது”
“ஆசைகள்”
“உன்னிடம் சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா”
“இருக்கிறது
அது உனக்கும் எனக்குமான இடைவெளியில் இருக்கிறது
நீ என்னருகில் வரும்.போது
அந்த இடைவெளி
சொர்க்கத்தின் கதவை திறக்கிறது
நீ என்னை விட்டு விலகும் போது
அது நரகத்தின் கதவை திறக்கிறது.”
என்னைக் காதலிக்கிறாயா”
“தெரியாது”
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
