ஹாலில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலை வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்தாள் முக்தா. நியூஜெர்சியின் பனிக்காற்று ஜன்னலில் மோதிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஃப்ரீசர் பெட்டியில் அப்பா தூங்கிக் கொண்டிருந்தார்.
கண்கள் துக்கம் கேட்க வந்த முகங்களில் அடையாளங்களைத் தேடின. எல்லா முகங்களும் ஒரே நேரத்தில் நெருக்கமானதாகவும் அன்னியமாகவும் இருந்தன. கண்ணாடியில் தன் முகமே சில சமயங்களில் தனக்கு அன்னியமாய்த் தோன்றுவது ஞாபகம் வந்தது முக்தாவிற்கு.
ஃபோனைப் பிடித்திருந்த பையனின் பெருவிரல் அடிக்கடி கேமரா லென்ஸின் ஓரத்தை மறைத்துக் காட்சிகளைக் கலைத்தது. அவளுக்குப் பரிச்சயமான ஹால்.. சிவப்புத் தரை. சட்டமிட்ட கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். வெவ்வேறு உயரங்களில் சுவரில் பொருத்தப்பட்ட, சிறகை விரித்துப் பறக்கும் மர அன்னங்கள். அப்பாவுடன் கண்காட்சிக்குப் போனபோது வாங்கியது.
வலப்புறம் திரும்பிய கேமாராவில் அக்கா தெரிந்தாள். சின்னச் சின்ன பூக்கள் சிதறிய அரை வெளுப்பு காட்டன் சேலையில் அன்னபூரணி இன்னும் கம்பீரமாகத் தெரிந்தாள். சலங்கை ஒலி ஜெயப்ரதா மாதிரி. அப்பாவுக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.
முக்தா எவ்வளவு படுத்தினாலும் சிரித்துக்கொண்டே அவளுக்கு எல்லாம் செய்வாள் அக்கா. அந்த வயதிலும் ஒரு பெரிய மனுஷி மாதிரி நடந்து கொள்வாள். குளிரில் சுகமாய் இருக்கும் மிதமான வெப்பம் மாதிரி இருக்கும் அவள் அருகாமை.
அன்னபூரணி நல்ல பெண். பெரியோர் சொல்பேச்சைக் கேட்பவள். அப்பா தேர்ந்தெடுத்த பையனைக் கைப்பிடித்தாள். அவளைப்போலவே சரியாக வளர்க்கப்பட்ட அவளின் குழந்தைகள் (பையன் எஞ்சினியர்/பெண் ஆடிட்டர்). முக்தா மாதிரி பிடாரி இல்லை.
சாஸ்திரிகள் பூரணியிடம் குனிந்து ஏதோ கேட்கிறார். அவள் சொன்னதை ஒரு சின்ன நோட்டில் எழுதிக் கொள்கிறார். சித்தப்பாவிடம் புது வேஷ்டி ஒன்றைத் தந்து கொண்டிருக்கும் போதே நீலச்சட்டை அணிந்த ஒருவருக்கு பையிலிருந்து பணம் தருகிறாள். அழுதபடி மெதுவாய் நடந்து வந்து, கையைப் பிடித்த அத்தையைக் கட்டிக் கொள்கிறாள். மொபைலில் யாரோ அழைக்க, பேசிக்கொண்டே விரலால் ஹாலின் ஓரத்தில் இருக்கும் பை ஒன்றைக் காண்பிக்கிறாள். யாரோ ஒருவர் அதை எடுத்துப் போகிறார். நீரின் சுழல் போல அவளைச்சுற்றித்தான் எல்லாம் நிகழ்கின்றன.
நேரம் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது அவளுக்கு. முக்தாவின் நாட்களோ மெதுவாய் நகரும் நீளமான நிமிடங்களைக் கொண்டவை. தனிமை தோய்ந்த கணங்கள்.
சிகரெட்டைப் பற்ற வைத்தாள். ஞாபகம் வந்தவளாய்த் தன் பக்கத்து விடியோவை அணைத்தாள். உள்ளிழுத்த புகை பதட்டத்தை சமனப்படுத்த முயற்சித்தது.
அந்தக் கல்லூரி முதல்வர் முக்தாவின் அப்ளிகேஷனை முகத்தில் எறிந்தாள். ‘ஸயின்ஸ் க்ரூப்… அதுவும் இவ்வளவு மார்க் வாங்கிட்டு எதுக்கு ஹிஸ்டரி.. விளையாடறீங்களா’
அப்பாதான் மன்றாடி சீட் வாங்கினார்.
தலைநகரம் போய் இன்னும் ஆழமாய் சரித்திரம் படித்தாள். தன்னைவிட பதினைந்து வயது அதிகமான, இலக்கின்றி அலையும் ராஜனைக் காதலித்தாள்.
அப்பா நல்லவர். முற்போக்கானவர்தான். ஆனால் அதற்கு ஓர் எல்லை இருந்தது. யார் அறிவுரையையும் கேட்காமல் அமெரிக்கா போனாள்.
கம்ப்யுட்டரும் மெடிஸினும் படித்தவர்களுக்கு சுலபத்தில் கிடைக்காத விசா ராஜனுக்கும் முக்தாவுக்கும் கிடைத்தது. சமூக அநீதியால் மரித்துப்போன பெண்கள், தெய்வங்கள், நடுகற்கள், கூட்டு மனசாட்சி, குற்ற உணர்வு என ஏதோ ஆராய்ச்சி செய்யப்போனார்கள்.
அன்னபூரணி திரையில் வந்தாள்.. “டிக்கெட் கிடைச்சுதா முக்தா?”
“இல்லை அப்பு.. ட்ரை பண்ணிண்டு இருக்கேன்..”
“ஓகே.. கிடைச்சதும் மெசேஜ் பண்ணு..”
பெட்டியின் மீதிருக்கும் கண்ணாடி மூடியை எடுத்தார்கள். அப்பாவை எடுத்துத் தரையில் கிடத்தினார்கள். சாஸ்திரிகளின் உதவியாளன் கால் கட்டைவிரல்களை இறுக்கிக் கட்டினான். வாயில் புகையிலையையோ எதையோ அதக்கிக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தொழிற்சாலையில் எந்திரத்தைக் கையாளும் மெக்கானிக் போல அப்பாவின் சடலத்தைக் கையாண்டான்.
முக்தா திரையிலிருந்து கவனத்தை அகற்றினாள். இன்னொரு சிகரெட் பற்ற வைத்தாள். அழ ஆரம்பித்தாள்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் லேசாகி அழுகை வந்தது.. அப்பாவின் கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
அம்மா போய் எவ்வளவு கவனமாய்ப் பார்த்துக் கொண்டார். அவருக்குச் சந்தோஷம் தரும் எதுவும் தான் ஏன் செய்ததில்லை? அன்று சுதந்திரமாய்த் தோன்றியவை இன்று சுயநலமாய் பாசாங்காய் நின்று ஏன் சிரிக்கிறது?
அலமாரியில் இருந்து விஸ்கியை க்ளாசில் ஊற்றினாள். தொண்டையில் இறங்கிய திரவம் இன்னும் துக்கத்தைக் கொடுத்தது..
திரையில் மெசேஜ் ஒளிர்ந்தது. டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் ஊர்ப்போய்ச்சேர இரண்டு நாள் ஆகும்.
கண்ணாடிச் சுவர்கள் வைத்த பெரிய அபார்ட்மென்ட். அந்த இருட்டிலும் தன் வீட்டின் அறைகள் முக்தாவிற்குத் துல்லியமாகத் தெரிந்தன. அது அவளின் இடம். அவளுக்கு மட்டுமேயான பிரதேசம். வெளியே விளக்குகள் மிளிரும் உயரமான கட்டிடங்கள். ராஜனின் சாயம் வெளுத்து அவனை உதிர்த்த பிறகு இங்கு இடம் மாறினாள். உயரமான அந்த இடத்தில் வாழ்வும் காற்றில் மிதந்தது.
இன்று காரணம் புரியாமல் அந்த இடமே மூச்சு முட்டியது.
மூங்கில், தென்னை ஓலை, பானை, பித்தளைச் சொம்பு, ஈர உடையுடன் இறுதிச்சடங்கு செய்ய இருக்கும் சித்தப்பா பையன்.. மாறும் காட்சிகளில் பாரம் கூடியது.. பார்க்கப் பிடிக்கவில்லை.. தொடர்பைத் துண்டித்தாள்.
விமானம் போய்க்கொண்டே இருந்தது. நீண்ட பயணம் மனதை மேலும் கனமாக்கியது.
முக்தா வீட்டிற்கு வரும் போது அப்பாவின் சாம்பல் கடலில் கரைந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. வீட்டில் பாயசத்துடன் சாப்பாடு முடிந்து, உறவுகள் கலைந்து போய் கூடம் காலியாயிருந்தது.
நுழைந்ததும் பூரணி கட்டிக்கொண்டாள். மறுபடி அழுதாள் முக்தா.
காஃபி போடப் போனாள் பூரணி.
முக்தா அப்பாவின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அது அதனதன் இடத்தில் – தாத்தாவின் உபதேசமென அப்பா பல முறை சொன்னது. அப்படியேதான் இருந்தது. இருட்டில் கூட வந்து எடுக்கலாம். டைரியின் நடுவே இருந்த ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்து முக்தா படிப்பதை பூரணி பார்த்துக் கொண்டிருந்த்தாள். ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான காகிதங்கள் அப்பாவின் கையெழுத்துடன்.
காஃபியுடன் வந்த பூரணியைக் குழப்பத்துடன் பார்த்தாள் முக்தா.
“அது அப்பாவோட முடிவு. என்னாலேயும் இங்கேயும் அங்கேயுமா அல்லாட முடியல. அங்க வரமாட்டேன்னு பிடிவாதம். வெப்காம், உதவிக்கு ஆட்கள் எதுவும் சரி வரல. அப்பாதான் அந்த ஹோமைப் பத்தி விசாரிச்சு முடிவு பண்ணார். “
“…”
“சேர்ரதுக்கு முன்னாடி ஒரு செக்கப். அதுலதான் இந்த முத்திப்போன கான்சர்னு ரிசல்ட் வந்துது..அவ்ளோதான் எல்லாமே மாறிப்போச்சு. அவங்க ஆறுமாசம்னு கெடு கொடுத்து யோசிக்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு..”
கேட்டுக்கொண்டே காஃபியுடன் கூடத்தில் உலவிக்கொண்டிருந்தாள் முக்தா.
கையில்லாத மேல்சட்டையும், ஜீன்ஸ் பேண்டும், உடற்பயிற்சி செய்த அவளது உடலுக்கு அத்தனை இயல்பாய்ப் பொருந்தியிருந்தன. காதிலோ, மூக்கிலோ எந்தவொரு நகையும் இல்லை. முகத்தில் ஒப்பனையோ, பாவனையோ இல்லை.

“பார்க்க ரொம்ப அழகா இருக்கே முக்தா…” அருகில் வந்து அவள் மேல்கையில் வாக்சினேஷன் தழும்புக்குப் பக்கத்தில் பூரணி முத்தமிட்டாள்.
“நீ மாத்தி சொல்ற. எல்லோரும் ஆம்பள மாதிரி இது என்ன கோலம்னு சொல்லுவாங்க.. சொல்லியிருக்காங்க.. எனக்கென்னவோ உன்னோட இந்த அழகான ஜெயப்ரதா ஸ்டைல்தான் பிடிச்சுருக்கு. எவ்வளவு பிசியா இருக்கே நீ? எல்லாத்தையும் தனியா சமாளிக்கற..”
“ஜெயப்ரதாவா? எனக்கு அது ஓரு யூனிஃபார்ம் மாதிரி இருக்கு. நாம இல்லேன்னா எதுவும் நடக்காதுங்கற எண்ணம் – அது தந்த சுகம் முதல்ல நல்லாத்தான் இருந்தது.. போகப்போக போரடிக்குது. எப்போதும் ஏதோ ஒரு ஓட்டம். வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் இல்லாத மாதிரி.. ஒருத்தர் மாத்தி ஒருத்தர்.. அவங்களுக்கு தேவையனத செஞ்சு அவங்க சாதனையில் சந்தோஷத்தில் தன் பங்கு இவ்ளோன்னு நினைச்சு மயங்கி..இதுதான் நம்ம வேலையான்னு நினைக்கும் போது சட்டுனு ஒரு விரக்தி.. நிறைய இழந்துட்டா மாதிரி..”
“தெரியல அப்பு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கேட்டிருந்தா வேற பதில் சொல்லியிருப்பேன். இப்போ குழப்பமா இருக்கு.. உடம்புலேர்ந்து கையையோ காலையோ வெட்டி எடுத்துட்டா கூட .. சிலருக்கு அந்தக் கையோ காலோ வலிக்கறா மாதிரி அரிக்கறா மாதிரி இருக்குமாம்.. ஒரு மாய வலி அது.. அதுக்கு மாத்திரை கூட சாப்பிடுவாங்க… .”
பூரணி எதுவும் சொல்லவில்லை. ஒரு ஃபைல் கொண்டு வந்தாள். வீட்டு பத்திரம், டெபாசிட், பாஸ் புக் வகையறாக்கள்.
முக்தா அதைப் பார்க்காமல் தள்ளி வைத்தாள்.
‘எனக்கு எதுவும் வேண்டாம். நீ ஏதாவது முடிவு செய்து கொள். தானமோ தர்மமோ..’
ஒரு மரப்பெட்டகத்தை அவள் முன் நகர்த்தினாள். பழைய மோஸ்தரில் அம்மாவின் ஆபரணங்கள். ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தாள் முக்தா..
அம்மாவின் தாலிச்சரடு. இரண்டு பக்கமும் பவழங்கள் கருகு மணிகள் பொட்டு கோர்த்த சரடு. பவழங்களும் மணிகளும் தேய்ந்து இன்னும் ஒளிர்ந்தன. கன்னத்தில் உரசிக் கொண்டாள். ஒரு ஜபமாலையைப் போல் உருட்டினாள். இரண்டு கைகளுக்குள்ளும் வைத்து மூடிக்கொண்டாள்.
‘இதை நான் வச்சுக்கட்டுமா? வேற ஒண்னும் வேணாம்..’ முக்தா தாலிச்சரடை கழுத்தில் மாட்டிக்கொண்டாள்..
நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பூரணி மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். அக்காவின் கை அவள் கன்னத்தை வருடியது. பான்டில் இருந்த சிகரெட் பாக்கெட் உறுத்தியது. வெளியே எடுத்துப் போட்டாள். லைட்டரும் விழுந்தது.
அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவினாள் அன்னபூரணி.
பற்ற வைத்துப் புகைக்க ஆரம்பித்தாள்.. இருமல் வந்தது.. நிறுத்தவில்லை. நிதானமாய் மறுபடி உள்ளே இழுத்து விட, புகை வீட்டின் மேற்கூரையை நோக்கி உயர்ந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
