பஞ்ச் லைன்

அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.

என்ன விசித்திரமான சொப்பணம்!

வாசலில் மணி அடிக்கும் சப்தம் கேட்டதும், அவள் எழுந்து போய் கதவைத் திறக்கிறாள். சூட்-கேஸ், பை சகிதமாக நின்று கொண்டிருந்த ஒருவன் உள்ளே நுழைகிறான். யார் இவன்?

அவன் நேராகச் சென்று, படுக்கை அறைக்குள் புகுந்து, சாமான்களை வைத்துவிட்டு திரும்புகிறான்.

ஹால் சோபாவில் உட்கார்ந்து, முகத்தைக் கைக் குட்டையால் துடைத்துக் கொள்கிறான். ஏதோ நினைவு வந்தவன் போல், எழுந்து மின் விசிறியைப் போடுகிறான்.

யார் இவன்?

அவள் சப்தம் போட நினைக்கிறாள் வார்த்தைகள் நெஞ்சுக்குள் ஒளிந்து கொள்கின்றன. மறுபடியும் முயற்சி செய்கிறாள். ஒலி எழும்ப வில்லை. அவள் ஊமையாகி விட்டாளா?

அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.

மைகாட்! அவன் அவளுடைய கணவன்.. -!

என்ன விசித்திரமான சொப்பணம்!

அவள் பக்கத்தில் பார்க்கிறாள். அவன் கணவன் முகத்தை எதிர் திசையில் திருப்பி வைத்துக் கொண்டு ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

அவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். அது அந்நியமாய்த் தெரிவது போல் பட்டதும், திடுக்கிட்டாள்.

கீழே குனிந்து மறுபடியும் பார்த்தாள்.

இந்த முகமா அவளுக்கு தினந்தோறும் தெரிகின்றது. மூக்கு இவ்வளது தடிமனா? மூக்குக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ரோமங்களை இவர் ஏன் வெட்டுவதில்லை? காதிலும் ரோமங்கள்!

விழித்துக் கொண்டிருக்கும் போது, அணியும் முகத்தை கழற்றி வைத்துவிட்டு, தூங்கும் போது, இன்னொரு முகத்தை மாட்டிக் கொள்கிறானா?

இரவு நேரங்களில் படுத்ததும், அவள் அவன் முகத்தைப் பார்த்ததேயில்லை. விளக்கை அணைத்து விட்டுத்தான் அவன் படுக்க வருவான். அவன் அவளை நெருங்கும் நேரம் அநேகமாய், புலர்ந்தும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது கூட அவளுக்குத் புலராத விடியற்காலை தான். அவள் பாதித் தூக்கத்தில் இருப்பாள். தெரியாது. ஒரு மூட்டையாய் அவன் பக்கத்தில் மல்லாந்த பிறகுதான், என்ன நடந்தது என்பது அவளுக்குத் தெரியும். இந்த விஷயங்களில் அவளுடைய விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது.

சிரிப்பு வந்தது. இது காதல் கல்யாணம் என்று நினைக்கும் போது அவளுக்கு.

அந்த முதல் சந்திப்பு, அவள் மனக்கண்முன் வந்து நின்றது?

அவள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் சார்பில், சர்வே விஷயமாக அவன் வீட்டுக்குச் சென்று மணியை அடித்தாள்

அவன் திறந்தான்.

‘வீட்டிலே பெண்கள் யாருமில்லே என்ன விஷயம்…! என்றான் அவன்.

‘நான் சானிடரி டவல் விற்கவில்லே… ஒரு எகனிமிக் சர்வே உங்களுக்கு டயம் இருந்தா…”

“இல்ல… ‘தட் ஈஸ் தி பாய்ன்ட்… ஐஆம் வெரி ஸாரி!”

அவன் புன்னகை மிகவும் வசீகரமாய் இருந்தது.

“ஒரு அஞ்சு நிமிஷம்…”

“அஞ்சு நிமிஷத்திலே கேள்வி கேட்டுட்டு இந்த அடிப்படையிலே முடிவு செய்யறது, என்ன எகானமிக் சர்வே…”

“எஸ்…’ தட் ஈஸ்தி பாய்ண்ட’ இந்த வேலை எனக்கு வேணும். என்னை வேலைக்கு வச்சிண்டிருக்கிறவங்களுக்கும் நான் இன்னிக்கு இத்தனை பேரைப் பார்த்தேங்கற தகவல் மட்டும் போதும்…”

“நாம எல்லோருமே புள்ளி விவரங்கள், நமக்கு முகமோ ஒரு அடையாளமோ கிடையாது, அப்படித்தானே…?”

“அடையாளம் உண்டு., வர்க்க அடையாளம்..”

“அப்படின்னா”

“நடுத்தர வகுப்பு”

அவன் மறுபடியும் புன்னகை செய்தான். வசீகரமாய் இருந்தது.

இதுதான் அவர்களுடைய கல்யாணத்தில் போய் முடிந்தது…

அவன் அவளிடத்தில் எதைப் பார்த்துத் திருமணத்துக்கு உடனே

இசைந்தான்?

அவள் இதைப் பற்றி விவாதித்ததே கிடையாது.

நெருங்கிப் பார்க்கும்போது, அவன் முகம் அவளுக்கு அந்நியமாய் இருப்பது போலைத்தான், அவள் முகமும் அவனுக்கு இருக்க வேண்டும்.

அவள் கட்டிலிலிருந்து இறங்கி, ‘ட்ரெஸ்சிங் டேபிள்’ அருகே சென்று தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.

உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுக்குள்ளிருந்து வேறு யாரோ எட்டிப்பார்ப்பது போலிருந்தது.

‘இதுவா என் முகம்? என்முகம் அவனுக்குத் தெரிவது போல், என் முகத்தை என்னால் பார்க்க தெரியுமா? அவன் முகம் அவனுக்குத் தெரிவது போல் என்னால் அவன் முகத்தைப் பார்க்க முடியுமா? என் முகத்துக்கு அடையாளம், அவன் தருவது அவன் முகத்துக்கு அடையாளம் நான் தருவது… ஒவ்வொரு முகமும் அவரவருக்கு அந்நியந்தான்..’

தர்க்கம், மூச்சுவிட முடியாமல் திணறுவது போல் அவளுக்குப் பட்டது. இந்நினைவு வந்ததும், அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“என்ன பாத்திண்டிருக்கே…?”

இக்குரல் கேட்டதும் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் கணவன் அவள் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டான். கண்களைப் பாதித் திறந்தவாறு, அசுவாரஸ்யமாக அவன் கேட்ட விதத்தில், அவளிடமிருந்து அவன் பதிலை எதிர்பார்க்க வில்லை என்று அவளுக்குத் தோன்றிற்று.

தன்கனவைப் பற்றி அவனிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். வேண்டாமென்று தோன்றிற்று.

“சரி… வா… வந்து படு” என்றான் அவன். கண்களைத் திறக்காமலேயே. அவள் சுவரிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள் புலர்ந்தும் புலராத விடியற்காலை!

அவள் படுக்கை அறையை விட்டு ‘வாசலில் போய் உட்கார்ந்தாள்.’

ஷோ கேஸில் அவர்களுடைய திருமணப் புகைப்படம் இருந்தது.

அவனுடைய அதே வசீகரப் புன்னகை… அவனுடைய அவளுக்குத் தோன்றிற்று. நிஜத்தைக் காட்டிலும் நிழல்தான் அவளுக்குச் சுகானுபவமாகப் பட்டது.

“என்ன, இங்கே வந்து உக்காந்திண்டிருக்கே?”

கண்களைக் கசக்கிக்கொண்டே அவள் கணவன் வந்து அவளருகில் உட்கார்ந்தான்.

“தூக்கம் வல்லே…”

“அப்படியா…?” அவன் புன்னகை செய்தான். அவளுக்கு அது வசீகரமாய் இல்லை.

“என்னோட முகத்தை நீங்க நன்னா பாத்திருக்கீங்களா?”

“நன்னா பாத்திருக்கேன். நன்னாத்தான் இருக்கு… இதென்ன அசட்டுக் கேள்வி”

”உத்துப் பாருங்க…”

“இதென்ன விளையாட்டு, பைத்தியக்காரத்தனமா இருக்கு…!”

‘”நீங்க வழக்கமா பாக்கிற முகமா இருக்கா, அந்நியமா தெரியறதா…?”

“அந்நியமாவா? வாட்டூ யூ மின்…?”

”நான் எனக்குத் தெரியற மாதிரி, நான் உங்களுக்கு தெரியறேனா, நீ ங்க உங்களுக்குத் தெரியற மாதிரி நீங்க எனக்குத் தெரியறீங்களா? நெருங்கி வந்தா, ஏன் எல்லாமே அந்நியமா போறது…? நிழல்தான் நிஜமா, இல்லாட்டா, நிஜந்தான் நிழலா?”

“ஏய்… உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுத்தா? ஆர் யு …?”

அவள் புன்னகை செய்தாள்.

”என்ன ஆச்சு உனக்கு…?”

”நான் உங்களைக் கல்யாணம் பண்ணிட்டத்துக்குக் காரணம், அப்ப உங்க முகத்தில் தெரிஞ்ச அந்தப் புன்னகை… அதோ… அந்த போட்டோலேருக்குப் பாருங்க, அதே புன்னகை…”

“இப்பொ இல்லியா அந்தப் புன்னகை…” 

“இருக்கலாம், ஆனா எனக்கு உங்க முகம், அடிக்கடி அடையாளம் மறந்து போறது. உங்களுக்கு அந்த மாதிரி என் முகம் அடையாளம் மறந்து போறதுண்டா…”

அவன் பேசாமலிருந்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள்: ”எப்படி மறந்து போகும்? நினைவு இருந்தாத்தானே மறந்து போறதுங்கிற பிரச்சனையே, வரும்! என் முகத்தைத்தான் நீங்க பாத்த தேயில்லையே! எந்தக் கணவனாவது மனைவியின் முகத்தை உத்துப் பாத்திருக்கானாங்கிறது ஒரு சுவாரஸ்யமான கேள்வி…”

“மனைவி பார்க்கிறாளா?”

“சில மனைவிகள் பாக்கிறாங்கறது தான் அவங்களோட ட்ராஜெடி

 “வொய் ட்ராஜெடி…”

“அதான் எனக்குப் புரியலே…”

“ஆமா இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சு…”

அவன் எழுந்து போய் டி. வி. மேலிருந்த சிகரெட் பாக்கெட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்..

“ப்ளீஸ்… நோ ஸ்மோகிங்…”

“….”

“நான் உங்க ‘ஹெல்த்’ ப்ராப்லம் எங்கிறத்துக்காகச் சொல்லலே. நீங்க இப்பொ சிகரெட் குடிச்சா, எனக்குப் பிடிக்காது…”

”உங்க ‘ஹெல்த் ப்ராப்ளம்’ மட்டும் இல்லேங்கிறியா அப்படித்தானே…”

“சிகரெட், பிடிக்கிறதும், பிடிக்காமயிருக்கிறதுமே, உங்க ஆப்ஷன்… இந்த இடத்தியே இப்பொ வேண்டாம்னே அவ்வளவுதான்”

“இது உன் ஆப்ஷன்’…”

சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்தவன், சிறிது நேரம் யோசித்துவிட்டு, அதே பாக்கெட்டுக்குள்ளேயே. திரும்பி வைத்து விட்டான்.

அப்பொழுது நிலவிய மௌனம் சற்று இறுக்கமாக இருந்தது.

சில விநாடிகள் கழித்து, அவன் ஜன்னலருகில் போய் நின்று கேட்டான் “என்னைக் கண்டா இப்பொ உனக்குப் பிடிக்காம போயிடுத்தா…”

அவள் திடீரென்று உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள். அவன் அவளைச் சடக்கென்று திரும்பிப் பார்த்தான்.

“எதுக்கு சிரிக்கிறே?”

“கடைசிலே எல்லாம் இங்கு வந்துதான் முடியறது….”

“எங்கே…”

“விருப்பு, வெறுப்பு…! இந்த ரெண்டுக்கும் நடுவிலே அகப்பட்டுண்டு என்னாலே மூச்சு விட முடியலே…”

“புரியலே…”

“விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் மறந்துட்டு, நாம் ரெண்டு பேரும், நீங்க உங்களை என் பார்வையிலும், நான் என்னை உங்க பார்வையிலும் பார்க்க ஏன் முயற்சி செய்யக் கூடாது ? இது ஒரு நல்ல விளையாட்டாகூட இருக்கலாம்…”

“வாட் ஈஸ்தி பாய்ன்ட்..”

“எல்லாத்துக்கும் ‘பாய்ன்ட்’ இருந்துதான் ஆகணுங்கிறது என்ன அவசியம்?”

”ஐ திங்க்..”

“சொல்லுங்க”

“உனக்கு ஏதோ இன்னிக்கு ஆயிடுத்து. நாளைக்கு ஒரு சைக்காடிரிஸ்ட்ட பார்த்தா நல்லதுன்னு தோன்றது”

“என்ன சொல்வீங்க?”

அவள் சோபாவிலிருந்து எழுந்து வந்து அவனருகே நின்று கொண்டு அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

அவன் சற்று பயப்படுவது போல் அவளுக்குப் பட்டது.

அவன் அவளிடமிருந்து சற்று விலகிப் போய் நின்று கொண்டான்.

“என்ன சொல்வீங்க…”

”நான் சொல்ல வேண்டாம், நீதான் சொல்லணும்”

“என் சொப்பணத்தைப் பத்தியுமா?”

”ஆமாம்”

அவள் மறுபடியும் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன சொப்பணம்”

”மணி அடிச்ச மாதிரி இருக்கு, வந்து திறக்கிறேன். ஒருத்தன் பெட்டி பையோட உள்ளே நுழையறான். நேரா பெட்ரூமுக்குள்ளே போயிட்டு, திரும்பி வந்து இங்கே சோபாவிலே உட்கார்றான்.”

“யார் அவன்”

“அவனுக்கு ஒரேயடியா வியர்த்துக் கொட்டறது… ஃபானைப் போடறான்”

“நீ என்ன பண்ணே…”

”எனக்குப் பேசவே முடியலே…”

“ஒரேயடியா பயந்துட்டியா?”

”மூஞ்சியை கர்ச்சீப்பாலே துடைச்சுக்கிறான்”

“யார் அவன்”

“நான் அவனைப் பாத்திண்டே நிக்கறேன்”

“யார் அவன்”

அவள் குரல் இப்பொழுது சற்று உரத்து ஒலித்தது.

“நீங்கதான் அவன்”

“யாரோ ஒருத்தன்னு சொன்னே…?”

“ஆமாம்”

“இப்பொ நீங்கதான் அவன்’ ங்கிறே,என்ன சொல்றே. ஒண்ணும் புரியலியே…”

“எனக்குந்தான்”

“நான் வீட்டுக்குள்ளே நுழையறப்போ, என் முகம் கூடவா உனக்கு அடையாளம் தெரியாம போயிடுத்து”

அவள் பேசாமலிருந்தாள். “அப்போதிலிருந்துதான் இந்தப் பைத்தியக்கார எண்ணங்களா?”

”பைத்தியக்கார எண்ணங்களா, இல்லாட்டா?”

“இல்லாட்டா…”

“இதுதான் நிஜமா…”

“நான் யாரோ அந்நியங்கிறதா?”

அவள் பேசாமலிருந்தாள். அவன் அவளருகே வந்து உட்கார்ந்தான்.

“உன்னை அப்பொ முதல் தடவை பார்க்கிறப்போ நீ ஒரு புத்திசாலிப் பெண் மாதிரிதான் எனக்குப்பட்டது… ரொம்ப வெளிப்படையாகவும், கூர்மையாகவும் இருந்தது உன் பேச்சு…” என்று அவன் சொல்ல ஆரம்பித்ததும், அவள் கைத்தட்டத் தொடங்கினாள்.

அவன் அவளை ஒன்றும் புரியாமல் உற்றுப் பார்த்தான்.

“குட்… இப்பொ என்னைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க, கோ அகெட்” என்று உரக்கச் சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள்.

அவள் சிரிப்பு அவனையும் தொற்று நோய் போல் பற்றிக் கொண்டது.

அவனும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினான்.

“அப்புறம் சொல்லுங்க…”

“என்ன சொல்லறது?”

“இப்பொ…?”

“கல்யாணம் ஆனப்புறம் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் எதுக்காக யோஜிக்கணும்?”

“அப்படின்னா?”

‘பழகிப்போன சாமான்களைப் பத்தி யோசிக்க வேண்டிய அவசியம் என்ன? இதோ.. இந்த மூக்குக் கண்ணாடி வாங்கின போது, கண்ணாடி சரியா இருக்கா ஃப்ரேம் முகத்துக்குப் பொருத்தமா இருக்கா அப்படிங்கறதைப் பத்தியெல்லாம் யோசிச்சேன்…. இப்பொ? என்னிடமிருந்து பிரிச்சுப் பாக்க முடியாத அம்சம் அது… அதைப் பத்தி யோசிப்பானேன்?”

அவள் பேசாமல் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே யிருந்தாள்.

“என்ன பாக்கறே” என்றான் அவன்.

“பழகிப் போனதா நான் நினைச்சுக்கிறதுதான் திடீர்னு, எனக்கு அந்நியமா இருக்கிறமாதிரி இப்பொபடறது… காரணம் என்னன்னே எனக்குத் தெரியலே…”

“எதைப் பத்தியும் ரொம்ப சிந்திக்கக் கூடாது.. அது ஒரு வியாதி…”

“சிந்திக்கிறேன்… அதனால் இருக்கிறேன் அப்படின்னு ஒருத்தன் சொன்னானாம்”

“தப்பு, தப்பு இருக்கிறேன்… அதனால் சிந்திக்கிறேன். அப்படின்னுதான் சொல்லணும்… சரி.வா. படுக்கப் போகலாம்

“பஞ்ச் லைன்” என்றாள் அவள்.

இன்னும் விடியவில்லை.


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.