‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ – இந்திரா பார்த்தசாரதி

(இந்திரா பார்த்தசாரதியின்  ‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ நூலுக்கு சுஜாதா எழுதிய விமர்சனம்)

தமிழில் சிறுகதை நாவல்களைப் போல கட்டுரைக்கலை அந்த அளவுக்கு வளரவில்லை. வந்த கட்டுரைகள் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தையே சார்ந்ததாக இருந்திருக்கின்றன. ‘தொல்காப்பியத்தின் காலம்’, ‘புறநானூற்றில் வீரம்’ போன்ற இலக்கியத் திறனாய்வுகள்தான் அதிகம். விதிவிலக்காக அல்லயன்ஸ் வெளியிட்ட ‘கட்டுரைக் கனிகள்’ போன்ற புத்தகங்களில் பத்திரிகைகளின் ‘தொடரும்’ என்கிற வார்த்தை பற்றி, ஒரு பனைமட்டை கட்டுரையாளரிடம் செய்யும் புகார் பற்றியெல்லாம் சிறு சுவையான கட்டுரைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தேடிப் பிடித்தால் கிடைக்கின்றன. இவையன்றி ஹாஸ்யக் கட்டுரைகள் ‘எஸ்விவி’யின் ‘வாழ்க்கையோ வாழ்க்கை’, சாவியின் ‘காரக்டர்’, வ.ரா., தேவன் போன்றோரின் நடைச்சித்திரங்கள் கட்டுரை வடிவில் வந்திருக்கின்றன.

மற்றொரு கோடியில் அமைப்பியல்வாதம், மொழிதல் கோட்பாடு போன்ற தீவிரமான விஷயங்களைப் பற்றி அதிகம் பேருக்குப் புரியாத கட்டுரைகள். இதுதான் தமிழ் கட்டுரை இலக்கியத்தின் இதுநாள் சரித்திரம். இந்திரா பார்த்தசாரதியின் (இனி இபா) இந்தக் கட்டுரைத் தொகுதி மேற்சொன்ன எந்த பாகுபாட்டிலும் அடங்காத ஒரு தனிப்பட்ட தொகுப்பு. தமிழ் நாட்டின் இன்றைய சமூகநிலையின் அன்றாட விஷயங்களை ஒரு தேர்ந்த, படித்த அலசலுடன் எளிய நடையில் எழுதப்பட்ட இக் கட்டுரைகள் ‘தினமணி’யில் வெளியான போது பலபேருக்குப் புரிந்துபோய் கோபத்தையும் பாராட்டையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இபா நிறையப் படித்தவர். தமிழாசிரியராக இருந்தும் பண்டிதராகாமல் தப்பித்துப் படைப்பு இலக்கியம் படைக்கும் விதிவிலக்காக அவர்.

இபாவின் பரந்த நோக்கம் டில்லி, போலந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் தமிழ் கற்றுக் கொடுத்த அனுபவம், நவீன நாடகங்கள் எழுதி கற்பித்து மேடையேற்றிய அனுபவம், அகாதமிக்காரர்களுடன் பழகியது. அகாதமி பரிசு பெற்றது, வாழ்க்கையில் அவர் கண்ட விந்தையான சோகமான சம்பவங்கள், சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள் எல்லாம் சேர்ந்து இறுதியில் அவர் மனச்சுவட்டில் விட்டு வைத்திருக்கும் அடையாளங்கள் அவரை ஒரு ‘ஸினிக்’காக மாற்றியிருக்க வேண்டும். அப்படியின்றி (அவர் கட்டுரைகள் பல ‘ஸினிஸிச’த்துக்கு மிக அருகே இருந்தாலும்) அவருடைய கருத்துகளில் ஆதாரமாகத் தமிழனைப் பற்றியும், தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் ஒரு மனிதாபிமானம் சார்ந்த கவலைதான் பிரதானமாக இருக்கிறது.

இபாவின் கருத்துக்கள் இறுதியில் எளிமைப்படுத்தப்பட்டு சற்றே குறும்பு கலந்து வசீகரமாகத் தரப்பட்டிருந்தாலும், அவைகளின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த சிந்தனை பல பேருக்கு தர்மசங்கடமாக இருக்கும். உதாரணமாக அவருடைய கருத்துச் சீண்டல்களைப் பாருங்கள்:-

“தாய்நாடு, தாய்மொழி என்ற கருத்துக்கள் யாவும் மேல் நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியானவை, ஆங்கிலப் படிப்பு சரளமாக ஆங்கிலத்தில் பேச உதவுகிறதேயன்றி, சிந்தனை வளர்ச்சிக்கு உதவ வில்லை. பார்ப்பனர் என்பது ஒரு குறிப்பட்ட ஜாதியல்ல. தொழில்கள் பரம்பரை வழியாக வந்தன அல்ல. கிருஷ்ணாவதாரம் இருந்திராவிட்டால், இன்று பரத நாட்டியமே ஆட முடிந்திருக்காது.

விஷ்ணு, ஆரியக் கடவுளல்ல. ‘விண் ‘ என்கிற தமிழ் வேர்ச் சொல்லிருந்து வந்தவர்.

பெண்களின் கற்பு பாதுகாக்கப்படுவது தமிழ் நாட்டில் பேருந்துகளில் மட்டும்தான்.

அறிவு ஜீவிகளை உண்மையான சிந்தனையாளர்களிடமிருந்து. அவர்களே. வேறுபடுத்துவது சிரமமான காரியம். வள்ளுவர் கூறும் கயவர் அவர்களே.

தமிழர்களுக்கு எல்லாமே போர் வடிவம்தான் காதல் உட்பட! 

பாரதி, பாரதிதாசன் போன்றோரை ஜாதிக் கண்கொண்டு பார்த்துத்தான் நாம் குறுகிப் போயிருக்கிறோம்

சமஸ்கிருதம் அல்லாததெல்லாம் நாட்டார் கலையல்ல, உதாரணம் தெருக்கூத்து.

அரசியல் கட்சித் தலைவர்கள்தாம் இந் நாட்டு குறுநில மன்னர்கள்.”

எல்லாக் கருத்துக்களுக்கும் சற்றே திடுக்கிட வைக்கும் நோக்கம் இருந்தாலும், அவைகளை கோர்வையாக தர்க்கரீதியாக சொல்லும் முறையில் இபாவின் புலமையும், அறிவுத் தெளிவும் நடுநிலைமையுடன் இந்தக் கட்டுரைகளை படிப்பவர்களுக்குப் புலப்படும்.

குறிப்பாகத் தலைப்புக் கட்டுரையும், ‘விடுதலை, விடுதலை’ என்கிற கட்டுரையும் அண்மைக்கால கட்டுரை இலக்கியத்தில் மைல் கல்கள் என்று சொல்லலாம்.

‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் (குறிப்பாக அரசியல் காரணம்) சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமானவை என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்கிறார். ‘அவைகளை உலக இலக்கியமாகக் கொண்டு கிளாஸிக்கல் மொழியாக தமிழை அடையாளம் காட்டி லத்தீன் கிரேக்க இலக்கியங்கள் போல உலக பொதுச் சொத்தாக ஆக்குவதற்கு தற்காலத் தமிழையும் சங்ககாலத் தமிழையும் தனித் தனியாக பாகுபடுத்த வேண்டும்’ என்கிறார். மிகவும் சிந்திக்க வைக்கிறது இந்தக் கட்டுரை.

அதேபோல் ‘விடுதலை’ கட்டுரையில், நம் தமிழர்களின் சுவரொட்டிகளை மட்டும் பார்க்கும் ஒருவர் தமிழ்நாட்டில் கடுமையாக போர் நடந்து கொண்டிருப்பதாகத்தான் முடிவுக்கு வருவார் என்கிறார்.

மிகையே இல்லாத சங்ககால பண்பாட்டிலிருந்து இன்றைய உயர்வு நவிற்சி கலாச்சாரத்துக்கு எப்படிச் சீரழிந்திருக்கிறோம் என்று இபாவுடன் நாமும் வியக்க முடிகிறது.

இபாவிடம் ஒரு வேண்டுகோள். தமிழ்ச் சமுதாயத்தின் சீரழிவைப் பற்றி சொல்லி எல்லோரும் ஓரளவுக்கு அலுத்துப் போய் விட்டோம். என்னதான் ஆணியடித்தாற்போல் தர்க்க ரீதியாகச் சொன்னாலும் தாங்கள் இபா என்பதனால் உங்கள் கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும் என்பது இந்தச் சமுதாயத்தின் அங்க அடையாளங்களில் ஒன்று. தமிழ்நாட்டில் சில கருத்துக்களை எழுதலாம். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அனுமதிகளை மீறி நீங்கள் எழுதுவதற்கு மாறாக எத்தனையோ விஷயங்களைப் பற்றி புரியாமல் போட்டு குழப்படி பண்ணுகிறார்களே! ஸ்ட்ரக்ச்சுரலிஸம், நாடகங்களில் பாலியல் உணர்வுகள், சாம்ஸ்கி லிங்விஸ்டிக்ஸ் சோஷலிச யதார்த்தம்; எனப் பலபேர் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்களே! அவைகளையெல்லாம் பற்றி எளிதான உங்கள் குறும்பும் திறமையும் கலந்த நடையில் சில கட்டுரைகளை எழுதினால் இந்தக் காட்டில் கண்கட்டி விட்டாற்போல் திரியும் எங்கள் போன்ற பெரும்பான்மையவர்க்கு உபகாரமாக இருக்கும்.

‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ – இந்திரா பார்த்த சாரதி; தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி. கோயில் தெரு, சென்னை. விலை ரூ.25/-

நன்றி: சுபமங்களா இதழ் தொகுப்பு


Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.