கூழாங்கல்

ஒரு கேள்வியாய்ப் பறக்கிற ஒரு பறவை

இரு மரங்களிடையே-
இரு விடைகளுக்கிடையில் என்பது போல்-
ஒரு கேள்வியாய்ப் பறக்கிற
ஒரு பறவை
எந்த மரத்தில்-
எந்த விடை சரியென்று –
மாறி மாறி
அமர
பிறகு இரண்டுமே சரியல்ல என்று
வேறொரு மரத்தில்-
வேறொரு விடை சரி என்பது போல்-
அமர
பிறகு அதுவும் சரியா என்று
நிச்சயிக்க முடியாமல்
கடைசியில்
எது சரி என்பதை
வானத்தின் முடிவுக்கே
விட்டு விட்டு
பறப்பது போல்
பறந்தெங்கோ போகிறதே
விடை தெரியாக் கேள்வியாகவே.


காடு

முன்பு எப்போதோ
சென்று வந்த காட்டை
இப்போது நினைத்து
என் அறைக்குள்
கூட்டிக் கொண்டு வந்தேன் –
ஒரு விலங்காய்
அதற்குள் திரிய-
ஒரு பறவையாய்
அதற்குள் பறக்க-
ஓர் ஓடையாய்
அதற்குள் வழிந்தோட-
ஒரு கூழாங்கல்லாய்
அதற்குள் மூழ்கியிருக்க-
ஒரு நிசப்தமாய்
அதற்குள் நான் ஒடுங்குவதில்
என்னுள் நான்
ஒடுங்க.


Discover more from சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.