இழையும் இசை; இணையும் இயல்;கசியும் கண்கள்

‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்…’

இன்று காலை உறக்கத்தில் இருந்து எழும்போதே மனதிற்குள் இந்தப்பாடல் இசைக்கத் தொடங்கி விட்டது. நேற்று இரவு உறங்கச் செல்லும்முன் இதனைக் கேட்கவேண்டும் என்று மனதில் தோன்றியது. தேடிப்பிடித்து பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இருக்கும் உன்னதமான பதிவு ஒன்றினை யூட்யூபில் கேட்டேன்; கேட்க முயன்றேன். எப்பேர்ப்பட்ட பதிவு. இதயத்தையே உலுக்கும் இசை. ப்ரபஞ்சத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் தேவாம்ருதமான பதிவில் நமது ஈடிணையற்ற கவிஞர் பாரதியாரின் அதியற்புதமான கவிதை. இரவின் நிசப்தத்தில், எங்கோ கூவும் தனிமைக் குயிலின் குரலில், அது உள்ளத்தை, அதற்கு அப்பாலும் இருக்கும் சூட்சுமத்தை ஒரு உலுக்கு உலுக்கியதில் தொடர்ந்து கேட்கவே இயலாமல் பாடலை நிறுத்திவிட்டேன். கண்கள் பெருக, பார்த்தேயிராத, கதையில் மட்டுமே கேட்டிருக்கும் கற்பனைக் காட்சிகளைக் கண்முன் எடுத்து நிறுத்தி சிந்தனை வலம் வந்தது. 

“தங்கமே தங்கம்,” என்று தேனை வார்த்ததென உருகும், உருக்கி எடுக்கும் தெய்வீகக் குரல் பாடகியினுடையது. உலகில் நமது இருப்பையே கேள்விக்குள்ளாக்குவது அந்தக் குரலா, இசையா, கவிதை வரிகளா, எதனைப் போற்றுவது? எதனை விடுவது? தொடர்ந்து கேட்கத்தான் வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் ஆவல், விழைவு, ஆற்றாமை …… அந்தக் குரல் செய்யும் மாயத்தை…. ‘தங்கமே’ எனும் சொல்லில் ஆற்றாமை ஒழுகும் நெளிவை, பிருகாவைக் கேளாவிட்டால் எதையோ இழந்துவிட்டது போன்ற எண்ணம். கேட்டாலோ, அந்தக்குரலும் சொற்களும் செய்யும் மாயத்தில் பிரபஞ்சத்தின் அத்தனை துகள்களும் கரைந்து என்னுள் புகுந்து சங்கமிப்பது போலும் உணர்வு! 

இது சாமானியக் காதல் கவிதை / பாட்டல்ல. உலகையே உலுக்கி ஆட்டுவிக்கும் படைப்பின் ரகசியம்; அதன் வெளிப்பாடான தேடல், உரிமை, வேண்டுகோள், இன்னும் என்னென்னவோ!

இது தொடர்பாக முதலில் ருக்மிணியின் காதல் கதையைப் பார்ப்போம். அந்தப் பெண் கிருஷ்ணனிடம் காதல் வயப்பட்டு விட்டாள். அவன் புற அழகை மட்டும் கண்டல்ல; அவனை அவள் நேரில் பார்த்ததேயில்லை! அவனுடைய அற்புதமான குணங்களைப் பற்றிப் பலவிடங்களிலிருந்தும் கேள்விப்பட்டுத்தான்…. அவன் தன்னை நேசிக்கிறானா என்றுகூடப் பாவம், அவளுக்குத் தெரியவில்லை. இப்போது தந்தை அவளுடைய சகோதரன் ருக்மியின் (அவன் கிருஷ்ணனை வெறுப்பவன்; எதிரி) பரிந்துரைப்படி அவளுக்கு சுயம்வரம் நடத்தப் போகிறார். கிருஷ்ணனுக்கு அழைப்பு இல்லை! இதுவே அவளுக்கான கடைசி வாய்ப்பு – எவ்வாறாவது கிருஷ்ணனுக்குத் தன் மனநிலையைத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். 

அதையும் செய்தாயிற்று; நம்பகமான அந்தணர் மூலமாகக் கடிதம் அனுப்புகிறாள். மறுமொழிக்காகக் காத்திருக்கிறாள். நாட்கள் நகர்கின்றன. சுயம்வர தினம் நெருங்குகிறது. இப்போது தோழியிடம் புலம்புகிறாள்.

‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்…’

ஏன் அவன் விடை கூறாமல் நாட்களைக் கழிக்கிறான்? ‘வருகிறேன், வர இயலாது’ என்றோ, தனது எண்ணத்தைச் சொல்லிவிட்டால், பின் எனக்குத் தோன்றுவது என்னவோ அதைச் செய்து கொள்வேனே என எண்ணி அதனையும் தோழியிடம் கூறுகிறாள். ‘அவன் வராவிடில் யாருக்கும் சுயம்வர மாலையை அணிவிக்க மாட்டேன்; கன்னிகையாக இருந்தே காலத்தைக் கழித்து விடுவேன்’ என்று சூளுரைக்கிறாள்; இருப்பினும் அடிமனதில் பயம். மற்ற அரசர்கள், அவர்களுடைய இளவரசர்கள் பூமியில் உள்ளனர்; இவர்களில் எவரையாவது மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தப் படுவேனோ எனப் பரிதவிக்கிறாள் ருக்மிணி. என்ன அற்புதமான பொருத்தம் பாடல் வரிகளுக்கும் ருக்மிணியின் நிலைக்கும் …… பாடல் வரிகளைக் கேட்டால் ……… கண்கள் கசிகின்றன.

கன்னிகையாயிருந்து தங்கமே தங்கம் நாங்கள்
காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்

‘நீ என்னைவந்து அழைத்துக் கொள்ளாவிட்டால், என்னை நீ ஏற்றுக் கொள்ளாவிட்டால் எத்தனையோ வழிகள் உண்டு இவ்வுலகில்..’ என்று கதறும் வரிகளில் பொங்கிப் புனலெடுக்கும் ஆற்றாமை, இதயத்தை வலிக்கவல்லவா வைக்கிறது?

இது இப்படி இருக்க, அடுத்த சில வரிகளில் கன்னிமாடத்து சீதையை அல்லவா காண்கிறோம்? இராமன் வந்தான்; கண்டான்; சென்றான்; அவள் இப்போது தவிக்கிறாள். யார் என்று அறிந்தால் ஏதாவது செய்ய முடியும், யார் என்றே அறியாதபோது என்னதான் செய்ய முடியும்? கண்கள் மட்டுமே ஒன்றோடு ஒன்றினை நோக்கிப் பின் இதயங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன. அவன் யாரென்றே தெரியாமல் உள்ளத்தைப் பறிகொடுத்தவள் தவிக்கிறாள். எப்படி அறிந்து கொள்வது? யாரைக் கேட்பது? 

வானமும் நிலவும் பெருத்த துன்பத்தை விளைவிக்கின்றன. அவன் வடிவத்தை எண்ணி எண்ணி யாரோ அவன் என்று ஏங்குகிறாள் அவள். மேருமலையில் நாண் பூட்டியது போன்ற பெருத்ததொரு வில்லைக் கையில் பிடித்துக்கொண்டு, தூண்களை ஒத்த தோளுடன் அம்பறாத்தூணியுடனும் கீற்றுநிலாவைப் போன்றதொரு பூணூலையும் மார்பில் தரித்தபடி வந்த அவனை இன்னொருமுறை காண முடியுமா / எனது உயிர் திரும்ப வருமா?” எனப் பரிதவிக்கிறாள்.

நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
தூண் உலாவு தோளும் வாளியூடு உலாவு தூணியும்
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும்
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே கொலாம்.
(கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் – 13. கார்முகப் படலம்)

யாரென்று தெரியாததனால் அவளுடைய தவிப்பு கவிதையைப் படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது. இல்லையா?

“விண்ணில் உலவும் மேகம் ஒன்று மார்பில் மின்னல் ஒன்றினை முப்புரி நூலாக அணிந்துகொண்டு இந்த மண்ணின்மீது இறங்கியதுபோல என் முன்னால் அவர் வந்து சில நொடிகளில் உடனே சென்றும் விட்டார். ஆனால் எனது எண்ணத்தினுள்ளேயே இருக்கிறார்; யாரெனத் தெரியவில்லையே! மேலும் என் கண்களுக்கு உள்ளேயே இருக்கிறார்; ஆனால் அவரைக் காண இயலவில்லையே!”

விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னோடு இம்
மண்ணுளே இழிந்ததென்ன வந்துபோன மைந்தனார்
எண்ணுளே இருந்தபோதும் யாவரென்று தேர்கிலேன்
கண்ணுளே இருந்தபோதும் என்கொல் காண்கி லாதவே!
(கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் – 13. கார்முகப் படலம் )

இயலாமையினால் வருவது வெறுப்பும் சினமும்தானே! எண்ணுகிறாள் அவள்: ‘கொடிய காமன் பஞ்சினை அழிக்கும் தீயைப்போல கூர்மையான அம்புகளை என் உயிரைப் பறிப்பதுபோல என்மீது எய்கிறான். நான் என்ன பாடுபடுகிறேன்! ஆண்மை மிகுந்த ஒருவனுக்கு அழகு என்ன? வருத்தத்தில் உள்ள பெண்களின் வருத்தத்தை நீக்குவதே அல்லவோ? ஆனால் இவன் அவ்வாறு செய்ய முயலவில்லையே! என்ன ஆண்மகனோ இவன்!” என்று சலிப்புறுகிறாள் சீதை! கம்பன் வாக்கு. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்!

பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில்
வெஞ்ச ரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே.
(கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் – 13. கார்முகப் படலம்)

இந்த மனநிலையை பாரதியாரின் பாடலோடு பொருத்திப் பார்த்தால் இன்னொரு கருத்து உதிக்கிறது. “இவ்வாறெல்லாம் என்னைப் பரிதவிக்கவிட்டால், நீர் யாராக இருப்பினும் உமது இந்தச் செயலை நான் ஊர் முழுதும் சொல்லிப் பறை சாற்றுவேன்” என்று சீதை சொல்வதுபோல இருக்கிறது. எல்லையற்ற வருத்தத்தில் தோழியானவள் எங்கேபோய் யாரைத் தேடுவாள் என்பதும் மறந்துபோய் விட்டது போலும் அவளுக்கு!!

ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் என்னை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவே னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

பாடலைக் கேட்டால் சீதையின் தனிமையிலும் தாபத்திலும் உலகனைத்துமே கரைந்துவிடுவது போலும் உருக்கமும் குழைவும்! பாரதியின் இப்பாடலின் சொல்வீச்சு எல்லையற்றது! கல்லையும் கரைக்கும் சொற்கள்; சாதாரணச் சொற்கள்தாம், ஆனால் அவை சொல்லப்படும் விதமும் சொல்கின்ற பெண்மையின் மனத்துச் சினமும் அளவிட முடியாதன அல்லவா?

அன்பினால், தாபத்தில் துயருறும் பெண்களின் மனநிலை எவ்வாறெல்லாம் இருக்கும், என்னவெல்லாம் சிந்திக்கும் எனக் கூறமுடியாது. தமயந்தியே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தான் மனதைப் பறிகொடுத்தவன், சுயம்வர தினத்தின்முன்பு அவளிடம் வந்து, தேவர்களுள் ஒருவருக்கு நீ மாலையிட வேண்டும் என்கிறான். எப்படி இருக்கும் அவளுக்கு? 

அவள் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்ள நினைப்பது நளனுடன் தான். உள்ளத்தைப் பறிகொடுத்தது அவனிடம்தான். விதி தன்னை எங்கே செலுத்துகிறது, விடிந்தால் என்ன நடக்கப் போகிறது என்று புரியாத நிலையில் எண்ணாத எண்ணங்களை எண்ணித் துயரத்தின் எல்லையில் உழல்கிறாள்.

சொல்கிறார் புகழேந்திப் புலவர்.   ‘சிறிது மயக்கம் கொள்வாள்; பின் அதிலிருந்து தெளிவும் அடைவாள். மனம் நடுக்கம் கொள்வாள். வெம்மை கொண்டு வருந்துவாள். செய்வதறியாமல் உலாவிக் கொண்டிருப்பாள். விளங்குகின்ற அணிகள் கழன்று போகச் சோர்வடைவாள். துயில் நிரம்பிய நீண்ட கருங்கண்கள் துயில இயலாமையால் அவற்றில் கண்ணீர் நிரம்பிச் சோரும்படியாகத் துயில் கொள்ளாத நிலையிலும் நிற்பாள்.’

மயங்கும் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே உலாவும் – வயக்கிழைபோய்ச்
சோரும் துயிலும் துயிலாக் கருநெடுங்கண்
நீரும் கடைசோர நின்று. (நளவெண்பா)

விழுதாகப் படர்ந்து ஊன்றி நிலைபெற்று விடுவதுபோலச் செறிந்திருந்த இருளினிடத்தில் சிக்கியவளாக அகப்பட்டுக் கொண்டாள், தமயந்தி. பேயும் வழி காணாது தேடிக் கொண்டிருக்கும் அடர்ந்த இரவுப் பொழுதினிடையில், நீரினைச் சொரிகின்ற கண்களோடு நெஞ்சம் உருகி மயங்கிக் கிடப்பவர்களது அரிதான உயிருக்கும் ஒரு பாதுகாவல் தான் உலகில் ஏதேனுமுண்டோ?

விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடும் கங்குல் – பொழுதிடையே
நீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கும் உண்டோ அரண். (நளவெண்பா)

நளனையே நினைந்து நினைந்து உள்ளம் உருகுகிறாள்; நெஞ்சம் மறுகுகிறாள்; ‘அவன் சுயம்வரத்திற்கு வரப்போகிறானா இல்லையா என்று கடைசியாக ஒரு சொல் கேட்டுவிட்டு வா தோழி, பின்பு தெய்வம் இருக்கிறது, எனக்கு என்ன ஆகும் என்பதனை நிச்சயிப்பதற்கு…’ என்று தமயந்திக்காகவே இந்த வரிகளை பாரதியார் எழுதினாரோ? நளனை ஏன் ‘பாவி’ எனக் கூறுகிறாள்? சிறிதுகூடத் தயங்காமல், ‘என்னை மறந்துவிட்டு தேவர்களுள் ஒருவனுக்கு மாலையிடு,’ என்று சொன்னவனை வேறு என்னதான் சொல்லி அழைப்பதாம்? இவள் உள்ளம்தான் கொந்தளித்துப் போயிற்று. ஆகவே தான் ஆற்றாமை பொங்கி வழிகின்றது இவ்வரிகளில்.

நேர முழுவதிலுமப் பாவி தன்னையே நெஞ்சம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீரஒருசொல் இன்று கேட்டுவந்திட்டால் பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!

இந்தப் பாடலை இசைக்கவிட்டு அதன் பின்னணியில் இக்கதைகளை நினைவு கூர்ந்தால் பாரதியின் ஒப்பற்ற பொருள் செறிந்த கவிதையின் ஆழமும், பாடகியின் அற்புதமாக இழைகின்ற இசைக்குரலின் தாக்கமும், இலக்கியங்கள் காட்சிப்படுத்தும் பெண்களின் உள்ளங்களும் புரியும்; காதலின் வலிமையும், ஆழமும், அதனால் ஏற்படும் பல நிலைமைகளால் காதலர்களுக்கு உண்டாகும் எல்லையற்ற உள்ளச்சோர்வும் ஒருவாறு விளங்கும்.




Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.