கட்டில்- அலமாரி

1

பலபத்திராபுரம் சுப்பையா பிள்ளையை தெரியவேண்டும் என்றால் சக்கட்டி இசக்கியா பிள்ளையும் சேர்த்து தெரிந்திருக்க வேண்டும் . கருத்த சுப்பையா பிள்ளை பெரிய வயிற்றை சாய்த்து கொண்டு முன்னால் சென்றால் யானையின் வால் போல் மெலிந்த, வெளுத்த இசக்கியா பிள்ளையும் பின்னால் செல்வார். இவர்கள் இருவரையும் தனித்தனியே பார்ப்பது என்பது அரிதான ஒன்று. சுப்பையா பிள்ளையின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் தெரிந்த ஒரே நபர் அவர்தான் .

சுப்பையா பிள்ளையை கோவிந்தபேரி கல்யாணியா பிள்ளைக்கு தத்து கொடுக்கும் போது வயது எட்டு. அன்று முதல் இசக்கியா பிள்ளையும் கூடவே தான் இருக்கின்றார். காலம் ஓடிப்போய் நரை கூடி கிழப்பருவம் எய்த பின்னும், கோவிந்தப்பேரியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக  இருந்தால் கூட இன்றும் ஊர்க்காரர்களுக்கு அவர் பலபத்திராபுரம் சுப்பையா பிள்ளை தான்.

கோவிந்தபேரியில் உள்ள சிவன் கோவில் சீந்துவாரற்று கிடந்தது. நித்யசுந்தரன் உடனுறை மரகதாம்பிகை  தங்கள் பரிவாரங்களுடன் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருந்தனர். இவர்களின் போர்படை தளபதி , ஊரின் ஒற்றை பிராமணன், ஒண்டிக்கட்டை குப்பு அய்யர். புற்றில் வாழ் அரவுக்கு அஞ்சாதவர்கள் மட்டும் எப்பொழுதாவது நித்யசுந்தரனை காண வருவதுண்டு.

ஊரில் உள்ள தம்புரான் கோவில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமானது. மடத்திற்கு சொந்தமான கோயிலையும், சத்திரத்தையும் நிர்வகிப்பது பிள்ளை அவர்களின் தலையாய பொறுப்பு.

பிள்ளையன் கட்டளைக்குரிய 12 வேலி நிலம் சுப்பையா பிள்ளையின் அனுபவ பாத்யஸ்தையில் இருந்தது. அதற்காக அமாவாசை, பிரதோஷ நாட்களில் 12 பண்டாரங்களுக்கு அமுது படைக்க வேண்டும். ஊரில் பண்டாரங்களுக்கு குறைவில்லை என்றாலும் எந்த பண்டாரமும் செல்வதில்லை.

அம்பலவான தேசிகர் காலத்திலும் பின்னர் தற்போதைய ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர் வந்த பிறகும் ஆதீனத்தில் பிள்ளை அவர்களுக்கு செல்வாக்கு அதிகம். ஒரே மகள் மீனாட்சி , பெருநிலக்கிழார் மாறந்தை  கந்தையா பிள்ளை மகன் பழனியாபிள்ளையை திருமணம் முடித்த மறுவருடம் ஆச்சி நல்லம்மை கைலாசபதி அடைந்தாள் .  மீனாட்சி எப்பொழுதாவது வருவாள். அம்மை இல்லாத வீட்டில் இரண்டு நாட்கள் கூட சேர்ந்த மாதிரி இருந்ததில்லை. இருந்தாலும் பிள்ளையவர்களுடன் பேசுவது குறைவு.                                                                                                                                                                                  

இங்கு வரும் நாட்களிலும் அடுத்த வீட்டு  குழந்தைகளுடன்  விளையாடுவதை சுப்பையா பிள்ளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். மருமகன் வருவது அறவே நின்றுவிட்டது. பசுபதி பாசம் என எந்தப் பிரச்சனையாலும் ஆட்கொள்ளப்படாத பிள்ளை அவர்கள் ஒரு சிவஞான செல்வம். சிவபூஷணம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட சுப்பையா பிள்ளையையும் இசக்கிய பிள்ளையையும் ஊராரால் மதிக்கப்படுவது அல்லது மதிக்கப்படுவது போன்ற தோற்றப்பிழைக்கு காரணம், கோவிந்தபேரியில் ஆதிசைவ வேளாளர் சங்கத்தை தொடங்கியது தான் .

நகரத்து ஈஸ்வரம்பிள்ளையும் டபார் நடராஜப் பிள்ளையும் சேர்த்துக்கொண்டு சுதந்திரத்திற்கு முன்பே சைவ வேளாளர் சங்கம் கோவிந்த பேரியில் தொடங்கப்பட்டது. இந்த மாபெரும் சாதனைக்காக தூத்துக்குடியில் நடந்த சைவ வேளாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் சர் பிடி ராஜனிடம் வாங்கிய பதக்கமும் பாராட்டு பத்திரமும் வீட்டில் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது.

மாநாட்டில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு , மிகப் பெரிய பாராட்டுகளுடன் சிவனேறு என்ற பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் பலவற்றுடன் ஒத்துப்போவதில்லை. குறிப்பாக முதலாவது தீர்மானமான “சைவ உணவு உண்ணும் தொண்டை மண்டல முதலியார், கார்காத்தார், சைவ செட்டியார் , தேசிகர்,  ஓதுவார் , ஓமநல்லூர் , பட்டர்புரம் சீமைச்சம்பிரதி வேளாளர் , சோழபுரம் வேளாளர் என்பவர்கள் அனைவரும் இனி சைவ வேளாளர் என்று அழைக்கப்படுவர்’ என்று குறிப்பிட்டது பிள்ளை அவர்களுக்கு தங்க முடியாத  வருத்தத்தை அளித்தது. ‘அது எப்படில  நமக்கு இணையா’ என்று குமுறுவர்.

சிவனின் நேரடி வாரிசுகளான சைவப் பிள்ளைகளுக்கு நிகராக வேறு எவரையும் இணை வைப்பது பிள்ளை அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வழிச்சுத்தம் இல்லாதவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சிவநிந்தனை. சைவ நெறி  தழைத்தோங்குவதற்காக பூமிக்கு அனுப்பப்பட்ட கைலாசத்தின் பூதகணங்களில் ஒன்றாகவே தன்னை நினைத்துக் கொண்டார்.

கோவிந்தபேரியில் செட்டியாரும், முதலியாரும், கார்காத்தாரும்  ஒரே ஒரு பிராமணனாக குப்பு அய்யர் இருந்தபோதிலும் அவர்கள் யாரும் சைவ வேளாளர்களுக்கு நிகர் இல்லை என்பது பிள்ளை அவர்களின் ஆய்வு முடிவு.

மொப்ப நாயக்கருக்கு அடுத்தபடியாக அதிக நிலம் வைத்திருந்தது சுப்பையா பிள்ளை.  மொத்த கோவிந்தபேரியையும் விலைக்கு வாங்கும் அளவிற்கு நாயக்கருக்கு கையில் நல்ல சக்கர ஓட்டம் இருந்தாலும் ஊர் பொதுவில் உள்ள எந்த காரியத்திலும் தலையிடாதவர். 

எண்ணிக்கையில் கார்காத்தார்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு  என்று சங்கம் ஒன்று இல்லாததால் கோவிந்தபேரியில் உள்ள ஆதி சைவ வேளாளர் சங்கத்தின் ஏக சக்கரவர்த்தி சுப்பையா பிள்ளை.

2.


குன்னத்து ஓடையின் மேல்புறத்தில் இருந்த நிலம் நல்ல செவக்காடு. கடலையும் மொளகு செடியும், உளுந்தும் விளஞ்சு நின்ன கண்ணு நிறஞ்சு போயிரும். இதில் ஒரு வேலி நிலம் ஞானம் பிள்ளைக்கு உரியது .  நல்ல சம்சாரிக்கு இந்த நிலம் வாச்சிருந்தா பொன்னா விளஞ்சு இருக்கும் . ஞானம் பிள்ளைக்கு அடிக்கடி வரும் குரும வயிற்று வலி அவரை நிலத்தில் இருந்து மாற்றி நிறுத்தியது. மனைவி வடிவு மட்டும் எதையாவது செய்து கொண்டிருந்தாள். கையில் , கழுத்தில்  கிடந்ததை விற்று இதுவரை பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாள். அண்ணன் சக்கட்டி இசக்கியா பிள்ளை தயவில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சிவன் கோவிலுக்கு போய் நித்தம் அழுதுவிட்டு வருவதைதவிர வேறு வழியில்லை.

மகன் திரவியம் மகா அசட்டை. அவனால வயல்ல பாடுபட ஓக்கல . உடம்பு வளையாது. அதுமட்டுமல்லாமல் போஜனப் பிரியன்.    வடிவுக்கு மகனாலும் கணவனாலும் ஒரு உபயோகமும் கிடையாது.  ஒண்ணு முடியாம படுத்திருக்கும் , இன்னொன்னு முடிஞ்சாலும் படுத்திருக்கும்.

ஊரைச் சுற்றிக் கொண்டு சவுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்தவனை தாய்மாமன் சக்கட்டி இசக்கியா பிள்ளை சங்கரன்கோவில் போத்தி கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவன் சப்ளைக்கு போனதே நன்றாக சாப்பிடலாம் என்றுதான்.  அங்கே எப்போதும் சாப்பிட வரும் ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளைக்கு நகரத்து ஈஸ்வர பிள்ளை மனைவி வழியில் சொந்தம். அவர்கள் தயவில் சப்கோர்ட்டில் வேலை கிடைத்தது.

பயலுக்கு வேலை கிடைச்சாலும் பொண்ணு ஒன்னும் அமயல. அவன் கோட்டித்தனம் ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சு இருந்ததனால உள்ளூரிலே யாரும் பொண்ணு குடுக்கவில்லை. தாய்மாமா இசக்கியா பிள்ளை மருமகனுக்காக எங்கெங்கெல்லாமோ முயற்சி செய்தும் பலனில்லை.  எவளாவது ஒண்ணுமில்லாதவ ஒருத்தி கிடைச்சாகூட போதும், கல்யாணத்தை முடித்து விடலாம்.

ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளை ஸ்ரீவிலிபுத்தூர் கோர்ட்டுக்கு மாத்தலாயி போன பின்னர் அவர் முயற்சியில் , சக்கட்டி இசக்கியா பிள்ளை முன்னின்று நடத்த, மம்சாபுரம் எலக்ட்ரீசியன் வீரபாகு பிள்ளை மகள் சண்முகசுந்தரியை  திரவியம் மனவாட்டியாக கரம் பிடித்தான்.  திருமணம் அன்று சந்தோசமாக வயிறு நிறைய சாப்பிடதை இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

கார்காத்தார் வீரபாகு பிள்ளையின் மகளை சைவ பிள்ளை திரவியம் கல்யாணம் செய்துகொண்டது சுப்பையா பிள்ளையின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் சக்கட்டி இசக்கியா பிள்ளை மருமகனுக்கு இதை விட்டால் வேறு பெண் கிடைக்காது  என்பதாலும் ஆதி சைவ சங்கத்தின் தலைவர் என்பதாலும் கல்யாணத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வர சம்மதித்தார். 

பொண்ணு கொசுவம் வச்சு சீலை கட்டிக்கொண்டு வந்தது கூட  மன்னித்து விடலாம். ஆனால் கல்யாணத்தை நடத்தி வைத்தது ஒரு வைத்தியநாத சுவாமி கோவில் ஸ்மார்த்த பிராமணன்.  சிவச்சாரியார் இல்லாமல் ஐயரை வைத்து கல்யாணம் செய்த கோபம் பருத்திமார் தீ பற்றியது போல் அவர் உள்ளே எரிந்தது . இசக்கியா பிள்ளைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள  வேண்டியதாயிற்று.

3.

கல்யாணம் நடந்து ஏழு வருஷமாகியும் சீதனமாக குடுக்க இருந்த கட்டிலும் அலமாரியும் வீரபாகு பிள்ளையால் குடுக்க முடியல. ஞானம் பிள்ளை வீட்டு எல்லா பிரச்சனையும் கடைசில கட்டில்-அலமாரியில தான் வந்து நிக்கும்.  வயக்காட்டு வேலை ஒன்றும் தெரியாததால் வடிவு சுந்தரியை திட்டிக்கொண்டே இருந்தாள்.  மகனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாவது குடும்பம் சரியாகி விடும் என்ற ஆசையில் மண் விழுந்ததுதான் மிச்சம்.

தகப்பன் வீட்டுலயும் வழியில்லாததால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாலும் மாமியார்காரி வடிவு எல்லைமீறிவிடுவதுண்டு.

“கோட்டுல வேல பாக்குற என் மகனுக்கு ஜமீனுல பொண்ணெடுத்திருக்கணும் ,  நி பெரிய ரம்ப ன்னு உன்னை கட்டிருக்கான் பாரு “

உடனே “ஆமா உங்க  மைனரு மகராச பிரபு,  எங்கேயும் பொண்ணு கிடைக்காமதான மம்சாபுரம் வரைக்கும் வந்தீய “ என்று எகிறி விடுவாள்.

இவர்கள் சண்டையில் திரவியம் தலையிடமுடியாமல் ஒதுங்கி நின்று விடுவான். அதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்யமுடியாது

சிலமுறை சண்டை வந்து சண்முகசுந்தரி மம்சாபுரம் போவதும் திரவியம் போய் கூட்டிக்கொண்டு வருவதும் வழக்கம். ஆனால் இந்தமுறை சென்ற சுந்தரி திருப்பி வரவில்லை. திரவியம் சிலமுறை முயன்று தோற்று திரும்பினான்

ஞானம் பிள்ளையின் நச்சரிப்பு தாங்காமல் சக்கட்டி இசக்கியா பிள்ளை, ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளை மூலமாக மத்தியஸ்தம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டது.

தொடங்கிய காலம் முதல் எந்த உபயோகமும் இல்லாத ஆதி சைவ வேளாளர் சங்கத்தில் வைத்து பேசித்தீர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தலைவருக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் , இசக்கியா பிள்ளைக்காக ஒத்துக்கொண்டார். மேலும் ஒரு கார்காத்தானை தம்முடைய சங்கத்தில் வைத்து விசாரிப்பது  சங்கத்திற்கு பெருமை என்பதும் ஒரு காரணம்.

பிரவீரண்ணன் கோவில், ஊரில் உள்ள அத்தனை பிள்ளைமாருக்கும் பொதுவானது. எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால்  கார்காத்தார் நாட்டாமை சண்முகம் பிள்ளைதான் விழா கமிட்டி தலைவர். திருவிழா படைப்பு முடிந்து சங்கத்தில் எல்லோரும் கூடினர். வீரபாகு பிள்ளை சண்முகசுந்தரியுடன் வந்தார்.

சங்கரன்கோவில் வக்கீல் மணி அய்யரோட குமாஸ்தா மூக்கையா பிள்ளை, கனகசபாபதி பிள்ளை, சுந்தரம் பிள்ளை என பல முக்கியஸ்தர்கள் இருந்தார்கள். யாரும் எதிர்பாராத வகையில் நாட்டாமை சண்முகம் பிள்ளை வந்திருந்தார். சுப்பையா பிள்ளைக்கு அவரை அறவே பிடிக்காது.  எனினும் சங்கம் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் இவ்வளவு ஆட்கள் கூடுவது இப்பொழுதுதான். எனவே எதையும் காட்டிக்கொள்லாமல் அமைதியாக இருந்தார்.

கூட்டத்தில் சுந்தரி அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். மடியில் குழந்தை படுத்திருந்தது.  ஒருகையால் புடவையின் முந்தியை சுருட்டி பிடித்துக் கொண்டிருந்தாள் . கையிலிருந்து ஏதோ ஒன்று நழுவிச் சென்றது. அதை திரும்பப் பிடிக்க முடியாமல் திணறியதை யாரும் கவனிக்கவில்லை .

திரவியம் ஒரு மூலையில் ஞானம் பிள்ளை அருகில் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.  வடிவு மட்டும் நிலைகொள்ளாமல் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள். திரவியம் அடிக்கடி சுந்தரியை பார்த்த வண்ணம் இருந்தான்.

எல்லோரும் பேசும்பொழுது சுப்பையா பிள்ளை அமைதியாக இருந்தார் . அவர் சுந்தரியை பார்த்தார். வடிவான முகம். இன்னும் குழந்தைத்தனம் மிஞ்சியிருந்தது . மீனாட்சிதான் ஞாபதிற்கு வந்தாள். கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் மீனாட்சிக்கு குழந்தை இல்லை.

வெள்ளாளனுக்கு வாக்கு சுத்தம் வழிச்சுத்தம் இருக்கனும் , அது இல்லாதவன் வீட்டுல பொண்ணெடுத்தா அப்படித்தான் என்று யாரோ சொல்லவும் கைகளை தூக்கியபடி எழுந்து நின்ற சண்முகம் பிள்ளையின் குரல் உயர்ந்தது.

கூட்டத்தில் கூச்சல் அதிகமாவே கடைசியாக ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளை எழுந்து வீரபாகு பிள்ளையிடம்

“கட்டிலும் அலமாரியும் சீதனமாக தரேன்னு சொன்னது வாஸ்தவம் தானா “ என்று கேட்டார்

“ஆமா வாஸ்தவம் தான் “

“கொடுத்த வார்த்தையை காப்பாத்த வேண்டாமா “

பணப்பிரச்சனை என்றால் அதையாவது சொன்னதானே தெரியும் இப்படி எதுமே பேசாமல் இருந்தா எப்படி, நான் தலையிட்டு நடத்திய கல்யாணம், அதனாலதான் இங்க வந்து பேசிகிட்டு இருக்கேன் என்று ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளை கோபப்பட்டார் .

கடைசியாக வீரபாகு பிள்ளை எல்லோர் முன்பாக

“ அய்யா என் சம்பந்தி வீடு மொத்தமே இரண்டு கட்டு தான் .  கூட ஒரு குசுப்போடக் கூட இடம் கிடையாது. கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் ஆச்சியும் படுக்கது திண்ணையிலதான்.

“இப்போ அலமாரி வாங்கினா திண்ணைலதான் வைக்கணும் “

“அப்போ இவங்க ரெண்டு பேரும் எங்க படுப்பாங்க “

“பிள்ளையார் கோயில்ல தான் “

“கட்டில் வாங்கணும்னு ஆசைதான். கட்டில் இல்லாமலேயே ஏழு வருசத்தில நாலு பிள்ள பெத்துட்டா. இதுல கட்டிலும் வந்துட்டா போதும், என் பொண்ணு தாங்கமாட்டா” என்று சொன்னதும் மொத்த சபையும் எட்டு விதமாக சிரித்தது. ஆனால் சுப்பையா பிள்ளை மட்டும் அமைதியாக தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவரது பெரிய தொந்தி ஏறி இறங்கி குலுங்கியது.

இறுதியாக ஸ்ரேசுதார் நல்லபெருமாள் பிள்ளை

“சரிடே திரவியம் முதல்ல நீ வீட்ட கட்டி முடி அதுக்கு அப்புறம் கட்டிலும் அலமாரியும் வாங்கி தருவது வீரபாகு பிள்ளையின் பொறுப்பு. அதுக்கு முன்னாடி குழந்தைகள் துணிகளை வைப்பதற்கு ஒரு மரப்பெட்டி வாங்கிகொடுக்கவேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது. எல்லோரும் கலைந்து செல்லும்  போது சுந்தரியின் அருகில் வந்த திரவியம்

“ஏட்டி வந்துரு “ என்று சொல்லி விட்டு சென்றான். “ம் “ என்ற ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி விட்டு சென்றாள் . அவள் புன்னகைத்த மாதிரி இருந்தது.

பேசியபடி இரண்டு மாதத்தில் மரப்பெட்டியை செய்து முடித்து வீரபாகுபிள்ளை சுந்தரியைக் காண சென்றபோது சுருண்டு படுத்திருந்தாள். முந்தைய சலனம் அடங்கும் முன் மீண்டும் ஒரு கல் எறியப்பட்டிருந்தது.பெட்டியை வைத்து விட்டு தலை குனிந்தபடி திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.