ஸ்டார்பேஸ், டெக்ஸாஸ்
இளங்காலை நேரம். ஆனால் அதற்குள் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. பலர் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பயணம் செய்து வந்தவர்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா வகையினரும் அக்கூட்டத்தில் இருந்தனர். பெரிய பெரிய லென்ஸ்கள் கொண்ட புகைப்படக் கருவிகள் பைகளில் இருந்து வெளி வந்தன. நன்றாகப் பார்க்க வேண்டுமெனக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் தோள்களில் ஏறத் தொடங்கினர். அனைவரும் ஒரே திசையைப் பார்த்திருந்தனர்.
அங்கிருந்தது ஸ்டார்ஷிப்!
கிட்டத்தட்ட நானூறு அடி உயரத்தில் அது வானளாவிய கட்டடம் ஒன்றினைப் போல் பளபளத்துக் கொண்டிருந்தது. இதுகாறும் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் மட்டுமே பார்த்திருந்த மாபெரும் ராக்கெட்டை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஸ்டார்ஷிப் சாதாரண ராக்கெட் இல்லை, அது நம் நம்பிக்கையின் வடிவம் என்று அவர்கள் நம்பினர். நம்மை மீண்டும் நிலவுக்குக் கொண்டு செல்லும், அதனையும் தாண்டிச் செவ்வாயில் மானுடம் கால்பதிக்க வழிசெய்யும் என்ற நம்பிக்கையை ஸ்டார்ஷிப்பின் பிரம்மாண்டம் அவர்களுக்கு அளித்தது.
ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்படும் நேரம் நெருங்க நெருங்க அக்கூட்டம் ஒரு வித மயக்கத்தில் ஆழ்ந்தது. சிறு சலனம் கூட இல்லாமல் மெய் மறந்து நின்றது. பெரும் சத்தத்துடனும் தீப்பிழம்புகளுடனும் அதன் பிரம்மாண்டமான பொறிகள் இயங்கத் தொடங்கின. சில நொடிகளில் அந்தப் பிரம்மாண்டம் வானில் சீறிப் பாய்ந்தது.
அக்கூட்டத்தில் சிலர் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர். சிலர் உணர்வு பொங்கி கண்களில் கண்ணீர் தாரையாய் வழிய நின்றிருந்தனர். பலரும் வியப்பில் தம்மை மறந்து வேறெந்த உணர்வுமின்றி அக்காட்சியில் தம்மை இழந்து நின்றிருந்தனர். பாரதி அங்கிருந்திருந்தால் இதனைத்தான்
அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்
எனப் பாடியிருப்பான். ஆனால் அவர்களால் முடிந்தது வெறும் பார்வையாளர்களாக இருப்பதுதான். அதற்கு மேல் அந்தக் கனவில் பங்கேற்க அவர்களுக்கு வழியில்லை.
மனிதனைப் பூமிக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும் என்ற முழக்கத்துடன் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இலான் மஸ்க்கால் தொடங்கப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் அதுவரை இருந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை மாற்றி, பல முறை ஒரே ராக்கெட்டைச் செலுத்தும் தொழில்நுட்பத்தை முன்னெடுத்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கான விலையைக் குறைத்து அந்த தொழிலின் அடிநாதத்தையே மாற்றியது ஸ்பேஸ் எக்ஸ். பால்கன் ராக்கெட்டுகள், ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள், அவற்றின் மூலம் உலகெங்கும் இணையத் தொடர்பு கிடைக்கச் செய்யும் தொழில்நுட்பம் என ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தப்படுத்த இந்நிறுவனத்தில் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது. ஆனால் அதில் முதலீடு செய்யும் வாய்ப்பு அந்நிறுவன ஊழியர்களுக்கும் சில முதல்கட்ட முதலீட்டாளர்களுக்குமே கிடைத்தது. பெரும்பாலானவர்களுக்கு அந்தக் கதவுகள் மூடியே இருந்தன.

இந்த வருட ஆரம்பத்தில் இந்நிறுவனம் வெளியிட்டச் செய்திக் குறிப்பொன்று அந்தக் கதவுகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மே மாதம் தனது பங்குகளைச் சந்தைபடுத்துவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தது. பார்வையாளர்களாக மட்டுமிருந்த பொதுமக்கள் தாங்களும் பங்குதாரர்களாக வேண்டுமென்ற கனவு நனவாகப் போவதை எண்ணி ஆர்வமுற்றார்கள்.
ஆனால் அது அவ்வளவு எளிதான முடிவுகாக அமைந்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஏனென்று தெரிந்து கொள்ள முதலில் ஸ்பேஸ் எக்ஸ் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
தான் நுழையும் தொழில்துறைகளை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப் போடுவது எலான் மஸ்கின் அடையாளமாகவே ஆகிவிட்டது. பே பால் நிறுவனம் மூலம் நாம் பணம் செலுத்தும் முறை, டெஸ்லா மூலம் கார்களைத் தயாரித்துச் சந்தைப் படுத்தும் முறை என்று அவர் தொடர்ந்து முன்னெடுத்ததைப் போலவே விண்வெளித் துறையிலும் தன் தடத்தை ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர் பதித்தார். விண்வெளி அரசாங்கங்களின் ஏகபோகமாக இருக்க வேண்டியதில்லை என்பதை உலகுக்குக் காட்டினார்.
முன்னரே சொன்னது போல் ஒரு முறை மட்டுமே பயன்படும் ராக்கெட்டுகளை விடுத்து பலமுறை பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டுகளே சிறந்த வழி என்பதை முன்வைத்தார். அதன் மூலம் செலவைக் குறைக்க முடியும் என்று அவர் சொன்னது கேட்க எளிமையாக இருந்தாலும் இது செயல்படுத்த மிகவும் கடினமான ஒன்றானது. எத்தனையோ சங்கடங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சந்தித்தது. ஒரு கட்டத்தில் கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போய் மூழ்கும் நிலைக்கும் கூட வந்தது.
அந்தச் சங்கடங்கள் எல்லாம் டிசெம்பர் 2015ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. பால்கன் 9 என்ற பெயர் கொண்ட ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்து பின் மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கியது. விண்வெளித் துறையின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது. அன்றிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு ஏறுமுகம்தான். இன்றைக்கு 650 முறைகளுக்கும் மேல் கோள் வட்டப்பாதைக்கு ராக்கெட்டுகளைச் செலுத்தி இருக்கிறோம், எடைக் கணக்கில் விண்வெளிக்குச் செல்லும் சரக்குகளில் 80% எங்கள் ராக்கெட்டுகள் மூலம்தான் செல்கின்றன. 2025ஆம் ஆண்டு 165 முறை ராக்கெட்டுகளை ஏவியிருக்கிறோம் என்று தகவல்களை அள்ளி வீசுகிறது ஸ்பேஸ் எக்ஸ். சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ராக்கெட் ஏவப்படுவது என்பதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்பு கூட நினைத்துப் பார்த்திராத ஒன்று. ஆனால் இன்றைக்கு அதனைச் செய்து காட்டி இருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். அப்போலோ திட்டத்தின் கீழ் நாசா செலுத்திய சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை, ஸ்பேஸ் எக்ஸ் இன்று சில வாரங்களிலேயே கடந்துவிடுகிறது.
பால்கன் ராக்கெட்டுகள் மட்டுமின்றி டிராகன் விண்வெளிக்கலன்கள் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றது ஸ்பேஸ் எக்ஸ். இத்துறையில் இறங்கிய மற்ற நிறுவனங்கள் இன்னமும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது எங்களை விட்டால் வேறு ஆளில்லை என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் தகவல்தொடர்புத் துறையிலும் கால் பதித்தது ஸ்பேஸ் எக்ஸ்.
அதற்கு அடிநாதம் அது விண்வெளியில் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள். 2019ஆம் ஆண்டு அறுபது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தித் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு இன்றைக்கு இந்நிறுவனத்தில் வருமானத்தில் பெரும்பங்கிற்குக் காரணமாக இருக்கிறது. கிட்டத்தட்டப் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் இன்றைக்கு நம் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மூலம் பெருங்கடல்களின் நடுவே சென்று கொண்டிருக்கும் கப்பல்கள், வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்கள், எங்கோ இருக்கும் வனாந்திரப் பகுதிகள், பேரிடர்களைச் சந்தித்தப் பகுதிகள், போர் நடக்கும் இடங்கள் என சாதாரணமாக இணையத் தொடர்பற்ற இடங்களில் அத்தொடர்பை வழங்க வழிசெய்து தருகிறது இந்தப் பிரிவு. 160 நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் ஸ்டார்லிங்க் மூலம் இணையத் தொடர்பு பெற்றிருப்பதாகச் சொல்கிறது இந்நிறுவனம்.
இவற்றை எல்லாம் தாண்டி நிலவில் தளங்கள் அமைப்பது, விண்வெளியில் தரவு மையங்கள் அமைப்பது, செயற்கை நுண்ணறிவு, செவ்வாயில் மானுடக் குடியிருப்பு எனப் பெருங்கனவுகளை முன்வைக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். மானுடத்தின் எதிர்காலம் இவற்றின் வெற்றியில்தான் இருக்கிறது என்கிறார்கள் இந்நிறுவனத்தின் ரசிகர்கள். ஆனால் இதெல்லாம் வெறுங்கனவு என்கிறார்கள் இவர்களின் திட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள்.
பெருங்கனவோ வெறுங்கனவோ, அக்கனவுக்குத்தான் என்ன விலை? அதைத்தான் இந்நிறுவனத்தின் பொதுப்பங்குகள் வெளியீடு சொல்லப் போகிறது.
தங்கள் பங்குகளைச் சந்தைப்படுத்தப் போவதாக இந்நிறுவனம் அறிவித்த உடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆல்பபெட், மெட்டா, ஊபர், ஏர்பின்பி என்று மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பங்குகளைச் சந்தைப்படுத்திப் பலன் பெற்ற பொழுது ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனமாகவே தொடர்ந்தது. அதன் சகோதர நிறுவனமான டெஸ்லா பங்குச்சந்தையில் நுழைந்த பொழுது கூட இது தனித்தே இருந்தது. ஆனால் தொடர் வெற்றிகளால் இந்நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டேதான் போனது.
இவர்களின் முன்னெடுப்புகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. தங்களின் பண முதலீடு இல்லாத பொழுதும் கூட அவர்கள் உணர்ச்சிகரமான முதலீட்டைச் செய்து கொண்டே இருந்தனர். ஒவ்வொரு முறை ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பொழுது கை தட்டி மகிழ்ந்தனர். டிராகனில் விண்வெளி வீரர்கள் பத்திரமாகச் சென்று வந்த பொழுது மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டனர். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை மானிடத்தின் வளர்ச்சியாக, தங்களின் வளர்ச்சியாகவே பார்த்தனர்.
பார்வையாளர்களாக இருந்த தாங்கள் பங்குதாரர்களாக வாய்ப்பு கிடைத்த உடன் அவர்கள் ஆர்வம் கட்டுக்கடங்காமல் பெருகியது. அவர்கள் வாங்க நினைத்து வெறும் பங்குகள் அல்ல, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை.
ஆனால் நம்பிக்கையாளர்கள் ஒரு புறம், அவநம்பிக்கை கொண்டவர்கள் மறுபுறம் எனப் பங்குச் சந்தை இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ராக்கெட் ஏவுதலில் இவர்களின் பங்கு, ஸ்டார்லிங்க் வளர்ச்சி ஸ்டார்ஷிப் மூலம் திறக்கப்படப் போகும் புதிய தொழில்கள் என்று இந்நிறுவனத்திற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம் என்கின்றனர் நம்பிக்கையாளர்கள். பெரும் முதலீட்டு நிறுவனங்கள் தங்களுக்கு பல கோடிப் பங்குகள் வேண்டும் என்று முதலிலேயே சொல்லி இருப்பது இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான். இந்நிறுவனத்தில் திட்டங்களில் பாதி வெற்றி பெற்றால் கூட நினைக்க முடியாத வளர்ச்சி இருக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை.
ஆனால் இவற்றை நம்பாதவர்கள் தங்கள் பங்குக்குத் தகவல்களை முன்வைக்கின்றனர். வருமானத்தில் வளர்ச்சி இருந்தாலும் லாபம் ஈட்டுவதில் அதே வளர்ச்சி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்கின்றனர் இவர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் நஷ்டத்திலேயே ஓடும் என்பது இவர்கள் கேள்வி. இந்நிறுவனத்தின் திட்டங்கள் எல்லாம் பெருஞ்செலவு பிடித்தவை. அவற்றால் லாபம் வரும் என்ற நிச்சயம் இல்லை. அவை எல்லாம் எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படக் கூடிய திட்டங்கள் என்ற ஐயத்தையும் இவர்கள் எழுப்புகின்றனர். அப்படி இருக்கும் பொழுது இந்நிறுவனத்திற்கான மதிப்பை அவநம்பிக்கையோடு எதிர்கொள்கின்றனர் இவர்கள். கோமாளித்தனமான மதிப்பு என்று தூற்றக்கூடச் செய்கின்றனர்.
ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேல் ஒரு பிரச்னை இருக்கிறது. அதுதான் இலான் மஸ்க். அண்மை வரலாற்றில் இவரைப் போல சர்ச்சையைக் கிளப்பும் தொழிலதிபர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லிவிடலாம். பெரும் தீர்க்கதரிசி, தான் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுமே மக்களுக்கு நன்மை பயக்கும் வகையானவை என்று நினைப்பவர். அதற்கு உதாரணம் பே பால், டெஸ்லா, ஸ்டார்லிங் என்றெல்லாம் இவர்பால் நம்பிக்கை உள்ளவர்கள் முன்வைக்கும் கூற்று.
ஆனால் இவரை கிட்டத்தட்ட ஒரு கொடுங்கோலனைப் போலப் பார்க்கிறது எதிர்த்தரப்பு. தான் வைத்ததே சட்டம் என்று நினைப்பவர், தனக்கு வேண்டும் என்பதற்காக சாம தான பேத தண்ட வழிகள் அனைத்தையும் பிரயோகிப்பவர். இவர் கையில் மொத்த அதிகாரமும் இருப்பது நல்லதில்லை என்பது இவர்கள் வாதம்.
இதற்கு உதாரணமாக இவர்கள் சொல்வது ஸ்பேஸ் எக்ஸ் முன்வைக்கும் ஏ, பி என்ற இரண்டடுக்குப் பங்கு முறை. இதன்படி ஏ வகை பங்குகள் மட்டுமே சந்தைப்படுத்தப்படும். பி வகைப் பங்குகள் பெரும்பாலும் மஸ்க் தரப்பின் கைகளில் இருக்கும். ஏ வகைப் பங்குகளுக்குத் தலா ஒரு வோட்டு என்றால் பி வகைப் பங்கு ஒன்றிற்குப் பத்து வோட்டுகள். இதன் மூலம் நிறுவனத்தின் மீது மஸ்க் தரப்பின் கட்டுப்பாடு தொடரும். பங்குதாரர்களுக்கு நியாயமான வாக்குரிமை மறுக்கப்படுகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இது மிகப்பெரிய மறையிடர் என்ற வாதத்தையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.
இவ்விரு அணிகளுக்கிடையேயான பதற்றம் இந்தப் பங்கு வெளியீட்டை ஒரு பெரும் நிகழ்வாக மாற்றிவிட்டது. ஒரு பங்கின் விலை 135 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு 75 பில்லியன் டாலர்களுக்குப் பங்குகள் விற்பனை இருக்கும் என்று அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ். இதன்படி நிறுவுநர் பங்குகள், இதற்கு முன் தனிச்சுற்றில் விற்கப்பட்டப் பங்குகள், தற்பொழுது சந்தைப்படுத்தப்பட்ட பங்குகள் என எல்லாவாற்றையும் சேர்த்து இந்நிறுவனத்தின் மதிப்பு 1.75 டிரில்லியன் டாலர்கள் என்றாகிறது.
அப்படியானால் இன்றைக்கு உலகின் அதிக மதிப்பு வாய்ந்த முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக தனது பங்குச் சந்தை வாழ்க்கையை தொடங்குகிறது ஸ்பேஸ் எக்ஸ். கூகிள் (ஆல்பபெட்), மைக்ரோசாப்ட், என்விடியா என விரல் விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்கள் மட்டுமே இதை விட அதிக மதிப்பு கொண்டவை. மெட்டா, சௌதி அரேபிய எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ போன்ற பெரும் நிறுவனங்கள் எல்லாம் இந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸிற்குப் பின்புதான் என்பது நம்ப முடியாத செய்தி.
இந்தப் பங்குச் சந்தை நுழைவினால் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த / பார்க்கும் ஊழியர்களில் 4,400 பேர் மில்லியனர்களாகவும் 400 பேர் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் இத்தகைய வளர்ச்சி இங்கு ராக்கெட் வடிவமைப்பாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள், அங்குள்ள உணவகங்களில் பணிபுரிபவர், ராக்கெட் கடலில் விழும் பொழுது அதை எடுத்துக் கரை சேர்பவர் என்று மிகப் பரவலாக இந்த மதிப்புக்கூட்டு நடந்திருப்பது பெரிய ஆச்சரியம். இத்தனை பேர் ஒரே நிகழ்வின் மூலம் பெரும் செல்வந்தர்களாக மாறுவது அரிதான ஒன்று. அதை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
அதைப் போல மற்றொரு விஷயத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். பொதுவாக இப்படிப் பங்கு வெளியீடு நடக்கும் பொழுது சாதாரணப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 5-10% பங்குகளே வழங்கப்படும். முதலீட்டு நிறுவனங்களுக்குத்தான் பெரும்பங்கு வழங்கப்படும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பங்குகளில் 30% வரை தனி முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். பொதுமக்களிடையே இருக்கும் ஆர்வத்தை அறுவடை செய்யும் வழி, முதலீட்டு நிறுவனங்கள் முன் வராது என்று தெரிந்துதான் இந்த முடிவு என்று ஒரு சாரரும், மதிப்புக் கூட்டலைப் பரவலாக்கும் வழி என்று மறு சாரரும் இதைப் பற்றியும் வாதாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்வது போல இப்பங்குகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டும் பங்குச் சந்தையில் பெரும் வரவேற்போடு களமிறங்கி இருக்கின்றன. 135 டாலர்களுக்கு விற்கப்பட்ட பங்குகள் முதல் நாளில் $176.52 வரை உயர்ந்து சந்தை முடியும் பொழுது $166.75 என்ற நிலையில் இருக்கின்றன. முதல் நாளில் இப்படி முப்பது டாலர் வரை உயரும் என்பது யாருமே எதிர்பார்க்காதது. அவர்கள் சொன்ன விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள், முதல் நாள் இப்பங்குகளில் விலை பெரும் இறக்கத்தைச் சந்திக்கும் அப்பொழுது குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியது. வரும் நாட்களில் என்ன ஆகும், இந்நிறுவனம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா என்பதெல்லாம் நாம் இனி பார்க்க வேண்டியவைதான்.
ஆனால் பார்வையாளர்கள் இன்றைக்குப் பங்குதாரர்களாக மாறிவிட்டனர். ஒரு பெரும் பயணத்தில் தங்களைப் பயணிகளாக இணைத்துக் கொண்டுவிட்டனர். மானுடத்தின் எதிர்காலமே நிலவிலும் செவ்வாயிலும் கால்பதிப்பதில்தான் இருக்கிறது என்ற கனவில் தங்களைக் கரைத்துக் கொண்டு விட்டனர்.
அந்தக் கனவுக்குத்தான் என்ன விலை?
Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
