சநாதனச் சர்ச்சை – ஒழிக்க வேண்டியது எது?

சில நாட்களுக்கு முன் தமிழகச் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் துணைமுதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது உரையை முடிக்கும் பொழுது “மக்களைப் பிரிக்கும் சநாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” எனச் சொன்னது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. 

சநாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனத் திரு. உதயநிதி சொல்வது இது முதன்முறை அல்ல. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் சநாதனம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று எனப் பேசினார். பாரதிய ஜனதா கட்சியின் அமித் மாளவியா இது குறித்துத் தெரிவித்த கருத்துகள் குறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த மதுரை கிளை நீதிமன்றம் திரு. உதயநிதி தெரிவித்த கருத்துகள் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது போன்றது எனத் தீர்ப்பளித்ததும் பின்னர் உச்ச நீதிமன்றம் அமைச்சர் ஒருவர் இப்படிப் பேசுவது உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது என்று கண்டனம் செய்தது அன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

பொதுவெளியில் பேசியதற்கு இப்படி நீதிமன்றங்களிடம் இருந்து கண்டனங்கள் வந்தாலும் இப்பொழுது சட்டசபைக்குள் பேசியதற்கு அது போல எதிர்பார்க்க முடியாது. சட்டசபைக்குள் பேசப்படுபவை அனுமதிக்கத் தக்கவா என்ற முடிவை எடுப்பது சபாநாயகர் மட்டுமே. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் வானளாவிய அதிகாரம் என்ற முழக்கம் நம் ஞாபகத்திற்கு வரலாம். இந்த முறை புதிய சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே. சி. டி. பிரபாகர் இதை அனுமதித்ததால் இது குறித்து வெளியில் வழக்குத் தொடர வாய்ப்பில்லை. அன்றைக்கு அவையில் இருந்த உறுப்பினர்களில் யாருமே இது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சரி, சநாதன தர்மம் என்றால் என்ன? அதை ஏன் ஒழிக்க வேண்டும் என்று திரு. உதயநிதி சொல்கிறார்? சநாதன தர்மம் என்பதில் சநாதனம் என்ற சொல்லுக்கு நிலையான அல்லது முதலும் முடிவுமில்லாத ஒன்று எனப் பொருள். தர்மம் என்பதற்கு அறநெறி என்று பொருள். இதன்படி சநாதன தர்மம் என்ற பதத்திற்கு நிலைத்திருக்கும் அறநெறி என்பதுதான் பொருள். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு மதத்திற்கும் அம்மதத்தின் நூல்கள் அறிவுறுத்துகின்றன.  ஆனால் பெரும்பாலும் சொல்லப்படும் சொற்கள் மாறினாலும் இவை எல்லாமே சொல்லும் கோட்பாடுகள் ஒன்றுதான். உண்மையைப் பேசு, நேர்மையாக நட, பிற உயிர்களுக்குத் துன்பம் தராதே, இல்லாதவர்களுக்கு உதவி செய், மன்னிக்கக் கற்றுக் கொள், தேவைகளைக் குறை என்பது போன்ற பாடங்கள் இல்லாத மதநூல்களும் உண்டா? இந்து மதமாகட்டும், கிருத்துவமாகட்டும், இஸ்லாமாகட்டும், புத்தம், ஜைனம், சோராஷ்ட்ரியானிசம், சீக்கிய சமயம் என்று எல்லாவற்றிலும் சொல்லப்பட்டு இருக்கும் கோட்பாடுகள் எல்லாமே பெரும்பாலும் ஒன்றுதானே. தமிழில் ஆத்திச்சூடியும் திருக்குறளும் கூட இதே அறநெறிகளைத்தானே வலியுறுத்துகின்றன. 

இதைத்தான் சநாதன தர்மமும் சொல்கிறது. ஒருவர் அருளிய நூலோ அல்லது ஒரு சிலரால் எழுதப்பட்ட நூலோ என்றில்லாமல் காலத்தின் போக்கில் பல தத்துவ நூல்கள் வழியாகச் சொல்லப்பட்டிருப்பது இந்த சநாதன தர்மத்தின் கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு காலப்போக்கில் பல வழிபாட்டு மரபுகளும் தத்துவப் பிரிவுகளும் வளர்ந்து உருவான விரிவான அமைப்பே இந்து மதம். இக்கோட்பாடுகளுடன் உருவ அருவ வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், யாகங்கள் என்று மேலும் பலவற்றை இணைத்துச் செய்யப்பட்டது இந்து மதம். இன்றைக்கு சநாதன தர்மம்தான் இந்து மதம், இந்து மதம்தான் சநாதன தர்மம் என்று பொதுவாக இணைத்துச் சொல்லப்பட்டாலும் இவை இரண்டும் ஒன்றல்ல என்பது ஒரு நுட்பமான வேறுபாடு. இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஆனால் காலப் போக்கில் இந்து மதம்தான் சநாதன தர்மம், சநாதன தர்மம் என்றாலே இந்து மதம்தான் என்ற கருத்து பொதுப்புத்தியில் பதிந்து விட்டது. சமுதாயத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இந்து மதத்தால் தோன்றியவை என்று அதனை எதிர்ப்பவர்களும் அம்மதத்தை ஆதரிப்பவர்களும் என இரு கட்சியினருமே இந்த நுட்பமான வேறுபாட்டை மறந்து இவ்விரண்டு பதங்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் துடிப்பாக இயங்கத் தொடங்கிய காலத்தில் அவர்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் சமுதாயத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள், சாதியின் பெயரால் மக்கள் வெவ்வேறு தளங்களில் விலக்கி வைக்கப்படுதல், கல்வி கிடைக்காமல் போவது, குலத்தொழில் மட்டுமே செய்வதால் முன்னேற்றம் தடைபடுவது போன்றவற்றை எதிர்த்தே இருந்தன. பெரும்பான்மையினரின் மதம் இந்து மதம் என்பதால் இவை இந்த மதத்தின் குறைபாடுகளாகவே பார்க்கப்பட்டன. 

குறிப்பாக பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற சாஸ்திர மரபுகளில் உண்டான பாகுபாடும், நடைமுறையில் உருவான சாதி அடுக்குகளும் இந்து மதத்தின் குறைபாடுகளாகச் சொல்லப்பட்டன. இதனால் கீழடுக்கு மக்களுக்குக் கிடைக்காமல் போகும் உரிமைகள் குறித்த செயல்பாடுகள் பெரிதும் வலுப்பெற்றன. ஆட்சியிலும் அதிகாரத்திலும் சமுதாயத்திலும் பிராமணர்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்ததால் இந்த உரிமைகளுக்குப் போராடுவது பிராமணர்களுக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தப் பார்வை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இன்றைக்கும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சமுதாய அடுக்குகளில் தமக்குக் கீழே இருப்பவர்களின் மீது ஆதிக்க வர்க்கத்தின் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கும் வரை, அதனை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியமும் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் மாற்ற வேண்டியது இந்த ஆதிக்க மனப்பான்மையைத்தான் என்ற பொழுது இதன் காரணம் இந்து மதம் ஆகவே அதனை ஒழிக்க வேண்டும் என்பதோ அல்லது சநாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதோ சரியான அறைக்கூவலா? 

சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு என்பது பிராமணர்களால் மட்டுமே கடைபிடித்துத் திணிக்கப்படுகின்ற ஒன்றா என்றால் அக்கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான். இன்றைக்குக் கேள்விப்படும் செய்திகளில் பெரும்பாலும் மற்ற உயர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் தமக்குக் கீழ் இருப்பவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளாகத்தான் இவை இருக்கின்றன. அதனால் இந்த ஏற்றத்தாழ்வுக்கான போராட்டத்தை இன்னும் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்துவது எந்த விதத்தில் சரியாகும்?  

சரி, பிராமண எதிர்ப்பில்லை, இது இந்து மதத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டும் என்று சொல்லலாமா? அப்படிப் பார்த்தால் இந்த ஏற்றத்தாழ்வுகள், சாதி சார்ந்த வித்தியாசங்கள் பார்ப்பது போன்றவை எல்லாம் இந்து மதத்தில் மட்டுமே இருக்கின்றனவையா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கிருத்துவத்திலும் இதே சாதியத் தட்டுகள் இருக்கின்றன. தலித் கிறுத்துவர்களுக்குத் தனித் தேவாலயங்கள், தனிக் கல்லறைகள், பொது இடங்களில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது என எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இஸ்லாத்திலும் லெப்பைகள், மரக்காயர்கள், ராவுத்தர்கள் என்று அவர்களுக்கான பிரிவுகள், அவற்றினிடையே இருக்கும் குழப்பங்கள் என இருக்கத்தான் செய்கின்றன. 

இப்படி இருக்கும் பொழுது பெரும்பான்மை மதம் என்பதால் இந்து மதத்தை மட்டும் சாடுவது சரியா? உண்மையிலேயே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தி, சாதி சார்ந்த பிரிவினைகளை, ஆதிக்கங்களை ஒழிக்க வேண்டுமானால் நாம் எதிர்க்க வேண்டியது சாதியத்தையா? இந்து மதத்தையா? அதன் அடிப்படைக் கோட்பாடான சநாதன தர்மத்தையா என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு சநாதான எதிர்ப்பு என்பது பிராமண எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்தில் கூட அமைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனம். 

நாராயண குரு, அயோத்திதாச பண்டிதர், பசவண்ணா, ஐயா வைகுண்டர் போன்ற பெரியவர்கள், இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து அனைவரும் சமம் என்பதைத்தான் தங்கள் கோட்பாடாக முன்வைத்தனர். அனைவருக்கும் கல்வி, பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றின் மூலம் மதரீதியாக ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளை மாற்ற இவர்கள் இயங்கினர். 

சநாதன தர்மம் என்பது இந்து மதம்தான் என இரு தரப்பினர் சொல்வதாலும், வடமொழிப் பதமான அதன் பொருள் புரியாமல் போனதாலும் பொது மக்களுக்கு இந்த நுட்பமான வித்தியாசம் புரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. தான் சட்டசபையில் பேசியது குறித்துப் பொதுவெளியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், திரு. உதயநிதி, விளக்கம் தரும் வகையில் “சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி – கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.  நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!” என்று எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 

அவர் inequality, oppression எனக் கூறும் ஏற்றத்தாழ்வுகளும் ஆதிக்க வெறியும் சநாதான தர்மத்தினால் மட்டும் ஏற்பட்டவை என்பது போலத்தான் சொல்கிறாரே ஒழிய, சாதியம் என்ற பொதுப்படையான கருத்தைச் சொல்ல முன் வரவில்லை. பெரும்பான்மை உயர்சாதியினரைப் பற்றிக் குறை சொன்னால் அவர்கள் ஆதரவை இழந்து விடுவோம் என்ற எச்சரிக்கை நன்றாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு கால ஆட்சிகளில் திராவிடக் கட்சிகள் ஆங்காங்கே சில இலைகளையும் கிளைகளையும் ஒடித்திருக்கிறார்களே தவிர சாதியத்தின் ஆணி வேரை ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. சாதி ரீதியான வேட்பாளர் தேர்வு, இன்னும் இருக்கும் இரட்டைக் குவளை முறை, தொடர்ந்து நிகழும் ஆணவக் கொலைகள், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை என பட்டியலிட்டால் முடிவில்லாமல் நீண்டு கொண்டேதான் போகும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மதத்தையோ, அம்மதத்தின் அடித்தளமாக இருக்கும் கோட்பாடுகளையோ ஒழிப்பேன் என்பதால் சமுதாயம் முன்னேற்றம் அடையப் போவதில்லை. மதங்களைத் தாண்டி, சமூகத்தில் இருக்கும் அடுக்குகளைத் தாண்டி சாதியம் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளை ஒழிப்போம் என்று சொல்லத் துணியும் நேர்மையும் அதனை நடைமுறைப்படுத்தும் மனவுறுதியும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும், அவர்களைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவர்களுக்கும் இருப்பது அவசியம். 

https://www.business-standard.com/india-news/sc-rebukes-udhayanidhi-stalin-over-his-eradicate-sanatan-dharma-remark-124030400324_1.html

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.