மகளிர் மட்டும்

கரிய இருளுக்குள் ஊரும் ஒரு சிறு பூச்சியென வந்த அந்த விண்கலம் “நாநாங்” நிலையத்தில் வந்து நின்றது. 

அதைக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “அவள் வந்துவிட்டாள்” என்று அறிவித்தான் ஜேடி. அவனருகே நின்றிருந்த எந்திர மனிதன் சியான், அறையை விட்டு வெளியேறும் திசையில் நடந்தது.

சுகோய் விண்கலத்தை விட்டிறங்கி, நிலையத்தினுள் நுழைந்தாள். நிலையத்தின் செயற்கை ஈர்ப்பு விசை அவளை உலோகத்தரையில் கால்பதித்து நடக்க அனுமதித்தது. 

“இனிய வரவு. நாநாங் உங்களை வரவேற்கிறது” என்றது செயற்கை நுண்ணறிவான எட்டினாவின் குரல்.

“இந்த நிலையம் இன்னும் இயக்கத்தில் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது?” என்றாள் சுகோய்.

“ஆம். இன்னும் பத்தாண்டுகளுக்கு ஆச்சர்யமளிக்கும்”  என்றது எட்டினா.

“பத்தாண்டுகளா?”

“ஆம், இப்போது துணைவட்டங்களில்  (epicycles) கிரகத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.  துணை வட்டங்களின் விட்டம் குறையும் வேகத்தைக் கணக்கில் கொண்டால் பத்தாண்டுகளாவது ஆகும். அதுவரை, நாநாங் தான் கேளிக்கை விடுதி, அவசர மருந்தகம், தற்காலிகப் புகலிடம், மறைவிடம், காத்திருப்புக் கூடம் எல்லாம். யார் யாருக்கு என்ன தேவையோ அதற்கேற்றாற்போல் பயன்படுத்திக்கொள்வார்கள்.” என்றது எட்டினா.

“எனக்கு இன்றைக்கு கேளிக்கை விடுதிக்குத் தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றாள் சுகோய்.

“நேராகச் சென்று வலது புறம் திரும்புங்கள்” என்றது எட்டினா.

நேராகச் சென்று வலது புறம் திரும்ப, எதிர்ப்பட்ட கதவைத் திறந்தாள். இருளில், வண்ணவண்ண, வட்டவட்ட விளக்கொளி அங்குமிங்கும் தொடர்ந்து இடம்பெயர்ந்து, அந்த இடத்தை ஒரு கேளிக்கை விடுதி போல் தோற்றமளிக்க முயன்று கொண்டிருந்தது. உடன் ஒலிக்கும் டிஸ்கோ இசை செயற்கையாக இருந்தது, ஆயினும், இசை உருவாக்கிய அதிர்வு கால்களை நடனமாடச்செய்வதாய் இருந்தது. தளத்தின் ஓரத்தில் மதுபானங்களும், போதை வஸ்துக்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு அருகாமையில் ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திர மனுஷி புன்னகையுடன் நின்றிருந்தாள்.

எனினும், அது ஒரு தற்காலிக விடுதி என்பதற்கான ஆதாரங்கள் ஆங்காங்கே பல்லிளித்தன. சுவர்களில், காமத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. விண்வெளியை மறைக்கும் பொருட்டு, விண்கலத்தின் கண்ணாடித்திரைகள் கவனமாகத் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன. 

“எட்செட்ரா” தான், “நாநாங்” நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் அடுத்த கேளிக்கை விடுதி. ஆனால், போய்ச் சேர, கால் ஒளி ஆண்டு ஆகும். இப்போதைக்கு, சுகோய் தங்கியிருக்கும் எரிகல் குடியிருப்பிலிருந்து அரை நாள் பயண தூரத்தில் இருப்பது “நாநாங்” மட்டும் தான். சுற்றியிருக்கும் அனாதை கிரகங்கள், விண்கற்கள், நிலாக்களில் சிந்திச்சிதறிப் பரவிக்கிடக்கும் மனித இனங்களுக்கு “நாநாங்” தான் ஒரே கதி. 

ஆதலால், ஒரு தற்கொலைப் பயணத்தில் இருக்கும் விண்கலத்தைத் தற்காலிகமாக, கேளிக்கை விடுதியாக்கி பயன்பாட்டிற்கு விட்டிருந்தார் ஜேடி. 

ஓரிடத்தில்,  நான்கைந்து பெண்கள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னே அரை நிர்வாணமாய் ஒரு ஆண் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக்கொண்டிருந்தான். அது போல், பெண்களும் அவர்களுக்கென ஒர் ஆண் என, தளம் முழுவதும் நிரம்பியிருந்தார்கள். மருந்து வாங்கவென வந்தவர்கள், மறைவிடத்தில் மறைந்திருந்தவர்கள், தற்காலிகப் புகலிடம் தேடி வந்திருந்தவர்கள், சிறைகளிலிருந்து தப்பியவர்கள், பழுதடைந்த விண்கலத்தால் மாற்று உபகரணங்களுக்காகக் காத்திருப்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் அந்த தளம் முழுவதும் நிரம்பியிருந்தார்கள். 

சுகோய், காலியாக இருந்த ஒரே இருக்கையில் அமர்ந்தாள். அது அத்தளத்தில் ஓர் ஓரமாய் இருந்தது. அவள் அமர்ந்திருந்த அவ்விடம்,  பெரிய திரையிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. பெரிய திரை என்றாலும், அது வெளிப்புறமிருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு ஒளி ஊடுறுவும் வகையினதாகத்தான் இருந்தது.  நியாயமாகப் பார்த்தால், அவளது பிரத்தியேகக் காட்சிக்கு அவளுக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்காலிக நிலையத்தில் அதையெல்லாம் எதிர்பாக்க முடியாது.  சுகோய் அமர்ந்திருந்த திரைக்கூண்டுக்கு வெளியே,  அந்த அரை நிர்வாண ஆண்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனைப் பெண்கள் விசிலடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

“அருந்த ஏதேனும் பானங்கள் கொண்டு வரவா?” என்றது எடினா.

“இந்தப் பெண்கள் யார்?” என்றாள் சுகோய், பெண்கள் மேல் இருந்த பார்வையை விலக்காதவளாய்.

“அவர்களா? எல்லோரும் எரித்ரா விண்கல்லிருந்து வந்திருக்கிறார்கள்.” என்றது எடினா.

“இவர்களுக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?”

“விண்கல்லிருந்து தனிமங்களை எடுத்துச்செல்லும் விண்கலம் பழுது காரணமாக, தனிமங்கள் பிரித்தெடுக்கும் வேலை தடைபட்டிருக்கிறது.  வேலை கெட்டால், ஒப்பந்தம் காரணமாக நாள் ஊதியம் கிடைத்துவிடும் அல்லவா? அதுதான் வந்திருக்கிறார்கள்” என்றது எடினா.

“ம்ம்ம்… இவ்வளவு கூட்டமாக இருக்குமென்று நினைக்கவில்லை… எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றாள் சுகோய், சுவாரஸ்யம் இழந்தவளாய்.

எடினா எதுவும் பேசாமல் அகன்றது.

பயணக் களைப்பா, நியான் விளக்குகளின் தொடர் அசைவா, தினசரி எடுத்துக்கொள்ளும் வைட்டமின்களின் குறைபாடா எண்று அறுதியிட்டுக் கூற முடியமாட்டாமல் இருக்கையில் அமர்ந்தபடியே உறக்கம் வந்தது. சுகோய் லேசாகக் கண்ணயர்ந்தாள்.

அவளது முதுகில் எதுவோ உரசுவது போல் உணர்ந்து சட்டென விழிப்பு ஏற்பட்டது.

கொஞ்சமாய் உடலை ஒடுக்கி தன்னைத் தகவமைத்தாள். சோர்வின் உந்துதலில் இமைகளைத் திறப்பதே கடினமாக இருந்தது. 

சற்று நேர இடைவெளியில், மீண்டும் எதுவோ இடிக்க, அட்ரினலின் உந்தி, தன் மீது உரசும் அந்த வஸ்துவின் மீது, சுருங்கிய புருவங்களுடன், கவனம் குவித்தாள்.

முதல் முறை உறுத்திய போது இருந்த அளவை விட இப்போது அந்த வஸ்து சற்று பெரிதாகியிருப்பதாக பட்டது. அவளது முகம் பொலிவினை இழக்கத்துவங்கியது. காலனியை விட்டுக் கிளம்புகையில் மேற்கொண்டிருந்த ஒப்பனைகளுக்கு அவள் முகத்துடனான தொடர்பு பட்டென அறுந்தது. எனினும், ஊர்ஜிதமாக எதையும் அனுமானிக்க இயலவில்லை.

திரும்பிப் பார்க்க, ஒரு பெண் தலை முதல் கால் வரை பர்தா அணிந்தபடி நின்றிருந்தாள். அவளது இடுப்புப்பகுதி சுகோயின் தோளில் இடித்துக்கொண்டிருந்தது. சுகோய் சட்டென திரும்பி தனக்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தவள், சமாதானமாய்ப் போகும் இறுதி முயற்சியாக, அசைந்து கொண்டிருக்கும் திரையினூடே மேடையருகே ஆண் இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடுவதையும், அவனை ரசித்துக்கொண்டிருந்த பெண்களையும் வேடிக்கைப் பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

பயணச்சோர்வின் காரணமாக அடைந்த மனக்கிலேசமாக இருக்குமென்று கருதி சுகோய் அச்சூழலை சட்டை செய்வதைத் தவிர்த்தாள். பயணச்சோர்வு மீண்டும் அவள் கண்களைச் செருகச்செய்தது. இப்போது சுகோயின் தோளில் இடித்துக்கொண்டிருந்தது சற்றே கீழிறங்கி அவளது இடது மார்பில் இடித்தது. இம்முறை, அட்ரினலின் முழுவதுமாகப் பாய்ந்து அவளது சோர்வை விரட்டியது.  

சுகோயின் மிரட்சி, குழப்பம் அவற்றின் அடிப்படையில் அவளின் முகம் வெளிப்படுத்திய பாவனைகள், திரைக்கு அப்பால், அவளுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அரை நிர்வாண ஆணின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த தியோவுக்கு எதையோ புரியவைத்திருக்க வேண்டும். திரையினூடே சுகோயிற்கு என்ன நடக்கிறது என்பதைக் காண நேர்ந்தவள், அதில் தெரிந்த கல்மிஷத்தை உணர்ந்து தன் கவனம் முழுவதையும் சுகோயிடம் குவித்தாள். 

சந்தேகத்தின் அடிப்படையில் தனது கையிலிருந்து அலைபேசியின் காமிரா கண்களைத் திறந்து, அதனை சுகோயை நோக்கித் திருப்பிவிட்டு, எதுவுமே நடக்காதது போல் அரை நிர்வாண ஆணின் நடனத்தின் மீது  பார்வையைச் செலுத்துவது போல் நடித்தாள் தியோ. ஆயினும், அவளது ஓரக்கண் சுகோய் மீதே.

இப்போது, சுகோயின் இடது மார்பில் மீண்டும் இடிக்க, அதனை ஓரக்கண்ணால் கவனித்துவிட்ட தியோவுக்கு கோபம் வந்தது. அவள் சுகோயைப் பார்க்க, சுகோயோ லேசாகச் சிரிப்பது தியோவின் கோபத்தை இன்னும் பன்மடங்கு உயர்த்தியது. எல்லாவற்றையும் தனது அலைபேசியின் காமிராக் கண்கள் படமெடுத்துக்கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு, காட்சிகள்  நன்றாகப் பதிந்திருக்கிறதா என்பதையும் சரிபார்த்துவிட்டு,  “யாரது?  நாநாங் ரோந்து போலீஸை கூப்பிடுங்க” என்று கூவினாள்.

சட்டென எல்லோர் கவனமும் தியோ மேல் திரும்ப, “என்னம்மா என்னாயிற்று?” என்றபடியே வந்தது எடினா. 

“உன்னிடம் பேச என்ன இருக்கிறது? நீ போலீஸா? நான் போலீஸிடமே பேசிக்கொள்கிறேன்” என்றாள் தியோ தீர்மானமாக.

“அதெப்படி? என்ன நடந்திருக்கிறதென்று தெரியாமல் எப்படி  போலீஸை அழைப்பது? ” என்றது எடினா பொறுப்பாக.

“நான் எல்லாவற்றையும் என் மொபைல் காமிராவில் பதிந்து வைத்திருக்கிறேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. இந்த விண்வெளி யுகத்திலும் ஒரு பெண்ணுக்கு ஒன்றெனில் எல்லா பெண்களும் வருவார்கள்.” தியோ ஆவேசமாகக் கத்த, ஒரு கணம் அங்கே அமைதி. 

இதற்குள் நாநாங் விடுதியின் காப்பாளர் ரஜாக் வந்துவிட்டிருந்தார்.

“என்ன பிரச்சனை?” என்றார் அதட்டலாக. 

“நூற்றாண்டுகளுக்கு முற்காலத்தில் தான் பெண்கள் ஆண்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள் என்றால், பெண்களெல்லாம் தனியாக ஒரு கிரகம், ஆண்களெல்லாம் வேறொரு கிரகம் என்று பிரிந்து வாழும் இக்காலத்திலுமா அதே துன்புறுத்தல்கள்? இது பெண்கள் அதிகம் வரும் விடுதி.  இங்கும் பாலியல் துன்புறுத்தலென்றால்  நாங்கள் எங்குதான் போக?” என்றாள் தியோ.

சுகோயையும், அவளருகே நிற்கும் பர்தா பெண்ணையும் பார்த்துவிட்டு,

“இது பெண்கள் வந்து போகும் விடுதி. பெண்களுக்கானது. அப்படியானால், ஓரினச்சேர்க்கை என்று சொல்ல வருகிறீர்களா?” என்றார் ரஜாக்.

“மகளிருக்கென்று கேளிக்கை விடுதி என்று தனியாக வந்துவிட்டாலும் விட்டு வைக்கிறீர்களா? பெண்கள் வேடத்திலேயே பெண்களை உரச வந்தால் எப்படி?” என்று சிடுசிடுத்தாள் தியோ.

“என்ன நீ உன் இஷ்டத்திற்கு சொல்லிக்கொண்டே செல்கிறாய்? இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா?” என்றார் ரஜாக் முகத்தைக் கடுமையாக வைத்தபடி.

“இதைக் கேட்பீர்களென்று தெரியும் சார். இதைப்பாருங்கள்” என்ற தியோ தனது அலைபேசியில் அந்த சலனப்படத்தை வரவழைத்துக் காட்டினாள். எல்லோரின் கவனமும், இப்போது சுகோய் மீதும் அவளுக்கு அருகே நின்றிருந்த  முக்காடணிந்த பெண்ணின் மீதும் விழுந்தது. 

எல்லோரும் சுகோய் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்று அரைவட்டமாய்ச் சூழந்தார்கள். திரை முற்றிலுமாக ஒதுக்கப்பட்டது. 

“தியோ சொல்வது உண்மையா?” என்றார் ரஜாக், சுகோயிடம்.

“அப்படி ஒன்றும் இல்லை” என்ற சுகோய் வார்த்தைகளில் உண்மையில் அதிர்ந்தது தியோ தான்.

“ஏன் பொய் சொல்கிறாய்?  ஆண்களின் உரசல்களில் நரக வேதனையை அனுபவிக்கிற பெண்கள் எத்தனை பேர் கடந்த காலங்களில் இருந்திருக்கிறார்கள் என்று சரித்திரத்தில் நீ படித்ததில்லையா? இந்த விண்வெளி யுகத்தில் அதனை மீண்டும் அனுமதிப்பதாக இல்லை.  உன்னைப் போல் சில பேர் இதை ரசிப்பதினால் தான் சில ஆண்கள் இதை எல்லோருக்கும் செய்யப்போய் அப்பாவிப் பெண்கள் பலிகடாவாக வேண்டி வருகிறது. ” வார்த்தைகளை உணர்ச்சியின் வேகத்தில் கொட்டினாள் தியோ.

” நிறுத்து. இந்த இடத்தில் எனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக நான் நினைக்கவில்லை” என்றாள் சுகோய்.

“அதுதானே? அதை ரசிக்கத் துவங்கிவிட்டால் அது எப்படி துன்புறுத்தலாகும்?” என்றாள் தியோ இளக்காரமாக.

தொடர்ந்து தன்னுடைய அலைபேசியில் பதிந்திருந்த சலனப்படத்தை எல்லோருக்கும் போட்டுக்காட்டிவிட்டு, “பாருங்கள்! இவள் என்ன செய்திருக்கிறாளென்று நீங்களே பாருங்கள்.. ” என்றாள் தியோ தனது அலைபேசித் திரையை எல்லோருக்கும் உயர்த்திக் காட்டியபடி.

“இத்தனை நடக்கிறது.. இன்னும் என்ன முக்காடு வேண்டியிருக்கிறது?” என்று ரஜாக், பர்தாவைப் பிடித்து இழுக்க, பர்தா கழன்று ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. நீண்ட கருத்த தலை மயிர், வெளுப்பான சருமம், கருப்பு பேண்ட், சட்டை, இடுப்பைக் கச்சிதமாய்ப் பிடித்த பெல்ட், காலில் உயர் ரக காலணிகள் என்று கதா நாயகன் போல் இருக்க, “ஹோ”வென்ற இரைச்சல் பெண்கள் மத்தியில் எழுந்தது. 

“ஆம்பளை!” என்று சில பெண்களின் சன்னமான குரல்கள் ஒலித்தன. 

வெறுப்புற்ற சுகோய் சீற்றத்துடன் எழுந்தாள். 

“அடடா! கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதில் பெண்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை தான்” என்றாள் சலிப்புடன்.

“ஹ..மற்றவர்கள் முன் மானம் கப்பலேறுகிறதே என்கிற வெறுப்பா?” என்றாள் தியோ கேலியாக.

“பிரபஞ்சத்தில் என்னென்னவெல்லாமோ நடக்கிறது. எல்லாமும் அடுத்தவர்களின் விருப்பமில்லாமலா நடக்கிறது? உங்களுக்கு தொடர்பில்லையெனில் மூக்கை நுழைப்பானேன்? குரல் எழுப்ப வேண்டியது நான். நானே அமைதியாகத்தானே இருக்கிறேன். உனக்கென்ன?”

“ஆங்க்… உனக்குப் பிடித்திருக்கிறதென்று இப்படி நீ இருப்பாய். மற்றவன் நீ என்று நினைத்து மற்ற பெண்களிடம் முயற்சிப்பான்.. உன் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இதெல்லாம் ஏனைய பெண்களுக்கு விதிக்கப்படுகிறது. “.

“பிடித்திருக்கிறதென்று நான் சொன்னேனா?”

“பிடிக்காமல் தான் சிரித்தாயோ? நீ சிரிப்பதை நான் ஏற்கனவே என் அலைபேசியில் பதிவு பண்ணிவிட்டேன்”

சட்டென அந்த ஆணின் பேண்ட் ஜிப்பைக் கீழிறக்கி கையில் அகப்பட்டதைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுக்க, ஒரு ரப்பர் குழாய் கிழியும் சப்தத்துடன் ஒரு சிலிக்கான் ஆணுறுப்பு கையோடு வந்தது.

“இதற்கு சிரிக்காமல் வேறு என்ன செய்யச் சொல்கிறாய்” என்றாள் சுகோய்.

சுகோயின் கையிலிருந்த பொருளைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் சிரிக்க, சில பெண்கள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார்கள். தியோ அதிர்ந்து போய் சுகோயையும், ரஜாக்கையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றாள்.

நிலைமை தீவிரமடைவதை உணர்ந்து அங்கே ஓடி வந்தார் ஜேடி. அவசர அவசரமாக அங்கே கூடியிருந்தவர்களுள், தியோ, சுகோய், ரஜாக் ஆகியோரை ஒரு தனியறைக்குள் தள்ளிக்கொண்டு போனார்.

“ஜேடி, என்ன இது?” என்றாள் தியோ கொதிப்புடன்.

“மன்னியுங்கள். இந்த விடுதியே ஒரு தற்காலிக மற்றும் அவசர ஒருங்கிணைப்பு (setup) தான். விண்மின் கூட்டத்தின் இந்தப் பகுதியில் இருக்கும் கிரகங்களிலிருந்து வரும் பெண்கள் கேட்கும் எண்ணிக்கையிலான ஆண்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேரை வைத்து விடுதியை நடத்த வேண்டிய சூழல். ஆனால், இன்றைக்கென திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்தால், வரவுகள் திரும்பச் செலுத்த வேண்டி வரும். நான் அவற்றை செலவு செய்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. சுகோய் கேட்டிருந்தது ஒரு பிரத்தியேகக் காட்சி. ஆதலால்….” என்று ஜேடி இழுக்க,

“என்ன பிரத்தியேகக் காட்சி?” என்றார் ரஜாக் சுருங்கிய புருவங்களுடன்.

“இந்தப் பிரத்தியேகக் காட்சிக்கு வரவுகள் செலுத்தியிருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் தவறாக நடந்து கொள்வார்.  ஆணிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் செய்யப்படும் நிகழ்வு பெண்ணுக்கு நடக்கும்” என்றார் ஜேடி.

“என்ன!?” என்று அதிர்ந்தார்கள் தியோவும், ரஜாக்கும்.

” நான் இருக்கும் கிரகத்தில் பெரும்பான்மை பெண்கள் தான். எங்கள் கிரகத்திலேயே படித்து, அங்கேயே வேலை செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் எந்த ஆணுடனும் ஆயுசுக்கும் புழங்க வேண்டியதில்லை. ஆனால்,  அவர்களுக்குள்ளும் பணக்காரப் பெண்கள் இருக்கிறார்கள். இந்த உயர்தட்டுப் பெண்கள் தாம் தங்கள் கல்வித்தகுதிகளின் பலனாய், பிற கிரகங்களுக்கும், நிலாக்களுக்கும், விண்கற்களுக்கும் பணி நிமித்தம் செல்ல நேர்கிறது. அப்படி செல்ல நேர்கையில், அவர்களுக்கு ஆண்களுடன் பழக வேண்டி வருகிறது. ஆதலால், அவர்களுக்கு நல்ல/தீய தொடுகைகள், தவறான தொடுகைகள் குறித்தெல்லாம் பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. நான் அப்படிப் பாடம் எடுப்பவள் தான்” என்ற சுகோயை,

“அப்படி பாடம் எடுப்பவள் செய்யும் காரியமா இது? தவற்றைக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட கருவியே தவறு செய்வது போல” என்றாள் தியோ வெறுப்புடன்.

” நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கிரகங்களிலும், நிலாக்களிலும் தொடர்ந்து பணி நிமித்தம் சென்று வருவதால், உடல் அந்தந்த உலகங்களுடன் பொருந்திப் போகத் திணறுகிறது. நானும் வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்கிறேன் தான். பற்பல மட்டுறுத்திகள் (Suppressant) பயன்படுத்த வேண்டி வருகிறது. அவற்றின் கூட்டு விளைவால்  நினைவாற்றல் பாதிப்படைகிறது. பல விடயங்கள் மறந்துவிடுகிறது.  ஆதலால் தான் இது போன்ற இடங்களுக்கு வந்து, “பாலியல் அத்துமீறல்” அனுபவங்களைப் பெறுவதால் என் மறதியை, அதனால் ஏற்படும் நினைவிழப்பை, ஞான இழப்பை சமன் செய்துகொள்கிறேன்” என்றாள் சுகோய்.

“அப்படியானால் எங்கே தவறியது?” என்றார் ரஜாக், ஜேடியைப் பார்த்து.

“சுகோய் கேட்ட நிகழ்ச்சிக்கு பொருத்தமான ஆண் கிடைக்கவில்லை. ஆதலால், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, மனிதன் போன்றே இயங்கக்கூடிய ஒரு எந்திர மனிதனை வைத்து இந்த நிகழ்வைச் சமாளித்துவிடலாம் என்று எண்ணினேன். அதனால், எனது எந்திர மனித உதவியாளனிடம் கூடுதலாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன்” என்றார் ஜேடி தலையை குனிந்தபடி.

“பர்தா?”

“இது பெண்களுக்கான விடுதி. சுகோய்க்கான இடம், விடுதியின் பின் பகுதியில் இருக்கிறது. அதற்கு, முன்பகுதி வழியாகத்தான் வர வேண்டும். ஒரு ஆணாக நுழைந்தால், விடுதிக்கு வந்திருக்கும் ஏனைய பெண்களிடம் சிக்க வேண்டி வரலாம் என்று அந்த செயற்கை நுண்ணறிவு யோசித்திருக்கலாம். புதிய உத்தரவுகள் அதனுள் இருப்பதால், தன்னை சோதனைக்கு உட்படுத்தும் எதிலும் சிக்காமல் (Test Evasion) கடந்து போக அது நினைத்திருக்கலாம். பர்தா அணிவதன் வாயிலாக அச்சோதனைகளை எளிதாகக் கடந்துவிடலாம் என்று அது முடிவெடுத்திருக்கலாம்” விளக்கினார் ஜேடி.

“அது எந்திரம் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்றார் ரஜாக், சுகோயிடம்.

“நான் இந்த மாதிரி அனுபவங்கள் பலவற்றைப் பற்றிய காணொளிகளை பார்த்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறேன். முன்னூறு நானூறு வருடங்களுக்கு முன்னான உலகங்களில் இருபாலார் பயணிக்கும் பேருந்துகள் இருந்திருக்கின்றன. அவற்றில் எவ்வளவோ ஆண்களின் அத்துமீறல்கள் குறித்து டாகுமென்டரிக்கள் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பொண்ணிடம் அத்துமீறினால் அது எப்படி இருக்குமென்று என்னிடம் எண்ணிலடங்கா சிமுலேஷன்கள் (simulation) இருக்கின்றன. ஆண்கள் வசிக்கும் கிரகங்களுக்குச் சென்று அனுபவப்பட்டு என் அனுபவ அறிவைக் கட்டமைத்திருக்கிறேன். இன்று இங்கு நடந்தது  அப்படி இல்லை. அத்துமீறலின்போது ஒரு ஆண் செய்யும் எல்லாவற்றையும் அதுவும் செய்தது தான். ஆனாலும், ………” என்று இழுத்தவள், கொஞ்சம் திணறிவிட்டு, எதுவும் சொல்லத் தோன்றாமல்,  

“ஒரு பெண்ணுக்கு ஆணாக நடித்துத் தான் அத்துமீற வேண்டுமென்கிற அவசியம் இல்லை. அப்படியானால் இது பெண் இல்லை என்பது தெரிந்துவிட்டது. செய்த செய்கை, நோக்கத்துக்கு செயற்கையா இருந்தது. ஆக, இது ஆணும் இல்லை.  அப்படியானால் இது என்னவாக இருக்குமென்று யோசித்து தான் சிரித்துவிட்டேன்” என்றாள் சுகோய்.

“மனிதர்களுடைய பீதி, தர்க்கத்துக்குள் அடைக்க முடியாதது. ஒரு பீதியடைந்த முகத்தை ஒரு எந்திர மனிதனின் கண்கள் அறுதியிடத் திணரும்.  குழம்பும். ஏனெனில், மனித முகங்கள் எல்லாமும் ஒரே விதமானவை இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். தளம் அதிர்கிற டிஸ்கோ இசை. அதில் எப்போதுமே இருக்கிற ஒரு ஆட்டம், அதிர்வு. எந்திர மனிதனின்  உணரிகள் (sensors) அவ்வளவு துல்லியம் இல்லை. அதை வைத்து, ஒரு மனிதனின் எதிர்வினையை (reaction) அதனால் சரியாக அறுதியிட முடியாது. ரி-காலிபரேஷன் லூப் (re-calibration loop) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதிலேயே அது தேங்கும். அது ஒரு மனித இயக்கத்தைப் போலிருக்காது. மனித அட்ரினலினின் பகுத்தறிவின்மையை (irrationaliaty of human adrenaline) துல்லியமாக சிமுலேட் (simulate) செய்வது செயற்கை நுண்ணறிவுக்குக் கிட்டத்தட்ட முடியாத காரியம். இப்படி நிறைய சொல்லலாம். மொத்தத்தில், Molestation needs a human touch.”  என்றாள் சுகோய் தொடர்ந்து.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.