அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு
ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்றாலும் அதன் வரலாற்றைப் படித்தும் கேட்டும் அறிந்து கொண்டதை மிக அழகாக அமேசான் ப்ரைமில் ‘America: The Story of Us’ என்ற தொடரின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த வருடம் தன்னுடைய 250வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடும் நேரத்தில், நாட்டைப் பற்றி இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் ஈர்க்கக்கூடிய ஆவணத்தொடர்களில் ஒன்றான ‘அமெரிக்கா: நமது கதை’யை மீண்டும் பார்ப்பதற்கு இதைவிடச் சிறந்த தருணம் வேறில்லை. இது வெறும் ஆவணப்படம் அல்ல. ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். ஒரு காட்சிக்கால இயந்திரம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டை உருவாக்க முனைந்த மனிதர்களின் போராட்டக் கதையும் ஆகும்.

போர்கள், கண்டுபிடிப்புகள், இடப்பெயர்வுகள், புரட்சிகளின் ஊடாக, அமெரிக்கப் புரட்சியையும், அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரங்களையும் தொழிற்புரட்சியின் உருமாற்ற ஆற்றல்களையும் வரையறுக்கும் தருணங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் வெறும் தேதிகளையும் உண்மைகளையும் மட்டும் முன்வைக்காமல் வரலாற்றை மனிதாபிமானப்படுத்துகிறது.
உலகளாவிய பார்வையாளர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, உலக அரங்கில் அமெரிக்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் இருக்கிறது என்ற ஆழமான கேள்விக்கு இந்த ஆவணப்படம் பதிலளிக்கிறது. காலனிகளின் ஒரு குழு எப்படி ஒரு உலக வல்லரசாக மாறியது? புதுமையும் லட்சியமும் அதன் கலாச்சாரத்தில் ஏன் ஆழமாக வேரூன்றியுள்ளன? அதன் உள்நாட்டுப் போராட்டங்கள் உலக வரலாற்றை எப்படி வடிவமைத்தன? என இந்தத் தொடரின் மூலம் அமெரிக்கா என்றொரு தேசம் எங்கிருந்து தொடங்கியது, எப்படி வளர்ந்தது என்று விளக்குகிறது.
குடியேறிகளுக்கு, இந்தத் தொடர் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அதன் சாராம்சத்தில், அமெரிக்கா என்பது குடியேறிகளின் நாடு. இந்த ஆவணப்படம், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த மக்கள் அலை அலையாகத் தேடி வந்ததைச் சித்தரிக்கிறது. வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் தேடி புலம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கனவைத் தொடரவும் கட்டியெழுப்பவும் வாய்ப்புகள் தரும் நாடாக ஒரு உலகளாவிய உண்மையைப் பிரதிபலிக்கிறது.
மேலும் இந்தத் தொடர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டாமல் போராட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், மோதல்களையும் காட்டுகிறது. அந்த நேர்மையே தொடரை இன்னும் வலிமையாக்குகிறது. ‘அமெரிக்கா: தி ஸ்டோரி ஆஃப் அஸ்’ ஆவணத்தொடரை உண்மையிலேயே மறக்க முடியாததாக ஆக்குவது அதன் கதை சொல்லும் பாணிதான். திரைப்பட பாணியிலான மீள்நிகழ்வுகள், நிபுணர் கருத்துரை, உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லல் மூலம் இது ஒரு ஆவணப்படம் போலத் தோன்றாமல், வரலாற்று நிகழ்வுகளை அனுபவப்பூர்வமாக உணர வைக்கிறது.

முதல் அத்தியாயத்திலிருந்தே இந்தத் தொடர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, “அமெரிக்கா என்றொரு நாடு பாரம்பரிய அர்த்தத்தில் ‘கட்டப்படவில்லை’ – அது உருவாக்கப்பட்டது” என்பதுதான். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசை எதிர்க்க சாதாரண மக்கள் ஒரு அசாதாரணமான முடிவை எடுக்கும் அமெரிக்கப் புரட்சியின் குழப்பங்களுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. சரியான காலணிகள் இல்லாத, உறுதியான எதிர்காலம் இல்லாத, நம்பிக்கை மட்டுமே உள்ள வீரர்களின் பயத்தின் ஊடே “சுதந்திரம் அறிவிக்கப்படுவதில்லை, அது துணிந்து எதிர்கொள்ளப்படுகிறது”என்ற உணர்ச்சிப்பூர்வமான மையக்கருவுடன் துவங்குகிறது தொடர்.
வெற்றி என்பது கொண்டாட்டம் போல வருவதில்லை. அது தியாகம், பசி மற்றும் சந்தேகத்துடன் வருகிறது. தங்களால் தப்பிப் பிழைக்க முடியுமா என்ற உறுதியற்ற நிலையில் இருக்கும் ஒரு தேசத்தின் பலவீனமான பிறப்பை இரண்டாவது அத்தியாயம் படம்பிடித்துக் காட்டுகிறது. சுதந்திரக் கனவு, பணமில்லை, நிலைத்தன்மை இல்லை, ஒருங்கிணைந்த அடையாளம் இல்லை என்று யதார்த்தத்துடன் மோதினாலும் தர்க்கத்திற்கு எதிரான நம்பிக்கை எனும் சக்திவாய்ந்த ஒன்று உருவாகத் தொடங்குகிறது. ஒரு தேசம் என்பது போர் முடிவடையும்போது பிறப்பதில்லை. மாறாக, மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்கும்போது பிறக்கிறது என்பதைக் காட்டுகிறது இந்த அத்தியாயம்.
கிழக்கில் துவங்கிய கதை மெதுவாக நிலம், வாய்ப்பு, தலைவிதியைத் தேடி மேற்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிமையானதல்ல. அறியப்படாத நிலத்திற்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கும் குடும்பங்கள், பூர்வகுடி சமூகங்களின் அழிவும் இடப்பெயர்ச்சியும், வாழ்வாதாரத்திற்கும் லட்சியத்திற்கும் இடையிலான கட்டுக்கடங்காத, அடக்கப்படாத போராட்டம் என்று இந்த அத்தியாயம் முன்னேற்றம் பெரும்பாலும் வலியுடன் வருகிறது என்ற கடினமான உண்மையை எதிர்கொள்ள வைக்கிறது. கனவுகளால் தேசங்களைக் கட்டியெழுப்பவும் முடியும், வாழ்க்கையையும் சிதைக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் என்பது வெறும் போர் மட்டுமல்ல. அது சகோதரனுக்கு எதிராக சகோதரன், அரசுக்கு எதிராக அரசு, மனிதகுலம் தனக்கு எதிராகவே என ஒரு குடும்பம் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டதாகும். அடிமைத்தனம் என்னும் புறக்கணிக்க முடியாத பிரச்சினையும் இதன் மையத்தில் உள்ளது. இந்த அத்தியாயம் போரை மகிமைப்படுத்தவில்லை. ஆனால் ஒரு தேசத்தின் மிகப்பெரிய பலமே அதன் ஆழமான பிளவாகவும் இருக்கக்கூடும் என்பதை அம்பலப்படுத்துகிறது.
உள்நாட்டுப் போர் அதன் உச்சத்தை அடைய, அதன் அழிவின் மத்தியில், ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. மக்களிடையே சுதந்திரம் குறித்த கருத்து விரிவடைகிறது. அடிமைத்தனத்தின் முடிவு ஒரு அரசியல் மாற்றத்தை மட்டுமல்ல, ஒரு தார்மீகப் பரிணாம வளர்ச்சியையும் குறித்தாலும் அதன் வடுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. உடல்ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மீள்கட்டமைப்பு தொடங்குகிறது. அதன் விளைவுகள் அமெரிக்காவை என்றென்றைக்குமாக மாற்றியமைக்கின்றன.
போருக்குப் பிறகு மறுகட்டமைப்பு வருகிறது. இரயில் பாதைகள் நாடு முழுவதும் நீண்டு நகரங்கள் புழுதியிலிருந்து எழுகின்றன. தொழிற்புரட்சியின் போது தொழிற்சாலைகள் கர்ஜித்து உயிர்பெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு எஃகு உத்திரத்திற்கும் ரயில் பாதைக்கும் பின்னால் தொழிலாளர்கள், குடியேறிகள், மறக்கப்பட்ட கரங்கள் என இந்த அத்தியாயம், வியர்வையாலும் தியாகத்தாலும் அமெரிக்காவைக் கட்டியெழுப்பியவர்களைப் போற்றுகிறது. ஒரு தேசத்தின் வலிமை, அதைக் கட்டியெழுப்பும் கரங்களில் அடங்கியுள்ளது என்பதை நினைவுறுத்துகிறது.
மறுகட்டமைப்பில் வானுயரக் கட்டிடங்கள் வானத்தைத் தொடுகின்றன. மின்சாரம் இரவை ஒளிரச் செய்கிறது. கனவுகள் பெரிதாகி அமெரிக்கா ஒரு நகர வல்லமைமிக்க சக்தியாக உருமாறி வருகிறது. அதே நேரத்தில் செல்வமும் வறுமையும், வாய்ப்புகளும் போராட்டங்களும் என நகரங்கள் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்துகின்றன. குடியேறிகள் நம்பிக்கையைச் சுமந்து கடுமையான யதார்த்தங்களை எதிர்கொண்டு நகரங்களுக்குள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.
கார்கள், தொழிற்சாலைகள், பெருமளவு உற்பத்தி என அமெரிக்கா முன்னேற்றத்தின் இயந்திரமாக மாறுகிறது. ஹென்றி ஃபோர்டு போன்ற ஆளுமைகள், மக்கள் வாழ்க்கையையும் பணிபுரியும் விதத்தையும் மறுவரையறை செய்கிறார்கள். செல்வம் குவிகிறது. அமெரிக்கக் கனவு வளர்கிறது. கூடவே அதன் விலையும் அதிகரிக்கிறது. வளர்ச்சியுடன் சமநிலையின்மையும் வருகிறது. முன்னேற்றம் ஒரு தேசத்தை உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது அந்நாட்டை நிலைகுலையவும் செய்யும் என்று எடுத்துரைக்கிறது எட்டாவது அத்தியாயம்.
கனவு சிதைகிறது. பெரும் மந்தநிலை(Great Depression) விரக்தியைக் கொண்டுவருகிறது. வேலைகள் பறிபோகின்றன. குடும்பங்கள் துன்பப்படுகின்றன. நம்பிக்கை மங்குகிறது. ஆயினும், இங்குதான் அமெரிக்கா தன்னுடைய மீள்திறனை வெளிப்படுத்துகிறது. மக்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். உண்மையான வலிமை என்பது வெற்றியில் வெளிப்படுவதில்லை, மாறாக உயிர் பிழைப்பதில் வெளிப்படுகிறது என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது ஒன்பதாவது அத்தியாயம்.
வெற்றி என்பது ‘தலைமைத்துவம்’ என்றொரு புதிய சவாலையும் எதிர்கொள்கிறது. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுக்கிறது. தொழில்நுட்பம் முன்னேறுகிறது. செல்வாக்கு விரிவடைகிறது. கூடவே பதற்றங்கள் அதிகரித்து உள்நாட்டில் குடிமை உரிமைகளுக்காகப் போராட்டங்கள் தொடர்கின்றன. உலகத்தை வழிநடத்தினாலும் இந்தக் காலக்கட்டத்தில் தான் தேசம் தனது சொந்த முரண்பாடுகளை எதிர்கொள்கிறது.
இறுதி அத்தியாயம் நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறது. தொழில்நுட்பப் புரட்சிகள் முதல் செப்டம்பர் 11 தாக்குதல்கள் போன்ற துயரமான தருணங்கள் வரை, அமெரிக்கா தொடர்ந்து பரிணமித்து வந்திருக்கிறது. தற்பொழுது நாமும் இந்த அத்தியாயத்தின் அங்கத்தினர்களாகிவிட்டிருக்கிறோம். ஒரு தேசத்தின் மிகச்சிறந்த அத்தியாயம் என்பது, எப்போதும் இன்னும் எழுதப்படவிருக்கும் அத்தியாயமே ஆகும் என்று இந்த அத்தியாயம் நமக்கு ஒரு சக்திவாய்ந்த உண்மையை உணர்த்தி நிறைவடைகிறது.
அமெரிக்கா என்றதும் அதன் மீள்திறன், பன்முகத்தன்மை, தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் வேரூன்றியுள்ளது என்பதே இன்று அடையாளமாக உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு, அதன்பின் முன்னேறிச் சென்றுள்ளது.
அமெரிக்கர்களுக்கு, இந்தத் தொடர் ஒரு கண்ணாடியாக, இன்று அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்தவை. எளிதாகப் பெறப்பட்டவை அல்ல என்று நினைவூட்டுகிறது.
நாடு தனது 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தத் தொடர் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, ஒரு சுயபரிசோதனைக்கான புள்ளியாக பரிணமிக்கிறது.நாட்டின் கதை இன்னும் எழுதப்பட்டு வருகிறது. அதன் சவால்களும் மனவுறுதியும் இன்னும் முடிவடையவில்லை. பல வழிகளில், இந்த ஆண்டுவிழா என்பது கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல, “அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்கா எத்தகைய தேசமாக இருக்கும்” என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
மேலும், ஒரு நாடு அதன் கடந்த காலத்தால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை; மாறாக, கற்றுக்கொள்ளவும், தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவும் உள்ள அதன் திறனால் வரையறுக்கப்படுகிறது.
அமெரிக்கா என்பது வரைபடத்தில் இருக்கும் ஒரு நாடு மட்டுமல்ல; அது தீயில் சோதிக்கப்பட்ட துணிவின் பெயர். தோல்வியில் கூட விடாமல் பிடித்துக் கொண்ட கனவின் பெயர்.
இந்தக் கதை முடிவடையவில்லை. ஒவ்வொரு குடியேற்றவாசியின் நம்பிக்கையிலும், ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், ஒவ்வொரு தலைமுறையின் போராட்டத்திலும் இது இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான், இந்தத் தொடர் கடந்த காலத்தை மட்டும் பேசவில்லை.
“நீங்கள் எங்கிருந்து வந்தவராக இருந்தாலும்,
இந்தக் கதையில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது”
என்று எடுத்துரைக்கிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
