
சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது காற்றில். அவர் முகத்தில் பதினெட்டு நாள் தாடி. விழுந்தவை, பாதி உடைந்தவை, பிடுங்கப்பட்டவை போக மிச்சம் பதினெட்டுப் பற்களே இருந்தன செம்பவள வாயினுள். அவையும் நடை தள்ளம்பாடி, கூன் முதுகிட்டு, விலா எலும்புகள் தெறிக்கும் கிழடுபோல் மூத்துக் கிடந்தன. பற்கள் முந்திப்போமோ கும்பமுனியின் ஆவி முந்திப் போமோ என்பதனைப் பாற்கடலில் ஆதிசேடன்மீது அமர்ந்தவனோ அல்லது கற்றை வார் சடைமீதும் கழுத்திலுமாய்ப் பொங்கரவம் பூண்டவனோ அறிவான்! அப்படியும் அறுதியிட்டு உரைத்திட ஒக்காது! தற்கால மரணங்கள் தென்திசைக் கிழவன் யமதர்மனுக்கே எவ்வித முன்னறிவிப்பும் இன்றியே சம்பவிக்கின்றன. இந்த சம்பவம் என்பது நீங்கள் அறிந்த ‘சம்பவம் செய்தான்’ எனும் தொடரில் வரும் சம்பவம் அல்ல. அந்த சம்பவத்தை யாம் குறிக்க நேர்ந்தால் சம்போகம் என்றே மொழிவோம்! வெட்டுவதற்காகக் கூண்டினுள் கிடக்கும் வெள்ளை லகான் கோழிகளில் அறுப்பவன் கைக்கு எது முந்தும் என்று யாரே அறிவார்? உரித்த கறிக்கோழி கிலோ இருநூற்று நாற்பது பணம் என்ற கணக்கில்தான் மனித உயிர்களும் நடந்தும் வாகனங்களில் பறந்தும் திரிந்தன.
‘கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே’ என்றார் திருமூலர். நடக்கப் போனார் விழுந்து ஒழிந்தாரே என்று சொல்லலாம் இன்று! எண்ணி உள்ளுக்குள் குறுநகை, மென்னகை, இளநகை புரிந்தார் கும்பமுனி.
‘‘அப்படி என்ன உள்ளுக்குள் ஆனந்த அனுபூதி?’’ என்று கேட்டுக்கொண்டே கைநீட்டிக் கட்டன் சாயாவை கொடுத்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. இலஞ்சப்பணம் கைப்பற்றும் அரசு ஊழியரைப் போல அலட்சியமாக வாங்கிக் கொண்டே கும்பமுனி கேட்டார்.
“இண்ணைக்குக் காலம்பற திங்கதுக்கு என்னத்த ஓய்?”
“என்ன பீட்சாவும் பர்கருமா? தோசைதான்”
“எளவு எந்நாளும் தோசக்கிழமையா? அவுலு வெரவும்…”
“அவுலு தீந்து போச்சு… ரெண்டு நாளா அவலுக்காரக் கெழவியைத்தான் தேடுகேன்…”
“அப்பம் ரவை உப்புமா கிண்டும்”
“உப்புமாண்ணா சோசியல் மீடியாவுலே ரொம்பக் கேவலமா ஜோக்ஸ் போடுகானுகோ பாட்டா…”
“அவுனுகளுக்கு என்னவே? முட்டிலே பசி! தினசரி புளிச்ச பழையது பத்தும் தண்ணியுமா காந்தக் கூடியவனுக்கு ரவை உப்புமாண்ணா விருந்துல்லா ஓய்? முன்னால எல்லாம் கலியாணத்துக்கு மறுநாள், ஏழாநீர் சடங்கு அண்ணைக்குக் காலம்பறதான் ரவை உப்புமா கிண்டுவா… தொட்டுக்கிட பஞ்சாரை – மிச்சம் கெடக்கப்பட்ட பாளையங்கோட்டன் பழம்… ஏதாங் கெழடு கட்டை மூச்சு விட்டுட்டுண்ணா, பகலெல்லாம் போட்டு வச்சிருந்து, வௌக்கு வக்கதுக்கு முந்தி, பாடையிலே ஏத்தி மயானக்கரைக்குக் கொண்டுகிட்டுப் போன உடனே வீட்டைக் கழுவி விட்டுக் குளிச்சு, பகலெல்லாம் பட்டினி கெடந்தவனுக்கு பசியாத்த கிண்டிக் குடுப்பது ரவை உப்புமாதானே! வீட்டுலே மாசத்துக்கு ஒருக்க கிண்டுனா அலுசுவம். அதையும் சில பயக்கோ நிக்கர் பாக்கட்டிலே போட்டுத் திண்ணுக்கிட்டுத் திரிவான் பாத்துக்கிடும்…”
“என்னதான் உண்டும், நிக்கர் பாக்கெட்லே போடாதது… தோசை, அடை, கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, புளித்தண்ணி தாளிச்ச சோறு, உளுந்தங்களி, கொழுக்கட்டை…”
“பின்ன என்னவே? நம்ம காலத்திலே பூரி, சப்பாத்தி, பரோட்டா ஒண்ணும் கெடையாதுல்லா?”
“அந்தால தொடங்கீராதேயும்… சரி சரி… உம்ம இஸ்டத்துக்கு ரவை உப்புமாதான் இண்ணைக்கு… மன சமாதானத்தோட இரியும்… சும்மா இருக்கப்பட்ட நேரத்திலே சாதி ஒழிப்புக்கு அரசியல் கட்சிகள் ஆற்றிய பணி அப்பிடீண்ணு ஒரு கட்டுரை எழுதும்…”
“அதுக்கு ஏகப்பட்ட பேரு நாட்டுலே உண்டுவே… நல்ல சம்பளமாக்கும் கேட்டேரா? சதையுள்ள எடம்னா கத்தி எறங்கும்… ஆனா உமக்கு பர்கர், பீட்சா, சவர்மாண்ணு என்னத்துக்கு பொத்துக்கிட்டு வருகுவே?”
“கோவம் என்னத்த கோவம்? பங்காரமான சாப்பாடுண்ணு சொன்னா உமக்குத்தான் வௌம் ஏறி அடிக்கு…”
“நில்லும்வே! நான் ஒரு காரியம் கேக்கட்டும்… இத்தாலி, சீனா, ஜப்பான், அரேபியா, அமெரிக்கா, மெக்சிகோ, பிரான்சு உணவை எல்லாரும் சிலாகிச்சுப் பேசுகா… தப்பில்லே… ஆனா நம்ம இலைப்பணியாரத்தை, சினை இட்டிலியை, வெந்தயக் காடியை, மாம்பழப் புளிசேரியை, சர்க்கரைக் கொழுக்கட்டையை, சுசியனை, ரசவடையை எந்த நாட்டுக்காரனுக்காவது தெரியுமா? எவனாவது செஞ்சு விக்கானா? எவனாவது அதைப்பத்தி எங்கிணயாம் பேசுகானா? சும்மா போட்டுப் பீத்தப்பிடாது! வெள்ளக்காரன் பேண்டா அது புனுகாவே உமக்கு?”
“எதுக்கு காலம்பற கெடந்து இப்பிடிப் பெடங்கி அடிக்கேரு பாட்டா?”
“உங்களுக்கெல்லாம் சொன்னா மனசிலாகாதுவே! கொப்புளை அறுக்கச் சொன்னா எல்லா பயக்களும் சக்கரையை அறுக்கதுக்கு நிப்பான்… நான் சொல்லுகதை விசனப்படாமக் கேளும் என்ன!
வே! நாம கேரளத்துக்குப் போனா – புட்டு பயறு, பப்படம், புட்டு பழம், புட்டு கடலைக்கறி, ஆப்பம் தேங்காப்பாலு, நூலுப்புட்டு புளிசேரி, பத்திரி முட்டைக்கறி, கப்பை புழுங்கியது, கரிமீன் பொள்ளிச்சது, அவியல், எரிசேரி, புளி இசி, பழம்பூரி, பாலடைப் பிரதமன், சக்கைப் பிரதமன், ஏத்தம்பழம் பிரதமன்…
ஆந்திரா போனாக்க பெசரட், புனுகுலு, வங்காய் குழம்பு, சாம்பார் வடா, கேசரி, போகாதோகா, தக்காளி பப்பு, மூங்டால் லட்டு, தத்தோஜனம், அம்லாகா அச்சார், உருத் டால் லட்டு, ஒப்பிட்டு, கோங்குரா பச்சடி, பூர்ணம் பூரெலு, பானக்கம், பெண்டக்காய் வெப்புடு, அவகாய, குட்டி வெங்காய கறி, ஜவ்வரிசி பாயஸம், மிரா பக்காய பஜ்ஜி, அல்லம் பச்சடி…”
‘‘இண்ணைக்கு உப்புமா கிண்டுன மாதிரிதான்” என்று மனசுக்குள் முனங்கினார் தவசிப்பிள்ளை.
“புறுபுறுக்காம கேளும்வே… கர்நாடகா போனாக்க மைசூர்பாக், தார்வாட பேடா, பிஸிபேலா பாத், ராகி முட்டை, ஒப்பட்டு, கேசரி பாத், பெல்காம் குன்டா, கர்ஜிகாய், கஸ கஸ பாயஸா, பேசன் லாடு, சிரோட்டி, ரவா உண்டை, காசி ஹல்வா, மனோகரா, பெனி…
ஒடிஸா போனேருண்ணா… பக்காலா பாட்டா, டால்மா, குப்சுப், செண போடா, மச்சா காண்டா, ரஸபாலி, பித்தா, சுங்டி மலாய், ரஸகுல்லா, காஜா, கொரக்காய்…”
“பண்டு அரசியல் கூட்டங்கள்ளே நூறு பூவுக்குப் பேரு வரிசையா மனப்பாடமாச் சொல்லி – அதென்ன குறிஞ்சிப்பாட்டா முல்லைப்பாட்டா – மந்திரியான மாதிரியில்லா அடுக்கீட்டே போறேரு” என முயக்கப் புறுபுறுப்புச் செய்தார் தவசிப்பிள்ளை.
“வாயை மூடீட்டுக் கேளும்வே… பேண்ட நாய்க்கி குண்டி மாதிரி முகத்தைச் சுளிக்கப்பிடாது கேட்டேரா? மராத்திய மாநிலம் போனா ஆலூ போஹா, பட்டாட்டா வடா, சாடிதானா கிச்சடி, டால் தட்கா, உசர் பாவ், மிசல் பாவ், டால் போளி, பாக்கி, கரஞ்சி, 1965-க்குப் பெறகு வடாபாவ்…
கோவா பக்கம் மதுவுக்கு காஜு பென்னி, திங்கதுக்கு போர்க் விண்டாலு, கட்கட்டே, தொண்டர், கட்லெட் பாவ், சோகிங் பாவ், பால்ச் சாவோ…
குஜராத் போனா தஹி கடி, கிச்சடி, டால், ரொட்டி, டால் டோக்ளா, தேப்னா, கண்ட்வோ, டால் சாவல், பாப்டி, ஷாக், உத்தியு, ஃபாஃடா – ஜிலேபி, பாஜ்ரா ரொட்லா…
தவசிப்பிள்ளை – “பொளந்தது போ…”
கும்பமுனி – “ராஜஸ்தான் போனேருண்ணா மார்வாரி தீவனம்… தால் பாட்டி சுர்மா, லால் மாஸ், கட்டேரி சப்ஜி, மிர்ச்சி வடா, கச்சோரி, கேர் சங்கி, கட்டே கி கிச்சடி, பஜ்ரா ரொட்டி, பஞ்ச்மெல் தால், மலாய் கேவார், சுர்மா லாடு, சஃபேஜ் மாய், பித்தோரே, ஆலூ புலாவ், மூங் டால் ஹல்வா…”
தாங்க முடியாத வெப்ராளமும் வேவலாதியும் ஆங்காரமுமாகக் கிளர்ந்து வந்தது தவசிப்பிள்ளைக்கு. ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் போல் புரட்சி பொங்கியது. சம்பளத்துக்கு அறைகூவல் விடும் அரசியல் மேடைப் பேச்சாளர் போலக் கழுத்து நரம்புகள் தெறிக்கக் கையுயர்த்திக் கூக்குரல் எழுப்பினார்.
“போரும், நிறுத்தும்… சீமந்தத்துக்குப் பொங்கிப் பொரிக்கச் சொன்ன நீரு கல்லெடுப்பு அடியந்திரத்துக்கு அரிசி வைக்கப் பாக்கேரு… சாகப் போற காலத்திலே இந்த நொறுநாட்டியம் என்னத்துக்குப் பாட்டா… இதுக்குத்தான் சின்னப் பயக்கோ சாவகாசம் வேண்டாம்ங்கறது… எழவெடுப்பான் நாஞ்சில் நாடன் கூட சரிசமமா உக்காந்து பேசினப்பவே நெனச்சேன்… அவன் என்னவோ நாஞ்சில் நாட்டு உணவுண்ணு ஒரு புஸ்தகம் எழுதீட்டானாம்… அதுக்கு அரசு வேற சிறந்த நூல்ணு அம்பதினாயிரம் விருது குடுத்திருக்கு… எப்பிடி சாமர்த்தியசாலியா இருக்கான் பாத்தேரா? ஒரு பக்கம் கட்டுரையிலே நெத்திக் கண்ணைத் திறந்தாலும் குத்தம் குத்தமேண்ணு கொழுப்பெடுத்து எழுதுகான்… மறுவசம் அவார்டும் அடிச்சு மாத்தத் தெரிஞ்சிருக்கு… நீரு அவங்கூட கூட்டணி வச்சுக்கிட்டு என்னை சூர சங்காரம் செய்யேரு… நான் என்ன அடைக்கோழியா பாட்டா?” மூசுமூசென்று இரைந்தார் கண்ணுபிள்ளை.
கும்பமுனியும் கோபமுனி ஆனார். எலும்பும் தோலுமான உடலில் வைரவன் சாமி இறங்கினாற்போல் கூவினார்.
“உமக்கெல்லாம் மூலக்காந்தலுவே… அவன் எழுதினா நாஞ்சி நாட்டு வெள்ளாளத் தீவனம் என்பீரு… ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்கு அலைகிறான் என்பீரு… பீடம் தெரியாம சாமி ஆடப்பிடாது சொல்லுகதை முழுசாக் கேளும…”
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மிச்சமிருந்த கட்டன் சாயாவை ஒரே மடக்கில் உறிஞ்சிவிட்டுத் தொடர்ந்தார்.
“வங்காளத்துக்குப் போனா அங்கே காளி கோயிலும் ஹௌரா பாலமும் தாமோதர் நதியும் டிராமும் சாந்தி நிகேதனும் மட்டும் இல்லே! நம்ம தூக்கி வீசப்பட்ட வில்வம் பழத்திலே அவன் ஜுஸ் போட்டு விக்கான். நாப்பது வருசத்து மிந்தி மொதன்மொதல்லே மனசில்லாமக் குடிச்சேன்… குடிச்சுத்தான் பாப்பமேங்கிற தைரியத்திலே! அவனுக உணவும் ஸ்பெஷல்தான்வே… ஆலூ போஸ்தோ, சிங்கிரி சந்தேஷ், பெருணி, ரஸ்மலாய், லுச்சி, பண்டா பாத் புலாவ், ஜால்முரி, சாப், பேட் கி மச்சர், பட்டூரி, லாவ் கோண்டோ, மோச்சர் கோண்டோ, ஆலூர் டாம், முழு உளுந்திலே டால் செய்து அதிலே முழு அயிலை மாதிரி குளத்து மீனைப் பொரிச்சு மிதக்கவிட்டுத் தந்தானுகவே…”
தவசிப்பிள்ளைக்கு வயிற்றைக் கலக்கியது. கட்டில் பீ எல்லாம் காடிப் பீ ஆகிவிடுமோ எனும் அச்சம். சற்று அசௌகரியமாக நெளிந்தார். கும்பமுனியும் சாதி மத இன ஆதாயங்களுக்காக இலக்கிய அப்பியாசம் செய்யும் ஆளாகி விட்டாரோ என மாய்ச்சல் பட்டார்.
எதையும் பொருட்படுத்தாமல், மக்கட் பணி ஆற்ற எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆகாமல் தீராது என்பதுபோல் கும்பமுனி தொடர்ந்தார்.
“உத்தர் பிரதேஷ் போனேருண்ணு வச்சுக்கிடும் – முர்க் முசல்லம், கச்சோடி, பூரி – சப்ஜி, மட்டர் கி நிமோஜி, பேடா, ஷாஹி துக்டா, குலாப் ஜாமுன், தஹிவாலே ஆலூ, ரேஷ்மிகெபாப் காவுட்டி கெபாப், லிட்டி சோக்கா, மலாய் மக்கன்…” என்று சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் கும்பமுனி.
“பீஹார் ஏன் விட்டுட்டேரு?” என இளக்காரமாய்க் கேட்டார் தவசிப்பிள்ளை.
“இரும் வாறேன்… அங்க எல்லாம் சமையல் கடுகு எண்ணெய் கேட்டேரா? கடி பாரி, லிட்டி சோக்கா, காஜா, சனை ஃபூல் கே பகோடா, சனா குக்னி, சந்திர கலா, சாட்டு பராத்தா, மால்புவா, ஆலூ பர்வால், பூஜா, சாத்பூஜா, பலூ ஷாஹி, மக்கானா கி கீர், அனார்ஸா, நைவேத்யம், பர்வர் கி மித்தாய்…
சரி கெடக்கட்டும்… காஷ்மீரும் இந்தியாவிலேதானே இருக்கு? எதுக்கு விடணும்? ரோகன் ஜோஷ், கோஷ்டபா, டம் ஆலூ, மொதுர் புலாவ், பாக்கர் காளி, யாக்னி, ரிஷ்தா, மேத்தி மாய், நதுர் யாக்னி, சமன் காலியா, கஷ்மீரி ராஜ்மா, கஷ்மீரி புலாவ், கிர்தா, மசாலா ச்சாட்…
தவசிப்பிள்ளை ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பர் அடிகளின் மனநிலையைச் சேர முயன்றார். அல்லது சச்சிதானந்த சித்பவானந்த முக்தானந்த அத்வைத துவைத விசிஷ்டாத்வைத பாவனையை
“பண்டிதரும் கைவிட்டார் பத்தியமும் தீர்ந்தது யான்
உண்ட மருந்தால் குணமோ ஒன்றுமில்லை”
என்று கவிமணி இரங்கி ஏங்கியது நினைவில் ஆடியது அவருக்கு. அபிராமிப் பட்டர் பாடியது போல் –
“நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உளதென்று அறிந்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!”
என்று பாடத் தோன்றியது தவசிப்பிள்ளைக்கு.
தூரத்தில் முற்றத்து வேலியில் நின்ற தங்க அரளி, கருநொச்சி, வேலிப்பருத்தி, காட்டு ஆமணக்கு செடிகளில் புகுந்து ஓடிய தெண்டல் ஒன்று கும்பமுனியை அவதானித்தவாறு இருந்தது. கும்பமுனி திரும்பி தவசிப்பிள்ளையைப் பார்த்து, “சரிவே! போயி ரவை உப்புமா கிண்டிக் கொண்டாரும்… கோவத்திலே பச்சை மொளகாய்க்குப் பதில் காந்தாரி மொளகா அரிஞ்சு போட்டு விடாதேயும்…” என்றார்.
“ஒமக்கெல்லாம் காந்தாரி மொளகாயை நல்ல மசிய அரச்சு மூலத்திலேயும் புடுக்கிலேயும் தடவுனாத்தான் சரியாவேரு!” என்று நெஞ்சத்தில் வஞ்சமுடன் கறுவி நடந்தார் தவசிப்பிள்ளை.
மீண்டும் நினைவுச் சுழலில் சிக்கி உள்ளிழுக்கப்பட்டு மனம் கும்பமுனியைக் கொண்டு நிறுத்தியது திருமந்திரப் பாடல் ஒன்றில்
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே!”
என்று ஓடியது உட்புகுந்த சோதி. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றனர். இன்று மூடரை மூடரே காமுறுவர்!
‘யாரைச் சொல்லி என்ன பயன்?’ என்றும் எண்ணிக் கொண்டார்.
உயர்ந்த அரசு ஊழியர்கள் கைகாரியம் செய்ய ஆறாண்டுகள் இலட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்றுத் தேறும் பலருக்கும் தெரியுமா கோழியவரை, பாடவரை, சீனியவரை, பீர்க்கு, சுரை, புடலை, இளவன், பூசணி, வழுதுணை, கண்டங்கத்திரி, சுண்டைக்காய் என்னென்ன என்பது? நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர் பலருக்கும் கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பிடிகிழங்கு, காய்ச்சில் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, சீனிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, கூர்க்கன் கிழங்கு வேறுபாடு தெரியுமா? ஆனால் கண்டிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி அறிந்திருப்பார்கள். நூல்கோல், சௌசௌ, முட்டைக்கோஸ், பூக்கோசு, புருகோலி அடையாளம் தெரியலாம்!
பாலக் பன்னீர், ஆலூ பாலக், ஓட்டல்களில் தின்று பழகி இருப்பதனால் பாலக் எனும் கீரையை ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், தமிழ் மக்களைத் துறக்கப் பேரரசுக்கு வழிநடத்தும் வர்க்கம் அறிந்திருக்கும்.
ஆனால் கொடுப்பைக்கீரை, கரிசலாங்கண்ணி, வல்லாரை, அரைக்கீரை, தண்டங்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, காட்டுக்கீரை, நொய்யக் கீரை, பசலிக்கீரை, வள்ளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, ஆலங்கீரை, குப்பைக்கீரை, அறிய மாட்டார். பிரண்டை, குட்டித்தக்காளி அல்லது மணத்தக்காளிக் கீரை கேட்டிருப்பாரோ எந்தோ!
அபிராமி அந்தாதி பேசும், ‘மாதுளம் பூ நிறத்தாளை’ என்ற சொற்றொடரைப் புரிந்துகொள்ள மாதுளம் பூ பார்த்திருக்க வேண்டாமா?
‘‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்’’
எனும் ஆண்டாள் திருப்பாவையில் செங்கழுநீரும் ஆம்பலும் அறிவதெப்படி?
“அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇம்”
எனும் முத்தொள்ளாயிரப் பாடல் வரி அர்த்தமாக செவ்வாம்பல் – சேதாம்பல் – அரக்காம்பல் அறிந்திருக்க வேண்டாமா?
கும்பமுனிக்குக் கும்பி தீப்பற்றி எரிவது போல, விரக்தி படம் விரித்து ஆடும் பாந்தல் போல், வெருட்டியது. கும்பமுனி மதிக்கும் துறவி சுவாமி பிரம்மானந்தா, ஏழை மாணவர்களுக்கு உண்டியும் உடையும் உறைவிடமும் அளித்து, கல்லூரிக் கட்டணமும் செலுத்தி மலேசியாவில் தொண்டாற்றுகிறார். இந்தியா வந்திருந்தபோது சொன்னார் – “மத்தியானம் சாப்பிடப் போனோம்… மறு சோறு வேணுமாக இருந்தது. சர்வரிடம் சோறு கொண்டு வாப்பா என்றேன். பரக்கப் பரக்கப் பார்க்கிறான்” என்று கூறியது நினைவுக்கு வந்தது கும்பமுனிக்கு. ரைஸ் – Rice என்று கேட்கலாம். சாதம் எனக் கேட்கலாம். சாப்பாடு கொண்டு வா எனலாம். ஆனால் சோறு என்று சொன்னால் பீ என்று கேட்டதுபோல் முகஞ்சுளிக்கிறார்கள்.
பருப்புச் சோறு, ரசம் சோறு, தயிர்ச் சோறு, கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, புளித்தண்ணிச் சோறு, என்றால் முகஞ்சுளிக்கிறார்கள். தயிர் சாதம், சாம்பார் சாதம், லெமன் ரைஸ், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, கீ ரைஸ் என்றால் அமோகம். இதில் எங்கே ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் மொர மொரெனப் புளித்த மோரும்’ வேண்டி நிற்பது? புல்வேளூரில் வாழ்ந்த பூதன் அளித்த உணவைப் புகழ்ந்துரைத்த ஔவையார் அறிந்திருந்தார். இது சோளங்காடியும், கம்மஞ்சோறும், ராகிக் கூழும், குதிரைவாலிக் கும்மாயமும், தினைக் கொழுக்கட்டையும் கண்டதார்?
அடுக்களையில் சீனிச்சட்டியில் கண்ணகப்பை கனமாக மோதிக் கிண்டும் ஓசை கேட்டது. ‘காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ!’ என்ற ஆண்டாள் பாசுரம் நினைவில் ஆடியது. தவசிப்பிள்ளை ஊடல் நீக்கும் மார்க்கம் தெரியவில்லை.
‘வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்பதுபோலவும், ‘அரவிந்த மலரின் நீங்கி அடியினை படியிரு தோய’ என்றாற்போலவும், மெல்லடி எடுத்து வைத்து அடுக்களையினுள் நுழைந்தார் கும்பமுனி. தவசிப்பிள்ளை முகத்தில் மரச்சீனிக்கிழங்கு பப்படம் சுட்டு எடுக்கலாம் போல் செந்தகிப்பு இருந்தது.
“என்ன பாட்டா? உப்புமாவிலே பாசாணம் கலந்திடுவேண்ணு வேவு பார்க்க வந்தேரா?” என்றார் ‘பேயோடு கானத்துப் பிறங்கு தழலேந்தித் தீயாடுவார்’ போல!
“ஆமாமா… என்னைக் கொண்ணு பட்ட மரம் அடுக்கிச் சுட்டாச்சுண்ணா உம்ம பேரிலே நான் வாங்கி வச்சிருக்கிற நாலு கப்பலு, ரெண்டு சாராய ஆலை, ஒரு மருத்துவக் கல்லூரி, தடிக்காரங்கோணத்துக்கு உயரே இருக்கப்பட்ட சூலைப்பிடாரி எஸ்டேட்டு, ஸ்விஸ் பேங்கிலே கெடக்கப்பட்ட பணம், புத்தக அலமாரிக்குப் பொறத்த ஒளிச்சு வச்சிருக்கிற கோடிக்கணக்கான ரூவா, அடுக்களைப் பரண்லே பழைய பானையிலே கெடக்கப்பட்ட முன்னூறு பவுனு முத்திரைக் காசு எல்லாம் நீரு எடுத்துக்கிடலாம்லா?” என்று அச்சடக்கத்துடன் அலம்பினார் கும்பமுனி.
“ஆமா! இருக்கு அஞ்சாறு! எனக்கு அம்மைக்கு ஆமக்கன் வச்சுக்கிட்டுப் போனான் பாரும்… அதுபோல… பெரிசா புடுக்கிலே ஒளிச்சு வச்சிருக்காரு… சரி சரி! போய் சற்றே சாய்வான சூரல் நாற்காலியிலே இரியும்… உப்புமா ஆயாச்சு… எடுத்துக்கிட்டு வாறேன்…”
“உமக்குள்ளதையும் சீனிச் சட்டியைப் பறண்டி வழிச்சு வாரிப் போட்டுக்கிட்டு வாரும்… சில காரியம் தெளிவாக்க வேண்டியது பாக்கி இருக்கு…”
ஈத்தாமொழிக் கருப்பட்டித் துண்டு கடித்துக் கொண்டே இருவரும் ரவை தின்ன ஆரம்பித்தனர்.
“நான் எதுக்குச் சொன்னம்ணா…” என்று தொடங்கினார் கும்பமுனி!
“பேசாமத் திண்ணும்… சலம்பிச்சிலே உப்புமா தொண்டையிலே தட்டீரப் போகு…” என்றார் தவசிப்பிள்ளை.
“பேசி உம்ம கொதவளையை அறுக்கதிலே எனக்கென்ன ஆதாயம்வே? நான் சொல்ல வாறது என்னண்ணா…”
மனமொழியில் பேசிக் கொண்டார் தவசிப்பிள்ளை – ‘‘வேதாளம் மறுக்கவும் முருங்கையிலே ஏறியாச்சு…”
பொருட்படுத்தாமல் கும்பமுனி தம்ளரில் இருந்த தணுத்த வெள்ளம் எடுத்துக் குடித்து, ‘மூங்கையான் பேசலுற்றான் எனச்சில மொழியலானார்.
“நீரே ஆலோசிச்சுப் பாரும்வே கண்ணுவிள்ளை! ஒரு காலத்திலே நமக்கு எண்ணைப் பலகாரம்ணா சுஜியன், அப்பம், முந்திரிக்கொத்து, அதிரசம், போளி, சீடை, தேங்குழலு, முறுக்கு, தட்டை, மனகாவலம், ஆமவடை, உளுந்தவடை… தீவாளிக்குத் தீவாவளிதான் சுட்டாலும் அதுதானே வழமை?
எந்நாளும் பழந்தண்ணி, சுடுகஞ்சி, உளுந்தங்கஞ்சி, குருணைக்கஞ்சி காலம்பற… விசேச நாளுன்னா புட்டு, அடை, கொழுக்கட்டை, இட்லி, இடியாப்பம், புளியாத் தோசை, தேங்காத் தோசை, கருப்பட்டித் தோசை, சோளந்தோசை, குருணைத்தோசை, முழு உளுந்து தோசை, முட்டைத் தோசை, உள்ளி தோசை, மரச்சீனிக் கிழங்கு சுட்டது, அவிச்சது, பனங்கிழங்கு சுட்டது அவிச்சது, அவல் தாளிச்சது, அவல் வெரவினது, அவல் இடிச்சது… நீரே சொல்லும்வே! நீரு செனன இட்லி திண்ணு நாள் எத்தனை ஆச்சு? கூழுங் கொழுக்கட்டையும் ஓர்மையிலே உண்டா? வெந்தயக்காடி குடிச்சு காலம் என்னாச்சு? பனம்பழம் சுட்டுத் திண்ணு வருசக்கணக்கு ஆயாச்சு… உளுந்து அவிச்சுத் திண்ணது ஓர்மையிலே உண்டுமா?”
“சரி, விடும் பாட்டா… ஒண்ணொண்ணா செய்து தாறேன்… எதாம் விட்டுப் போனாலும் நீரு செத்த பிறகு கிழமை முறைக்கு படத்தக்கு முன்னால செய்து வைக்கேன்…”
“நான் அலந்து போயிக் கேக்கல்லேவே… நம்ம பயக்கோ ஓட்டலுக்குப் போனா எவனாம் இட்டிலி, பொங்கலு, தோசை ஆர்டர் குடுக்கானாவே? காலம்பற போனா பூரி மசாலா, சப்பாத்தி குருமா, சாண்ட்விச், பிரட் ஆம்லெட்…
மத்தியானம் போனா புலாவ், பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், புரோட்டா… சாயங்காலம்ணா கட்லெட், கச்சோரி, பஜ்ஜி, போண்டா, பர்கர், பீட்சா… ரோட்டுக் கடையானா தஹி பூரி, பானிபூரி, சமோசா, டோக்ளா, வடா பாவ்.
ராத்திரி சாப்பிடப் போனா பரோட்டா காபூல் சென்னா, ஆலூ கோபி, டம் ஆலூ, கோபி மஞ்சூரியன், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், சிக்கன் தந்தூரி, சவர்மா, நூடுல்ஸ், கொத்துப் புரோட்டா, பன் பரோட்டா, கறிதோசை…
இனிப்புண்ணா மைசூர்பாக், ஜாங்கிரி, குலாப் ஜாமுன், ரஸகுல்லா, பர்ஃபி, பேடா, பாசந்தி, ஹல்வா…”
“நீரு சொல்லுகதைப் பாத்தா…”
“நான் கடும்பிடித்தம் பிடிக்கல்லே ஓய்… எட்டுலே பத்திலே ஆசைக்குத் திண்ணு பாக்கது ஒண்ணும் தப்பு கிடையாது… ஆனா சொந்தப் பலகாரத்தை மறந்திடப்பிடாது… எனக்க அம்மை பூரியும் போட்டது கிடையாது, சப்பாத்தியும் தெரியாது… வாழ்க்கையிலே மொதமொதல்லே நான் பிரியாணி திங்கச்சிலே பத்தொன்பது வயசு… புன்னைக்கொட்டை பொறுக்கி – பத்து கொண்டை ஒரு பூட்டு. பத்துப்பூட்டு ஓரணா – ஆறணா சேத்து நாகர்கோயில் போயி ஆஸாத் ஓட்டல்லே பிரியாணி திண்ணம்வே… இல்லேண்ணா திட்டுவிளை அல்லது இடலாக்குடி போகணும்… இடலாக்குடி வந்து சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஊரு…
இண்ணைக்கு பிரியாணியும் பரோட்டாவும் தடை செய்தா ரெண்டு மூணு கோடிப்பேரு பட்டினி கெடந்து செத்துப் போவான்… வடநாட்லே எவனாவது உம்ம கூட்டாஞ்சோறுக்கும் சிறு பயத்தம்பருப்பு பாயசத்துக்கும் இப்பிடிக் கெடந்து பறக்கானுகளாவேய்? கூடிப்போனா அவனுக்குத் தெரிஞ்சது இட்லி சாம்பாரும் மசால் தோசையும் வடையும்தானவே?”
“நீரு பேசாம செந்தமிழர் தீவனம் அப்பிடீண்ணு ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் பாட்டா… அடுத்த தேர்தல்லே மூணு சீட்டும் எம்பது கோடி ரூபாயும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேக்கலாம்… ராஜ்ய சபாவுக்கு என்னை அனுப்பும் மறக்காம… கால் மாறீரப்பிடாது…”
“கல்லெறிபட்டு, கார்ல அடிபட்டு சாகவும் செய்யலாம்… போகாத ஊருக்கு வழி சொல்லுகேரே? சரி, விடும்! நாளைக்கு ரெசவடைக்குப் போடும்…”
“அதை மொதல்லே சொல்லலாம்லா? இந்த பட்டிமன்றப் பேச்சு என்னத்துக்கு?”
“சரி சரி! கையைக் கழுவீட்டு ஒரு கட்டன் சாயா போடும்”
தவசிப்பிள்ளை தட்டுக்களை எடுத்துக்கொண்டு கை கழுவப் போனார். கும்பமுனி படிப்புரையோரம் நின்றமேனிக்குக் கை கழுவி, வாய் கொப்பளித்து முற்றத்தில் துப்பினார். மஞ்சணத்தி மரத்துக் கிளையில் கிடந்த பழத்தைக் கொத்திக் கொண்டிருந்த நாகணவாய்ப்புள் திரும்பி அவரை வினோதமாகப் பார்த்தது.
***
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அண்ணாச்சி, நாக்பூரோட தர்ரி போஹா, சேவ் பஜி மிஸ்ஸிங். அது இல்லாம எப்டி. மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு..