எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்

சென்ற பகுதியில் அத்வைத வேதாந்த மாணவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளான “சாதன சதுஷ்டயம்” என்பதைப் பார்த்து முடித்தோம். அந்தத் தகுதிகளை ஓரளவுக்கு அடைந்திருந்தாலே அத்வைதத்தைக் கற்கத் துவங்கலாம் என்பதையும் பார்த்தோம். அப்படி ஓரளவுக்காவது தகுதிகளை அடைந்திருக்கும் மாணவன் அத்வைதத்தை கற்கத்துவங்குவது எவ்வாறு? இக்கல்வியை அடையும் வழிமுறை என்ன?

கீதையில் கண்ணன் இக்கல்வியை அடைவதற்கான வழிமுறையைத் தருகிறார். “தத்வித்தி ப்ரனிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானின: தத்வ தர்ஷின:” பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் நீ அதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வாயாக; தத்துவத்தை அறிந்த ஞானிகள் அந்த ஞானத்தை உனக்கு உபதேசிப்பார்கள். எனவே கற்றறிந்த ஓர் ஆசிரியரை அணுகி, அவருக்கு அருகிருந்து அவரது மொழிகளைக் கேட்டலே அத்வைதக் கல்வியை அடையும் முறை. மாணவனுக்கு என்ன உபதேசிக்க வேண்டும் என்பதை ஞானியர் அறிவர். ஆனால் அத்வைதக் கல்வி என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பதை அறிந்து கொள்ளுதலும் அவசியம். அத்வைத வேதாந்தம் ஒன்றே தன்னை அறியும் கலைக்குப் பிரமாணம் என்பதைப் பார்த்திருக்கிறோம். சொற்களால் ஆன அறிவு வழிமுறை அது என்பதால் அது சப்தப் பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பிரமாணத்தையே ஆசிரியர்கள் மாணவனுக்கு உபதேசிக்கிறார்கள். சொல்லப்போனால் ஆசிரியரும், வேதாந்தமும் இணைந்ததே சப்தப் பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது. சப்தப் பிரமாணமான இந்த வேதாந்தம் எங்கிருந்து வேர் விட்டிருக்கிறது என்பதையும், வேதாந்தம் என்ற தலைப்பின் கீழ் அமையும் அனைத்து நூல்கள் குறித்தும் இப்பகுதியில் காண்போம்.

வேதங்கள் முதலான நமது முழு ஆன்மிக இலக்கியத்தையும் சாஸ்திரம் என்ற சொல்லால் குறிக்கலாம். சாஸ்திரம் என்ற சொல்லுக்கு ஒரு துறை பற்றிய முழுமையான அறிவைத் தரும் நூற்தொகை என்று பொருள். ‘சாஸ்திரம்’ என்ற சொல் ‘ஷா’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஷாஸ்’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று கட்டளையிடுவது, மற்றொன்று கற்பிப்பது. எனவே, சாஸ்திரம் என்பது ஆரம்ப நிலைகளில் மனிதர்களுக்குக் கட்டளையிட்டு, பின்னர் பிற்கால நிலைகளில் அவர்களுக்குக் கற்பிக்கும் ஓர் இலக்கியம் ஆகும். கட்டளையிடுவதன் மூலமும், கற்பிப்பதன் மூலமும் சாஸ்திரங்கள் ஒரு மனிதனை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றுகின்றன. கற்பித்து, கட்டளையிட்டு, அதன் மூலம் மனிதகுலத்தைக் காப்பாற்றுவதால், அது சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது – ‘ஷாஸ்’ என்றால் கற்பிப்பது, ‘த்ரா’ என்றால் காப்பாற்றுவது. “ஷாஸனாத் த்ராயதே இதி சாஸ்திரம்.”

முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது.  ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது. சாம வேதம், இசை வடிவில் உள்ள சாம மந்திரங்களைக் கொண்டுள்ளது. அவை இசைக்கு அமைக்கப்பட்ட “கீத ரூப மந்திரங்கள்” ஆகும். சாம மந்திரங்களை உச்சாடனம் செய்வது சாமகானம் என்றே அழைக்கப்படுகிறது. பிற வேதமந்திரங்களின் உச்சாடனம் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. அடுத்து வருவது அதர்வண வேதம் என அழைக்கப்படும் நான்காவது வேதம். இது பெரும்பாலும் இரண்டு புகழ்பெற்ற ரிஷிகளான அதர்வ ரிஷி மற்றும் அங்கீரச ரிஷி ஆகியோரால் வழங்கப்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ளது. எனவே, இது அதர்வ வேதம் அல்லது அதர்வண வேதம் என்று அழைக்கப்படுகிறது. 

மந்திரம் என்ற சொல் வேதத்தின் செய்யுளுக்கும், உரைநடைக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மந்திரம் என்ற சொல்லுக்கு விசாரணையின் மூலம், ஆராய்ச்சியின் மூலம் ஒருவரை காப்பது என்பது பொருள். “மனனாத் த்ராயதே இதி மந்திரம்.” மனனம் என்றால் விசாரணை, ஆய்வு என்று பொருள். மந்திரங்கள் மனனம் புரிவதற்காகவே உள்ளன. நாம் அவற்றை விசாரணைக்கு உட்படுத்தினால் அவை நம்மைக் காக்கும். எவ்வாறு அவை நம்மைக் காக்கும்? நமது உண்மையான தன்மையை நமக்கு எடுத்துக்காட்டி அவை நம்மைக் காக்கும். மேலும், நமது பாரம்பரியத்தின்படி, ஒரு மந்திரத்தை வெறுமனே உச்சரிப்பது, மந்திரங்களின் மீது தியானம் செய்வது கூட ஒருவருக்கு உதவும் திறனுடையது. 

இப்போது அடுத்த கேள்வி, வேதங்களின் ஆசிரியர் யார் என்பதுதான். வேத பாரம்பரியத்தில், வேதங்கள் இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. வேதங்கள் சுருதி என்றழைக்கப்படும் மிக மிகப் பரந்து விரிந்த இலக்கியம் ஆகும். சுருதி என்றால் கேட்கப்பட்டது, அல்லது கேட்டலின் மூலம் பெறப்பட்டது என்று பொருள். அவை மனித அறிவின் படைப்புகள் அல்ல. வேதமரபின்படி வேதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டவை அன்று. எனவே அவை “அபௌருஷேயம்” என்று அழைக்கப்படுகின்றன. அவை இறைவனிடமிருந்தே வந்த வெளிப்பாடுகள். எனவே, ஆசிரியரைப் பற்றிப் பேச விரும்பினால், இறைவனே அல்லது இயற்கையே வேதங்களின் ஆசிரியர். ஆனால் இறைவன் வேதங்களை நேரடியாக மனிதகுலத்திற்கு வழங்குவதில்லை. மாறாக, ரிஷிகள் எனப்படும் ஊடகங்கள் வழியாக இறைவன் வேதங்களை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்துகிறது. இறைவனை ஓர் ஒலிபரப்பு நிலையம் என்று கருதிக்கொண்டால், ரிஷிகள் அதன் அலைவரிசைகளைப் பெறும் மையங்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ரிஷி’ என்ற சொல், ‘அறிதல்’ என்ற பொருள் கொண்ட ‘ரிஷ்’ என்ற சமஸ்கிருத மூலத்திலிருந்து பெறப்பட்டது. ‘ரிஷதி ஜானாதி இதி ரிஷி’. வேத மந்திரங்கள் வேதகாலத்து ரிஷிகளால் உருவாக்கப்படவில்லை; அவை அவர்களால் வெறுமனே பார்க்கப்பட்டன என்ற பொருள்படும் வகையில் ரிஷிகளை “மந்திர த்ரஷ்டார:” (மந்திரத்தைப் பார்த்தவர்கள்) என்று சொல்லும் வழக்கம் வேதமரபில் உண்டு. அவர்கள் “மந்திர கர்த்தார:” (மந்திரத்தைச் செய்தவர்கள்) அல்லர்.

மேலும் இந்த வேதங்கள் முதன்மையாக ஒலி வடிவிலேயே பெறப்பட்டு, கடத்தப்பட்டன. அவை எழுதப்படவில்லை. மிக மிக நீண்ட காலத்திற்கு வேதங்கள் எழுத்து வடிவில் இல்லாமல், ஒலி வடிவில் மட்டுமே இருந்தன. அதனால்தான் சமஸ்கிருத மொழிக்கு என்று ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவம் நீண்டகாலத்திற்கு இல்லாமலிருந்தது. ரிஷிகள் வேதங்களைத் தங்கள் சீடர்களுக்கு வாய்மொழியாகவே போதித்தார்கள். மேலும் சீடர்கள் கேட்டுத்தான் கற்க வேண்டும். வேத பரம்பரை என்பது ஒரு கர்ண பரம்பரை, ஹஸ்த பரம்பரை அல்ல. ஹஸ்த பரம்பரை என்றால் கற்கவேண்டியவற்றை கையால் எழுதி, அடுத்த தலைமுறைக்கு குறிப்புகளின் வடிவத்தில் கொடுக்கப்படுவது என்று பொருள். அல்லது லிஹித பரம்பரை. அதாவது எழுத்து வடிவில் கடத்தப்படும் அறிவு. ஆனால் வேதம் எழுதப்பட்டதன்று. தமிழில் வேதத்திற்கு எழுதாக்கிளவி என்றே பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. இப்போதும் வேதங்களைக் கற்பிக்கும்போது, ​​மாணவர் எந்தப் புத்தகத்தையும் வைத்திருக்கக் கூடாது, அது கேட்பதன் மூலம்தான் கற்கப்படுகிறது. 

இந்த நான்கு வேதங்களின் தொகுப்பே சாஸ்திரம் எனப்படும் வேத இலக்கியத் தொகுப்பில் முதன்மையானதாகும். பிற வேத இலக்கியத் தொகுப்புகள் அனைத்தும் இவ்வேதங்களையே அடிப்படையாகக் கொண்டவை. எனவேதான் இந்தியப் பண்பாடு வேதப்பண்பாடு என்று பொருள்படும் வைதிக சம்பிரதாயம் என்றழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவை சம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்யகங்கள், மற்றும் உபநிஷத்துக்கள். சம்ஹிதைகள் தேவதைகளை நோக்கிப் பாடப்பட்ட வேத மந்திரங்கள், சூக்தங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இவையே வேதங்களின் மூலப்பகுதியாகும். பிராம்மணங்கள் யாகங்கள் புரிவதன் முறை குறித்தும், மந்திரங்களின் பயன்பாடு குறித்தும் பேசுகின்றன. இப்பகுதியில் கர்மகாண்டம் குறித்த விரிவான விளக்கம் வருகின்றது. ஆரண்யகங்கள் காடு அல்லது ஆரண்யகத்தில் தியானிக்கும் முனிவர்களுக்கான பகுதி. இப்பகுதியில் கர்மத்திலிருந்து தியானத்திற்கான மாற்றம் நிகழ்கிறது. வேதங்களின் இப்பகுதியில்தான் தத்துவ சிந்தனையின் தொடக்கம் நிகழ்கிறது. நான்காவது பகுதியான உபநிஷத்துகளில் வேதாந்த விசாரம் துவங்குகிறது. ஆத்மா, பிரம்மம் போன்ற கருதுகோள்கள் பேசப்படுகின்றன. இறைவன், படைப்பு போன்ற விஷயங்களின் உண்மைத் தன்மை ஆராயப்படுகின்றது. உபநிஷத்தை ஆரண்யகங்களுடன் இணைத்து அது ஆரண்யகத்தின் இறுதிப்பகுதியாக வருகின்றது என்று கொள்பவரும் உள்ளனர். முதலிரண்டு பகுதிகளான சம்ஹிதைகளும், பிராம்மணங்களும் இணைந்து கர்மகாண்டம் என்றும், ஆரண்யகங்களும், உபநிஷத்துக்களும் இணைந்து ஞானகாண்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த ஞானகாண்டம் வேதாந்தத்தின் இறுதிப்பகுதியாக வருவதால் இதுவே வேதாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

வேத இலக்கியத்தின் இரண்டாவது அடுக்கு சூத்திர இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நூற்தொகை முழுக்க சூத்திரங்களால் ஆனவை. சூத்திரம் என்பதற்கு சிறிய சொற்களில், குழப்பமில்லாமல், சாரத்தை மட்டும், எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் விதமாகச் சொல்லப்பட்ட வாக்கியம் என்று பொருள். “அல்பாக்ஷரம் அசந்திக்தம் சாரவத் விஸ்வதோமுகம், அஸ்தோபம் அனவத்யம் ச சூத்ரம் சூத்ரவிதோ விது:” என்பது சூத்திரத்தின் வரையறை. சூத்திரம் என்பது குறைந்த சொற்கள் கொண்டது(அல்பாக்ஷ்ரம்), குழப்பமில்லாதது (அசந்திக்தம்), ஒரு பொருளின் சாரத்தைக் கொண்டது (சாரவத்), எல்லாவிதமான வியாக்கியானங்களுக்கும் இடமளிப்பது (விஸ்வதோமுகம்), தேவையற்ற சொற்கள் இல்லாதது (அஸ்தோபம்), பிழைகளற்றது (அனவத்யம்). 

வேதம் என்பது பல தலைப்புகள் ஒழுங்கற்ற முறையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஒரு பரந்த இலக்கியமாக இருக்கும் நிலையில், சூத்திர இலக்கியத்தில், கருத்துக்கள் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு, தலைப்பு வாரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தனிநபரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அனைத்து போதனைகளையும் நாம் தர்ம சூத்திரங்கள் என்று அழைக்கிறோம். எனவே, தர்ம சூத்திரம் தனிப்பட்ட விழுமியங்கள், தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றைக் கையாள்கிறது. கிருஹ்ய சூத்திரங்கள் குடும்ப விழுமியங்கள், குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கையாளுகின்றன. எனவே, தர்ம சூத்திரங்களிலிருந்து கிருஹ்ய சூத்திரங்கள் தனிநபரிடமிருந்து அவனது குடும்பத்திற்கு என்று ஒரு சிறிய விரிவாக்கத்தைச் செய்கின்றன. அதற்குப் பிறகு, ஷ்ரௌத சூத்திரங்கள் என்று அழைக்கப்படும் இலக்கியம் வருகிறது – இதில் முழு சமூகத்தின் நலனுக்காக செய்யப்படும் பெரிய செயல்களைப் பற்றிப் பேசப்படுகிறது.  மிகச்சிறிய அலகு தனிநபர். அடுத்த பெரிய அலகு குடும்பம், அதற்கும் அடுத்த பெரிய அலகு சமூகம். என்னால் என்னை ஒருபோதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது. நான் ஒரு தனிநபர், நான் ஒரு குடும்பத்தின் உறுப்பினர், மேலும் நான் ஒரு சமூக உறுப்பினராகவும் இருக்கிறேன். என்னுடைய எந்த ஒரு அம்சத்தையும் என்னால் புறக்கணிக்க முடியாது. ஒரு தனி மனிதனின் இந்த மூன்று வகையான பொறுப்புகளே தர்ம சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், ஷ்ரௌத சூத்திரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஷ்ரௌத சூத்திரம் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், தேசிய மற்றும் உலகளாவிய நல்லிணக்கம், செழிப்பு, அமைதிக்காக செய்யப்படும் சடங்குகள், பிரார்த்தனைகள், யாகங்கள் போன்றவற்றைக் கையாள்கிறது. வேதங்களைப் போலன்றி சூத்திர இலக்கியம் மனித அறிவிலிருந்து மட்டுமே வருகின்றது. பல்வேறு ரிஷிகள் சூத்திர இலக்கியங்களை இயற்றியுள்ளனர். ஆனால் அவற்றின் உள்ளடக்கம் வேதங்களிலிருந்தே பெறப்பட்டுள்ளது. எனவே சூத்திர இலக்கியம் வேத இலக்கியத்துக்குள்ளேயே அடங்கும். கௌதம சூத்திரங்கள், ஆபஸ்தம்ப சூத்திரங்கள், பராசர சூத்திரங்கள் போன்ற ரிஷிகள் இயற்றிய பல சூத்திர நூல்கள் உள்ளன. பாணினி அஷ்டத்யாயி என்ற பெயரில் சம்ஸ்கிருத இலக்கணத்தை விளக்கும் வியாகரண சூத்திரம் இயற்றியுள்ளார். யோகத்தின் தத்துவம், அதில் புரியும் சாதனைகள் குறித்து பதஞ்சலி எழுதிய யோக சூத்திரங்கள் உள்ளன. வேதத்தினுடைய முதல் பகுதியான கர்மகாண்டம் குறித்து, அவற்றில் கூறப்படும் யாகங்கள், உபாசனங்கள் குறித்து ஜைமினி மீமாம்ச சூத்திரங்களை இயற்றியிருக்கிறார். உபநிஷத்துகளின் சாரத்தை நிறுவுவதற்காக வியாசர் இயற்றிய பிரம்ம சூத்திரங்கள் அத்வைத வேதாந்தத்தின் மைய நூல்களில் ஒன்றாக உள்ளது. கௌதமரின் நியாய சூத்திரங்கள் தர்க்கம், அறிவியல், பிரமாணங்கள் இவைகளைக் கையாளுகிறது. 

நமக்குத் தமிழிலும் சூத்திர மரபு உண்டு. தமிழ் இலக்கண நூற்களான தொல்காப்பியமும், நன்னூலும் சூத்திர வடிவில்தான் அமைந்திருக்கின்றன. இன்னொரு உதாரணம் யாப்பருங்கலக்காரிகை.

வேதங்களின் கருத்துக்களை சாரமாகவும், குறியீட்டுத்தன்மையுடன் கொடுப்பதற்காகவே சூத்திரங்கள் இயற்றப்படுகின்றன. மேலும், வேதங்களில் தெளிவற்ற கூற்றுகள் இருப்பின் அவற்றை சூத்திரங்களின் வாயிலாகத் தெளிவுபடுத்தப்படும். முரண்பட்ட கூற்றுகளின் முரண்பாட்டை அவை தீர்த்து வைக்கும். சூத்திரம் என்ற சொல்லின் நேரடிப்பொருள் கயிறு என்பதாகும். வேதங்களின் பல்வேறு தலைப்புகளை ஒரு நூலில் கோர்ப்பது போல சூத்திரங்கள் கோர்க்கின்றன.

சாஸ்திரங்களின் மூன்றாவது அடுக்கு ஸ்ம்ருதி எனப்படுகிறது. இதுவும் மனிதர்களால் இயற்றப்படுவதே. ஆனால் இவற்றுக்கும் மூலம் வேதத்திலிருந்தே வருகிறது. ஸ்ம்ருதி என்ற சொல்லுக்கு நினைவில் கொள்ளப்பட்டது என்று பொருள். ரிஷிகள் வேதங்களைக் கற்கிறார்கள், சூத்திரங்களைக் கற்கிறார்கள், பின்னர் அவற்றில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களையும் சேகரித்து, மீண்டும் ஒரு விரிவான வடிவத்தில் வழங்குகிறார்கள். சூத்திரம் சுருக்கமாகத் தருகின்றதென்றால் ஸ்ம்ருதி அதையே விரிவாகத் தரும். மனு ஸ்ம்ருதி, யாக்ஞ்யவல்கிய ஸ்ம்ருதி போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்போம். பகவத் கீதை ஒரு ஸ்ம்ருதி நூலே. ஒரு ஸ்ம்ருதி நூலில் தலைப்புகள் மிக அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தலைப்பும் விரிவாக, எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கப்படும். வேதத்தின் மறைபொருளான கருத்துக்கள் ஸ்ம்ருதியில் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கப்படும். ஒப்புநோக்க சுருதி, சூத்திரம் இரண்டையும் விட, ஸ்ம்ருதி கற்பதற்கு எளிதாகவும், பிற இரண்டையும் கற்பதற்கு மாணவரை ஆயத்தம் செய்யும் பணியைச் செய்வதாகவும் இருக்கிறது. 

சாஸ்திரங்களின் நான்காவது அடுக்கு புராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. புராணங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்ட இலக்கிய வடிவம் ஆகும். புராணம் என்ற சொல்லின் பொருள், பழமையாக இருப்பினும் அது இன்னும் காலத்துக்குப் பொருத்தமாக, புதுமை மாறாமல் இருக்கின்றது என்பதாகும். “புரா அபி நவ: புராண:” ஸ்ம்ருதிகளைப் போலவே புராணங்களும் கவிதை வடிவில் உள்ளன. வேதக் கருத்துக்களை இவை தொகுத்து, தெளிவுபடுத்தி, விரிவுபடுத்துகின்றன. மேலும் புராணங்களின் மற்றொரு முக்கியமான பணி என்பது சுருதி, சூத்திரம், ஸ்ம்ருதி ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவை அனைத்தும் கதைகள் வடிவில் முன்வைக்கப்படுகின்றன. மிக விரிந்த பரப்பில் எழுதப்பட்ட கதைகள்தான் புராண இலக்கியங்களின் தனிச்சிறப்பு. பதினெட்டு புராணங்கள், பதினெட்டு உபபுராணங்கள் அடங்கிய தொகுப்பாக புராண இலக்கியம் இருக்கிறது. பாகவத புராணம் இதில் மிகுந்த பிரசித்தி பெற்றது.

சாஸ்திரங்களின் ஐந்தாவது அடுக்கு இதிகாசம் எனப்படும். “இதி ஹ ஆச: இதி இதிஹாச:” என்பது சொலவடை. இவ்வாறு நிகழ்ந்தது என்று நிகழ்ந்ததை அவ்வண்ணமே கூறுவதே இதிகாசம் எனப்படும். இதிகாசத்தின் உள்ளடக்கம் உண்மையில் நிகழ்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று கருதப்படுகிறது. நம்மிடம் இரண்டு இதிகாசங்கள் உள்ளன. ஒன்று வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இராமாயணம். மற்றொன்று வியாசாச்சாரியாரால் இயற்றப்பட்ட மகாபாரதம். இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் கொண்ட இராமாயணம் காலத்தால் மகாபாரதத்துக்கு முந்தையது. மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்கள் வரை கொண்டது. 

இதிகாசங்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை ஆயினும், அவற்றைத் தூய வரலாறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதிகாசங்களின் முதன்மை நோக்கம் வரலாற்றை முன்வைப்பது அல்ல. வரலாறு அவற்றுக்கு ஒரு துணை மட்டும்தான். பிரதான நோக்கம் வேதக்கருத்துக்களை எடுத்துரைத்தலே. எனவேதான் இதிகாசங்களில் வரலாற்றுடன் புனைவும் கலந்தளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ராவணனுக்கு பத்து தலைகள் என்று குறிப்பிடப்படுகிறதென்றால் உண்மையிலேயே ஒருவனுக்குப் பத்து தலைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்திருந்தால் ஒரு பக்கம் ஐந்து தலைகளையும், இன்னொரு பக்கம் நான்கு தலைகளையும் (நடுவில் ஒன்று) வைத்துக்கொண்டு சமாளிப்பதற்கு சிரமப்பட்டிருப்பான். எனவே பத்து தலைகள் என்பதை இங்கு ஆளுமைக் கோளாறின் குறியீடாகவே கொள்ள வேண்டும்.

சாஸ்திரங்களின் ஆறாவது மற்றும் இறுதி அடுக்கு பாஷ்ய இலக்கியம் ஆகும். மேற்சொன்ன பிற அடுக்குகளில் உள்ள அனைத்து இலக்கியங்களின் மீதான விளக்கவுரைகளின் தொகுப்புக்கு பாஷ்ய இலக்கியம் என்று பெயர். வேதங்கள், உபநிஷத்துக்கள், சூத்திரங்கள், ஸ்ம்ருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய அனைத்துக்கும் எண்ணற்ற விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் இந்த விளக்கவுரைகளுக்கு துணை விளக்கவுரை, இணை விளக்கவுரை என்று பல்வேறு நூல்களை உள்ளடக்கியது பாஷ்ய இலக்கியம். சாஸ்திர இலக்கியங்கள் பொருத்தமான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டுமெனில் அவற்றுக்கான சரியான விளக்கவுரைகள் அவசியம். மேலும் ஒரு விளக்கவுரை இயற்றப்பட்டு நீண்ட காலம் ஆகி விடும்போது அந்த விளக்கவுரையைப் புரிந்து கொள்வதற்கே இன்னொரு உரை தேவைப்படுகிறது.

மேலும் வழிவழியாக வந்த விளக்க முறைகளைப் பயன்படுத்தி இந்த விளக்கவுரைகள் எழுதப்படுவதால் வேத சம்பிரதாயத்தில் பயின்று வருபவர்களுக்கு இவற்றில் எந்த உரையையும் பயில்வதற்கு சிக்கல் இருக்காது. இந்த நூல்கள் அனைத்தும் பாஷ்ய கிரந்தங்கள் அல்லது வியாக்கியான கிரந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கவிதை வடிவிலும், உரைநடை வடிவிலும் உள்ளன. சங்கரர் பத்து முதன்மை உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அவர் பிருஹதாரண்யக உபநிஷத்துக்கு எழுதிய உரை மிக பிரம்மாண்டமானது. அந்த பாஷ்யத்துக்கு சுரேஷ்வராச்சாரியார் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுலோகங்கள் கொண்ட வார்த்திகம் எனப்படும் உரையை எழுதியிருக்கிறார்.

மரபில் ஓர் அத்வைத வேதாந்த மாணவன் கற்க வேண்டிய நூல்களாக மூன்று பெரும் பிரிவுகளைக் குறிப்பிடுவர். உபநிஷத்துக்கள், பகவத் கீதை, மற்றும் பிரம்ம சூத்திரங்கள் ஆகியன அந்த மூன்றும். இந்தத் தொகுப்புக்கு பிரஸ்தான த்ரயம் (முதன்மையான மூன்று) என்று பெயர். இவற்றில் உபநிஷத்துக்கள் வேதங்களிலிருந்து வருவதால் ஸ்ருதி என்ற வகைமையில் அடங்கும். எண்ணற்ற உபநிஷத்துக்கள் இருந்தாலும் சங்கரர் உரை எழுதிய முதன்மையான பத்து உபநிஷத்துக்களே மரபில் பயிலப்பட்டு வருகின்றன. பகவத்கீதை கண்ணனால் உரைக்கப்பட்டது. கண்ணன் இறைவடிவமாகவே கருதப்பட்டாலும், கீதை வேதங்களிலிருந்து நேரடியாக வராததால் அதற்கு ஸ்ம்ருதி என்ற தகுதி வந்தமைகிறது. மூன்றாவதாக பிரம்ம சூத்திரங்கள். இவை சூத்திரங்கள் என்ற வகைமைக்குள் வருகின்றது. ஸ்ருதி, ஸ்ம்ருதி, சூத்திரம் ஆகிய மூன்று வகைமை நூல்களையும் ஓர் அத்வைத மாணவன் கற்றறிந்த ஆசிரியரை அணுகி அவரிடம் முறைப்படி நீண்ட காலம் பயில்கிறான். அவர் அவனுக்கு பொருத்தமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி இந்த நூல்களில்  உள்ள தன்னை அறியும் கலையைக் கற்பிக்கிறார். அக்கலையைப் பயின்று, அதன்படி நிற்கும் மாணவன் மனித வாழ்வின் ஆக உயர்ந்த இலக்கான “மோக்ஷம்” என்ற அகவிடுதலையை அடைகிறான்.

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

 நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.