துளிம இயக்கவியலை கட்டமைத்து முடித்த சிறிது காலத்திற்குள்ளேயே அதை மின்காந்தம் போன்ற புலங்களுக்கு நேரடியாக பயன்படுத்தவும் சிறப்பு சார்புக் கொள்கையுடன் ஒத்திசைக்கவும் இயலும் என டிராக் உணர்ந்தார் ( பொது சார்புக் கொள்கையுடன் ஒத்திசைக்க வைப்பது இன்னமும் கடினமானது என்பது பின்னர் தெரிய வரும். இந்த நூலே அதைப் பற்றியதுதான்). அதை நிகழ்த்துகையில் நமது இயற்கையின் விவரிப்பு குறித்த ஆழ்ந்த உள்முகமான சுருக்கத்தை கண்டடைந்தார் : நியூட்டனது துகள் மற்றும் ஃபாரடேவின் புலம் – இவ்விரண்டிற்கும் இடையேயான இணைவு.
எதிர்மின்மங்களின் உள்வினையுடன் இணைந்து வரும் நிகழ்தகவு ‘மேகம்’ ஒரு புலத்தை ஒத்திருக்கின்றது. ஃபாரடே மற்றும் மேக்ஸ்வெல்லின் புலம் பரல்களால் ஆனது – ஒளித்துகள். அதுவும் வெறுமனே வெட்டவெளியில் பரவி புலம் என காட்சியளிக்கவில்லை – புலம், துகள் என்றே உள்வினை புரிகிறது. ஃபாரடே மற்றும் மேக்ஸ்வெல்லால் துகள் என்றும் புலம் என்றும் தனித்தனியாக கருதப்பட்டது துளிம இயக்கவியலில் ஒன்றாக இணைந்தது.
இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது மிக அழகிய ஒன்று. ஒரு காரணி கொள்ளக்கூடிய அளவு மதிப்பை டிராக்கின் சமன்பாடு நிர்ணயிக்கிறது. ஃபாரடே கோடுகளின் ஆற்றலுக்குப் பயன்படுத்திய போது, அவ்வாற்றல் குறிப்பிட்ட சில அளவு மதிப்புகளை மட்டுமே கொண்டிருக்க இயலும், மற்றவற்றை அல்ல எனத் தெரிய வந்தது. மின்காந்தப் புலம் குறிப்பிட்ட சில அளவு மதிப்புகளை மட்டுமே கொண்டிருக்க இயலும் என்பதால் அந்தப் புலம் ஆற்றல் பொட்டலங்கள் போலவே செயல்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ப்ளங்க்கும் ஐன்ஸ்டைனும் அறிமுகப்படுத்திய ஆற்றல் துளிமம் என்பது சரியாக இதுவே. வட்டம் முழுமையடைந்து கதையும் நிறைவுற்றது. ப்ளங்க்கும் ஐன்ஸ்டைனும் உள்ளுணர்ந்த ஒளியின் துகள் இயற்கையை டிராக்கின் சமன்பாடு நிறுவியது.
மின்காந்த அலைகள் ஃபாரடே கோடுகளின் அதிர்வாக இருக்கும் அதே சமயம் சிறு அளவில் ஒளிமங்களின் கூட்டமாகவும் இருக்கிறது. ஒளிமின் விளைவு போன்று வேறு எதாவதுடனான உள்வினையின் போது துகள்களாக வெளிப்படுகிறது. நமது விழிகளுக்கு தனித்தனி துளிகளாக, ஒளித்துகளாகவும் வெளிப்படுகிறது. ஒளிமமே மின்காந்த புலத்தின் துளிமம்.
ஆனால், உலகின் அடிப்படையாக அமைந்திருக்கும் எதிர்மின்மம் போன்ற அனைத்து துகள்களும் இணையாகவே ஏதோ ஒரு புலத்தின் துளிமமாக – ஃபாரடே மற்றும் மாக்ஸ்வெல்லின் புலம் என்பதற்கு இணையாக, நுண்மைக்கும் துளிம நிகழ்தகவிற்கும் ஆட்படும் துளிமப் புலம் என அமைந்திருக்கின்றன. எதிர்மின்மம் முதலான அனைத்து அடிப்படை துகள்களின் புலங்களுக்கான சமன்பாடுகளை டிராக் எழுதினார். ஃபாரடே அறிமுகப்படுத்திய புலம் – துகள் என்னும் கூரிய பிரிவினை மறைந்தது.
சிறப்பு சார்புக் கொள்கையுடன் இசைந்து வரும் துளிமக் கொள்கையின் பொது வடிவம் துளிம – புல கொள்கை என்று அழைக்கப்பட்டு, இன்றைய துகள் இயற்பியலின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. ஒளிமம் ஒளியின் துளிமம் என்பது போல துகள்கள் புலங்களின் துளிமங்களே. உள்வினைகளில் அனைத்து புலங்களும் ஒரு நுண் கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் போக்கில் அடிப்படை புலங்களின் பட்டியல் தொடர் மேம்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு, துளிம – புல கொள்கையைப் பொறுத்து, இன்று கிட்டத்தட்ட ஈர்ப்பு விசை தவிர்த்து அனைத்தையும் விளக்கும் அடிப்படை துகள்களது பொது மாதிரி என்னும் கொள்கை வந்துள்ளது. இந்த மாதிரியின் உருவாக்கம் சென்ற நூற்றாண்டின் பெரும் பகுதிக்கு இயற்பியலாளர்களை ‘ஆக்கிரமித்து’ , தன்னளவில் பெரும் கண்டுபிடிப்பு ஒன்றின் சாகசம் என நின்றிருந்தது. அந்த கதையை நான் இங்கு கூறப் போவதில்லை – துளிம ஈர்ப்பியல் குறித்தே முன்னகர விரும்புகிறேன். 1970களில் பொது மாதிரி முழுமையடைந்தது. தோராயமாக பதினைந்து புலங்கள், அவற்றின் துளிமம் என அமைந்த அடிப்படை துகள்கள் ( எதிர்மின்மம், க்வார்க்ஸ், ம்யூவான்ஸ், நியூட்ரீனோ, ஹிக்ஸ் மற்றும் சில), மின்காந்த விசையை விளக்கும் மின்காந்த புலம் போன்ற சில புலங்கள் மற்றும் அணுக்கரு தளத்தில் இயங்கும், ஒளிமம் போன்ற துளிமங்களை உடைய சில விசைகள்.
பொது சார்பு மற்றும் டிராக் அல்லது மாக்ஸ்வெலின் சமன்பாடுகளது எளிமை இல்லாமல் ஒருவாறான ‘ஒட்டப்பட்ட’து போன்ற தன்மையால் பொது மாதிரி தொடக்க காலத்தில் அவ்வளவு முக்கியமாகக் கருதப்படவில்லை. ஆனாலும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் மீறி அதன் ஒவ்வொரு கணிப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக துகள் இயற்பியலின் ஒவ்வொரு பரிசோதனையும் பொது மாதிரியை தொடர்ந்து மீளூறுதி செய்வதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. 2013ல் பரபரப்பைக் கிளப்பிய ஹிக்ஸ் துகள்களின் கண்டுபிடிப்பு அதன் சமீபத்திய நிரூபணமாக அமைந்தது. பொது மாதிரி கொள்கையின் உள்ளார்ந்த ஒத்திசைவிற்காக முன்மொழியப்பட்ட ஹிக்ஸ் புலம், அதன் துகள் பொது மாதிரி உருவகித்திருந்த பண்புகளை துல்லியமாகக் கொண்டிருப்பதாக கண்டறியப்படும் வரை சற்று செயற்கையானதாகவே கருதப்பட்டது. ( ஹிக்ஸ் துகள் கடவுள் துகள் என அழைக்கப்படும் மூடத்தனமான கூற்று பதில் சொல்வதற்கும் தகுதியற்றது). சுருக்கமாக, தனது அடக்கமான பெயருக்கு மாற்றாக பொது மாதிரி பெருவெற்றியடைந்தது.

இயற்கை குறித்த அபாரமான விளக்கத்தை துளிம இயக்கவியல் தனது புலம் / துகள்களுடன் இன்று அளிக்கிறது. உலகம் புலங்கள் மற்றும் துகள்களால் அல்ல – துளிமப்புலம் என்னும் ஒற்றை இருப்பால் ஆனது. காலப்போக்கில் வெளியில் நகரும் துகள்கள் என எதுவும் இல்லை – கால வெளியில் துளிமப்புலங்களின் அடிப்படை நிகழ்வுகளே உள்ளன. உலகம் விசித்திரமானது ஆனால் எளியது.
துளிமம் ஒன்று : தகவல்கள் அறுதியானவை
உலகைப் பற்றிய துளிம இயக்கவியலின் முடிவுகளைக் காணவேண்டிய நேரம் வந்துவிட்டது. துளிம இயக்கவியலின் கருத்துத் தெளிவின்மை மற்றும் அதன் சர்ச்சைக்குரிய உள்ளர்த்தம் காரணமாக அது அவ்வளவு எளியதாக இருக்காது என்றாலும், தெளிவுபடுத்திக் கொண்டு முன்செல்வது இன்றியமையாதது. பொருட்களது இயற்கையின் மூன்று கூறுகளை துளிம இயக்கவியல் முன்வைக்கிறது என நினைக்கிறேன். – நுண்மை(granularity), அறுதியின்மை, உலகின் சார்புத் தன்மை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக கூர்ந்து பார்ப்போம்.
முதலாவது, அடிப்படை நுண்மை ஒன்று இயற்கையினுள் திகழ்கிறது. துளிமக் கொள்கையின் மையம் என பொருள் மற்றும் ஒளியின் நுண்மை அமர்ந்திருக்கிறது. ஆனால் அது டெமாகிரீடஸின் நுண்மை அல்ல. டெமாகிரீடஸுக்கு அணுக்கள் கூழாங்கற்களைப் போன்றவை. துளிம இயக்கவியலிலோ துகள்கள் முற்றாக மறைந்து மீண்டும் தோன்றுகின்றன. ஆயினும் உலகினது ப்ரத்யக்ஷமான நுண்மைத்துவத்தின் வேர் பண்டைய அணுத்துவத்தில் உள்ளது. நூற்றாண்டு தாண்டிய பரிசோதனைகளாலும் செறிவான கணிதத்தினாலும், சரியான ஊகங்களை நிகழ்த்தும் அபாரமான திறனாலும் வலிமையுடன் திகழும் துளிம இயற்பியல், பொருட்களின் இயல்புகள் குறித்து ஆழ்ந்த ஊகங்களை அளித்த அப்தெராவின் மாபெரும் தத்துவவியலாளனுக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம் என அமைந்துள்ளது.
ஒரு பொருள்வய அமைப்பினை ( Physical system) அளந்து அது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவேளை, ஊசலியினது அலைவீச்சை அளந்து அதுவொரு குறிப்பிட்ட மதிப்பைக் – ஐந்து மற்றும் ஆறு சென்டிமீட்டர்களுக்கு இடையே ஏதோ ஒன்றைக் – கொண்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. (இயற்பியலில் எந்தவொரு அளவீடும் கச்சிதமானதல்ல). ஐந்து மற்றும் ஆறு சென்டிமீட்டர்களுக்கு இடையே எல்லையற்ற மதிப்புகள் இருப்பதால் (5.1 அல்லது 5.101 அல்லது 5.101001…) , தொடர்புடைய ஊசலியும் முடிவற்ற சாத்தியமான நிலைகளில் ஏதோ ஒன்றில் அமைந்திருக்கும் என்பது துளிம இயக்கவியலுக்கு முந்தைய கருதுகோள். ஆக, ஊசலியின் நிலை குறித்த நமது அறியாமையும் எல்லையற்றது.
மாறாக, ஐந்து மற்றும் ஆறு சென்டிமீட்டருக்குள் எல்லைக்குட்பட்ட அளவுமதிப்புகளையே அலைவீச்சு கொண்டிருக்க இயலும் என்பதால் ஊசலி குறித்த நமது அறியாமையும் எல்லைக்குட்பட்டது.
பொதுவாக அனைத்து விஷயங்களுக்குமே இது பொருந்தும். எனவே, ஒரு அமைப்பினுடைய தகவல்களின் எண்ணிக்கைக்கு – அந்த அமைப்பு இருக்கக்கூடிய சாத்தியமான நிலைகளுக்கு – எல்லையுள்ளது என்பதே துளிம இயக்கவியல் அளிக்கும் முதல் அறிதல். எல்லையின்மை மீதான இக்கடிவாளம் – இயற்கையின் நுண்மை என்கிற டெமாகிரீடஸின் இமைக்கணக் காட்சியே இக்கொள்கையின் முதல் மையக்கூறு. ப்ளங்க்கின் மாறிலி ( h ) இந்நுண்மையின் அடிப்படை அலகினை அளக்கிறது.
துளிமம் இரண்டு: அறுதியின்மை
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது. உண்மையாகவே எதிர்காலம் கணிக்க இயலாதது. இதுவே துளிம இயற்பியலின் இரண்டாவது அடிப்படை அறிதல்.
, துளிம இயக்கவியல் காட்டும் உலகில் இந்த அறுதியின்மையின் காரணமாக பொருட்கள் தொடர் தற்செயல் மாற்றத்திற்கு உட்படுகின்றன. நுண் அலகில் அனைத்தும் தொடர் அதிர்வில் இருப்பது என அனைத்து காரணிகளும் (variables) தொடர் ‘தடுமாற்ற’த்தில் இருக்கின்றன. இந்த சாஸ்வத அலையடிப்புகள் தொடர்ந்து நுண் அளவுகளிலேயே திகழ்வதால், அவற்றை நமது அன்றாட அளவுகளில் நம்மால் காண இயல்வதில்லை. ஒரு கல் அசைவற்று இருப்பதைக் காண்கிறோம். அதுவே நுண் அளவுகளில், அணுக்கள் அங்கும் இங்கும் என பரவி இடைநில்லா அதிர்வுகளில் இருப்பதைக் காண்போம். உலகை நாம் தொடர்ந்து நுணுக்கமாக் காண்கையில் அதன் நிலைத்தன்மை குறைந்து கொண்டே செல்கிறது என்பதை துளிம இயக்கவியல் வெளிப்படுத்துகிறது. நுண் கூழாங்கற்களால் அல்ல – அதிர்வுகளின், தொடர் தடுமாற்றங்களின், இமைக்கண நுண்-நிகழ்வுகளின் நுண்ணலகுத் திரள்களால் ஆனதே இவ்வுலகம்.
நவீன இயற்பியலின் இந்தக் கூறினை – ஆழத்தில் காணப்படும் நிகழ்தகவு விதிகளை – பண்டைய அணுத்துவம் முன்னரே எதிர்பார்த்திருந்தது. அணுக்களது நகர்வு கறாராக அதன் மோதல்களைச் சார்ந்தே அமைகிறது என நியூட்டனைப் போலவே டெமாகிரீடஸும் ஊகித்திருந்தார். ஆனால் அவரது இளவலான எபிக்யூரஸ், மூத்தவரின் நிச்சயத்துவத்தைத் திருத்தி, நியூட்டனது நிச்சயத்துவத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த ஹைசன்பக் போல, நிச்சயமின்மை என்பதைப் பண்டைய அணுத்துவத்திற்குள் கொண்டு வந்தார். அணுக்கள் அவ்வப்போது தனது பாதையிலிருந்து தற்செயலாகவே விலகும் என்பது எபிக்யூரஸின் கருத்து. அழகான வரிகளில் இதை லுக்ரீஷஸ் சொல்கிறார் : இந்த விலகல் ‘incerto tempore … incertisque loci’ உறுதியற்ற (uncertain) நேரத்தில் உறுதியற்ற இடத்தில் நிகழ்கிறது. இதே தற்செயல், அடிப்படை நிலையில் தோன்றும் இதே நிகழ்தகவு துளிம இயக்கவியல் காட்டும் உலகைக் குறித்த இரண்டாவது முக்கியமான கண்டறிதல்.
ஆக, ஏதோ ஒரு இடம் ‘அ’வில் இருந்து தொடங்கும் எதிர்மின்மம் அங்கிருந்து மறைந்து குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு ஏதோவொரு இடம் ‘ஆ’வில் மீண்டும் தோன்றுவதன் நிகழ்தகவை எப்படி கணிப்பது?
ரிச்சர்ட் பெய்ன்மன் 1950களில் குறிப்பாக இதைக் கணிப்பதற்கான வழிமுறையை கண்டடைந்தார்: இடம் ‘அ’விலிருந்து ‘ஆ’விற்கு ஒரு எதிர்மின்மம் செல்லக்கூடிய சாத்தியமான அனைத்து எறிபாதைகளையும் ( நேரான, வளைந்த, மாறுகோடுகளாலான….) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதையும் ஒரு எண்ணைக் குறிக்கிறது. இந்த எண்களின் மொத்தத்திலிருந்தே நிகழ்தகவினை கண்டடைய இயலும். இந்த கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதைவிட, ‘அ’விலிருந்து ‘ஆ’விற்கு செல்லும் அனைத்து பாதைகளுமே முக்கியமானவை என்பதே கவனிக்கப்பட வேண்டியது : ‘அ’விலிருந்து ‘ஆ’விற்குச் செல்லவேண்டிய எதிர்மின்மம், அனைத்து பாதைகள் வழியாகவுமே செல்கிறது. வேறு சொற்களில் சொல்வதானால், எதிர்மின்மம் ஒரு மேகத்தினுள் அவிழ்த்து விடப்பட்டு, இடம் ‘ஆ’விற்கு மர்மமாக வந்து வேறொன்றுடன் மோதுகிறது.

துளிம நிகழ்வின் நிகழ்தகவினைக் கணிக்கும் இந்த கணக்கீடு ஃபெய்மனின் பாதைகளது கூட்டல் / தொகை எனப்படுகிறது. துளிம ஈர்ப்பியலில் இதன் பங்களிப்பையும் காண்போம்.
துளிமம் 3: நிதர்சனம் சார்புடையது
உலகைப் பற்றி துளிம இயக்கவியல் காட்டும் மூன்றாவது கண்டறிதலே மிகுந்த சிக்கலான, ஆழமான, பழமையின் அணுத்துவமே எதிர்பார்க்காத ஒன்று.
பொருட்கள் எப்படி இருக்கின்றன என்பதை இக்கொள்கை விளக்கவில்லை. அவை எப்படி நிகழ்கின்றன மற்றும் ஒன்றுடன் ஒன்று உள்வினை புரிகின்றன என்பதையே விளக்குகிறது. ஒரு துகள் எங்கிருக்கிறது என்பதையல்ல, மற்றவற்றிற்காக அந்தத் துகள் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதையே விளக்குகிறது. ‘இருக்கும்’ பொருட்களால் ஆன உலகம் சாத்தியமான உள்வினைகளின் அரசாக சுருங்கியது. நிதர்சனம் உள்வினையாகச் சுருங்கியது. நிதர்சனம் தொடர்புகளாகச் சுருங்கியது.
ஒரு வகையில், சார்புக் கொள்கையின் தீவிரமான நீட்சியே இது. சார்பான வேகத்தை மட்டுமே நம்மால் உணர முடிகிறது என்பதை அரிஸ்டாட்டில் தான் முதலில் கூறினார். உதாரணமாக, ஒரு கப்பலில் இருந்து நம்முடைய வேகத்தைப் பற்றி பேசும்போது அதை கப்பலுடைய வேகத்தைச் சார்ந்தே பேசுவோம். நிலத்தில் அதனுடையதுடனேயே ஒப்பிடுவோம். நம்மால் உணர முடியாதவாறு சூரியனை புவி வலம் வருவதன் காரணம் இதுவே என்பதை கலீலியோ உணர்ந்தார். வேகம் ஒரு பொருளின் தனித்த பண்பு அல்ல. இன்னொரு பொருளைச் சார்ந்து அப்பொருளுடைய நகர்வின் பண்பு. ஐன்ஸ்டைன் இந்த சார்புக் கருதுகோளை காலத்திற்கும் நீட்டித்தார் : இரு நிகழ்வுகள் ஏக காலத்தில் நிகழ்கின்றன என்பதை குறிப்பிட்ட ஒரு நகர்வைப் பொறுத்தே சொல்ல முடியும் (மூன்றாம் அத்தியாயத்தில் இரண்டாவது அடிக்குறிப்பு). துளிம இயக்கவியல் இன்னமும் ஆழமாகப் சென்றது : ஒரு பொருளின் அனைத்து காரணிகளும் வேறொரு பொருளின் காரணிகளைச் சார்ந்தே அமைகின்றன. உள்வினைகளில் இருந்து மட்டுமே இயற்கை உலகினை வரைந்தெடுக்கிறது.
துளிம இயக்கவியல் காட்டும் உலகில், இரு பொருள்வய அமைப்புகளுக்கு இடையேயான தொடர்புகளைத் தவிர்த்து வேறெதுவும் நிதர்சனம் இல்லை. அதிலும் பொருட்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை – பொருட்கள் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்புகளே உண்டாக்குகின்றன. துளிம இயக்கவியலின் உலகம் பொருட்களால் அல்ல – நிகழ்வுகளால் ஆனது. அடிப்படை நிகழ்வுகள் நிகழ்வதன் வழியே பொருட்கள் உருவாகின்றன. 1950ல் தத்துவவியலாளர் நெல்சன் குட்மேனின் அழகிய வரிகளில், ‘மாற்றமில்லாத செயல்முறையே பொருள் என்பது’.- கடலில் எழும் அலை மீண்டும் மறைவதற்கு முன்னர் அலையாக கட்டமைந்து இருந்தது போல கல் என்பது அதன் கட்டமைப்பை (சில காலத்திற்கு(!)) நிலைநிறுத்தும் துளிம அதிர்வுகளால் ஆனது.
ஒரு துளி நீரையும் எடுத்துக் கொள்ளாமல் கடலில் நகர்ந்து கொண்டே இருக்கும் அலை என்பது தான் என்ன? அலை, பொருளாக அமைவது தன்னுடன் நகரும் பருப்பொருளால் (matter) ஆனது என்னும் நோக்கில் அல்ல. நமது உடலின் அணுக்களும் அவ்வாறே தொடர்ந்து உள்நுழைந்து வெளியே செல்கின்றன. அலைகளைப் போலவும் மற்ற பொருட்களைப் போலவும் நாமும் நிகழ்வுகளின் ஒரு சுழலே. நாம் வெறும் செயல்முறைகளே.. குறுகிய கால மாற்றமில்லாத….
துளிம இயக்கவியல் பொருளை விளக்குவதில்லை: செயல்முறைகளுக்கு இடையேயான சந்திப்புப் புள்ளிகளாக அமைந்திருக்கும் நிகழ்வுகளையும் செயல்முறைகளையுமே விளக்குகிறது.
சுருக்கமாக, துளிம இயக்கவியல் உலகைப் பற்றிய மூன்று கண்டறிதல்ளே:
- நுண்மை (granularity) – ஒரு பொருள்வய அமைப்பின் ஒரு நிலை பற்றிய தகவல்கள் – ப்ளங்க் மாறிலியால் வரையறுக்கப்பட்டு முடிவானவை.
- அறுதியின்மை (indeterminacy) – எதிர்காலம் முற்றாக கடந்த காலத்தினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மிகக் கறாரான நிகழ்வுகளும் இறுதியில் புள்ளியியல் சாத்தியங்களைச் சார்ந்தது.
- தொடர்புடைமை (Relationality) – இயற்கையின் நிகழ்வுகள் அனைத்தும் உள்நிகழ்வுகளே. ஒரு அமைப்பின் ஒவ்வொரு நிகழ்வும் இன்னொன்றைச் சார்ந்ததே.
உலகை ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும் பொருள்களாக அல்லாமல் செயல்முறைகளாகவே சிந்திக்க வேண்டும் என துளிம இயக்கவியல் நமக்குக் கற்பிக்கிறது. ஒரு உள்வினையிலிருந்து மற்றொன்றிற்கான பாதையே செயல்முறை. ‘பொருட்’களின் பண்புகள் தம்மைத்தாமே நுண் அளவில், உள்வினையின் தருணத்தில் அல்லது செயல்முறையின் நுனியில், பிறவற்றுடனான தொடர்புடன் மட்டுமே வெளிப்படுத்துகின்றன. அவற்றை கச்சிதமாக அல்ல நிகழ்தகவாகவே கணிக்க இயலும்.
பொருட்களது இயற்கையின் ஆழத்தில் போர், ஹைசன்பக் மற்றும் டிராக் மேற்கொண்ட கிறுகிறுக்கும் பாய்ச்சல் இது.
நாம் உண்மையில் புரிந்து கொள்கிறோமா?
செயல்திறனின் மகத்தான வெற்றி என்று துளிம இயக்கவியலை நிச்சயமாகச் சொல்லலாம். ஆயினும்… வாசகரே, துளிம இயக்கவியல் கூறுவதை முழுமையாகப் புரிந்து கொண்டீர்களா? உள்வினை புரியாத போது எதிர்மின்மம் இருப்பதில்லை… ஒரு உள்வினையிலிருந்து மற்றொன்றிற்குத் தாவுவதாலேயே பொருட்கள் இருக்கின்றன… இதெல்லாம் அசட்டுத்தனமாகத் தெரியவில்லையா?
ஐன்ஸ்டைனுக்கு அப்படித்தான் தோன்றியது.
ஒரு பக்கம், உலகம் குறித்த அடிப்படைகளுள் ஒன்றினை உணர்ந்து கொண்டதற்காக வெர்னர் ஹைசன்பக்கிற்கும் பால் டிராக்கிற்கும் நோபல் பரிசு வழங்க முன்மொழிந்தார். மறுபக்கம், என்ன இருந்தாலும் இவையெல்லாம் பொருளற்றவை என வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் குறைப்பட்டுக் கொண்டே இருந்தார்.
ஐன்ஸ்டைனின் எதிர்ப்பு கோபன்ஹேகனின் இளம் சிங்கங்களை தளரச் செய்தது. இயற்பியலின் பிதாமகர், எண்ணவும் முடியாதவற்றை தானே சிந்தித்தும் பிறரையும் அவ்வாறு சிந்திக்கவும் வழிகாட்டியவர், இப்பொழுது அவரது சாதனையில் இருந்து பிறந்து வரும் மற்றொரு அறியப்படாத புதிய சிந்தனைப்போக்கைக் கண்டு பின்வாங்குவது ஏற்புடையதாக இல்லை. காலம் சாஸ்வதமானது அல்ல என்றும் வெளி வளையக்கூடியது என்றும் சொன்னவர் இப்போது இயற்கை இவ்வளவு சிக்கலான ஒன்றாக இருக்காது என்கிறார்.
புதிய சிந்தனைகளை மிகப் பொறுமையாக ஐன்ஸ்டைனுக்கு போர் விளக்கினார். ஆனால் ஐன்ஸ்டைன் ஆட்சேபித்தார். புதிய சிந்தனைகளின் முரண்பாடுகளை விளக்க மன வரைபடங்களை பயன்படுத்தினார். ”முழுக்க ஒளியால் நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து ஒரே ஒரு ஒளித்துகளை தப்பிக்க விடுகிறோம் என வைத்துக் கொள்வோம்…” என்று அவரது புகழ் பெற்ற மன வரைபடமான ‘ஒளிப்பெட்டி’ தொடங்கும்.

இறுதியில் இந்த அனைத்து ஆட்சேபனைகளுக்கும் போர் எப்படியாவது பதிலளித்து விடுவார். உரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என வருடக் கணக்கில் இந்த உரையாடல் சென்று கொண்டிருந்தது. இரு ஜாம்பவான்களும் இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது அடிக்கடி பின்வாங்கி தங்களது சிந்தனைத் தரப்பை சோதித்து மாற்றவேண்டியிருந்தது. புதிய சிந்தனைகளுள் எந்த முரண்பாடும் இல்லை என்பதை ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. தான் எதிர்பார்த்தது போல விஷயங்கள் அவ்வளவு எளிய தெளிவான ஒன்று இல்லை என்பதை போர் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. புறவய யதார்த்தம் என்பது , எதனுடனும் எந்த ஒரு பரிமாற்றத்தினாலும் பாதிக்கப்படாத ஒன்று என்பதிலிருந்து ஐன்ஸ்டைன் பின்வாங்க விரும்பவில்லை. யதார்த்தம் என்பதையே புதிய தேற்றத்தின் அடிப்படையில் முற்றிலும் புதியதாக விளக்குவதன் நம்பகத்தன்மையை விட்டுத் தர போர் விரும்பவில்லை. இறுதியில். புற உலகினை புரிந்து கொள்வதில் புதிய கொள்கை பிரம்மாண்டமான முன்னெடுப்பு என்பதை ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் இயற்கை இவ்வளவு சிக்கலான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த விளக்கங்களுக்கு பின்னால் ‘பகுத்தறிவுப்பூர்வ’மான விளக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்று இறுதிவரை நம்பிக்கை கொண்டிருந்தார்.
நூற்றாண்டு கடந்த பின்னரும் நாம் இந்த புள்ளியிலேயே நின்றிருக்கிறோம். துளிமக் கொள்கையை ஏய்ப்பதில் மற்ற எல்லோரையும் விட வல்லவரான ரிச்சர்ட் ஃபெய்ன்மன் எழுதுகிறார் – ‘துளிம இயக்கவியலை எவருமே உண்மையாகப் புரிந்து கொள்ளவில்லை எனக் கூறலாம் என்று நினைக்கிறேன் ‘
இக்கொள்கையின் சமன்பாடுகளும் அதன் தொடர்விளைவுகளும் பல்துறைகளில் அன்றாடமும் பரவலாக பயன்படுத்தப் படுகிறது. ஆனாலும் அவை மர்மம் சூழ்ந்ததாகவே இருக்கின்றன : பொருள்வய அமைப்புகளை அல்ல, அவற்றிற்கு இடையேயான உள்வினைகளையும் அதன் தொடர் விளைவுகளையும் மட்டுமே விளக்குகின்றன. இதற்கு என்ன அர்த்தம்?
இக்கொள்கையின் அர்த்தம் என்னவென்று இயற்பியலாளர்களும் தத்துவவாதிகளும் தொடர்ந்து வினவிக்கொண்டே இருக்கிறார்கள். சமீப வருடங்களில் இது குறித்து கட்டுரைகளும் கருத்தரங்குகளும் பரவலாகின்றன. நூற்றாண்டு கடந்தும், துளிம இயக்கவியல் என்றால் என்ன? நிதர்சனத்தின் இயற்கையுள் ஆழிறங்கும் பாய்ச்சலா? தற்செயலாக சரியாக இயங்கும் ஒரு பிழையா? முடிவடையாத புதிரின் ஒரு பகுதியா? இயற்கையின் கட்டமைப்பு குறித்த ஒரு பிரம்மாண்டமான விடைக்கான ஆழ்தடயமா?
துளிம இயக்கவியல் குறித்து நான் அளிக்கும் விளக்கம், இருப்பதிலேயே குறைந்த பொருளற்றதாகத் தோன்றுகிறது. ‘சார்பான விளக்கம்’ ( relational Interpretation ) எனப்படும் இதைப் பற்றி பஸ்ஸ வான் ஃப்ராஸன் ( Bas van Fraassen) , மிஷெல் பிட்பௌள ( Michel Bitbol), மாஹ்ரோ தொராஹ்தோ ( Mauro Dorato) முதலான தத்துவவாதிகள் விவாதித்துள்ளனர். எனினும் துளிம இயக்கவியல் குறித்து எப்படி சிந்திப்பது என்பதில் இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை: இன்னும் சில தத்துவவாதிகளும் இயற்பியலாளர்களும் வேறு வகையான விளக்கங்களைப் பற்றி யோசிக்கிறார்கள். மாறுபடும் அபிப்பிராயங்களுடன் நாம் அறியாத ஒன்றின் முனையில் இருக்கிறோம்.
துளிம இயக்கவியல் ஒரு இயற்பியல் கொள்கை மட்டுமே. ஒருவேளை உலகம் குறித்த இன்னமும் புதிய ஆழமான புரிதலால் இதுவும் நாளை மாற்றியமைக்கப்படலாம். நமது சிந்தனைக்கு ஏற்றவாறு இதை நீவி சரியாக்க சில விஞ்ஞானிகள் முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இதன் அபாரமான ஸ்தூல வெற்றி இதனை இன்னமும் முக்கியமாகக் கருத வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உண்மையில் மாற்ற வேண்டியது இந்த கொள்கையையா அல்லது இதை விசித்திரமாகக் காணும் நமது மட்டுப்பட்ட சிந்தனைகளையா?
இந்த தேற்றத்தின் தெளிவின்மை துளிம இயக்கவியலின் பிழையல்ல – நமது கற்பனையின் எல்லையே. துளிம உலகைப் ‘பார்க்க’ முயல்கையில், இமயமலையைப் பற்றி விவரிக்க முயலும் ஒருவனது காலடிக்கு அடியில் இருட்டறையில் வாழும் எலியின் நிலையில் அல்லது ப்ளேட்டோவின் இருட்குகையின் பின்பக்கம் இருப்பவரது நிலையில் இருக்கிறோம்.
ஐன்ஸ்டைன் இறந்த போது அவரது பிரதம ‘எதிராளி’யான போர் ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினர். சில ஆண்டுகளுக்கு பிறகு போர் இறந்த பிறகு, அவரது ஆய்வுக்குறிப்புகளை எழுதி வைக்கும் கரும்பலகையை யாரோ புகைப்படம் எடுத்திருந்தார். அதில் ஒரு வரைபடம் இருந்தது. ஐன்ஸ்டைனின் மன வரைபடமான ‘ஒளி நிரம்பிய பெட்டி’யின் வரைபடம். தனக்குத் தானே போட்டியிட்டு மேலும் தெளிவாக விஷயங்களை அறிந்து கொள்ள முயற்சித்ததையும் அதில் தொடர்ச்சியாக சந்தேகத்தை கிளறிவிடுவதும் என செயல்பட்டதன் அடையாளம் அது.
இந்த நிரந்தர சந்தேகமே அறிவியலின் ஆழூற்று.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
