ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)

புதன்கிழமைகள். “நீங்க ஏன் மளிகை வாங்க மான்ஹாட்டனுக்குப் போகிறீங்க?” எனக் கேட்டாள் ஆமரில்லிஸ். “இங்கேயே வாங்கறது சுலபமா இருக்காது?”

“மலிவாயிருக்கும்,” என்றார் அவர். 

“உங்களுக்கு நிச்சயமாத் தெரியுமா இது?”

“மலிவாயிருக்கும்.”

அவர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவருடைய முதுகுப் பை கனமாக இருக்கும், அதுவும் அவர் அரிசியோ, சோயா பருப்போ வாங்கி இருந்தால் சுமக்க முடியாத அளவு கூட இருக்கலாம் என்று தாரா எச்சரித்திருந்தாள். சில வாரங்களில் அவர் தடுமாறி விழுந்து விடுவார் என்று கூட ஆமரில்லிஸ் அச்சப்பட்டிருந்தாள். அதையும் விடக் கவலை தருவதாக ஒன்று இருந்தது, சமீபத்தில் அவ்வப்போது அவருக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிபடாததாக ஆகியிருந்தது. ஒரு வாரம் நிலவறை ரயில் நிலையத்திலிருந்து தன் அடுக்ககத்துக்கு வரும்போது அவர் வழி தவறித் தொலைந்து போயிருந்தார். அதிர்ஷ்ட வசமாக, தன் வேலை நேரத்துக்குப் பிறகு ஆமரில்லிஸ் அன்று அவரைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள்; பூங்காவில் குளிரில் அவதிப்பட்டுக் கொண்டு, குழம்பிப் போயிருந்த நிலையில் அவரை அவள் கண்டு பிடித்தாள். அடுத்த வாரம் ஆனால், அவர் நல்ல நிலையிலிருந்தார்.  அதற்கடுத்த வாரம் அவர் மறுபடியும் வழி தவறிப் போயிருந்தார், இந்த முறை அவர் பூங்காவில் இல்லை, மாறாக போக்குவரத்து அதிகமாக இருந்த தெருக்களில் தன் கனமான முதுகுப் பையோடு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்திருக்கிறார். புது நூலகத்தின் முன்னிருந்த திறந்த வெளியைக் கடந்து கொண்டிருந்த அவரை ஆமரில்லிஸ் கண்டு பிடிக்கும்போது அவருடைய முழு உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் ஏன் நூலகத்துக்குள்ளாவது போயிருக்கவில்லை? அவருடைய கால்களும், தோள்களும் தோலுரிந்து கொப்பளித்துப் போயிருந்தன. அவர் அத்தனை களைத்துப் போயிருந்ததால், அடுக்ககத்துக்குள் நுழைந்தபோது தடுமாறிக் கீழே விழவிருந்தார், அவள் தேநீர் தயாரித்துத் தருவதாகச் சொன்னபோது அதை ஏற்றவர், அவள் நீரைக் கொதிக்க வைக்கு முன்பே உறங்கிப் போயிருந்தார். 

கடைகளுக்குத் தான் அவரை அழைத்துப் போவதாக அவள் சொல்லி இருந்தாள். ஒரு வாடகைக் காருக்குத் தான் பணம் கொடுப்பதாகவும் சொன்னாள். 

பிடிவாதக்காரர். தாரா சொன்னதைப் போலவேதான் இருந்தார்- துன்பம் கொடுப்பவர் இல்லை, ஆனால் பிடிவாதம். 

அவருடைய நிலவறை ரயில் வரும் நேரத்தில், அவருக்காக ஃப்ளஷிங் ரயில் நிலையத்தில் காத்திருக்கத் துவங்கினாள். 

உண்மையில் மான்ஹாட்டனில் அவர் சென்று வருவது பற்றியும் அவள் கவலைப்படவே செய்தாள், ஆனால் அதற்குத் தான் என்ன செய்ய என்பது அவளுக்குத் தெளிவாகவில்லை. ரகசியமாக அங்கு அவர் பின்னேயே போய், அவர் திரும்பும்போது அவருக்குப் பின்னாலேயே வருவதா? அவர் மான்ஹாட்டன் பகுதியில் நிலைகுலைவதாக ஏதும் சான்று இல்லை என்பதால் அப்படிச் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்தாள். ஒருக்கால் நாளின் முற்பகுதியில் அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்திருக்கலாம், மான்ஹாட்டன் பகுதி அவருக்கு மிக நன்றாகத் தெரிந்த இடமாக இருக்கலாம்; தாராவின் குடும்பம் அவரைச் சில வருடங்கள் முன்புதான் ஃப்ளஷ்ஷிங் பகுதிக்கு இடம் மாற்றி இருந்தனர்.  மான்ஹாட்டனில் இருந்த சைனாடௌன் பகுதியில் கூட அவர் அத்தனை காலம் வசித்திருக்கவில்லை. அவர்களுடைய பாட்டி மார்ஜ் இறந்தபோது, அவர் வற்புறுத்தியதால், அங்கே அவரைக் குடிவைத்திருந்தனர். அதற்கு முன்னே, அவர்கள் எல்லாருமாகப் புறநகர்ப்பகுதிகளில் வசித்தனர். எப்படியிருந்தாலும், ஃப்ளஷ்ஷிங் ரயில் முனையிலும் அவரைச் சந்திப்பது எளிதாக இருக்கவில்லை. அவளுடைய வேலையில் சந்திப்புகள் அதை ஒட்டி மாற்றித் திட்டமிடப்பட வேண்டியிருந்தன; சக ஊழியர்கள் அதைக் குறை சொன்னார்கள். நல்ல வேளையாக, இது வரை கூ குடும்பத்தினர் அதைப் பொருட்படுத்தி ஏதும் சொல்லவில்லை. ஆனாலும் ஆமரில்லிஸ் தாராவிடமும், எட் அங்கிள் மீதும், தன் மீதும் கூட எரிச்சல் கொண்டாள். அலுவலகத்தை விட்டுப் போய் அவருக்குக் காத்திருப்பது என்ற சடங்கு இப்போது அவளுக்குப் பிடிக்கத் தொடங்கி இருந்தபோதும், எரிச்சல் இருந்தது. சக ஊழியர்கள் சொந்த வாழ்க்கையின் வேலைகள் பலவற்றுக்காக – தம் குழந்தைகளை மருத்துவரிடம் கொண்டு போதல், பிறந்த நாளுக்கான கேக் ஒன்றைக் கடையிலிருந்து பெறப் போதல், இப்படி எதற்காகவாவது வேலையிலிருந்து விடுபட்டுப் போவது போலத் தானும் ஒரு சொந்த வேலைக்காக விடுபட்டுப் போவது அவளுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியூட்டியது. ஏழாம் நம்பர் ரயிலும், அதிலிருந்த ஜனங்களையும் அவளுக்குப் பிடித்தது; அவருக்காக ரயில் நிலையத்தின் நடைமேடையில் பயணச் சீட்டு விற்கும் முகப்புக்கெதிரே மர பெஞ்சில் காத்திருப்பது பிடித்திருந்தது. ஃப்ளஷ்ஷிங் நிறுத்தம்தான் அந்த ரயில் பாதையில் கடைசி நிலையம். அதைக் கூட அவளுக்கு ஏன் பிடித்திருந்தது? 

அவர் கைக்கடிகாரம் ஏதும் அணிந்திருக்கவில்லை என்றாலும், எட் அங்கிள் அனேகமாக மூன்றரை மணிக்கருகில் திரும்பி வந்து விடுவார் என்பதால், அவருக்குத் தாமதமானால் அவள் கவலைப்பட்டுப் பொருமத் தொடங்கியிருந்தாள். அலுவலகத்துக்குத் திரும்பிப் போகத் தாமதமாகும் என்பதால் இல்லை, அதுவும் ஒரு பிரச்சினைதான் என்றாலும். அதைவிட, அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற கவலைதான் மீதூக்கியது. அவர் தடுக்கி விழுந்திருப்பார் என்றோ, அவருக்கு வழிப்பறிப்பு நேர்ந்தது என்றோ, அவருக்கு ஃப்ளஷ்ஷிங்குக்குத் திரும்பப் பிடிக்காமல் மான்ஹாட்டனிலேயே தங்கி விட்டார் என்றோ கவலைப்பட்டாள். ஆனால் இறுதியில், எப்போதுமே, அந்த நிலவறை ரயில் நிலையத்தில் அவளெதிரே அவர் தோன்றவே செய்தார்.  அப்போது மனம் குளிர்ந்தவளாக அவள் அவரை நோக்கித் தலையசைத்து வரவேற்று விட்டு, அவருடைய முதுகுப் பையைத் தான் வாங்கிக் கொள்ளலாமா என்று அவரோடு இழுபறியில் ஈடுபடுவாள். நாளாவட்டத்தில் அவள் இதில் ஜயித்தாள், அது அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஒன்றிரண்டு முறைகள், அவளிடம் பையைக் கொடுக்கும்போது, அவளை அவர் தாரா என்று அழைத்தார். ஒரு முறை ஆனால், அவர்கள் நடைமேடையைக் கடக்கும்போது, அவர் அவளிடம் கேட்டிருந்தார், தாராவுக்கு என்ன ஆயிற்று, அவளுக்குத் திருமணம் ஆகி விட்டதா? இல்லை, இல்லை, என்ற ஆமரில்லிஸ், அவள் பயணம் போயிருக்கிறாள் என்றாள். ஜாம்பியாவில் இருக்கிறாள். ஆஃப்ரிக்காவில். ஆனால், அவர் விடாமல் தொடர்ந்தார். அவள் யாரைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள்? மேலும், அவள் சீனரை மணந்தாளா? அவர்கள் அங்கு தானியங்கிப் படிகளில் மேலேறிக் கொண்டிருந்தனர். தலைக்கு உயரே ஆகாயத்தின் ஒளி படிப்படியாக விசாலமாகிக் கொண்டிருந்தது. அவருடைய அடுக்ககத்திற்குப் போகும் வழியில், ஒரு பாலத்தின் கீழே அவர்கள் நிற்க வேண்டி இருந்தது, அங்கு டாலருக்கு நான்கு பன்றி மாமிச ரொட்டிகள் அடங்கிய பைகளை அவர் வாங்குவார், அந்த ரொட்டிகளை இருவருக்குமே பிடித்திருந்தது.

அன்புள்ள தாரா,  உன்னோட தாத்தாவை எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் நான் இதைச் சொல்லியாக வேண்டும், அவருக்கு பயிற்சி பெற்றவர்களின் உதவி தேவையோ என்று நான் யோசிக்கிறேன். அவர் வழிதவறி அலைகிறார், இதை நான் முன்பே சொல்லி இருக்கிறேன். இன்று அவர் தன் மளிகைச் சாமான்களைப் புறாக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினார். அவர் மேன்மேலும் குழம்புவதாக எனக்குத் தோன்றுகிறது. நீ கல்யாணம் ஆனவள் என்று அவர் நினைக்கிறார் என்பதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேனா? 

கல்யாணமானவளா? ஐயோ! உன்னால் சமாளிக்க முடிகிறதா?

என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏதாவது ஆச்சென்றால் என்ன செய்வது? 

சரி, என் அப்பாஅம்மாவிடம் சொல்கிறேன். ஒருவேளை என் அப்பா அமெரிக்காவுக்குத் திரும்பி வர வேண்டி இருக்கலாம். ஆன்டி ஊருக்குத் திரும்பினதும் அவரைப் போய் ஒரு தடவை சோதிக்கச் சொல்கிறேன். இன்னும் பத்து நாளில் வருவானா, அப்படித்தான் நினைக்கிறேன். அத்தனை நாளில் வந்தால் போதுமா? இதற்கிடையே நீ இதையெல்லாம் செய்வதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!!! ஏயே இப்படி ஆயிருப்பார் என்று நிஜமாகவே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

ஆமரில்லிஸ் அவரோடு தினம் சாப்பிடத் தொடங்கினாள். மூன்று வேளையும் இல்லை, ஆனால் காலையுணவும், இரவுணவும்.  அதுதான் அவருக்கு எத்தனை சந்தோஷம் கொடுத்தது! அவர் தன் குல்லாயை எடுத்து விட்டார். புன்னகைத்தார். வாய்விட்டுச் சிரித்தார், அவருடைய நாக்கிலிருந்த வெள்ளைப் புள்ளிகள் தெரியுமளவு திறந்து சிரித்தார். அவருடைய கன்னக் குழிவுகள் தெரியத் தொடங்கின. அவர் எப்போதாவது பல் துலக்கினாரா? அவள் அவருக்கு ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட பற்பசையைக் கொணர்ந்தாள். ‘விசித்திரமாயிருக்கு,’ என்றார் அவர். அவருக்குத் தயார் உணவாக வறுத்த தானியங்களை வாங்கினாள்- உலர்ந்த திராட்சை கலந்த வறுத்த கோதுமைத் தவிடு, ஓட்ஸ் மாவில் செய்யப்பட்ட ‘சீரியோஸ்’, மற்றும் ‘லக்கி சார்ம்ஸ்’. அவர் கடலை வெண்ணெயும், தேனும் இட்ட சாண்ட்விச்களை விரும்பி உண்டார், அவற்றோடு வாழைப்பழமும் சேர்த்தால் இன்னும் உத்தமம். அது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஓரியோ குக்கிகளை விரும்பினார். அரிசி க்ரிஸ்பிக்களால் செய்யப்பட்ட இனிப்புகளையும், தயிர் பூசிய உலர்ந்த திராட்சைகளையும் சாப்பிட்டார். தன் பறவையின் எச்சங்களைச் சுத்தம் செய்யத் துவங்கினார். அதுவும் சந்தோஷம் கூடியதாக இருந்தது. தன் கூவல்களை அதிகரித்தது. 

அவர்கள் கூடுதலாக உரையாடினார்கள். 

“நீ சீன மொழியில் பேசுவதில்லை,” என்றார் அவர். 

 “இல்லைதான்,” என்றாள். “நான் பேசுவதில்லை.”

“வருந்தத் தக்க விஷயம்.”

“ஆமாம்,” என்றாள் அவள். “அது நிஜம்.” 

“என் பிள்ளைகள் விஷயத்திலும் எனக்கு இதே பிரச்சினை இருந்தது. ஆர்னி சீனாவில் வியாபாரம் செய்கிறான், அவனே கொஞ்சம் வார்த்தைகள்தான் பேசுவான். டங்கன் ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான், அதனால் கூடுதலாகப் பேசக் கூடியவன். தாராவும் அப்படி. ஆனால் ஆன்டி, அவனுக்கு ஒரு வார்த்தை கூடத் தெரியாது.”

“அது பாருங்க, என் அம்மா இங்கேதான் பிறந்தார். தாராவுடைய அப்பா மாதிரி. அதுக்கு மேலெ, என் அப்பா காரிப்பிய யூத அமெரிக்கர்.” அதற்கு மேலே சென்று, சில ஸெஃபார்டிய யூதக் குழுக்கள் யூரோப் நெடுக கதோலிக்க சர்ச் மேற்கொண்ட பல நூற்றாண்டு வேட்டையாடல் மற்றும் பெருங்கொலைகளில் இருந்து தப்பிக்க எப்படி நெதர்லாந்துக்குப் புலம் பெயர்ந்தார்கள், அங்கிருந்து டச்சு காரிப்பியத் தீவுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எப்படி குடி பெயர்ந்தனர் என்பதை எல்லாம் விளக்க முயலவில்லை. அவளுடைய அப்பாவுக்கு நேர்ந்த ரத்தக் குழாய் அடைப்புக்குப் பிறகு அதெல்லாம் ஒரு பொருட்டாக அவளுக்குத் தெரியவில்லை. 

“நீ நிஜமாக ஒரு சீனப் பெண் இல்லை, ஆனாலும் நாம் நல்லபடியாகப் பழகிக் கொண்டிருக்கிறோம்.” 

“அப்படிச் சிலநேரம் ஆகிறது.”

“சீனரோ, சீனரில்லையோ, ஒரு பாதிப்பும் இல்லை.”

“ஓ, அது பத்தி எனக்கு ஏதும் தெரியல்லை,” என்றாள் அவள். 

தன் வாழ்க்கையைப் பற்றி அவளிடம் சொன்னார். “ஜப்பானியர்கள் எப்போ வந்தாங்கங்கறது எனக்கு நினைவிருக்கு. ஜப்பானியர்கள் வந்ததும் டமார், டமார்! வெடிகுண்டுங்க. ஒரு சமயம் ஒரு சிறுமி வெடிச்சுச் சிதறினா, நான் பார்த்தேன். எங்க பார்த்தாலும் ரத்தம், அவளோட புத்தகப் பை மட்டும் சுத்தமா இருந்தது. நடு சாலையில கிடந்தது, நட்ட நடுவுல. அதை ஒரு பாறை மேல எடுத்து வச்சேன், அடுத்த நாள் அதை அங்கே காணோம். என் அம்மா எங்கிட்ட கேட்டாங்க, அதை ஏன் நீ எடுத்துக்கல்லை? அதை வேறெதுக்காவது பண்டமா மாற்றியிருக்கலாம்னு அவங்க நினைச்சாங்க. ஆனா நான் அவங்க கிட்டே சொன்னேன், என்னால் அப்படிச் செய்ய முடிந்திருக்காது. அது அவங்களை அழ வச்சுது. இந்த மாதிரி நான் யோசிச்சுகிட்டு இருந்தா, நாங்க பட்டினி கிடந்துதான் சாவோம்னு அவங்க சொன்னாங்க. ஆனா என்னால அந்தப் பையை எடுத்துக்க முடியல்லை.”

மேலும்:

“என்னோட மருமான், அவன் மனைவி, குழந்தை எல்லாரும் காச நோயால செத்துப் போனாங்க. தெற்குப் பகுதிலதான் வடக்குப் பகுதியை விட காச நோய் அதிகம், வடக்கேதான் அவங்க இருந்தாங்க. அவங்களுக்கு துரதிர்ஷ்டம். என் சகோதரனும், அவனோட மனைவியும் கூட – எல்லாரோட அதிர்ஷ்டமும் ரொம்ப மோசம்.”

மேலும்:

“நானும் முதியோர் மையத்துக்குப் போய்கிட்டிருந்தேன். எனக்கு ஒரு பெண் தோழி கூட இருந்தா. கான்டோனியப் பெண். அவளுக்கு காரவோக்கியில பாடப் பிடிக்கும்- மைக்ரொஃபோனைப் பிடிச்சுகிட்டு ஏதாவது கான்டொனிய நாடகப் பாட்டைப் பாடுவா. குண்டா, அருமையா இருப்பா. நாங்க சேர்ந்து எங்கேயாவது சாப்பிடப் போனா, யாராவது மூக்கை நீட்டறவங்க பின்னாலேயே வருவாங்க- வெளிச்சம் போட்டுக் காட்டணுமாம். ஆனா எங்களுக்குத் தப்பிச்சுக்கத் தெரிஞ்சிருந்துது. இப்ப அங்கே யாரெல்லாம் திரியறாங்க, எங்கேயிருந்து வரவங்கன்னு யாருக்குத் தெரியும்? வயசானவங்க மாண்டரின்ல பேசத் தெரியாதவங்க, இளசுங்க பேசறாங்க, ஆனா அவங்க பேசறத்தை யாரால கேட்டுகிட்டு இருக்க முடியும்? அவங்க நினைப்பே எப்பவும் பணம், பணம், பணம்தான். என் பெண்டாட்டி அப்படித்தான் இருந்தா. மார்ஜ். அவ இப்ப போய்ச் சேர்ந்துட்டா. என்னோட அந்தப் பெண் தோழி, அவளும் போயாச்சு. என் நண்பர்கள் எல்லாரும் போய்ட்டாங்க, செத்தாச்சு. நான் ஒர்த்தன் தான் பாக்கி நிக்கறேன். ஏன்னு எனக்குத் தெரியல்ல. ஒரு காரணமும் இல்லை இதுக்கு.”

அன்பான தாரா, உன் தாத்தாவின் பிரச்சினை எவ்வளவுக்கு வெறும் மன அழுத்தத்தாலென்னு இப்ப நான் யோசிக்கிறதாலே, முன்னெ சொன்னதைப் பத்தி எனக்குக் கூச்சமா இருக்கு. இப்போ நான் அவரோட நிறைய நேரம் செலவழிக்கிறதாலெ, அவர் பேசறார், பேசறார், நிறையப் பேசறார். அவரோட பாவனைகளே மாறிப் போச்சு. அவரோட பறவைங்க கூட மாறிட்டுதுங்க, நான் சத்தியமாச் சொல்றேன் இதை. உண்மையைச் சொன்னா, நானே இலேசாயிட்ட மாதிரி எனக்கு இருக்கு.

தாராவிடமிருந்து பதில் வருமென்று அவள் எதிர்பார்த்திருந்தாள், ஆனால் தாரா எழுதவில்லை. ஒரு வேளை அவளுடைய விடுதியில் இண்டர்நெட் வேலை செய்யவில்லையோ என்னவோ. அல்லது கிட்ட இருந்த இண்டர்நெட் கஃபே மூடிவிட்டதோ – யாருக்குத் தெரியப் போகிறது. அங்கு மின்சாரம் கிடைப்பதும் தகராறான விவகாரம். மாறாக அவளுக்கு நதேனியலிடமிருந்து ஒரு மின்னஞ்சல் கிட்டியது. 

நம்மிடையே தொடர்பு விட்டுப் போனதற்கு என்னை மன்னிக்கவும். அது ஏற்கப்பட முடியாத பிழை, எனக்குத் தெரிகிறது. நம் இருவருக்குமே நல்லது செய்வதாக நான் நினைத்திருந்தேன். இப்போது எனக்குத் தெரிகிறது, அந்த நினைப்பு தவறானது என்று. என்னை மன்னிப்பாயா! இலக்கண வழக்கங்களை இங்கு நான் பயன்படுத்துவதைக் கவனித்திருப்பாய் என்று நினைக்கிறேன். அவை உன் வேண்டுகோளை ஒட்டிச் செய்யப்படுவன, ஆனால் எனக்கு விசித்திரமாகவே இருக்கின்றன. 

மூன்று நாட்களுக்கப்புறம் அவர் மறுபடி எழுதினார்:

நீ பதில் போடாததைக் கவனித்தேன். வெளிப்படையாகச் சொன்னால், நான் மறுபடி யோசித்தபோது, நீ ஏன் பதில் போடவேண்டும் என்று தோன்றியது. மௌனத்துக்குப் பதிலாக மௌனத்தை ஏன் காட்டக் கூடாது? நம் வாழ்வில் இடம் ஒதுக்க முடியாதவற்றுக்கு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்? அந்தக் கேள்வி இரண்டாவது. என் ஊகப்படி, பதில் சொல்வதில் என்ன பலன் என்று உனக்குத் தெரியவில்லை. இது சரியா? மாறாக, நாம் அக்கறை காட்டவில்லை என்றால், நாம் எத்தனை தூரம் பனிக்கட்டி போலக் குளிர்ந்து உறைந்து போக முடியும் என்பதுஎனக்குத் தெரிந்த விஷயம். நம்மிடம் இருக்கும் சமூக உறவுகளின் வடிவுகளில் பிடிபடுபவை எத்தனை குறைவு என்பதும் எனக்குத் தெரியும். அவற்றுக்கு வெளியே எத்தனையோ இருக்கின்றன, நீர்த் தொட்டிக்கு வெளியே பொழியும் மழை போல. இதுதான் வயதான ஒருவனின் அனுபவ அறிவு. அதை உன்னை விட வயதானவனின் என்று மாற்றிப் படித்துக் கொள். 😊 இந்த அறிவை நான் கஷ்டப்பட்டுதான் கற்றேன், சென்ற பத்தாண்டுகளில் நான் எழுதிய வரிகளிலேயே கவித்துவம் மிக்க வரிகளில் இதைச் சொல்லி இருக்கிறேன். நீ இதற்கும் பதில் எழுத வேண்டும் என்றில்லை. 

அவள் இதற்குப் பதில் எழுதினாள். 

நீங்கள் சொன்னது சரிதான். இலக்கு இல்லாத உறவுகளைப் பேண எனக்கு இப்போது நேரமில்லை. நாம் என்ன எங்கேயாவது போவதாகவா இருந்தோம், என்பீர்கள் நீங்கள். இருந்தாலும், உங்களுக்கு அது நினைவில்லை என்றபோதும், நான் ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்கிறேன். என் நேரத்தை இப்படி விரயம் செய்வது எனக்குக் கட்டுப்படியாகாது.

நேரமா! உனக்கு நேரத்தைப் பற்றி என்ன தெரியும்?

உங்களுக்கு நினைவில்லை. நீங்கள் பனிக்கட்டியைப் பற்றிப் பேசினாலும், நான் என்னுடைய வாலிபத்தின் அந்தி நேரத்தில் இருந்து சொல்கிறேன், நான் ஜாக்கிரதையாக இல்லாவிடில், நான் துரிதப்படவில்லை என்றால், எத்தனை எளிதில் நொறுங்கி விடக் கூடியவளாக ஆகிவிடக் கூடும் என்பதை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். புரிந்து கொள்ள முடியாத வகையில், எப்படி நான் எளிதில் புண்படக் கூடியவளாகிவிடக் கூடும் என்பதையும். அகங்காரியாகி விடக் கூடும் என்பதை. நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? வேறெதையும் விட, நம்பிக்கை இழந்தவளாகவோ, அதனால் அவசரப்படுபவளாகவோ நான் தெரியக் கூடாது என்பது பற்றி மிகவும் கவனமாக இருக்கும் நபராக எப்படி நான் ஆகி விடக்கூடும் என்பது பற்றி. 

நீ எதாகவும் ஆக வேண்டியதில்லை. நான் என்ன உணர்கிறேன் என்று சொல்லட்டுமா? அதற்கு என்ன அச்செழுத்து வடிவை நான் பயன்படுத்த வேண்டும். 

ஒரு எழுத்தும் வேண்டாம்

உனக்குத் தெரியும்.

சில விஷயங்கள் எழுதப்படாமல் இருப்பதே மேல். 😊

அப்போது, தட்டச்சப்படாமலே அது இருக்கிறது. ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது. 

சில மணிகளுக்குப் பிறகு அவர் மறுபடி எழுதினார். 

அது இருக்கிறது அது இருக்கிறது அது இருக்கிறது

அதுதான் என்ன? அது எதாகவும் இருக்கவில்லை. அது ஏதோ ஒன்றாக இருந்தது. அது எதுவும் இல்லை. அன்று அவள் எட் அங்கிளுக்குப் பூக்கள் வாங்கி வந்தாள், அவருடைய அடுக்ககத்தின் முக்கிய அறையைப் பூராவும் சுத்தம் செய்யுமளவுக்குத் தெம்பு தன்னிடம் இருப்பதாகக் கண்டாள். அவருடைய ஜன்னல்களைக் கழுவினாள், திரைச் சீலைகள் காற்றில் உப்பி ஆடின; குளிர்காலத்தின் துவக்க நாட்களில் ஒன்றான அது, எதிர்பார்க்க முடியாதபடி வசந்த காலத்தின் தினம் போல இருந்தது. அவருக்கு விருப்பமான ஒரு பதார்த்தத்தைச் சமைத்தாள் – ட்யூனா மீன் காஸரோல். பிறகு குளிப்பதைப் பற்றி பேச்செடுத்தாள். அவர் மிதப்பவர் போல காலெட்டுகள் வைத்துக் குளியலறையை நோக்கிச் சென்றார், அவர் எதையோ எதிர்பார்ப்பவர்போலத் தெரிந்தார். 

“என் வீட்டுக்காரி,” நீரில் காலெடுத்து வைக்கையில் அவர் சொன்னார். 

“ஜாக்கிரதையா இருங்க,” என்றாள் அவள். 

“என் வீட்டுக்காரி,” அவர் சொன்னார், “அவ உசிரோட இருக்கும்போது என்னைக் குளிப்பாட்டி விடுவா.”

அவர் அழப் போகிறார் என்று தெரிந்தது, அதே நேரம் அவர் சந்தோஷத்தால் முகம் மலர்ந்து காணப்பட்டார். அவருடைய உடல் எத்தனை வயதானதாகவும் சிறியதாகவும் இருந்தது, எத்தனை ஒட்டி உலர்ந்து, எலும்பும், நரம்புகளும் தெரிவதாக இருந்தது என்பதை ஆமரில்லிஸால் நம்ப முடியவில்லை. அவர் உடலிலிருந்து வெளியே வந்து விட்டவை போலத் துருத்திக் கொண்டிருந்தன அவருடைய விலா எலும்புகள். ஆனால் அவர் சந்தோஷமாகவே காணப்பட்டார். அவருடைய முதுகில் நீரூற்றப்படும்போதும், அவருக்கு எஞ்சி இருந்த தலைமுடி கழுவப்படும்போதும் அவர் சந்தோஷப்பட்டார். அவள் அவருடைய முடியில் சோப்பைத் தடவி, கழுவினாள். அவருடைய தலையின் மேல்தோல் சிறு துகள்களாக உரிந்து வந்தது. அவள் மறுபடி சோப் இட்டு, கழுவினாள். அவருடைய தாடியில் நீர் சொட்டியது. அவருக்குத் தண்ணீர் எவ்வளவு பிடித்திருந்தது என்பதும், அங்கு பதிக்கபட்டிருந்த பச்சை நிறக் கற்களின் நடுவே நின்ற அவர் எப்படி சிவப்பாகத் தெரிந்தார் என்பதும், அவளுக்கு வியப்பூட்டின. அவர் நீரை விட்டு எழுந்திருக்கையில் அவருடைய குறி விறைத்திருந்தது என்பதும் அவளுக்கு வியப்பு தந்தது. ஆனால் அது சிறிதே எழுந்திருந்தது என்பதால் அவளுக்கு அது இன்னது என்று உடனே புரியவில்லை. சிறிதே உப்பினாற்போலத் தெரிந்தது. அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவர் நீர் சொட்டச் சொட்ட வசிப்பறைக்குள் நுழையப் போக முயன்ற போது ஒரு துண்டோடு அவரைத் துரத்திப் போகையில் அவள் சிரித்தாள். 

தாராவின் சகோதரன் ஆன்டி வந்தான். அவனுடைய தலையின் கருப்பு முடி நெருக்கமாக வெட்டப்பட்டிருந்தது, உதடுகள் மெல்லியதாக, வெளுத்திருந்தன. இருபத்தி மூன்று வயதுதான் ஆனவனென்றாலும், அவன் கழுத்துப் பட்டியில் சிறு முடிச்சோடு, இலச்சினை நெய்யப்பட்ட முழுக்கைச் சட்டையும், மணிக்கட்டுப் பட்டியைப் பிணைக்கும் சங்கிலிப் பித்தான்களும் அணிந்திருந்தான். இவனைப் போன்றவர்களை ஆமரில்லிஸ் தான் அலுவலகத்தில் அறிந்திருந்தாள்: அலுவலக ஆலொசனைக் கூட்டங்களில் இவன் போன்றவர்கள் எப்படித் தம் நாற்காலிகளில் சாய்ந்து அமர்ந்து பேனாவால் நாற்காலியின் கரங்களைத் தட்டிக் கொண்டிருப்பார்கள், முடிவுக்கு வந்திருப்பதைச் சுட்டும் வகையில் திடீரென்று முன் நோக்கிச் சாய்ந்து அமர்வார்கள் என்பதை அறிவாள். கல்லூரியில் அவன் நான்கு முறைகள் தான் படிக்கவிருந்த துறையை மாற்றினான் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால் இப்போது அவன் உறுதியான முடிவுகளெடுப்பவனாகத் தோற்றமளித்தான். அங்கே கூட்டத்துக்கான மேஜை ஏதும் இல்லாத நிலையில், சமையலறையில், தன் கால்களிடையே கை நீட்டி நாற்காலியை முன்னுக்கு இழுத்தபடி, சாப்பாட்டு மேஜை முன்னே அமர்ந்தான். அங்கு என்ன நடந்தது என்பதை அவள் விளக்கும்போது மரியாதைக்குத் தலை அசைத்திருந்தான். அவள் குளித்து விட்டதைச் சொல்லாமல் விடுத்தாள். அவன் மேஜையின் ஃபார்மைகா பரப்பில் பேனாவைத் தட்டிக் கொண்டிருந்தான். ஆனால் குறைந்த பட்சம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதை அவன் சார்பில் முன்வைக்கலாம்.  மேலும் அவன் உருப்படியான கேள்விகளைக் கேட்டான். கூர்மையாகவும் இருந்த அவை, நிலைமையைக் கையாளத் தேவையானவையாகத் தெரிந்தன. பதில் சொல்லும்போது எட் அங்கிளைப் பார்த்துச் சிரிக்க அவள் முயன்றாள் – அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாரென்றாலும், அவரையும் உரையாடலில் இணைப்பது அவள் நோக்கம். சரிந்து அமர்ந்திருந்ததால், அவரது மேல் உடல் குட்டையாகவும், அவரது முழங்கால்கள் உயர்ந்தும் தெரிந்தன. அவரது பாதங்கள் சுருங்கி விட்டதாகத் தெரிந்ததால், பாதணிகள் அவருக்கு மிகப் பெரியதாகத் தெரிந்தன. அவர் தன் குல்லாயை அணிந்து கொண்டிருந்தார். 

ஆன்டி முன்னே நகர்ந்து அமர்ந்தான், முகம் தீவிரப்பட்டுச் சுருங்கியது. 

“சரி, இவரோட புத்தித் திறன்.” அவன் பேனாவை மேஜையில் மறுபடி தட்டினான். “நாம அதை சோதிக்கணும். பிறகு, ஒரு திட்டம் தீட்டணும். நமக்கு ஒரு நீண்ட நாள் திட்டம் தேவை.” அவன் தன் வாயை இறுக்கிக் கொண்டிருந்தான், பேனாவை மறுபடி தட்டினான். அவளுக்குச் சிறிது வியப்பு தரும் வகையில், பேனாவை மேஜையில் வைத்து விட்டு, தன் கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டான், அவனுடைய கருமுடியூடே விரல்களால் கோதிக் கொண்டான், அப்போது அவனுடைய திருமண மோதிரம் பளபளத்தது. 

“இவர் இன்னும் கொஞ்ச காலம் தானாக வாழ முடியும் என்று நினைக்கிறேன்,” என்றாள் ஆமரில்லிஸ். “தினம் யாராவது ஒருத்தர் வந்து இவரைப் பார்த்து விட்டுப் போகணும். வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்தால் போதாது – தினசரி. என்னால் அதைச் செய்ய முடியாது. ஆனால் இவர் நிஜமாகவே அப்படி மோசமான நிலையில் இல்லை. தாராவிடம் ஏதும் சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று கூட நான் நினைக்கிறேன்.”

“இருந்திருக்கலாமோ…ன்னு சொன்னா…,” ஆன்டி தன் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

“அவளுக்குக் கவலை தரக்கூடாதுன்னு நினைச்சேன்.”

ஆன்டி உற்றுப் பார்த்தான். “சரிதான், நீங்க அவளுக்குக் கவலையூட்டி விட்டீங்களே.” அவன் கண்கள் மணிகளாகச் சுருங்கி, தீவிரப்பட்டிருந்தன. “உண்மையிலெ, எல்லாருக்கும் கவலை கொடுத்திருக்கீங்க. ஐம்பது மிலியன் டாலர் ஒப்பந்தம் ஒண்ணு முடிவாகவிருக்கிறத்தே எல்லாத்தையும் போட்டுட்டு, இங்கே என்ன செய்யணும்னு பார்க்க நான் வரவேண்டியதாச்சு. உங்களுக்கு இது தெரியறதா? நான்தான் மொத்தக் குடும்பத்தையும் பராமரிக்கிறேன்.:

“அது ரொம்பக் கஷ்டமான வேலைதான், ஆனா நான் இதை என்னென்னிக்குமா செய்துகிட்டிருக்க முடியாது.”

“நாங்க வேணும்னா உங்களுக்கு இதுக்குப் பணம் கொடுக்க முடியும். அது உங்களுக்குத் தெரியுமில்லையா?”

அதிர்ச்சியோடு அவள் மூச்சை உள்ளிழுத்தாள். “நன்றி, ஆனா நான் வேலையாளா இங்கே வரல்லை.”

“அப்படியா. உங்களுக்குச் செய்ய வேற நல்ல விஷயங்கள் இருக்கு போல.”

இதில் ஏதும் மறைமுகக் குத்தல் இருக்கிறதா என்று அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தும், அவளால் பாதுகாக்க முடியாத ஏதோ ஓரிடத்தில் கடினமான, குளிர்ந்த ஏதோ ஆயுதம் அழுத்துவதாக அவளுக்குப் பட்டது. அதனால் கண்ணியமாகவும், நம்பிக்கையோடும் அவள் மிருதுவாகச் சொன்னாள், “இதைச் செய்வது எனக்குச் சாத்தியமில்லை.”

தொலைக்காட்சி தொணதொணத்துக் கொண்டிருந்தது. வாயைத் திறந்து கொண்டு, எட் அங்கிள் தூங்கிப் போயிருந்தார். அவர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார் என்று உறுதி செய்வதற்காக, ஆமரில்லிஸ் அவருடைய நெஞ்சைக் கவனித்தாள். 

அறைக்கு உஷ்ணமூட்டும் ரேடியேட்டரில் ஏதோ இடித்த ஒலி கேட்டது. 

அந்தக் கணத்தில் ஆன்டி மௌனத்தைக் கலைத்து, உங்களோட தாராள மனசை நாங்க எல்லாம் மெச்சறோம் என்று சொல்லி இருந்தால், உங்க தாத்தா கிட்டே எனக்கு ஒட்டுதல் ஏற்பட்டிருக்கு, இப்ப நான் செய்யறதைத் தொடர்ந்து செய்ய முடியும் என்று கூட அவள் பதிலளித்திருக்கக் கூடும். 

மாறாக, அந்த இடிப்பொலி. அது கடைசியாக ஆன்டி சொல்லும் வரை கேட்டிருந்தது, “உங்களுக்கு வாழ்க்கை என்று இருக்கிறது,” அவன் சொன்னான்.

“இவர் உங்கள் தாத்தா, என் தாத்தா இல்லை,” என்று அவள் பதிலளித்தாள்- அத்தனை துரிதமாகப் பதிலளிக்கத் தான் தயாராக இருந்தது அவளுக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது.

மேலும் இடிப்பொலி கேட்டது. ஆன்டி தன் கண்ணிமைகளை விரல்களால் அழுத்திக் கொண்டான். “என்னை மன்னியுங்க. நான் ரொம்ப களைச்சிருக்கேன்,” என்றான். “என்னால தாங்க முடியாத நிலைங்கற அர்த்தத்துல சொல்றேன்.”

“நீங்க நிறையத் தொல்லைகள்லெ சிக்கி இருக்கீங்க போல.”

“சீனாவில இப்ப பணத்தைத் தண்ணியா செலவழிக்கிறாங்களே அது எத்தனை நாள் ஓடும்னு யாருக்குத் தெரியும், இல்லையா? அதுக்கப்புறம் நான் வெறும் பூசணிக்காயா மாறிப் போயிடுவேன். உங்களுக்குத் தெரியுமே இது, பெரிய வேலைக்கெல்லாம் லாயக்கில்லாத இன்னொரு ஆசியனாயிடுவேன், அது ஏன் அப்படி ஆகிறதுன்னு சுலபமாச் சொல்ல முடியாது. எல்லாரோடயும் பழகத் தெரியாத ஆள், அப்படி, இப்படிம்பாங்க.”

“உங்களுக்கு இதுவும் பாரமாக வேண்டாம்ங்கறீங்க.”

அவன் நிறுத்தினான், பிறகு சொன்னான், “எனக்கு வேணாம்னுதான் இருக்கு. ஆனா, நீங்க சொன்னது ரொம்ப சரி. இது உங்களோட பிரச்சினை இல்லை.”

“உங்க தாத்தா, அபாரமான மனுசர்.”

 “நாங்க யாரும் செய்ய முடியறதை விடப் பல மடங்கு கூடுதலா அவருக்குச் செய்யப்படணும், அவர் அத்தனைக்குத் தகுதியானவர். ஆனா எங்களுக்கு ஒரு வாழ்க்கை வாழ வேண்டி இருக்கு, உங்களுக்குத் தெரியுமே. என்னோட நேரத்தைச் சரியாத் திட்டமிடறதைப் பத்தி நான் ஏதாவது செய்யணும். ஆனா, தாரா இருக்காளே. தாராவுக்கோ ஆஃப்ரிக்காவைக் காப்பாத்தணும்.”

“அவ உதவணும்னு நினைக்கிறா, அவ்வளவுதான். தன்னோட வாழ்க்கையில ஏதோ அர்த்தமுள்ளதாச் செய்யணும்னு விரும்பறா, அதை இந்த அனாதைகளுக்குச் செய்றதுல ஆரம்பிச்சிருக்கா.”

 “அனாதைங்க.” அவன் தன் தலைமுடியில் கைவிரல்களை மறுபடி புதைத்துக் கொண்டான். “சின்ன, கருப்பு அனாதைங்க.”

“அப்படி எல்லாம் பேசக் கூடாது, ஆன்டி.”

“உங்களுக்குத் தெரியுதா அவ என்னன்னு? அவ வெள்ளைக்காரி கூட இல்லை, ஆனா வெள்ளையான கருணையாளி. அங்கே இருக்கிற கருப்பர்கள் அவளைப் பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அவங்க அவளைப் பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு நான் உங்களுக்குச் சொல்றேன்.”

“வேண்டாம்,” அவள் உடனே சொன்னாள். “தயவு செய்து சொல்லாதீங்க.”

அதோடு அவள் எழுந்து நின்றாள், வீட்டுச் சாவியை ஆன்டியிடம் கொடுத்தாள், எட் அங்கிளுடைய தலைக் குல்லாயில் துரிதமாக ஒரு முத்தம் கொடுக்கக் குனிந்தாள். அதன் ட்வீட் துணி சொரசொரப்பாக இருந்தது, அவர் விழிக்கவில்லை. அவள் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே போனாள். 

வெளியே நடைபாதை அறையில் அடைப்பாகவும், உஷ்ணமாகவும் இருந்தது, வீட்டுக்கு வெளியே காற்று குளிராகத் தாக்கியது. 

அந்த ஆன்டி! தாராவிடம் முழுதாக எல்லாவற்றையும் அவள் சொல்லப் போகிறாள், ஆமாம். 

வீட்டில் சேர்ந்தவள், தாராவுக்கு உடனே எழுதவில்லை. மாறாக நதேனியலோடு தான் நடத்திய கடிதப் போக்குவரத்தை எடுத்துப் படித்தாள். கணினியில் குப்பைக் கூடையில் போட்டிருந்தவற்றையும் எடுத்துத் திறந்து, அதில் கண்டு பிடித்த பரிமாற்றங்களையும் எடுத்துச் சேமித்தாள்- அவற்றைப் படித்தாள், அவற்றுக்குப் பிரதியும் எடுத்து வேறிடத்தில் சேமித்தாள். புது செய்தி என்ற தேர்வைக் க்ளிக் செய்தாள், எழுதினாள், யோசித்தாள், இன்னும் கொஞ்சம் எழுதினாள். எட் அங்கிளைப் பற்றி, தாராவைப் பற்றி, ஆன்டியைப் பற்றி. என்ன நடந்தது என்று. 

எத்தனை சுலபமாக நான் சொல்லி இருக்க முடியும், உங்கள் தாத்தா மீது எனக்கு அன்பு பிறந்திருக்கிறது. நான் அதைச் சொல்லி விட இருந்தேன், தெரியுமா. வேறு விஷயங்களையும் சொல்லி இருப்பேன். ஆனால் நான் சொல்லவில்லை, ஆன்டியால்தான் அப்படி ஆயிற்று. அவன் என்ன நினைக்கிறான் என்பது எனக்குத் தெரிந்து போயிற்று. ஆமாம், எனக்குத் தெரிந்தது. 

இதுவும் அங்கே உருப் பெற்றது:

கடைசியில் நானும் உணர்ச்சிகளால் பாதிக்கப்படுபவளாக ஆகியிருக்கிறேன் என்று இந்த இடத்தில் சொல்லலாம் போலிருக்கிறது. பாவம், எட் அங்கிள்! அவர் ரொம்பக் குழம்பிப் போய், சோகப்பட்டிருப்பார். அவருக்கு மட்டும் என்ன ஆயிற்றென்று புரிந்தால். திக்கற்றவராகவும் உணரலாம். அவருக்கு கடலை வெண்ணெயில் தேன் சேர்த்தால் ரொம்பப் பிடிக்கும் என்று உங்களிடம் சொன்னேனா? அவரை மறுபடி போய்ப் பார்க்கப் போகிறேன், அப்போது ஃப்லஃப்பர் நட்டர் கொண்டு போகவிருக்கிறேன். இதற்கிடையில், உங்களுக்கு எழுதுகிறேன் – உங்களிடம் திரும்பி வருகிறேன். இதற்கும். நம் மழைநீர் சேகரிப்பான் என்று இதை நீங்கள் சொல்லக் கூடும். நான் இதை இளம் பழுப்பு நிறத்தில், லியொனார்டோவைப் போல, பார்க்கிறேன். உங்களாலும் (அப்படிப் பார்க்க) முடியாதா? அவர் அடித்துக் கொட்டும் மழையில் இதை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும், அப்போதுதான் லியொனார்டோவைத் தவிர மற்றெல்லாம் மழையும், மூடுபனியுமாகக் காட்சி தரும். லியொனார்டோ வினோதமாக ஒளியூட்டப்பட்டிருப்பார்- ஏதோ இந்த விசித்திரமான களிப்பால் – உள்ளிருந்து ஒளியூட்டப்பட்டதைப் போல. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.