தெலுங்கு : சம்மெட்ட உமாதேவி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
‘ஹேமந்த ருது’ என்றாலே மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது மார்கழி, தை மாதங்களைக் கொண்ட முன்பனிக் காலம். மழைக் காலத்தில் விதைத்த பயிர்களின் பலனை அனுபவிக்கும் காலம். குளிர் உழைப்பாளிகளை எதுவும் செய்யாது. ஏனென்றால் அவர்கள் எந்தக் காலமானாலும் செய்யும் வேலையைத் துன்பமாக எண்ணாமல் தினசரிக் கடமையாகச் செய்து வருவார்கள்.
மாலை நேரம் விரைந்து வந்தது. கிஷன் பணியாட்களுக்குக் கூலி கொடுத்து விட்டு பச்சை மிளகாயும் வெள்ளரிக்காயும் சேகரித்த சாக்கு மூட்டையை வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினான்.
மூன்று மைல் தொலைவு சென்றவுடன் அவனுடைய பார்வை சாலையோரம் வயலில் இருந்த நீலநிற சமாதியின் மேல் விழுந்தது. சற்று முன்தான் யாரோ மலர்களை அதன் மேல் தெளித்தாற்போல அரளி, செம்பருத்தி மலர்களின் நடுவில் புன்னை மலர்க் கொத்துக்களும் தென்பட்டன.

அதைப் பார்த்தபோது, “மகனே, கிஷன்” என்று கெளரி ஆத்தா கூப்பிடுவது போலத் தோன்றியது. தன்னையே கூர்ந்து பார்த்து ஏதோ எச்சரிப்பது போலவும் இருந்தது. இறந்தவர்களைத் தம் வயலில் சமாதி செய்வது என்ன மரபோ தெரியவில்லை. தினமும் கிஷன் தன் வயல் வேலைகளுக்குப் போகும் போதும், வரும்போதும் கிஷனின் பார்வை அந்த சமாதியின் மேல் விழாமல் போகாது. யாரோ நிறுத்தினாற்போல வண்டி மெதுவாகச் செல்லும். அன்றும் அதுபோலத் தான். யாரோ அருகில் நின்று ஏதோ சொல்வது போலத் தோன்றவே திடுக்கிட்டான். யாரோ என்ன? அந்த கெளரி ஆத்தாதான். தலையைக் குலுக்கி அந்த நினைப்பை உதறிவிட்டு வண்டியை முன்னோக்கிச் செலுத்தினான்.
யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியாத சோகம் இதயத்தை இருள் போலச் சூழ்வதை உணர்ந்த கிஷன், வண்டியை மெதுவாகச் செலுத்தினான். வயல் வேலைகளை முடித்துவிட்டு கூலிகள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். வழி நெடுக பேசிக்கொண்டே சென்ற அவர்களுடைய சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கங்கே மலர்ந்திருந்த புன்னை மரங்கள் மணத்தைப் பரப்பின. அந்த வாசனையை நுகர்ந்த கிஷனுடைய மனத்தில் சிறுவயது நினைவுகள் அலையலையாகக் காட்சியளித்தன.
****
பள்ளிக்குச் செல்லும் வழியில் சிறுமிகள் புன்னை மரங்களின் கீழே ஒன்றாகக் கூடி உதிர்ந்த மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். அவனும் நண்பர்களோடு சேர்ந்து அந்தப் பெண்களுக்கு உதவுவான். பள்ளியை அடைந்தவுடன் அனைவரும் மரத்தடியில் நடந்த வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர் வரும் வரை பெண்கள் பைகளில் வைத்திருந்த மலர்களை ரகசியமாக மாலை தொடுப்பார்கள். வகுப்பறை முழுவதும் அந்த மலர்களின் நறுமணம் கமழும். சார் வந்து பாடம் நடத்தத் தொடங்கிய பின்னும் சில பெண்கள் பாடத்தைக் கேட்டபடி, சாருக்குத் தெரியாமல் பூக்களைத் தொடுப்பதுண்டு.
“காத்யாயனி, எல்லாரும் பூவை நூலில் தொடுத்தால், நீ மட்டும் நூலே இல்லாமல் காம்பைக் கொண்டு எப்படித் தொடுக்குறே?” என்று வியப்போடு கேட்பான். “எனக்கும் இது போல மாலை தொடுக்க சொல்லித் தரியா, காத்யா” என்று அவளிடம் நச்சரிப்பான்.
சுதீர், பவானி, லக்ஷ்மி, சுஜாதா, சாரதா, பாபுலால், சாகர் என்று எல்லாரும் சேர்ந்து ஆண் பெண் வேறுபாடு இன்றி விளையாடுவார்கள். ஒன்றாகச் சேர்ந்து பல மைல் தொலைவு நடந்து வயல் வேலைக்குச் செய்வார்கள். ஒன்றாக பள்ளிக்குச் செல்வார்கள். இலந்தைப் பழம், துவரங்காய், பயத்தங்காய், சோளக் கதிர் எல்லாம் பகிர்ந்து தின்பார்கள்.
அவர்கள் ஊரில் ஏழாவது வரைதான் பள்ளி இருந்தது. காத்யானி போன்ற பெண்கள் அதோடு படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலையிலும் வயல் வேலையிலும் ஈடுபட்டார்கள். ஆண்கள் சிலர் நகரத்தில் ஹாஸ்டலில் தங்கியும், உறவினர் வீடுகளில் தங்கியும் படிப்பைத் தொடர்ந்தார்கள். சிலர் ஆட்டோவிலும் சிலர் பஸ்ஸிலும் சென்று படித்து வந்தார்கள். மொத்தத்தில் கல்லூரி வரை படித்தது ஒரு ஐந்து பேர் இருப்பார்கள். அதிலும் நல்ல வேலையில் சேர்ந்தவர்கள் இரண்டு பேர்தான்.
அந்த அறியாத வயதில் காத்யாயனியின் மான் போன்ற கண்களும், நடையின் ஒய்யாரமும் அவனுடைய மனத்தில் ஏதோ சலனங்களை உண்டாக்கின. புன்னை மரங்கள் எப்போதாவதுதான் பூக்கும். ஆனால் காத்யாயனி மீதிருந்த ஆசை அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை. வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் பனிப் புயல் போல துளைத்துக் கொண்டு வந்தன.
புன்னை மலர்களின் வாசனை தன்னுடைய சிறுவயது முழுவதும் எப்படி நிரம்பியிருந்தது என்று கிஷன் ஒருமுறை நினைத்துப் பார்த்தான், வெளியில் வரமுடியாத கண்ணீர் இதயத்தை மேலும் கனக்கச் செய்தன. நெஞ்சில் எத்தனையோ ஆசைகளும் கோரிக்கைகளும் இருந்தாலும் நமக்கு என்ன வேண்டும்? நாம் எதை விரும்புகிறோம்? என்று முடிவெடுக்கும் வாய்ப்பை நமக்கு வழங்காத சூழல். சில விஷயங்கள் கை நழவிப் போன பின்னர்தான் அவற்றின் மதிப்பு தெரிய வருகிறது. அதுதான் வாழ்க்கையின் இயல்பு.
கிஷன் நன்றாகப் படிக்கக் கூடியவன். மேல்படிப்பு படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்றெல்லாம் விரும்பினான். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாமல் மன வேதனையை அனுபவித்தான். வாழ்க்கையைச் சரி செய்து கொள்ளும் முயற்சியில் இருந்த நேரத்தில் திடீரென்று அவனுடைய சிறுவயது தோழி காத்யாயனி திருமணம் செய்து கொண்டு அவனையும் அந்த ஊரையும் விட்டுச் சென்று விட்டாள் என்றறிந்து மன வேதனையடைந்தான்.
மேளதாளத்தோடு அவள் ஊரைத் தாண்டிச் சென்ற பின்புதான் அவள் மீது அவன் வளர்த்துக் கொண்டிருந்த காதலின் தீவிரம் அவனுக்கே புரிந்தது. அடிக்கடி புன்னை மரத்தடியில் தனியாக அமர்வதை வழக்கமாகக் கொண்டான். அவளை இனிமேல் அடிக்கடி பார்க்க முடியாயதென்றும் ஹேமந்த ருதுவில் மலரும் புன்னை மலர் போல எப்போதாவது பிறந்த வீட்டுக்கு விருந்தாளி போல் வந்தால்தான் உண்டு என்றும் எண்ணிய போது அவன் உடல் நடுங்கியது. யாருக்கும் தெரியாமல் கண்ணீர் உகுத்தான்.
வயதுக்கு வந்ததும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆண்களுக்கு மனைவியையும், குழந்தைகளையும் பராமரிக்கும் வசதி வரும் வரை திருமணம் செய்ய மாட்டார்கள். அவனுடைய ஆசைகளுக்கு இறக்கைகள் முளைத்து அவை வலிமையடைவதற்கு முன்பே அவனுடைய தோழி மணமாகிச் சென்று விட்ட உண்மையைப் புரிந்து, மனத்தை திடப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குச் சில காலம் பிடித்தது.
அவனுடைய நண்பர்களில் சிலர் வாழ்க்கைப் பாதையில் ஏதோ ஒரு இலக்கைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பெண்கள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருந்தது. ஆண்கள் ஒவ்வொருவராக ஒரு வேலையில் சேர்ந்த பின் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். கிஷனும் தன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து குழந்தைகளைப் பெற்று பெற்றோர் மனம் மகிழ வாழ்க்கை நடத்தி வந்தான்.
பத்தாண்டுகள் கடந்து விட்டன. காலத்தின் ஓட்டத்தோடு வாழ்க்கையும் பல திருப்பங்களோடும் மாற்றங்களோடும் சென்று கொண்டிருந்தது. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்திருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக எப்போதும் தன் கண் முன் இருக்க வேண்டும் என்று அவன் விரும்பிய காத்யா தாய் வீட்டோடு வந்து விட்டாள். அவள் அவ்விதம் திரும்பி வந்தது அவன் மனத்தை வாட்டியது. அன்று மான் போல் துள்ளிக் குதித்த காத்யாவுக்கும், இன்று வாழ்க்கைச் சுமையோடு அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும் காத்யாவுக்கும் சற்றும் பொருந்தவில்லை.
****
வீட்டை அடைந்த கிஷன், கவலையோடிருந்த தாயைப் பார்த்து, “என்னாச்சும்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டான்.
“என்னத்தச் சொல்றதுடா? பாவம் காத்யா. அவளோட அம்மாவும் அப்பாவும் அத்தனை சின்ன வயசுல அவளுக்குக் கல்யாணம் செய்யணும்னு நினைக்கல. ஏதோ வேலையா நம்ப ஊருக்கு வந்த ராம்நாயக், கல்யாணம் செஞ்சுகிட்டா காத்யாவைத் தான் செஞ்சுக்குவேன்னு பிடிவாதம் புடிச்சதால, சரின்னு எப்படியோ ஒரு பொண்ணுக்காவது கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா அந்த பாரமாவது கொறையும்னு நினச்சு அவ அப்பன் பத்தே நாள்ல கல்யாணத்தை பண்ணி அனுப்பிட்டான். அவ கல்யாணத்தின்போது அவ அப்பனுக்கு எந்த வசதியும் இல்ல. மகளுக்கு வீடு, நெலம், நகை நட்டு எதுவும் கொடுக்கல. அந்த ராம்நாயக்கும் எதுவும் கேக்கல. அதுக்கு அப்புறம் இந்தப் பத்து வருஷத்துல அவ அப்பன் நல்லா சம்பாதிச்சுட்டான். இப்போ காத்யாவுக்கு மூணு குழந்தைங்க. அந்த ராம்நாயக் இடி விழுந்து செத்துப் போயிட்டான். பாவம். இந்தப் பொண்ணு. பொறந்த வீட்டுக்கே வந்துட்டா. அண்ணன் சம்மதிச்சாலும் அண்ணி சம்மதிக்க வேண்டாமா? வாடகைக்கு வீடு எடுத்து, கூலி வேலைக்குப் போய் பிள்ளைங்கள காப்பாத்துறா. இப்பவாவது அந்தப் பொண்ணோட பாகத்தைப் பிரிச்சு கொடுக்கலாம் இல்ல? இல்லாட்டா அவ எப்படிப் புள்ளைங்களை வளர்ப்பா? அவுங்க அண்ணன்களே அதுக்கு சம்மதிக்க மாட்டேங்குறாங்க” என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
கிஷன் அம்மா கொடுத்த தேனீரைக் குடித்து விட்டு வண்டியை எடுத்தான். கௌரி ஆத்தாவின் கடை அந்த வழியில்தான் இருந்தது. அப்போது அவள் உயிரோடு இருந்தாள். அவன் காத்யாயனியின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவள் கவனித்துக் கொண்டே இருந்தாள். சுமார் ஐந்நூறு வீடுகளைக் கொண்ட அந்த ஊரில் அனைவருக்கும் தேவையான எல்லா பொருட்களும் கௌரி ஆத்தாவின் கடையில் கிடைக்கும். அந்தப் பக்கம் செல்லும் ஒவ்வொருவரும் அவளை நலம் விசாரிப்பார்கள். யாருக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அவளிடம் வந்து பேசி ஆறுதல் பெறுவார்கள்.
காத்யாவின் வீட்டை நெருங்கியதும், “வா கிஷன்” என்று வரவேற்று கயிற்றுக் கட்டிலை போட்டு உட்காரச் சொன்னாள் காத்யா. பிள்ளைகளிடம் காசு கொடுத்து பிஸ்கட் வாங்கி வரச் சொன்னாள். குழந்தைகள் வெளியில் ஓடினார்கள். காத்யா சற்று நேரம் விசும்பி அழுதாள். சற்று நேரம் தன் வாழ்க்கையில் நேர்ந்த சோகத்தின் ஆழம் அவனுக்குத் தெரியவிடாமல் கலகலவென்று பேசினாள். நண்பர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி நினைவு கூர்ந்தாள்.
“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில் கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல கிஷனால் காத்யாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் அடிக்கடி வெளியில் சென்று வருவது வழக்கம் என்பதால் அவனுடைய மனைவி சுவாதிக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஊரில் பெரிய மனிதனாகக் கொஞ்சம் நல்ல பெயர் சம்பாதித்துக்கொண்டான் என்பதால் அவனை யாரும் எதுவும் விமரிசனம் செய்யவில்லை. காத்யாவுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி இறைவனை மனத்திற்குள் நிந்தித்தான் கிஷன். அவளை நெஞ்சோடு அணைத்து, “உனக்குத் துணையா நானிருக்கேன், காத்யா” என்று சொல்லி அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தி, அவளை தேவதை போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்புக்கும் சமுதாய கட்டுப்பாடுகளுக்கும் இடையில் நசுங்கிப் போனான் கிஷன்.
அன்று வண்டியைத் திருப்பிய போது கெளரி ஆத்தா கிஷனை நலம் விசாரித்தாள். “மகனே கிஷன், உனக்கு ரொம்ப பெரிய மனசுப்பா. சின்ன வயசுலேர்ந்து உன்னைப் பார்த்துகிட்டு வரேன். யாருக்கு எந்த கஷ்டம் வந்தாலும் உன்னால தாங்க முடியாது. எல்லோருக்கும் உதவி செய்யுணும்னு நினைப்ப. நீ காத்யாவைப் பார்க்க வரும்போதெல்லாம் அவ பிள்ளைங்களுக்கு ஒரே சந்தோசம். பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கிக்கச் சொல்லி காசு குடுப்ப இல்ல? சின்னப் பிள்ளைங்க இல்லையா? இப்போ சாப்பாட்டு மேல்தான் இருக்கும் அவுங்க மனசு” என்றாள். கிஷன் திடுக்கிட்டான். மேலுக்கு அவனைப் புகழ்வது போல இருந்தாலும் ஏதோ எச்சரிப்பது போலத் தோன்றியதால் சங்கோஜமாக உணர்ந்தான்.
இன்னொரு நாள் காத்யாவுக்குத் தலை வலி என்று சொன்னாதால், டீ போடுவதற்காக கெளரி ஆத்தாவின் கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கிவரச் சென்றான். எப்போதும் போல் நலன் விசாரித்து விட்டு, “ஐயோ அந்தப் புள்ளைக்கு தலை வலிக்குதா, கிஷன்? நாம் சிலருடைய கஷ்டங்களைத் தீர்க்கணும்னு நெனைப்போமே தவிர, நமக்குத் தெரியாமலே புது கஷ்டங்களைக் கொடுத்திடுவோம். இப்போ இந்த காத்யாவுக்குத் தலை வலி ஏன் வந்திச்சுன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினாள். “அவளுடைய தலைவலி நீ தான்” என்று சொல்லாமல் சொன்னாள் கெளரி ஆத்தா என்பதை கிஷன் புரிந்து கொண்டான். கன்னத்தில் பளார் என்று அடித்தாற்போல் உணர்ந்தான். கெளரி ஆத்தா மட்டுமே அல்ல, அவனைப் பல கண்கள் கவனித்து வந்ததை அவன் அறியவில்லை.
மறுநாள் காத்யா வேலைக்குச் சென்ற போது கெளரி ஆத்தாவின் கடைக்கு அருகில் வந்த போது, “ஏம்மா, காத்யாயனி, நீ வயசுல ரொம்பச் சின்னப் பொண்ணு. சோகத்துல முழுகி இருக்கே. இப்படிப்பட்ட சமயத்துல சின்ன புல்லு கைக்குக் கிடைச்சாக் கூட பெரிய ஆதரவு கெடைச்சாப்புல தோணும். பொம்பளைங்க வாழ்க்கையே சோகம்தான். அதுலயும் புருஷன் செத்த பொம்பளைங்களப் பத்திச் சொல்லணுமா? பிரசவ வலியை அனுபவிச்சவங்களுக்குத் தானே அந்த கஷ்டம் புரியும்? யாராவது இரக்கப்பட்டாங்கன்னா அது கொஞ்ச நேரம்தான். அவளோட வலியை அவதான் அனுபவிக்கணும். யார் வந்து கதை பேசினாலும் தீராது. அழுதாலும் போகாது. இரக்கப்படுறாங்களேன்னு சொல்லிட்டு உன்னோட வாழக்கையை யார் கையிலயும் கொடுத்திடாதே மகளே. வாழ்க்கை நரகமாயிடும் சொல்லிட்டேன்” என்றாள், வாழ்வின் மேல் நம்பிக்கை குன்றி, முகம் களையிழந்துக் காணப்பட்ட காத்யாவைப் பார்த்து.
“நீ என்னைப் பொல்லாதவன்னு நெனச்சாலும் பரவாயில்ல மகளே. ஆம்பிள கொஞ்சம் இரக்கப்பட்டு பேசினா சரியாப் போச்சா? அவனுக்கும் பெண்டாட்டி புள்ளைங்க இருக்கு இல்ல? உனக்கும் புள்ளைங்க இருக்கு. உனக்கு அவன் எப்படித் துணையா வர முடியும்? ஊருல நாலு விதமா பேசுவாங்க. அதுக்கு இடம் கொடுக்காம கவனமா இருந்துக்க மகளே” என்று நேரடியாகச் சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் சும்மா இருந்தாள் கெளரி ஆத்தா.
இன்னொரு நாள், “யாராவது வந்து உன் சோகத்தைப் பகிர்ந்துக்கணும், அழுவுற உன் கண்ணைத் துடைக்கணும்னு எதிர்பார்க்காதே மகளே. வயசுல இருக்குற பொம்பளைகிட்ட ஆம்பிளைக்கு சுகம் வேணுமே தவிர, எப்பவும் கஷ்டத்துல துணையிருப்பான்னு நெனைக்காதே தாயே. நீதான் உனக்கு வந்த கஷ்டத்தை தைரியமா தாங்கிக்கணும். இல்லாட்டா உன் புள்ளைங்க வாழ்க்கை நரகமாயிடும்” என்றாள் கெளரி ஆத்தா.
சுதீர், ரமேஷ், கிஷன் போன்றோர் அந்தப் பக்கமாகச் சென்றால் அவர்களை நிறுத்தி, “தோஸ்த், தோஸ்த்னு சொல்லிட்டு பொம்பளை வீட்டுக்குப் போய் டிபன் தின்னு, சர்பத் குடிச்சுட்டு போறது மட்டும் பத்தாது பசங்களா. பெரிய மனுஷன்களைக் கூப்பிட்டு பஞ்சாயத்து வெச்சு அந்தப் பொண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை வாங்கிக் கொடுங்க. பொண்டாட்டி புள்ளைங்க இல்லாதவனா பார்த்து அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெய்யுங்க” என்று கண்டிப்பாகக் கூறி அவர்களை எச்சரித்தாள் கெளரி ஆத்தா.
காத்யாவுக்கு மாமியார் வீட்டிலிருந்து வரவேண்டிய ஆஸ்தி பற்றியும், பிறந்த வீட்டார் பகிர வேண்டிய பாகம் பற்றியும் விவாதம் நடந்தது.
“காத்யா, நீ தைரியமா நில்லு. மாமியார் வீட்லேருந்து உனக்குச் சேர வேண்டய அரை ஏக்கர் நிலமோ, அரை அடி மனையோ எதுவானாலும் சரி, விட்டுக் கொடுக்காதே. அது உன் புள்ளைங்களைக் காப்பாத்தும். பிறந்த வீட்டார் கொடுப்பது சின்ன அளவு தங்கமானாலும் சரி சண்டை போடாம குஷியா வாங்கிக்க. நல்லது கெட்டதுக்கு உனக்கு அவுங்களும் வேணும், இவுங்களும் வேணும்” என்று காத்யாவிடம் பக்குவமாக எடுத்துக் கூறினாள் கெளரி ஆத்தா.
அது மட்டுமல்ல. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் காத்யாவையும் கிஷனையும் எச்சரித்துக் கொண்டே இருந்தாள். எதிர்பாராத விதமாக அடுத்த மூன்றாம் மாதம் உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அந்த ஊருக்கே பெரிய மனிஷியாக விளங்கிய கெளரி ஆத்தா இறந்து போனாள்.
அவளுடைய விருப்பத்தின் படி, அவளுடைய வயலிலேயே அவளுக்கு சமாதி கட்டினார்கள். நீல நிறம் பூசிய அந்த சமாதியில் குடும்பத்தினர் அடிக்கடி மலர்களைத் தூவி, விளக்கேற்றி விட்டுச் செல்வார்கள்.
கௌரிஆத்தாவின் மறைவு அவள் குடும்பத்தை விட காத்யாவுக்கும் கிஷனுக்கும் பெரிய இழப்பாக இருந்தது. அந்த வழியே போகும் போதும் வரும் போதும், கற்பனை உலகத்திலிருந்து நனவுலகத்திற்கு வரும்படியும், வாழ்க்கையைச் சரி செய்து கொள்ளும்படியும் சமாதியிலிருந்து எச்சரித்துக் கொண்டே இருப்பாள்.
ஒரு நாள் சுதீரின் வீட்டுக்கு சென்ற கிஷன், “வா சுதீர் வண்டில ஏறு” என்று கூறி அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் இருந்த புன்னை மரத்தடிக்குச் சென்றான்.
“மறுபடியும் அந்தச் சிறுவயது திரும்பி வந்தா எத்தனை நல்லா இருக்கும்?” என்று கூறி இருவரும் சிரித்துக் கொண்டார்கள். எதிரபராமல் கிஷன் சுதீரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “டேய் சுதீர், என்னால முடியலடா. காலைல எழுந்திரிச்சு, கெளரி ஆத்தாவோட வயல் வழியா எங்க வயலுக்கு போவேன் இல்ல? நிம்மதியா என் வேலையைச் செய்ய விடாம, தினமும் அந்த ஆத்தா என்னைத் தொந்தரவு செய்யுதுடா. காத்யாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமில்லடா? கஷ்டத்துல இருக்குற அவளுக்கு நாலு ஆறுதல் வார்த்த சொல்றேன். அது கூட தப்புன்னு என்னை முறைக்குதுடா அந்த ஆத்தா. நம்மள வுட்டா காத்யாவுக்கு யாரிருக்காடா?” என்று வாதாடுவது போல் கேட்டான் கிஷன்.
“தப்புன்னு யாருடா சொன்னாங்க? அது தப்புன்னு உனக்குத் தோணிச்சுன்னா நீ அதை செய்ய மாட்டே இல்ல? தப்பு இல்லாட்டா யார் சொன்னாலும் நீ நிறுத்த மாட்டே இல்லை?” சுதீர் கூறிய சொற்களைக் கேட்டு அதிர்ந்து போனான் கிஷன்.
“கிஷன், உண்மையில உன்னைத் தொந்தரவு செய்றது கெளரி ஆத்தா இல்லடா. அதோட உருவத்துல வந்து உன்னை எச்சரிப்பது உன் மனசாட்சி. நீ செய்றது தப்பில்லைன்னு உனக்கு நூறு பர்சென்ட் நம்பிக்கை இருந்தா, நீ தைரியமா முன்னேறி இருப்ப. ஆனால் எங்கயோ உனக்கு உறுத்துது. அதுனால யார்ட்டையும் சொல்ல முடியாம மனசுக்குள்ளயே புழுங்குற. காத்யா மேல உனக்கு இருப்பது காதலோ, மோகமோ இல்ல, உண்மையான நட்புன்னு நீ நினச்சா, அவ பேரைக் கெடுக்காம தொலைவா போ. ஊருக்கு பெரிய மனுஷனா அவளுக்கு வர வேண்டிய ஆஸ்தியை வாங்கிக் கொடு. அந்த ஒரு உதவி அவளுக்குப் போதும்” என்றான்.
ஏனென்று புரியாமல் சுதீரை அணைத்துக் கொண்டு வாய்விட்டு அழுதான் கிஷன். சுதீரும் நண்பனின் மனத்தை அறிந்தவனாக, அவனைத் தடுக்காமல் சோகம் தீர அழட்டும் என்று சும்மா இருந்தான். கிஷன் தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்ள ஏதுவாகத் தன் தோளைக் கொடுத்தான்.
தூசிக் காற்றை அடுத்து, மழை பெய்து நிலம் வெளுத்ததைப் போல தெளிந்த மனத்தோடு சுதீரோடு சேர்ந்து வந்த வழியே திரும்பினான் கிஷன்.
அதன் பிறகு காத்யாவுக்கு அண்டையாக பொறுப்பு மிக்க நண்பனாக நின்று உதவிய கிஷன், இப்போதெல்லாம் அந்த நீல நிற சமாதி வழியாக எந்தவித அச்சமும் இன்றி சென்று வருகிறான். படபடப்போ, தடங்கலோ இல்லாத பாதையில் மாசற்ற மனத்தோடு பயணிக்கிறான்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
