ஜார் ஒழிக – சாம்ராஜின் சிறுகதைத் தொகுப்பு

முன்னேறி வரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும், அதற்குள் மின்னும் வாழ்வின் நம்பிக்கையையும் சொல்லும் சிறுகதைகள். இது, சாம்ராஜ் எழுதிய ஜார் ஒழிக சிறுகதைத் தொகுப்பு, கின்டிலில் கிடைக்கிறது.

வாழ்வின் துயரங்களை விழைவாலும், தன் சுயத்தாலும் கடக்கும் பெண்களையும்,  இடதுசாரிக் கொள்கையின் பார்வையில், சமூகப் படிநிலையின் கொடூரத்தைப் பகடியாகச் சொல்லி, முன்னோக்கிச் செல்லும் கதாபாத்திரங்களையும், சிலர் சோகங்களையும் இக்தைகள் சொல்கின்றன.  இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளையும் இரண்டு கருப்பொருள்களாக வகுக்கலாம். 

1. குடும்பம், பாலியல், சமூக அழுத்தம் எனப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களை (மனிதர்களை) மையமாக வைத்தவை. 

2. இடதுசாரி மார்க்சியச் சித்தாந்தத்தின் விமர்சனத்தைப் பகடியுடன்,  அதன் மூலம் நுட்பமாக மனிதநேயத்தை முன்வைப்பவை. 

இந்தியச் சூழலில் நடுத்தரக் குடும்பங்கள் பொருளியல், வாழ்வுத்தரம் போன்றவற்றில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு முன் நகர்கின்றன. இந்த  நடுத்தர வர்க்க வாழ்க்கையின் கசப்பும், குரூரமும், கரடுமுரடும் இக்கதைகளில் இருண்ட நகைச்சுவையுடன் கலந்து வருகின்றன, ஆனால் அதுவும் எல்லாருக்குமான ஓர் உலகை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியத்தியங்களை காட்டுகின்றது.

வாழ்வின் குரூரம் ஓர் இருண்ட இழை என்றால், கதாபாத்திரங்கள் தன் சுயத்தாலும், விழைவாலும் மேலெழுவது மறு ஒளி இழையாகப் பின்னப்படுகிறது.  கதாபாத்திரத்தின் பயணமாக, சமூக புறக்கணிப்பும் ஏற்பும் , கதையாகச் சொல்லப்படுகிறது. 

உதாரணமாக, உறவும் சமூகமும் ஒதுக்கிய குள்ள உருவம் கொண்ட பினு, மௌனமாக, தன் வேலையை மட்டும் செய்து கொண்டு, கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் இருக்கிறான். தன்னை கேலி செய்தவர்களை எதிர்த்து அடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் உறவினராலும், சமூகத்தாலும் ஏற்கப்படுகிறான். ஒரு வெஸ்டன் கழிப்பறையைக் கூட வீட்டில் பயன்படுத்த முடியாத பினு, தனக்கான வசதிகளைப் படைத்துக் கொள்கிறான்.  உயரமான தன் பிம்பத்தைக் கண்டு தானே வியக்கிறான்.  

லட்சுமியக்காவை, குழந்தையைத் தூக்கக் கூடாது என்று அழவைத்த சொக்கிகுளம், அவளே மொட்டையும் காவியுமாகப் பரிணமித்து வரும்போது இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. மாரியம்மன் கோயில் முளைப்பாரியில் அவள் கும்மி கொட்டக் கூடாது என்ற நிலை மாறி கோவில் முளைப்பாரியை வளர்த்து முதல் பெட்டியை அவளே தூக்கிவிடுகிறாள்.

உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல் அடக்குமுறையை எதிர்கொள்ளும் இக்கதைகளின் பெண் கதாபாத்திரங்கள் தேய் வழக்கான பாதிக்கப்பட்டவர்களாக, சூழ்நிலைக் கைதிகளாக வரவில்லை. எனக்குக் கிடைக்காதது யாருக்கும் வேணாம் என்று மந்திரிக்கும் செவ்வாக்கியம் குரூரமாகத் தெரிந்தாலும், “அவளும்தான் சொல்லிப் பார்த்தா வேற என்னதான் பண்ணுவா?” என நினைக்க வைக்கிறாள்.  

அவளைப்போலவே நாற்காலியின் ஆணியை இன்னும் கொஞ்சம் லூசாக்கிவிட்டு,  ஒன்றும் அறியாதது போல் நிதானமாய் துணியைத் துவைத்து விட்டு வரும் பரமேஷ்வரி.  இந்தப் பெண்களுக்குள் கனன்றுகொண்டிருக்கும் ஓர் உணர்வு உள்ளது. அது பிறருக்கு வேதனை தருவதில் இன்பம் காண்பதா, அல்லது வெறும் தற்காப்புக்கான செயலா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் சகித்துக்கொண்டு மட்டும் இருக்கத் தேவையில்லை, எதிர்த்து அடிக்கவும் வேண்டும் என்று வாசகனை யோசிக்க வைக்கிறது. 

அதற்கடுத்து பிரசவ நாளன்றும் மூவிலேண்ட் செல்லும் மல்லிகா – ஒரு தாயாகும்பொழுது, அவள் அம்மாவின் கண்ணீரைக் காணும்பொழுது அவளுள் ஒரு திருப்பம் நிகழ்கிறது. ஒருவனை விரும்பியதற்காக அண்ணனிடம் அடி வாங்கி காது கேட்கும் திறனை இழக்கிறாள், அந்த செவியிழந்த காதில் பல வருடம் கழித்துப் பார்க்கும் பழைய காதலன் ஆறுமுகம் ஏதோ சொல்லும் காட்சி கவிதையாக அமைகிறது. 

 இந்தப் பெண்கள் தனக்கே உரிய தனித்துவமான சுதந்திரமும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக, உறுதியுடன் சாவதானமாகச் சந்தர்ப்பங்களைக் கையாள்கிறார்கள். தங்கள் விழைவால் மீள்கிறார்கள்.  தங்களுக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். 

இந்தத் தொகுப்பின் மறுபாதி கதைகள் மார்க்சியக் கோட்பாட்டின் பிரச்சாரங்களாக இல்லாமல், கோட்பாடும், நடைமுறையும் ஒன்றிணையும் இடங்களில் நிகழ்வுகளை நையாண்டியாகச் சித்தரிக்கின்றன. 

மார்க்சிய இலட்சியத் தோழர்கள், சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் புதிய வரிகளுக்கு எதிராக ‘தொழிலாளர் புரட்சி’ செய்யக் களத்துக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் புரட்சி பரிதாபமாக நாய்க்கடியில் பிசுபிசுத்துப் போகிறது. கடைசியில், களத்தெருவில் காய் விற்பனை செய்யும் கிழவிகளும், கை வண்டியில் உணவு விற்றுக்கொண்டு இருந்த பாயும் துரத்தப்படுகிறார்கள்.

எந்த வேலையிலும் நிலைக்காமல், வீட்டில் சமாளிக்வே முடியாதவனான அருள், புரட்சிகரக் கட்சிகளுக்கே எட்டாக்கனியாக இருக்கும் எஸ்.வி.டி மில்லுக்குப் புளிப்பு மிட்டாய் காட்டி சிகப்புக் கொடி ஏற்றுகிறான்.   

இடது சாரி கோஷங்களைப் புரிந்து கொள்ளாமல் பெயிண்ட் செய்யும் கணேசன், தோழர் மூர்த்தியை ஆசானாக ஏற்றுக்கொள்கிறான். கெட்ட வார்த்தையையும், பழக்கங்களையும் விட்டு விடுகிறான், ஆனால் தோழர்  மூர்த்தி அவன் சொல்லிக்கொண்டு இருந்த கெட்ட வார்த்தையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.   இரு கதாபாத்திரங்களின் முரணுடன் கதை முடிவு சுவையாகச் சொல்லப்படுகிறது. 

பல கேப்டன்களையும் கடல்களையும் கடந்து சாதாரண ஊழியனாக ஓய்வுபெற்ற அச்சுதன் நாயர் தன் லட்சியக் கனவின் கப்பல் வீடு கட்டுகிறார். அதில் கேப்டனாக நிறைவாக வாழும்போது, அற்பாயுசில் அந்தக் கப்பல் வீடு வெள்ளத்தில் காகிதக்கப்பலாக அடித்துக்கொண்டு போகிறது.

சுகாதாரத் துறை வேலையைப் பரிந்துரைத்து சகாயம் மரியா புஷ்பத்தைத் திருமணம் செய்துகொள்கிறான். வேலையில் சேரும்போது மறைத்த அவளது மத மாற்றத்தை ஆயுதமாக பயன்படுத்தி அவளை மிரட்டி வதைக்கிறான். சாட்சியான ஆல்பத்தைத் தேடித் தேடி மரியம் மன நோயால் உயிர் விடுகிறாள். அவள் கல்லறைக்குச் சென்று திரும்பும் சகாயம், எல்லாக் கதவுகளையும் திறந்துகொண்டே இருந்து, அவனும் மன நோயால் இறக்கிறான். மரியம் உயிருடன் அடைய முடியாத விடுதலையை, இறந்த பின் பெறுகிறாள். இவ்விரு கதைகளும் ஆழமான சோகத்தைச் சொல்கின்றன.

வெவ்வேறு கதைகள் போலத் தோன்றினாலும், இவை அனைத்தையும் இணைப்பது எழுத்தாளரின் சொல்லாமல் சொல்லும் மனிதநேயம்.  மதுரை வட்டார பேச்சுத் தமிழின் சுவை, சூழலின் நேரடி பிரதிபலிப்பு  இவை கதைகளுக்கு உயிர் கொடுக்கின்றன. பகடியின் வழியே  இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் ஏற்படுத்தும் எழுத்தைக் கயிறு மேல் நடக்கும் சாகசம் போல் சாம்ராஜ் நிகழ்த்தியுள்ளார். 

சிறுகதைகளின் மொழி நடை எளிமையான, தடையில்லாத வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. கடந்த காலப் பின்னணியில் சில கதைகள் நகர்ந்தாலும், இளம் தலைமுறை வாசகர்களும் சுலபமாக அணுகக்கூடிய எழுத்து. 

இந்தக் கதைத் தொகுப்பின் இரு கருப்பொருள்களுமே ஒரு விதத்தில் பிரிக்க முடியாதவை. அடக்குமுறைக்கோ, வர்க்கப் பிரிவினைக்கோ உள்ளாகும் கதா பாத்திரங்களின் பொதுவான அம்சம் , பலியாகி நிற்க மறுப்பது, வாழ்வைக் கைவிட மறுப்பது. அதுவே எதிர்ப்பின் ஒரு வடிவம் என்பதை இக்கதைகள் சொல்கின்றன.

உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்லாது, விலகி நிற்கும்  யதார்த்தவாத விவரிப்பு சில சமயம் வாசகனை அன்னியமாகுகிறது. அதனால் உச்சத் தருணங்கள் நம்மை உள்ளிழுக்காமல்  வெறும் நாடகத் திருப்பங்களாக அமைகின்றன. 

கீழ் நடுத்தர வர்க்க வாழ்க்கையை,  யதார்த்தவாத இலக்கியத்தை அனுபவிக்கவும், சமூக விமர்சனமும் கலந்த எழுத்துக்களை ரசிக்ககவும் விரும்பும் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும்  நூல். படித்து முடித்த பின்னும் இந்தக் கதாபாத்திரங்கள் நம் மனதில் நீடிப்பார்கள்.


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.