ஏழு ஸ்வரங்களுக்குள்..

கண்ணி நுண் உயிா்த்தாம்பு 

அறிபுனை கதைகள் ஆசிரியர் :.ரா.கிரிதரன் வெளியீடு :யாவரும் பப்ளிஷர்ஸ் டிச 2025

பல வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கும் கிரிதரனின் 10 அறிவியல் புனைவு கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.


அவரைப் போலவே அறிவியல் வல்லுனர்கள், மற்றும் பல துறைகளில் சிறந்த அறிவு கொண்டவர்கள் பலரும், இந்த தொகுப்பை பற்றி மிகச் சரியாகவும் அவர்கள் உணர்ந்தவாறும் பல கருத்துக்களை முன் வைத்திருக்கக் கூடும்.


இந்த நிலையில் மழலை மொழியில் நான் அறிமுகம் செய்வது எப்படி இருக்கும் என்ற ஒரு தயக்கமும் எனக்கு இருக்கிறது. ஆனாலும் வாசகர்கள் ‘தம் மழலைச் சொல் கேட்பதில் மகிழ்ச்சி கொண்டவர்கள்’ என்பதால் துணிந்து சொல்கிறேன்.

திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும்  ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி. 

நாம் அறிந்த, அறிய வேண்டிய பல ஆய்வாளர்கள் இந்தக் கதைகளில் இடம்பெறுகிறார்கள். புனைவு மீதான அசாத்திய நம்பிக்கைகளும், அறிவியல் தத்துவம் மீதான சாத்தியங்களும் இக்கதைகளால் தான் அடைந்துள்ளதாக அவரே சொல்கிறார்.

பத்து கதைகள் அடங்கியுள்ள இந்த தொகுப்பு அறிவியலின் பல துறைகளை தொட்டணைத்துச் செல்கிறது. கணிதம், இயற்பியல், வானியல், மின்காந்தவியல், மின்னணுவியல், உயிரியல், மானுடவியல், வரலாறு என்று பல தளங்களை அரவணைத்துக் கொண்டு துடிப்பாகச் செல்கிறது.

இனி கதைகளைப் பற்றி

தொகுப்பின் சிறந்த கதையாக ‘இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது’  என்பதைச் சொல்லலாம்.

பார்க்காத நிலத்திற்கு ஏங்கும் ஒரு மனிதன். அவன் இருப்பதோ கப்பல் போல கடலில் மிதக்கும் நகரம். இந்த கதை எதிர்காலத்தில் அதாவது 2124ல் நடக்கிறது. நாயகி ‘ஜாய்’ என்றும், நாயகனின் பெயர் ‘ஆனந்த்’ என்றும் வருவது பொருத்தமாக இருக்கிறது. மின்னணுவியல், மின் உற்பத்தி, பிபநாச்சி விகிதம், என்று அறிவியல் துறைகள் இடம் பெறுகின்றன. இவற்றுடன் தடையில்லாத சக்தி வருவதற்கான ஆயத்தங்களில் உலகம் மும்முரமாக ஈடுபடுகிறது. உலகத்தையே சீரழித்துக் கொண்டு, ‘உலைதி’ என்னும் இயற்கை நிகழ்வை மாற்றி அமைத்து விட முடியும் என்றும் நம்பும் ஒரு அமைப்பில் நாயகனுக்கு நம்பிக்கை இல்லை. இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில்  இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் அமைப்பில் பெயரிலியாக அவன் குறைகளைச் சொன்னாலும், பாடத்தின் நடுவில் பொய்க்குதிரைகள் மூலம் நிரலிகளில் அதிகார அமைப்பு ஊடுருவி விளையாடுகிறது. கட்டுப்படுத்த முடியாத, முடிவில்லாத சக்தியினால் என்ன பயன் என்று ஆனந்த் சிந்திக்கிறான். கதை உள்ள நிலத்தில் தன் காலடி பதியும் என்று அவன் நினைக்கிறான்.  அந்த முப்பந்தல் கூட ஒரு செயற்கை அமைப்பினால் உருவாக்கப்ப ட்டிருக்கலாம். ‘ஜாய்’ கற்பனையாகவும் தோன்றலாம்.

தலைப்புச் சிறுகதையான உயிர் தாம்பு சிறப்பாக, ஒரு ஆய்வாளரின் முக்கிய கேள்வியை நம் முன்னே மறைமுகமாக வைக்கிறது. கன்னியாகுமரியில் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராமன், எனக்கு ஏனோ சர் சிவி ராமனை நினைவிற்குக் கொண்டு வந்தார். கப்பலில் பயணித்தபோது தான் தனது மகத்தான கண்டுபிடிப்பான ‘ராமன் விளைவு’ என்பதை அவர் கண்டறிகிறார்.


கதையில் வரும் ஆய்வாளர் ராமனுக்கு ஒவ்வொரு உடல் அசைவுகளும் ஒரு உயிர் அணுவின் பிரதிநிதி.  அவர் மனிதர்களை உயிர் அணுக்களாகப் பார்க்கிறார். கதையின் மையப்புள்ளி ‘காமா-டி’ உயிர் அணுவை ஆய்வகங்களில் உற்பத்தி செய்து எதற்காகப் பயன்படுத்தலாம் என்ற அறக் கேள்வியில் அமைந்திருக்கிறது.

இயற்கைக்கு உதவும் சில செயற்கையான ‘ஆக்சிலேட்டர்களை’ அவர் செய்கிறார். ஆனால் இயற்கைக்கு மாறான, செயற்கை ஆய்வுகள் அல்லது முறைகள் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆய்வும், அதற்குத் தேவையான நிதியும், அரசியலும், மனிதர்களின் சுயநலத் தேவைகளும், இந்த கதையில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஷின்யா யமனாகா, டார்வின், நமது பிள்ளைப் பருவ பாடல்கள் என்று இந்தக் கதையில் பல விவரங்களும் வருகின்றன. உயிர் அணுக்களின் பல நிலைகள், அசையாமலும் அசைவுகளுமாக கண்முன்னே காட்சியென முடியும் இடத்தில் கதை முடிகிறது.

நாம் மனிதர்களை நிறம், இனம், குலம், இடம், உருவ அமைப்பு, பரம்பரை போன்ற பல பிரிவுகளில் அடைத்து வைக்கிறோம். ‘இட்டார் மேல் குலத்தோர் இடாதார் கீழ் குலத்தோர்’ என்பதெல்லாம் இல்லை. மேல் அரசு, கீழ் அரசு இவை இரண்டும் ஆடும் அரசியல் சதுரங்கம், அதில் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகள், நிராசைகள், பெருமூச்சுகள் எல்லாம் இந்தக் கதையில் இருக்கின்றன. ‘சிசுதரகட்டுப்பாட்டு மையத்தின் மெய் நிகர் மையம்’ என்ற ஓர் இடத்தில் சிசுக்களின் சமூக ஒழுக்கம் சார்ந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. கதை நடப்பது எதிர்காலத்தில் அதாவது 2084ல். ரஷ்யா துருக்கி அமெரிக்கா போன்ற நாடுகள் மேல் அரசு என்னும் குடைக்குள் வந்து விட்டன. அவை உயர் நிலப் பகுதிகளில் வானைத் துளைக்கும் மேல்நகரங்களை உருவாக்கிக் கொண்டன; ஏழு இடங்களில் உருவான மேல் நகரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு நூற்றாண்டுக்குள் மேல்அரசு என்னும் அமைப்பை உருவாக்கி விட்டன.
இயந்திரத்தில் இருந்து மனித உணர்வுகளை பகுத்தாய்வு செய்யும் கீழ்அரசு திட்ட ஆலோசகராக இருந்த ஒருவரின் மகள், தன் இரண்டாவது கர்ப்பமாவது நிலைத்து, பிறந்து வளர்ந்து, பின் சமூகத்திற்கும், மேல் அரசிற்கும் விசுவாசமான கூட்டு வாழ்வில் ஈடுபடுவானா என்ற ஒரு சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறாள். மனிதனுக்கு வேண்டியது சந்தோஷமான சுதந்திரமா அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்குகள் உள்ள, ஆனால் இயந்திரத்தனமான வாழ்வா? இந்தக் கேள்விதான் கதையின் மையப் புள்ளி. செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு பல கேள்விகளை நிவர்த்தி செய்தாலும் மனிதனின் முழு மனதையும், ஆழ் மனதையும் 100% அதனால் கணிக்க முடியாது என்று கிரி நம்புகிறார். சைபர்னெடிக்ஸ் கருது கோளும் மானுட இயலும் இந்தக் கதையில் கையாளப்படுகின்றன. சாம்பல் பூத்திருக்கிறது. கீழே கங்கு கனன்றால், பூத்திருக்கும் படலத்தை மென்மையாக அகற்றி, புவியின் தன்மையை, நன்மையை மீட்டெடுக்கலாம்.  


நினைத்துப் பார்க்கிறேன் இன்று கணித மேதை ராமானுஜன் இருந்தால் அவர் கணினிகளை, நிரல்களை, செயற்கை நுண்ணறிவை, முகவர் செயற்கை நுண்ணறிவாளர்கள் தங்களுக்குள்ளேயே குழு அமைத்துக் கொண்டு நிரலிகளைச் சரி செய்வதை இன்னும் பல அறிவியல் மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வார்? சௌரியால் கணிதத்தில் மட்டுமே ஆர்வம் காட்ட முடிகிறது. மஞ்சள் பார்கவா என்னும் பீல்ட்ஸ்மார்ஷல் விருது வாங்கிய கணித நிபுணரை இதில் உலவ விட்டிருக்கிறார் நம் கிரி. (இந்தியாவில், பூனா நகரில், லோதா கணித அமைப்பு ஒன்றை ₹ 20,000/- கோடி நிதியுடன் தனியார் நிறுவனமாக தொடங்கியிருக்கிறார்கள். இது கணித ஆர்வலர்கள், மற்றும் ஆய்வாளர்களுக்கான இடம். இங்கே இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் கிடையாது. மஞ்சுள் இதன் ஆலோசகர்) ‘எண் என்ப’து என்ன? அது அரூப அறிதல். ஒரு சூரியகாந்தி பூவில் காணும் ப்ராக்டல்ஸ், ரோஜாவில் பகா எண் மொட்டுக்கள், ராணித் தேனீயின் கூட்டில் இந்த எண்களின் படிகள் என்று இயற்கையில் காணும் கணிதத்தை வகைப்படுத்துகிறார் கிரி. கணக்கில் இருக்கும் லயங்கள், அந்த அழகை ஆழமாக்கும் சமஸ்கிருத பாடல்கள், பேசும் மொழியில் அமைந்திருக்கும் லயங்கள். என்று கணிதம் பரந்துபட்டு நிற்கிறது. ராமானுஜனைப் போன்ற சௌரிக்கு , ‘தன்முனைப்பை’ மஞ்சுள் பார்கவ் அதிகப்படுத்துகிறார். சௌரியின் முதல் கண்டுபிடிப்பு கணிதா1.0; அடுத்த கட்டம் 2.0 இந்த வளர்ச்சியில், ஒரு அழிவு, தன்னகத்தே உருவாகிவிடுகிறது ஆனால் அதை யாரும் கவனிக்கமுடியாதபடி பல தர்க்கங்களும் எழுகின்றன. உண்மையில் ஊடுருவும் பொய்ம்மை. கணிதா 3.0 மேல்முறையீடற்ற முற்றதிகாரத்தில் பல் அடுக்கு தொடர்புகளை உருவாக்குகிறது. கணிதாவின் நேரடி நோட்டமில்லாமல் தன்னை மறைத்துக் கொள்ளும் அல்லது அவ்வாறாக நினைத்துக் கொள்ளும் ஸ்வரா, தானும் கணித சூத்திரங்களும் மட்டுமே இருக்க முடியும் என்று சமாதானம் செய்து கொள்ளும் வேலையில் புதிர் சூத்திரங்களை உடைத்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் மீ மொழி கணிதாவின் ஆழமான நிரல் வலைக்குள் உருவாவது, எது வெல்லும் என்று காட்டிவிடுகிறது.

‘கல்ப காலங்களில்’ பயணிக்கும் ஒரு கதை மனித மனதின் நுட்பமான ஒரு பகுதியை காட்டுகிறது. விரும்புவதும் விரும்பப்படுவதும் எல்லோருக்குமான ஆசைதான். 2099ல் கதை தொடங்குகிறது. ‘தங்கள் உரையாடல்கள் இப்படியாகவும் இருந்திருக்கலாம்’ என்று வினய் தேர்ந்தெடுத்த ஸ்டோரி போர்டிலேயே  கதை விளையாட்டு தொடங்குகிறது. கண்ணுக்குத் தெரியாத தகவல்கள் மூலம் அண்டத்தை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்பது ஒரு நகை முரண். ஒரு தங்கத்தகடு, கிபி 4800 கே82 கோள். கதை இதைச் சுற்றி நடக்கிறது. ‘இழந்து போன சொர்க்கத்தின்’ பாடல் வருகிறது. பல மேக்னாக்கள் வருகிறார்கள். நிழல் கூட்டம் போல் இங்கு உயிர்களாக நடக்கும் நிஜம், தங்கத்தகட்டில் இருக்கிறது. நொடிதோறும் கொட்டும் தகவல்களைக் கொண்டு புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி வரும் மையக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஆழத்தில் இருக்கும் பிழை, அறியக் கூடியதல்ல. ஆயினும் தேடலே முந்தைய நொடியின் நீட்சியாக, ஒரு சங்கிலியாகக் காணவும் படுகிறது. ‘மேக்னா, ஐ லவ் யூ -வினய்’ இதன் அர்த்தம் என்ன என்று அவள் குழம்பிப் போகிறாள். அதுவும் அது தங்கத்தகட்டில் பொதியப்பட்டுள்ளது.

ஆழமான கதை. பல வருடங்கள் இடம்பெறும் கதை. அத்துடன் பல உலகங்களை காட்சிப்படுத்தும் கதை. இணை உலகங்களும் அவற்றை கட்டமைக்க முயலும் மேக்னாக்களும். நீலக் கோளின் புதிர் பாதை புரியாத ஒரு வினாவிற்கு இட்டுச் செல்கிறது

1947,2098,2099,4800 என்ற வருடங்கள் வந்தாலும் 4800 அசத்தல். வானவியலில், கோள் ஆய்வுகளில் முக்கியமான ஒரு எண் இந்த 4800. அதை திறமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் கிரி.

மௌனியை நினைத்துக் கொண்டேன். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’
குடும்பம் ஒரு எந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று விடுவதில்லை. அதற்குப் பிரதி பாகம் தானாகவே உருவாகிவிடும். வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி.’

இதயத் துடிப்பு தூரம், என்றும் எப்போதும், இயற்கைக்குத் திரும்புதல் போன்ற குறுங்கதைகளும், ஏ ஐ கண்ட கனவில் கவிஞன் என்ற சின்னஞ்சிறு கதையும் இத்தொகுப்பில் உள்ளன.

நம் விருப்பங்களை பற்றி நாம் திடமாக அறிந்திருக்கிறோமா? ஒரு மாயத்தன்மை அதிலிருந்தால் சுவாரஸ்யம் அல்லவா? டிஜிட்டலில் நினைவாக எப்போதுமே இருப்பது யாரால் கவனிக்கப்படும்? நமது பழைய போட்டோ ஆல்பங்களை நாம் மீள  மீளப் பார்க்கிறோமா என்ன?

நமது சுயம் எதனால் அமைக்கப்படுகிறது? முழுக்க முழுக்க தாய் மொழியால் மட்டுமே யா? ஆழ் மனதிற்கு சென்று விட முடிந்தால் எந்தத் தடையும் இல்லாமல் புதிது புதிதாகப் படைத்து விட முடியுமா?

வளர்ந்த குழந்தையாக மாறுவதற்கு ஆசையா?

எப்படி கணிதத்தை நேரடியாக செயற்கை நுண்ணறிவு அறிந்து கொள்ளாதோ அதைப்போலத்தான் கவிதையும் என்கிறார் கிரி. ஒரு விவாதம் :கவிதையால் எதையும் நிரூபிக்க முடியும்; இல்லை முடியாது; கவிதைகள் அனுபவமே; அண்டத்தை உற்று நோக்கும் கண் என்று எதுவும் இல்லை

மக்கள் கருத்துக் கேட்பு என்று பல அரசுகள் பல விதங்களில் செயல்படுகின்றன. கொள்கை அறிவிப்பாக தேர்தல் வெளியீடுகள் வந்தாலும் பெரும்பாலும் அவை பின்பற்றப்படுவதில்லை என்பதை பல வாக்காளர்கள் எதிர்த்து கேட்பதில்லை ஆயினும் அதிஜனநாயகத்தில் பல நாடுகளின் பிரதிநிதிகளின் குளிர்கால கூட்டத் தொடரில் பல குரல்கள் ஒலிக்கின்றன இதுவும் ஒரு வகையில் நாடகமே

இந்தக் கதையிலும் வான்குடி வருகிறது ஆறாவது சுழற்சி முடிவடையும் காலத்தில் வான்குடி அழியும் : காலம் திசை அறியும். மூன்று நீதிபதிகள் இடம் பெறுகிறார்கள் அன்றைய கூட்டத்தில். ஆனாலும் கணிகா என்னும் சூப்பர் கணினி வலை அமைப்பை கேள்வி கேட்கும் அதிகாரம் ஆசியாவிடம் இல்லை. இதுதான் அதிஜனநாயகம்!!

இயற்கையை அழிக்கக்கூடாது என்று குரல் எழுப்பலாம்; வான் குடிகள் அழிந்து, மண்குடிகள் மீண்டு வருவது ஒரு புது குலநிரையை உருவாக்கி விடும் என்பது நம்பிக்கை. எக்காலத்திலும் மனிதர்களை செலுத்துவதும் இதுதான், ஏமாற்றுவதும் இதுதான்.

தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, வரலாற்றின் கசடுகளை நீக்கி வாழும் முயற்சியில் மனித இனம் தன் மண்ணுடனான பிணைப்பை துண்டித்துக் கொள்ள விரும்புவதில்லை. எதிர்காலத்திலும் அந்த நம்பிக்கை வீண் போகாது என்று நாமும் நினைக்கலாம்.

அறிவியலும் அதன் தத்துவங்களும் முன் எப்போதையும் விட நம்மிடம் அதிகமாகப் புழங்குகின்றன.

நம்மால் அறிவியலின் அதி அற்புத தாண்டுதலை எந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியும் என்பது சிந்தனைக்குரியதாக இருக்கிறது. தோன்றினால் அழியும் என்பது நாம் காணும் உண்மை. என்றும் நீடித்திருக்கவும் மரணம் இல்லா பெருவாழ்வு வாழ்வதற்கும் எல்லா உயிரினங்களும் விழைகின்றன.

அதன் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?

“வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கோர் இடம் ஏது?”

நிகழ்காலமும் எதிர்காலமும் கணிப்புகளும் அறிவியல் கதைகளில் இடம்பெறுவது  முக்கியத் தேவை. அதை செவ்வனே செய்திருக்கிறார் கிரி. நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படவும் செய்கிறது.

சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு, மொழியின் மீது படர்ந்துள்ள சிறு படலம் இவற்றில், கிரிதரன் சற்று கவனம் செலுத்தினால் மிக மிக அற்புதமான கதைகளை அவரால் எழுத முடியும்.

அட்டைப்படம் மிகப் பொருத்தமான ஒன்று. அச்சுப் பிழைகளை கொஞ்சம் சீர் செய்ய வேண்டும். உதாரணமாக, கண்ணி நுண் உயிர்த் தாம்பு என்பது, ‘கண்ணின் நுண் உயிர்த் தாம்பு என்று புத்தக அச்சின் விவரங்கள் அடங்கிய பகுதியில் வந்துள்ளது.

நேர்த்தியான வடிவமைப்பு, சிறந்த அறிபுனை கதைகள், தரமான முன்னுரை என்று சிறப்பாக வந்துள்ளது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.