ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராது இல்லற இன்பங்களை எல்லாம் துறந்து இலக்கியத்தை உய்ப்பிப்பதற்காக அதன் விளிம்புகளில் ஓரமாக பராக் பார்த்துக்கொண்டிருக்கும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும். மேடையில் அதிகம் பேசிப் பழக்கமில்லாததால் ஆங்கிலமும் தமிழும் கலந்த நேர்முக மொழிபெயர்ப்புகள் நிறைந்த மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் அமைந்திருக்கும் ஒரு பேச்சாக இருக்கக்கூடும் என்ற டிஸ்கியோடு ஆரம்பிக்கிறேன். ஒரு விதத்தில் இது பொருத்தமும் கூட. நண்பர்களுடன் இணைந்திருக்கும் ஒரு வாட்சப் குழுமத்தில் இயர் ஜீரோ நாவல் எழுதிய அஜயின் படைப்புகள் குறித்த, நான் கலந்துகொண்ட உரையாடலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், நிகழ்வு நன்றாக இருந்தது, எல்லோரும் நன்றாகப் பேசினார்கள், நம்பி இருந்ததால் கொஞ்சம் பீட்டரும் இருந்தது என்று ஒரு நண்பர் கூறினார். பீட்டரைப் பக்கிரிக்கு அருகில் கொண்டு சேற்ப்பதுதான் என் வேலை என்று நானும் வேடிக்கையாகப் பதில் போட்டேன். ஆனால் இப்போது யோசிக்கையில், பீட்டரும் பக்கிரியும் இதுவே என் படைப்புகளைக் கச்சிதமாக frame செய்யும் தலைப்பாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும் இயல்பாகவே இந்த பார்வை ஓடிக்கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுகையில் அதை உலக இலக்கியத்தின் பின்புலத்தில் வைத்து, பக்கிரியைப் பீட்டரின் பின்புலத்தில் வைத்துப் பேசவேண்டும் என்ற விழைவு.
ஆனால் இதைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒரு சார்புகளற்ற வலுவான விமர்சன சூழல் தேவையாக இருக்கிறது. அதை நாம் இன்னமும் வளர்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். படைப்பாளிகளே இங்கு விமர்சனங்களையும் வழிநடத்துகிறார்கள். எதிர்வினைகளுக்கான பாதைகளையும் படைப்பாளிகளே போட்டுக் கொடுக்கிறார்கள். விமர்சனத்திற்கான எதிர்வினையும் இங்கு விமரிசகரை நோக்கியே இருக்கிறது.- அவன் எந்தக் குழுவைச் சேர்ந்தவன், அவன் உள்நோக்கங்கள் என்னவாக இருக்கும் இத்யாதி. வருங்காலத்தில் கிருஷ்ணமூர்த்தி போன்ற இளைஞர்கள் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சன சூழலை உருவாக்கினார்களென்றால் அப்போது நம் படைப்புகள் நம் மரபின் பிற படைப்புகளோடும் பிற இந்திய மொழிப் படைப்புகளோடும், அதையும் தாண்டி உலக இலக்கியத்தின் படைப்புகளோடும் ஒப்புமை செய்யப்பட்டு அவற்றின் தரம் கறாராக நிறுவப்படும். அம்மாதிரியான விமர்சனம் உருவாக்கும் பட்டியலே நாம் பொருட்படுத்தத்தக்க canon ஆக ஏற்றுக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கேனன் மொழிபெயர்க்கப்பட்டு அதை வெளி உலகத்து விமரிசகர்கள் விமர்சிக்கையில் நம்முடைய விமர்சனத்தின் திறனும் கண்கூடாகவே வெளிப்படும். மரபு கானன் இவை எல்லாம் ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகள் என்றெல்லாம் எத்தனை காலத்துக்குப் பூ சுற்றிக்கொண்டு இருக்கப் போகிறோம்.
Tradition and Individual Talent, அதாவது மரபும் தனித்துவத் திறனும் பற்றி சிறிது பேசலாம். எந்த ஒரு பொருட்படுத்தத்தக்கக் கலைஞனும் தன் மரபை நன்றாகவே அறிந்திருப்பான். அதில் தன் இடம் என்ன என்பதையும் அவன் உணர்ந்திருப்பான். அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் அதே சமயத்தில் அதை எப்படி உருமாற்றப் போகிறோம் என்ற சவாலையும் அவன் இயல்பாகவே ஏற்றுக் கொள்வான். எலியட் அரைத்த மாவுதான் ஆனால் அதை இந்த நூற்றாண்டிலும் அரைக்க வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது என்பதால்தான் இதை எல்லாம் மீண்டும் பேசுகிறேன்.

ஏனென்றால் விமர்சனம் இல்லாமல் ஒரு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நம்மால் இனங்காண முடியாது. இப்போது இவர் (சண்முகம்) பேச்சைக் கேட்டோம், பல திறப்புகளை அளிக்கவல்ல விமர்சனம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர் பேச்சிலிருந்தே உணர்ந்துகொண்டோம்.
முறையாக அடையாளப்படுத்தப் படவில்லை என்றாலும் இவை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கண்டராதித்தனுடைய திருச்சாழல் கவிதை, உலகத்தரம் வாய்ந்த அசலான தமிழ்க் கவிதை, இந்தத் திருச்சாழல் என்பது மாணிக்கவாசகர் எழுதியது. அதில் இரண்டு பெண்கள் சிவபெருமானைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அந்த காலத்து டிபேட் சொசைட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள், Pros and Cons… ஒருத்தி, என்ன இவன் காட்டில் வசிக்கிறான், சாம்பலைப் பூசிக்கொள்கிறான், பாம்பை நகையாகப் போட்டுக்கொள்கிறான், போயும் போயும் இவனைப் போய்.. என்று சிவனுக்கு எதிராகப் பேசுகிறாள். பதிலுக்கு அவள் தோழி “ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!” என்று அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு வருகிறாள். கண்டராதித்தன் என்ன பண்ணுகிறார் என்றால் அவர்கள் இருவரையும் ஒரு அஸெம்ப்ளி லைன் செட்டிங்குக்கு கொண்டுவருகிறார். அதன் ஆரம்பம் தான் எவ்வளவு அழகானது, பவுண்ட் காண்டோஸ ஆரம்பிக்கும் அதே media res அழகு; media res என்றால் ஒரு விஷயத்தை முதலிலிருந்து ஆரம்பிக்காமல் நடுவில் ஆரம்பிப்பது. And then went down to the ship என்று பவுண்டின் முதல் காண்டோ ஆரம்பிக்கிறது. அதற்கு முன்னால் நடந்ததெல்லாம் நமக்குத் தெரியாது, கவிதை And then ல ஆரம்பிக்கிறது. நம்மாள் அதை விட அந்நியோன்யமாக “தவிர நீ யாரிடமும் சொல்லாதே” என்று ஆரம்பிக்கிறார். எதைச் சொல்லாதே? அதற்கு நீங்கள் கவிதையைப் படிக்கவேண்டும்.
கிரேக்க ஆடிஸியின் ஒரு சிறு பகுதியை மட்டுமே முதல் காண்டோ பாடுகிறது. பவுண்ட் தன் diction மூலமாக ஹோமரை ஒரு ஆங்கிலோ சாக்ஸன் உலகுக்குக் கொண்டுவருகிறார்- பல உத்திகளை உபயோகிக்கிறார், உதாரணத்துக்கு swart-ship , nape-nerve போன்ற பிரயோகங்களைச் சொல்லலாம் . அதே போல் கண்டராதித்தன் “நாள்தோறும் ஞாயிறென்றால் நம்பாடும் நாய்பாடும் போலாகும் காண் சாழலோ” என்று பாடுகையில் மாணிக்கவாசகரின் நங்கைகள் இருவரும் நவீனக்காலத்து தொழிற்சாலைக்குள்ள வந்துவிடுகிறார்கள். இதில் என்ன விஷயம் என்றால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பெண் பணியிடத்திற்கு வர இயலாது. அங்கே அவள் ஒரு ஆளை டாவடித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு கல்யாணம்கூட ஆகியிருக்கலாம். இதுதான் அந்த கவிதையின் நகைச்சுவையான செட்டிங். அபாரமான கவிதை. அவசியம் வாசியுங்கள்.
அதேபோல் ஜயபாஸ்கரன், அதிகம் பேசப்படாத கவிஞர், முக்கியமான கவிஞர். பெரும்பாலும் பாலியல் சிக்கல்கள், பாலடையாளங்கள் குறித்து பூடகமாகப் பேசும் கவிதைகளை எழுதியவர். அவருடைய ஒரு கவிதையில் கோவில் திருவிழா மாதிரி ஒரு செட்டிங்கில் இரண்டு பேர் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஆம்பிளைகளா என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கிடையே ஒரு முத்தப் பரிமாற்றமும் நிகழ்ந்திருக்கலாம். அதன்பின் ஒருத்தர் கோபித்துக்கொண்டு போய்விடுகிறார். “அழித்துவிடு தொடர்பு எண்ணை” என்ற ஒரு வரி நடுவில் வருகிறது. தொடர்ந்து “தளர்ந்தேன் நான் வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே “ என்ற வரியை இவர் எழுதுகிறார். நம்மாழ்வாருடைய வரி. ஆனால் அதன் நாயகி பாவம் முற்றிலும் நவீனமான பாலியல் சிக்கல்களைப் பேசுவதற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இம்மாதிரியான தொடர்புபடுத்தும் வாசித்தல்களையே அந்த வருங்கால இளம் வாசகன் அடையாளப்படுத்துவான் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜயபாஸ்கரனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் SRK பற்றிப் பேசினார். SRK அந்தக் காலத்து இலக்கிய ஜாம்பவான், கிட்டத்தட்ட ஒரு literary evangelist என்றுகூடச் சொல்லலாம். கமபனும் மில்டனும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். யாப்பருங்கலக் காரிகையைப் பாடமாகப் படித்துவிட்டு வெண்பா, ஆசிரியப்பா போன்றவற்றைப் பயின்று கொண்டிருந்த ஜயபாஸ்கரன் SRK மாடியில் நடத்திக் கொண்டிருந்த இலக்கியக் கூட்டத்திற்குப் போகிறார். அங்கு எமிலி, டண் போன்றோரின் உன்னதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு மட்டுமல்லாது கட்டுரை அதாவது Essay என்ற வகைமையில் பொதிந்து கிடக்கும் அலகிலா இன்பங்களையும் SRK அவருக்கு அறிமுகப்படுத்துகிறார்.
Charles Lamb, சுந்தர ராமசாமி, கா.ந.சு என்று நீண்ட எங்கள் உரையாடலில் நம் நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் சண்முகத்தின் கட்டுரைகளையும் அவற்றின் கடினமான பேசு பொருளையும் , குறிப்பாக அவருக்கு உவப்பான மா. அரங்கநாதன் குறித்த கட்டுரையைப் பற்றியும் அவர் பேசினார். விடைபெறுகையில் எவரோ ஒருவரின் திருமணப் பரிசுப் பை ஒன்றில் பல நெகிழ்வூட்டும் பொருட்களை அன்பளிப்பாக எனக்கு அளித்தார் – ந.முத்துசாமியின் சி.மணி கவிதைகளைப் பற்றிய கட்டுரை, பசுவையா கவிதை என்று பல ஜாம்பவான்கள் பங்களித்த ஒரு பழைய பிரக்ஞை இதழ், எமிலி டிக்கின்சன் கவிதை வரிகள் அச்சிடப்பட்ட க்ரீடிங் அட்டைகள், அவர் நண்பரும் எமிலி உபாசகருமான மூர்த்திக்காக செய்த செப்புக் கிண்ணங்களின் மீதம், ராஜாஜியின் கட்டுரைத் தொகுப்பு, அனைத்திற்கும் மேலாக தினமலரிலிருந்து கத்தரிக்கப்பட்ட என் தாத்தா எப்போதோ எழுதியிருந்த எதிராகஜர் பற்றிய கட்டுரை….நிறைகுடம் தளும்பாது என்பதற்கான வாழும் உதாரணம் அவர். அப்படியென்றால் டால்ஸ்டாய்க்குப் பின் வந்தவற்றில் முதன்மையாக விளங்கப் போகும் என் முதல் நாவல் புத்தகச் சந்தையில் ரிலீஸ் ஆகும் என்று கூசாமல் பதிவு போட்டுக்கொள்ளும் நாம் அவரோடு ஒப்பிடுகையில் கூத்தாடும் குறைகுடங்கள் தான். சரி அதை விட்டுவிடுவோம்.
சரி, இந்த கட்டுரை என்ற வகைமையைப் பற்றிச் சற்று பேசுவோம். ஆங்கிலத்தில் essay என்ற சொல்லின் வேர்களைப் பார்த்தால் பிரெஞ்சில் எஸ்ஸெயி அதாவது முயன்று பார்த்தல் என்ற அர்த்தம், அதற்கும் முன்னால் போனோமென்றால் லத்தின் மொழியில் எக்ஸாஜியம் அல்லது எக்சிஜெரே, ஒன்றின் கனத்தை அல்லது சாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது. முயன்றுபார்த்துச் சாரத்தை அறிந்து கொள்ளுதல் என்றே நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். இது அவ்வகைமைக்குப் பல சாத்தியங்களையும் சுதந்திரத்தையும் அளிக்கிறது. என் கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது அப்பட்டமாகவே புரிந்திருக்கும். தொடக்கப் புள்ளியிலிருந்து கட்டுரை எங்கெல்லாமோ ஒரு அஸ்வமேத யாகக் குதிரையைப் போல் எங்கெல்லாமோ பயணித்துவிட்டு முற்றிலும் புதிய இடத்துக்கு வந்து சேர்வதை. சீபால்ட் கட்டுரை தமிழில் அநேகமாக யாருமே அறிந்திராத ஜான் ஹாக்ஸில் ஆரம்பித்து சூசன் சாண்டாக், கய் டாவன்போர்ட் ராபர்ட் வால்சர் வழியாக சீபால்டைக் கருப்பொருளாகச் சுவீகரித்துக் கொள்கிறது. அதற்குப்பின் அது திடீரென்று பீதோவனின் ஆர்ச் டியூக் ட்ரியோவுக்குத் தாவுகிறது , அங்கிருந்து முரகாமி டோல்பின் என்று சுற்றியபிறகுதான் சீபால்டின் வெர்ட்டிகோவைப் பேச ஆரம்பிக்கிறது. இதை வளவளத்தனம் அல்லது பீட்டர் விடறது name dropping என்றெல்லாம் குற்றம்சாட்டலாம். ஆனால் அதற்கே தெரியாமல் அது சீபால்டின் பாணியை தன் ஸ்டைலைக்கொண்டு நகலிக்கிறது. இதை நான் எழுதுவதற்கு முன் திட்டமிடவில்லை. கட்டுரையை முயன்று பார்க்கையில் இது தற்செயலாக நிகழ்கிறது. அனைத்துக் கட்டுரைகளிலும் இதுதான் நிகழ்கிறது என்று சொல்லவரவில்லை. அனால் இந்த குறிப்பிட்ட கட்டுரையில் தொடர்புபடுத்தல்களின் கிறுகிறுத்தலை அதன் போக்கில் அது கண்டைகிறது.
அதே போல் பெரக்கின் கட்டுரை லைஃப் எ யூசர்ஸ் மானுயல்லின் ஆரம்பத்தை நகலிக்கிறது. அந்தக் கட்டுரை எப்படி முடியவேண்டும் என்பதுதான் எனக்கு முதலில் தெளிவாகியது. அதுதான் அக்கட்டுரையின் கன்ஸ்ட்ரைண்ட். பெரக்கின் நாவல் தலைப்புகளில் வரும் வார்த்தைகளை மட்டுமே அந்த இறுதி வரி பிரயோகிக்க வேண்டும் – Life a user’s manual, W, Things, Man Asleep, Sixties இப்படி… கட்டுரையை அங்கே கொண்டு சேர்ப்பதுதான் என் வேலை. பெரெக்கே இம்மாதிரியான கன்ஸ்ட்ரைண்ட்களை வைத்துக் கொண்டுதான் தன் நாவல்களை எழுதினார். Void என்ற ஒரு பிரபலமான நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். E என்ற வவல் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு நாவல். இந்த நாவல் எனக்கு மிக நெருக்கமானதும்கூட, ஏனென்றால் என் மனைவி என் மனைவியாவதற்கு முன்னால் எனக்கு முதல்முதலாக பரிசளித்த நாவலும் இதுதான். என்னுள் இருந்த ஒரு வாய்டை அவள் நிரப்பினாள் என்று சொல்லலாம்.
சில சமயங்களில் புறத்தின் நிதர்சனங்களே கட்டுரையின் முடிவை நிர்ணயிக்கிறது. பெல்லோ கட்டுரை இறுதியில் அமெரிக்கத் தேர்தல் மிக மூர்க்கமாகத் தன்னை இருத்திக் கொள்கிறது, ஹெர்சாக் பாணியில் அமைந்திருக்கும். பெல்லோ வாசகி ஒருவள், அவருக்கு எழுதும் காத்திரமான கடிதத்தின் வழியே. க்ரஸ்நஹொர்கையின் சேடன் டாங்கோவப் பற்றிப் பேசுகையில் பெய்லா டாரோடா படத்தையும் பேசறது இயல்பாகவே கட்டுரையின் போக்கை நிர்ணயிக்கிறது.
கட்டுரைகள் எழுதுகையில் நான் இனங்கண்டுகொண்ட சுதந்திரத்தைத்தான் ஜயபாஸ்கரன் நேர்காணலுக்கு எடுத்துச் சென்றேன். உண்மையில் அந்த பேட்டி எங்கள் இருவரின் கட்டுரைகள் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்தான். நேரில் அதிகம் பேசாத அவரிடமிருந்து அவரையும் மீறி சில சிந்தனையோட்டங்களை கிளர்ந்தெழச் செய்வதற்கு அப்படிப்பட்ட ஒரு உருவம் தேவையாக இருந்தது. அதில் தான் நிர்வாணமாக இருப்பது போல் உணர்ந்தாலும் மனத்தடைகளையும் குற்றவுணர்வையும் களைந்திட அப்பேட்டி உதவியது என்று அவர் இம்முறை பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் கூறினார். ஒரு எழுத்தாளனுக்கு இதைக்காட்டிலும் பெரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த தொடர்புபடுத்தல் நமக்குப் புதிதல்ல. சின்ன வயதில் தாத்தா கதை சொல்லித் தூங்க வைப்பார். மெரும்பாலும் மகாபாரதக் கதைகள், கொஞ்சம் ராமாயணம், அவ்வப்போது ஷேக்ஸ்பியர் – Merchant of Venice, Macbeth, Hamlet, Romeo & Juliet இத்யாதி. பெரும்பாலும் தமிழில்தான் சொல்வார். ஆனால் அவ்வப்போது “To be or not to be” , “Pound of flesh” போன்ற ஆங்கில வரிகளை டிரமாடிக் எஃபெக்ட்டுக்காகப் பயன்படுத்துவார். பக்கிரியும் பீட்டரும். அங்கேதான் தொடங்கியது என்று நினைக்கிறேன்.
மகாபாரதத்திலேயே இதற்கான ஃபிரேம்வர்க் இருக்கிறது. மகாபாரதத்தின் இந்நூற்றாண்டு வடிவமான வெண்முரசையே எடுத்துக்கொண்டோமானால், முதற்கனல் மானசாதேவி தன் மடியில் கிடக்கும் மகன் ஆஸ்திகனுக்கு கதை சொல்வதோடு ஆரம்பிக்கிறது, அதன்பின் வசிஷ்டர், வியாசர், ஜன்மஜேயன், தக்ஷன், பீஷ்மர், அம்பை இப்படி கதைகளை அடுக்கிக்கியபடி நீள்கிறது. பிரபஞ்சத்தையே அந்த முதல் நாவல் நாகங்கள் பின்னிப்பிணைந்திருக்கும் ஒரு நாக மண்டலமாக உருவகிக்கிறது. நான் இந்நாகங்களை கதைகளாக அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். Joan didion-இன் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு We tell ourselves stories in order to live நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொரு வாசிப்புமே பிற வாசிப்புகளின் பின்புலத்தில்தான் நிகழ்கிறது. Palimpsest என்று சொல்வார்கள், அதாவது ஏற்கனவவே இருப்பது அழிக்கப்படாமல் அதற்கு மேல் புதிதாய் எழுதுவது. இதனால்தான் வாலஸ் ஸ்டீவன்ஸ் கட்டுரையில் நம்மாழ்வாரும் பாரதியும் கவிஞர் இசையும் வருகிறார்கள். அருகருகே இருத்தப்படுகையில் ஒரு பரிமாற்றம் நிகழ்கிறது. விமர்சனமும் கூட. மகோன்னதங்களுக்கு இடமளிக்காத ஒரு நூற்றாண்டில் ஒரு கடந்தகாலத்து நாயகன் எவ்வாறு போஸ் அளிக்க வேண்டும் என்று கற்பனை செய்யும் ஸ்டீவன்ஸின் கவிதைக்கருகே இசையின் அஸ்தினாபுரி, அல்லது காவிய டப்பா இருத்தப்படுகதையில் இசையின் மீதும் ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. உன்னதங்களின் மிகைபாவனைகளைத் பகடியால் கட்டுடைப்படைத் தாண்டி அவ்விழைவிற்கான தீர்வைக் காண அவர் கவிதைகள் பிரயத்தனப் படுகின்றனவா என்ற கேள்வியும்.
இறுதியாக மத்தயஸ் எனாரின் Zone பற்றிய கட்டுரையின் பேட்டி மொழிபெயர்ப்புக்கு முன்னே வரும் முகவுரை. ஐநூறு பக்கங்களுக்கு ஒற்றை வாக்கியமாக நீளும் நாவலின் உருவத்தை அது நகலிக்கிறது என்பது வெளிப்படை. அந்த கட்டுரையிலிருந்து நாவலுக்கு பயணிக்கும் வாசகன் அதை எளிதாகவே அடையாளம் கண்டுகொள்வான். அனால் அதற்கு மேலேயும் அவனிடம் ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது. பவுண்டின் காண்டோசில் வரும் feline leisure of leapords , அதாவது சிறுத்தைகளின் பூனைத்தன்மை கொண்ட ஒழிவுடன் முடியும் முகவுரையின் இறுதியில் வரும் கோலன் நிறுத்தக்குறி அவனை பவுண்டின் முதல் காண்டோவின் இறுதிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும். அத்தகைய வாசகனை நோக்கியே இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவனே நம் ஆதர்ச வருங்காலத்து விமர்சகனும்கூட. அவனை நீங்கள் எல்லோரும் விரைவில் உருவாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்று கூறி விடை பெற்றுக்கொள்கிறேன். வணக்கம்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பீட்டரும் பக்கிரியும் : டேக் 5 புத்தக வெளியீடு – ஏற்புரை”