மாசற்ற நேர்த்தி
தொடக்கம் உள்ளிருந்து
நடவுப் பாடல்கவிஞர்: மட்சுவோ பாஷோ (1644-1694)
ஃபுர்யூவ்னொ
ஹஜிமேயாவோகுனொ
தாவுயேஊதா風流の
初めや奥の
田植歌
தமிழ்நாட்டின் கம்பராக இருந்தாலும் ஜப்பானின் பாஷோவாக இருந்தாலும், தன் கவனத்தை ஈர்த்த தரமான ஏற்றம் இறைத்தல், நாற்று நடுதல் வயக்காட்டுப் பாடல்களைக் கவிதையாக அங்கீகரிக்கத் தயங்கியதில்லை.
ஏற்றம் இறைப்பவர், ‘மூங்கில் இலை மேலே’ என ஒரு வரியைப் பாடியதாகவும், அந்த அடியைப் பாதியிலேயே விட்டுவிட்டுத் தன் வேலை முடிந்ததால் புறப்பட்டதாகவும், இதைத் தொலைவிலிருந்து கேட்ட கம்பர், மூங்கில் இலைமேல் தூங்குவது என்னவாக இருக்கும் என யோசித்ததாகவும் கதை நம்மிடம் உண்டு. அப்படி யோசித்த கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து, அந்த ஏற்றப்பாடலைக் கவனித்து மூங்கில் இலைமேல் தூங்குவது ‘பனிநீர்’ எனப் பாடிய ஏற்றக்காரரை வியந்ததை ஒரு பார்வையில் கதையெனக் கொண்டாலும், அங்கு கிராமியப் பாடகரின் வரிகளை அங்கீகரித்த கவிச்சக்கரவர்த்தியின் பரந்த மனம் பேசப்படுவதை ஏற்கத் தடையில்லை.
அரசனின் அவையில் படிக்கப்படும் இலக்கியத்துக்கு மட்டும் அங்கீகாரம் இருந்த காலகட்டத்தில், அரசவையில் கோலோச்சும் ஒரு கவிஞன் ஏற்றக்காரரின் பாடலில் இருக்கும் கவிநயத்தையும் கற்பனையையும் வியக்கையில், அதைப் பாராட்டுகையில், கவிநயத்துக்கு அரசவையென்ன வயல்வெளியென்ன எங்கு இருப்பினும் அது கவிதைதான் எனும் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.
போலவே ஜப்பானிலும் கவிஞர் மட்சுவோ பாஷோவின் காலகட்டத்தில் கவிநயத்தை எழுதப்படிக்கத் தெரிந்தவர் மட்டுமே புரிந்துகொள்ள இயலும் என்னும் பார்வை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் பாஷோ கிராமத்தில் நெல்வயலில் இருந்து ஒலித்த நடவுப்பாடலைக் கேட்டதும் அதை ஹைகூவாக்கிக் காட்சிப்படுத்தினார் என இந்த ஹைக்கூவுக்கு விளக்கவுரை எழுதுகின்றனர். நேர்த்தி என்று பாஷோ சொல்வது நடவுப்பாடல்களில் இருக்கும் கவிநயத்தை என்னும் கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்த ஹைகூவின் முதலடி, 風流の, ஃபுஉ_ர்யூஉ_னொ.
風 ஃபுஉ என்னும் ஒலிப்பைக் கொண்ட இந்த காஞ்சி வடிவம் தனியாக எழுதப்பட்டால் க+ஸெ என ஒலித்து காற்றைக் குறிக்கும். ஆனால், இங்கு 流 ர்யூ + உ, りゅ + う என இரண்டு அசைகளுடன் ஒலிக்கும் இன்னொரு காஞ்சி வடிவத்துடன் இணைந்து ஒலிப்பதால் அழகெனப் பொருள்படுகிறது.
இதனை ஹிராகனா வடிவத்தில் விரித்து எழுதினால், 風流 ஃபுஉ – ふう, ர்யுஉ – りゅう, ஃபுவ்ர்யூவ் – அழகிய, னொ – の, இன். 風流の ஃபு உ ர்யூ உ னொ – அழகியதன் – நேர்த்தியின்.
இதனை மொழியாக்கம் செய்கையில் மாசற்ற நேர்த்தி என்றும் கொள்ளலாம்.
風流の–ふうりゅうの – ஃபுஉர்யூஉனொ (ஃபுவ்ர்யூவ்னொ) – மாசற்ற நேர்த்தி.
இந்த அடியில் எழுத்தெண்ணிக்கை என்னும் அசையெண்ணிக்கையில் ‘ர்யூ’வை ஓரெழுத்தாகக் (ஓரசையாகக்) கொள்வர்.
இரண்டாம் அடி, 初めや奥の ஹஜிமேயாவோகுனொ, இது ஹஜிமேயா + ஓகுனொ என இரண்டு வார்த்தைகளின் கூட்டு. 初め இது காஞ்சியும் ஹிராகனாவும் கலந்தது. 初 இந்த காஞ்சி ஹஜிமே は ஹா じ ஜி என்னும் இரண்டு ஹிராகனா வடிவாக விரியும், அதனுடன் இன்னொரு ஹிராகனா எழுத்து め மே, இன்னொரு ஹிராகனா や யா சேர்ந்து ஹஜிமேயா ‘தொடக்கத்தில்’ எனப் பொருள்படும்.
ஹஜிமே என்னும் இந்தச் சொல் ஜப்பானிய உரையாடலில் இடம்பெறும். ‘முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்கிறேன்’ என்னும் சொற்றொடர் ஜப்பானிய உரையாடல்களில் ஒருவரை முதலில் சந்திக்கும்போது அவசியம் சொல்லப்படும் வாக்கியம். ஜப்பானிய மொழியில் ‘ஹஜிமேமாஷிதா’.
இங்கு கவிதையில் அதே ஹ ஜி மே 初めや はじめや ஹஜிமேயா, . ஹஜிமேயாவுக்கு அடுத்ததாக வரும் வார்த்தை ஓகுனொ 奥 இந்த காஞ்சி வடிவம் おく ஓ கு என இரண்டு ஹிராகனாவாக விரியும், அதன் பொருள் நேராக இதயம் என்றும், இதயத்துள், அகத்துள், வீட்டின் உள்ளிருக்கும் வசிப்பிடம் எனப்பல வகைப் பொருள்களை உணர்த்தும். அவற்றுடன் の னொ ‘இல்’ சேர்ந்து ஓகுநொ என்னும் வார்த்தையை இதயத்தின் உள்ளிருந்து அல்லது அகத்திலிருந்து அல்லது உள்ளிருந்து என மொழியாக்கம் செய்யலாம்.
இரண்டாம் அடியில் 初めや奥の காஞ்சி + ஹிராகனா => はஹா, じஜி, めமெ, ,やயா,おஓ,くகு, のனொ. ஹஜிமெயாஓகுனொ – தொடக்கம் உள்ளிருந்து.
மூன்றாம் அடியில் ஒலிக்கும் ஜப்பானியச் சொல் தமிழுக்கு நெருக்கமானது, தாவூயேவூத்தா – நடவுப்பாடல். இது 田植歌 தா + உயே + ஊ’த்தா என மூன்று காஞ்சி வடிவங்களைக் கொண்டது.
முதல் காஞ்சி வடிவம் வயலைக் குறிக்கும். 田 காஞ்சியில், た ஹிராகனாவில், தா தமிழ் ஒலிப்பில். தா – வயல், குறிப்பாக ஜப்பானில் நெல்வயல். இரண்டாவது காஞ்சி வடிவம் விதைப்பைக் குறிக்கும். 植 காஞ்சியில், う え உ ஏ ஹிராகனாவில், உயே தமிழ் ஒலிப்பில். உயே – விதைத்தல், விதைப்பு. மூன்றாவது காஞ்சி வடிவம் இசையை அல்லது பாடலைக் குறிக்கும். 歌 காஞ்சியில், うた உ தா ஹிராகனாவில், ஊ’த்தா தமிழ் ஒலிப்பில்.
தழிழ் ஒலிப்பில் ஊதா என எழுதினால் ‘தா’ மென்மையாக ஒலிக்கும். இந்த ஜப்பானிய ‘தா’ அழுத்தமாக ஒலிக்கும். அதனால், இசையை, பாடலைக் குறிக்கும் ஊதா என்னும் ஜப்பானியச் சொல்லை ஊ’த்தா எனத் தமிழில் எழுதுகிறோம்.
田植歌 தா உயே ஊ’த்தா => தாவுயேஊதா => வயலில் விதைக்கையில் பாடல், சுருக்கமாக ‘நடவுப்பாடல்’.
風流の
初めや奥の
田植歌ஃபுர்யூவ்னொ
ஹஜிமேயாவோகுனொ
தாவுயேஊதாமாசற்ற நேர்த்தி
தொடக்கம் உள்ளிருந்து
நடவுப்பாடல்
ஹைகூக்கள் காலத்தையும் குறிக்கும். இந்த ஹைக்கு வசந்தகாலத்தைக் குறிக்கிறது.
வசந்தகாலத்தில், வயல்வெளியில் நாற்று நடுபவர்களிடமிருந்து வெளிப்படும் பாடல் நேர்த்தியான கவிதையாக, அவர்களுடைய மனதின் ஆழத்திலிருந்து இயல்பாக வெளிப்படும் இசையாக இருப்பதை மட்சுவோ பாஷோ காட்சிப்படுத்தியதன் மூலம், ஜப்பானிய நாற்று நடவுப் பாடல்களுக்கு இலக்கிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்.
பாஷோவின் இந்த ஹைகூவுக்குப் பின், அன்றைய எடோ (இன்றைய டோக்கியோ) நகரில் நாற்று நடவுப் பாடல்கள் பெரிதும் பாராட்டுப் பெற்றதாகவும் ஒரு பார்வை உள்ளது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
