தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு

ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.

திருமந்திரம் முதல் தந்திரம் 13. கல்வி 7ம் பாடல்

ஆறு வகையிலான அறிவைக் கொடுக்கும் கருவிகள் அல்லது அறிவு வழிமுறைகளான பிரமாணங்கள் குறித்தும், அந்த ஆறில் எவ்வாறு சப்தப் பிரமாணம் மட்டுமே “நான்” என்ற இந்த ஆத்மாவைக் குறித்த உண்மையான அறிவை அளிக்க வல்லது எனவும், அவ்வாறு அறிதலே அனைத்து பந்தங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்பதையும் பார்த்தோம்.

இந்த சப்தப் பிரமாணம் என்பது சொற்களால் அமைக்கப்பட்ட ஓர் அறிவின் வழிமுறை. பொருள் பொதிந்த சொற்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்படுவதன் மூலம், ஓர் அறிவும் கடத்தப்படுகிறது. இச்சொற்கள் ஒலி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ இருக்கலாம். பண்டைய காலத்தில் குரு-சிஷ்ய பரம்பரையாக இந்த அறிவு பெறப்பட்டபோது சொற்கள் ஒலி வடிவத்திலும், இப்போது எழுத்து வடிவத்தில் உள்ள நூற்களாகவும் சப்தபிரமாணம் செயல்படுகிறது.

தன்னை அறியும் வழிமுறைக்கு சப்தப் பிரமாணம் வேதாந்தமே. வேதாந்தம் என்றாலே உபநிஷத்துக்கள்தாம் என்று முன்னரே பார்த்திருக்கிறோம். முழுமையான வேதாந்தக் கல்வி என்பது உபநிஷத்துக்களையும், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் முதலிய நூற்களைக் கற்பதேயாகும். எதனால் குறிப்பாக இந்த நூல்களைக் கற்க வேண்டும்?

எந்த ஒரு நூலையும் கற்பதற்கு முன் அதைக் கற்க முற்படும் மாணவர் நான்கு விஷயங்களை கருத்தில் கொண்டு அவை அனைத்தும் பொருந்தி வருகிறதா என்பதைப் பரிசோதித்த பின்னரே அந்த நூலைக் கற்கத் தொடங்க வேண்டும். கவனிக்கவும், நான் இங்கு கற்பதைப் பற்றிப் பேசுகிறேன், வாசிப்பதைப் பற்றி அல்ல. ஆனாலும் வாசிப்புக்கும் கூட நம்மை அறியாமல் இந்த நான்கு விஷயங்களைப் பரிசோதித்த பின்னர்தான் நாம் ஒரு நூலைக் கையிலெடுக்கிறோம். அந்த நான்கும் அனுபந்த சதுஷ்டயம் என்று அழைக்கப்படும். அனுபந்தம் என்றால் இணைப்பு அல்லது தொடர்பு என்று பொருள். சதுஷ்டயம் என்பது நான்கு விஷயங்கள். வேதாந்த சாரத்தின் சூத்திரம் ஒன்று, “தத்ர அனுபந்தோ நாம அதிகாரி விஷய சம்பந்த பிரயோஜனானி” என்று அனுபந்த சதுஷ்டயத்தை வரையறுக்கிறது. ஒரு நூலைக் கற்கத் துவங்குகிறவர் நான்கு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:

  1. அந்த நூலைக் கற்பதற்கான தகுதிகள்,
  2. அந்த நூல் எந்தப் பேசுபொருளைப் பற்றிய அறிவைத் தருகிறது,
  3. அந்த அறிவை அடைவதால் ஏற்படும் பலன்,
  4. நூல்-மாணவர்-அறிவு-பலன் இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்புகள்.

அதிகாரி என்ற முதல் சொல் அதிகாரித்துவத்தைக் குறிக்கிறது. வேதாந்தத்தை கற்பதற்கு அதன் மாணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன என்பதற்கான வரையறையை இந்தச் சொல் குறிக்கிறது. பல்வேறு தகுதிகள் அதிகாரித்துவம் என்ற தலைப்பின் கீழ் பேசப்படுகின்றன. இந்தத் தகுதிகளை நாம் பின்னர் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். புருஷார்த்தம் என்ற தலைப்பின் கீழ் பார்த்த பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை அறவழியில் செயல் புரிந்து அடைந்த ஒருவன், இவற்றுக்கும் மேல் இந்த மனித வாழ்வில் ஏதாவது உண்டா என்று சிந்திக்கிறான். அந்தத் தேடுதலோடு அவன் எப்பொழுதும் இருக்கிறான். அத்தகைய தேடல் கொண்டவனே இங்கு அத்வைதக் கல்வியை அடையும், உபநிஷத்துக்களைக் கற்கும் தகுதியுடையவன் ஆகிறான். அதிகாரி ஆகிறான். அதிகாரித்துவம் என்பதை, கற்க இருக்கும் தலைப்பை விளக்கும் நூலோடு, அந்த சப்தப் பிரமாணத்தோடு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு பயணித்து, ஐயங்கள் அனைத்தும் நீக்கி, பிழையற்ற புரிதலை அடையும் வரை விசாரத்தைத் தொடர்ந்து சலிப்பின்றி செய்யக்கூடிய கற்கும் திறன் என்று வரையறுக்கலாம். இருப்பதிலேயே நுண்மையானதும், உயர்ந்ததுமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கு தன்னைத் திறனுடையவனாக மாற்றிக் கொள்வதற்கு வேண்டிய தயாரிப்பு முறைகளை அதிகாரித்துவம் குறிக்கிறது.

விஷயம் என்பது சப்தப் பிரமாணம் விளக்குவதற்கு எடுத்துக் கொள்கிற தலைப்பு ஆகும். இங்கு வேதாந்தத்தின் விஷயம் “நான்” என்று சொல்லப்படுகிற ஜீவன், எல்லாமாகவும் இருக்கும் பிரம்மம் இவை இரண்டிற்குமிடையேயுள்ள தொடர்பை விளக்குவதாகும். ஜீவன் எனப்படுபவன் உண்மையில் பிரம்மமே; உண்மையான பிரம்மத்தின் மீது பொய்யான ஜீவத்துவம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அறியாமையே. பிரம்மத்துக்கும், ஜீவனுக்குமிடையேயான இந்த ஒற்றுமையே வேதாந்தத்தின் சாரமாகவும், அது சப்தப் பிரமாணமாக விளக்க எடுத்துக் கொள்ளும் தலைப்புமாகும். பிரம்மத்தின் தன்மை என்பது எல்லையற்றதும், பகுக்க இயலாததாகவும் உள்ள விழிப்புணர்வாகும். இந்த விழிப்புணர்வு சைதன்யம் என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகம், “நான்” என்று நினைத்துக் கொண்டுள்ள இந்த உடல், மனம், புத்தி, அகங்காரம் (தன் முனைப்பு) ஆகிய அனைத்தும் அந்த விழிப்புணர்வின், சைதன்யத்தின், வெளிப்பாடுகளேயாகும். எனவே வேதாந்தத்தின் பேசுபொருள் சைதன்யம் எனப்படும் அந்த விழிப்புணர்வாகும்.

பிரயோஜனம் என்பது இந்தக் கல்வியின் இறுதிப் பலன் என்ன என்பதைக் குறிக்கிறது. நம்மைச் செயலில் தூண்டுவது பொருள் மற்றும் இன்பம் இவற்றுக்கான தேடலே. இவற்றைத் தேடுவதற்கான முக்கியமான காரணம் பாதுகாப்பின்மை மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பதற்காகவும், மகிழ்ச்சி, ஆனந்தம், மனநிறைவு முதலியவற்றை அடைவதற்காகவும்தான். அத்வைதக் கல்வியின் பிரயோஜனம் என்பதை இரு வகையாகக் குறிப்பிடலாம். ஆத்யந்திக துக்க நிவிர்த்தி: மற்றும் பரமானந்தப் பிராப்தி: அதாவது எல்லாவிதமான துக்கங்களிலிருந்தும் முழுமுற்றாக விடுதலை அடைதல் மற்றும் எல்லையற்ற ஆனந்தத்தை அடைதல் இவையே தன்னையறிதலின் பலன்களாகும். அத்வைதக் கல்வி தன்னையறியும் கலையை அளிப்பதால் அந்தக் கல்வியின் பலனும் அவைதாம். 

சம்பந்தம் அல்லது தொடர்பு என்பதை பலவாறாக விளக்கலாம். நியாய தத்துவம் இரண்டு பொருட்களுக்கிடையே நிலவ சாத்தியமான பத்து விதமான சம்பந்தங்களை விளக்குகிறது. ஆனால் சம்பந்தம் என்பதை இங்கு நாம் தொடர்பு என்ற அளவில் புரிந்து கொண்டால் போதும். 

வேதாந்தம் என்ற நூலுக்கும், அது கற்பிக்கும் பேசுபொருளுக்கும் இடையே உள்ள தொடர்பு “பிரதிபாதக பிரதிபாத்ய பாவ சம்பந்தம்” என்றழைக்கப்படுகிறது. இங்கு பிரதிபாதகம் என்னும் சொல் நூலைக் குறிக்கிறது. பிரதிபாத்யம் என்பது அது எடுத்துக் கொள்ளும் பேசுபொருளைக் குறிக்கிறது. 

நூலுக்கும், அதைக் கற்பதனால் அடையப்படும் அறிவுக்கும் இடையேயான தொடர்பு “ஜனக ஜானீய பாவ சம்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூலின் ஊடே நாம் நிகழ்த்தும் விசாரத்தின் மூலம் ஒரு தனித்துவமான அறிவு உற்பத்தியாகிறது. இந்த அறிவை உற்பத்தி செய்யும் நூல் ஜனகம் என்றும், உற்பத்தியான அறிவு ஜானீயம் என்றும் கூறப்படுகிறது.

வேதாந்தத்தைக் கற்பதற்கான தகுதிகளை அடைந்த அதிகாரியான மாணவனுக்கும், அந்த மாணவன் வேதாந்தத்தோடு நிகழ்த்தும் பயணமான ஆய்விற்கும் இடையே உள்ள தொடர்பானது “கர்த்ரு கர்த்தவ்ய பாவ சம்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு கர்த்ரு என்பது விசாரம் நிகழ்த்துபவனான மாணவனையும், கர்த்தவ்யம் என்பது விசாரத்தையும் குறிக்கிறது. (விசாரம் என்ற சொல்லுக்கு enquiry என்று பொருள்).

மாணவனுக்கும், அவன் வேதாந்தத்தோடு புரியும் விசாரத்தால் அடையும் பலனுக்கும் உள்ள தொடர்பு “பிரபாக பிராப்ய பாவ சம்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது. பலனைப் பெறுபவன் பிரபாகம், பெறப்படும் பலன் பிராப்யம்.

சங்கரர் “நான்” என்று அறியப்படும் ஆத்மாவுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பைக் குறித்துப் பேசுகிறார். உடல் எனும்போது அது இந்த பரு உடலை மட்டும் குறிக்கவில்லை. மனம், புத்தி, அஹங்காரம் ஆகியனவும் உடல் என்ற சொல்லுக்குள் அடங்கும்.  சங்கரர், ஆன்மா உடலற்றது (அசரீரம்) என்று கூறுகிறார், எனவே உடலுடனான அதன் தொடர்பு (சம்பந்தம்) என்பது பொய்யானது, ஏனெனில் ஆன்மா உடலின் எந்தச் செயலுடனும் தொடர்பற்றது. செயல்களிலிருந்து எழும் புண்ணியம் மற்றும் பாவத்துடன் சம்பந்தமற்றது, இருப்பினும் ஜீவன் அறியாமையின் விளைவாக தன்னை உடலுடன் தவறாக அடையாளம் கண்டுகொள்கிறான் என்று கூறுகிறார்.

அனுபந்த சதுஷ்டயத்தைத் தீர்மானித்த பின்னரே ஒருவரது தத்துவக் கல்வி துவங்குகிறது. இந்த நான்கு தலைப்புகளில் விஷயம், பிரயோஜனம், சம்பந்தம் ஆகிய மூன்றும் வேதாந்த நூலைப் பற்றிய தலைப்புகளாகும். இந்த மூன்றையும் வேதாந்தம் தீர்மானிக்கிறது. இவற்றைத் தன்னுள் கொண்டிருப்பதாக ஒரு வேதாந்த மாணவனுக்கு உறுதியளிக்கிறது. அதிகாரி என்ற தலைப்பு மட்டும் மாணவனைச் சார்ந்தது. அதிகாரித்துவம் எனப்படுகின்ற வேதாந்தக் கல்வியை அடைவதற்கான தகுதிகளை அவன்தான் அடைந்திருக்க வேண்டும். அத்தகுதிகள் அவனிடம் முழுமையாக இல்லாது போனால் கூட, தத்துவக் கல்வியினூடாக அவன் அவற்றைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனில், வேதாந்தக் கல்வி எல்லாருக்குமானது இல்லையா? தகுதியுடையவர்தான் இதைக் கற்க வேண்டுமெனில், அத்வைத வேதாந்தம் இன்னவர்தான் இக்கல்வியைப் பெற வேண்டுமென்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதா? அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் அத்வைதத்தைப் பயிலலாம். ஆனால் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். முதுகலை பயில விரும்பும் மாணவன் முதலில் முடித்திருக்க வேண்டியது ஒரு இளங்கலைப் பட்டத்தை. முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவன் அதற்குமுன் முதுகலைப் பட்டமும், பல்கலைக் கழகங்கள் எதிர்பார்க்கும் இன்னபிற தகுதிகளையும் அடைந்திருக்க வேண்டும். அதேபோல்தான் இங்கும். முறையான தகுதிகளை அடையாது அத்வைதக் கல்வியைக் கற்க விழையும் ஒருவருக்கு அந்தத் தத்துவத்தின் ஆழமும், சாரமும் புரியாது போகலாம். அதன் முழுப் பலனையும் அவரால் அடைய இயலாது போகலாம். இதை இன்னொரு மாதிரியும் விளக்கலாம். ஒரு பாத்திரத்தில் உணவைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறோம். அந்த உணவு எவ்வளவு தூய்மையானதாகவும், சுவையானதாகவும் இருந்தாலும், அதை வாங்குகின்ற பாத்திரம் தூய்மையற்றதாக இருந்து விட்டால் வாங்குகின்ற உணவும் கெட்டுப்போய் விடும் வாய்ப்பு இருக்கிறது. உணவு உட்கொள்வதின் முழுப்பலனையும் நம்மால் அனுபவிக்க இயலாது போய்விடும்.

கீதையில் கண்ணன், “பரம் பூய ப்ரவக்ஷ்யாமி ஞானானாம் ஞானமுத்தமம்; யஞ்ஞாத்வா முனய: சர்வே பராம் சித்திமிதோ கதா:” என்கிறார். நான் மீண்டும் ஞானங்களிலேயே சிறந்த அந்த உன்னதமான ஞானத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அதை அறிந்துதான் முனிவர்கள் அனைவரும் பரம சித்தியை அடைந்தனர் என்பது இதன் பொருள். இவ்வாறு துவங்கி அந்த அறிவை எவ்வாறு பெறுவது, எவ்வாறு வளர்ப்பது என்று விளக்குகிறார். இந்த அறிவானது, இயற்கையின் குணங்களுடன் (பிரகிருதி) தொடர்பு கொண்டிருப்பதால் இந்த பௌதிக உலகில் சிக்கியுள்ள ஒரு முமுக்ஷுவை (‘விடுதலையை விரும்புபவரை’) இறுதியில் விடுவிக்கும். பின்னர், அவர் மூன்று குணங்களின் தன்மையை விளக்குகிறார். இந்தக் குறிப்பிட்ட கூற்று ஒரு அனுபந்த சதுஷ்டயத்தின் வடிவத்தில் உள்ளது; அதன் விஷயம் பிரம்ம வித்யை, அதன் இலக்கு துக்கத்திலிருந்து விடுதலை, மற்றும் அதன் பிரயோஜனம் தன்னிச்சையான விடுதலையை அளிக்கும் பிரம்ம ஞானம் ஆகும். கிருஷ்ணர் அர்ஜுனனை அந்த ஆத்ம ஞானத்திற்கு மெல்ல அழைத்துச் செல்கிறார்.  தத் த்வம் அசி என்ற உபநிஷத் மந்திரத்துக்கான விளக்கமே அந்த ஆன்ம அறிவை அளிக்கிறது.  ‘நான்’ என்பது என்ன என்பதை அந்த ஆத்மஞானம் வெளிப்படுத்துகிறது. 

அனுபந்த சதுஷ்டயத்தின் நான்கு தலைப்புகளில் அதிகாரித்துவம் என்ற தலைப்பைத்தான் விரிவாகக் காண இருக்கிறோம். மேற்கண்ட உணவு-பாத்திரம் விளக்கத்திலிருந்து, அதிகாரித்துவம் என்பதைத் தூய்மைப்படுத்துதல் என்பதுதான் என்று விளங்கியிருக்கும். 

சங்கரர் இயற்றிய தத்துவ போதம் என்ற நூல் ஒரு வேதாந்த மாணவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பட்டியலிடுகிறது. (இந்த நூல் சங்கரர் இயற்றியதா அல்லது வேறு யாராவதா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சங்கரருக்குப் பிறகு அவர் வழிவந்தவர்கள் பலர் சங்கரர் என்றே அறியப்படுகின்றனர். எனவே இந்தக் குழப்பம். ஆனால் இங்கு ஒரு நூல் பற்றிய வரலாற்றுத் தகவலின் துல்லியம் நமக்கு அவசியமில்லாதது. நமக்கு வேண்டியது அத்வைதக் கல்வியை முறையாக அடைதல் மட்டுமே. அத்வைத மரபில் தத்துவம் பயிலத் துவங்கும் மாணவர்கள் முதலில் கற்கும் நூலாக தத்துவ போதம் இன்றும் இருந்து வருகிறது.) இந்த நூலின் முக்கியமான பேசுபொருள் ஞானயோகம் எனப்படும் தன்னைப் பற்றிய விசாரணை (Self Enquiry). இது தன்னையறிதல் குறித்த வழிமுறைகளை முறையான வழிகாட்டுதல்களுடன் விரிவாகவும், ஆழமாகவும் அளிக்கிறது. மேலும், இந்த நூல் வேதாந்தத்துக்கே உரிய தொழில்நுட்பச் சொற்கள் அல்லது சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்துகிறது. எனவே தத்துவபோதம் வேதாந்தத்துக்கு ஒரு அறிமுக நூலாகக் கருதப்படுகிறது. இது உரைநடையில் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட வேதாந்தத்திற்கு அமைந்த பாடத்திட்டம் போல. 

ஒவ்வொரு துறைக்கும் அதற்கேயுண்டான தனித்துவமான சொற்கள் இருக்கும். அவற்றுக்கு அந்தத் துறைக்கு வெளியே வேறு அர்த்தமும் இருக்கலாம். அச்சொற்கள் குறித்த முறையான அறிமுகம் இல்லாது ஒரு துறைக்குள் அடியெடுத்து வைத்தால் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க நேரிடும். எனவேதான் அத்வைதக் கல்வியில் முதலில் தத்துவ போதம் கற்பது இன்றியமையாதது. இந்த நூலில் கற்பிக்கப்படும் சொற்களஞ்சியம், அறிதல் வழிமுறைகள் பின்னர் உபநிஷத்துக்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரங்கள் ஆகியவற்றைக் கற்கையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும். இந்த நூல் அளித்த புரிதலோடு ஒருவர் அந்த நூல்களைக் கற்பாராயின் அவருக்கு வேதாந்தத்தின் முழுமையான பலனும் கிட்டும். இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமும் தத்துவபோதம் கையாளுகின்ற தலைப்புகளையும், கருத்துக்களையும், விரிவாக எடுத்துரைப்பதுதான். எனவே, இத்தொடரையும் வேதாந்தக் கல்வியின் அறிமுகமாக எடுத்துக் கொள்ளலாம்.

அனுபந்த சதுஷ்டயத்தில் அதிகாரித்துவம் எனப்படும் வேதாந்த மாணவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து பேசத் துவங்கினோம். தத்துவ போதம் தான் பேச எடுத்துக்கொண்ட தலைப்புகளில் முதலாவதாக நான்கு வகையான தகுதிகள் குறித்துப் பட்டியலிடுகிறது. அந்தத் தலைப்பு சாதன சதுஷ்டயம் எனப்படுகிறது. சதுஷ்டயம் என்ற சொல் குறித்து முதலிலேயே பார்த்திருக்கிறோம், நான்கினுடைய சேர்க்கை என்று இதற்குப் பொருள். சாதனம் என்ற சொல்லுக்கு தகுதி என்று இங்கு பொருள். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு வகையான தகுதிகள் என்று பொருள். அந்த நான்கு வகையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்தும், அவற்றை ஒருவர் எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பற்றியும், அத்தகுதிகளை அடைந்த ஒருவர் எங்ஙனம் வேதாந்தம் அளிக்கும் பலனை அடைகிறார் என்றும் அடுத்த பகுதியில் காண்போம்.

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

வகையறச் சூழ்ந்தெழுதல் ஒருமையுள் ஆமைபோல்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.