உரூப்-ன் ‘உம்மாச்சு’

சென்ற நூற்றாண்டில், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அனைத்திந்திய நூல் வரிசை மொழியாக்க நாவல்கள் அனைத்தும் அற்புதமானவை. வாசிப்பின் பேரனுபவத்தை தரவல்லவை. அந்நூல்கள் வழியாகத்தான் இந்தியாவின் பலவித நிலப்பரப்புகளை, பண்பாடுகளை, வரலாறுகளை, மனிதர்களை நான் அறிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகையில்லை. தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் எழுபதுகளில் பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை, பல்வேறு நிலப்பரப்புகளின் முந்தைய வரலாற்று நிகழ்வுகளை, பல் இன மனிதர்களின் வாழ்வியலை அன்புடன் அறிமுகப்படுத்தி அவர்கள் வாழ்வின் ஊடே பயணப்பட வைத்தது அந்நாவல்கள்தான்.

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர்வாடி’ வழியாகத்தான் ஐம்பதுகளின் மராத்திய நிலப்பரப்பு அறிமுகமானது. அம்ரித்லால் நாகரின் ‘துளியும் கடலும்’தான் ஓர் வட இந்திய நகரின் மத்யமர்/மேல் மத்யமர் வாழ்க்கையின் வாழ்வுப் பின்னல்களை அறிய வைத்தது. எஸ். கே. பொற்றேகாட்டின் ‘விஷக்கன்னி’யும், பாறப்புறத்துவின் ‘அரை நாழிகை நேரம்’-ம் சென்ற நூற்றாண்டின் மத்திம காலத்து கேரளா மலபார் மலைக் காடுகளின் பணியாளர்கள் வாழ்வையும், மத்திய திருவிதாங்கூரில் ஒரு கிராமத்து வாழ்வையும் காண வைத்தது. பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ கர்நாடகாவின் ஒரு உட்கோடி கிராமக் குடும்பத்தின் மொத்த வாழ்வியலையும் கண்முன் நிகழ்த்தியது. பாலகும்மி பத்மராஜூவின் ‘கறுப்பு மண்’ ஆந்திராவை பரிச்சயப்பட வைத்தது. ஜிஜூபாய் பதேக்காவின் ‘பகல் கனவு’ முப்பதுகளில் ஒரு குஜராத்தி ஆசிரியரின் அனுபவங்களை தெரிந்துகொள்ள வைத்தது. லக்ஷ்மிநந்தன் போராவின் ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்’ அஸ்ஸமை அறிமுகம் செய்தது. மனதை தத்துவார்த்தத் தேடல்களுக்கு உந்தியதில் சிவராமகாரந்தின் ‘அழிந்த பிறகு’க்கும் பங்கிருக்கிறது. போதிசத்வ மைத்ரேய-வின் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ இதுவரை அறிந்திராத ஐம்பதுகளின் தூத்துக்குடி மீனவ சமுதாய வாழ்க்கையை, இசை, நாட்டியத்தை வாழ்முறையாகக் கொண்ட தேவதாசிகளின் வாழ்க்கையை நுண்மையாக அவதானப் படுத்தியது. 

நல்ல நாவல்களை, இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டு பெருஞ்செயல் ஆற்றியிருக்கின்றன நேஷனல் புக் ட்ரஸ்டும் சாகித்ய அகாடமியும். அவ்வமைப்புகளுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் என்றென்றும் அன்பும், நன்றியும்.

உரூபின் ‘உம்மாச்சு’, ‘மாத்ருபூமி’ வார இதழில் தொடராக வந்த நாவல் (வருடம் 1954-ஆக இருக்கலாம்). உரூப்பின் இயற்பெயர் பி. சி. குட்டி கிருஷ்ணன். தன் முப்பத்து எட்டாம் வயதில் அவர் எழுதிய நாவல் ‘உம்மாச்சு’.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துகொண்டிருந்த 1947-க்கு முன்பான காலகட்டம். மாப்பிள்ளை இனத்து ஜனங்கள் அதிகமாக வாழும் ஒரு கேரள கிராமம்.  பீரான், மாயன், உம்மாச்சு மூவரும் நெருங்கிய நண்பர்கள். எல்லோருக்கும் 15 வயது. பள்ளிக்கும், பள்ளிவாசலுக்கும் எப்போதும் சேர்ந்தேதான் போய்வருவார்கள். விளையாடுவதும் ஒன்றாகத்தான்.

சரித்திரப் பாடத்தின் சாட்சி, கிழவன் அகம்மதுண்ணி என்று ஊரில் எல்லோரும் சொல்வார்கள். அகமதுண்ணி ஊரில் அனைவர் குடும்பங்களின் பூர்வீகக் கதைகளை அறிந்து வைத்திருப்பவர். அவரின் மகன் ஹஸ்ஸன்.

அப்போது டச்சுக்கரர்களின் பெரிய ஆஃபீஸ் கொடுங்ஙல்லூரில் இருந்தது. சிறிய ஆஃபீஸ் இருந்தது பாலக்காட்டில். நாயர் பெண்களை அவ்வப்போது கடத்திக்கொண்டு போவது அவர்கள் வழக்கம். அப்படியான ஒரு நாயர் பெண்னுக்கும் அரபிக்காரனுக்கும் பிறந்தவர்தான் சேக்குட்டி முதலாளியின் பெரிய தாத்தாவின் அப்பா குதாம் சுலைமான். அந்த பரம்பரையில் வந்த சேக்குட்டி முதலாளி இப்போது பெரும் செல்வந்தர். கிட்டங்கிக்காரர் என்றும் அவரை அழைப்பார்கள். சேக்குட்டிக்கு அவரை யாரும் ‘குதாம்’ என்று பரம்பரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது பிடிக்காது. வெள்ளி கொண்டு தராசைச் செய்து தன் வணிகத்திற்குப் பயன்படுத்தி குடும்பப்பெயரை ‘வெள்ளிக்கோல்’ என்று மாற்றிக்கொண்டார். சேக்குட்டி முதலாளியின் மகன்தான் பீரான். உம்மாச்சுவும், மாயனும் பீரானை ‘வெள்ளிக்கோல்’ என்றுதான் கூப்பிடுவார்கள். அதில் அவனுக்குப் பெருமை. பீரான் உருவத்தில் மெலிந்தவன். மாயன் திடகாத்திரமாக, வலுவாக இருப்பான், ஆனால் ஏழை. உம்மாச்சுவுக்கு பீரனை விட மாயனை அதிகம் பிடிக்கும்.

மாயனின் பூர்வீகக் கதையாக அகமதுண்ணி சொன்னது – தலையாரி தேச்சேரி இட்டிரி நம்பூதிரிக்கு நான்கு மனைவிகள். மல்யுத்தக்காரன் ராரிச்சன்/அவரிடம் வேலை பார்த்தான். அவன் உண்மையான பெயர் இஸ்மாயில். இள்மாயிலுக்கும், இட்டிரி நம்பூதிரியின் நான்காவது மனைவி பாப்பிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக ஊரில் வதந்தி பரவுகிறது. இட்டிரி கோபம் கொண்டு பாப்பியை கொலைசெய்து விடுகிறார். இஸ்மாயில் தப்பி கடல் கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்து விடுகிறான். அந்த இஸ்மாயில் மாயனின் தாத்தாவுக்குத் தாத்தா. 

அத்தர் வியாபாரம் செய்யும் ஆலி-தித்தய்யாக் குட்டியம்மையின் மகள்தான் உம்மாச்சு. குஞ்சுக்குட்டியம்மையின் இரண்டாவது கணவனின் மகன் சாப்புண்ணி, பத்திரங்கள் எழுதும் உணிச்சுண்டன் நம்பியாரிடம் வேலை செய்கிறான். அவன் மனைவி லட்சுமியம்மை. 

வருடங்கள் உருண்டோடுகின்றன. மாயன் இப்போது அநாதை. அம்மாவும், அப்பாவும் இறந்துவிட்டார்கள். சகோதரிகளுக்கு திருமணமாகி அவர்கள் புகுந்த வீடு சென்றுவிட்டனர். மாயனுக்கு உம்மாச்சுவை திருமணம் செய்ய விருப்பம். உம்மாச்சுவிற்கும் மாயனைத் திருமணம் செய்ய இஷ்டம்தான். ஆனால் பீரான் உம்மாச்சுவைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். சரித்திரக் கதைசொல்லி அகமதுண்ணியின் உதவியோடு அப்பாவைச் சரிக்கட்டி உம்மாச்சுவைத் திருமணம் செய்துகொள்கிறான். உம்மாச்சு வேறு வழியில்லாமல் பீரானுடன் திருமணத்திற்கு உடன்படுகிறாள். மாயன் மிகுந்த விரக்தியும் கோபமும் கொள்கிறான். கோபத்தில் யாருக்கும் தெரியாமல் அகமதுண்ணியைத் தாக்கிவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகிறான்.

பலசரக்கு ஏற்றிக்கொண்டு மலைக்குப் போகும் மாட்டுவண்டியில் ஏறி வயநாடு போகிறான் மாயன். அங்கு ஹாஜியார் கடையில் வேலைக்குச் சேர்ந்து கொள்கிறான். ஹாஜிக்கு மாயனின் நடத்தையும் வேலையும் பிடித்துப் போகிறது. மீண்டும் வருடங்கள் கடக்கின்றன. மலையில் தங்கத்திற்காக டச்சுக்காரன் சுரங்கம் தோண்டி பாதியில் விட்டுப்போக பலரும் இரகசியமாக சென்று தங்கம் சுரண்டி சலித்து சேகரித்து வணிகம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். மாயன் அதில் தேர்ச்சி பெற்று அந்த வணிகத்தில் பணம் சேர்த்து சொந்தமாக வயநாட்டில் வீடுகட்ட ஆரம்பிக்கிறான். கீழே ஊரில் அகமதுண்ணி காய்ச்சல் வந்து இறக்க, அவர் மகன் ஹஸ்ஸன் மலைக்கு வேலைதேடிச் சென்று மாயனுடன் சேர்ந்துகொள்கிறான்.

மலையில் ஹஸ்ஸனை வணிகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊருக்கு உம்மாச்சுவைப் பார்க்க வருகிறான் மாயன். உம்மாச்சுவிற்கு இப்போது ஒரு ஆண் குழந்தை. அப்து அவன் பெயர். பீரானின் அப்பா சேக்குட்டி, பேரன் அப்து பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். உணிச்சுட்டன் நம்பியாரிடம் வேலைசெய்த சாப்புண்ணி இப்போது பீரானிடம் காரியஸ்தராக வேலை செய்கிறார். உம்மாச்சுவின் கணவனான பீரானை ஓரிரவில் கொலை செய்கிறான் மாயன். பீரானின் மகன் சிறுவன் அப்து அதைப் பார்த்து விடுகிறான். தப்பித்துப் போகும் மாயனை உம்மாச்சுவும் அந்த இரவில் அடையாளம் கண்டுகொள்கிறாள். மாயன் தப்பித்து தலைமறைவாக வயநாடுக்குப் போய்விடுகிறான்.

பீரான் கொலையத் துப்பு துலக்கும் போலீஸ், காரியஸ்தர் சாப்புண்ணி சொன்ன முன்விரோதக் கதையை வைத்து செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்த தாமியின் மகன், ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனான சோழியைக் கைதுசெய்கிறது. சோழிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. 

காரியஸ்தர் சாப்புண்ணிக்கு மகள் பிறக்கிறாள். சின்னம்மை என்று அவளுக்குப் பெயரிடுகிறார் சாப்புண்ணி. சாப்புண்ணி உம்மாச்சுவிற்கும் காரியஸ்தராக வேலை தொடர்கிறார்.

மாயன், மலையில் தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வருகிறான். ஊர்ப் பொதுக் காரியங்களுக்கு பணத்தை தாராளமாக நன்கொடை தருகிறான். ஊரில் அவனுக்கு இப்போது நல்ல பெயர். சாப்புண்ணி மூலம் உம்மாச்சுவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக செய்தி சொல்லிவிடுகிறான். உம்மாச்சுவும் அவன்மேல் கொண்ட காதலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். மாயனுக்கும், உம்மாச்சுவிற்கும் திருமணம் நடக்கிறது.

காலம் கடக்கிறது. மாயனுக்கு இப்போது இரண்டு மகன்கள் – மரக்கார், ஹைத்ரோஸ். அப்து ஒன்பதாம் வகுப்பு, சின்னம்மை ஏழாம் வகுப்பு. நால்வரும் பள்ளிக்கு ஒன்றாகத்தான் போய்வருவார்கள். சின்னம்மை மேல் அப்துவிற்கு மிகப் பிரியம். மாயனின் மீதான விரோதம் அப்துவின் உள்ளத்தில் கனன்று எரிந்துகொண்டுதானிருக்கிறது. அப்து மாயனிடம் பேசுவதில்லை. வயநாட்டில் ஹஸ்ஸன் மாயனின் வணிகத்தைப் பார்த்துக்கொள்கிறான். வருடங்கள் செல்லச் செல்ல மாயனின் மனம் குற்றவுணர்ச்சியால் தவிக்கிறது. அப்துவின் நடவடிக்கைகளாலும் உள்ளுக்குள் மிகவும் வலுவிழக்கிறான். உம்மாச்சுவிடம் வயநாட்டில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு வருவதாக சொல்லிக் கிளம்புகிறான். 

வயநாட்டில், பெற்றோரில்லாத ஏழைப்பெண் 24 வயது மஞ்சேரி ஆமினாவை உஸ்மான் காதலித்து ஏமாற்றுகிறான். முயல் வேட்டைக்கு இரவில் செல்லும் ஹஸ்ஸன் தேயிலைத் தோட்டத்தின் நடுவில் பிரசவத்திற்கு துடிக்கும் ஆமினாவைப் பார்த்து அவளுக்கு உதவுகிறான். வயநாடு வரும் மாயன், ஹஸ்ஸனை ஆமினாவுடனேயே வாழ்வை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார். தன் வீட்டையும் ஹஸ்ஸனுக்கு எழுதிக் கொடுக்கிறார். ஊரிலிருந்து மகன் மரக்கார் வயநாடு வந்து அவரை ஊருக்கு வருமாரு கூப்பிட தான் இன்னும் சில காலம் இருந்துவிட்டு வருவதாக திருப்பி அனுப்புகிறார். மகன் மரக்காருக்கு மாயன் வயநாட்டில் விடைகொடுக்கும் காட்சி அபாரமான ஒன்று.

மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.

தேர்தல் வருகிறது. காங்க்கிரஸிலிருக்கும் தம்புரான் குரூப்பு அப்துவை காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடச் சொல்கிறார். எதிர்த்து லீக் கட்சி சார்பாக ஹைத்ரோஸ் போட்டியிடுகிறான். காரியஸ்தர் சாப்புண்ணியை ஹைத்ரோஸிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதவச் சொல்கிறாள் உம்மாச்சு. சின்னம்மை இப்போது ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். உம்மாச்சு சாப்புண்ணியை வைத்து மூன்று மகன்களுக்கும் சொத்து பாகப் பிரிவினை செய்துவைக்கிறாள். சின்னம்மை, சாப்புண்ணியை எதிர்த்து அப்துவுடன் வாழ அப்துவின் வீட்டிற்கு வந்துவிடுகிறாள்.

சின்னம்மையுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்ட சாப்புண்ணி, உம்மாச்சுவின் காரியங்களுக்காக மட்டும் உம்மாச்சுவை வீட்டில் வந்து பார்த்துப் போகிறார். தேர்தலில் ஹைத்ரோஸ் வெற்றி பெறுகிறான். சின்னம்மைக்கு குழந்தை பிறக்கிறது. சாப்புண்ணி தாத்தாவாகிறார்.

பெரிய செவ்வியல் நாவல்களைப் படித்து முடித்ததும் ஏற்படும் ஆழ்ந்த அமைதியான ஓர் உணர்வு ‘உம்மாச்சு’ நாவலையும் படித்து முடித்தவுடன் எழுந்தது. நாமே அந்த வாழ்வுக்குள் ஊடாடியது போன்ற பிரமை. நாவல் முடியும் போது இன்னதென்று இனம் காண முடியாத ஒரு மெல்லிய அயர்ச்சியும், பிரிவின் வேதனையும்.

டாக்டர் எம். லீலாவதி நாவலுக்கு அருமையான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார். புன்னகை தரும் பகடிகள் நாவல் முழுதும் விரவிக் கிடக்கின்றன. மாயனின் உடலை போஸ்ட்மார்ட்டம் முடித்து ஊருக்கு எடுத்துச் சென்று இரவில் ஊரடையும்பொழுது ‘மங்கிய நிலவொளி ஒரு சவ மூடுதுணி போலப் பிரபஞ்சத்தைப் போர்த்தியிருந்தது’ என்று எழுதுகிறார் உரூப். இளம்பாரதியின் மொழிபெயர்ப்பு மிகச் சரளம். பிரமாதம்.

‘உம்மாச்சு’ 1971-ல் மலையாளத்தில் திரைப்படமாக உரூபின் திரைக்கதையில் வெளியாகியிருக்கிறது. 

​’உம்மாச்சு’ (மலையாள நாவல்) – உரூப்
தமிழில்: இளம்பாரதி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு (தமிழ்ப் பதிப்பு 1993)


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.