நுண்பொருள் காண்பது அறிவு

தன்னை அறிதல் மட்டுமே பந்தங்களிலிருந்து ஒருவனை விடுவிக்கிறது என்பதைக் கண்டோம். செயல்களின் மூலம் அடையப்பெறும் எதுவும் ஒரு காலத்தில் அழியும், எனவே ஒருமுறை அடைந்து விட்டால் எக்காலத்திலும் அழியாத ஆன்ம விடுதலையை, நான் எப்போதுமே சுதந்திரமானவன் என்று அறிந்து கொள்வதின் மூலம் மட்டுமே அடைகிறோம். இங்கு அறிதலே அடைதலாகிறது.

தன்னை அறிதல் எங்ஙனம்? நான் இருக்கிறேன் என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு புறக்கருவிகளின் உதவி அவசியமே இல்லை. நான் என்ற உணர்வு நம் எல்லோருக்குமே சுயமாக விளங்கி வருகிறது. “ஆத்மா ஸ்வதசித்தம்.” நம் யாருக்குமே நம்முடைய இருப்பு குறித்து எந்த விதமான ஐயமும் இல்லை. இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் எல்லோரும் நம்மைக் குறித்து ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்துள்ளோம். நான் ஆண், நான் பெண், நான் இந்த தேசத்தவன், நான் இன்ன நிறத்தவன், இன்ன குணங்களைக் கொண்டிருக்கிறேன், இதுவே என் வாழ்வின் இலக்கு என்றெல்லாம் பலவாறாக நம்மைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளெல்லாம் உண்மையிலேயே சரியானவைதாமா என்பதில் எப்போதுமே நமக்குக் குழப்பங்கள் இருக்கின்றன. நம்மைக் குறித்த மதிப்பீடுகளை நாம் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருவதிலிருந்து இம்மதிப்பீடுகள் உண்மையில் நம்மை வரையறுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனில் உண்மையிலே நான் என்பது எத்தன்மையது? அதை எப்படி ஒருவர் அறிந்து கொள்வது?

ஒரு பொருளை அறிவதற்கு நம்மிடம் சில கருவிகள் அல்லது வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பிரமாணம் என்ற சொல்லில் குறிப்பிடலாம். பிரமாணம் என்ற சொல்லுக்கு அறிவைக் கொடுக்கும் கருவி அல்லது அறியும் வழிமுறை என்று பெயர். பிரமாணங்கள் துல்லியமானதும், உண்மையானதுமான அறிவை நாம் பெற்றுக் கொள்வதற்கான நம்பத்தகுந்ததும், ஏற்புடையதுமான வழிமுறைகளைத் தன்னகத்தே கொண்டவை. சரியான அறிவைப் பெற்றுக் கொள்வது எப்படி, ஒருவர் எவ்வாறு ஒரு அறிவை அடைகிறார், அல்லது அறியாமல் போகிறார், ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான எல்லை என்ன போன்றவற்றுக்கான விளக்கங்களை அளித்து, சரியான அறிவை அடைய வழிகோலுவதே பிரமாணங்களின் குறிக்கோள் ஆகும்.

நம்மிடம் இருக்கும் பிரமாணங்களிலேயே முதன்மையானது புலனறிவுதான்.  இதற்குப் பிரத்யக்ஷம் என்று பெயர். இந்த உலகத்தை நாம் ஐந்து புலன்களாலும்தான் அறிகிறோம். கண்ணால் காட்சியையும், காதால் ஒலியையும், நாசியால் மணத்தையும் அறிகிறோம். எனவே பிரத்யக்ஷம் ஒரு பொருள் குறித்த அறிவை புலன்கள் வாயிலாக நேரடியாக நமக்குத் தருகிறது.

பிரத்யக்ஷம் இரண்டு வகையாலானது: ஒன்று வெளிப்புலன்கள் உலகப்பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அடையப்படும் அறிவு. மற்றொன்று நம் உட்புலனான மனதின் துணை கொண்டு ஒரு பொருளை அறிதல். புலன்கள் மூலம் பெறப்படும் அறிவான பிரத்யக்ஷத்துக்கு அத்வைதம் நான்கு நிபந்தனைகளை முன் வைக்கிறது. முதல் நிபந்தனை – இந்திரியார்த்த சன்னிகர்ஷம். அதாவது ஒருவரது புலன்கள் உலகப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளுதல் முதலாவதானது. இரண்டாவது – அவ்யபதேஸ்யம். இப்படிப் புலன்கள் மூலம் பெறப்பட்ட அறிவு செவிவழிச் செய்தி மூலம் பெறப்படும் பிறரது பார்வையை ஏற்றுக் கொள்வதையோ, நிராகரிப்பதையோ சாராதது.  மூன்றாவது – அவ்யபிசாரம். புலன்கள் மூலம் பெறப்பட்ட அறிவு அலைபாய்வதில்லை. தனிப்பட்ட ஒருவரது புலன்களின் குறைபாட்டையோ, புலன்கள் பொருட்கள் சரியாகக் குவிக்கப்படுதலில் ஏற்படும் தவறுகளையோ சாராதது. அதாவது புலன்கள் ஒரு பொருள் குறித்த சரியான அறிவைக் கொடுக்க வேண்டுமெனில் அவை சரியான நிலையில், முழுமையாகச் செயல்படும் திறனுடன் இருக்க வேண்டும். நான்காவது – வியவசாயாத்மகம். பிரத்யக்ஷத்தின் மூலம் அடையப்படும் அறிவு உறுதியானது. மாற்ற இயலாதது. ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. எனவேதான், புலன்கள் மூலம் அடையும் அறிவைக் கொண்டு மிகுந்த நம்பிக்கையுடன் இவ்வாழ்வில் நாம் பல செயல்களையும் செய்து வருகிறோம். 

நம்மிடமுள்ள இரண்டாவது அறிவைக் கொடுக்கும் கருவி அனுமானப் பிரமாணம் என்பது. பிரத்யக்ஷப் பிரமாணம் எங்கு பயன்படாமல் போகிறதோ அங்கு அனுமானப் பிரமாணம் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் பிரத்யக்ஷப் பிரமாணத்தின் துணையுடன்தான் அனுமானப் பிரமாணம் செயல்படும். புலன்களால் அறிய இயலாத விஷயங்களை அனுமானப் பிரமாணம் கொண்டு அறிந்துவிட முடியாது.

நம்முடைய அவதானிப்புகளின் மூலமும், ஒரு உண்மையைக் குறித்து ஏற்கனவே உள்ள முந்தைய புரிதல்கள் மூலமும், இப்போதிருக்கிற ஒரு பொருளின் உண்மைத் தன்மையைக் குறித்து காரண அறிவின் உதவியுடன் ஊகித்து அறிந்து கொள்வது அனுமானப் பிரமாணம் என்று வரையறுக்கப்படுகிறது. மலை உச்சியில் புகையைப் பார்க்கிறோம். எனவே அங்கு நெருப்பு இருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படுகிறது. மலையின் மீது நெருப்பு இருக்கிறது என்ற அறிவு அனுமானப் பிரமாணத்தின் மூலம் பெறப்பட்டது ஆகும். புகையை மட்டும் பார்த்து எப்படி அங்கு நெருப்புதான் இருக்கிறது என்பதை நாம் உறுதி செய்து கொள்கிறோம்? ஏனெனில் ஏற்கனவே நமக்கு நெருப்பையும், புகையையும் புலன்களின் உதவி கொண்டு ஒரே இடத்தில் பார்த்த அனுபவம் இருக்கிறது. எனவே “எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கெல்லாம் நெருப்பு இருக்க வேண்டும்” (யத்ர யத்ர தூம: தத்ர தத்ர வஃனிமான்) என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 

அனுமானப் பிரமாணம் ஐந்து தத்துவங்களின் மூலம் ஒரு பொருளைக் குறித்த அறிவைக் கொடுக்கிறது. சாத்யம், ஹேது, பக்ஷம், திருஷ்டாந்தம், வியாப்தி ஆகியன அந்த ஐந்தும்.  மலை உச்சியில் புகை தெரிவதை வைத்து அங்கு நெருப்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவது அனுமானப் பிரமாணத்தின் மூலமாக. மேற்கண்ட ஐந்து தத்துவங்களையும் இந்த உதாரணத்தைக் கொண்டு விளக்க முடியும். சாத்யம் என்பது எது தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ அது. இந்த இடத்தில் மலை உச்சியில் நெருப்பு இருக்கிறது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே இங்கு நெருப்பு சாத்யம். ஹேது என்பது அந்த சாத்யத்தை அறிய உதவும் ஒரு சாதனம். புகையின் இருப்பைக் கொண்டுதான் நெருப்பை அறிகிறோம். எனவே புகை இங்கு ஹேது. பக்ஷம் என்பது சாத்யம் எந்த இடத்தில் சந்தேகிக்கப்படுகிறதோ அந்த இடம். இங்கு மலையில் நெருப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே மலை பக்ஷம்.  வியாப்தி என்பது ஹேதுவுக்கும், சாத்யத்திற்கும் உள்ள பிரியாத தொடர்பைக் குறிப்பது. எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கெல்லாம் நெருப்பு இருக்க வேண்டும். இந்த வாக்கியம் புகைக்கும், நெருப்புக்கும் உள்ள பிரியாத தொடர்பைக் குறிப்பதால் இது வியாப்தி. இறுதியாக திருஷ்டாந்தம் என்றால் ஏற்கனவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். அதாவது ஏற்கனவே புகையையும், நெருப்பையும் ஒருங்கே சமையற்கட்டிலோ, யாகசாலையிலோ பார்த்திருக்கிறோம். எனவே புகையிருக்குமிடம் நெருப்பிருக்கும் என்ற அறிவு நமக்கு இதனால் இருக்கிறது. இங்கு சமையற்கட்டு, யாகசாலை என்பன திருஷ்டாந்தத்துக்குள் வரும்.

ஒருவர் தான் அனுமானப் பிரமாணத்தைப் பயன்படுத்தினேன் என்று கூறினால் இந்த ஐந்து தத்துவங்களும் எவ்வாறு அவரது அனுமான வாக்கியத்துக்குள் வருகின்றன என்பதை விளக்க வேண்டும். அப்போதுதான் அவரது அனுமான வாக்கியம் ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணமாக “மலையில் புகை” யை இவ்வாறு விளக்கலாம்.

பர்வத: வஃனிமான் தூமத்வாத் யாக சாலவது – இது அனுமான வாக்கியம்.

மலையில் நெருப்பு இருக்கிறது, அங்கு புகை இருப்பதனால், யாக சாலையில் இருப்பதைப் போல, என்பது இதன் பொருள். இதிலிருந்து நாம் அடையும் வியாப்தி,

யத்ர யத்ர தூம: தத்ர தத்ர வஃனி: – எங்கெல்லாம் புகையிருக்கிறதோ, அங்கெல்லாம் நெருப்பிருக்கிறது, என்பது முடிபு.

இன்னொரு அனுமான வாக்கியம், வேதாந்தத்திலிருந்து.

சரீரம் விநாசி; கார்யத்வாத்; கடவது – இது அனுமான வாக்கியம். இதற்கு,

உடல் அழியக்கூடியது, அது செய்யப்பட்டிருக்கிற காரணத்தினால், ஒரு பானையைப் போல, என்று பொருள். இந்த அனுமான வாக்கியத்தின் வியாப்தி,

யத்ர யத்ர காரியத்வம்; தத்ர தத்ர விநாசித்வம் – எதுவெல்லாம் படைக்கப்பட்டதாக இருக்கிறதோ அதுவெல்லாம் அழிவைச் சந்திக்கும்.

அத்வைதம் அனுமானப் பிரமாணத்தை தனது முக்கியமான கருதுகோளான மாயையை நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்துகிறது. 

அனுமான வாக்கியம் – ஜகத் மித்யா; திருஷ்யத்வாத் ஸ்வப்னவது.

இந்த உலகம் வெறும் தோற்றமே, பார்க்கப்படுவதனால், கனவைப் போல. இதற்கான வியாப்தி வாக்கியம்,

யத்ர யத்ர திருஷ்யத்வம்; தத்ர தத்ர மித்யாத்வம் – எதுவெல்லாம் பார்க்கப்படுவதாக இருக்கிறதோ அதுவெல்லாம் வெறும் தோற்றமே.

பிரமாணத்தின் இன்னொரு முக்கியமான இலக்கணம், ஒரு பிரமாணத்தின் மூலம் விளக்க முடிந்த ஒன்றை இன்னொரு பிரமாணத்தின் மூலம் விளக்க இயலாது என்பதுதான். அதாவது, காதால் மட்டுமே ஒலியைக் கேட்க இயலும். ஒலிக்குக் காது பிரமாணம். வேறு எந்தப் புலன்களைக் கொண்டும் ஒலியை அறிந்து விட முடியாது. இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒரு பிரமாணத்தால் நிறுவப்பட்ட ஒன்றை மற்றொரு பிரமாணத்தால் நிராகரித்துவிட முடியாது. அதாவது காதால் கேட்ட ஒலியை, கண்களின் உதவியோடு அங்கு ஒலி நிகழவில்லை என்று நிரூபிக்க இயலாது. ஆனால் ஒரு பிரமாணத்தினால் பெறப்பட்ட அறிவை, இன்னொரு பிரமாணத்தின் உதவியோடு உறுதி செய்து கொள்ள முடியும். காதால் சலங்கை ஒலியைக் கேட்கிறோம். ஒரு பெண் அங்கு நடந்து வருவதாக முடிவு செய்கிறோம். கண்கள் மூலம் அந்தப் பெண்ணுருவத்தைப் பார்த்து வருவது பெண்தான் என்று உறுதி செய்து கொள்கிறோம். பிரமாணங்களின் இந்தப் பண்புகளை அத்வைத வேதாந்தம் ஆத்ம தத்துவம், பிரம்ம தத்துவம் ஆகியவற்றை விளக்க பயன்படுத்திக் கொள்கிறது.

மூன்றாவதாக உபமானப் பிரமாணம் வருகிறது. உபமானம் என்றால் உவமை, ஒப்பீடு என்று பொருள்படும். இந்தப் பிரமாணத்தை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். யாருமே சென்றிராத ஒரு நிலத்துக்கோ அல்லது தீவுக்கோ ஒருவர் சென்று வந்திருக்கிறார் என்று கொள்வோம். அங்கு அவர் சில விலங்குகளைக் கண்டிருக்கிறார். அங்கு இதுவரை சென்றிராத இன்னொருவருக்கு அவர் அவற்றினுடைய தோற்றத்தைக் குறித்து விளக்க முற்படுகிறார். தான் கண்ட அந்த விலங்கு ஒரு பசுவைப் போன்ற தோற்றம் கொண்டதென்றும், பசுவைப் போலவே அதுவும் புல்மேயும் தன்மை கொண்டதென்றும் கூறுகிறார். ஆனால் அது பசுவிலிருந்தும் வேறுபட்ட சில அம்சங்களைத் தன் தோற்றத்தில் கொண்டிருப்பதையும் விளக்குகிறார். இவ்வாறு தான் ஏற்கனவே கண்ட ஒரு பொருளோடு ஒப்பீடு செய்து அந்த விலங்கினுடைய தோற்றம் குறித்த அறிவை ஒருவர் அடைய முடியும்.  இது உபமானப் பிரமாணத்தின் மூலம் பெறப்பட்ட அறிவு ஆகும். இப்படிப் பெறப்பட்ட அறிவும் மதிப்பு வாய்ந்ததே என்று இந்தியத் தத்துவ ஆசிரியர்கள் கருதுகின்றனர். இங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருள் உபமேயம் என்றும், ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருள் உபமானம் என்றும், இரண்டிற்குமிடையே இருக்கும் பொதுவான பண்புகள் சாமான்யம் என்றும் அழைக்கப்படுகின்றன. “அவள் முகம் வசீகரத்தில் சந்திரனை ஒத்திருக்கிறது,” என்று ஒரு பையன் குறிப்பிடுகிறான் என்று கொள்வோம் (இது மோனியர் வில்லியம்ஸின் உதாரணம்). இதில் அந்தப் பெண்ணின் முகம் உபமேயம், நிலவு உபமானம், வசீகரம் என்ற இரண்டிற்கும் பொதுவான பண்பு சாமான்யம் என்று புரிந்து கொள்ளலாம். 

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டிகாவ்யம் என்ற நூல் உபமானப் பிரமாணம் என்ற அறிவை அடையும் முறை குறித்தும், அதில் பயின்று வரும் பல்வேறு வகையான ஒப்பீடுகள், உவமைகள் இவை குறித்தும் விரிவாக விவாதிக்கின்றது. உபமானப் பிரமாணம் என்ற அறிவைப் பெறும் முறை எந்தெந்த இடங்களில் பயனுள்ளதாகவும், நம்பகத்தன்மையோடும் இருக்கிறது என்றும், எங்கெல்லாம் பயனற்றும், நம்பகத்தன்மை இன்றியும் இருக்கிறதென்பதையும் அந்த நூல் குறிப்பிடுகிறது. மேலும் பல்வேறு பண்டைய மற்றும் இடைக்கால இந்து தத்துவ நூல்களில் முப்பத்தியிரண்டு வகையான உபமானங்களும், அறிதலில் அவற்றின் மதிப்பும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

செயற்பாலது ஓரும் அறன் வகையறச் சூழ்ந்தெழுதல்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.