அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

அத்வைத வேதாந்த தத்துவம் குறித்து விரிவானதும், ஆழமானதுமான ஒரு பார்வையை இந்தக் கட்டுரைத் தொடரில் காணவிருக்கிறோம். அத்வைத வேதாந்தத்தின் முழுமையான அறிமுகமும், அதில் பயின்று வரும் கலைச் சொற்கள், விளக்கங்கள், முடிபுகள் ஆகியன குறித்தும் விரிவாகக் காண இருக்கிறோம். வேதாந்த தத்துவத்தின் பின்புலத்தை அறியாதவர்களுக்கு அது குறித்த ஒரு விரிவான அறிமுகத்தையும், இயல்பாகவே தத்துவத் தேடல் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டி வரைபடத்தையும் அளிக்க வேண்டுமென்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். ஏற்கனவே அத்வைத வேதாந்தத்தை முறையாகக் கற்றவர்களும் இக்கட்டுரைத் தொடரை வாசித்து அனுபவிக்க இயலும். தனிப்பட்ட முறையில் எனக்கு இதை எழுதுவதின் காரணம் நான் என் ஆசிரியர்களிடம் கற்றுகொண்டவற்றை தொகுத்துக் கொள்ளவும், ஒரு நிதித்யாசனப் பயிற்சியாக இதைக் கைக்கொள்வதற்காவும்தான். 

தத்துவம்

தத்துவம் என்ற சொல் பல்வேறு பொருள்களில் கையாளப்படுகிறது. அதற்கு மெய்ப்பொருள் என்றும், சாரம் என்றும், கருதுகோள் என்றும், பிரிவு என்றும் பல்வேறு பொருள்கள் உண்டு. இச்சொல் எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கேற்ப அதன் பொருளும் மாறுபடும். வேதாந்தத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கலைச்சொற்கள் இவ்வாறு இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளப்படும். எனவேதான் அத்வைத தத்துவத்தை கற்றறிந்த குருவின் வாயிலாகவே கேட்டு, தெளிந்து, உணர வேண்டும் என்பது மரபாகப் பின்பற்றப்படுகிறது. “தத் விஞ்ஞானார்த்தம் குரும் ஏவ அபிகச்சேத்” என்று முண்டக உபநிஷத் கூறுகிறது. ஓர் ஆசிரியரின் வாயிலாகவே அதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த ஆசிரியரின் தன்மை எத்தகையதாக இருத்தல் வேண்டும்? அதையும் உபநிஷத்தே கூறுகிறது. “ஸ்ரோத்ரியம் பிரம்ம நிஷ்டம்.” அவர் ஏற்கனவே மாணவனாக இருந்து இன்னொரு ஆசிரியரிடம் இத்தத்துவத்தை முறையாகப் பயின்றவராகவும் (ஸ்ரோத்ரியம்), பயின்றபின் அத்தத்துவத்திலேயே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவராகவும் (பிரம்ம நிஷ்டம்) இருக்க வேண்டும் என்று உபநிஷத் ஆசிரியருக்கான வரையறையை அளிக்கிறது. அத்தகைய ஆசிரியரிடம் இருந்து முறையாகக் கற்கும் போதே ஒருவனது தத்துவக்கல்வி நிறைவு பெறுகிறது.

ஆசிரியரிடம் முறையாகத்தான் கற்கவேண்டுமெனில் இக்கட்டுரைத் தொடரை வாசிப்பதன் நோக்கமென்ன? வாசகர்களிடத்து அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டிய ஆவலைத் தூண்டுவற்காவும், ஒரு திசைகாட்டியாகவுமே இத்தொடர் அமையவிருக்கிறது. ஒரு நூலையோ அல்லது பல நூல்களையோ வாசித்து முடிப்பதன் மூலம் ஒருவனது தத்துவக்கல்வி நிறைவு பெறுவதில்லை. அது ஒரு ஆசிரியரின் உதவியுடன் பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஆன்மிக சாதனையாகும்.

தத்துவ ஆராய்ச்சியானது ஒரு பொருளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறிந்து அந்தப்பொருளின் மெய்யான தன்மை இப்படித்தான் என்பதை நிறுவுவதற்காவே மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக அத்வைதம் தன்னுடைய ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்கள் மூன்று. நான் என்று அறியப்படும் இந்த ஜீவன், அவன் அனுபவிக்கும் இந்த உலகம் (அதிலுள்ள பொருட்கள், உயிர்கள் அனைத்தும்), மற்றும் இந்த உலகைப் படைத்த இறைவன் ஆகிய மூன்றினுடைய உண்மைத் தன்மையை ஆராய்ந்து நிறுவுவதே அத்வைத வேதாந்தத்தின் நோக்கமாகும். 

வேதாந்தம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும். 

உபநிஷத், பகவத் கீதை போன்ற தத்துவ நூல்கள் மெய்ப்பொருள் தத்துவத்தை மூன்று வகையில் விரித்து எடுக்கின்றன. முதலில் மெய்ப்பொருள் குறித்த விளக்கத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றன. இவ்வகையில் கூறப்படும் வாக்கியங்கள் சூத்திர வாக்கியங்கள் எனப்படுகின்றன. தைத்திரீய உபநிஷத், “ப்ரம்மவித் ஆப்னோதி பரம்” என்று கூறுகிறது. இது சூத்திர வாக்கியம். இதன் பொருள், பிரம்மத்தை அறிபவன் பரத்தை அடைகிறான் என்பதாகும். இப்படி ஒரு பிரகடனத்தை உபநிஷத் செய்தவுடன், பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையுடையது? அதை அறிவது எங்கனம்? அதை அறிவதால் பரத்தை அடைவோம் என்று சொல்லப்படுகிறதே, அந்தப் பரம் எப்படிப்பட்டது? அதை அடைவதால் ஆன்மிக சாதகனான எனக்கு என்ன பலன்? என்றெல்லாம் கேள்விகள் இயல்பாகவே எழும். இம்மாதிரியான ஐயங்களுக்கெல்லாம் விடையாக உபநிஷத் அடுத்தபடியாக விருத்தி வாக்கியங்களைக் கூறும். இவ்வாக்கியங்கள் மேற்கூறிய சூத்திர வாக்கியத்துக்கான சுருக்கமான விளக்கங்கள். எடுத்துக்காட்டாக, “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம,” என்பது மேற்கூறிய சூத்திர வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள பிரம்மம் என்ற சொல்லுக்கான இலக்கணமாகும். பிரம்மமானது சத்தியமாகவும், தூய அறிவாகவும், அலகிலியாகவும் உள்ளது என்பது அதன் பொருள். இந்தப் பொருளிலிருந்து மேலும் பிரம்மத்தின் இலக்கணங்களை முழுமையாகவும், தெளிவாகவும் வரையறை செய்யும் வரை தத்துவ விசாரம் தொடரும். இந்த பிரம்மம் என்ற கருதுகோளை உபநிஷத் பல்வேறு விளக்க முறைமைகளின் உதவி கொண்டு விரிவான வாக்கியங்களில் தெளிவாக எடுத்துரைக்கும். இந்த வகையான வாக்கியங்களுக்கு வியாக்யான வாக்கியங்கள் என்று பெயர். இவற்றின் உதவியுடன் (ஆசிரியரின் துணைகொண்டு) ஒரு வேதாந்த மாணவன் பிரம்மத்தை அறிகிறான்.

அத்வைதம்

அத்வைதம் என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்று பொருள். சங்கரர் அத்வைத வேதாந்தத்தைத் தனித்த இந்தியத் தத்துவப்பள்ளியாக நிறுவியர் என்று கருதப்படுகிறார். இருப்பினும் இந்தப் பள்ளியின் தோற்றம் சங்கரருக்கு முன்பே உள்ளது என்பதை நம்மால் அறிய முடியும். பகவத் கீதை, உபநிஷத்துக்கள், மற்றும் பிரம்ம சூத்திரங்கள் இவற்றுக்கு சங்கரர் பாஷ்யம் என்ற உரை எழுதி அத்வைத தத்துவத்தை நிலை நாட்டினார். 

அத்வைதத் தத்துவத்தின் படி, பிரம்மம் ஒன்றுதான் உண்மையான மெய்ப்பொருள். இவ்வுலகம் என்பது ஒரு மாயத்தோற்றமே,  ஜீவன் என்று தன்னைக் கருதிக் கொள்கிறவன் உண்மையில் அந்த பிரம்மமேயன்றி வேறொன்றும் இல்லை என்று நிறுவப்படுகிறது. இக்கருத்து சங்கரரின் ஒரு சுலோகத்தில் வெளிப்படுகிறது. “பிரம்ம சத்யம், ஜகன் மித்யா, ஜீவோ பிரம்மைவ நாபர:” பிரம்மம்தான் சத்தியம். இவ்வுலகம் வெறும் ஒரு மாயத்தோற்றமே. ஜீவன் என்று சொல்லப்படுபவன் அந்த பிரம்மமேயன்றி வேறேதும் இல்லை என்பது சங்கரரின், அத்வைதத்தின் அறுதியான முடிவாகும். அத்வைத கல்வியில் பிரம்மம், ஜீவன், உலகம் இந்த மூன்றினுடைய உண்மையான தன்மைகள் குறித்து ஆசிரியரின் உதவியுடன் ஒரு நீண்ட விசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவென்றே தனித்துவமான பயில்முறைகளும், ஆன்மிக சாதனைகளும் வகுக்கப்பட்டுள்ளன. முறையான ஆன்மிக சாதனைகளைப் பின்பற்றி மனத்தூய்மையும், முதிர்ச்சியும் அடைந்த ஆன்ம சாதகன் அத்வைதக் கல்வியை ஒரு பயணமாக மேற்கொள்கிறான். இறுதியில் இதன் பலனாக அவன் வீடுபேற்றை அடைகிறான். இவை அனைத்தையும் குறித்து விரிவாகக் காண இருக்கிறோம்.

அத்வைத வேதாந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

அத்வைதத்தை நிறுவியர் சங்கரர் என்று சொல்லப்பட்டாலும் கூட, சங்கரருக்கு முன்பே அத்வைதக் கருத்துக்கள் நிலவி வந்துள்ளன என்பதை சங்கரரே தன்னுடைய சம்பிரதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். இவரது மரபின் வழி வந்த பல்வேறு சங்கராச்சாரியார்கள் இருப்பதால் இவர் ஆதி சங்கரர் என்றும், சங்கர பகவத்பாதர் என்றும் அறியப்படுகிறார். கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர். கி.பி 788-820 க்குள் பிறந்திருக்கலாம் என்பது நம்பிக்கை. சங்கரருடைய ஆசிரியராக கோவிந்த பகவத்பாதரும், அவருடைய ஆசிரியராக கௌடபாதரும்  இருந்திருக்கின்றனர். கௌடபாதர் பதிமூன்றே மந்திரங்கள் கொண்ட மாண்டூக்ய உபநிஷத்துக்கு “மாண்டூக்ய காரிகை” என்ற பெயரில் ஓர் உரை எழுதினார். சங்கரருடைய காலத்துக்குப் பின் மாண்டூக்ய காரிகை அத்வைத தத்துவத்தைப் பயில்பவர்களுக்கு மிக முக்கியமான ஒரு நூலாயிற்று. பிரம்ம வித்யா சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களாக தொண்ணூற்று ஒன்பது முன்னோர்களின் பெயர்களை சங்கரரே குறிப்பிடுகிறார். பிருஹதாரண்யக உபநிஷத்துக்கு எழுதிய உரையை சங்கரர் பிரம்ம வித்யையின் சம்பிரதாயத்தின் வழி வந்த ஆசிரியர்களை வணங்கித் துவங்குகிறார்.  சங்கரர் அத்வைத தரிசனத்தை பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், பத்து முதன்மை உபநிஷத்துக்கள் ஆகியவற்றுக்கு உரை எழுதியதின் மூலம் நிறுவினார். இவையல்லாது பிரகரண கிரந்தங்கள் எனப்படுகின்ற தத்வபோதம், ஆத்மபோதம், விவேகசூடாமணி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவரை ஆசிரியராகக் கொள்கின்ற மேலும் பல்வேறு நூல்கள் இவரால்தான் இயற்றப்பட்டது என்பது ஐயமற நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் அத்வைத மரபில் இவரது பிரகரண கிரந்தங்கள் துணை நூல்களாக இன்றும் பயிலப்பட்டு வருகின்றன. 

சங்கரர் இந்தியாவின் நான்கு மூலைகளிலும் நான்கு அத்வைத மடங்களை நிறுவினார். அவற்றுக்கு அவரது தலைமைச் சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வராச்சார்யா, ஹஸ்தாமலகர், மற்றும் த்ரோதகர் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். சங்கரரின் துவக்க கால மாணவரான பத்மபாதர் தன் ஆசிரியர் பிரம்ம சூத்திரத்தின் சதுசூத்ரிக்கு (முதல் நான்கு சூத்திரங்கள்) எழுதிய உரைக்கு “பஞ்சபாதிகை” என்றொரு விளக்கவுரை எழுதினார். பத்மபாதரே அத்வைத தத்துவத்தை விளக்கும் “நைஷ்யகர்ம்ய சித்தி” என்ற நூலையும் இயற்றினார். 

துவக்ககாலத்தில் அத்வைதத்தின் எதிர்ப்பள்ளியை சேர்ந்த மந்தனமிஸ்ரர் “பிரம்மசித்தி” என்ற நூலை இயற்றினார். இவர் சங்கரரின் சமகாலத்தவர். குமாரில பட்டரின் மீமாம்ச மரபில் (மீமாம்சங்கள் பிறகு விளக்கப்படும்) வந்தவரெனினும், இவர் இயற்றிய பிரம்ம சித்தி அத்வைதத்தை அடியொற்றியதாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டு வரையில் மந்தன மிஸ்ரரே அத்வைதத்தின் ஆசிரியராகப் புகழ்பெற்று விளங்கினார். “பிழைகள் என்பன இறுதியில் உண்மைக்கே இட்டுச் செல்வதால் அவற்றை வாய்ப்புகளாகக் கருத வேண்டும். முழுமையான, சரியான அறிவு என்பது உண்மையைப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், பிழைகளைகளையும், உண்மை அல்லாதவற்றையும் ஆராய்ந்து புரிந்து கொள்வதாக இருக்க வேண்டும்” என்பது இவரது கருத்து. ஆன்மிக விடுதலைக்கு கர்மம், அறிவு இவை இரண்டினுடைய இணைப்பு அவசியம் (ஞானகர்ம சமுச்சயம்) என்பது இவரது வாதமாகும். ஆனால் அறிவொன்றே ஆன்ம விடுதலைக்கு வழி என்பது சங்கரரின் கொள்கை. 

சங்கரருக்கு பிறகாக பாமதி, விவரணா என்ற இரண்டு முக்கியமான அத்வைத பள்ளிகள் தோன்றின. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு பாமதி என்று ஒரு விளக்கவுரை (டீகா) எழுதினார். அவருடைய கருத்துக்களிலிருந்து அப்பள்ளி உதயமாயிற்று. பிரகாசாத்ம யதி என்பவர் பத்மபாதரின் பஞ்சபாதிகைக்கு விவரணா என்ற விளக்கவுரை எழுதியதின் மூலம் விவரணாவின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தார். அகண்டானந்தர், சித்சுகர், ஆனந்த பூரணர் போன்றோர் பல அத்வைத வேதாந்த நூல்களை இயற்றி விவரணா பிரிவை வளப்படுத்தினர்.

பிருஹதாரண்யக உபநிஷதத்திற்கு சங்கரர் எழுதிய விளக்க உரைக்கு, அவரது சீடரான சுரேஷ்வரர் “பிருஹதாரண்யக பாஷ்ய வார்த்திகம்” என்ற விளக்க உரை (வார்த்திகம்) நூலை எழுதினார். இந்நூலின் கொள்கையை பின்பற்றி எழுந்தது வார்த்திக அத்வைத வேதாந்த தத்துவப் பிரிவு. சுரேஷ்வரரின் கருத்துக்களை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வஜ்ஞாத முனி தொகுத்து வார்த்திகம் எனும் அத்வைத வேதாந்த தத்துவத்தைப் பிரிவை பரப்பினார்.

சங்கரருக்குப் பின்னாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் அத்வைத மரபை வளர்த்தெடுத்தவர்கள் பலர். அவற்றில் முக்கியமான சில பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  பத்தாம் நூற்றாண்டிலிருந்து துவங்கி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் முக்கியமான ஆசிரியர் ஒருவர் அத்வைத மரபின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார். பத்தாம் நூற்றாண்டில் பிரகாசாத்மனிலிருந்து துவங்கி, விமுக்தாத்மன், சர்வஞாத்மன், ஸ்ரீ ஷர்ஷர், சிதுக்ஷா, ஆனந்தகிரி, அமலானந்தர், வித்யாரண்யர், சங்கரானந்தர், சதானந்தர், பிரகாசானந்தர், ந்ருசிம்ஹாஸ்ரமர், மதுசூதன சரசுவதி, தர்மராஜ அத்வரிந்திரா, அப்பைய தீக்ஷிதர், சதாசிவ பிரம்மேந்திரர், சந்திரசேகர பாரதியார், சச்சிதானேந்திர சரசுவதி ஆகியோர் அத்வைத நூல்களை இயற்றியும், சங்கரரின் உரைகளுக்கு விளக்கமளித்தும் அத்வைத தரிசனம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் நிறுவப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பிற்கால அத்வைத மரபின் மிக முக்கியமான நூல்களாக ஸ்ரீ ஹர்ஷரின் கண்டனகண்டகாத்யம் (இந்த நூலை உரையுடன் தன் கையெழுத்திலேயே கண்டு பண்டிதர் என்பவர் எழுதியிருக்கிறார். கி.பி 1623 ல் எழுதப்பட்ட இந்த கைப்பிரதி பண்டார்கர் இன்ஸ்டிட்யூட்டில் இன்னும் பத்திரமாக உள்ளதாக சொல்வனத்தில் ஜானகி கிருஷ்ணன் எழுதிய கட்டுரை குறிப்பிடுகிறது), சிதுக்ஷாவின் தத்துவ பிரதீபிகா, வித்யாரண்யரின் பஞ்சதசி, ஜீவன் முக்தி விவேகம், சதானந்தரின் வேதாந்த சாரம், மதுசூதன சரசுவதியின் அத்வைத சித்தி, தர்மராஜ அத்வரிந்திரரின் வேதாந்த பரிபாஷை, அப்பைய தீக்ஷிதரின் சித்தாந்த லேச சங்கிரகம் ஆகியன கருதப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் அத்வைத தத்துவத்தை முன்னிறுத்தியவர்கள். இருபதாம் நூற்றாண்டின் அத்வைத மரபைச் சார்ந்த ஆசிரியர்கள் சுவாமி சிவானந்த சரசுவதி, சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரசுவதி, சுவாமி கிருஷ்ணானந்தர் ஆகியோர். அத்வைத தத்துவத்தை கல்விப்புலத்தில் எடுத்துச் செல்லும் பணியை பேராசிரியர் டிஎம்பி மகாதேவன், கே. சச்சிதானந்த மூர்த்தி, ஆர். டி. ரானடே, கே.சி. பட்டாசார்யா ஆகியோர் செய்தனர். ரமண மகரிஷி, நிசர்கதத்த மகராஜ் போன்றவர் அத்வைதக் கல்வியை முறையாகக் கற்பிக்கவில்லையாயினும் அவர்கள் வாழ்ந்த வாழ்வும், அவர்களது தனித்துவமான பயிற்று முறைகளும் ஓர் ஆன்மிகச் சாதகனுக்கு அத்வைதத்தின் இன்றியமையாமையை உணர்த்தின.

துவக்கத்திலேயே அத்வைத வேதாந்தத்திற்கு ஒரு சுருக்கமான அறிமுகத்தையும், அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் அளித்ததற்குக் காரணம்,  அதன் பின்னர் அத்வைதக் கல்வியின் கூறுகளை விரிவாக எடுத்துரைப்பதற்காகவும், ஓர் அத்வைத மாணவனுக்கு வழிகாட்டியான வரைபடத்தை அளிப்பதற்காகவுமே. அடுத்தடுத்த பகுதிகளில் அவை குறித்து விரிவாகக் காணலாம்.

தொடரும்

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

செயற்பாலது ஓரும் அறன்

Discover more from சொல்வனம் | இதழ் 357 | 28 டிச 2025

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.