
அந்த மாபெரும் திருட்டு மிக நூதனமாகத் திட்டமிடப்பட்டது. கனடாவின் க்யூபெக் நகரின் முக்கிய சேமிப்புக்கிடங்கில் இருந்த மிக விலை மதிப்புள்ள ஒன்றைக் கொள்ளையடிக்க வருடங்களாக ஒரு குழு திட்டமிட்டது. அந்தக்கிடங்கில் பணியாற்றிய பெண்மணி ஒருவரின் கணவரான அவிக் கரோன் (Avik Caron) அந்த சேமிப்புக்கிடங்கு இருந்த நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட என்பதால் அவரும் அந்தக்கொள்ளையில் இணைந்திருந்தார்.
அவிக்கின் மனைவியிடமிருந்து கிடங்கின் அமைப்பு, பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் சேமிப்பின் அளவு ஆகியவற்றை கொள்ளையர்கள் தெரிந்துகொண்டார்கள்.
கள்ளச்சந்தை வணிகத்தில் மிகவும் பிரபலமாயிருந்த ரிச்சர்ட் வாலியர் தான் அந்தக் கொள்ளையை தலைமையேற்று நடத்தினான்.
தொடர்ந்து மாதக்கணக்கில் யாருக்கும் தெரியாமல் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள, சேமிப்பில் இருந்த ’’அந்த’’ மதிப்பு வாய்ந்த பொருள், ஆகஸ்ட் 2011-லிருந்து ஜூலை 2012 வரை சுமார் பத்துமாதங்களில் மெல்ல மெல்லக் கொள்ளையடிக்கபட்டது.
கனடாவின் மிகப்பெரும் விவசாயக் கொள்ளை என்று வரலாற்றில் குறிப்பிடப்படும், மிகப்பெரிய கொள்ளைச்சம்பவமான இது, வங்கியிலோ, வைரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகத்திலோ நகைக்கடையிலோ நடக்கவில்லை.
க்யூபெக் நகரின் பரந்து விரிந்த மேப்பிள் சிரப் சேமிப்புக்கிடங்கில் 9571 பீப்பாய்களில் இருந்த 30 மில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட 3000 டன் நீர்மத்தங்கம் எனப்படும் மேப்பிள் சிரப்தான் கொள்ளை போனது. சுவற்றுக்கு வெளியே லாரிகளை நிறுத்தி, துளையிட்டு ஃபோர்க் லிஃப்ட்கொண்டு பீப்பாய்களைத் தூக்கி, பீப்பாய்களிலிருந்து பம்ப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே இருந்த பீப்பாய்களில் மேப்பிள் சிரப் சேகரிக்கப்பட்டு, பதிலுக்கு காலிப்பீப்பாய்களில் வெறும் தண்ணீர் நிரப்பப்பட்டது.
கொள்ளையிடப்பட்ட சிரப் யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடி வெளிப்படையான சந்தையில் விற்கப்பட்டது.
கனடாவின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் கொள்ளையான இது 2012-ன் இறுதியில், வழக்கமான தரக்கட்டுப்பாட்டு சோதனையின் போது, பொதுவாக 270 கிலோ அளவில் இருக்கும் மேப்பிள் சிரப் பீப்பாய்கள் மீது ஏறிப்பார்த்த அதிகாரிகள் பீப்பாய்கள் எடையில்லாமல் உருண்டபோது சந்தேகப்பட்டு திறந்து பார்க்கையில்தான் கண்டறியப்பட்டது. க்யூபெக் சேமிப்புக்கிடங்கில் பல வருடங்களாக சேமிக்கபட்டிருந்த விலைமதிப்புள்ள மேப்பிள் சிரப் கொள்ளைபோனது உலகளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
மிகப்பெரிய அளவிலான குற்றப்புலனாய்வு நடந்துதான் இந்தக்கொள்ளையில் ஈடுபட்ட சுமார் 25 பேர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது.
விசாரணை நீண்டு கொண்டே சென்று 2016-ல் தான் ஒருவழியாக கொள்ளையர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ரிச்சர்டுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு 8 வருட சிறைத்தண்டனையும், உள்ளேயே இருந்து உதவியதற்காக அவிக்கின் மனைவிக்கு 5 வருட தண்டனையும் 1.2 மில்லியன் டாலர் அபராதமும், கொள்ளையடிக்கப்பட்ட மேப்பிள் சாற்றை ஏரளமாகப் பதுக்கி வைத்திருந்த ரிச்சர்டின் அப்பாவுக்கு 2 வருட தண்டனையும் 10000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. *
இந்த மேப்பிள் சிரப் என்னும் மேப்பிள் மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்புச்சாறு எப்போதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு உபயோகத்தில் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைத்ததில்லை எனினும் உலகெங்கிலும் பிரபலமான ஒரு கதை இப்படிச்சொல்கிறது:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவின் கடும்பனிக்காலமொன்றில், இராகுயிஸ் பூர்வீக குடிகளின் தலைவரான வொக்ஸிஸ் (Woksis) வேட்டையிலிருந்து சோர்வுடன் திரும்பி வந்தார். கடும்பனிப்பொழிவினால் மரம் செடிகொடிகள் உறைந்துபோனதோடு விலங்கினங்களும் மறைவிடங்களில் உறக்கநிலையில் இருந்ததால் பலநாட்களாகவே வேட்டையில் விலங்குகள் கிடைக்காமல் பனிக்காலம் அவர்களுக்கு கடும் பசிக்காலமுமாகவே இருந்தது. அன்றும் வெறும் கையுடன் குடிசைக்கு திரும்பிய அவர் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த மேப்பிள் மரங்களில் ஒன்றில் தனது கோடாரியை ஓங்கிக் குத்திச்செருகி விட்டு அருகிலிருந்த ஆற்றுக்கு இறங்கிச் சென்றார்.

அவரது மனைவி மொஹுவாவுக்கு ஒரு சிறு உறைந்த மான் இறைச்சித்துண்டு அன்றைய உணவுக்கு இரவலாகக் கிடைத்திருந்தது. இறைச்சியுடன் வீடு திரும்பிய அவர், கணவர் மேப்பிள் மரத்தில் குத்திச்சென்ற கோடாரி உண்டாக்கிய காயத்திலிருந்து சாறு வடிந்து மரத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த கூடையில் சொட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். மெல்லிய நறுமணத்துடன் அந்த கூடையில் சேகரமாயிருந்த அந்தத் திரவத்தை சுவைத்துப்பார்த்த அவர் அதன் இனிப்பில் மகிழ்ந்து, சமைக்க உறைந்துபோகாத நீர் இல்லாததால் அந்த மரச்சாற்றிலேயே இறைச்சியை சமைத்தார்.
அன்றைய உணவின் சுவை அபாரமாக இருந்ததோடு மேப்பிள் மரங்களை காயப்படுத்தினால் அதிலிருந்து மிகச்சுவையான இனிப்பான சாறு கிடைக்கும் என்பதும் அந்தப் பூர்வீகக்குடிகளுக்கு அப்போதிலிருந்து தெரியவந்தது.
இந்தக்கதை மட்டுமல்லாது பல கதைகளும் மேப்பிள் சாறு கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து உலவுகிறது என்றாலும் இதுவே மிக அதிகம் புழக்கத்திலிருக்கிறது.
வட அமெரிக்காவின், வடகிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மேப்பிள் சாறு அங்கே ஐரோப்பியர்கள் வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே மரத்திலிருந்து சேகரிக்கப்பட்டு காய்ச்சிப் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் சடங்குகளில் மேப்பிள் சாறு காய்ச்சி பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தபட்டது. வசந்தகாலத்தின் முதல் முழுநிலவில் மேப்பிள் சாற்றை அருந்தி மேப்பிள் நடனமிடுவதும் அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. அமெரிக்க பூர்வீகக்குடிகள் அனைத்துமே மேப்பிள் சாறு சத்துகளையும் ஆற்றலையும் அளிப்பதையும் கண்டுகொண்டனர்.
பனிக்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில் மேப்பிள் மரங்களில் சாறு நிரம்பி இருப்பதை அறிந்து கொண்டிருந்த அவர்கள் மரத்தில் V வடிவ காயமுண்டாக்கி அதில் நாணல் தண்டுகளையும் , குழாய்களாக சுருட்டப்பட்ட மரபட்டைகளையும் செருகி சாற்றை சேகரிக்க கற்றுக்கொண்டனர்,

ஒழுகும் சாற்றை இறுக்கமாக பின்னப்பட்ட பிர்ச் மரபட்டைக்கூடைகளிலும் களிமண் பாத்திரங்களிலும்தான் சேமிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.
துவக்கத்தில் வடிந்த சாற்றை அப்படியே சுவைத்தவர்கள் காலப்போக்கில் அதை காய்ச்சி நீரைச் சுருக்கி கெட்டியாக்கினால் சுவை கூடுவதோடு நெடுங்காலத்துக்கு சேமிக்கமுடியும் என்பதையும் அறிந்தார்கள். அப்படி உருவானதுதான் மேப்பிள் சிரப்.
குறைந்த வெப்பத்தில் இரவெல்லாம் சூடாக்கப்பட்ட மேப்பிள் சாறு அடுத்த நாள் கலையில் சாற்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்படலம் நீக்கப்பட்டு பெரிய கலன்களில் வேகமாக எரியும் நெருப்பில் காய்ச்சி சிரப் ஆக தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டது. களிமண் பாத்திரங்களைப் போலவே கருங்கற்களில் குழி உருவாக்கி அதிலும் மேப்பிள்சாற்றை சேமித்தார்கள்.
துவக்க கால ஐரோப்பிய குடியேற்றத்தின்போது அமெரிக்கப் பூர்வீகக்குடியினர் ஐரோப்பியர்களுஜ்கு மேப்பிள் சாற்றைச் சேகரிப்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். ஃப்ரான்ஸ் அரசின் பிரபஞ்சவியலாளரான ஆன்றி திவெட் (André Thevet) பிரஞ்ச் கடற்பயணிகள் மேப்பிள் சிரப்பை அருந்தியதை அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
1680-களில் ஐரோப்பிய தோல் வணிகர்கள் மேப்பிள் சிரப் வணிகத்தையும் செய்தார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் மரத்தில் காயமுண்டாகி சாற்றை வடியச்செய்யாமல், மரத்தில் துளையிட்டு மேப்பிள் சாற்றை சேகரித்தார்கள். ஒரே மரத்தில் பல துளைகளிட்டும் சாறு சேகரிக்கப்பட்டது. ஏராளமாக சாறு சேகரிக்கப்பட்டு மாபெரும் மரக்கொள்கலன்களில் நிறைத்து,சுமை தூக்கும் விலங்குகளைக் கொண்டு இழுத்துச்செல்லப்பட்டு பிரத்யேக சேமிப்புக்கிடங்குகளில் வருடக்கணக்காக மேப்பிள் சாறு சேமித்துவைக்கப்பட்டது.
நீர்மத்தங்கமென்று (Liquid gold) அழைக்கப்படும் இந்த மேப்பிள் சாறு 1970-களிலிருந்து பிளாஸ்டிக் குழாய்களைச்செருகி சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவியும் இப்போது சாற்றை வடிகட்டப் பயனாகிறது. இப்போது எல்லாவித கலன்களிலும் சாறுசேகரிக்கப்படுகிறது.
மேப்பிள் மரங்களின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில் மேப்பிள் சாறு மூன்று வகை மரங்களிலிருந்து கிடைக்கிறது.
சர்க்கரை மேப்பிள் எனப்படும் Acer saccharum, கருப்பு மேப்பிளான Acer nigrum, சிவப்பு மேப்பிளான Acer rubrum ஆகிய மூன்றிலிருந்துதான் மேப்பிள் சிரப் பிரதானமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் சேமிக்கும் மாவுச்சத்தை இலையுதிர்காலத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்துவிடுவதால் வேர்களில் சேமித்துவைக்கிறது. குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில், வெப்பம் உயர்ந்து பனி உருகும்போது, நீர் உறிஞ்சும் வேர்களால், இந்த சேர்த்துவைக்கப்பட்ட மாவுச்சத்தான ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. தண்டின் மேலே சாற்றேற்றத்தினால், மரத்தின் ஸைலம் எனப்படும் நீர்கடத்தும் குழாய்கள் வழியே கடத்தப்படும் இந்தச்சாறுதான் மேப்பிள் சாறு.
தொல்காலத்திலிருந்தே சாறு சேகரிக்கப்படுகையில் மரத்துக்கு சேதமாகாமல் கவனம் கொள்ளப்படுகிறது.
30 லிருந்து 40 வயதான, 12 அங்குலச் சுற்றளவு கொண்ட மேப்பிள் மரங்களிலிருந்து தான் சாறு கிடைக்கும். ஒரு மேப்பிள் மரம் சுமார் நூறு வருடங்களுக்கு தொடர்ந்து சாறு அளிக்கும். ஒரு பருவத்தில் ஒரு மரம் சுமார் 150 லிட்டர் சாற்றைக் கொடுக்கிறது. இந்த அளவானது, மரத்தின் ஆரோக்கியம், மண் வளம் மற்றும் காலநிலையைக் குறித்து மாறுபடும். சுமார் 150 லிட்டர் சாற்றை கொதிக்க வைத்தால்தான் 1 லிட்டர் சிரப் கிடைக்கும்.
மெல்லிய இனிப்புடன் 3% சர்க்கரையும் பெரும்பாலும் நீர் மட்டும் இருக்கும் சாறு காய்ச்சப்பட்டு அதிலிருக்கும் நீர் ஆவியான பின்பு 70-75% சர்க்கரை கொண்டிருக்கும் மிக இனிப்பான மேப்பிள் சிரப் தயாரிக்கப்படுகிறது.
மரங்களிலிருந்து வடியும் முதல் சாறு தங்கசாறு-Gold maple syrup. , அடுத்து வருவது ஆம்பர்- Amber, அடுத்து அடர் சாறு-dark ,அடுத்ததும் கடைசியில் வடிவதும் மிக அடர்சாறு- very dark என்று நான்கு வகை சிரப்கள் ஒரே மரத்திலிருந்து கிடைக்கிறது.

ஜனவரி மாதத்தின் கடைசியிலிருந்து ஏப்ரல் கடைசிவரை இந்த சாறு சேகரிக்கப்படுகிறது.
முதல் சாற்றில் நிறமும் நறுமணச்சுவையும் மிதமாகவும் பின்னர் வரும் சாற்றில் நிறம் அடர்த்தியாகவும் நறுமணச்சுவை (flavour ) அதிகமாகவும் இருக்கும்.
முதல்தர மேப்பிள் சாறு காக்டெயில்களிலும், யோகர்ட்டின் மீதும் பரிமாறப்படுகிறது. அம்பர் வகை பேன்கேக் மற்றும் வேஃப்ஃபில்களுடன் சேர்த்துச் சுவைக்கப்படுகிறது.
அடர் மேப்பிள் சாறு பார்பெக்யூ முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளின் மீது தடவவும், அவற்றிற்கான ஆணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
மிக அடர்ந்த மேப்பிள் சாறு இறைச்சியை பதப்படுத்தவும், பேக்கரிப்பொருட்கள் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
மேப்பிள் மரங்களின் ஏசர் பேரினத்தின் மூன்று வகைகள் அல்லாது மற்ற வகை மேப்பிள் மரங்களிலிருந்தும் சிரப் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றது.
உதாரணமாக பாக்ஸ் எல்டர் எனப்படும் Acer negundo, சில்வர் மேப்பிள் மரமான A. saccharinum, பேரிலை மேப்பிளான A. macrophyllum மற்றும் ஃப்ளோரிடா மேப்பிளான A.floridanum ஆகியவற்றிலிருந்தும் மிகக்குறைந்த அளவில் சாறு எடுக்கப்படுகிறது.
மேப்பிள் அல்லாத பிர்ச், வால்நட் மற்றும் பனை மர வகைகளிலிருந்தும் கூட சிரப் கிடைக்கிறது.
மேப்பிள் சிரப் மிட்டாய்களாகவும், மேப்பிள் வெண்ணெய் மற்றும் மேப்பிள் சர்க்கரையாகவும் சந்தையில் கிடைக்கிறது. சிரப் காய்ச்சப்படுகையில் நுண்ணுயிரிகளைக் கொண்டு நொதிக்கச்செய்து மாறுபட்ட சுவையும், வாசனையுமாக பல வகை சிரப்களும் கிடைக்கின்றன.
மேப்பிள் சிரப் தயாரிப்பு பொதுவாக வடஅமெரிக்காவின் வடகிழக்குப்பகுதியில் தான் மையம் கொண்டிருக்கிறது. மேப்பிள் மரங்களை பெருமளவில் வளர்த்தி மேப்பிள் சிரப் தயாரிக்கும் பண்ணைகள் சுகர் புஷ் (sugar bush) என அழைக்கப்படுகின்றன.
1930 வரைக்கும் அமெரிக்காவே மேப்பிள் சிரப் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் கனடாதான் இன்றைய தேதி வரை மேப்பிள் சிரப் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.
குறிப்பாக க்யூபெக் மாகாணத்தில்தான் மிக அதிக மேப்பிள் சாறு தயாராகிறது. அங்குதான் முன்பு குறிப்பிட மாபெரும் மேப்பிள் சாறு கொள்ளை நடந்தது. க்யூபெக்கில் நட்டுமே சுமார் 14 ஆயிரம் பண்ணையாளர்கள் மேப்பிள் மரங்களை வளர்க்கிறார்கள்.
மேப்பிள் சிரப் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலும் தயாரிக்கப்படுகிறது. தென்கொரியாவில் வடியும் சாறு சிரப்பாக காய்ச்சி எடுக்கப்படாமல் அப்படியே gorosoe என்னும் பெயரில் சுவைக்கப் படுகிறது.
கனடாவிலிருந்து தயரிக்கப்படும் மேப்பிள் சிரப் சூடாகவே உலோக அல்லது கண்ணாடி டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. மேப்பிள் சிரப் என்னும் பெயர் பாட்டில்களின் மேலே இருக்கும் லேபிளில் ஃப்ரென்ச் மற்றும் ஆங்கிலத்தில் 1.6 மிமீ என்னும் ஃபான்ட் அளவில் தான் இருக்கவேண்டும் எனும் விதியும் இருக்கிறது.
சர்வதேச மேப்பிள் சிறப்பு நிறுவனமும்,(International Maple Syrup Institute-IMSI) பல மேப்பிள் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து, சிரப்பின் உற்பத்தி தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவின் மேப்பிள் சிரப் தயாரிப்பு விதிகளைத் திருத்தி இருநாடுகளுக்கும் பொதுவாக ஒரே மாதிரியான விதிகளையும் உருவாக்கி இருக்கின்றன.
மேப்பிள் சிரப்பில் ஏராளமான ஆற்றலும், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் கனிமங்கள் நிறைந்திருக்கிறது.
உலகெங்கிலும் பல பிரதான உணவுகளுக்கு தொடு உணவாகவும், டாப்பிங்ஸ் எனப்படும் மேலே தடவி உண்ணப்படும் உணவாகவும் மேப்பிள் சிரப் பயன்பாட்டில் இருக்கிறது.
மேப்பிள் சிரப்பைவிட தரம் குறைவான மக்காச்சோள சிரப்புடன் சர்க்கரை கலந்த டேபிள் சிரப் – Table syrup வளரும் நாடுகளில் மேப்பிள் சிரப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நாம் உயர் விடுதிகளில் மேப்பிள் சிரப் என்று சுவைத்துப்பார்ப்பது அநேகமாக டேபிள் சிரப்தான்
கனடாவின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது மேப்பிள் மரமும் மேப்பிள் சிரப்பும். கனடவின் தேசியக்கொடியுலேயே மேப்பிள் இலை பொறிக்கப்பட்டிருக்கிறது. மேப்பிள் இலையே கனடாவுக்கான குறியீடாகத்தான் கருதப்படுகிறது.
கடந்த சில வருடங்களாகவே இயற்கை உணவுகளுக்கான தேடலும் தேவையும் அதிகரித்திருப்பதால் மேப்பிள் சிரப்பின் விற்பனையும் உலகளவில் மிக அதிகமாயிருக்கிறது.
மாபெரும் மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரளமான இனிப்பு பானங்களின் வரிசையில் நமக்கு இயற்கை அளித்திருக்கும் மாபெரும் கொடையான, தீங்கற்ற, ரசாயனங்களற்ற இந்த இனிப்புச்சாற்றையும் தேர்வு செய்து சுவைத்துப்பார்க்கலாம்.
*கனடாவின் மேப்பிள் சிரப் கொள்ளை குறித்த the sticky என்னும் நகைச்சுவை தொடர் அமேஸான் பிரைமிலும் dirty money என்னும் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது. மேலும் ஏராளமான crime podcast நிகழ்வுகளும் இந்த மேப்பிள் சிரப் கொள்ளை குறித்து வந்திருக்கிறது.
***
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
