- ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
- மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
- புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
- பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
- ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
- அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
- மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
- மாலதி சந்தூர், ரேணுகா தேவி
- கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
- ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
- வட்டிகொண்ட விசாலாட்சி
- நிஷ்காம யோகி நாவல்
- வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
- காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
- தென்னேட்டி ஹேமலதா
- தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்
- ராகஜலதி என்ற நாவல்
- மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல்
- இது துளசிவனம் என்ற நாவல்
- மோகனவம்சி என்ற நாவல்
- ஸ்வர்ண சீதா என்ற நாவல்
- ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்
- கொலகலூரி இனாக்
தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
கொலகலூரி இனாக் (1939, வயது 86)

‘ஆச்சார்ய இனாக்’ இந்தத் தலைமுறை இலக்கியவாதிகளுள் சில முக்கியமான விவாதங்களை, வேதங்களாக மாற்ற வேண்டுமென்று கனவு காண்பவர்களில் ஒருவர். அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் அறிவிப்புகளாக அன்றி, புகார்களாக சமுதாயத்தில் கருதப்படுகின்றன. தலித்தியலுக்கு வக்காலத்து வாங்கிய பிரமுகராகவும், பெண்ணியத்தை தொட்டும் தொடாமலும் தொட்டு, அனாச்சாரங்களின் அனர்த்தங்களை உடைத்தெறியும் படைப்பாளியாகவும் பெயரெடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று பெரியவர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் அலட்சியத்தைச் சாடி, அவர்களின் கடமையை அவர்களுக்கு நினைவுபடுத்துவதைத் தன் கடமையாகக் கொண்டவர்.
ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு செய்தி, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஏதோ ஒரு பிரச்சினையும் அதன் தீர்வும், ஒவ்வொரு அசைவிலும் சமுதாயம் எடுத்துவைக்க வேண்டிய அடி என்று ஓட்டமெடுக்கவைக்கிறார். நம் சிந்தனைகளுக்கு சாணை பிடிக்கிறார். அவர் பெண்ணிய கருத்துக்களோடுப் படைத்த சிறுகதைகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
‘ரமா என் புதல்வி’ என்ற சிறுகதை:
புதல்வி பிறக்கிறாள். தாயும் தந்தையும் கர்வத்தோடு தலை நிமிர வேண்டிய தருணம் அது. ஆனால் சிறுகதை நடந்த காலத்தில் ரமாவுக்கு ஐம்பது வயது. அவளைப் பெற்ற தாயின் பெயர் ‘ரசராஜ்ஜியம்’ அவள் வயது எழுபதுக்கு மேல். ரசராஜ்ஜியம் கூறும் ராமாவின் தந்தை பெயர் ரங்காராவ். அவனுக்கும் வயது எழுபதுக்கும் மேல். ‘ரச ராஜ்ஜியம்’, ‘மாதிக’ என்ற தலித் குலத்தில் பிறந்தவள். ரங்காராவ் க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன். ரசாரஜ்ஜியத்தின் புதல்வியான ‘ரமா’ மேற்கல்வி கற்றவள். ஆந்திரா பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணி புரிந்தாள். கற்பிக்கும் அனுபவத்தால் மேதாவியாக விளங்கினாள். அறிஞராக அங்கீகாரம் பெற்றாள். கொஞ்சம் வசதியான குடும்பம் என்பதால் எந்த ஸ்காலர்ஷிப்பும் இல்லாமல் படித்தாள். சொந்த திறமையால் உத்தியோம் கிடைத்தது. எந்த ரிசர்வேஷனையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு அரசியல் கட்சி கொடுத்த அழுத்தத்தால் ‘ஒதுக்கப்பட்ட பிரிவில்’ தேர்தலில் நின்றாள். எம்.பி.யாக ஆனாள். தோற்ற சமீபத்திய வேட்பாளர் அவளுடைய குலச் சான்றிதழ் குறித்து வினா எழுப்பினார். கீழ்க் கோர்ட், மேல் கோர்ட், வாதங்கள் பிரதிவாதங்கள். இறுதியில் பள்ளிச் சான்றிதழின்படி அவளுடைய தந்தை க்ஷத்தியரான ரங்காராவ் என்பது உறுதியானது.
சரியாக அந்த சூழ்நிலையில்தான் ரங்காராவ், செய்தியை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டு, கோர்ட்டுக்குச் சென்று எதிர் வழக்குத் தொடுத்து, தன்னுடைய நேர்மையை நிரூபித்துக் கொள்வதற்காக, “ரமா என் புதல்வி அல்ல” என்று அடித்துக் கூறினான். தன்னுடைய குலப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவ்வாறு செய்தான்.
‘கொலகலூரி இனாக்’ “ரமா என் புதல்வி அல்ல” என்ற வாக்கியத்தைக் கொண்டு “ரமா என் புதல்வி” என்ற சிறுகதையைத் தொடங்கியிருப்பது சிறப்பு. வாசகர்களிடம் பரபரப்பு அதிகரிப்பதற்கும், கேள்விகள் நாய்க்கொடைகளைப் போலப் பிறந்து, சிந்தனையைத் தீவிரம் செய்வதற்கும் இந்த ஒரு தொடக்கம் போதும். பெண்ணியத்தோடு கூட ‘குலம், ஜாதிப் பிரச்சினைகள் சமுதாயத்தின் நோய்கள்’ என்று விளக்கும் அற்புதமான தொடக்கம் இது.
“கண் தெரியாத குருட்டு யுகத்தில் கல்யாணம் கார்த்திகை இல்லாத பைத்தியக்கார முட்டாள்கள் விதையின் முக்கியத்துவத்தைக் கூறியவுடன் விளையும் நிலத்தின் முக்கியத்துவம் காற்றிலடித்துக் கொண்டு போய் விடுமா? காலம் மாறியதென்றும், சமுதாயம் மாறியது என்றும் அங்கீகரிக்கும் நீங்கள், எப்போதோ யாருக்கோ ஏனோ தோன்றிய “தந்தை முக்கியம்” என்ற சொல்லை இன்று பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்களே. உங்களுக்கு சமூக நியாயம் தெரியுமா? மானுட முக்கியத்துவம் தெரியுமா?” என்று கட்டுக்கடங்காத கோபத்தோடு எதிர்த்துப் பேசினாள் ரமா.
இன்னும் அவள் அடித்துச் சொன்ன முக்கியமான செய்தி, “நான் என் தாயின் புதல்வி. நியாயமும் தர்மமும் அரசாங்கமும் வாரிசத்துவ சட்டமும் ஹிந்து தர்ம சாஸ்திரங்களும் உயர்ந்த நீதி மன்றங்களும் ஏற்கவேண்டியது என்னவென்றால், “நான் என் தாயின் புதல்வி” என்பதே”.
மேலும் அவள் கூறினாள், “தற்போதைய சட்டம் மாற வேண்டும். அரசியல் சாசனம் மாற வேண்டும். நீதி மன்றங்கள் மாற்றங்களை எடுத்துரைக்க வேண்டும். தேசம் அதனைச் சட்டமாக்க வேண்டும். அது நடைமுறைக்கு வர வேண்டும். இன்னும் பெரிய நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிந்தனைவாதிகள், சமுதாயம் எல்லாம் சேர்ந்து மாறிய சமுதாயத்திற்கு தேவையான நீதி சூத்திரங்களை எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை பெரிய நீதியமைப்பு வீணாகிவிடும்”. நீதிமன்றத்தில் ரமாவின் போராட்டத்திலும், விவாதத்திலும் ‘இனாக்’ கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் என்றே கூறத் தோன்றுகிறது.
ரமாவின் இதயம் கண்ணீர் வடித்தது. “என் தாயாரை நான் துன்புறுத்தவில்லை. என்னைப் பெற்றதற்காக தண்டிக்க வில்லை. வளர்த்து ஆளாக்கியதற்காக நிந்திக்கவில்லை. தேவதையை பிசாசாக்கவில்லை. சுவர்க்கத்தை நரகமாக மாற்றவில்லை. என் தந்தையை நான் தேடவில்லை. எனக்கு அது சாத்தியமில்லை”. ராமாவுக்குத் தன்னைப் பெற்ற தாயின் மேல் அளவிட முடியாத மதிப்பும் பாசமும் இருந்தது. அவளுக்கு அவளுடைய தாய் ஒரு தேவதை. அவள் வசிக்கும் வீடு சுவர்க்கம்.
ரசராஜ்யத்தை நீதிமன்றத்திற்கு வரச் சொன்னார்கள். “அன்றும் இன்றும் என்றும் ரங்காராவ் தான் என் கணவன்” என்றாள் அவள். “ரமா யார்?” என்று கேட்டதற்கு “ரமா என் புதல்வி” என்றாள். எத்தனை முறை கேட்டாலும் அவள் கூற்றில் மாற்றம் இல்லை. முதலில் சொன்னதையே இன்னும் திடமாக மனப்பூர்வமாகக் கூறினாள்.
ரமாவின் கண், மூக்கு, ஜாடை எல்லாம் முழுமையாக ரங்காராவைப் போலவே இருந்தது. உடல் வடிவு, கை கால்கள், தலை, உருவம், நிறம் எல்லாம் அச்சு குத்தியது போல் இருந்தது. இருவரையும் ஒரே இடத்தில் பார்த்தால் யாராயிருந்தாலும் அவர்களைத் தந்தையும் மகளும் என்றுதான் நினைப்பார்கள். இல்லையென்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நீதிபதிகளும் நம்பமாட்டார்கள். ரமாவிடம் நிறைந்திருந்த ரங்காராவின் வெளிக் குணங்கள் பிரத்தியட்ச சாட்சிகளாக வெளிப்பட்டன. அதோடு ரமாவின் பள்ளி சான்றிதழில் தந்தையின் பெயர் ரங்காராவ் என்று இருந்ததால் ரமா க்ஷத்திரியப் பெண்ணே. ஆனால் ரங்காராவ் களத்தில் புகுந்து, “ரமா என் மகள் அல்ல” என்று கூறியவுடன் கதை தலைகீழாக மாறியது.
ரங்காராவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. அதனால்தான் தனக்குச் சம்பந்தம் இல்லாத வழக்கில் கேலிக்கு ஆளாவதை விரும்பாமல் கோர்ட் படி ஏறினான். அவனுடைய வக்கீல் “ரங்காராவுடைய கௌரவத்தைக் காப்பாற்றுங்கள். ரங்காராவ் ரமாவின் தந்தை இல்லை” என்று தீர்ப்பு வழங்கும்படி க்ஷத்திரிய ஜாதிக்குக் களங்கம் ஏற்படக்கூடாதென்ற கவலையில் நீதிமன்றத்தைக் கோரினார். அதற்கு நவீன ஆய்வு முறையான டி.என்.ஏ. சோதனை சரியான பதிலாக இருக்கும் என்றார். கோர்ட்டின் உத்தரவுப்படி அந்த பரிசோதனை நடந்தது. “ரமா ரங்காராவின் மகள் இல்லை” என்று அந்த சோதனை நிரூபித்தது.
‘ரசராஜ்யம், ரங்காராவ் தன் கணவன் என்கிறாள். ரமா என் புதல்வி என்கிறாள். ஆனால் ரமாவின் தந்தை ரங்காராவ் என்று அவள் கூறவில்லை’. இது ரங்காராவின் வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதம்.
அறிந்தும் அறியாத வயதில் ரசராஜ்யம் ரங்காராவின் காதல் வலையில் விழுந்தாள். ‘ரசம்’ என்று கொஞ்சி அழைத்து, ‘சிருங்கார ரச தேவதை’ என்று புகழ்ந்து, ரங்காராவ தன் காதல் ராஜ்ஜியத்திற்கு அவளை ராணியாக்கினான். அவளிடம் காதலைத் தூண்டினான். அவளுடைய இதயம் பந்து போல எம்பி வனுடைய காதல் மாயையில் விழுந்தது. அதுவரை அவளோடு கொஞ்சிக் குலாவிய ரங்காராவ் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு குலம், ஜாதி, படிப்பு என்று காரணம் காட்டி அவளிடமிருந்து பிரிந்து போனான். அவனுக்காகவும் அவனுடைய காதலுக்காகவும் ஏங்கிய அவள் ஒரு பைத்தியம் போலானாள்.
கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள். “ரங்கா, நாம் கல்யாணம் செய்து கொள்வோம். உன்னுடைய சொத்து எனக்கு வேண்டாம். என் மனம் உன்னுடையது. என் உடல் உன்னுடையது. என் உள்ளம் உன்னுடையது. என் எல்லாமே உன்னுடையது” என்று கூறிக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளமெங்கும் ரங்காராவே நிறைந்திருந்தான். அவள் சுய உணர்வை இழந்தாள். அந்த நினைவற்ற நிலையிலேயே கர்ப்பம் தரித்தாள். அதனால்தான் ரமாவுக்கு ரங்காராவின் ஜாடை அச்சு குத்தியது போல வந்து வாய்த்தது. அது டி.என்.ஏ. வுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் மனோதத்துவத்தில் அது ஒரு அற்புதமான பரிசோதனை.
பெண் இனத்திற்கு நிகழும் அநியாயங்களில் விஷப் பாம்பான ஜாதிப் பெருமையும் ஒன்று. அதன் கடிக்கு பலியான ராஜ்யம் பைத்தியக்காரி ஆனாள். அவளுடைய காதலுக்கு மையப் புள்ளியான ரங்காராவ் நன்றாகவே உள்ளான். தந்தையின் சொல்லைக் கேட்டு ஜாதி கௌரவத்தைக் காப்பற்றினான். நன்றாகவே திருமணம் செய்து கொண்டான். இறுதியில் ‘ரமா என் மகள் இல்லை’ என்று கோர்ட் படியேறிச் சென்று அறிவித்தான். டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் தன்னுடைய ஜாதி கௌரவத்தை நிலைநாட்டினான்.
‘கொலகலூரி இனாக்’, இந்தச் சிறுகதையில் சொல்லவந்தது, ஆணாதிக்க உலகத்தில் ஆண்களுக்கிருக்கும் பிரதிநித்துவமும் கௌரவமும் பெண்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய சட்டங்களை சாசனங்களாக்க வேண்டும். அது பெண்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் பெற்றுத் தர வேண்டும்.
இன்னொரு சிறுகதை – பர்த் சர்டிஃபிகேட்:-
இனாக் எழுதிய ‘பர்த் சர்டிஃபிகேட்’ சிறுகதை, தன்னோடு கூட வாசகர்களையும் நடத்திச் சென்று, அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளும்படிச் செய்து, பாத்திரங்களோடு இணைய வைக்கிறது.
அது பிரசவ அறை. இந்த உலகிற்குப் புது உயிரை அருளும் தனி உலகம். பிரசவ வேதனை தாங்காமல் அழுகைகளும் ஓலங்களும் நிறைந்திருந்தது. பிறந்த சிசுக்கள் வீரிட்டு அலறும் ஓசை, குழந்தை பெறப்போகும் தாய்மார்களின் ஓலம், இவர்களோடு கூட வந்த கூட்டத்தாரின் கூச்சல், டாக்டர்களின் வந்து போவது எல்லாமாகச் சேர்ந்து அது ஒரு விசித்திரமான உலகமாகக் காட்சி தந்தது.
சிறுகதையின் அளவு சிறியதே. ஆனால் அளிக்கும் செய்தி மிகப் பெரியது.
ரமணி ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். சுதந்திர வாழ்க்கை என்பது அவள் சுவாசிக்கும் காற்று. அவமான வளையங்களைத் திறமையோடு நீக்குவது எப்படி என்று அவளுடைய புன்னகைக்குத் தெரியும். எளிதாக வெளிவருவது எப்படி என்று அவளுடைய பொறுமைக்குத் தெரியும். அவளுக்கு இது இரண்டாவது பிரசவம். அங்கு சேர்ந்த தாய்மார்களின் சலிப்புத் தட்டும் உரையாடல்கள், நடுநடுவில் அடுத்தவரைப் பற்றி விசாரிப்புகள், ரமணி. தன் சிறு மகனுடனும், தனக்கு வீட்டில் உதவிக்கு இருந்த ஒரு பரிதாபமான பெண்ணுடனும் அங்கு பிரசவத்திற்காக வந்தாள். அவளோடு வேறு யாரும் இல்லை. எல்லோரையும் போல் அவசரப்படவில்லை. வலியைக் கூட வெளிப்படுத்தவில்லை. அங்கிருந்த பெண்களுக்கு இவள் மேல் சந்தேகம் வரத்தான் செய்தது. அந்த ஐயத்தை தீர்த்துக் கொள்வதற்கு அவர்கள் பட்ட அவஸ்தை, பரபரப்பு, அவர்கள் செய்த விசாரனைகள், அந்த சொற்களின் காரம், அவற்றைச் சுருக்கமான சொற்களால். அமைதியான பதில்களால் அவள் விவரித்த முறை, அவர்களிடம் மேலும் உற்சாகத்தை வரவழைத்தன. உண்மையில் சிறுகதையில் வரப்போகும் பிரச்னையை அறிமுகம் செய்வதற்கு இந்த அளவு விவரிப்பின் தேவையிருந்தது. இது ‘இனாக்’ அவர்களின் நடை, ஸ்டைல்.
வாசகர்களின் ஆர்வத்தை நழுவவிடாமல் ரமணி மருத்துவமனைக்கு வந்து பிரசவ வார்டில் சேர்ந்த போதிலிருந்து கதையை ரகசியமாக நடத்துகிறார் ஆசிரியர். யாராவது பிரசவ வலியோடு வந்தால் அழாமல், சலிப்படையாமல் இருப்பார்களா? ஆனால் வலி அதிகமானாலும் ரமணி அழவில்லை. கத்தவில்லை. இது இயல்பாக நடக்கும் ஒரு சம்பவமில்லை. “அந்தப் பெண்ணுக்கு இரும்பு இதயம்” என்று சிலர் பேசிக்கொண்டார்கள். ஆச்சர்யப்பட்டர்கள். “ஈசி டெலிவரி போலிருக்கு” என்று அவர்கள் தம்மைத்தாமே ஒருவாறு சாமாதனப்படுத்திக் கொண்டார்கள். மேலும் சிலர், “புருஷன் என்ன ஆனான்? எங்கும் காணமே?” என்று தனக்குள் தாமே கேட்டு வார்த்தையை விழுங்கிக் கொண்டார்கள். ரமணி பிரசவத்தின்போதும் அழவில்ல. கூச்சலிடவில்லை. அவளுடைய சிசுவின் அழுகைக் குரல் காலை உதயத்தின் ஒலி போலக் கேட்டது. அவ்வளவுதான்.
மீண்டும் சந்தேகம், வியப்பு. ரமணி ஏன் அழவில்லை? குறைந்தபட்சம் முக்கவோ முனகவோ கூட இல்லை. அவளுடைய வாழ்க்கையே அப்படித்தான் இருந்தது. அதற்குள் நர்சுகள் ஸ்டெச்சர் எடுத்து வந்தார்கள். ரமணியின் கண்கள் திறந்தே இருந்தன. மகனை முத்தமிட்டாள். பச்சைக் குழந்தையின் தலையை வருடினாள். மலரைப் போல புன்னகைத்தபடி இருந்தாள். சோர்வறியாத ராணுவ வீராங்கனையைப் போலிருந்தாள்.
அவ்வாறு சின்னச் சின்ன வாக்கியங்களால் ரமணியின் உள்ளத்தையும், அவளுடைய மனத் திண்மையையும், அவளுடைய சிந்தனை வழியையும், அவளுடைய திடச் சித்தத்தையும், அவளுடைய சங்கல்ப பலத்தையும் ‘இனாக்’ தெளிவாக்கினார். அவளுடைய ஆளுமைக்கும் மானசிக சக்திக்கும் அடித்தளம் அமைத்தார்.
“அம்மாவும் அப்பாவும் வரலையா?” நர்சுகளின் கேள்வி.
“வரமாட்டாங்க” ரமணியின் பதில்.
“மாமியார், மாமனார்?” மீண்டும் கேள்வி.
“வரமாட்டாங்க” ரமணியின் பதில்.
“கணவனாவது வரணுமில்ல?” அவர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கேட்ட கேள்வி இது.
ஆனால் பதில் வரவில்லை. ரமணியின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் படிக்க முடியாமல் அவர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் விவரம் புரியாமல் தலை கனத்துப் போகிறது.
என்ன விஷயம்? நிகழப்போகும் பெரிய சங்கடத்திற்கு சலனமில்லாத நிசப்தமா? சூழ்நிலை சூடானது. புயலுக்கு முன் அமைதி. ரமணி மாணவர்களின் உள்ளம் கவர்ந்த விரிவுரையாளர். இளம் தலைமுறையினரே அவளுடைய நண்பர்கள். அவளுடைய ஆளுமை, அவளுடைய கம்பீரம், அவள் பெற்ற மதிப்பு, அன்பு அனைத்தும் அவர்களே. அதனால்தான் அவர்கள் வந்தார்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பிறப்புச் சான்றிதழ் தயாரித்து ரமணியை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். லேடி டாக்டர் அவளிடம் ஒரு முறை கேட்டுப் பார்த்து ரமணி எதுவும் பதில் கூறாததால் தோல்வியடைந்தார். இந்த முறை டாக்டர் கொஞ்சம் மாற்றிக் கேட்டார். இருவரும் கொஞ்சம் பழகினார்கள் என்பதால் சிரித்தபடி உரிமையோடு கேட்டார். “தந்தை பெயர் எழுதணும் ரமணி”. ரமணி மென்மையாக அதை நிராகரித்தாள். “தாயின் பெயர் போதும் டாக்டரம்மா” என்று அவளிடமிருந்து திடமாக பதில் வந்தது. “தந்தை பெயர் என்ற இடத்தில் ஒரு கோடு போடுங்கள், போதும்” என்றாள் ரமணி.
டாக்டர் சான்றிதழ் கொடுத்தார். தன் விருப்பத்திற்கேற்ப எழுதவைத்த சான்றிதழை சிசுவோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் ரமணி. டாக்டருக்குப் புரிந்தது. அவர் ரமணியை அரவணைத்துக் கொண்டார். “இரு பெண் வயிறுகளின் இடையில் சிசு சிரித்தபடி இருந்தது”.
இந்தச் சிறுகதையில் வெளிப்படும் பெண்ணியக் கருத்துகள் ஆண்களுக்குச் சற்று கோபம் வரவழைப்பது போல, அவர்களுடைய அகம்பாவத்தை யாரோ வேண்டுமென்றே உரசிப் பார்த்து குறைத்து மதிப்பிடுவதைப் போலத் தோன்றி முகம் சுருங்கும் ஆபத்து இல்லாமல் இல்லை. இங்கு கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இவ்வாறு எழுதியது வேறு யாரோ அல்ல. ஒரு ஆண் எழுத்தாளர். ஆணுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பெண்ணுக்கு ஏன் அளிப்பதில்லை என்பது அவருடைய கேள்வி. அப்படியிருந்தால் சமத்துவம் எப்படி வரும்? இந்தக் கதையில், ரமணி படித்தவள். வேலை பார்க்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். ஒன்பது மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றாள். ஆனால் தொப்புள்கொடி உறவுக்கு சமுதாயம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயருக்கு முக்கியத்துவம் இல்லை. அதற்காகத் தான் அவளுடைய போராட்டம். அது நியாயப் போராட்டத்தின் துவக்கம். சமுதாய சமத்துவத்திற்கு மற்றொரு படிகட்டு.
டாக்டரம்மா படித்தவர். பண்பாடறிந்தவர். அதனால்தான், “எதிர்காலத்தில் புது உலகங்களுக்கு உயிர் கொடுக்கப் போகும் சிசுவை அவள் மருத்துவமனையில் பெற்றுடுத்தாள்” என்று கூறினார். எதிர்காலத்தில் ஆணாதிக்கம் கூடாதென்று மருத்துவரும் விரும்பினார். பிறந்தது ஆண் மகன் அல்ல. புது உலகங்களுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய அன்னை வடிவத்தை பச்சைக் குழந்தையில் பார்க்க அவரால் முடிந்தது. அதனால்தான் தயக்கமின்றி ரமணியை அணைத்துக் கொண்டார். அந்தப் புத்தம்புது உலகத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமான உயரத்தில் புது வாழ்க்கையை வாழ்வார்கள். இது எழுத்தாளர் இனாக்கின் விருப்பம். இது பெண்ணியத்தின் ஒரு கோணம்.
“ரமா என் புதல்வி” என்ற கதையில் ரமா, தன் தாய் ரசராஜ்யம் என்று கூறுகிறாளே தவிர, “ரங்காராவ் என் தந்தை” என்று எங்குமே கூறவில்லை. “பர்த் சர்டிஃபிகேட்” கதையில் ரமணி, ‘கணவன் பெயர்’ என்ற கட்டத்தை நிரப்பாமலே சான்றிதழைப் பெறுகிறாள். இரண்டு கதைகளிலும் தாய்க்கு இருக்கும் முக்கியத்துவம் பேசப்படுகிறது.
இந்த இரண்டு சிறுகதைகளுக்கும் பெண்களிடம் இருந்தும், பெண்ணியவாதிகளிடம் இருந்தும் சிறப்பான பதில்வினைகள் வந்தன. இந்தச் சிறுகதைகளில் இருக்கும் முக்கியமான அம்சத்தைப் பெண் எழுத்தாளர்கள் கூட அதுவரை தொடாது போனதைப் பார்த்து, பெண்ணியவாதிகள் பாராட்டினார்கள். அங்கீகரித்தார்கள்.
ஆணாதிக்க உலகத்தில் ஆண்களுக்குச் சமமாக நிற்பதற்கும், நிலைபெறுவதற்கும் ஊக்கமளிக்கும் கதைகள் இவை. இவற்றை இரட்டைக் கதைகள் என்றும் கூறலாம். இப்படிப்பட்ட நுட்பமான பிரச்சினைகளை, பெண் இனத்திற்கு நடந்த, நடக்கின்ற அநியாயத்தை மீண்டும் நிகழாமல் சம இடம் கிடைப்பதற்கான சூழலை சட்டம் மூலம் உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு முன்பிருந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொணர வேண்டும் என்றும் மறைமுகமாக இக்கதைகள் மூலம் ஆண் படைப்பாளி ‘இனாக்’ எடுத்துரைக்கிறார்.
அடுத்தடுத்த கட்டுரைகளில் பெண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்திய மேலும் சில ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
